என் மலர்tooltip icon

    இமாச்சல பிரதேசம்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கொரோனாவால் ரத்தம் உறைகிற போக்கு அதிகரிக்கிறது.
    • தினமும் 6 முதல் 8 மணி நேரம் உறங்க வேண்டும்.

    சிம்லா :

    கொரோனா வைரஸ் பெருந்தொற்று தொடங்கி 4 ஆண்டுகளாகியும் இன்னும் முடிவுக்கு வந்து விடவில்லை. புதிது புதிதாக உருமாறிய வைரஸ்கள் தோன்றிப் பரவி வருகின்றன.

    இந்த நிலையில, கொரோனா வைரஸ் பெருந்தொற்று தொடர்பாக தேசிய தொற்று நோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் ஆலோசகர் டாக்டர் நரேஷ் புரோகித் கூறி இருப்பதாவது:-

    சமீபத்திய உலகளாவிய அறிவியல் ஆராய்ச்சிகள், கொரோனா வைரஸ் பெருந்தொற்றினால், இதய நோய்கள் அதிகரிக்கிற ஆபத்து இருப்பதாக கூறுகின்றன.

    கொரோனாவால் ரத்தம் உறைகிற போக்கு அதிகரிக்கிறது. இது மாரடைப்பு ஆபத்தை கூட்டுகிறது.

    நாட்டில் கடந்த 2 மாதங்களாக இதயம் செயலிழந்துபோவதால் திடீர் திடீரென ஏற்படுகிற இறப்புகள் அதிகரித்து இருக்கின்றன.

    இதில் இரண்டு வகையான இறப்புகள் நேரிடுகின்றன. ஒன்று, கடுமையான மாரடைப்பால் மரணம் நேருகிறது. குறிப்பாக சற்று வயதானவர்கள், பாரம்பரிய இதய நோய் ஆபத்து காரணி கொண்டவர்கள். அடுத்து மாரடைப்பின்றி, வேறு காரணங்களால் மரணம் ஏற்படுகிறது. இதயநோய் ஆபத்து காரணிகள் இல்லாமல் ஆரோக்கியமான நபர்களில் அரிதான நிகழ்வுகளாக இந்த மரணம் நேருகிறது.

    முதல் பிரச்சினையை இ.சி.ஜி., 2டி எக்கோ மற்றும் டி.எம்.டி. போன்ற பாரம்பரிய தடுப்பு இதய சோதனைகள் மூலம் கண்டறிய முடியும். இரண்டாவது பிரச்சினையைக் கண்டறிய நீண்ட கால இ.சி.ஜி. கண்காணிப்பு, மின் இயற்பியல் சோதனை மற்றும் மரபணு சோதனை போன்ற பல்வேறு கண்டறிதல் வழிமுறைகள் தேவைப்படுகின்றன.

    முன் எச்சரிக்கை நடவடிக்கைகளாக 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்கள் ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை மற்றும் உண்ணாவிரத கொழுப்பு சோதனையை மேற்கொள்ள வேண்டும். 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் எலக்ட்ரோ கார்டியோகிராம், எக்கோ கார்டியோகிராம் மற்றும் 'டிரெட்மில்' சோதனை உள்பட வருடாந்திர இதய பரிசோதனை செய்ய வேண்டும்.

    இளைஞர்கள் அதிரடியாக பழக்கம் இல்லாத உடற்பயிற்சிகளில் தீவிரமாக இறங்குவதற்கு தேவையில்லை.

    ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும். உடற்பயிற்சிகளை வழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். உடல் எடையை பராமரித்து வரவேண்டும். புகைப்பிடித்தல் கூடாது. மது அருந்துவதை குறைக்கவேண்டும். மன அழுத்தத்தைக் குறைக்க வேண்டும். தினமும் 6 முதல் 8 மணி நேரம் உறங்க வேண்டும்.

    யாருக்கேனும் அதிக மன அழுத்தம், நீரிழிவு, அதிகளவில் கொழுப்பு இருந்தால் அவற்றைக் கட்டுக்குள் வைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    கொரோனா தொற்றுக்கு பின்னர் மாரடைப்பு, இதயநோயால் இளைஞர்களில் சம்பவிக்கிற மரணம் தொடர்பாக ஆராய்ச்சிகள் மேற்கொள்வதற்கு சுகாதாரத்துறை அமைச்சகம் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும், மக்களிடையே பீதியைக் குறைப்பதற்கு ஒவ்வொரு திடீர் மரணம் தொடர்பாகவும் குழு அமைத்து ஆராய வேண்டும் என்றும் டாக்டர் நரேஷ் புரோகித் கேட்டுக்கொண்டுள்ளார்.

    • தனது ராஜினாமா கடிதத்தை பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு அனுப்பியுள்ளார்.
    • தனிப்பட்ட காரணத்துக்காக ராஜினாமா செய்து இருப்பதாக சுரேஷ் தெரிவித்துள்ளார்.

    இமாச்சல பிரதேசத்தில் சிம்லா மாநகராட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாநில அரசு செய்து வரும் நிலையில் அம்மாநில பா.ஜ.க. தலைவர் சுரேஷ் காசியாப் பதவியில் இருந்து விலகி உள்ளார்.

    அவர் தனது ராஜினாமா கடிதத்தை பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு அனுப்பியுள்ளார். தனிப்பட்ட காரணத்துக்காக ராஜினாமா செய்து இருப்பதாக சுரேஷ் தெரிவித்துள்ளார்.

    ஆனால் தொடர் தோல்வி காரணமாக அவர் ராஜினாமா செய்து இருப்பதாக தெரிய வந்துள்ளது.

    • கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இருந்த மரத்தில் மோதியது.
    • விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இமாசலபிரதேசத்தின் டார்ன் தரன் மாவட்டத்தில் உள்ளது பலியாவல் கிராமம். இரவில் இந்த கிராமத்தின் அருகே சாலையில் வந்த ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இருந்த மரத்தில் மோதியது.

    இந்த விபத்தில் காரில் இருந்த 3 வாலிபர்கள் நசுங்கி உயிரிழந்தனர். அவர்களில் ஒருவர் லிப்ட் கேட்டு வந்துள்ளார். மற்ற 2 பேரும் அருகில் உள்ள நகருக்கு சென்று சாப்பிட்டு வருவதாக கூறி சென்றுள்ளனர்.

    வீடு திரும்பும் வழியில் விபத்தில் சிக்கி உயிரிழந்தது தெரியவந்தது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நெட்டிசன்கள் தங்களது கண்டனங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றன.
    • தலாய்லாமாவை கைது செய்ய வேண்டும் என்பது போன்ற கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    திபெத்திய புத்தமத தலைவரான தலாய்லாமா அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். கடந்த 2019-ம் ஆண்டு அடுத்த தலாய்லாமா ஒரு பெண்ணாக இருந்தால் அவர் கவர்ச்சியாக இருக்க வேண்டும் என தலாய்லாமா கூறியது சர்ச்சையானது. இதனால் அவர் மன்னிப்பு கேட்டார். இந்நிலையில் தற்போது தன்னிடம் ஆசி பெற வந்த சிறுவன் ஒருவனின் உதட்டோடு உதடு வைத்து தலாய்லாமா முத்தமிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

    மேலும் அந்த வீடியோவில் தலாய்லாமா தனது நாக்கை நீட்டியபடியே, என் நாக்கை சுவைக்கிறாயா? என சிறுவனிடம் கேட்டுள்ளார். இதைப்பார்த்த பலரும் தலாய்லாமாவை கண்டித்துள்ளனர். இதுதொடர்பாக நெட்டிசன்கள் தங்களது கண்டனங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றன. அதில் சிலர், இந்த தவறான நடத்தையை நியாயப்படுத்த முடியாது என கூறியுள்ளனர். இன்னும் சிலர் இது அருவருப்பானது, தலாய்லாமாவை கைது செய்ய வேண்டும் என்பது போன்ற கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • இமாச்சல பிரதேச பட்ஜெட்டில் பசு பாதுகாப்புக்கு என புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டது.
    • இமாச்சல பிரதேசத்தில் விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு மது பாட்டில்களுக்கும் ரூ.10 கூடுதல் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    சிம்லா:

    இமாச்சல பிரதேச மாநிலத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

    பட்ஜெட்டில் பசு பாதுகாப்புக்கு என புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. அதில் பசு பாதுகாப்புக்கு ரூ.100 கோடி செலவிடப்படும் என்று கூறப்பட்டு இருந்தது.

    இந்த பணத்தை மது விற்பனை மூலம் திரட்ட முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டது.

    அதன்படி இமாச்சல பிரதேசத்தில் விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு மது பாட்டில்களுக்கும் ரூ.10 கூடுதல் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    இதன்மூலம் ரூ.100 கோடி வரை வசூலாகும் என மாநில அரசு கூறியுள்ளது.

    • படுகாயமடைந்தவர்களை போலீசார் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
    • காரை வேகமாக ஓட்டிவந்து 5 பேர் உயிரிழப்பிற்கு காரணமான கார் டிரைவரை கைது செய்தனர்.

    சிம்லா:

    இமாச்சல பிரதேச மாநிலம் வல்சாத் மாவட்டம் தரம்பூர் அருகே, சிம்லா-சண்டிகர் நெடுஞ்சாலையோரம் இன்று  பொதுமக்கள் சிலர் வேலைக்கு நடந்து சென்றுகொண்டிருந்தனர். அப்போது, நெடுஞ்சாலையில் வேகமாக வந்த ஒரு கார், கட்டுப்பாட்டை இழந்து நடந்து சென்றுகொண்டிருந்தவர்கள் மீது வேகமாக மோதியது.

    இந்த கோர விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 4 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். காரை வேகமாக ஓட்டிவந்து 5 பேர் உயிரிழப்பிற்கு காரணமான கார் டிரைவர் ராஜேசை கைது செய்தனர்.

    • சண்டிகர்-மணாலி சாலையில் சென்றபோது பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.
    • டிரைவர் மற்றும் கண்டக்டர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    பிலாஸ்பூர்:

    டெல்லி பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கமலா நேரு கல்லூரி மாணவிகள் இமாச்சல பிரதேச மாநிலம் மணாலிக்கு சுற்றுலா சென்றனர். சுமார் 35 மாணவிகள், 6 ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்ட 44 பேர் பேருந்தில் பயணித்தனர். அவர்களின் பேருந்து பிலாஸ்பூர் மாவட்டத்தில் இன்று விபத்துக்குள்ளானது.

    சண்டிகர்-மணாலி சாலையில் சென்றபோது பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் பேருந்தில் பயணித்தவர்கள் ஒருவர் மீது ஒருவர் விழுந்து பலத்த காயம் ஏற்பட்டது. இதில் ஒரு மாணவி உயிரிழந்தார். 40 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் பிலாஸ்பூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    பேருந்தை வேகமாகவும் கவனக்குறைவாகவும் ஓட்டியதாக டிரைவர் மற்றும் கண்டக்டர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விபத்து நடந்ததும் டிரைவர், கண்டக்டர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    • கவர்னர் ஷிவ் பிரதாப் சுக்லாவுக்கு நள்ளிரவில் திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது.
    • முன்னாள் மத்திய மந்திரியான சுக்லா, இமாச்சல பிரதேசத்தில் 29-வது கவர்னராக கடந்த 18-ந்தேதி பொறுப்பேற்றார்.

    இமாச்சலபிரதேச மாநில கவர்னர் ஷிவ்பிரதாப் சுக்லா (70). இவர் டெல்லி சென்று ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி ஜெகதீப் தஸ்கர், உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

    இந்த நிலையில் கவர்னர் ஷிவ் பிரதாப் சுக்லாவுக்கு நள்ளிரவில் திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து நொய்டாவில் உள்ள கைலாஷ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இது தொடர்பாக ஆஸ்பத்திரியின் செய்தி தொடர்பாளர் கூறும்போது:-

    கவர்னருக்கு நள்ளிரவில் நெஞ்சு வலி ஏற்பட்டதையடுத்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனைகள் மற்றும் சிகிச்சையில் உள்ளார். தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது என்றார். முன்னாள் மத்திய மந்திரியான சுக்லா, இமாச்சல பிரதேசத்தில் 29-வது கவர்னராக கடந்த 18-ந்தேதி பொறுப்பேற்றார்.

    • எச்.பி.-99-9999 என்ற எண்ணை கேட்டு 26 பேர் ஏலத்தில் பங்கேற்றனர்.
    • இரு சக்கர வாகன பதிவு எண்ணுக்கு இதுவரை வழங்கப்பட்டதில் மிகப்பெரிய தொகை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    நாடு முழுவதும் கோடிக்கணக்கானோர் இரு சக்கர வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர். அதில் குறிப்பிட்ட பேன்சி நம்பர்களை வாங்குவதற்காக சிலர் லட்சக்கணக்கில் பணம் செலவு செய்கின்றனர்.

    அதில் சிலர் தங்களது வாகனங்களுக்கு ஜோசியர்கள் பரிந்துரைக்கும் அதிர்ஷ்ட எண், தங்களது பிறந்த நாள், வருடம் கொண்ட எண் என விதவிதமான எண்களை கேட்டு வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு செல்லும்போது, குறிப்பிட்ட எண்ணுக்காக கடும் போட்டி ஏற்படுகிறது.

    இதையடுத்து அதிகாரிகள் அந்த எண்ணை ஏலத்தில் விடுகிறார்கள். அது போன்று இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த ஒரு நபர் தான் 90 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கிய ஸ்கூட்டிக்கு பேன்சி நம்பர் பெறுவதற்காக ரூ.1 கோடி செலவு செய்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இமாச்சல பிரதேசத்தின் சிம்லா மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் தான் வாங்கிய ஸ்கூட்டிக்காக எச்.பி.-99-9999 என்ற பேன்சி பதிவு எண்ணை பெறுவதற்காக போக்குவரத்து ஆணையம் நடத்திய ஆன்-லைன் ஏலத்தில் கலந்து கொண்டார். அப்போது எச்.பி.-99-9999 என்ற எண்ணை கேட்டு 26 பேர் ஏலத்தில் பங்கேற்றனர்.

    இதைத்தொடர்ந்து அந்த எண்ணுக்கு ஆரம்ப கட்டமாக ரூ.1,000 ஏலத்தொகை நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் ஒவ்வொருவரும் ஏலத் தொகையை உயர்த்தி கொண்டே சென்ற நிலையில், அதில் ஒருவர் அந்த எண்ணை ரூ.1 கோடியே 12 லட்சத்து 15 ஆயிரத்து 500 ரூபாய்க்கு பெற்றார்.

    இரு சக்கர வாகன பதிவு எண்ணுக்கு இதுவரை வழங்கப்பட்டதில் மிகப்பெரிய தொகை என அதிகாரிகள் தெரிவித்தனர். அதே நேரத்தில் குறிப்பிட்ட எண்ணை பெறுவதற்காக ரூ.1.12 கோடி செலவழித்த நபர் பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை.

    • இமாசல பிரதேசத்தில் நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • இது 3.6 ரிக்டர் அளவில் பதிவானதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் அறிவித்தது.

    சிம்லா:

    இமாசல பிரதேச மாநிலத்தின் தர்மசாலாவின் வடக்கே 56 கிலோமீட்டர் தொலைவில் நேற்று இரவு 10.38 மணியளவில் திடீரென்று நில அதிர்வு உணரப்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் அறிவித்துள்ளது.

    இந்த நிலநடுக்கம் 3.6 ரிக்டர் அளவில் பதிவானது. இதில் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

    வட மாநிலங்களில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருவது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

    • இது வழக்கமான சோதனைதான் என கலால் வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    • இமாசல பிரதேசத்தில் நடந்த இந்த சோதனை சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சிம்லா :

    இமாசல பிரதேசத்தின் சோலன் மாவட்டத்துக்கு உட்பட்ட பர்வானுவில் அதானிக்கு சொந்தமான அதானி வில்மர் குடோன் உள்ளது. மாநிலத்தில் சமையல் எண்ணெய், அரிசி, கோதுமை மாவு, சர்க்கரை போன்ற சமையல் பொருட்களை இந்த நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

    இந்த நிறுவனம் ஜி.எஸ்.டி. முறைகேட்டில் ஈடுபட்டு உள்ளதாக புகார் எழுந்தது.

    இதைத்தொடர்ந்து குடோனில் மாநில கலால் வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது நிறுவனத்தின் ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டதுடன், அங்குள்ள இருப்புகளும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

    எனினும் இது வழக்கமான சோதனைதான் என கலால் வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதானி நிறுவனத்தின் மொத்த ஜி.எஸ்.டி.யும் வரிகடன் மூலம் நேர் செய்யப்பட்டதாகவும், பணமாக வழங்கவில்லை என்றும் அதிகாரி ஒருவர் குற்றச்சாட்டு தெரிவித்தார். இந்த சோதனை வழக்கமானது என அதானி நிறுவனமும் தெரிவித்து உள்ளது.

    ஹிண்டன்பர்க் அறிக்கையால் அதானி குழும விவகாரம் இந்திய அரசியலின் மையப்புள்ளியாக மாறியிருக்கும் இந்த நேரத்தில் இமாசல பிரதேசத்தில் நடந்த இந்த சோதனை சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • முந்தைய பட்ஜெட்டைவிட இந்த பட்ஜெட்டில் சுமார் 335 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது
    • நாடு முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு மேலும் என்எஸ்எஸ் அலகுகளை உருவாக்க உதவும்.

    ஹமிர்பூர்:

    மத்திய பட்ஜெட்டில் விளையாட்டுத் துறைக்கு மோடி அரசு சிறப்புக் கவனம் செலுத்தியிருப்பதாக மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரத்துறை மந்திரி அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.

    இமாச்சல பிரதேசத்தின் ஹமிர்பூரில் பாஜக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், விளையாட்டு மற்றும் விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதில் பிரதமர் நரேந்திர மோடி உறுதி பூண்டுள்ளதாகவும், விளையாட்டு அமைச்சகத்திற்கு முந்தைய பட்ஜெட்டைவிட இந்த பட்ஜெட்டில் சுமார் 335 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

    என்எஸ்எஸ் பட்ஜெட் ஒதுக்கீடு 2022-23ல் ரூ.283.50 கோடியிலிருந்து 2023-24ல் ரூ.325 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இது நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு மேலும் என்எஸ்எஸ் அலகுகளை உருவாக்க உதவும். அதேபோல், தேசிய விளையாட்டு கூட்டமைப்புக்கான நிதியுதவி ரூ.280 கோடியில் இருந்து ரூ.325 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது என்றார் மத்திய மந்திரி அனுராக் தாக்கூர்.

    மத்திய பட்ஜெட்டில் விளையாட்டு துறைக்கு 3397 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைவிட இது 11 சதவீதம் அதிகம் ஆகும்.

    ×