என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தற்போது தேர்வு நேரமாக இருப்பதால் அம்மை நோயிலிருந்து தப்பித்துக் கொள்ள முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாகிறது.
    வெயில் காலம் தொடங்கியுள்ள நிலையில் தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கு அம்மை உள்ளிட்ட வெயில் நோய் வராமல் பாதுகாக்க செங்கோட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ராஜேஷ் கண்ணா கூறியதாவது:-

    பொதுவாக பருவமழை காலத்தை தொடர்ந்து ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்கள் குளிர்காலங்களாகும். மார்ச் மாதம் இறுதி நாளில் கோடை வெயில் தாக்கம் படிப்படியாக அதிகரிக்கும். ஆனால் நடப்பாண்டில் கோடை வெயிலின் தாக்கம் அக்னி நட்சத்திற்கு இணையாக சுட்டெரிக்கத் தொடங்கி உள்ளது.

    இதன் காரணமாக உடலில் ஏற்படும் மாறுதல்களால் பலருக்கு அம்மை நோய் தாக்க வழியுள்ளது. அம்மை நோய் வருவதற்கு முன்பே காய்ச்சல், தலைவலி, உடல் வலியால் அவதிப்படுவர். அதன் பின்னர்தான் அம்மை போட்டிருப்பது நம் கண்ணுக்குத் தெரியும்.

    மேலும் அம்மை நோயானது ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு ஏற்பட்டால், தொடர்ந்து அந்த குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கும் எளிதில் தொற்றிக் கொள்ளும்.

    இது வைரஸ் கிருமிகளால் ஏற்படக்கூடியது என்பதால் சுலபமாக காற்றிலேயே மற்றவர்களுக்கு பரவும் தன்மை கொண்டது.

    எனவே பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தற்போது தேர்வு நேரமாக இருப்பதால் அம்மை நோயிலிருந்து தப்பித்துக் கொள்ள முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாகிறது.

    அதிகளவு தண்ணீர் அருந்துவது, தண்ணீர் சத்து அதிகமுள்ள காய்கறி, கனிகளை அதிகளவில் உட்கொள்ள வேண்டும். மேலும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பாதுகாக்க குளிர்ச்சியான பழம் மற்றும் சத்து, ஆரோக்கியமான உணவுகள் ஆகியவற்றை வழக்கத்தை விட வழங்குவதுடன் கட்டாயப்படுத்தி சாப்பிட வலியுறுத்துவதன் மூலம் அம்மை நோய்க்கு எதிர்ப்பு சக்தி கிடைப்பதுடன் எளிதில் அம்மை நோய் வராமல் பார்த்துக்கொள்ள முடியும்.

    பொதுவாக வைரஸ் என்னும் அதிகளவு கிருமிகளால் பாதிக்காத வகையில் அம்மைநோயைக் கட்டுப்படுத்த தற்போது சிகிச்சை அளிக்க முடியும் என தெரிவித்தார்.

    அம்மை நோய் பாதிக்கப்பட்டவர்கள் வைட்டமின்கள் அதிகமுள்ள உணவை சேர்த்துக்கொள்ள வேண்டும். தண்ணீர் சத்தான இளநீர், கரும்பு சாறு, பதநீர், பழசாறு, குளிர்ச்சியான உணவு பதார்த்தங்கள், கேப்பை கூழ், கம்பங்கூழ், எளிதில் ஜீரணமாக கூடிய உணவு வகைகளை அதிகம் குடிக்க வேண்டும்.

    இவைகளை முறையாக கடைபிடித்தாலே அம்மை சரியாகி விடும். அம்மை நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தழும்பு, எரிச்சல் இல்லாமல் சிகிச்சை மூலம் கட்டுப்படுத்த பல வகை மருந்துகள் தற்போது வந்து விட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
    ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்களை நீண்டகால குழந்தைகள் என்று சொல்லலாம். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 2-ந் தேதியை, ‘உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தின’மாக கடைப்பிடித்து வருகிறோம்.
    கடந்த தலைமுறையைவிட இந்தத் தலைமுறையினருக்கு ஓரளவு அறிமுகமான சொல்தான் ஆட்டிசம். பலரும் நினைப்பதுபோல, இது வியாதி இல்லை. இது ஒரு குறைபாடு, அவ்வளவே. போதுமான வழிகாட்டுதலும் பயிற்சிகளும் இருந்தால், இதில் இருந்து மீள்வதற்கு வழிகள் உண்டு.

    இதுதான் ஆட்டிசம் என்று வரையறுத்துச் சொல்லமுடியாது. பல குறைபாடுகளின் ஒன்றிணைவு இது. நரம்பியல் குறைபாடு காரணமாக, மூளையின் செயல்திறனில் ஏற்படும் மாற்றம்தான் ஆட்டிசத்துக்கு வழி வகுக்கிறது. ஆட்டிசத்தின் முதன்மை விளைவுகளில் ஒன்று பலவீனமான சமூகத் தொடர்பு.

    அறிகுறிகள்:

    ஒதுங்கி இருப்பது, கண்களைப் பார்த்து பேசாமல் இருத்தல், ஆள்காட்டி விரலால் சுட்டிக்காட்டாமல் இருத்தல், சமூகப் புரிதல்கள் இல்லாமல் இருப்பது, பயம், ஆபத்து ஆகியவற்றை உணராமல் இருப்பது, பாவனை, விளையாட்டுகள் இல்லாமல் இருப்பது, வித்தியாசமான நடவடிக்கைகளை ஒரே மாதிரியாகத் திரும்பத் திரும்ப செய்வது, காரணம் இல்லாமல் அழுகை, சோகம் ஆகியவற்றை வெளிப்படுத்துவது, வலியை உணராமல் இருப்பது, மாற்றங்களை அசவுகரியமாக உணர்வது, பொருளற்ற சொற்களைத் திரும்பத் திரும்ப சொல்வது முதலானவை இதன் அறிகுறிகளாகும்.

    குழந்தைகளின் செயல்பாடுகளில் தெரியும் மாற்றத்தை வைத்தே, ஆட்டிசத்தை இனம் கண்டறிய முடியும்.

    குழந்தைகள் புலம்பி அழாமலோ, தனக்குத் தேவையானதைச் சுட்டிக்காட்டாமலோ இருப்பது. ஒன்றரை வயது வரை, ஒரு சொல் வார்த்தைகளையோ, இரண்டு வயது வரை இரண்டு சொற்கள் கொண்ட சொற்றொடரையோ பேசாமல் இருப்பது.

    நிறைய பொருட்களுடனும், பொம்மைகளுடனும் இருப்பது, அவற்றைச் சரியாகக் கையாளத் தெரியாதது. எதற்குமே புன்னகைக்காமல் இருப்பது.

    மேற்குறிப்பிட்ட அறிகுறிகள் அனைத்தையும் குழந்தை பிறந்த ஒரு வருடத்துக்குள்ளேயோ அல்லது இரண்டு வருடங்களுக்குள்ளேயோ கண்டுபிடித்து விடலாம்.

    இவற்றிற்கு முறையான பயிற்சிகள் அளிப்பதன் மூலம் ஆட்டிசம் குறைபாட்டில் இருந்து குழந்தைகளை மீட்கலாம்.

    எவ்வளவு விரைவில் அடையாளம் காண்கிறோமோ அவ்வளவு நல்லது. இதை100 சதவீதம் குணப்படுத்த முடியாது, ஆனால், நடத்தை சீராக்கல் பயிற்சிகள், வளர்ச்சிக்கான பயிற்சிகள், கல்வி வளர்ச்சிக்கான பயிற்சிகள், பேச்சுப் பயிற்சி ஆகிய தொடர் பயிற்சியின் மூலம் ஓரளவு சீரான நிலைக்குக் கொண்டு வரமுடியும்.

    ஆட்டிசம் கண்ட குழந்தைகளின் பெற்றோர்கள் உடனடி நடவடிக்கையில் இறங்கிவிட வேண்டும். தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்தல், பொது இடங்களில் குழந்தையால் அவமானம் என்று நினைப்பதை அறவே தவிர்க்க வேண்டும், குறிப்பாக குழந்தைக்கு இத்தனை வயது ஆகிவிட்டதே எனக் கவலைப்படக்கூடாது, குற்ற உணர்வு அறவே கூடாது, வித்தியாசமாக இருப்பதற்கான துணிச்சலை வரவழைத்துக்கொள்தல், குழந்தையை அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள், தொடர்ந்து முயற்சி செய்து வந்தால் நிச்சயம் பலன் உண்டு.
    கொரோனாவில் இருந்து மீண்டு அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு தற்போது நேரடியாக பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன.
    சீனாவில் உள்ள ஊகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா எனும் தொற்று உலகம் முழுவதும் பரவியது. இந்தியாவிலும் அலை அலையாக தோன்றிய இந்த தொற்றுக்கு லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். உயிர்ப்பலியும் ஏற்பட்டது. இயற்கை பேரிடர் என்று வர்ணிக்கப்படும் அளவுக்கு கொரோனா தாண்டவமாடியது. கடும் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி நிலைமையை மத்திய, மாநில அரசுகள் சமாளித்தன.

    இதற்கிடையே தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடித்து இந்தியா சாதனை படைத்தது. உலக நாடுகளுக்கு தடுப்பூசியை ஏற்றுமதியும் செய்தது. வயது வாரியாக முன்னுரிமை கொடுத்து தடுப்பூசி போடப்பட்டு தொற்று பரவல் தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

    இந்த காலகட்டங்களில் சுமார் 2 ஆண்டுகளாக அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டனர். அதிலும் பள்ளி, கல்லூரிகள் சரிவர திறக்கப்படாமல் மாணவ, மாணவிகளின் படிப்பு கேள்விக்குறியானது.

    அதிலும் மழலை, தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் முழுமையாக மூடப்பட்டு இளஞ்சிறார்களின் கல்வி மேம்பாடு முடங்கியது. இதனால் நேரடி வகுப்புகளை தவிர்த்து ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டன.

    ஆனால் அதில் கல்வி கற்பதில் மாணவர்களுக்கு ஆர்வம் இல்லாமல் போனது. பெற்றோர்களும் சோர்ந்து போனார்கள். பள்ளி, கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் நேரடி வகுப்புகள் எப்போது தொடங்கும்? என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியது.

    இந்த கால கட்டத்தில் தீவிரமாகி இறுதியில் தொற்று பாதிப்புகள் மளமளவென சரிந்தன. கடும் கட்டுப்பாடுகளை தளர்த்துமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியது.

    அதன்படி கொரோனா கெடுபிடிகள் விலக்கி கொள்ளப்பட்டன. ஆனாலும் பொது இடங்களில் முககவசம் அணிவது, கைகளை சானிட்டைசர் கொண்டு சுத்தம் செய்வது போன்ற நடவடிக்கைகளை தொடர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதற்கிடையே கொரோனாவில் இருந்து மீண்டு அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு தற்போது நேரடியாக பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன.

    அந்தந்த பள்ளிகள் சார்பில் கொரோனா கட்டுப்பாடுகளுடன் வகுப்புகள் நடைபெறுவதால் மாணவர்கள் உற்சாகமடைந்துள்ளனர். ஆர்வமிகுதியால் படிப்பிலும் அவர்கள் மிளிருகின்றனர்.
    மாணவ- மாணவிகள் தேர்வு மீது கவனம் செலுத்தும் அதே வேளையில் உடல் ரீதியாக, மன ரீதியாக சில விஷயங்களின் மீதும் அக்கறை கொள்ள வேண்டும்.
    10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு விட்டன. உயர் கல்வியையும், எதிர்காலத்தையும் நிர்ணயிக்கும் தேர்வு என்பதால் மாணவர்கள் முன்பை விட படிப்பில் தீவிர கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார்கள். தேர்வுக்கு தங்களை தயார்படுத்திக்கொள்வதற்காக இரவு பகல் பார்க்காமல் கண் விழித்து படிக்கவும் செய்வார்கள். நுழைவு தேர்வுக்கு தயாராகு பவர்களும் போட்டா போட்டி போட்டு படிப்பார்கள். தேர்வு மீது கவனம் செலுத்தும் அதே வேளையில் உடல் ரீதியாக, மன ரீதியாக சில விஷயங்களின் மீதும் அக்கறை கொள்ள வேண்டும்.

    * புத்தகம் வாசிப்பது, எழுதிப் பார்ப்பது, ஆன்லைன் வழியாக படிப்பது, இணையதளத்தில் தேடி படிப்பது என பரபரப்பாக இயங்கும்போது கண்களும் ஓய்வின்றி சுழன்று கொண்டிருக்கும். அதனால் எளிதில் சோர்வுக்கு ஆளாகிவிடும்.

    * இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் வழி கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதால் கணினி, ஸ்மார்ட்போன், மடிக்கணினி திரைகள் மீது மணிக்கணக்கில் கவனம் பதிப்பது கண்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும்.

    * தொடர்ச்சியாக படித்துக்கொண்டிருக்கும்போது மூளையும் சோர்வடையும். அதனை தவிர்க்க போதுமான ஓய்வு கொடுப்பது முக்கியமானது. ஊட்டச்சத்துமிக்க உணவுகளை தேர்ந்தெடுப்பது, சரியான நேரத்தில் அதனை சாப்பிடுவது, நன்றாக தூங்குவது போன்ற விஷயங்களை தவறாமல் பின்பற்றுவது கண்களுக்கு அழுத்தம் கொடுப்பதை தவிர்க்கும். மூளையும் புத்துணர்ச்சி பெற்று சுறுசுறுப்புடன் செயல்பட வழிவகுக்கும்.

    * கட்டிலில் படுத்துக் கொண்டு படிக்காதீர்கள். ஏனெனில் இந்த வழக்கம், கண்களை கஷ்டப்படுத்தி விரைவில் சோர்வடைய செய்துவிடும்.

    * படிக்கும் போது, ​​புத்தகத்திற்கும் கண்ணுக்கும் இடையே குறைந்தது 25 சென்டிமீட்டர் இடைவெளியை பராமரிக்க வேண்டும்.

    * மணிக்கணக்கில் ஒரே இடத்தில் அமர்ந்து படிக்க கூடாது. ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை 10 நிமிடம் படிப்புக்கு ஓய்வு கொடுத்து விட வேண்டும்.

    * படிக்கும்போது நொறுக்குத்தீனிகள் சாப் பிடுவதற்கு பதிலாக பழங்கள் மற்றும் காய் கறிகளை கொண்டு சாலட் தயாரித்து ருசிக்கலாம். இது கண்களின் ஆரோக் கியத்திற்கும் உதவும். சரியான பார்வையை பராமரிக்கவும் துணை புரியும்.

    * படிக்கும்போது தூக்கம் வந்தால் கைகளை கொண்டு கண்களை தேய்க்கக்கூடாது. அது கண்களுக்கு கூடுதல் அழுத்தம் கொடுத்துவிடும். அதற்கு பதிலாக குளிர்ந்த நீரை கண்கள் மீது தெளிக்கலாம். சீரான இடைவெளியில் கண்களில் குளிர்ந்த நீரை தெளித்தும் வரலாம்.

    * படிக்கும் அறையில் வெளிச்சம் பிரகாசமாக இருக்க வேண்டும். ஏனெனில் அறைக்குள் மங்கலான வெளிச்சம் நிலவினால் விரைவில் கண்களுக்கு சோர்வு ஏற்பட்டுவிடும்.

    * ஆன்லைனில் படிக்கும் போது, ​​மானிட்டரை 45 டிகிரி கோணத்தில் வைக்க வேண்டும். அது கண்களுக்கு அசவுகரியத்தை ஏற் படுத்தாது.

    * படிப்பது, தூங்குவது, சாப்பிடுவது, ஓய்வெடுப்பது, பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபடுவது என அனைத்திற்கும் கால அட்டவணை தயாரித்துக்கொள்ள வேண்டும். அதன்படியே செயல்படுவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அது மன அழுத்தம் ஏற்படுவதை தவிர்க்க உதவும். தேர்வு மீதான பயத்தையும் போக்கும்.

    * மாணவர்கள் நிறைய பேர் தேர்வின்போது மன அழுத்தம் காரணமாக சாப்பிடுவதை தவிர்க்கிறார்கள். உடலில் ஊட்டச்சத்து குறைபாடு இருந்தால், பலவீனமாக உணரலாம். அது தேர்வு எழுதுவற்கு இடையூறாக அமைந்துவிடும்.

    * உடலில் நீரேற்றத்தை பராமரிப்பது புத் துணர்ச்சியாகவும், மனதை விழிப்புடனும் வைத்திருக்க உதவும். நீரிழப்பு ஏற்பட்டால் தலைவலி மற்றும் படிப்பில் கவனம் செலுத்த முடியாத நிலைக்கு வழிவகுக்கும். ஒவ்வொரு நாளும் குறைந்தது 2½ முதல் 3 லிட்டர் தண்ணீர் பருக வேண்டும். அதனை தேர்வு சமயத்திலும் தவறாமல் பின்பற்ற வேண்டும்.
    சிறு வயதில் ஏற்படும் லட்சியக் கனவை அடைவதற்கான வழிகளை, பிள்ளைகளால் தானாகவே தீர்மானிக்க முடியாது. யாராவது ஒருவரது வழிகாட்டுதல் கட்டாயம் தேவை.
    படிப்பு முடிந்தவுடன் எந்தப் பாதையைத் தேர்ந்தெடுப்பது என பிள்ளைகள் குழம்பிக்கொண்டிருக்கும் நேரத்தில் பெற்றோர், அவர்களுக்குத் தகுந்த ஆலோசனை வழங்கி சரியான பாதையில் வழிகாட்ட வேண்டும். அதற்கான சில யோசனைகள் இங்கே:

    ஆசையைக் கேட்டு மதியுங்கள்:

    எல்லோருக்கும் எதிர்காலக் கனவு இருக்கும். அதில், வேலை சார்ந்த கனவுக்குக் கட்டாயம் இடம் உண்டு. அதை எப்படி அடைவது என்பது தெரியாமல்தான், பலரும் தடுமாறுகின்றனர். எனவே, உங்கள் எண்ணங்களை பிள்ளைகளின் மீது திணிக்காமல், பிள்ளைகளின் தொழில் சார்ந்த கனவு எது என்பதை முதலில் கேளுங்கள். அதை வேடிக்கையாக நினைக்காமல், உரிய மதிப்பளியுங்கள். பள்ளிப் பருவத்திலேயே லட்சியத்தை அடைவதில் உள்ள நிறை, குறைகளைச் சுட்டிக் காட்டுங்கள். சிக்கலாக இருக்கும் பட்சத்தில், தடம்மாற்றி சரியான பாதைக்குக் கொண்டு செல்லுங்கள். ஆனால், எந்த இடத்திலும், தன்னம்பிக்கையை இழக்கும் வகையில் பிள்ளைகளிடம் பேசக்கூடாது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

    வாய்ப்பை ஏற்படுத்துங்கள்:

    பிள்ளைகளின் எதிர்கால லட்சியம் நியாயமாக இருந்தால், அதை ஆதரியுங்கள். சிறு வயதில் ஏற்படும் லட்சியக் கனவை அடைவதற்கான வழிகளை, பிள்ளைகளால் தானாகவே தீர்மானிக்க முடியாது. யாராவது ஒருவரது வழிகாட்டுதல் கட்டாயம் தேவை. இதற்காக, உளவியல் சார்ந்த நிபுணரின் திறன் மதிப்பீடு, லட்சியம் சார்ந்த தொழில் கண்காட்சி, கருத்தரங்கம் ஆகியவற்றில் பங்கேற்கச் செய்வது அவசியம். இதனால், பிள்ளைகளின் தன்னம்பிக்கையை அதிகரிக்க முடியும். திறன் மதிப்பீடு என்பது ஆளுமை, பலம் மற்றும் பலவீனங்களைப் பிரதிபலிக்கும் என்பதால், சரியான பாதையில் செல்ல உதவும். மேலும், அந்தத் துறையில் வெற்றி பெற்ற நிபுணர்களின் ஆலோசனை, கருத்துகளைக் கேட்டு அதற்கேற்ப செயல்படலாம்.

    வாழ்க்கை அனுபவத்தை ஏற்படுத்துங்கள்:

    பிள்ளைகளைப் பொறுத்தவரை, வளரும் பருவத்தில் வாழ்க்கையும், தொழிலும் ஒன்றாகத் தெரியும். இரண்டின் இயல்பையும் பிரித்துப் பார்க்கத் தெரியாது. சிறு வயதில், விரும்பிய வேலை என்பது ஒரு கவர்ச்சியாகத் தோன்றலாம். ஆனால், நிஜ வாழ்க்கையில் அந்த வேலையில் உள்ள இலக்கு, அதில் உள்ள சவால்கள் என்பது வேறாக இருக்கும். எனவே, லட்சிய வேலைக்குப் பிள்ளைகளை ஆதரிக்கும் முன், தொழிலில் உள்ள சவால்கள், அதை எப்படி மேற்கொள்ள வேண்டும் என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும்.

    இளம் வயதினராக இருந்தால் மாணவப் பருவ பயிற்சி, பகுதி நேர வேலைகள், தேர்ந்தெடுத்த தொழில் துறையின் அனுபவத்தைப் பிள்ளைகளுக்கு வழங்க வேண்டும். அத்துறையில் உள்ள நிபுணரை முன்னுதாரணமாகக் கொண்டு, அவர் கடந்து வந்த பாதையைப் பிள்ளைகளுக்கு உணர்த்த வேண்டும்.  அதன் மூலம், பிள்ளைகளுக்கு அத்துறை குறித்து தெளிவு கிடைக்கும். மறுமதிப்பீடு செய்ய விரும்பினால், அதற்கேற்ப பிள்ளைகளை வழி நடத்தவும் முடியும்.
    குழந்தை பிறக்கும்போது சில சமயங்களில் அழுகை சத்தம் வெளிப்படும். ஆனால் பிறந்த குழந்தையின் கண்களில் இருந்து கண்ணீர் உடனே உற்பத்தியாகாது.
    குழந்தை பிறக்கும்போது சில சமயங்களில் அழுகை சத்தம் வெளிப்படும். அப்போது அதன் கண்களில் இருந்து கண்ணீர் உருவாகும் என்று நிறைய பேர் கருதுகிறார்கள். ஆனால் பிறந்த குழந்தையின் கண்களில் இருந்து கண்ணீர் உடனே உற்பத்தியாகாது.

    குறைந்தபட்சம் 6 முதல் 8 வாரங்களுக்கு பிறகுதான் குழந்தையின் உடலில் உள்ள லாக்ரிமல் சுரப்பிகள் மூலம் கண்ணீரின் உற்பத்தி அதிகரிக்க தொடங்கும்.

    ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு பிறகுதான் குழந்தை அழும் போது, அதன் கண்ணீரில் இருந்து அதிக உப்பு பொருட்கள் வெளிப்படும். நாளடைவில் இயல்பான கண்ணீர் வெளிப்பட தொடங்கிவிடும்.
    கருவுற்று இருக்கும் காலத்தில் பெண்களிடம் மன அழுத்தம் அதிகமாக இருந்தால், அது ஆட்டிச குறைபாடு கொண்ட குழந்தைகள் உருவாவதற்கு வித்திடும் என்று சொல்லப்படுகிறது.
    குழந்தைகளின் மூளை வளர்ச்சியில் ஏற்படும் குறைபாடு ‘ஆட்டிசம்’ என்று அழைக்கப்படுகிறது. இதனை தமிழில் ‘மதி இறுக்கம்’ என்பார்கள். இது ஒரு நோய் கிடையாது. குறைபாடு மட்டுமே. சாதாரணக் குழந்தைகளுக்கு ஒரு முறை சொல்லிக்கொடுப்பதை, கூடுதலாக இரண்டு மூன்று முறை சொல்லிக்கொடுக்கும்போது, ஆட்டிசம் பாதித்த குழந்தைகளும் அதைக் கற்றுக்கொள்வார்கள்.

    ஆஸ்திரியாவில் பிறந்த லியோ கன்னர் என்பவர்தான், முதன் முதலாக இந்த உலகத்திற்கு, ஆட்டிசம் என்பதை தெரியப்படுத்தியவர். இவர் 1943-ம் ஆண்டு வெளியிட்ட ஆய்வறிக்கையில், ஆட்டிசம் பாதிப்பு கொண்ட குழந்தைகளின் பிரச்சினைகளைப் பற்றி கூறியிருந்தார்.

    பெர்னார்ட் ரிம்லாண்ட், ரூத் சல்லிவன் ஆகிய இரண்டு மருத்துவர்கள், 1965-ம் ஆண்டு ஆட்டிசம் குறைபாடு பற்றிய ஆய்வு களுக்காக ‘ஆட்டிசம் சொசைட்டி’ என்ற அமைப்பை தொடங்கினார்கள். அதில் இருந்து நீண்ட நெடுங் காலத்திற்குப் பிறகுதான், அதாவது 2008-ம் ஆண்டில்தான் ஐ.நா சபையால், ஏப்ரல் 2-ந் தேதி ‘உலக ஆட்டிச விழிப்புணர்வு தினம்’ என்று அறிவிக்கப்பட்டது.

    கருவுற்று இருக்கும் காலத்தில் பெண்களிடம் மன அழுத்தம் அதிகமாக இருந்தால், அது ஆட்டிச குறைபாடு கொண்ட குழந்தைகள் உருவாவதற்கு வித்திடும் என்று சொல்லப்படுகிறது. அதே போல் தைராய்டு பிரச்சினை உள்ள பெண்கள், வலிப்பு நோய்க்கு மாத்திரை எடுத்துக் கொள்ளும் பெண்கள், போலிக் அமிலம் குறைவாக இருக்கும் பெண்களுக்கும், ஆட்டிசம் குறைபாடுள்ள குழந்தைகள் பிறக்க வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

    ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்களை நீண்டகால குழந்தைகள் என்று சொல்லலாம். அவர்களை வளர்த்தெடுக்கும் பொறுப்பு, இந்த சமூகத்திற்கு இருக்கிறது. அதைக் கருத்தில்கொண்டுதான், ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 2-ந் தேதியை, ‘உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தின’மாக கடைப்பிடித்து வருகிறோம்.

    எஸ்.கண்ணபிரான், 11-ம் வகுப்பு,

    அரசினர் மேல்நிலைப்பள்ளி, கோடம்பாக்கம்.
    பங்கு சந்தையில் செய்யப்படும் முதலீட்டுக்கு மற்ற எதிலும் கிடைக்காத அளவுக்கு வருமானம் கிடைப்பதோடு, இத்துறையில் எண்ணிலடங்கா வேலைவாய்ப்பும் இருக்கிறது.
    ‘‘பங்கு சந்தை என்பது பணம் முதலீடு செய்வதற்குரிய இடம் மட்டுமில்லை. அங்கு வேலைவாய்ப்பும் நிறைந்துள்ளது’’ என்ற முதல் கருத்திலேயே கவனம் ஈர்க்கிறார், பாலாஜி. சென்னையை சேர்ந்தவரான இவர், நிறைய மாணவர்களுக்கு பங்கு சந்தை பற்றிய புரிதலை உருவாக்கி இருக்கிறார்.

    பங்கு சந்தை எப்படி இயங்குகிறது?, வர்த்தகம் எப்படி நடக்கிறது?, முதலீடு செய்வது எப்படி?, லாபம் ஈட்டுவது எப்படி? என வர்த்தகம் சார்பான பல விஷயங்களை கல்லூரி மாணவர்களுக்கு விளக்குவதோடு, பங்கு சந்தையில் இருக்கும் வேலைவாய்ப்புகளையும், அதற்கான படிப்புகளை பற்றியும் விளக்குகிறார். அவர் பகிர்ந்து கொண்டவை இதோ...

    * பங்கு சந்தை, முதலீடு செய்வதற்கு ஏற்ற இடமா?

    நிச்சயமாகவே முதலீடு செய்வதற்கான சிறப்பான தளம். பங்கு சந்தையில் செய்யப்படும் முதலீட்டுக்கு மற்ற எதிலும் கிடைக்காத அளவுக்கு வருமானம் கிடைப்பதோடு, இத்துறையில் எண்ணிலடங்கா வேலைவாய்ப்பும் இருக்கிறது. விஷயம் தெரிந்தவர்கள் பங்குச்சந்தையில் அதிகளவில் முதலீடு செய்வது மட்டுமின்றி, இத்துறையில் வேலைவாய்ப்பும் பெற்று வருகின்றனர்.

    * பங்கு சந்தையில் என்னென்ன வேலைவாய்ப்புகள் உள்ளன?

    நேரடியாக பங்கு சந்தையில் பணியாற்றும் வாய்ப்புகளும், பங்கு சந்தை மூலமாக வங்கிகளுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்புகளும் நிறைய இருக்கிறது. பங்கு சந்தை நிறுவனங்களின் தகவல்களை ஆராயும் பணி தொடங்கி, முதலீடு செய்வது, அதை லாபகரமாக எடுப்பது, தகுந்த நேரத்தில் விற்பது, வாடிக்கையாளர்களுக்கு பங்கு சந்தை பற்றி ஆலோசனை வழங்குவது என பல பணிகள், பங்கு சந்தை நிறுவனங்களில் உண்டு. ஏன்..? பங்கு சந்தை சம்பந்தமான குறுகிய கால படிப்புகளை முடித்தவர்களைதான், தனியார் வங்கிகளில் பணியமர்த்துகிறார்கள்.

    * பங்கு சந்தை பற்றி எங்கு படிப்பது?

    சென்னை ஐ.ஐ.டி. நிர்வாகமும், டிஜிட்டல் ஸ்கில் அகாடெமியும் இணைந்து இதற்கான பிரத்யேக சான்றிதழ் படிப்புகளை உருவாக்கி உள்ளன. இதில் யார் வேண்டுமானாலும் இணைந்து படிக்கலாம். சீனியர் பேங்கர், டிஜிட்டல் பேங்கிங், பேங்க் அண்ட் பினான்ஸ், இகுட்டி அண்ட் டெரிவிட்டிவ், மியூட்சல் பண்ட், செக்யூரிட்டி ஆபீஸர் அண்ட் ரிஸ்க் மேனேஜ்மெண்ட், இன்வெஸ்மெண்ட் அட்வைசரி அண்ட் போர்ட்போலியோ... இப்படி பங்கு சந்தை தொடர்பான 7 விதமான படிப்புகள் சென்னை ஐ.ஐ.டி.யில் வழங்கப்படுகிறது. இதில் இணைந்து படிப்பதன் மூலம் பங்கு சந்தை அறிவையும் வளர்க்க முடியும். வங்கி மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள், பங்கு சந்தை சார்ந்த நிதி நிறுவனங்களிலும் வேலைவாய்ப்பை யும் பெற முடியும்.

    * கட்டணம் எவ்வளவு இருக்கும்? எத்தனை மாத பயிற்சி?

    ரூ.2 ஆயிரம் தொடங்கி, ரூ.50 ஆயிரம் வரை படிப்பிற்கு ஏற்ப, கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல அதிகபட்சம் 6 மாதத்திற்குள் படிப்பை முடித்து, தேர்வு எழுதி சென்னை ஐ.ஐ.டி.யின் சான்றிதழ் பெற்றுவிடலாம். உலக தரம் வாய்ந்த ஐ.ஐ.டி. போன்ற கல்வி நிறுவனத்தின் கூட்டு முயற்சியால் இந்த பயிற்சி வகுப்புகள் முன்னெடுக்கப்படுவதால், திறமையான விரிவுரையாளர்களை கொண்டு பாடத்திட்டம் நடத்தப்படுகிறது.

    * பாடத்திட்டம் எப்படி இருக்கும்?

    ‘கேஸ் ஸ்டெடி' எனப்படும் கள ஆய்வுகளும், பங்கு சந்தை பற்றிய நிபுணர்களின் கருத்து கணிப்புகளுமே அதிகமாக இருக்கும். பாடமாக படிப்பது குறைவு. செய்முறை விளக்கங்களும், ‘கேஸ் ஸ்டெடி’ கட்டுரைகளுமே அதிகமாக இருக்கும்.

    * இந்த பயிற்சி, மாணவர்களுக்கு எந்த வகையில் உதவியாக இருக்கும்?

    பங்கு சந்தை அறிவை வளர்த்துக் கொண்டு சுயமாகவே பங்கு சந்தை முதலீட்டில் களமிறங்கலாம். தனியார் நிதி நிறுவனங்கள், வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள், பங்கு சந்தை வர்த்தக நிறுவனங்களில் பணிக்கு சேரலாம். இவை இரண்டும் இல்லாத பட்சத்தில் சென்னை ஐ.ஐ.டி. வழங்கியிருக்கும் கல்வி சான்றிதழை கொண்டு பங்கு சந்தை தொடர்பான உயர் கல்விகளுக்கு செல்லலாம்.
    * யாரெல்லாம் படிக்கலாம்?

    பங்கு சந்தை பற்றி தெரிந்து கொள்ள விரும்பும் யார் வேண்டுமானாலும் இதில் இணைந்து படிக்கலாம். வணிகம், கலை-அறிவியல், என்ஜீனியரிங், டிப்ளமோ... இப்படி எல்லா படிப்புகளை முடித்தவர்களும், இதில் இணைந்து படிக்கலாம்.

    பாலாஜி
    அறிவியல் ஆசையை குழந்தைகளின் மனதில் விதைத்ததோடு, முறையான வழிகாட்டுதல்களை வழங்கி பல மாணவ-மாணவிகளை அறிவியல் ஆராய்ச்சியாளர்களாக மாற்றியிருக்கிறார் ஆசிரியர் ராபர்ட் வில்சன்.
    ‘‘அறிவியல் ஆராய்ச்சியில் முன்னேறியுள்ள நாடுகளே இன்று உலக அரங்கில் வளர்ந்த நாடுகளாக உள்ளன. இதில் இருந்தே அறிவியல் படிப்புகளின் முக்கியத்துவம் புரியும்’’ என்று முதல் கருத்திலேயே கவனம் ஈர்க்கிறார், கோவை கார்மல் கார்டன் பள்ளியை சேர்ந்த முன்னாள் அறிவியல் ஆசிரியர் ராபர்ட் வில்சன். 30 ஆண்டுகளாக அறிவியல் ஆசிரியராக பணியாற்றிய இவர், தமிழகம் முழுக்க பல அறிவியல் கண்காட்சிகளை நடத்தியிருக்கிறார். அதன் மூலம் அறிவியல் ஆசையை குழந்தைகளின் மனதில் விதைத்ததோடு, முறையான வழிகாட்டுதல்களை வழங்கி பல மாணவ-மாணவிகளை அறிவியல் ஆராய்ச்சியாளர்களாக மாற்றியிருக்கிறார். மேலும் முரண்பாடான அறிவியல் கோட்பாடுகளை, புதுமையாக விளக்கும் இவர், அதற்காக பல பிரத்யேக புத்தகங்களையும் எழுதியிருக்கிறார்.

    அறிவியல் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டிருக்கும் ராபர்ட் வில்சன், அறிவியல் பற்றி பல விஷயங்களை பகிர்ந்து கொள்கிறார்.

    * அறிவியல் படிப்பின் அவசியம் என்ன?

    ஒவ்வொரு நிகழ்வும், நகர்வும், உணர்வும், அளவும் அறிவியலே. உலகில் அதிகமாக பேசப்படும், கேட்கப்படும் கருத்துகளில், எது உண்மை எது பொய் என்பதை பிரித்து பார்க்க, நிரூபித்து காட்ட அறிவியல் அவசியமாகிறது. அதேபோல மூடநம்பிக்கைகளை விரட்டவும், உலகை ஆராயவும், உலகை ஆளவும் அறிவியல் அவசியமாகிறது.

    * அறிவியல் படிப்பின் மூலம் எத்தகைய வேலைவாய்ப்புகளை பெற முடியும்?

    மருத்துவம், அறிவியல்-ஆராய்ச்சிகளில் வேலைவாய்ப்புகள் பெறலாம். அதோடு உயர் கல்வி, சுகாதாரம், சுற்றுப்புற சூழல், காவல் துறை, எந்திரவியல், பாலிமர் தொழில்நுட்பம், விவசாயம், அணு பிளவு, கதிர்வீச்சு, நானோ துறை, விண்வெளி துறை, பாதுகாப்பு துறை... இப்படி அறிவியல் கலந்திருக்கும் பல நவீன துறைகளிலும் அறிவியலின் மூலம் வேலைவாய்ப்பு பெறலாம். தொடக்க நிலை முதல், உயர் பதவி வகிப்பது வரை அறிவியல் படிப்புகள் துணை நிற்கின்றன.

    * அறிவியலை மையப்படுத்தி உயர் கல்வியில் என்னென்ன படிக்கலாம்?

    பி.எஸ்சி. படிப்பில் நவீன விலங்கியல், மேம்படுத்தப்பட்ட விலங்கியல் மற்றும் விலங்கு உயிரி தொழில்நுட்பம், பயோடெக்னாலஜி, தாவரவியல், விலங்கியல், உயிரியல், இயற்பியல் படிக்கலாம். உயர்கல்வியை பொருத்தமட்டில், மருத்துவ உயிரி வேதியியல், மருத்துவ நுண்ணுயிரியல், உணவுத் தொழில்நுட்பம், பொது சுகாதாரம் மற்றும் பூச்சியியல், இன்ஸ்ட்ரூமென்டேஷன் சயின்ஸ் படிப்புகளை படிக்கலாம்.

    * அறிவியலில் சிறந்து விளங்க என்ன செய்ய வேண்டும்?

    புத்தக அளவில் இருக்கும் அறிவியல் கோட்பாடுகளை, செய்முறை விளக்கங்களாக செய்து பார்க்கலாம். யூ-டியூப் தளங்களில் இருக்கும் வேதியியல் செய்முறைகளை, பார்த்து புரிந்து கொள்ளலாம். ஒவ்வொரு தனிமங்களின் பண்பு நலன்கள், கூட்டு சேர்க்கைகளின் விளைவுகளை உணர்ந்து, புரிந்து பயன் பெறலாம். புதிய ஆராய்ச்சிகளை முன்னெடுக்கலாம். ரசிக்கலாம்.

    * அறிவியல் படிப்பிற்கு ஏற்ற வேலைவாய்ப்பு இருக்கிறதா?

    இருக்கிறது. அறிவியல் படிப்பிற்கு அறிவியல் துறையில் மட்டும்தான் வேலை இருக்கிறது என்ற எண்ணம் தவறானது. ஏனெனில் அறிவியல் படிப்பிற்கு பல துறைகளில் வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன. ஏரோநாட்டிக்கல் சயின்ஸ், குற்ற புலனாய்வுத்துறை, தீயணைப்பு துறை, கப்பல் மேலாண்மை துறை, வேளாண்துறை, நீர்வளத்துறை, விண்வெளி துறை... இப்படி அறிவியல் கலந்திருக்கும் மற்ற துறைகளிலும் வேலைவாய்ப்புகள் இருக்கிறது.

    * அறிவியல் துறை மீது மாணவர்களுக்கு ஈர்ப்பு இருக்கிறதா? எப்படி ஊக்கப்படுத்துவது?

    இருக்கிறது. ஆனால் அவர்களின் ஆசையை, ஆசிரியர்கள்தான் ஆவலாக தூண்டி விட வேண்டும். அதோடு மட்டுமில்லாமல், சரியான பாதையில் வழிநடத்தி, உற்சாகமான அறிவியல் ஆராய்ச்சிகளில் அவர்களை ஈடுபடுத்தி, அறிவியல் துறையிலேயே வேலைவாய்ப்புக்கான வழிகாட்டுதலையும் செய்து கொடுக்க வேண்டும்.

    ராபர்ட் வில்சன்
    கடற்கரையில் குதிரை சவாரி, குடை ராட்டினம் போன்றவற்றில் குழந்தைகள் விளையாட விரும்பினால், அதிக கூட்டம் இல்லாத சமயத்தில் மட்டுமே அனுமதியுங்கள்.
    வார இறுதி நாட்கள் மற்றும் திருவிழா சமயங்களில் குழந்தைகளை பொருட்காட்சி, பூங்கா, திரையரங்கு, கடற்கரை போன்ற இடங்களுக்கு பெற்றோர் அழைத்துச்செல்வது வழக்கம். அவ்வாறு, கடற்கரைக்குச் செல்லும் சமயங்களில் குழந்தைகளின் வயதுக்கேற்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம்.

    வீட்டில் இருந்து புறப்படும்போது குழந்தைகளிடம் கடற்கரையில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என தெளிவாக எடுத்துக் கூறுங்கள். சூரியக் கதிர்களில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க சன்ஸ்கிரீன் கிரீம் பூசிக்கொண்டு செல்ல வேண்டும். கடற்கரை மணலில் புதைந்திருக்கும் பொருட்களை கையில் எடுத்து விளையாடக் கூடாது என்று குழந்தைகளுக்கு அறிவுறுத்த வேண்டும்.

    கடற்கரையில் யாரேனும் தின்பண்டங்கள் கொடுத்தால் அதை வாங்கிச் சாப்பிடக்  கூடாது என்று அவர்களிடம் தெரிவிக்க வேண்டும். கடற்கரையில் விற்கப்படும் பல்வேறு தின்பண்டங்களை சாப்பிட குழந்தைகள் விரும்புவார்கள். இந்த விஷயத்தில் அவர்களது உடல்நலத்தை மனதில் கொண்டு செயல்பட வேண்டும்.

    குழந்தைகள் கடல் நீரில் விளையாடும்போது பெற்றோர் அவர்களை கண்காணிக்க வேண்டும். அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் அலைகளின் வேகமும், உயரமும் அதிகமாக இருக்கும். அதனால் அவர்களது கைகளைப் பிடித்துக்கொண்டு அலைகளில் விளையாடுவதே பாதுகாப்பானது. அவர்கள் கரையில் அமர்ந்து விளையாடினாலும், அருகிலேயே இருந்து பெற்றோர் பார்த்துக்கொள்ள வேண்டும்.

    பெற்றோர்களின் செல்போன் எண்களை குழந்தைகள் அறிந்திருக்க வேண்டும். எதிர்பாராமல் அவர்கள் வழிதவறிவிட்டால், செல்போன் எண்ணை அருகில் உள்ள பெரியவர்களிடம் தெரிவித்து தொடர்புகொள்ள வேண்டும் என்று குழந்தைகளுக்கு பெற்றோர் கற்றுத்தர வேண்டும்.

    10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுடன் கடற்கரைக்குச் செல்லும்போது கூடுதலாக ஆடைகளை எடுத்துச்செல்வது நல்லது. மதியமே கிளம்புவதாக இருந்தால் குழந்தைகளின் குடை, தொப்பி ஆகியவற்றுடன் கண்டிப்பாக குடிநீர் பாட்டிலையும் கொண்டு செல்ல வேண்டும். அத்துடன் அவர்கள் தண்ணீரில் விளையாடுவதற்கு ஏதுவான செருப்புகளை அணிவித்து அழைத்துச் செல்லலாம்.

    கடற்கரையில் குதிரை சவாரி, குடை ராட்டினம் போன்றவற்றில் குழந்தைகள் விளையாட விரும்பினால், அதிக கூட்டம் இல்லாத சமயத்தில் மட்டுமே அனுமதியுங்கள். கொரோனா தொற்று முற்றிலும் விலகாத நிலையில் சமூக இடைவெளியை பின்பற்றுவது சிறந்தது.
    குழந்தைகளுக்கு 8 முதல் 15 வயதிற்குள் பற்களை சீரமைப்பது சிறந்தது. இந்த வயதில், பற்கள் விழுந்து முளைக்கும் என்பதால், குறைந்த காலத்தில் பற்களை சீரமைக்கலாம்.
    முக அழகை அதிகரிப்பதில் பற்கள் முக்கியமானவை. சீரற்ற பல்வரிசையால் மனதளவில் பாதிக்கப்படுபவர்கள் பலர் உள்ளனர். பற்களின் அமைப்பை குழந்தைப் பருவத்தில் இருந்தே சீரமைக்கத் தொடங்கினால் எளிதாக இருக்கும். வரிசையாக இல்லாமல் முன்னும் பின்னுமாக இருக்கும் பல்வரிசையை, ‘பிரேஸ்’ எனும் கிளிப் அமைத்தல் மூலம் ஒழுங்குபடுத்தலாம்.

    குழந்தைகளுக்கு 8 முதல் 15 வயதிற்குள் பற்களை சீரமைப்பது சிறந்தது. இந்த வயதில், பற்கள் விழுந்து முளைக்கும் என்பதால், குறைந்த காலத்தில் பற்களை சீரமைக்கலாம்.

    குழந்தைகளுக்கு ஏற்ற சில பிரேஸ் வகைகள்:

    மெட்டல் பிரேஸ்:

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினருக்கும் பொதுவாகப் பரிந்துரைக்கப்படுவது ‘மெட்டல் பிரேஸ்’. சிறிய உலோகத்தைக் கொண்டு அமைக்கப்படும் இந்த பிரேஸ், ஒவ்வொரு பல்லையும் நன்றாகப் பற்றும் வகையில் அமைக்கப்படும். உலோகக் கம்பி இந்த அடைப்புக்குறிக்குள் சென்று பற்களை ஒன்றாக இணைக்கும். பற்களுக்கான இடைவெளியைச் சரி செய்யும் வகையில், எலாஸ்டிக் அமைக்கப்பட்டிருக்கும். சீரான இடைவெளியில் தேவையான இடங்களில் கம்பியை இறுக்குவதால் விரும்பிய பல் அசைவு பெறலாம்.

    செராமிக் பிரேஸ்:

    இந்த செராமிக் பிரேஸ் பற்களின் நிறத்திற்கு ஏற்ப இருக்கும். அதை இணைக்கும் கம்பி உலோகத்தால் வடிவமைக்கப்பட்டிருக்கும். உலோகம், செராமிக் இரண்டும் ஒரே கால அளவையும், ஒரே பயன்பாட்டையும் கொண்டிருக்கும். இந்த வகை, 10 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களுக்குப் பரிந்துரைக்கப்படும்.

    உள்ளடங்கிய பிரேஸ்:

    சிலருக்குப் பற்கள் வளரும்போது, முன்னும், பின்னுமாக இருக்கும். இதை ஒரே சீராக மாற்ற தகுந்த பிரேஸ் பற்களுக்கு உட்புறமாக அமைக்கப்படும் என்பதால், வெளியில் தெரியாது. இந்த அமைப்பில் பற்களைச் சுத்தம் செய்வதில் மட்டும் சிரமம் ஏற்படும். இதற்கான கால இடைவெளியும் சற்று அதிகமாகும். 12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், இளைஞர்களுக்கும் இது பரிந்துரைக்கப்படும்.

    கிளியர் அலைனர்:

    இதனை மிகவும் எளிதாக எந்த வயதினரும் அணியலாம். மருத்துவ உதவி தேவையின்றி சுயமாக இதை அணிந்து கொள்ள முடியும். ஆன்லைனில் இந்த வகையான பிரேஸ் கிடைக்கும் என்றாலும், மருத்துவரை அணுகி பற்களின் தன்மைக்கேற்ப சரியான அளவை தேர்வு செய்து அணிவது சிறந்தது. சீரற்ற பல் வரிசை இருப்பவர்களுக்கு இது பொருந்தாது.

    பராமரிக்கும் முறைகள்:

    கிளிப் அமைத்தபின், உண்ணும் உணவு முதல் அனைத்திலும் கவனம் வேண்டும். ஒவ்வொரு முறை சாப்பிட பிறகும் பற்களைச் சுத்தம் செய்வது அவசியம். கிளிப்களின் இடையில் உணவுத் துகள் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கேற்ப, பிரஷ்களைத் தேர்வு செய்ய வேண்டும். அதிக அடர்த்தி இல்லாத மவுத் வாஷை பயன்படுத்தி வாயை சுத்தம் செய்வது சிறந்தது.

    குறைந்தபட்சம் 3 முதல் 6 மாத இடைவெளியில் மருத்துவரை அணுகி பற்களைச் சுத்தம் செய்வது அவசியம்.
    ஒரு மணிநேரத்தை நீங்கள் படிப்பதில் கவனத்தை செலுத்துவதற்கும், பதினைந்து நிமிடம் விளையாடுவதற்கு என்றும் நேரத்தை கருத்தில் கொள்ளுங்கள்.
    நீங்கள் பரிட்சை குறித்து அதிக கவலைபடும்போது, மனஅழுத்தம் உங்களை வருத்தும். அது உங்கள் ரிசல்ட்டை பாதிப்பதற்கு முன், நீங்கள் சிறப்பாக ஸ்கோர் செய்வதற்கு நோ ஸ்ட்ரெஸ் எக்ஸ்பிரஸை பெறுங்கள் மேலும் உங்கள் படிக்கும் ப்ரொஸஸை உண்மைகாகவே அனுபவிக்க ஆரம்பியுங்கள்.

    1. பாடத்தைக் குறித்து தேர்வுக்கு ஒரு நாள் முன்பு எழும் சந்தேகத்தை விட வேறு மோசமான காரியம் எதுவும் இருக்காது. அதனால் தான் ஒரு மாதத்திற்கு முன்பாகவே நீங்கள் தேர்வுக்கு படிக்க ஆரம்பிப்பது மிகவும் நல்லது. நீங்கள் எந்த அளவுக்கு பாடத்தை ரிவிஷன் செய்கிறீர்களோ மேலும் கேள்விதாள்களை பயிற்சிசெய்கிறீர்களோ அந்த அளவுக்கு நீங்கள் தேர்வு நேரத்தில் தன்னம்பிக்கையோடு இருப்பீர்கள்.

    2. திட்டமிடுவது என்பது எல்லோருக்குமே இயற்கையாகவே வராது மேலும் ஆரம்பத்தில் இது பயமுறுத்துவதாக இருக்கலாம். இருப்பினும், கூகுள் காலண்டர் போன்ற கருவியைக் கொண்டு, ஒரு தெளிவான பாதையைப் பெற முடியும் அதாவது ஒரு பாடத்தை முடிக்க, கடினமான பாடத்தை முதன்மைபடுத்த சரியாக எவ்வளவு நேரம் ஆகும் என்பதை கண்டுகொள்ளமுடியும் மற்றும் இடையிடையே இடைவேளைகளையும் எடுக்க முடியும்.

    3. இடைவேளையே எடுக்காமல் தொடர்ந்து படிக்கிறீர்கள் என நினைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் விரைவில் சோர்வடையலாம் மேலும் தொடர்ந்து படிப்பதற்கு சலிப்பு ஏற்படலாம் அல்லது இரண்டுமே இருக்கலாம். இது போன்ற சூழ்நிலைகளை சமாளிக்க, ஒரு மணிநேரத்தை நீங்கள் படிப்பதில் கவனத்தை செலுத்துவதற்கும், பதினைந்து நிமிடம் விளையாடுவதற்கு என்றும் நேரத்தை கருத்தில் கொள்ளுங்கள்.

    4. பகிரப்பட்ட பிரச்சனை பாதி தீர்ந்ததற்கு சம்மாகும். குழந்தைகள் சமூக வலைதள நெட்வொர்க்கில் அவர்களுக்கான குழுவை உருவாக்கிக் கொள்ளலாம் அல்லது விக்கிஸ்பேஸ் கிளாஸ்ரூமில் இணைந்து (இந்த வெப்சைட்டில் டீச்சர்ஸ் மற்றும் ஸ்டூடண்ட்ஸ்அவர்களுக்குரிய பாடத்திற்குரிய குறிப்புகளை சேர்க்கலாம்) ஏதாவது சந்தேகமிருந்தால் சக வகுப்பினரிடம் கேட்டு தெரிந்துகொள்ளலாம் மேலும் மன அழுத்த எண்ணங்கள் வெளியே கொட்டிவிடலாம்.

    5. நாம் மனஅழுத்தத்திற்கு ஆளாகும்போது, நாம் அதிகமாக ஓவர்- திங்க் செய்வோம் மேலும் நம்மை நாமே குழப்பிக் கொள்வோம். மைண்டு மேப்பிங் என்பது சிந்தனைகளை ஒருமுகப்படுத்த உதவுகிறது மேலும் அவைகளை பயன்பாட்டிற்கான கருத்துக்களாக மாற்றுகிறது, கடினமான பாடத்தை சிறு சிறு பிரிவாக உடைத்து புரிந்து கொள்ளக் கூடிய துணுக்குகளாக மாற்றுகிறது.
    ×