வயநாட்டில் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 402 ஆக உயர்ந்தது

நிலச்சரிவில் தப்பிய வீடுகளில் நகை, பணம் திருட்டு போவதாக புகார்கள் வந்தன. சூரல்மலை கிராமம் மற்றும் முண்டகை, அட்டமலை பகுதிகளை சேர்ந்த சுமார் 4,833 பேர் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
வயநாட்டில் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 402 ஆக உயர்ந்தது
Published on

வயநாடு:

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டகை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய பகுதிகளில் கடந்த 30-ம் தேதி பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த கிராமங்கள் மட்டுமின்றி, அதன் அருகே இருந்த அட்டமலை, புஞ்சிரிமட்டம், வெள்ளிரிமலை கிராமங்களும் நிலச்சரிவால் உருக்குலைந்து போனது. நிலச்சரிவின் கோரதாண்டவத்தால் வீடுகள், சாலைகள், வாகனங்கள், பாலங்கள் அடித்து செல்லப்பட்டன. இதனால் கிராம மக்கள் மண்ணில் புதைந்தும், காட்டாற்று வெள்ளத்தில் அடித்தும் செல்லப்பட்டனர். மேலும் பலர் காணாமல் போனார்கள்.

நிலச்சரிவில் மீட்கப்பட்டவர்கள் நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்து உள்ளனர். மண்ணில் புதைந்தவர்கள், காணாமல் போனவர்களை மீட்பு குழுவினர் தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று 7-வது நாளாக மீட்பு பணி நடைபெற்றது. மீட்பு பணிகளை வருவாய்த்துறை மந்திரி கே.ராஜன், வனத்துறை மந்திரி சுசீந்திரன் நேற்று நேரில் பார்வையிட்டனர். பின்னர் மந்திரி கே.ராஜன் நிருபர்களிடம் கூறுகையில், 'நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் காணாமல் போனவர்களை தேடும் பணி கைவிடப்படவில்லை. காணாமல் போன கடைசி நபரை கண்டுபிடிக்கும் வரை மீட்பு பணிகள் தொடரும்' என தெரிவித்தார்.

நிலச்சரிவில் தப்பிய வீடுகளில் நகை, பணம் திருட்டு போவதாக புகார்கள் வந்தன. அத்துடன் அதிகம் பேர் அங்கு கூடுவதால், மீட்பு பணியில் சிரமம் ஏற்படும் நிலை இருந்தது. இதையடுத்து நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளுக்கு செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி, நேற்று ராணுவம், தேசிய பேரிடர் மீட்பு படை, தீயணைப்பு வீரர்கள், போலீசார், தன்னார்வலர்கள் என 1,500 பேர் மட்டுமே பெய்லி பாலத்தை கடந்து செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

நவீன கருவியான ரேடார் சிக்னல் அடிப்படையில் மண்ணில் புதைந்தவர்கள், கட்டிட இடிபாடுகளில் சிக்கி யாரேனும் உள்ளார்களா என தேடப்பட்டது. உடல்களை கண்டுபிடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ள பகுதிகளில் நவீன கருவிகளுடன் தேடும் பணி நடந்தது. பாறைகள், மரங்களுக்கு அடியில் உடல்கள் புதையுண்டு உள்ளதா என தேடும் பணி நடைபெற்றது. நிலச்சரிவில் சிக்கி இதுவரை 402 பேர் உயிரிழந்து உள்ளனர். இன்னும் 180 பேரை காணவில்லை. சூரல்மலை கிராமம் மற்றும் முண்டகை, அட்டமலை பகுதிகளை சேர்ந்த சுமார் 4,833 பேர் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதுதவிர அங்குள்ள நீர்வீழ்ச்சி உள்ளிட்ட சுற்றுலாத்தலங்களை கண்டு ரசிக்க வந்த சுற்றுலா பயணிகள் விடுதிகளில் தங்கி இருந்தனர். அவர்களின் நிலை என்ன ஆனது என்பது தெரியவில்லை. சாலியாற்றில் இருந்து உடல்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருவதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

மேலும், நிலச்சரிவில் உயிரிழந்த அடையாளம் தெரியாத மற்றும் உரிமை கோரப்படாத உடல்களை பொது மயானத்தில் அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்காக 2019-ம் ஆண்டு நிலச்சரிவு ஏற்பட்ட புதுமலை பகுதியில் 64 சென்ட் நிலம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. அங்கு பொக்லைன் எந்திரங்கள் மூலம் வரிசையாக குழிகள் தோண்டப்பட்டன. பின்னர் சர்வமத பிரார்த்தனையுடன் ஒரே இடத்தில் 39 பேரின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டன.

நிலச்சரிவு காரணமாக வயநாடு மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு கடந்த ஒரு வாரமாக விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில், நேற்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com