search icon
என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    எதிர்காலத்தை நிர்ணயிக்க பிள்ளைகளுக்கு உதவுங்கள்
    X
    எதிர்காலத்தை நிர்ணயிக்க பிள்ளைகளுக்கு உதவுங்கள்

    எதிர்காலத்தை நிர்ணயிக்க பிள்ளைகளுக்கு எப்படி உதவலாம்....

    சிறு வயதில் ஏற்படும் லட்சியக் கனவை அடைவதற்கான வழிகளை, பிள்ளைகளால் தானாகவே தீர்மானிக்க முடியாது. யாராவது ஒருவரது வழிகாட்டுதல் கட்டாயம் தேவை.
    படிப்பு முடிந்தவுடன் எந்தப் பாதையைத் தேர்ந்தெடுப்பது என பிள்ளைகள் குழம்பிக்கொண்டிருக்கும் நேரத்தில் பெற்றோர், அவர்களுக்குத் தகுந்த ஆலோசனை வழங்கி சரியான பாதையில் வழிகாட்ட வேண்டும். அதற்கான சில யோசனைகள் இங்கே:

    ஆசையைக் கேட்டு மதியுங்கள்:

    எல்லோருக்கும் எதிர்காலக் கனவு இருக்கும். அதில், வேலை சார்ந்த கனவுக்குக் கட்டாயம் இடம் உண்டு. அதை எப்படி அடைவது என்பது தெரியாமல்தான், பலரும் தடுமாறுகின்றனர். எனவே, உங்கள் எண்ணங்களை பிள்ளைகளின் மீது திணிக்காமல், பிள்ளைகளின் தொழில் சார்ந்த கனவு எது என்பதை முதலில் கேளுங்கள். அதை வேடிக்கையாக நினைக்காமல், உரிய மதிப்பளியுங்கள். பள்ளிப் பருவத்திலேயே லட்சியத்தை அடைவதில் உள்ள நிறை, குறைகளைச் சுட்டிக் காட்டுங்கள். சிக்கலாக இருக்கும் பட்சத்தில், தடம்மாற்றி சரியான பாதைக்குக் கொண்டு செல்லுங்கள். ஆனால், எந்த இடத்திலும், தன்னம்பிக்கையை இழக்கும் வகையில் பிள்ளைகளிடம் பேசக்கூடாது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

    வாய்ப்பை ஏற்படுத்துங்கள்:

    பிள்ளைகளின் எதிர்கால லட்சியம் நியாயமாக இருந்தால், அதை ஆதரியுங்கள். சிறு வயதில் ஏற்படும் லட்சியக் கனவை அடைவதற்கான வழிகளை, பிள்ளைகளால் தானாகவே தீர்மானிக்க முடியாது. யாராவது ஒருவரது வழிகாட்டுதல் கட்டாயம் தேவை. இதற்காக, உளவியல் சார்ந்த நிபுணரின் திறன் மதிப்பீடு, லட்சியம் சார்ந்த தொழில் கண்காட்சி, கருத்தரங்கம் ஆகியவற்றில் பங்கேற்கச் செய்வது அவசியம். இதனால், பிள்ளைகளின் தன்னம்பிக்கையை அதிகரிக்க முடியும். திறன் மதிப்பீடு என்பது ஆளுமை, பலம் மற்றும் பலவீனங்களைப் பிரதிபலிக்கும் என்பதால், சரியான பாதையில் செல்ல உதவும். மேலும், அந்தத் துறையில் வெற்றி பெற்ற நிபுணர்களின் ஆலோசனை, கருத்துகளைக் கேட்டு அதற்கேற்ப செயல்படலாம்.

    வாழ்க்கை அனுபவத்தை ஏற்படுத்துங்கள்:

    பிள்ளைகளைப் பொறுத்தவரை, வளரும் பருவத்தில் வாழ்க்கையும், தொழிலும் ஒன்றாகத் தெரியும். இரண்டின் இயல்பையும் பிரித்துப் பார்க்கத் தெரியாது. சிறு வயதில், விரும்பிய வேலை என்பது ஒரு கவர்ச்சியாகத் தோன்றலாம். ஆனால், நிஜ வாழ்க்கையில் அந்த வேலையில் உள்ள இலக்கு, அதில் உள்ள சவால்கள் என்பது வேறாக இருக்கும். எனவே, லட்சிய வேலைக்குப் பிள்ளைகளை ஆதரிக்கும் முன், தொழிலில் உள்ள சவால்கள், அதை எப்படி மேற்கொள்ள வேண்டும் என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும்.

    இளம் வயதினராக இருந்தால் மாணவப் பருவ பயிற்சி, பகுதி நேர வேலைகள், தேர்ந்தெடுத்த தொழில் துறையின் அனுபவத்தைப் பிள்ளைகளுக்கு வழங்க வேண்டும். அத்துறையில் உள்ள நிபுணரை முன்னுதாரணமாகக் கொண்டு, அவர் கடந்து வந்த பாதையைப் பிள்ளைகளுக்கு உணர்த்த வேண்டும்.  அதன் மூலம், பிள்ளைகளுக்கு அத்துறை குறித்து தெளிவு கிடைக்கும். மறுமதிப்பீடு செய்ய விரும்பினால், அதற்கேற்ப பிள்ளைகளை வழி நடத்தவும் முடியும்.
    Next Story
    ×