என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    நாண், பரோட்டா, தோசை, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள இந்த பைங்கன் பர்த்தா பஞ்சாபி சப்ஜி அருமையாக இருக்கும் இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பெரிய கத்தரிக்காய் - 2
    வெங்காயம் - 1
    தக்காளி - 1
    இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
    சீரகம் - தாளிக்க
    கரம் மசாலா - 1 தேக்கரண்டி
    மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
    மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
    காய்ந்த வெந்தயக்கீரை - சிறிதளவு
    உப்பு, எண்ணெய் - தேவைக்கு

    செய்முறை

    வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கத்தரிக்காயில் நிறைய எண்ணெய் தடவி அடுப்பில் சுட்டு எடுத்து தோலுரித்து கொள்ளுங்கள்.

    தோலுரித்த கத்தரிக்காயை லேசாக மசித்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம் தாளித்து வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

    அடுத்து அதில் துருவிய இஞ்சி, பூண்டை சேர்த்து வதக்கவும்.

    அடுத்து தக்காளி, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் பொடி, சேர்த்து சுருள வதக்கவும்.

    அடுத்து அதில் மசித்து வைத்துள்ள கத்தரிக்காயை சேர்த்து கொள்ளுங்கள்.

    கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடுங்கள்.

    கெட்டியாக வந்ததும் இறக்கி விடலாம்.

    தனியாக ஒரு கரண்டியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கரம் மசாலா பொடி சேர்த்து சப்ஜியின் மேலே கொட்டி கொள்ளுங்கள்.

    காய்ந்த வெந்தயக்கீரை நன்றாக கசக்கி அதன் மேல் தூவி சப்பாத்திக்கு சைடிஷ்ஷாக பரிமாறலாம்.

    குழந்தைகளுக்கு முட்டை என்றால் மிகவும் பிடிக்கும். இன்று முட்டையை வைத்து சூப்பரான ஸ்நாக்ஸ் முட்டை பேஜோ செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    முட்டை - 2
    வெங்காயம் - 2
    பூண்டு - 1
    காய்ந்த மிளகாய் - 10
    உப்பு கலந்த தண்ணீர் - தேவையான அளவு
    எலுமிச்சை சாறு - தேவையான அளவு
    புளித்தண்ணீர் - தேவையான அளவு
    கொத்தமல்லி தழை - சிறிதளவு
    மிக்ஸ்டு ஆயில் - தேவையான அளவு

    செய்முறை

    முட்டையை வேக வைத்துகொள்ளவும்.

    வெங்காயம், பூண்டை நீளவாக்கில் மெலிதாக நறுக்கி கொள்ளவும்.

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை போட்டு பொரித்து கொள்ளவும். (மொறு மொறு என்று பொரிந்திருக்க வேண்டும்)

    அடுத்து பூண்டைபோட்டு அதே போல் பொரித்து கொள்ளவும்.

    அடுத்து காய்ந்த மிளகாயை போட்டு பொரித்து எடுக்கவும்.

    காய்ந்த மிளகாயை கைகளால் நொறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் பொரித்த வெங்காயம், பூண்டைபோட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.

    அடுத்து அதில் தேவையான அளவு ( காரத்திற்கேற்ப) நொறுக்கிய வறுத்த மிளகாயை சேர்த்து கலந்து கொள்ளவும்.

    ஒரு முட்டையை எடுத்து நடுவில் சிறிதளவு கீறிக் அதன் நடுவில் வறுத்த வெங்காய மசாலாவை சிறிதளவு வைத்து மேலே சிறிதளவு உப்பு தண்ணீர், எலுமிச்சை சாறு, புளிக்கரைசல், மிக்ஸ்டு ஆயில் ஊற்றி மேலே கொத்தமல்லி தழை வைத்து பரிமாறவும்.

    சூப்பரான முட்டை பேஜோ ரெடி.

    தயிர் சாதம், சாம்பார் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும் இந்த முட்டை பிரை. 10 நிமிடத்தில் இந்த ரெசிபியை செய்து விடலாம்.
    தேவையான பொருட்கள்

    முட்டை - 6
    எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
    பூண்டு - 4 பல்
    பெரிய வெங்காயம் - 1
    உப்பு - தேவையான அளவு
    மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
    மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
    சீரகத்தூள் - அரை தேக்கரண்டி
    மிளகு தூள் - அரை தேக்கரண்டி
    கறிவேப்பிலை கொத்தமல்லி - சிறிதளவு

    செய்முறை

    வெங்காயம், கொத்தமல்லி, பூண்டை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    முட்டையை வேக வைத்து ஓட்டை உடைத்து முட்டையை சற்று கீறி வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பூண்டை போட்டு வதக்கவும்.

    அடுத்து வெங்காயம், கறிவேப்பிலையை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகத்தூள், மிளகுத்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிய பின்னர் வேக வைத்த முட்டையை சேர்த்து கிளறவும்.

    மசாலா முட்டையில் நன்றாக பரவியதும் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்,

    சூப்பரான முட்டை பிரை ரெடி.

    இறாலில் புரதம், கால்சியம், பொட்டசியம் மற்றும் பல வைட்டமின்கள் நிறைந்துள்ளன. உணவில் வாரம் ஒரு முறை இறாலை சேர்த்துக் கொண்டால், பல நோய்களுக்கு மருந்தாகும்.
    தேவையான பொருட்கள்

    இறால் - 100 கிராம்
    முட்டை - 2
    மிளகு தூள் - சிறிதளவு
    உப்பு - அரை ஸ்பூன்
    இஞ்சி, பூண்டு பேஸ்ட் - அரை ஸ்பூன்
    மஞ்சள் தூள் - சிறிது
    மிளகாய் தூள் - சிறிதளவு
    வெங்காயம் - 2
    கறிவேப்பிலை - சிறிதளவு
    வெங்காயத்தாள் - சிறிதளவு
    கொத்தமல்லி - சிறிதளவு
    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை

    முதலில் இறாலை சுத்தம் செய்து சிறிது மிளகாய் தூள், உப்பு, இஞ்சி, பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்துசுமார் அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

    பின்னர் அதனை தோசை கல்லையில் போட்டு நன்றாக வறுத்து கொள்ளவும். வறுத்த இறாலை பொடியாக நறுக்கி கொள்ளவும். வெங்காயத்தாள், வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பின்னர் பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், வெங்காயத்தாள் போட்டு வதக்கவும். வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி, பூண்டு பேஸ்ட் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகு தூள், மிளகாய் தூள், கறிவேப்பிலை, உப்பு போட்டு வதக்கவும். அடுத்ததாக அதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கிளறவும்.

    முட்டை நன்றாக வெந்து உதிரி உதிரியாக வந்ததும் பொடியாக நறுக்கிய இறால், வெங்காயத்தாள் சேர்த்து நன்றாக கலந்து இறக்கி பரிமாறலாம்.

    இப்போது சுவையான இறால் முட்டை பொடிமாஸ் ரெடி.
    இனிப்பு, மசாலா, புளிப்பு என எல்லாம் கலந்தது தான் சாட் ரெசிபி. இன்று 10 நிமிடத்தில் சமோசாவை கொண்டு எப்படி ருசியான சாட் செய்வதென்று பார்ப்போம்.
    தேவையான பொருட்கள்

    சமோசா - 2
    அப்பளம் - 6
    தயிர் - 3 மேஜைக்கரண்டி
    வெங்காயம் - 1
    தக்காளி - 1
    கொத்தமல்லி இலை - சிறிதளவு
    புதினா சட்னி - 2 தேக்கரண்டி
    புளி சட்னி - 2 தேக்கரண்டி
    மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
    சாட் மசாலா - 1/2 தேக்கரண்டி
    ஓமப் பொடி - 1 கப்
    உப்பு - சுவைக்க

    செய்முறை

    தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சூடான சமோசாவை சிறு சிறு துண்டுகளாக உடைத்து போட்டு கொள்ளவும்.

    அத்துடன் அப்பளத்தையும் நொறுக்கி போட்டு கொள்ளவும்.

    தயிரை கட்டிகள் இல்லாமல் நன்கு கலந்து கொள்ளவும்.

    நன்றாக கலந்த தயிரை சமோசாவின் மீது ஊற்றவும்.

    அதன் மேல் அரைத்து வைத்த சட்னிகளை சேர்க்கவும். மசாலாவை விட இனிப்பாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் அதில் புளி சட்னியை அதிகம் சேர்க்கவும்.

    பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து அலங்கரிக்கவும்.

    அதன் மேல் ஓமப் பொடியை தூவவும்.

    இப்போது சூப்பரான சமோசா சாட் ரெடி.

    சூடான டீயுடன் சாப்பிட ருசியாக இருக்கும்.
    உருளைக்கிழங்கில் பொரியல், சிப்ஸ், வறுவல் செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று உருளைக்கிழங்கை வைத்து சூப்பரான முறுக்கு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    உருளைக்கிழங்கு - 2
    அரிசி மாவு - 2 கப்
    கடலை மாவு - 1 கப்
    மஞ்சள் தூள் - ¼ டீஸ்பூன்
    மிளகாய்த்தூள் - ½ டீஸ்பூன்
    சீரகம் - 1 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை

    உருளைக்கிழங்கை வேகவைத்து, அதோடு 2 ஸ்பூன் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

    பின்பு ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, கடலை மாவு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், சீரகம் மற்றும் உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும். அந்தக் கலவையில் வெண்ணெய் சேர்த்து நன்றாகப் பிசைய வேண்டும்.

    இப்போது அரைத்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கை இதில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி முறுக்கு மாவு பதத்திற்கு பிசையவும்.

    இந்த மாவை சூடான எண்ணெயில் முறுக்கு வடிவில் பிழிந்து பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

    இப்போது உருளைக்கிழங்கு முறுக்கு தயார்.

    நாண், சப்பாத்தி, இட்லி, தோசைக்கு தொட்டு கொள்ள அருமையாக இருக்கும் வெங்காய குருமா. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பெ.வெங்காயம் - 4
    தக்காளி - 3
    பச்சை மிளகாய் - 2
    கடலை பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
    கடலை மாவு - 1 டீஸ்பூன்
    கடுகு - சிறிதளவு
    சோம்பு தூள் - 1 டீஸ்பூன்
    மிளகாய் தூள், மஞ்சள் தூள் - சிறிதளவு
    மல்லித்தூள் - கால் டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிதளவு
    கொத்தமல்லி - சிறிதளவு
    உப்பு - தேவைக்கு

    செய்முறை:

    தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

    அதனுடன் கடலைப்பருப்பு, வெங்காயம், தக்காளி, மிளகாய், சோம்பு தூள் சேர்த்து வதக்கவும்.

    பின்னர் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லித்தூள் மற்றும் போதுமான அளவு தண்ணீர் விட்டு மூடி கொதிக்கவிடவும்.

    நன்கு வெந்ததும் கடலை மாவை சிறிதளவு தண்ணீரில் கலந்து ஊற்றவும்.

    மீண்டும் கொதிக்க தொடங்கியதும் கொத்தமல்லி தூவி கீழே இறக்கி பரிமாறலாம்.

    சூப்பரான வெங்காய குருமா ரெடி.

    கமகமவென்ற மணத்துடன் தீபாவளி மருந்து தயாரித்து நாளை தீபாவளி பண்டிகையை கொண்டாடலாம். தீபாவளி மருந்து தயாரிப்பது எப்படி என்ற விவரம் வருமாறு:-
    தேவையான பொருட்கள்

    கண்டந்திப்பிலி - 50 கிராம்
    அரிசி திப்பிலி - 20 கிராம்
    ஜாதிக்காய் - 1
    ஜாதிபத்திரி - 8 இதழ்
    சித்தரத்தை - 50 கிராம்
    விரலி மஞ்சள் -10 கிராம்
    சுக்கு - 100 கிராம்
    அதிமதுரம் - 20 கிராம்
    ஓமம் - 100 கிராம்
    லவங்கம் - 6
    ஏலக்காய் - 6
    தனியா - 25 கிராம்
    மிளகு - 50 கிராம்
    சீரகம் - 50 கிராம்
    வெல்லம் - 400 கிராம்
    நெய் - 250 கிராம்
    நல்லெண்ணை - 250 கிராம்
    தேன் - 100 கிராம்

    செய்முறை

    கண்டந்திப்பிலி அரிசி திப்பிலி, ஜாதிக்காய், ஜாதி பத்திரி, சித்தரத்தை, விரலி மஞ்சள், சுக்கு, அதிமதுரம் ஆகிய பொருட்களை தனித் தனியாக நசுக்கி வைத்துக் கொள்ளவும்,

    பின்னர் வாணலியில் செந்நிறம் வரும்வரை வறுத்து பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்,

    அதன்பிறகு ஓமம், லவங்கம், ஏலக்காய், தனியா, மிளகு, சீரகம் ஆகிய பொருட்களை வாணலியில் நன்றாக வறுத்துக்கொள்ளவும்.

    அவற்றுடன் ஏற்கனவே வறுத்து வைத்துள்ள 8 பொருட்களையும் நன்றாக கலந்து கொஞ்சம் கொஞ்சமாக மிக்சியில் போட்டு நைசாக அரைத்து மாவு ஜல்லடையில் சலித்து எடுத்துக் கொள்ளவும்.

    ஜல்லடையில் மீது உள்ளதை மீண்டும் மிக்சியில் அரைத்து சலித்து எல்லா மாவையும் ஒரு பாத்திரத்தில் போட்டு மிதமான சூடு கொண்ட தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக விட்டு தோசை மாவு பதத்தில் கரைத்து வைக்கவும்.

    அதன்பிறகு அடிகனமான வாணலியில் வெல்லத்தை பொடியாக்கி போட்டு மூழ்கும் வரை தண்ணீர் ஊற்ற வேண்டும். வெல்லம் நன்றாக கரைந்ததும் ஒரு பாத்திரத்தில் வடிகட்டி அதை அந்த வாணலியில் ஊற்றி கொதிக்க வைக்கவும்.

    நன்றாக கொதித்தவுடன் நல்லெண்ணை, நெய் இரண்டையும் பாதி பாதி ஊற்றி கிளறி விட வேண்டும்.

    பின்னர் கரைத்து வைத்துள்ள மருந்து பொடியை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கைவிடாமல் நன்றாக கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். கலவை கெட்டியானதும் மீதி இருக்கும் நெய்யையும், நல்லெண்ணையையும் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கிளறி நெய்யும், எண்ணெணையும் பிரிந்து கெட்டியாக அல்வா பதத்திற்கு வந்தவுடன் அடுப்பை அணைத்து விட்டு தேனை பரவலாக விட்டு நன்றாக கலக்க வேண்டும்.

    2 முதல் 3 மணிநேரம் ஆற விட்டு கிளறினால் கமகம என்ற வாசனையுடன் தீபாவளி மருந்து தயாராகும்.

    இந்த தீபாவளிக்கு எளிய முறையில் செய்யக்கூடிய பாதாம் பர்ஃபி செய்து குடும்பத்தில் உள்ளவர்களை அசத்துங்கள். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:
     
    பாதாம் - 1 1/2 கப்
    சர்க்கரை - 1 1/4 கப்
    ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
    தண்ணீர் - 100 மில்லி
    குங்குமப்பூ - அலங்கரிக்க
    பாதாம், பிஸ்தா - அலங்கரிக்க

    செய்முறை:
     
    பாதாமை சிறிது நேரம் நீரில் ஊற வைத்து தோலை உரித்து கொள்ளவும். தோல் நீக்கிய பாதாமை வாணலியில் ஈரம் போக லேசாக வறுத்து பொடி செய்துக்கொள்ள வேண்டும்.
     
    சர்க்கரையில் தண்ணீர் சேர்த்து நான் ஸ்டிக் வாணலியில் கொதிக்க விடவேண்டும். சர்க்கரை நன்கு கரைந்தவுடன் ஏலக்காய் பொடி சேர்த்து பாதாம் பொடியையும் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
     
    பாதாம் கலவை நன்கு கெட்டியாகவும், மென்மையாகவும் சேர்ந்தும் வரும் வரையில் கைவிடாமல் கிளறி அடுப்பை அணைத்து ஆறவிடவும். ஆறிய பின் அதை நன்கு வெடிப்புகள் இல்லாமல் பிசைந்துக்கொள்ள வேண்டும்.
     
    பிசைந்த மாவு பட்டர் பேப்பர் அல்லது நெய் தடவிய தட்டில் பரப்பி மேலே பாதாம் துண்டுகள் மற்றும் குங்குமப்பூவை தூவி துண்டுகள் போடவும்.

    சுவையான பாதாம் பர்ஃபி தயார்.

    தீபாவளிக்கு அனைத்து வீடுகளிலும் முறுக்கு சுடப்படும். எப்போதும் ஒரே மாதிரியான முறுக்கை சுடுவதற்கு பதிலாக, இந்த வருடம் சற்று வித்தியாசமாக முந்திரி முறுக்கு செய்து பாருங்கள்.
    தேவையான பொருட்கள்:

    அரிசி மாவு - 2 கப்
    முந்திரி - 75 கிராம்
    நெய் - 2 டேபிள் ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

    செய்முறை

    முந்திரியை சுடுநீரில் 15 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் அரைத்து கொள்ள வேண்டும்.

    ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, அரைத்த முந்திரி பேஸ்ட், நெய் மற்றும் உப்பு சேர்த்து கையால் நன்கு பிசையவும்.

    வேண்டுமானால் அதில் சிறிது தண்ணீர் ஊற்றி முறுக்கு பதத்திற்கு மாவை மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.

    ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.

    எண்ணெய் சூடானதும், முறுக்கு அச்சில் எண்ணெயை தடவி, பின் அதனுள் பிசைந்து வைத்துள்ள மாவை வைத்து நேரடியாக எண்ணெயில் பிழிய வேண்டும்.

    பின் அதனை பொன்னிறமாக பொரித்து எடுத்து, மீதமுள்ள மாவையும் அதேப்போல் பிழிந்து பொரித்து எடுத்தால், முந்திரி முறுக்கு ரெடி!!!

    இந்த வரும் தீபாவளிக்கு அன்னாசிப்பழ புட்டிங் செய்து வீட்டில் உள்ளவர்களை அசத்துங்க. சரி, இன்று குளு குளு அன்னாசிப்பழ புட்டிங் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    அன்னாசிப்பழம் - 1
    கஸ்டர்ட் பவுடர் - 2 டேபிள் ஸ்பூன்
    பால் பவுடர் - 7 டேபிள் ஸ்பூன்
    சர்க்கரை - 7 டேபிள் ஸ்பூன்
    பொடித்த முந்திரி பருப்பு + முந்திரி பழம் - 1/4 கப்
    அன்னாசி எசன்ஸ் - 1/2 டீ ஸ்பூன்

    செய்முறை

    அன்னாசிப்பழத்தை தோல் சீவி மிகவும் சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    கஸ்டர்ட் பவுடரினுள் 5 டேபிள் ஸ்பூன் தண்ணீர் விட்டு கட்டி இல்லாமல் கரைக்கவும்.

    அதனுள் சர்க்கரையை சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்கு அடிக்கவும்.

    அதனுள் சிறிது சிறிதாக பால் பவுடரையும் சேர்த்து அடிக்கவும்.

    பின்னர் இக்கலவையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி பொடித்த முந்திரி பருப்பு, முந்திரி பழம் அன்னாசி எசன்ஸ் போட்டு கலக்கவும்.

    பின்னர் இக்கலவையில் சிறிய அளவை ஒரு உருண்டையான கிண்ணத்தில் ஊற்றி அதன் மேல் அன்னாசி துண்டுகளைப் போடவும். இவ்வாறு மாறி மாறி ஊற்றவும். பின்னர் இதனை ஆவியில் வைத்து அவித்தெடுக்கவும். (அல்லது 10 நிமிடங்கள் மைக்ரோ அவனில் பேக் செய்யவும்) சுவையான அன்னாசி புட்டிங் தயார்.

    இதனை குளிர வைத்து துண்டுகளாக்கி பரிமாறவும்.

    சூப்பரான அன்னாசிப்பழ புட்டிங் ரெடி


    இறாலில் பல வகை ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இறாலில் பல வகை ரெசிபி செய்யலாம். வாங்க இன்று இறால் சுக்கா மசாலா செய்வது குறித்து பார்க்கலாம்..
    தேவையான பொருள்கள்:

    இறால் - அரை கிலோ
    தேங்காய் - 1/2 கப்
    வரமிளகாய் - 5
    பூண்டு - 4-5
    கறிவேப்பிலை - சிறிதளவு
    சோம்பு - 2 ஸ்பூன்
    தேங்காய் எண்ணெய் - 4 ஸ்பூன்
    வெங்காயம் - 1
    மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    மிளகுத் தூள் - 2 ஸ்பூன்
    கரம் மசாலா - 1 ஸ்பூன்

    செய்முறை:

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    இறாலை நன்றாக சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

    தேங்காய், வரமிளகாய், சோம்பு, பூண்டு, கறிவேப்பிலை ஆகியவை சேர்த்து மிக்சியில் பேஸ்ட் பதத்திற்கு அரைத்து கொள்ள வேண்டும்.

    அடுப்பில் வாணலியை வைத்து அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வதக்க வேண்டும்.

    பின்னர் சுத்தம் செய்த இறால், மஞ்சள் தூள், உப்பு ஆகியவை ஒன்றுடன் ஒன்று சேரும் வரை கிளற வேண்டும்.

    அரைத்து வைத்த மசாலைவை சேர்த்து ஒரு 10 நிமிடம் வேக வைக்கவும்.

    கடைசியில் மிளகாய் தூள், கரம் மசாலா ஆகியவை சேர்த்து நன்றாக கிளறினால் சுவையான இறால் சுக்கா தயார்...

    ×