என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    நார்ச்சத்து அதிகம் உள்ள சிவப்பு அரிசி உணவுகளை அவ்வப்போது சாப்பிட்டு வருவது செரிமான உறுப்புகளின் நலத்தை மேம்படுத்தும். சிவப்பு அரிசி புரதச்சத்து அதிகம் நிறைந்த ஒரு தானியமாகும்.
    தேவையான பொருட்கள்

    சிவப்பு அரிசி - ½ கப்
    தேங்காய் பால் - 1 கப்
    ஏலப்பொடி - 1 சிட்டிகை
    நெய் - 2 டீஸ்பூன்
    நட்ஸ் பவுடர் - 1 டீஸ்பூன்
    பாலிஷ் செய்யப்படாத சர்க்கரை அல்லது டேட்ஸ் சிரப் - சுவைக்கு ஏற்ப

    செய்முறை

    அரிசியை இரவு முழுவதும் ஊறவிட்டு, பின்னர் 3 கப் தண்ணீர் ஊற்றி 15 நிமிடங்கள் வேக விடவேண்டும். வெந்த அரிசியை ஆற வைத்து, பின்னர் மிக்ஸியில் கொர கொரவென்று அரைத்துக் கொள்ளவும்.

    வாணலில் நெய் விட்டு அரைத்தவற்றை சேர்த்து தேங்காய் பால் ஊற்றி, நட்ஸ் பவுடர், ஏலப்பொடி, தேவையான பாலிஷ் செய்யப்படாத சர்க்கரை அல்லது டேட்ஸ் சிரப் ஊற்றி கலக்கவும்.

    சூடானதும் இறக்கி விடலாம்.

    சூப்பரான சிவப்பு அரிசி பாயாசம் ரெடி.
    குழந்தைகளுக்கு கேக் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று வீட்டிலேயே எளிய முறையில் மாம்பழ கேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    கோதுமை மாவு - 1 1/2 கப்
    சர்க்கரை - 1 கப்
    மாம்பழம் - பாதி
    பால் - 1/2 கப்
    வெனிலா எசன்ஸ் - 4 துளிகள்
    பட்டர் -1 கப்
    வால்நட் - சிறிது
    பேக்கிங் பவுடர் - 1 தேக்கரண்டி

    செய்முறை


    பட்டரை நன்கு நீர் போல் உருக்கிக் கொள்ளவும்.

    பின்னர் அதனுடன் கோதுமை மாவு, சர்க்கரை, பேக்கிங் பவுடர் சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளவும்.

    பின் மாம்பழத்தை தோல் உரித்து, ஒன்றுக்கு இரண்டாக மிக்ஸியில் அடித்துக் கொள்ளவும்.

    கோதுமை கலவையில் மாம்பழ கூழ், பால், வெனிலா எசன்ஸ் மற்றும் பட்டரை ஊற்றவும். சிறிது மாம்பழக் கூழை தனியே எடுத்து வைக்கவும்.

    அனைத்து கலவையையும் பீட்டரில் மென்மையாக நன்கு கலக்கவும்.

    பின் ஒரு மைக்ரோ ஓவன் ட்ரேயில் 60% மேல் இருக்காதவாறு கலவையை ஊற்றவும். அப்போது தான் கேக் நன்கு வெந்து உப்பி வர தேவையான இடம் கிடைக்கும்.

    ஓவனை 325 சூடுக்கு முதலில் சூடு செய்து டிரேயை 45 நிமிடம் வரை வைக்கவும். அவ்வப்போது திறந்து பார்த்து நிறத்தை சோதனை செய்து கொள்ளவும்.

    கேக் நன்கு பிரவுன் கலரில் மாறியதும் அதை திருப்பி போட்டு 5 நிமிடம் ஆற விடவும்.

    பின் மீதமுள்ள மாம்பழக் கூழை கேக்கின் மீது தடவி வேண்டிய டிசைனை செய்து கொள்ளவும்.

    சுவையான மாம்பழ கேக் ரெடி.
    மட்டனை வைத்து பல்வேறு சூப்பரான ரெசிபிகளை செய்யலாம். அந்த வகையில் இன்று மட்டன் நெய் ரோஸ்ட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    நெய் - 2 டேபிள் ஸ்பூன்
    மட்டன் - 1 கிலோ
    மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
    கிராம்பு - 4-5
    பட்டை - 1
    மிளகு - 10
    கடுகு - 1/2 டீஸ்பூன்
    சிவப்பு மிளகாய் - 4
    சீரகம் - 1 டீஸ்பூன்
    மல்லி விதைகள் -  1 டேபிள் ஸ்பூன்
    வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
    இஞ்சி பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
    பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
    உப்பு (தேவையான அளவு)

    செய்முறை:

    மட்டனை நன்றாக கழுவி சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    குக்கரை அடுப்பில் வைத்து அதில், நெய் ஊற்றி சூடானதும் அதில் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.

    பின்பு இதில் சிறிது சிறிதாக வெட்டி வைத்துள்ள மட்டன், இஞ்சி, பூண்டு பேஸட் ஆகியவை சேர்த்து, மட்டன் நன்கு பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும்.

    பின்பு 2 கப் தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

    பின்பு குக்கரினை மூடி போட்டு மூடி விட்டு, 4 விசில் வரும் வரை காத்திருக்கவும். தற்போது நன்கு வெந்துள்ள மட்டனை மட்டும் தனியாக எடுத்து வைக்கவும்.

    பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடானதும், அதில் சிவப்பு மிளகாய், மல்லி விதைகள், கிராம்பு பட்டை, கடுகு ஆகியவை சேர்த்து நன்கு வறுக்கவும்.

    இதன் சூடு ஆறிய பின்பு, மிஞ்சியில் போட்டுப் பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும். இதில், தேவைப்பட்டால், சிறிதளவு பூண்டு பேஸ்டை சேர்த்துக் கொள்ளலாம்.

    தற்போது கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி அதில், வேக வைத்த மட்டன் துண்டுகள், பின்பு அரைத்து வைத்துள்ள மசாலா பொடியைச் சேர்த்து நன்கு கலக்கவும்.

    7 முதல் 8 நிமிடங்கள் வரை அடுப்பின் தீயைக் குறைத்து வைத்து வறுத்து எடுத்தால் ருசியான மட்டன் நெய் ரோஸ்ட் தயார்.
    குழந்தைகளுக்கு நூடுல்ஸ் என்றால் ரொம்ப பிடிக்கும்..நூடுல்ஸ் வைத்து சூப்பரான பக்கோடா செய்யலாம். இன்று இந்த ரெசிபியை எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்..
    தேவையான பொருட்கள்:

    நூடுல்ஸ் பாக்கெட் - 1
    மேகி மசாலா - 1
    வெங்காயம் - 1
    குடைமிளகாய் - பாதி
    முட்டை கோஸ் - தேவைக்கு ஏற்ப
    பச்சை மிளகாய் - 1
    கொத்தமல்லி - தேவையான அளவு
    கடலை மாவு - 4 டேபிள் ஸ்பூன்
    சீரகப் பொடி, மிளகாய் பொடி, ரவை, உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    வெங்காயம், குடைமிளகாய், முட்டை கோஸ், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    முதலில் ஒரு கடாயில் தண்ணீர் ஊற்றி சூடானதும், மேகி மசாலா சேர்க்கவும். அத்துடன், நூடுல்ஸ் சேர்த்து வேக வைத்து தனியாக வைக்கவும்.

    ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய், பச்சை மிளகாய், கொத்தமல்லி, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள்,

    இரண்டு டீஸ்பூன் ரவை, உப்பு போட்டு இதனுடன், வேக வைத்த நூடுல்ஸ் சேர்த்து நன்றாக பிசைந்துக் கொள்ளவும்.

    மேலும், கலவையுடன் கடலை மாவை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.

    பிறகு, ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்றாக சூடானதும், கலவையை உருண்டை பிடித்து அதில் போட்டு வறுத்து எடுத்தால் சுவையான நூடுல்ஸ் பக்கோடா ரெடி..!.
    தோசை, இட்லி, சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிட அருமையாக இருக்கும் இந்த உருளைக்கிழங்கு மசாலா குழம்பு. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    உருளைக்கிழங்கு - கால் கிலோ,
    பூண்டு - 2 பல்,
    வெங்காயம், தக்காளி, கீறிய பச்சை மிளகாய் - தலா 1,
    புளி - நெல்லிக்காய் அளவு,
    கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், மஞ்சள்தூள் - தலா அரை டீஸ்பூன்,
    கடலைப்பருப்பு, குழம்பு பொடி - தலா ஒரு டீஸ்பூன்,
    கறிவேப்பிலை - சிறிதளவு,
    எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
    மிளகாய்த்தூள், உப்பு - தேவையான அளவு,

    செய்முறை:

    உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், கடலைப்பருப்பு போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய வெங்காயம், பூண்டு, கீறிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி குழைய வதங்கியதும் உருளைக்கிழங்கு, உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.

    மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், குழம்பு பொடி சேர்த்து வதக்கி, புளியைக் கரைத்து ஊற்றி, உப்பு போட்டு, நன்றாகக் கொதித்ததும் இறக்கவும்.

    சூப்பரான உருளைக்கிழங்கு மசாலா குழம்பு ரெடி.
    தோசை, இட்லி, சப்பாத்தி, சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும் இந்த தக்காளி குழம்பு. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    நாட்டுத் தக்காளி, பெங்களூர் தக்காளி - தலா 2,
    கீறிய பச்சை மிளகாய் - 1,
    பூண்டு - 2 பல்,
    பொடியாக நறுக்கிய தேங்காய் - சிறிதளவு,
    சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்,
    மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன்,
    மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
    தனியாத்தூள் - 2 டீஸ்பூன்,
    கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன்,
    பெரிய வெங்காயம் - 1 ,
    கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    நாட்டு தக்காளி, பெங்களூரு தக்காளியை மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைத்து கொள்ளவும்.

    வெங்காயம், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, தேங்காயைப் போட்டு... பொரிந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.

    தீயைக் குறைத்து, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள் போட்டு பச்சை வாசனை போனதும், சீரகத்தூள், அரைத்த தக்காளி விழுது (அ) பொடியாக நறுக்கிய தக்காளி, உப்பு சேர்த்து சிறிது நேரம் வதக்கி, தேவையான அளவு தண்ணீர் விட்டு, எண்ணெய் பிரிந்து வந்ததும், கொத்தமல்லி தூவி இறக்கவும்.

    சூப்பரான தக்காளி குழம்பு ரெடி.

    குழந்தைகள் கீர் என்றால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று வித்தியாசமான முறையில் அரிசியில் கீர் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:
     
    பாஸ்மதி அரிசி அல்லது பச்சரிசி  - 1  கப்
    சர்க்கரை  - 1 கப்
    பால்  -  3 கப்
    பாதாம்பருப்பு  - 6
    குங்குமப்பூ  - சிறிது
    ஏலக்காய்தூள்  -  சிறிது
    நெய் - 2  மேசைக்கரண்டி
    கண்டென்ஸ்டு மில்க் - 3 மேசைக்கரண்டி

     செய்முறை:

     
    அரிசியை அரை வேக்காடாக வேக வைத்துக் கொள்ளவும்.

    அடி கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி காய்ச்சிக் கொள்ளவும்.

    அரை வேக்காடாக வேக வைத்த அரிசியை கொதிக்கும் பாலில் கொட்டி நன்கு வேக விடவும்.
     
    ஒரு மேசைக்கரண்டி பாலில் குங்குமப்பூவை சேர்த்து ஊற வைக்கவும்.

    நன்கு கரைந்தவுடன் வெந்து கொண்டிருக்கும் சாதத்துடன் சேர்க்கவும்.

    பாதாம்பருப்பை சிறிய துண்டுகளாக்கி நெய்யில் வறுத்துக் கொள்ளவும்.
     
    சாதம் நன்றாக வெந்தவுடன், பால் பாதியாக குறைந்தவுடன், சர்க்கரை, நெய், பாதாம்பருப்பு, ஏலக்காய்தூள், கண்டென்ஸ்டு மில்க் சேர்த்து நன்றாக கலக்கவும்.

    இப்போது கமகம நறுமணத்துடன், சுவையான அரிசி கீர் தயார்.

    இப்பொழுது பல வகையான இனிப்பு போளிகள் செய்யப்படுகின்றன. ஆனாலும் தேங்காய் போளி, பருப்பு போளி இரண்டும் பரவலாக எல்லோராலும் செய்யப்படுபவை.
    தேவையானப் பொருட்கள் :

    மைதா அல்லது கோதுமை மாவு - 2 கப்
    தேங்காய்த்துருவல் - 1 கப்
    வெல்லம் பொடித்தது - 1 கப்
    சுக்குப்பொடி - 1/2 டீஸ்பூன்
    ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன்
    நெய் - சுவைக்கு
    நல்லெண்ணெய் - 4 டீஸ்பூன் வரை
    மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
    உப்பு - 1/2 டீஸ்பூன்

    செய்முறை :

    கோதுமை (அல்லது மைதா) மாவுடன், உப்பு, மஞ்சள் தூள், நெய் சேர்த்து, சிறிது சிறிதாக நீரைச் சேர்த்து, சப்பாத்திக்கு பிசைவது போல் பிசைந்து அதன் மேல் சிறிது நல்லெண்ணெயைத் தடவி, குறைந்தது அரை மணி நேரம் மூடி வைக்கவும்.

    * வெல்லத்தில் 1/4 கப் தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விட்டு, வடிகட்டிக் கொள்ளவும். வடிகட்டிய வெல்லப்பாகை மீண்டும் அடுப்பிலேற்றி கொதிக்க விட்டு அத்துடன் தேங்காய்த்துருவலைச் சேர்த்து கெட்டியாகும் வரை கிளறி விடவும். பின்னர் அத்துடன் சுக்குத்தூள், ஏலக்காய்த்தூள் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கிளறி, இறக்கி வைத்து ஆற விடவும்.

    * அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடாக்கவும்.

    * வாழை இலையில் அல்லது பிளாஸ்டிக் ஷீட்டில் சிறிது நெய் தடவி தடவி, அதில் எலுமிச்சை அளவு மாவை வைத்து பூரி வடிவில் தட்டி, அதன் மேல் எலுமிச்சம் பழ அளவு தேங்காய் பூரணத்தை வைத்து மூடி, மறுபடியும் பிளாஸ்டிக் ஷீட்டில் சிறிது நெய் தடவி மாவை வைத்து விரல்களால் சப்பாத்தி போல் தட்டி (பூர்ணம் வெளியில் வரக்கூடாது), தோசைக்கல்லில் போட்டு, அதை சுற்றி சிறிது நெய்யை ஊற்றி, இரு புறமும் சிவக்க சுட்டெடுக்கவும்.

    * சுவையான தேங்காய் போளி ரெடி.

    குறிப்பு :

    * சாதாரணமாக மைதா மாவில் தான் செய்வார்கள். இதை கோதுமை மாவிலும் செய்யலாம்.

    * இதே போன்று, கடலைப்பருப்பு பூரணத்தை வைத்து, பருப்பு போளியும் செய்யலாம். கைகளால் தட்ட சிரமமாயிருந்தால், சப்பாத்தி கட்டையால் சப்பாத்தி இடுவது போல் இடலாம். மாவின் மேல் ஒரு பிளாஸ்டிக் ஷீட்டை போட்டு அதன் மேல் சப்பாத்திக்கட்டையால் உருட்டினால் ஒட்டாமல் வரும்.

    * நெய்யுடன் இந்த தேங்காய் போளியை தொட்டு சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
    தயிர் சாதம், தோசை, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த எண்ணெய் மாங்காய். இன்று இந்த ரெசிபி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    புளிப்பான மாங்காய் (மீடியம் சைஸ்) - 6,
    மிளகாய்த்தூள் - 50 கிராம்,
    மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்,
    வெந்தயம் - அரை டீஸ்பூன்,
    பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன்,
    கடுகுப்பொடி - ஒரு டீஸ்பூன்,
    நல்லெண்ணெய் - 100 கிராம்,
    கடுகு, காய்ந்த மிளகாய் - தாளிக்க தேவையான அளவு,
    உப்பு - ஒரு டீஸ்பூன் (அல்லது தேவைக்கேற்ப).

    செய்முறை:

    மாங்காய்களை கழுவி துடைத்து சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

    வெந்தயத்தை சிறிது எண்ணெயில் சிவக்க வறுத்து பொடித்துக் கொள்ளவும்.

    கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு, கடுகு தாளிக்கவும்.

    இத்துடன் காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து, மாங்காய் துண்டுகளைப் போடவும்.

    இதில் உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்துக் கிளறி அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.

    பிறகு, கடுகுப் பொடி போட்டு, மீதமுள்ள எண்ணெயை விட்டு, பொடித்த வெந்தயம், பெருங்காயத்தூள் சேர்த்துக் கிளறி, இறக்கி ஆற விடவும்.

    பின்னர் சுத்தமான பாட்டிலில் சேமித்து வைக்கவும்.

    சூப்பரான எண்ணெய் மாங்காய் ரெடி.
    கேசர் லஸ்ஸியை குட்டீஸ் விரும்பி சுவைப்பார்கள். இந்த லஸ்ஸியில் புரதச்சத்து, கால்சியமும் நிறைந்துள்ளது. இன்று இந்த லஸ்ஸி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கெட்டித் தயிர் - ஒரு கப்,
    குங்குமப்பூ - சிறிதளவு,
    காய்ச்சி ஆற வைத்த பால் - 2 டீஸ்பூன்,
    சர்க்கரை - தேவையான அளவு,
    பிஸ்தா, பாதாம் துருவல் - தலா 2 டீஸ்பூன்.

    செய்முறை :

    பாலில் குங்குமப்பூவை சிறிது நேரம் ஊற வைக்கவும்.

    தயிருடன் சர்க்கரை, குங்குமப்பூ சேர்த்து மிக்சியில் அடித்து எடுத்து கண்ணாடி டம்ளரில் ஊற்றவும்.

    மேலே பாதாம், பிஸ்தா துருவல் தூவி அலங்கரித்து பரிமாறவும்.
    சிறுதானியங்களில் பல சுவையான ரெசிபிகளை செய்யலாம். அந்த வகையில் இன்று சாமை அரிசி, நாட்டுக்கோழி சேர்த்து சூப்பரான பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சாமை அரிசி- ஒரு கப்
    நாட்டுக்கோழி - 200 கிராம்
    பெரிய வெங்காயம் - ஒன்று
    எலுமிச்சைச்சாறு - அரை டீஸ்பூன்
    மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
    மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்
    சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்
    சோம்புத்தூள் - ஒரு டீஸ்பூன்
    இஞ்சி, பூண்டுவிழுது - 2 டீஸ்பூன்
    புதினா - கால் கப்
    கொத்தமல்லித்தழை - கால் கப்
    ஏலக்காய் - 2
    பட்டை - சிறிய துண்டு
    கிராம்பு - 2
    கல்பாசி - 1 சிறிய துண்டு
    மிளகு - அரை டீஸ்பூன்
    சோம்பு - அரை டீஸ்பூன்
    நெய்/நல்லெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை:


    சாமை அரிசியை நன்றாக‌க் கழுவி வைக்கவும்.

    நாட்டுக்கோழியை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அடுப்பில் குக்கரை வைத்து நறுக்கிய கோழித்துண்டுகள், அதற்கு தேவையான அளவு உப்பு, இஞ்சி -பூண்டு விழுது, மிளகு, மஞ்சள்தூள், தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 25 நிமிடம் வேக வைத்துக் கொள்ளவும்.

    கோழி வெந்ததும் துண்டுகளை தனியாகவும், அதன் தண்ணீரை தனியாகவும் எடுத்து வைக்கவும்.

    அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, ஏலக்காய், கல்பாசி, சோம்பு, கிராம்பை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து தாளிக்கவும்.

    இத்துடன் நீளமாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நிறம் மாற வதக்கியதும் புதினா, கொத்தமல்லித்தழை சேர்த்து வதக்கவும்.

    பிறகு மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், சீரகத்தூள், சோம்புத்தூள், உப்பு, எலுமிச்சைச்சாறு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    இத்துடன் வேக வைத்த கோழி துண்டுகளை சேர்த்து நன்கு கிளறவும்.

    பிறகு, கோழி வேக வைத்த தண்ணீரை ஊற்றி (1 கப் சாமைக்கு 2.5 கப் தண்ணீர்) கொதிக்க விடவும்.

    இத்துடன் சாமையைச் சேர்த்து 10 நிமிடம் வேக வைத்து இறக்கிப் பரிமாறவும்.

    சூப்பரான சாமை நாட்டுக்கோழி பிரியாணி ரெடி.

    குறிப்பு: கர்ப்பிணி பெண்களுக்கு புரதச்சத்து நிறைந்த உணவு இது. சாமை உடலில் உள்ள சர்க்கரைச்சத்தின் அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. கோழி வேக வைத்த தண்ணீரின் அளவு 2.5 கப் வரவில்லை என்றால்,வெறும் தண்ணீரைச் சேர்த்துக்கொள்ளலாம்.
    வேர்க்கடலையை வைத்து பல்வேறு ருசியான ரெசிபிகளை தயார் செய்யலாம். அந்த வகையில் இன்று வேர்க்கடலை ஸ்டப்ஃடு பூரி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    கோதுமை மாவு - ஒரு கப்,
    வேக வைத்து, அரைத்த வேர்க்கடலை விழுது - அரை கப்,
    மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், உப்பு,
    எண்ணெய் - தேவையான அளவு.

    செய்முறை

    கோதுமை மாவில் உப்பு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.

    வேர்க்கடலை விழுதுடன், மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும்.

    கோதுமை மாவை சிறிய பூரிகளாக இட்டு, நடுவில் சிறிதளவு வேர்க்கடலை விழுதை வைத்து மூடி, மறுபடியும் லேசாக இடவும்.

    எண்ணெயைக் காய வைத்து, அதில் செய்து வைத்துள்ள பூரிகளைப் பொரித்தெடுக்கவும்.

    அருமையான ருசியுடன் இருக்கும் இந்த பூரி.
    ×