என் மலர்tooltip icon

    இமாச்சல பிரதேசம்

    • விலங்குகளை கொன்று இரையாக்குவது சுற்றுச்சூழலை பாதிப்பதில் தொடர்பு கொண்டிருக்கிறது.
    • நிலச்சரிவு, மேக வெடிப்பு போன்ற சம்பவங்களை நாம் மீண்டும், மீண்டும் எதிர்கொண்டு வருகிறோம்.

    இறைச்சிக்காக உயிரினங்களை கொலை செய்வதால் தான் இமாச்சல பிரதேச மாநிலத்தில் நிலச்சரிவு மற்றும் மேக வெடிப்பு போன்ற இயற்கை பேரிடர் சம்பவங்கள் ஏற்படுகின்றன என்று ஐ.ஐ.டி. மண்டி இயக்குனர் லக்ஷமிதார் பெஹெரா பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

    உணவுக்காக விலங்குகளை கொல்லும் போது, சுற்றுச்சூழலில் எத்தகைய பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பதை மக்கள் புரிந்து கொள்ள மறுக்கின்றனர் என்று அவர் மேலும் தெரிவித்து உள்ளார். யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்ட இந்த வீடியோ எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டதும் வைரல் ஆக துவங்கி விட்டது.

     

    "அப்பாவி விலங்குகளை கொன்று இரையாக்குவது சுற்றுச்சூழலை பாதிப்பதில் நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கிறது. இது ஏற்கனவே தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. நிலச்சரிவு, மேக வெடிப்பு போன்ற சம்பவங்களை நாம் மீண்டும், மீண்டும் எதிர்கொண்டு வருகிறோம். இவை அனைத்திற்கும் காரணம் விலங்குகளை கொடுமைப்படுத்துவது தான்."

    "நல்ல மனிதர்களாக இருக்க என்ன செய்ய வேண்டும்? இறைச்சி போன்ற உணவுகளை தவிர்த்துவிட வேண்டும். ஆமாவா, இல்லையா?" என்று அவர் மாணவர்களிடையே பேசும் போது கேள்வியாக எழுப்பியுள்ளார்.

    • மாநிலத்திற்கு சுமார் 10,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
    • மாநிலத்தின் பேரிடர் நிவாரண நிதிக்கு தாராளமாக பங்களிக்க வேண்டும்.

    இமாச்சலப் பிரதேசத்தில் சமீபகாலமாக ஏற்பட்ட கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பேரழிவைச் சந்தித்தது. இதனை சமாளிக்க ராஜஸ்தான் ரூ.15 கோடி வழங்கியுள்ளதாக இமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தெரிவித்துள்ளார்.

    சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் இமாச்சலப் பிரதேசத்திற்கு ரூ.11 கோடி நிதியுதவி அறிவித்த நிலையில், ராஜஸ்தான் முதல்வர் நிதியுதவி அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், "நிதி உதவி வழங்கியதற்காக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், இமாச்சல் மக்களுக்கும் நன்றி தெரிவித்தார். பேரிடர்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இந்த உதவி பெரும் உதவியாக இருக்கும்" என்றார்.

    மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதுமான உதவிகளை வழங்குவதற்கு பல்வேறு அமைப்புகளும், பொதுமக்களும் மாநிலத்தின் பேரிடர் நிவாரண நிதிக்கு தாராளமாக பங்களிக்க வேண்டும் என்றும் சுகு கேட்டுக் கொண்டார்.

    இமாச்சல் பேரிழப்பில், மாநிலத்திற்கு சுமார் 10,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் இமாசலில் மேகவெடிப்பு ஏற்பட்டு பேய்மழை கொட்டி வருகிறது.
    • இமாச்சல் முழுவதையும் இயற்கை பேரிடர் பாதித்த மாநிலமாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

    சிம்லா:

    தென்மேற்கு பருவமழையால் இமாச்சல பிரதேசம் அதிகபட்ச மழைப்பொழிவை பெற்றுள்ளது. இதனால் கடும் வெள்ளப் பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டு மோசமான பாதிப்புகளையும் எதிர்கொண்டு உள்ளது.

    அங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் மேகவெடிப்பு ஏற்பட்டு பேய்மழை கொட்டி வருகிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் இயல்பைவிட 157 சதவீதம் அதிகம் மழை பெய்துள்ளது.

    மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை ஆயிரக்கணக்கான வீடுகள், அரசு மற்றும் தனியார் சொத்துக்கள் அழிந்துள்ளது. அத்துடன் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து அங்கு மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், இமாச்சல பிரதேசம் முழுவதையும் இயற்கை பேரிடர் பாதித்த மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    • மத்திய அரசின் இடைக்கால நிவாரணம் விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.
    • மாநிலத்தின் உள் கட்டமைப்பை மீண்டும் மேம்படுத்த ஒரு ஆண்டு ஆகும்.

    சிம்லா:

    இமாச்சல பிரதேச முதல்-மந்திரி சுக்விந்தர்சிங் சுகு கூறியதாவது:-

    நான் கங்க்ரா செல்லும் வழியில் இருக்கிறேன். நிலச்சரிவால் அங்கு 650-க்கும் மேற்பட்டோரை வெளியேற்றியுள்ளோம். சுமார் 100 பேர் கங்க்ராவில் இன்னும் சிக்கியுள்ளனர். மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இமாச்சல பிரதேசத்தில் பெய்த கனமழையால் சுமார் ரூ.10 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இமாச்சல பிரதேசத்தில் இதற்கு முன்பு இது போன்ற பேரழிவு ஏற்பட்டது இல்லை.

    மத்திய அரசின் இடைக்கால நிவாரணம் விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். மாநிலத்தின் உள் கட்டமைப்பை மீண்டும் மேம்படுத்த ஒரு ஆண்டு ஆகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் ஆதரவையும் உறுதி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவு.
    • சாலைகள், மின்சாரம் மற்றும் தண்ணீர் வசதிகளை சீராக பராமரிக்க வேண்டும் என்றும் முதல்-மந்திரி உத்தரவிட்டுள்ளார்.

    வடகிழக்குப் பருவமழை காரணமாக இமாச்சல பிரதேசத்தில் கனமழை பெய்து வருகிறது. பல்வேறு இடங்களில், மேக வெடிப்பு எனும் வகையில் குறிப்பிட்ட பகுதியில் அளவுக்கு மிஞ்சிய மழை பெய்து வருகிறது. மாநிலம் முழுவதும் கனமழை காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட சாலைகள் மூடப்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    இந்நிலையில் சோலன் மாவட்டத்தில் மேக வெடிப்பு சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    மேலும், சோலன் மாவட்டத்தில் உள்ள மம்லிக் கிராமத்தில் மேக வெடிப்பிற்கு பிறகு 6 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் 2 வீடுகளும், ஒரு மாட்டு தொழுவமும் அடித்துச் செல்லப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே மேக வெடிப்பில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு முதல்-மந்திரி சுக்விந்தர் சிங் இரங்கல் தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் ஆதரவையும் உறுதி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறியுள்ளார்.

    கனமழையைக் கருத்தில் கொண்டு நிலைமையை உன்னிப்பாகக் கண்காணிக்குமாறு தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர் மற்றும் அனைத்து டிசிக்களுக்கும் முதல்-மந்திரி உத்தரவிட்டுள்ளார். நிர்வாக ஊழியர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும், சாலைகள், மின்சாரம் மற்றும் தண்ணீர் வசதிகளை சீராக பராமரிக்க வேண்டும் என்றும் முதல்-மந்திரி உத்தரவிட்டுள்ளார்.

    இமாச்சல பிரதேசத்தில் இதுவரை கனமழை தொடர்பாக 257 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 7 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.

    • கனமழை எதிரொலியால் இமாச்சல பிரதேசத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
    • இமாச்சல பிரதேச பல்கலைக்கழகத்தில் நடைபெற இருந்த முதுகலை மற்றும் பி.எட். தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது.

    சிம்லா:

    வடகிழக்குப் பருவமழை காரணமாக இமாச்சல பிரதேசத்தில் கனமழை பெய்து வருகிறது. பல்வேறு இடங்களில், மேக வெடிப்பு எனும் வகையில் குறிப்பிட்ட பகுதியில் அளவுக்கு மிஞ்சிய மழை பெய்து வருகிறது. மாநிலம் முழுவதும் கனமழை காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட சாலைகள் மூடப்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    இந்நிலையில், இமாச்சல பிரதேசத்தில் கனமழை காரணமாக ஆகஸ்ட் 14-ம் தேதி (நாளை) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாநில பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

    மேலும், இமாச்சல பிரதேச பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெற இருந்த முதுகலை, பி.எட். தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுகிறது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கனமழை பெய்ததால் வீடுகளில் வெள்ளம் புகுந்தது
    • இமாச்சல பிரதேசத்தில் கனமழை காரணமாக 231 பேர் உயிரிழந்துள்னர்

    இமாச்சல பிரதேசத்தில கனமழை பெய்து வருகிறது. நேற்றிரவு சிர்மாயுர் மாவட்டத்தில் உள்ள போயன்ட்டா பகுதியில் மேகவெடிப்பு ஏற்பட்டு பேய்மழை பெய்தது. இதனால் மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

    மலாகி கிராமத்தில் உள்ள வீடுகளில் வெள்ளம் புகுந்தது. இதில் ஒரு வீடு இடிந்து விழுந்தது. அந்த வீட்டில் வசித்த ஐந்து பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இமாச்சல பிரதேசத்தில் இன்று முதல் ஞாயிறு வரை கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

    இமாச்சல பிரதேசத்தில் இதுவரை கனமழை தொடர்பான விபத்தில் 231 பேர் உயிரிழந்துள்ளனர். 6731 கோடி ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இன்னும் 190 சாலைகள் மூடப்பட்டுள்ளது.

    கனமழை காரணமாக ஆறுகள் மற்றும் பள்ளத்தாக்குகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் நிலச்சரிவு, மண்சரிவு போன்ற நிகழ்வுகள் அடிக்கடி நடைபெற்று வருகிறது.

    • இமாச்சல பிரதேச மாநிலத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • இந்த நிலநடுக்கம் 3.4 ரிக்டர் அளவுகோலில் பதிவானது.

    சிம்லா:

    இமாச்சல பிரதேச மாநிலத்தின் லஹோல் மற்றும் ஸ்பிடி மாவட்டங்களில் நேற்று நள்ளிரவு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

    இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவாகி இருந்தது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நில அதிர்வை அந்த மாவட்ட மக்கள் உணர்ந்தனர்.

    இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை.

    • நிதி, சேது பாரதம் யோஜனாவின் கீழ் வழங்கப்படுவதாகவும் அதிகாரப்பூர்வ அறிக்கையின் மூலம் தகவல்.
    • நிலம் சரியும் இடங்களைக் கண்டறிந்து நிரந்தரத் தீர்வு காணுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு கட்காரி உத்தரவு.

    இமாச்சலப் பிரதேசத்தில் தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் சேதமடைந்த சாலைகள் மற்றும் பாலங்களை புனரமைக்க ரூ. 300 கோடி ஒதுக்கீடு செய்வதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உறுதியளித்துள்ளதாக அம்மாநில பொதுப்பணித் துறை அமைச்சர் விக்ரனாதித்ய சிங் தெரிவித்துள்ளார்.

    இந்த நிதி, சேது பாரதம் யோஜனாவின் கீழ் வழங்கப்படுவதாகவும் அதிகாரப்பூர்வ அறிக்கையின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லியில் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரியை சிங் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார். அப்போது, தேசிய நெடுஞ்சாலைகளைச் சுற்றி நிலச்சரிவு ஏற்படும் இடங்களைக் கண்டறிந்து நிரந்தரத் தீர்வு காணுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு கட்காரி உத்தரவிட்டுள்ளதாக சிங் கூறினார்.

    மேலும், சமீபத்தில் பெய்த கனமழையால் சேதமடைந்த பாலங்களை சீரமைக்கவும், மாநில பொதுப்பணித்துறை சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளுடன் இணைக்கவும் நிதி வழங்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு கட்கரி உத்தரவிட்டதாக சிங் கூறினார்.

    • வெடி விபத்தால், நான்கு முதல் ஆறு கடைகள் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
    • வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், வெடி விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிம்லாவின் மையப்பகுதியில் உள்ள மால் சாலையில் தீயணைப்புப் படை அலுவலகத்தை ஒட்டியுள்ள உணவகத்தில் நேற்று மாலை திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார் மற்றும் ஏழு பேர் காயமடைந்தனர்.

    மால் சாலை கீழே உள்ள மிடில் பஜாரில் அமைந்துள்ள ஹிமாச்சலி ரசோய் என்கிற உணவு உண்ணும் இடத்தில் இந்த குண்டுவெடிப்பு ஏற்பட்டது. இந்த வெடி விபத்தால், நான்கு முதல் ஆறு கடைகள் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    குண்டு வெடிப்பால், சுற்றுவட்டாரத்தில் உள்ள பல வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து பல மைல்களுக்கு சத்தம் கேட்டது. அந்த இடம் தீயணைப்பு நிலையம் மற்றும் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு சில மீட்டர் தொலைவில் உள்ளதால், மீட்புப் பணிகள் துரிதமாக தொடங்கப்பட்டன.

    சிலிண்டர் வெடித்துச் சிதறியிருக்கலாம் என சந்தேகிப்பதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். குண்டுவெடிப்புக்கு 20 நிமிடங்களுக்கு முன்பு எரிவாயு கசிவு ஏற்பட்டதாக புகார் அளித்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

    இந்நிலையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், வெடி விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கனமழையில் ஒட்டுமொத்த கிராமத்தையே வெள்ளம் அடித்து சென்றது.
    • உள்ளூர் நிர்வாகம் கிராம மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளது.

    சிம்லா:

    இமாச்சல பிரதேச மாநிலத்தில் ஏற்பட்ட மிக கனமழையால் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டது. கனமழையில் ஒட்டுமொத்த கிராமத்தையே வெள்ளம் அடித்து சென்றது.

    ஸ்பிதி பகுதிக்கு அருகே அமைந்துள்ள கோலாக்சா என்ற கிராமத்தில் இருந்த வீடுகளும், விளை நிலங்களும் வெள்ளத்தில் மூழ்கி சின்னாபின்னமாகின. உள்ளூர் நிர்வாகம் கிராம மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளது.

    அந்த கிராமத்தில் வாழும் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அனைத்துமே தற்போது வீடற்றவர்களாக இருக்கின்றனர்.

    • இந்திய விமானப் படையின் முயற்சிகளுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
    • மணாலியில் மொபைல் நெட்வொர்க் இணைப்பு மீட்டமைக்கப்பட்டுள்ளது.

    இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் வெள்ளக்காடானது.

    இதற்கிடையே, கடந்த 3 நாட்களில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவு என இமாச்சல பிரதேசம் மிக மோசமாக பாதிப்பு அடைந்துள்ளது. 1,300 சாலைகள் சேதமடைந்துள்ளன. 40 பாலங்கள் சிதைந்துள்ளன. 79 வீடுகள் முற்றிலுமாக தரைமட்டமாகின. 333 வீடுகள் பகுதியாக சேதமடைந்துள்ளன. வெள்ள, நிச்சரிவில் சிக்கி இதுவரை 88 பேர் உயிரிழந்துள்ளனர்.

    குறிப்பாக, சுற்றுலாத் தளங்களில் பயணிகள் சிக்கி வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால், பயணிகளை மீட்பதற்கான உரிய நடவடிக்கையை இமாச்சல் அரசு எடுத்து வருகிறது.

    இந்நிலையில், வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிக்கித் தவித்த 60,000 சுற்றுலாப் பயணிகள் வெளியேற்றப்பட்டுள்ளதாக இமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    இன்று காலை 9 மணி வரை, மொத்தம் 60,000 சுற்றுலாப் பயணிகள் இமாச்சலப் பிரதேசத்தில் இருந்து வெற்றிகரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். நான் தற்போது குலுவில் கடந்த மூன்று நாட்களாகத் தங்கி, நடந்து வரும் மீட்புப் பணிகளை மேற்பார்வையிட்டு வருகிறேன்.

    சாலை சேதம் காரணமாக கசோல் மற்றும் தீர்த்தன் பள்ளத்தாக்கில் சுமார் 10,000 சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவித்து வருகின்றனர்.

    சாலை சேதமடைந்த இடத்திலிருந்து டிரான்ஸ்- ஷிப்மென்ட், ஜீப்கள் மற்றும் பேருந்துகள் மூலம் சுற்றுலாப் பயணிகளின் போக்குவரத்தை எளிதாக்கி உள்ளோம்.

    தற்போதைய மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் இந்திய விமானப் படையின் முயற்சிகளுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தீவிர மற்றும் சவாலான சூழ்நிலைகள் இருந்தபோதிலும், அவர்கள் ஏழு நபர்களை காப்பாற்றுவதன் மூலம் விதிவிலக்கான திறமையை வெளிப்படுத்தினர்.

    மணாலியில் மொபைல் நெட்வொர்க் இணைப்பு மீட்டமைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    ×