என் மலர்
பொது மருத்துவம்
- ஆரோக்கியமான மற்றும் சீரான உணவு உங்கள் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது.
- தூக்கம் என்பது அனைவருக்கும் மிகவும் இன்றியமையாதது.
ஒருவர் எப்போதும் ஆரோக்கியமாக இருப்பதற்கு நல்ல உணவு முறை, தூக்கம், மனநலம் ஆகிய இம்மூன்றும் மிகவும் முக்கியமானது.
இதுகுறித்து விரிவாக பார்க்கலாம் வாருங்கள்.
உணவு முறை

ஆரோக்கியமான மற்றும் சீரான உணவு உங்கள் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது.
உங்கள் உணவில் புதிய பருவகால பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், புரதங்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளைச் சேர்த்துக்கொள்ளுங்கள்.
நொறுக்குத் தீனி மற்றும் சர்க்கரையைத் முழுமையாக தவிர்த்துவிட வேண்டும். எல்லாவற்றையும் விட முதன்மையானது எந்த வேலையாக இருந்தாலும் கொஞ்சம் நேரம் ஒதுக்கி போதுமான அளவு தண்ணீர் குடித்து, சரியான நேரத்தில் உணவு உண்ணுங்கள். இப்படி செய்தாலே ஆரோக்கியமாக இருக்கலாம்.
தூக்கம்

தூக்கம் என்பது அனைவருக்கும் மிகவும் இன்றியமையாதது. ஆனால், இன்றைய வாழ்க்கை முறையில் பகல் முழுவதும் அலுவலகத்தில் வேலை செய்துவிட்டு இரவு வெகுநேரம் வரை நண்பர்களுடன் நேரம் செலவிடுவது, அதிக நேரம் சமூக வலைதளத்தில் நேரத்தை செலவிடுவது போன்றவை போதிய தூக்கம் இல்லாமல் உடல் நலத்தை மோசமாக பாதிக்கிறது. இதன் காரணமாக இளைஞர்களிடையே தூக்கம் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகிறது.
நல்ல தூக்கம் என்பது நம் உடலையும் மூளையையும் புதுப்பிக்கிறது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. ஒவ்வொரு நாள் இரவும் 7- 8 மணிநேரம் நல்ல தூக்கத்தைப் பெற முயற்சி செய்யுங்கள். படுக்கைக்கு முன் திரை நேரத்தைக் குறைத்து, உறக்க அட்டவணையை அமைத்துக்கொள்ளுங்கள்.
மனநலம்

ஒருவருக்கு உடல் ஆரோக்கியம் எவ்வளவு முக்கியமானதோ அதே அளவு மனநலமும் முக்கியமானது. பெரும்பாலான நேரங்களில் மக்கள் அதை புறக்கணிக்கின்றனர்.
மன அழுத்தம், பதட்டம் மற்றும் மனச்சோர்வு போன்ற மன பிரச்னைகள் நம் வாழ்க்கையை பாதிக்கலாம். எனவே, மன ஆரோக்கியத்தை பராமரிக்க யோகா மற்றும் தியானம் முதலானவற்றை செய்ய வேண்டும்.
சமூக உறவுகளை உருவாக்கி உங்கள் உணர்வுகளை வெளிப்படையாக வெளிப்படுத்துங்கள். உங்களுக்கு ஏதேனும் மனநலப் பிரச்னை இருப்பதாக உணர்ந்தால், தேவைப்பட்டால் உடனடியாக மனநல நிபுணரை அணுகவும்.
- வேர்க்கடலை 'ஏழைகளின் பாதாம்' என்று அழைக்கப்படுகிறது.
- வேர்க்கடலையில் உள்ள புரதம், தசைகளின் வளர்ச்சி மற்றும் உறுதிக்கும் உதவி புரிகிறது.
வேர்க்கடலையில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் இருப்பதால் இது, 'ஏழைகளின் பாதாம்' என்று அழைக்கப்படுகிறது.
100 கிராம் வேர்க்கடலையில் கிட்டத்தட்ட 567 கலோரிகள், 25 கிராம் புரதம், 16 கிராம் கார்போஹைட்ரேட், 8 கிராம் நார்ச்சத்து, 49 கிராம் கொழுப்பு மற்றும் 15 கிராம் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் உள்ளது. மேலும் இதில் வைட்டமின்கள் பி1, பி3, பி7, பி9, ஈ போன்றவையும், காப்பர், பாஸ்பரஸ், மெக்னீசியம், கால்சியம், பொட்டாசியம் போன்ற தாதுக்களும் உள்ளன.
வேர்க்கடலையில் அதிகமான அளவு அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ள ரெஸ்வெராட்ரோல், ஐசோபிள வினாய்ட்ஸ், பைடிக்ஆசிட், பைட் டோஸ்டீராய்ட்ஸ் போன்ற ஆண்டி ஆக்சிடன்டுகள் உள்ளன.
வேர்க்கடலை 14 என்ற மிக குறைந்த அளவு கிளைசெமிக் இன்டெக்ஸ் கொண்டிருந்தாலும் இதில் இருக்கும் அதிக அளவு கொழுப்பு மற்றும் கலோரிகளால் இதனை மிக குறைந்த அளவே சர்க்கரை நோயாளிகள் உட்கொள்ள வேண்டும்.
வேர்க்கடலையில் இருக்கக்கூடிய அதிகமான அளவு நார்ச்சத்து செரிமானத்தை தாமதப்படுத்தி உணவு உட்கொண்ட பிறகு உடனே ஏற்படும் குளுக்கோஸ் ஸ்பைக்ஸ் வராமல் தடுக்கிறது.
இதில் உள்ள கால்சியம், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் உடலில் கெட்ட கொலஸ்ட் ரால் அளவு மற்றும் ரத்த அழுத்தத்தை குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மேலும் இதில் இருக்கும் மெக்னீசியம் இன்சுலின் சுரப்பதை துரிதப்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
வேர்க்கடலையில் உள்ள புரதம், தசைகளின் வளர்ச்சி மற்றும் உறுதிக்கும் உதவி புரிகிறது. வைட்டமின் பி3, பி9 அறிவாற்றல் செயல்பாட்டிற்கு ஒரு முக்கிய பங்காற்றுகிறது. இதிலுள்ள ரெஸ்வெராட்ரோல் போன்ற பயோ ஆக்டிவ் சேர்மங்கள் முதுமை தோற்றத்தை தடுக்கிறது.
வேர்க்கடலையை வேகவைத்த வடிவில் சாப்பிடுவதே அதிக பயன்கள் தரும். வறுத்த வேர்க்கடலையை விட வேகவைத்த வேர்க்கடலையில் 4 மடங்கு அதிகமான அளவு ஆன்டிஆக்ஸி டன்ட்கள் இருப்பதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
வேர்க்கடலை ஒவ்வாமை உள்ளவர்கள் எக்காரணம் கொண்டும் எந்த வடிவிலும் அதனை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். வேர்க்கடலை பருப்பில் உள்ள தோலில் சத்துக்கள் அதிகம் உள்ள தால் அதனை நீக்காமல் சாப்பிட வேண்டும்.
அஜீரணம் ஏற்படுத்துவதால் பச்சையாக வேர்க்கடலை சாப்பிடுவதை தவிர்க்கலாம். வேர்க்கடலையை உப்பிட்டோ, மசாலாவுடன் சேர்த்தோ அல்லது பொரித்த வடிவிலோ சாப்பிடுவதை விட வேகவைத்து சாப்பிடுவது நல்லது.
- உடல் என்பது ஒருவகை எந்திரம் போன்று செயல்படுகிறது.
- இளநீர், பதநீர், எலுமிச்சை சாறு உள்ளிட்ட இயற்கை பானங்களையும் அவ்வப்பொழுது பருக வேண்டும்.
இன்றைய அவசரமான நகர வாழ்க்கை முறைகளால், உண்பது மற்றும் உறங்குவது ஆகிய அத்தியாவசிய செயல்கள் கூட காலநேரப்படி அமையாமல் நேரம் தவறி அமைந்து விடுகிறது. அதனால் தான் பல்வேறு நோய்களுக்கு மனித உடல் ஆளாகி நிற்கிறது. இந்த சீரற்ற நிலையில் இருந்து விடுபடுவதற்கு அனைவரும் உணவு முறைகளில் சீராக செயல்பட உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்.
அந்த வகையில் உணவு முறைகளை சீர்படுத்தி, வாழ்வில் சிறிய மாற்றங்களை செய்வதன் மூலம் உடல் நலத்தை போனஸ் ஆக பெற முடியும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். அவ்வகையில் உடல் நலனுக்கு ஏற்ற முக்கியமான குறிப்புகளை தீங்கு பார்க்கலாம்.
உடல் என்பது ஒருவகை எந்திரம் போன்று செயல்படுகிறது. அதற்கு எரிபொருளாக உணவு அவசியம். அந்த எரிபொருளை நமது உடல் உள்ளார்ந்த கடிகாரம் மூலம் நேர்த்தியாக அதற்கான பசியை உணரச் செய்கிறது. அதனால் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்றால் சரியான உணவு, சரியான நேரம், சரியான அளவு ஆகிய மூன்று அடிப்படை விஷயங்கள் அத்தியாவசியமானதாகும்.
சரியான உணவு என்பது ஆரோக்கியமான உணவு முறையின் அடிப்படையாக அமைவதாகும். அந்த வகையில் காய்கறி வகைகளை அதிகமாக உணவில் நாம் அனைவருமே சேர்த்துக் கொள்ள வேண்டும். முளைகட்டிய தானியங்கள், அந்தந்த பருவ காலங்களில் கிடைக்கும் காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை தவறாமல் உட்கொள்வது அவசியம். அத்துடன் இளநீர், பதநீர், எலுமிச்சை சாறு உள்ளிட்ட இயற்கை பானங்களையும் அவ்வப்பொழுது பருக வேண்டும்.
சித்திரை போன்ற வெயில் காலங்களில் செயற்கையான குளிர் பானங்கள், எண்ணெயில் பொரித்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட தின்பண்டங்கள் ஆகியவற்றை உண்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அதன் மூலம் ரத்த அழுத்தம் போன்ற சிக்கல்கள் ஏற்படாமல் தவிர்க்க முடியும்.
* காலை உணவில் கார்போஹைட்ரேட் மற்றும் புரதச்சத்து கொண்ட உணவு வகைகளை உண்ண வேண்டும். அந்த வகையில் நம்முடைய பாரம்பரிய உணவு, முழு தானிய உணவு ஆகியவற்றை காலை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
* மதிய உணவைப் பொறுத்தவரை கார்போஹைட்ரேட், புரதச்சத்து, நார்ச்சத்து, கொழுப்பு ஆகியவை அடங்கிய உணவை எடுத்துக் கொள்ளலாம். அத்துடன் காய்கறி, கீரைகள், பயிறு வகை, மீன், முட்டை, இறைச்சி ஆகியவற்றையும் உண்பதற்கான காலம் மதிய நேரமே.
* இரவு நேரத்தில் எளிதில் செரிக்க கூடிய உணவு வகைகளை குறைந்த அளவில் உட்கொள்வதே எப்பொழுதும் நன்மையை ஏற்படுத்தும்.
நம்முடைய இந்திய பாரம்பரிய முறைப்படி உணவு பழக்கம் என்பது மூன்று வேலைகளாக காலை, இரவு என அமைந்துள்ளது. அத்துடன் காலை, மதியம் மற்றும் மதியம், இரவு வேலைகளுக்கு இடையில் சிற்றுண்டிகளையும் தேவைக்கு ஏற்ப அளவாக உட்கொள்ளலாம்.
ஒவ்வொரு நேர உணவை உட்கொண்டு முடித்ததும் அடுத்த உணவுக்கு நான்கு அல்லது ஐந்து மணி நேரம் இடைவெளி அவசியம். எப்பொழுதுமே காலை உணவை உறங்கி எழுந்த இரண்டு மணி நேரத்திற்குள் உண்பதே நல்லது. ஏனென்றால் இரவு சாப்பிட்டு முடித்தவுடன் நீண்ட நேரம் கழித்து காலை உணவு உண்பதால் அதை தாமதம் செய்வது கூடாது. அதனால் தான் அதை பிரேக் பாஸ்ட் அதாவது உண்ணா நோன்பை உடைப்பது என்ற அர்த்தத்தில் ஆங்கிலத்தில் குறிப்பிடப்படுகிறது.
* காலை உணவு என்பது காலை 7 முதல் 9 மணிக்குள்ளாகவும்,
* மதிய உணவை அதிகபட்சமாக நண்பகல் 2 மணிக்குள்ளாகவும்,
* இரவு உணவை 8.30 மணிக்குள்ளாகவும் உண்பதே சிறந்தது.
இரவு உணவைப் பொறுத்தவரை உறங்கச் செல்வதற்கு இரண்டு மணி நேரம் முன்னதாகவே உண்பது நல்லது. அப்பொழுதுதான் தூக்கத்திற்கான ஹார்மோன் சரியாக வெளிப்பட்டு நல்ல தூக்கம் ஏற்படும். இரவில் மனித உடலினுடைய வளர்ச்சிதை மாற்றம் குறைவாக இருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். எப்பொழுதுமே உணவின் அளவை அவசியம் இல்லாமல் குறைக்கக்கூடாது. நாம் உண்பதில் ஒருவேளை உணவாவது காய்கறி, பழங்கள், தானியங்கள் கொண்டதாக இருக்க வேண்டும்.
- குங்குமப்பூவுக்கும் சிவப்பு நிறத்துக்கும் தொடர்பே கிடையாது.
- குங்குமப்பூவை அதிக அளவில் எடுத்துக்கொண்டால் சிலருக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு ஏற்படலாம்.
'சிவப்பு தங்கம்' என பிரபலமாக அறியப்படும் குங்குமப்பூ, உலகிலேயே மிகவும் மதிப்பு வாய்ந்த மசாலாப் பொருளாகும். இது, குரோகஸ் சட்டிவஸ் எனப்படும் மலரில் இருந்து கிடைக்கிறது.
நமக்கு தெரிந்த இந்த குங்குமப்பூ, குரோகஸ் பூக்களின் உலர்ந்த ஆரஞ்சு-சிவப்பு சூலகமுடி ஆகும். குங்குமப்பூ செடி, மத்திய தரை கடல் பகுதிகளில் தோன்றியதாக நம்பப்படுகிறது.
குங்குமப்பூவில் இரும்புச்சத்து அதிகமாக இருக்கிறது. எனவே இது நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கும். கர்ப்பிணிகளுக்கு குங்குமப்பூவை ஏன் தருகிறார்கள் தெரியுமா?
குங்குமப்பூவுக்கும் சிவப்பு நிறத்துக்கும் தொடர்பே கிடையாது. பாலில் குங்குமப் பூவைப் போடும்போது பாலின் நிறம் மாறுகிறது என்பதற்காக, அதைச் சாப்பிடுவதால் குழந்தையும் அந்த நிறத்தில் பிறக்கும் என்பது அர்த்தமில்லை. இது முற்றிலும் தவறான நம்பிக்கை.
ஆனால், குங்குமப்பூவுக்கு ஒரு வாசனைப் பொருளாக நிறைய மருத்துவ குணங்கள் உள்ளன. குறிப்பாக, இது உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது.
இனிப்புச் சுவையுள்ள நறுமணப் பொருட்களான குங்குமப்பூ, அதிமதுரம் போன்றவை குழந்தையின் வளர்ச்சிக்கு துணைபுரியக் கூடியவை. குங்குமப்பூ, ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்வதால் மனஅழுத்தம் குறையும். எனவேதான், கர்ப்பிணிப் பெண்கள் நல்ல மனநிலையில் இருக்க குங்குமப் பூவை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இப்படி பல காரணங்களுக்காகவே, கருவுற்ற பெண்ணுக்கு குங்குமப்பூ, அதிமதுரம் போன்றவற்றை வழங்கும் சடங்கு இன்றும் பல இடங்களில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
குங்குமப்பூவை உரசி ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் விட்டு சிறிது நேரம் ஊறவிடவும். குங்குமப் பூவின் நிறம் முழுக்க நீரில் ஊறியதும் சிறிது வெண்ணெய் கலந்து நன்றாக குழைக்கவும். இந்த கலவையை தினமும் பூசி வர, உதடுகள் செவ்வாழை நிறம் பெறும். உதடுகளின் வறட்சி இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகளும் மறைந்து விடும்.
குங்குமப்பூவை அதிக அளவில் எடுத்துக்கொண்டால் சிலருக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு ஏற்படலாம். அதனால் குறைவான அளவு எடுத்துக் கொள்வது நல்லது.
குங்குமப்பூ உபயோகப்படுத்தும் முறை:
குங்குமப்பூவை சிறிதளவு சூடான பாலில் 10 நிமிடங்கள் ஊறவைத்து கையால் நசுக்கிவிட்டு பாலோடு கலந்து குடிக்கலாம்.
குங்குமப்பூவை பொடி செய்யும் முறை:
ஒரு கனமான வாணலியை அடுப்பில் வைத்து சூடாக்கவும். நன்கு சூடானதும் அடுப்பை அணைத்து விடவும். அந்த வாணலியில் குங்குமப்பூவை போட்டு வைக்கவும். ஓரிரு நிமிடங்கள் கழித்து கையால் நசுக்கி பொடி செய்யவும். இதை ஒரு சிறிய டப்பாவில் போட்டு வைத்து தேவைப்படும்போது பயன்படுத்தலாம்.
- காலை உணவு அன்றைய நாளின் முக்கியமான உணவாக கருதப்படுகிறது.
- உணர்ச்சிகளை அடக்குவது தேவையற்ற மோதலை தவிர்ப்பதற்கான வழிமுறையாக தோன்றலாம்.
இன்றைய அவசர உலகில் சிலர் பின்பற்றும் பழக்கங்கள் மெதுவாக கொல்லும் விஷமாக மாறக்கூடியது. குறிப்பாக உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மோசமாக்கக்கூடியது. அத்தகைய பழக்க வழக்கங்கள் பற்றியும், அவை எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது பற்றியும் பார்போம்.
மன அழுத்தம்
நாள்பட்ட மன அழுத்தம் 'சைலண்ட் கில்லர்' (அமைதியான கொலையாளி) என்று சித்தரிக்கப்படுவதுண்டு. மன அழுத்தம் சில நிமிடங்களோ, சில நாட்களோ நீடிப்பதே சிக்கலானது. ஆனால் நாள் கணக்கில் மன அழுத்தத்துடனே இருப்பது இதய நோய், உயர் ரத்த அழுத்தம், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு உள்பட பல்வேறு உடல்நல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். அதற்கு இடம் கொடுக்காமல் மன அழுத்தத்தை ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்திவிட வேண்டும்.
வேலை
எந்த வேலையையும் ஆர்வமுடன் செய்ய வேண்டும். வெறுப்புடனோ, அதிருப்தியுடனோ அந்த வேலையை செய்யக்கூடாது. ஆர்வம் இல்லாமல் இருந்தால் அந்த வேலையை தொடரக்கூடாது. சிறிது ஓய்வுக்கு பிறகோ, அந்த வேலை மீது ஈடுபாட்டை ஏற்படுத்திக்கொண்டோ பின் செய்யலாம். ஆனால் வெறுப்புடன் வேலை செய்வது உடல் நலத்துக்கும், மன நலனுக்கும் கேடு விளைவிக்கும். தொடர் அதிருப்தியுடன் வேலை செய்வது தலைவலி, தூக்கமின்மை, செரிமான கோளாறு உள்ளிட்ட அறிகுறிகளை வெளிப்படுத்தும். அதே நிலை தொடர்ந்தால் உடலை கொல்லும் மெதுவான விஷமாக மாறிவிடும்.
நல்லெண்ணம் இன்மை
நீங்கள் பழகும் நபர்கள், உங்களுடன் எப்போதும் தொடர்பில் இருப்பவர்கள் உங்கள் நலனில் அக்கறை கொள்பவர்களாக இருக்க வேண்டும். உங்கள் வளர்ச்சியை பாராட்டும் நல் மனம் கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும். அப்படி அல்லாமல் உங்கள் திறமையை குறைத்து மதிப்பிடுபவர்களாகவோ, உங்களின் செயல்பாடுகளை குறை கூறுபவர்களாகவோ, உங்கள் ஆர்வத்துக்கு முட்டுக்கட்டை போடுபவர்களாகவோ இருந்தால் அவர்களிடம் இருந்து விலகியே இருங்கள். ஏனெனில் அவர்களின் செயல்பாடுகள் உங்கள் மன ஆரோக்கியத்தில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும்.
துரித உணவு
துரித உணவை தொடர்ந்து உட்கொள்வது தீங்கு விளைவிக்கும். இந்த உணவுகளில் பெரும்பாலும் டிரான்ஸ் கொழுப்புகள், சோடியம் மற்றும் சர்க்கரை அதிகமாக கலந்திருக்கும். இவை உடல் பருமன், இதய நோய் மற்றும் நீரிழிவு நோய்க்கு வித்திடக்கூடும்.
உணர்ச்சிகளை அடக்குதல்
உணர்ச்சிகளை அடக்குவது தேவையற்ற மோதலை தவிர்ப்பதற்கான வழிமுறையாக தோன்றலாம். ஆனால் உணர்வுகளை வெளிப்படுத்தாமல் மனதுக்குள் கட்டுப்படுத்துவது கடுமையான உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும். மனதுக்கு பிடித்தமானவர்களின் செயல்பாடோ, நெருங்கிய நண்பர்களின் செயல்பாடோ வருத்தத்தை ஏற்படுத்துவதாக இருந்தாலோ, விமர்சிக்கும் வகையில் அமைந்திருந்தாலோ தயங்காமல் அதுபற்றி விவாதித்துவிட வேண்டும். அதைவிடுத்து உணர்ச்சிகளை அடக்குவது மன அழுத்தத்தை அதிகரிக்க செய்து மன நோயாக மாறக்கூடும். அதற்கு இடம் கொடுக்காமல் உணர்வுகளை ஆரோக்கியமாக வெளிப்படுத்துவது முக்கியம்.
காலை உணவைத் தவிர்த்தல்
காலை உணவு அன்றைய நாளின் முக்கியமான உணவாக கருதப்படுகிறது. அதனை தவிர்ப்பது உடல் எடை அதிகரிப்பு, வளர்சிதை மாற்றத்தில் பாதிப்பு, அறிவாற்றல் குறைபாடு உள்ளிட்ட உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
கவலையாக இருத்தல்
நாள்பட்ட பதற்றம் என்று அழைக்கப்படும் தொடர்ச்சியான மனக்கவலை ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதிக்கும். அடிக்கடி கவலையில் ஆழ்ந்திருப்பது மன அழுத்தத்தை தூண்டும் கார்டிசோல் ஹார்மோன் அளவை உயர்த்த வழிவகுக்கும். காலப்போக்கில் கார்டிசோல் ஹார்மோன் அதிகரிப்பது உடல் பருமன், ரத்த அழுத்தம், நோய் எதிர்ப்பு சக்தியின்மை உள்ளிட்ட பிரச்சனைகளை உண்டுபண்ணும்.
சோர்வாக இருத்தல்
சுய பராமரிப்பு முக்கியமானது. தினமும் குளிப்பது, முகம் கழுவுவது, கை, கால்களை கழுவுவது என உடலை எந்த அளவுக்கு சுத்தமாக பராமரிக்கிறோமோ அதுபோல் மன ஆரோக்கியத்தையும் பராமரிக்க வேண்டும். இல்லாவிட்டால் உடல் மற்றும் உணர்வு இரண்டும் சோர்வுக்குள்ளாகிவிடும். இத்தகைய நாள்பட்ட சோர்வு இதய பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும்.
வெகுமதி அளிக்காதிருத்தல்
ஏதேனும் ஒரு செயலை நீங்கள் சிறப்பாக செய்து முடித்துவிட்டதாக தோன்றினால் மற்றவர்கள்தான் உங்களை பாராட்ட வேண்டும், வெகுமதி அளிக்க வேண்டும் என்று எண்ணக்கூடாது. உங்களை நீங்களே பாராட்டி வெகுமதி அளித்துவிட வேண்டும். உங்களுக்கு பிடித்தமான பொருளை பரிசாக உங்களுக்கே வழங்கி ஆனந்தப்படலாம். உங்கள் செயல்பாடுகளை பாராட்டாமல் கடந்து செல்வதும் சோர்வையும், வாழ்க்கை மீது ஈர்ப்பு இல்லாத நிலையையும் ஏற்படுத்தலாம். நாளடைவில் மெதுவாக கொல்லும் விஷம் போல் மாறி விரக்தியை ஏற்படுத்திவிடும். உடல்நல பிரச்சனைகளையும் உண்டுபண்ணும்.
- பொதுவாக இந்த பிரச்சனை தீர தினமும் போதிய அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
- சிறுநீரில் நுரை வந்தாலே, கிட்னி போய்விட்டது என்று பயப்பட வேண்டாம்.
பொதுவாக ஆண்-பெண் யாராக இருந்தாலும் சிறுநீர் கழிக்கும் போது சற்று வெளிறிய மஞ்சள் நிறத்துடன் எந்தவித நுரையும் இல்லாமல்தான் சிறுநீர் வெளிவரும். நுரையுடன் எப்பொழுதாவது வந்தால் பிரச்சனை இல்லை. பெரிதாகக் கவலைப்பட வேண்டாம். ஆனால் எப்பொழுது சிறுநீர் கழித்தாலும் வெள்ளை நிறத்தில் நுரைநுரையாக வருகிறதென்றால் அது உடனடியாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம்தான்.
சிறுநீரில் நுரை வர பல்வேறு காரணங்கள் உள்ளன. சிறுநீரில் அதிக அளவில் சில புரதங்கள் கலந்திருப்பது, உடலுக்கு தினமும் தேவைப்படும் தண்ணீரைக் குடிக்காமல் இருப்பது முக்கிய காரணமாகும். இது தவிர சிறுநீரக நோய்கள், நாள்பட்ட சர்க்கரை நோய், கல்லீரல் நோய்கள், புராஸ்டேட் சுரப்பி பிரச்சனை நோய்கள், உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றுக்கு மருந்துகள் எடுக்கும் போதும் சிலருக்கு சிறுநீர் நுரையுடன் வரலாம்.
இருப்பினும் கை, கால், முகம், வயிறு வீக்கம், உடல் தளர்வு, பசியின்மை, வாந்தி வருவது போன்ற உணர்வு, சரியான தூக்கமின்மை, சிறுநீரின் அளவு கூடுதல் மற்றும் குறைதல், மேக நிறத்தில் கலங்கிய நிலையில் சிறுநீர் கழித்தல் போன்ற அறிகுறிகள் காணப்பட்டால் உடனே மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.
சிறுநீரில் அல்புமின் அளவு, ரத்தத்தில் கிரியாட்டினின் அளவு, சிறுநீரக ஸ்கேன் பரிசோதனை போன்றவை மூலம் சிறுநீரகம் எவ்வளவு துல்லியமாக செயல்படுகிறது என்பதைக் கண்டுபிடிக்கலாம்.
பொதுவாக இந்த பிரச்சனை தீர தினமும் போதிய அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். ரத்த சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் போன்றவற்றை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். தினமும் உடலுழைப்பு, உடற்பயிற்சி இருக்க வேண்டும். சரிவிகித சத்துணவு சாப்பிட வேண்டும். உணவில் உப்பைக் குறைக்க வேண்டும்.
உணவில் புரதத்தை சரியான அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். சிறுநீரில் நுரை வந்தாலே, கிட்னி போய்விட்டது என்று பயப்பட வேண்டாம். ஒரு நாளைக்கு எத்தனை முறை நுரையுடன் சிறுநீர் கழிக்கிறீர்கள், உடலில் ஏதாவது பிரச்சனை இருக்கிறதா என்பதை பொறுத்து பாதிப்புகளை அறியமுடியும். எனவே பயம் வேண்டாம். குடும்ப மருத்துவரிடம் ஆலோசிக்கலாம்.
- கண்ணின் மேற்பரப்பு பகுதி சரியாக செயல்பட வேண்டுமெனில் அந்தப் பகுதியில் உடலில் தகுந்த அளவு நீரேற்றம் இருக்க வேண்டும்.
- அடிக்கடி கண் சிமிட்டுவதன் மூலம் வறண்ட கண்களை தவிர்க்க முடியும்.
அலுவலகத்தில் கணினியில் பணியாற்றும்போது சிலருக்கு கண் எரிச்சல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. கண் எரிச்சல் மட்டுமல்ல, கண் சிவப்பாக மாறுதல், கண்களில் அரிப்பு உணர்வு ஏற்படுதல்... இப்படி பல பிரச்சினைகளை சந்தித்திருப்போம். இதை கண் உலர் பாதிப்பு என்கிறார்கள். ஆரம்பத்தில் நடுத்தர வயதினரிடம் தென்பட்ட இந்த பாதிப்பு, இப்போது கல்லூரி, அலுவலகம் செல்லும் இளைஞர்களையும், கணினி அதிகமாக உபயோகிப்பவர்களையும் பாதிக்கிறது.
ஏன் ஏற்படுகிறது?
கண்ணில் உள்ள கண்ணீர் சுரப்பிகளில் கண்ணீர் போதுமான அளவு உற்பத்தி ஆகாதது மற்றும் வேகமாக ஆவி ஆவதால் இந்த கண் உலர் பாதிப்பு ஏற்படுகிறது. இது கண்களில் அசவுகரியம் மற்றும் வலியை ஏற்படுத்தும். குளிரூட்டப்பட்ட அறைகளில் அதிக நேரம் இருத்தல், கணினித் திரையை அதிக நேரம் பார்த்தல், மோசமான வெளிச்சம் அல்லது அதிக வெளிச்சம் போன்றவற்றால் கண்களில் ஈரப்பதம் இருக்காது.
இவை மட்டுமின்றி, ஒரு சில மருத்துவக் காரணங்களான ஹார்மோன் ஏற்றத்தாழ்வு, அலர்ஜி மற்றும் முதுமை போன்றவை கூட கண்ணின் வறட்சிக்கு காரணமாக அமையும். இந்த பிரச்சினை நீண்ட நாட்கள் இருந்தால் அது உங்கள் கண்களில் வலியை ஏற்படுத்துவதோடு, உங்களின் வாழ்க்கைத் தரம் மற்றும் பார்வைத் திறனையும் பாதிக்கும்.
தற்காப்பு வழிமுறைகள்
கண்ணின் மேற்பரப்பு பகுதி சரியாக செயல்பட வேண்டுமெனில் அந்தப் பகுதியில் உடலில் தகுந்த அளவு நீரேற்றம் இருக்க வேண்டும். கண்களைச் சுத்தப்படுத்தவும், பாதுகாக்கவும் தேவையான திரவங்களை வெளியிடும் லாக்ரிமல் சுரப்பி சரியாக செயல்பட வேண்டுமெனில் நீரேற்றமாக இருப்பது மிகவும் அவசியம். தேவையான அளவு தண்ணீரைக் குடிப்பதன் மூலம் தான் கண்களால் கண்ணீர் மற்றும் எண்ணெய்களை உற்பத்தி செய்ய முடியும். தர்பூசணி, பீச், வெள்ளரிக்காய், ஸ்ட்ராபெர்ரி போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்களை அதிக அளவில் எடுத்துக் கொள்ளலாம். இது கண்கள் வறட்சியாவதை தடுக்கும்.
கண் சிமிட்டுவது
அடிக்கடி கண் சிமிட்டுவதன் மூலம் வறண்ட கண்களை தவிர்க்க முடியும். கணினி திரை மற்றும் டிஜிட்டல் சார்ந்த வேலைகளில் உள்ளவர்கள் கண் சிமிட்டுவது என்பது குறைவாகத் தான் இருக்கும். அதனால், கண் சிமிட்டுவதை ஒழுங்குப்படுத்த வேண்டும். ஒருவர் நிமிடத்திற்கு 15 முதல் 30 முறை கண்களை சிமிட்ட வேண்டும். ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கு ஒரு முறை 20 வினாடிகள் கண்களுக்கு ஓய்வு அளிக்க வேண்டும். அதேபோல், டிஜிட்டல் திரை போன்றவற்றால் ஏற்படும் கண் அழுத்தத்தை சமாளிக்க அதற்குரிய கண்ணாடிகளை அணிந்து கொள்ளவும்.
- உலகில் காணப்படும் வேறு எந்த பழத்திலும் இல்லாத இனிப்பு மற்றும் மணம் மாம்பழத்தில் உள்ளது.
- மாம்பழத்தில் காணப்படும் நார்ச்சத்து செரிமான திறனை அதிகரிக்க காரணமாக அமைகிறது.
தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடும் முக்கனிகளில் மாம்பழம் முக்கியமான ஒன்று. வெப்ப மண்டலங்களில் பயிராகி, குளிர் பிரதேசங்களில் இருக்கும் மக்களை கூட கவர்ந்து இழுக்கும் பழம் என்றால் அது மாம்பழம் தான். எனவே இது 'பழங்களின் ராஜா' என்று அழைக்கப்படுகிறது.
உலகில் காணப்படும் வேறு எந்த பழத்திலும் இல்லாத இனிப்பு மற்றும் மணம் மாம்பழத்தில் உள்ளது. அது மட்டுமல்ல, வைட்டமின் ஏ, சி உள்பட பல ஊட்டச்சத்துக்களால் நிரம்பி காணப்படுகிறது. மாம்பழம் உண்பதால் இதயம் நன்கு இயங்கும், கண் பார்வை தெளிவாகும், தோலில் ஏற்படும் சுருக்கங்கள் மறையும் என மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை கட்டுப்படுத்த மாம்பழம் உதவுகிறது. இதில் காணப்படும் மாங்கிபெரின் எனப்படும் ஒரு வகை பாலிபீனால் இதயத்தில் ஏற்படும் வீக்கத்தை தடுக்கிறது. மாம்பழத்தில் காணப்படும் நார்ச்சத்து செரிமான திறனை அதிகரிக்க காரணமாக அமைகிறது.
இது தவிர, மாம்பழத்தில் அமைந்துள்ள பீட்டா கரோட்டின் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும். கோடைக்காலங்களில் இயற்கை தரும் பழங்களில் தவிர்க்காமல் உண்ண வேண்டிய ஒன்று மாம்பழம் ஆகும்.
- தலையணை இல்லாமல் தூங்குவது கழுத்தில் ஏற்படும் அழுத்தத்தையும் குறைக்கும்.
- உயரமான தலையணையை பயன்படுத்துவது முதுகெலும்புக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும்.
தூக்கத்திற்கு இதமளிப்பது தலையணைதான். அதில் தலைவைத்து தூங்குவதுதான் ஆழ்ந்த தூக்கத்திற்கு வழிவகை செய்யும் என்பது பலருடைய கருத்தாக இருக்கிறது. தலையணை இல்லை என்றால் சரியாக தூங்க முடியாமல் தவிப்புக்கு உள்ளாகுபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால் தலையணையை அறவே தவிர்த்து நிம்மதியாக தூங்கி எழுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதனால் தலையணை இன்றி தூங்குவது நல்லதா? கெட்டதா? என்ற விவாதம் நீண்ட நாட்களாக நடந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக தலையணை இன்றி தூங்குவது முதுகு தண்டுவடத்துக்கு நன்மை சேர்க்குமா? தீமை விளைவிக்குமா? என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது. அது குறித்து பார்ப்போம்.
தலையணை இல்லாமல் தூங்குவதால் ஏற்படும் நன்மைகள்
இயற்கை தோரணை
தலையணை இல்லாமல் தூங்குவது இயற்கையாக உடல் தோரணையை பராமரிக்க உதவும். முதுகெலும்பின் இயக்கம் சீராக நடைபெறுவதற்கு வழிவகுக்கும். அதேவேளையில் தடிமனான தலையணையை பயன்படுத்தி தூங்கும்போது கழுத்தை மேல்நோக்கி சாய்த்துவைக்க வேண்டியிருக்கும். அது உடல் தோரணைக்கு இடையூறாக அமையும். தலையணை ஏதும் இல்லாமல் தரையிலோ, மெத்தையிலோ உடலை வளைக்காமல் நேர் நிலையில் தூங்குவது முதுகெலும்பை நடுநிலையில் வைத்திருக்கும். முதுகெலும்புக்கு அழுத்தத்தையோ, வலியையோ ஏற்படுத்தாது.
கழுத்து-முதுகு வலி குறையும்
தலையணை இல்லாமல் தூங்குவது கழுத்தில் ஏற்படும் அழுத்தத்தையும் குறைக்கும். உயரமான தலையணையை பயன்படுத்துவது முதுகெலும்புக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும். தேவையற்ற அழுத்தத்தை ஏற்படுத்தி அதன் செயல்பாட்டுக்கு இடையூறை ஏற்படுத்தும். கழுத்துக்கும் அழுத்தத்தை உண்டாக்கும். சரியாக தூங்காமல் நாள்பட்ட கழுத்து வலியை அனுபவிப்பவர்கள் தலையணை பயன்பாட்டை குறைப்பது நல்லது.

தலையணை இல்லாமல் தூங்குவதால் உண்டாகும் தீமைகள்
தலையணை உபயோகிக்காமல் பக்கவாட்டு பகுதியில் படுத்து தூங்கும் பழக்கம் கொண்டவர்கள் தூக்கத்தில் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும். ஏனெனில் அவர்களின் தலை பகுதிக்கும், முதுகெலும்பு பகுதிக்கும் ஆதரவு தேவைப்படும். அவை இரண்டும் சவுகரியமான தோரணையில் இருந்தால்தான் தூக்கம் சீராக நடைபெறும். அவ்வாறு ஆதரவு இல்லாமல் இருந்தால் கழுத்து, தோள்பட்டைகளில் வலி, தசைப்பிடிப்பு ஏற்படலாம். அப்படி நேர்ந்தால் காலையில் தூங்கி எழும்போது கழுத்து, தோள்பட்டை வலியால் அவதிப்பட வேண்டியிருக்கும்.
நிறைய பேர் முகத்தையும், வயிற்றையும் பாய், மெத்தையில் அழுத்திய நிலையில் குப்புறப்படுத்து தூங்கும் வழக்கத்தை பின்பற்றுவார்கள். சிலர் அன்னார்ந்து பார்த்தபடி தூங்கும் வழக்கத்தை கடைப்பிடிப்பார்கள். சிலர் கால்களை வளைத்து தலையணைக்குள் புதைத்தபடி தூங்குவார்கள். எந்த முறையில் தூங்கினாலும் முதுகெலும்பு, கழுத்து பகுதிகளுக்கு அழுத்தம் கொடுக்காமல் இருக்க வேண்டும். முதுகெலும்பு பகுதியை பராமரிக்க ஏதுவான மெத்தையை பயன்படுத்தவும்.
தலையணை பயன்படுத்தாமல் உறங்கும் வழக்கத்தை பின்பற்றும்போது கழுத்து பகுதி அசவுகரியமாக இருப்பதாக உணர்ந்தால், கழுத்துக்கு அடியில் துண்டை உருண்டை வடிவில் உருட்டிய நிலையில் வைக்கலாம். தொடர்ந்து தலையணை இல்லாமல் தூங்குவது அசவுகரியத்தையோ, வலியையோ ஏற்படுத்தினால் தலையையும், கழுத்தையும் தாங்கிப்பிடிக்கும் வகையில் வளைவுகளுடன் அமைந்திருக்கும் தலையணையை பயன்படுத்தலாம். கழுத்து வலி, முதுகு வலி, தோள்பட்டை வலி, தலைவலி, குறட்டை உள்ளிட்ட பிரச்சனை கொண்டவர்களுக்கு ஏதுவாக பல்வேறு விதமான தலையணைகள் புழக்கத்தில் இருக்கின்றன. அவற்றுள் சவுகரியமான தலையணையை உபயோகப்படுத்துவது குறித்து அது சார்ந்த நிபுணர்களின் வழிகாட்டுதல்களை பின்பற்றுவது நல்லது.
- ஒரு சிரிஞ்சியின் நுனிக்குள் பொருத்தக்கூடிய அளவுக்கு மிகச் சிறியதாகும்.
- இதயத் துடிப்பைக் சீராக்கும், இதய செயலிழப்பு உள்ளவர்களுக்கு உதவும்.
அமெரிக்காவில் உள்ள நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உலகின் மிகச்சிறிய பேஸ்மேக்கரை (பேஸ்மேக்கர் என்பது இதயத் துடிப்பைக் சீராக்கும், இதய செயலிழப்பு உள்ளவர்களுக்கு உதவும் ஒரு மருத்துவ மின்சாதனம்) கண்டுபிடித்துள்ளனர். இது ஒரு சிரிஞ்சியின் நுனிக்குள் பொருத்தக்கூடிய அளவுக்கு மிகச் சிறியதாகும். இந்த பேஸ்மேக்கர் தற்காலிகமாக தேவைப்படுபவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
அரிசியை விட சிறியதாக இருக்கும் இந்த சாதனம், 1.8 மி.மீ. அகலம், 3.5 மி.மீ. நீளம் மற்றும் 1 மி.மீ. தடிமன் மட்டுமே கொண்டது. மேலும் தேவைப்படாதபோது உடலில் கரையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால், அதை உடலில் இருந்து வெளியே எடுக்க வேண்டியதில்லை. இதனால் பேஸ்மேக்கரை அகற்ற மற்றொரு அறுவை சிகிச்சை தேவையில்லை.

நிரந்தர பேஸ்மேக்கர் இதயத்தில் உள்ள மின் அமைப்பை (இதய மின் அமைப்பு என்பது, இதயம் துடிக்கவும், ரத்தத்தை உடல் முழுவதும் பம்ப் செய்யவும் உதவும் அமைப்பு) ஆதரிக்க அறுவை சிகிச்சை மூலம் உடலில் வைக்கக்கூடிய ஒரு சாதனமாகும். இது அசாதாரண இதய துடிப்புகளை சரிப்படுத்தி, உயிருக்கு ஏற்படும் ஆபத்தை தடுக்கிறது.
இதேபோல சில நேரங்களில், இதய செயல்பாட்டை ஆதரிப்பதற்கு குறுகிய காலத்திற்கு பேஸ்மேக்கர் தேவைப்படுகிறது. குறிப்பாக திறந்த இதய அறுவை சிகிச்சை, மாரடைப்பு போன்ற பிரச்சனைகள் காரணமாக இதயத் துடிப்பு மாறும்போது இந்த வகையான தற்காலிக பேஸ்மேக்கர் பயன்படும்.
இது இதயத் துடிப்பு நிலைப்படுத்தப்படும் வரை, ஒரு சில நாட்களுக்கு மட்டுமே செயலில் இருக்கும். தற்போது உள்ள தற்காலிக பேஸ்மேக்கரை அறுவை சிகிச்சை மூலம் இதய தசைகளில் வைக்க வேண்டியுள்ளது.
அந்த சாதனம் இனி தேவைப்படாதபோது, மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுப்பதால் சில நேரங்களில் சேதத்தை ஏற்படுத்தும்.
ஆனால் புதிதாக உருவாக்கப்பட்ட இந்த பேஸ்மேக்கர் தேவைப்படாதபோது உடலில் கரைந்து போகும் என்பதால் அதனை வெளியே எடுக்க வேண்டியதில்லை.

இந்த பேஸ்மேக்கர் ஒரு கால்வனிக் கலத்தால் (கால்வனிக் கலம் என்பது ஒரு மின்வேதியியல் கலமாகும், இதில் ரசாயன ஆற்றல் மின்சார ஆற்றலாக மாற்றப்படுகிறது) இயக்கப்படுகிறது. இது வேதியியல் ஆற்றலை இதயத்தை ஒழுங்குபடுத்தும் மின் துடிப்புகளாக மாற்ற உடலின் திரவங்களைப் பயன்படுத்துகிறது.
ஒரு சதவீத குழந்தைகள் பிறவி இதயக் குறைபாடுகளுடன் பிறக்கின்றனர். அக்குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சையின்போது தற்காலிக பேஸ்மேக் கருக்கான தேவை உள்ளது. அவர்களுக்கு இந்த சிறிய அளவிலான பேஸ்மேக்கர் சிறந்தது.
அதன் சிறிய அளவு காரணமாக, வயது வந்தோருக்கான இதய சிகிச்சைகளிலும் பயனுள்ளதாக இருக்கும். நிரந்தர பேஸ்மேக்கரை போலவே அதிக தூண்டுதலை இதனால் வழங்க முடியும்.
பாதிக்கப்பட்ட நோயாளியின் மார்பில் சிறிய நெகிழ்வான, வயர்லெஸ் முறையில் இயங்கும் சாதனத்துடன் பேஸ்மேக்கர் இணைக்கப்பட்டிருக்கும். இது ஒழுங்கற்ற இதயத்துடிப்புகளை கண்டறியும்போது, பேஸ்மேக்கருக்கு ஒளி சமிக்ஞையை அனுப்பி, அதை செயல்படுத்துகிறது.

ரேடியோ சிக்னல்களை பயன்படுத்தும் முந்தைய பேஸ்மேக்கரை போல் அல்லாமல், இந்த புதிய சாதனம் இதயத்துடிப்பைக் கட்டுப்படுத்த ஒளியைப் பயன்படுத்துகிறது.
ஆய்வகத்தில் எலிகள், பன்றிகள், நாய்கள் மற்றும் மனித இதய திசுக்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் இந்த பேஸ்மேக்கர் நேர்மறையான முடிவுகளைக் காட்டியுள்ளது.
மனிதர்களிடத்தில் இந்த பேஸ்மேக்கரை பரிசோதிக்க சில ஆண்டுகள் ஆகும் என்றாலும், குழந்தைகளுக்கான இதய அறுவை சிகிச்சைகளில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றே கூறலாம்.
- பிரண்டைத் தண்டை துவையல், சூப்பாக செய்து பயன்படுத்தலாம்.
- கருணைக் கிழங்கை புளி சேர்த்து குழம்பாக வாரம் இருமுறை பயன்படுத்தி வரலாம்.
மூல நோய் என்பது மருத்துவத்தில், 'ஹெமராய்ட்ஸ்' அல்லது 'பைல்ஸ்' என்று குறிப்பிடப்படுகிறது. பெருங்குடலின் கடைசிப் பாகம் முதல் ஆசனவாய் வரையுள்ள ரத்த நாளங்கள் புடைத்து வீங்கி வலியைத் தருவதைத் தான் 'மூலம்' என்கின்றோம்.
ஆசன வாயில் உள்ள வெண் கோடு போன்ற பகுதிக்கு மேலே தோன்றுவது 'உள்மூலம்' என்றும், கோட்டிற்கு கீழே தோன்றுவது 'வெளிமூலம்' என்றும் பிரிக்கப்படுகிறது.

மூல நோய் எதனால் ஏற்படுகின்றது?
'அனில பித்த தொந்த மலாது மூலம் வராது' என்று சித்தர் தேரையர் பாடல் கூறுகின்றது. அதிகரித்த நாள்பட்ட அபான வாயுவின் அழுத்தம், உடல் சூடு, நாள்பட்ட மலச்சிக்கல், உடல் பருமன், பெண்களுக்கு கர்ப்பக்காலத்தில் ஏற்படும் வயிற்றின் அழுத்தம், நாள்பட்ட கல்லீரல் நோய்கள், ஆசனவாய் அருகிலுள்ள தசைகளில் ஏற்படும் பலகீனம், தண்ணீர் குறைவாக குடிப்பது, எப்போதும் இருக்கை நிலையில் இருப்பது போன்ற காரணங்களினால் மூலநோய் ஏற்படுகின்றது.
ஆசனவாயில் இருந்து அடிக்கடி ரத்தம் வடிதல், உடல் எடை மெலிதல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால், அவற்றை லேசாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

உணவு பழக்கம்
துத்திக் கீரையுடன், சிறு வெங்காயம் சேர்த்து சிறிதளவு விளக்கெண்ணெய் விட்டு மசியவைத்து உண்ணலாம்.
கருணைக் கிழங்கை சிறு துண்டுகளாக வெட்டி, புளி சேர்த்து குழம்பாக வாரம் இருமுறை பயன்படுத்தி வரலாம்.

பிரண்டைத் தண்டை துவையல், சூப்பாக செய்து பயன்படுத்தலாம்.
முள்ளங்கிக்காய், வாழைத்தண்டு, சுரைக்காய், பீர்க்கங்காய், அவரை, பீன்ஸ், கீரைகள், கோவைக்காய் போன்ற நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளை உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
காரநூல் சிகிச்சை
மருந்துகளினால் தீராத மூல நோய்க்கு சித்தர்கள் கூறியுள்ள பாரம்பரிய 'காரநூல்' அறுவை சிகிச்சை மூலமாக தீர்வு காணலாம். காரநூல் என்பது உறுதியான லினன் நூலை, நாயுருவி உப்பு, மஞ்சள், உத்தாமணிப் பால், எருக்கம்பால் போன்றவைகளைக் கொண்டு முறைப்படி செய்து மூலம் பாதித்த பகுதிகளை அந்த நூலினால் இறுக்கிக்கட்டி விடும் முறை. இது மூலத்தை அறுத்து புண்ணை ஆற்றும் இயல்புடையதால் நோயாளிக்கு எந்த பக்க விளைவுகளும் கிடையாது.
- நெஞ்சு வலி இருந்தால் கூட அந்த பயமே உங்களுக்கு வலியை அதிகமாக்கிவிடும்.
- நெஞ்சின் இடப்பகுதி பாரமாக இருக்கும்.
'இடதுபக்க நெஞ்சுவலி என்றதுமே, நாம் முதலில் நினைத்து மிகவும் பயப்படுவது 'மாரடைப்பு' அதாவது 'ஹார்ட் அட்டாக்' தான். கொஞ்சமாக நெஞ்சு வலி இருந்தால் கூட அந்த பயமே உங்களுக்கு வலியை அதிகமாக்கிவிடும்.
நெஞ்சின் இடதுபக்கம் கனமாக, பாரமாக, இறுக்கமாக இருக்கிறதென்றால் அதற்கு பல காரணங்கள் உண்டு. அவை: இதயம், நுரையீரல், நெஞ்சிலுள்ள தசைப்பிரச்சினைகள், ஜீரணக்கோளாறு, மன நல பிரச்சினைகள், விலா எலும்பு நோய், அதிக அளவில் வாயு சேருதல், ஆஸ்துமா, நிமோனியா போன்ற பல காரணங்களைச் சொல்லலாம்.

இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் என்றால், நெஞ்சின் இடப்பகுதி பாரமாக இருக்கும். இடது தோள்பட்டை வலிக்கும், இடது கை, இடது கைவிரல்கள் வரை வலி பரவும், உடம்பெல்லாம் மிக அதிகமாக வியர்த்துக் கொட்டும். தலை லேசாக வலிக்கும், வாந்தி வருவது போன்று இருக்கும், இதயத் துடிப்பு மிக அதிகமாக துடிக்கும்.
மூச்சு வாங்கும், இதயத்துக்கு நேராக பின்பக்க முதுகில் வலி, நெஞ்சைச் சுற்றி கயிற்றைக் கட்டி இறுக்குவது போன்றதொரு உணர்வு ஏற்படும். இதுபோன்ற மாரடைப்புக்கான அறிகுறிகளில் சில உங்களுக்கு ஏற்பட்டால் அருகிலுள்ள மருத்துவமனைக்கு உடனே செல்ல வேண்டும்.

வாய்வுக்கோளாறு தான் நெஞ்சுவலியை ஏற்படுத்துகிறது என்று முடிவுசெய்து அதற்குண்டான வீட்டு வைத்தியம், மருந்துக் கடையில் நீங்களே மருந்தை வாங்கி சாப்பிடுவது போன்றவை மிகப்பெரிய தவறாகும்.
மேலும், அதிக காரம், கொழுப்பு, மசாலா நிறைந்த உணவுகளை அதிகமாக சாப்பிடும் போது நெஞ்செரிச்சலை உண்டுபண்ணும். இதுவே நெஞ்சு வலி வந்துவிட்டதோ என்ற பயத்தை உண்டாக்கும். எனவே இவைகளை குறையுங்கள்.
மது, புகைப்பழக்கம் கூடாது. ஆஸ்துமா இருப்பவர்கள் அதை தூண்டிவிடும் பொருட்கள், உணவுகளிடமிருந்து விலகி இருங்கள்.
உங்களுக்கு இதயப் பிரச்சனையைவிட, மனப்பயம் தான் அதிகமாக இருக்கிறது. வீடு, அலுவலகம், தொழில் போன்ற பிரச்சனைகளால் டென்ஷனாகும் போது சிலருக்கு நெஞ்சுவலி வரலாம். முதலில் மன தைரியம் வேண்டும். நெஞ்சுவலி வந்தால், உடனே அருகிலுள்ள இதய நோய் சிகிச்சை நிபுணரை சந்திக்க வேண்டும்.






