என் மலர்
ஜம்மு காஷ்மீர்
- ஜம்மு காஷ்மீரில் ராணுவ வாகனம் தீப்பிடித்து எரிந்தது.
- இந்த விபத்தில் 5 ராணுவ வீரர்கள் பரிதாபமாக பலியாகினர்.
ஜம்மு:
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள பிம்பர் காளி என்ற இடத்தில் ராணுவ வாகனம் ஒன்று திடீரென தீப்பிடித்தது. தீ வேகமாக பரவி வாகனம் முழுவதும் எரிந்தது.
இந்த கோர விபத்தில் 5 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சிலர் படுகாயம் அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இச்சம்பவம் ஜம்மு காஷ்மீரில் பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
- பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
- நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி மேல் முறையீடு செய்த மனுவும் இன்று சூரத் கோர்ட்டில் நிராகரிக்கப்பட்டது.
ஸ்ரீநகர்:
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின்போது, கர்நாடக மாநிலத்தின் கோலாரில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர், நிரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என எல்லா திருடர்களின் பெயர்களுக்கு பின்னேயும் மோடி என வந்தது எப்படி? என பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக ராகுல் காந்தி மீது குஜராத் மாநில முன்னாள் மந்திரி மற்றும் பா.ஜ.க. எம்.எல்.ஏ.வான புர்னேஷ் மோடி, சூரத் மாவட்ட தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் அவதூறு வழக்கு தாக்கல் செய்ததில், ராகுல் குற்றவாளி என தீர்மானித்து, 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து மாஜிஸ்திரேட்டு எச்.எச்.வர்மா கடந்த மாதம் 23-ம் தேதி தீர்ப்பு வழங்கினார். இந்த தீர்ப்பால் ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிபோனது.
இதற்கிடையே, நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி, சூரத் மாவட்ட கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். இந்த மனுவும் இன்று நிராகரிக்கப்பட்டது.
இந்நிலையில், ராகுல் காந்தியின் மேல் முறையீடு மனு நிராகரிக்கப்பட்டது குறித்து ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி மெகபூபா முப்தி கூறுகையில், ஜனநாயகத்திற்கு இன்று கருப்பு நாள். நீதித்துறை என்பது மக்களின் கடைசி நம்பிக்கை, ஆனால் தாமதமான அதன் பங்கு கேள்விகளை எழுப்பியுள்ளது. இங்குள்ள அரசியல் அமைப்பை ஒழித்துவிட்டு இந்த தேசத்தை அவர்கள் கொள்கைப்படி வழிநடத்த பா.ஜ.க. நினைக்கிறது என தெரிவித்துள்ளார்.
- உயிரிழந்த சிறுவனின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு.
- போரின்போது பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு வெடிக்காமல் கிடந்து, தற்போது வெடித்துள்ளதா? என விசாரணை.
லடாக் யூனியன் பிரதேசத்துக்கு உட்பட்ட கர்பதங் என்ற பகுதியில் நேற்று சில சிறுவர்கள் வயல்வெளியில் விளையாடிக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கே கிடந்த பழமையான வெடிகுண்டு ஒன்று பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது.
இதில் 13 வயது சிறுவன் ஒருவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். இந்த சம்பவம் கார்கிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 1999-ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே கார்கில் போர் நடந்தது. அந்த போரின்போது பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு வெடிக்காமல் கிடந்து, தற்போது வெடித்துள்ளதா? என விசாரணை நடந்து வருகிறது.
இதற்கிடையே சம்பவ பகுதி மற்றும் சுற்று வட்டாரங்களில் இதைப்போன்ற வெடிகுண்டுகள் மற்றும் தளவாடங்கள் வேறு ஏதேனும உள்ளனவா? என்று ஆய்வு செய்யப்படும் என லடாக் துணைநிலை கவர்னர் மிஸ்ரா தெரிவித்துள்ளார். உயிரிழந்த சிறுவனின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் இழப்பீடும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணமும் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
- தரை எவ்வளவு அழுக்காக இருக்கிறது என்று பாருங்கள். எங்களை இங்கேதான் உட்கார வைக்கிறார்கள்.
- வீடியோ சுமார் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை கடந்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் உள்ள கதுவா மாவட்டத்தில் லோஹாய்-மல்ஹர் கிராமத்தை சேர்ந்தவர் சிறுமி சீரத்நாஸ். இவர் பிரதமர் மோடியிடம் ஒரு கோரிக்கை வைத்து பேசும் வீடியோ பேஸ்புக்கில் வைரலாக பரவி வருகிறது. அதில் சிறுமி சில இடங்களை காட்டி விளக்குகிறார். வீடியோவில், மோடிஜி, நான் இங்கு அரசு பள்ளியில் படித்து வருகிறேன். தயவு செய்து எங்களுக்கு ஒரு நல்ல பள்ளிக்கூடத்தை கட்டி தாருங்கள். தரை எவ்வளவு அழுக்காக இருக்கிறது என்று பாருங்கள். எங்களை இங்கேதான் உட்கார வைக்கிறார்கள்.
எங்கள் பள்ளி இருக்கும் பெரிய கட்டிடத்தை உங்களுக்கு காட்டுகிறேன். இந்த கட்டிடம் 5 வருடங்களாக எவ்வளவு அழுக்காக இருக்கிறது என பாருங்கள். இதுதான் எங்கள் வகுப்பறை. எங்களுக்காக ஒரு நல்ல பள்ளிக்கூடத்தை உருவாக்கி தருமாறு கேட்டு கொள்கிறேன்.
தரையில் உட்கார்ந்தால் எங்களது சீருடைகள் அழுக்காகிறது. சீருடை அழுக்காகிவிட்டால் அம்மா எங்களை அடிக்கிறார். தயவு செய்து மோடிஜி பள்ளியின் உட்கட்டமைப்பை அழகாக கட்டி கொடுங்கள் என உங்களிடம் கேட்டு கொள்கிறேன். மோடிஜி நீங்கள் எல்லோருடைய பேச்சையும் கேட்கிறீர்கள். தயவு செய்து நான் சொல்வதையும் கேளுங்கள். எங்களுக்கு ஒரு நல்ல பள்ளிக்கூடத்தை கட்டி தாருங்கள் என அந்த வீடியோவில் சிறுமி கூறுகிறார். இந்த வீடியோ சுமார் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை கடந்துள்ளது.
- அமர்நாத் பனிலிங்கத்தை ஆண்டுதோறும் 3 லட்சம் பேர் தரிசனம் செய்கிறார்கள்.
- இந்தாண்டு அமர்நாத் புனித யாத்திரை வரும் ஜூலை மாதம் 1-ம் தேதி தொடங்குகிறது.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் இமயமலைப் பகுதியில் அமர்நாத் என்ற குகைப் பகுதியில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க நாடு முழுவதும் ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை சென்று வருகிறார்கள்.
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை தொடங்குவது குறித்து அமர்நாத் கோவில் வாரிய குழு ஆளுநர் மனோஜ் சின்கா தலைமையிலான குழு விவாதித்தது.
இதில் அமர்நாத் புனித யாத்திரை வரும் ஜூலை மாதம் 1-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 31ம் தேதி வரை 62 நாட்கள் நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டது. இதற்கான முன்பதிவு ஏப்ரல் 17ம் தேதி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ராகுல் காந்தி எங்கெங்கு போகிறார், யாரை சந்திக்கிறார் என்று என்னால் முழுமையாக சொல்ல முடியும் என ஆசாத் பேச்சு
- குலாம் நபி ஆசாத்தின் விமர்சனம் துரோகத்தின் வெளிப்பாடாக உள்ளது என்று காங்கிரஸ் தலைவர்கள் விமர்சனம்
ஸ்ரீநகர்:
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தனிக் கட்சி தொடங்கி உள்ள குலாம்நபி ஆசாத், ராகுல் காந்தியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். ராகுல் காந்தியும் அவரது மொத்த குடும்பமும் நாட்டின் விரும்பத்தகாத ஒரு தொழில் அதிபருடன் தொடர்பில் உள்ளனர் என்றும், இதை தன்னால் ஆதாரபூர்வமாக சொல்ல முடியும் என்றும் கூறினார்.
ராகுல் காந்தி எங்கெங்கு போகிறார், யாரை சந்திக்கிறார் என்று என்னால் முழுமையாக சொல்ல முடியும். வெளிநாட்டுக்கு போய் அவர் யாரை சந்திக்கிறார் என்று என்னால் ஆதாரத்துடன் தகவல் தர முடியும் என்றும் குலாம் நபி ஆசாத் பேசியிருந்தார்.
அவரது பேச்சு காங்கிரஸ் கட்சியில் கடும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. பல ஆண்டுகள் கட்சியில் இருந்து விலகிய குலாம் நபி ஆசாத்தின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் பலர், குலாம் நபி ஆசாத்தை கடுமையாக விமர்சித்துள்ளனர். நேரு-காந்தி குடும்பத்தால் அவர் அனுபவித்த சுமார் 40 ஆண்டு கால பதவிகள் குறித்தும் குலாம் நபி ஆசாத் பேசியிருக்க வேண்டும் என கூறி உள்ளனர். குலாம் நபி ஆசாத்தின் விமர்சனம் துரோகத்தின் வெளிப்பாடாக உள்ளது என்றும், அவர் நேரு-காந்தி குடும்பத்திற்கு நன்றியில்லாதவராக மாறிவிட்டார் என்றும் கூறி உள்ளனர்.
- பாகிஸ்தானை சேர்ந்த 3 பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றனர்.
- ராணுவத்தினரின் அதிரடி நடவடிக்கையால் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி தடுக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இன்று அதிகாலை ராணுவப் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அதிகாலை 2.15 மணியளவில் பாகிஸ்தானை சேர்ந்த 3 பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றனர். இதையடுத்து ராணுவத்தினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் பாகிஸ்தான் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது உடல் துப்பாக்கி சூடு நடந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்டது. மற்ற 2 பேரும் காட்டுப்பகுதியில் தப்பி ஓடி விட்டனர். அவர்களை கைது செய்யும் பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். ராணுவத்தினரின் அதிரடி நடவடிக்கையால் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி தடுக்கப்பட்டுள்ளது.
- ஜம்மு காஷ்மீரில் மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜு பயணம் செய்தார்.
- அவர் சென்ற கார் மீது லாரி மோதியதில் மத்திய மந்திரி உயிர் தப்பினார்.
ஜம்மு:
மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு சாலை மார்க்கமாக இன்று ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு சாலை மார்க்கமாக சென்று கொண்டிருந்தார்.
ராம்பான் அருகே சென்று கொண்டிருந்தபோது லோடு ஏற்றிச் சென்ற லாரி ஒன்று கார் மீது மோதியது. இதையடுத்து பாதுகாப்பு போலீசார் மந்திரியை காரிலிருந்து பத்திரமாக வெளியேற்றினர்.
இந்த விபத்தில் மந்திரி கிரண் ரிஜிஜு அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார்.
மத்திய மந்திரி சென்ற கார் விபத்தில் சிக்கியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- சர்வதேச சந்தையில் பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயின் மதிப்பு 70 கோடி ரூபாய் என போலீசார் தெரிவித்தனர்.
- கடந்த மூன்று மாதங்களில் பாதுகாப்புப் படையினர் கைது செய்யப்பட்ட மூன்றாவது போதைப்பொருள் கடத்தல் வழக்கு இதுவாகும்.
ஜம்மு காஷ்மீரில் எல்லை தாண்டிய போதைப்பொருள் கடத்தல் கும்பலை நடத்தி வந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) வீரர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக நடத்திய தேடுதல் வேட்டையில், ஸ்ரீநகரில் உள்ள ராஜ்பாக்கில் 11 கிலோவுக்கும் அதிகமான ஹெராயின் மற்றும் ரூ.11 லட்சத்துக்கும் மேல் பணத்தை போலீசார் கைப்பற்றியதை அடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
சர்வதேச சந்தையில் பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயின் மதிப்பு 70 கோடி ரூபாய் என போலீசார் தெரிவித்தனர்.
மேலும் நடத்திய விசாரணையில், சிஆர்பிஎஃப் வீரர் சஜாத் பதானா பாகிஸ்தானில் இருந்து போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவனாக செயல்பட்டது தெரியவந்தது.
குற்றம்சாட்டப்பட்ட மூவரும் குப்வாரா மாவட்டத்தின் கர்னாவில் உள்ள எல்லைப் பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.
இதுகுறித்து ஸ்ரீநகரின் மூத்த காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் பல்வால் கூறுகையில், "நாங்கள் சிஆர்பிஎஃப் வீரர் உள்பட 3 பேரை கைது செய்தோம். ஆரம்பத்தில், அவர் தனது அடையாளத்தை வெளியிடவில்லை. ஆனால் விசாரணையில் அவர் ஜம்மு பிராந்தியத்தில் பணியமர்த்தப்பட்ட ஒரு சிஆர்பிஃஎப் வீரர் என்பதை நாங்கள் கண்டறிந்தோம். கடந்த மூன்று மாதங்களில் பாதுகாப்புப் படையினர் கைது செய்யப்பட்ட மூன்றாவது போதைப்பொருள் கடத்தல் வழக்கு இதுவாகும்" என்றார்.
- பயங்கரவாதிகள் இருவரும் லஷ்கர்-இ-ெதாய்பா அமைப்பை சேர்ந்தவர்கள்.
- போலீஸ் காவலில் இருந்து பயங்கரவாதிகள் தப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஜம்மு- காஷ்மீரில் மதுபான கடையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக மரூப் நாசீர், சகீத் சவுகத் ஆகிய 2 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டு இருந்தனர். இருவரும் லஷ்கர்-இ-ெதாய்பா அமைப்பை சேர்ந்தவர்கள்.
கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து அவர்கள் பாரமுல்லா போலீஸ் காவலில் இருந்து வந்தனர். இந்த இருவரையும் பாதுகாப்பு படையினரும், போலீசாரும் இணைந்து பிடித்து இருந்தனர்.
இந்த நிலையில் பாரமுல்லா போலீஸ் காவலில் இருந்து 2 பயங்கரவாதிகளும் தப்பியுள்ளனர். போலீஸ் காவலில் இருந்து பயங்கரவாதிகள் தப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்களை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.
- நிலநடுக்கம் லே நகருக்கு வடக்கே 166 கிலோ மீட்டர் தொலைவிலும், 105 கிலோ மீட்டர் ஆழத்திலும் ஏற்பட்டுள்ளது.
- நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை.
காஷ்மீரின் ஒரு பகுதியான லடாக் யூனியன் பிரதேசத்தில் இன்று காலை 10.47 மணியளவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 4.3ஆக பதிவாகி இருப்பதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் லே நகருக்கு வடக்கே 166 கிலோ மீட்டர் தொலைவிலும், 105 கிலோ மீட்டர் ஆழத்திலும் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை.
- இந்த பாலம் மணிக்கு 213 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் காற்றை எதிர்கொள்ளும்.
- இதில் மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயில் இயக்கப்பட உள்ளது.
ஸ்ரீநகர் :
இயற்கை எழில் கொஞ்சும் காஷ்மீரில், ரியாசி மாவட்டத்தின் கத்ரா மற்றும் ரியாசி நகரங்களை செனாப் நதி பிரிக்கிறது. எனவே இந்த இரு பகுதிகளையும் இணைக்க வடக்கு ரெயில்வே முடிவு செய்தது. அதன்படி நாட்டிலேயே முதல் முறையாக செனாப் நதியின் குறுக்கே கேபிள் மூலம் இணைக்கும் ரெயில்வே பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
ஆனால் இமயமலையில் இந்த பாலம் அமையவிருந்ததால் முதலில் இப்பகுதியின் நில அதிர்வு உள்ளிட்ட பல்வேறு கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர் கடந்த 2018-ல் இதற்கான முதல்கட்ட பணிகள் தொடங்கப்பட்டது.
சுமார் 193 மீட்டர் உயரம் மற்றும் 725.5 மீட்டர் நீளத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகிலேயே உயரமான இந்த கேபிள் பாலம் அமைக்கும் பணி தற்போது முடியும் தருவாயில் உள்ளது. எனவே வருகிற மே மாதத்துக்குள் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும்.
மேலும் இது பயன்பாட்டுக்கு வரும்போது காஷ்மீர் பள்ளத்தாக்கு இந்தியாவின் ரெயில்வே நெட்வொர்க்குடன் இணைக்கப்படும் என ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.
இது குறித்து வடக்கு ரெயில்வே அதிகாரிகள் நிருபர்களிடம் கூறுகையில், `120 ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்டது என கணிக்கப்பட்டுள்ள இந்த பாலம் 40 கிலோ வெடி பொருட்கள் வெடிப்பையும் தாங்கக்கூடிய திறன் கொண்டதாக அமைகிறது. எனவே இதில் மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயில் இயக்கப்பட உள்ளது. மேலும் மணிக்கு 213 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் காற்றையும் இது எதிர்கொள்ளும். அது மட்டுமின்றி இதில் ஏராளமான சென்சார்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும். இதன் மூலம் விபத்துகள் தவிர்க்கப்படும்' என தெரிவித்தனர்.
28 ஆயிரம் டன் இரும்பு கொண்டு உருவாக்கப்பட்டு உள்ள இந்த பாலம் ரூ.1,486 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.






