என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    • குழந்தைகளின் கைகளில், ஸ்மார்ட்போன் சர்வசாதாரணமாக தவழ்கிறது.
    • ‘பிரி மெச்சூர்' குழந்தைகளுக்கு ‘ரெட்டினல்' பரிசோதனை மிகமிக அவசியம்.

    டிஜிட்டல் யுகம், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலவிதமான கண் பாதிப்புகளை உண்டாக்கி இருக்கிறது. பள்ளி பருவத்திலேயே நிறைய குழந்தைகள், கண் கண்ணாடிகள் அணிந்து உலா வருகிறார்கள். கண் சம்பந்தமான விஷயத்தில் நாம் என்ன தவறு செய்கிறோம், ஸ்மார்ட்போன் எத்தகைய பாதிப்புகளை உண்டாக்குகிறது, குழந்தைகளின் பார்வை குறைபாட்டை எப்படி கண்டறிவது, பெரியவர்கள் எதிர்கொள்ளும் கண் சார்பான பிரச்சினைகள், ஐ.டி. துறையில் பணியாற்றுபவர்கள் கண் பாதிப்புகளை எப்படி குறைப்பது?... போன்ற பல கேள்விகளுக்கு விடை கொடுக்கிறார், யமுனா தேவி. கண் அறுவை சிகிச்சை நிபுணரான (போக்கோ ரெப்ராக்டிவ் சர்ஜன்) இவர் சென்னையில் மேற்படிப்பு முடித்து விட்டு, தற்போது கோவையில் பயிற்சி செய்து வருகிறார். இவர் கண்கள் சம்பந்தமான பல சந்தேகங்களுக்கு பதில் அளிக்கிறார்.

    * ஸ்மார்ட்போன், குழந்தைகளின் கண்களில் எத்தகைய பாதிப்புகளை உண்டாக்கும்?

    ஸ்மார்ட்போன், இன்று தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிட்டது. குறிப்பாக குழந்தைகளின் கைகளில், ஸ்மார்ட்போன் சர்வசாதாரணமாக தவழ்கிறது. உணவு ஊட்ட, பொழுதுபோக்கு காரணங்களுக்காக பெற்றோர்களே இதை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தும்போது, அவர்கள் கூடுதலாக 'அட்வாண்டேஜ்' எடுத்து கொள்கிறார்கள். ஸ்மார்ட்போனில் அதிக நேரம் செலவழிக்கிறார்கள். இது பலவிதமான கண் பாதிப்புகளை உண்டாக்கும். கண்களில் நீர் வறட்சி (dry eyes), கண் எரிச்சல், தலைவலி, கண் வலி, கண் சோர்வு, கண் சிவப்பு (ரெட்-ஐ) போன்ற பாதிப்புகளையும் உண்டாக்கும். அதனால் குழந்தைகளை கண்காணித்து, போன் பயன்படுத்தும் நேரத்தை குறைத்து, வருடாந்திர பரிசோதனைக்கு அழைத்து செல்லவேண்டும்.

    * குழந்தைகளுக்கு கண் சம்பந்தமான பாதிப்புகளை எப்படி கண்டறிவது?

    இயல்பை விட எல்லாவற்றையும் மிக அருகில் வைத்து பார்ப்பது, படிப்பது, டி.வி.யை மிக நெருங்கி நின்று பார்ப்பது, நன்றாக படிக்கும் குழந்தைகள் திடீரென படிக்கமுடியாமல், நல்ல மதிப்பெண் பெற முடியாமல் தவிப்பது, கண்களில் நீர் கசிவது, தலைவலி, சிவந்த கண், கண் உறுத்துவதாக கூறி அடிக்கடி தேய்ப்பது போன்றவற்றை கண் பாதிப்பிற்கான அறிகுறிகளாக எடுத்துக்கொள்ளலாம்.

    * குழந்தைகளுக்கு கண் பரிசோதனை எப்போது செய்யலாம்?

    மூன்று வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு நிச்சயம், வருடத்திற்கு ஒருமுறை கண் பரிசோதனை அவசியமாகிறது. ஏனெனில் உடல் வளர்ச்சியை போலவே, வயதிற்கு ஏற்ற கண் வளர்ச்சியும் அவசியம். அதை கண்காணிக்கவும், குறைபட்டிருக்கும் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் கண் பரிசோதனை அவசியம். குறிப்பாக, 10 மாதத்திற்கு முன்பாகவே பிறக்கும் 'பிரி மெச்சூர்' குழந்தைகளுக்கு 'ரெட்டினல்' பரிசோதனை மிகமிக அவசியம். வெளிச்சத்தை உணர்கிறார்களா, அம்மாவை அடையாளம் காண்கிறார்களா... போன்றவற்றை ஆரம்பத்திலேயே சோதித்துவிட வேண்டும்.

    * ஐ.டி. துறையில் வேலைபார்ப்பவர்கள் எத்தகைய பாதிப்புகளை எதிர்கொள்கிறார்கள்?

    ஐ.டி.யில் வேலைபார்ப்பவர்கள், ஒருநாளைக்கு குறைந்தது 8 மணிநேரமாவது கணினியை பார்க்கவேண்டிய கட்டாயம் இருக்கிறது. இதனால் கண் வறட்சி ஏற்படும். தலைவலி மற்றும் கண் வலி பிரச்சினைகளும் உண்டாகும். இப்படி அதிக நேரம் கணினியில் வேலைபார்ப்பவர்கள், அதிகமாக தண்ணீர் குடிக்கவேண்டும். கண்களின் ஈரப்பதத்தை தக்க வைக்க நன்றாக தூங்கவேண்டும். கண்களை அடிக்கடி இமைக்க வேண்டும். கூடவே 20-20-20 முயற்சியிலும் ஈடுபடவேண்டும்.

    20-20-20 என்பது, ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும், 20 அடி தொலைவில் இருக்கும் பொருளையோ அல்லது வாசகங்களையோ 20 நொடிகளுக்கு பார்க்க வேண்டும். இதன்மூலம், கண்கள் சோர்வடையாமல் பார்த்துக் கொள்ளலாம். இவையின்றி, கணினி பார்ப்பதில், அசவுகரியங்கள் இருப்பின், மருத்துவர் ஆலோசனைப்படி லூப்ரிகேஷன் மருந்துகளை பயன்படுத்தலாம்.

    * பார்வை குறைபாடு பெற்றோர்கள் மூலமாக வருமா?

    ஆம்..! 'ரிஃபிரக்டிவ் எரர்' எனப்படும் 'ஒளி விலகல் பிழை' மரபணு மூலமாக பெற்றோரிடமிருந்து குழந்தைகளுக்கு வர 80 முதல் 90 சதவிகிதம், சாத்தியம் இருக்கிறது.

    * இந்தியாவில் நிறையபேர் எத்தகைய பார்வை குறைபாட்டினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்?

    'ஐ-பால்' எனப்படும் கண் பந்தின் வளர்ச்சியை பொறுத்து, குறைபாடு மாறுபடும். கண் பந்து பெரிதாக இருந்தால் 'மைனஸ்' குறைபாடும், சிறியதாக இருந்தால் 'பிளஸ்' குறைபாடும் உருவாகும். அந்தவகையில், நம் இந்தியாவில் பெரும்பாலானோர், 'மைனஸ்' குறைபாட்டில் சிக்கி இருக்கிறார்கள்.

    * குழந்தைகளின் பார்வை குறைபாட்டிற்கு, நிரந்தர தீர்வு இல்லையா?

    மருத்துவ தொழில்நுட்பம் ரொம்பவே முன்னேறிவிட்டது. அதனால் நிரந்தர தீர்வு காண முடியும். 18 வயது வரை, பார்வை திறன் குறைபாட்டிற்கு கண்ணாடி அணிவது மட்டுமே தீர்வாகும். 18 வயதை எட்டியபிறகுதான், அவர்களது பார்வை திறன் ஒரு நிலையை அடையும். அந்த சமயத்தில், அவர்களது கருவிழி திரையின் தடிமனுக்கு ஏற்ப, அவர்களது பார்வை திறன் மதிப்பீட்டிற்கு ஏற்ப... லாசிக் சிகிச்சையோ அல்லது ஸ்மைல் சிகிச்சையோ செய்து, பார்வை குறைபாட்டை மீட்கலாம். 'மைனஸ் 9.5' இப்படி அதீத பாதிப்பு உள்ளவர்கள், ஐ.சி.எல். எனப்படும் நவீன சிகிச்சையின் மூலம் பார்வையை நிரந்தரமாக மேம்படுத்திக் கொள்ளலாம். கண்ணாடிக்கு குட்பை சொல்லலாம்.

    * முதியவர்களுக்கு ஏற்படும் கண்புரை பாதிப்பை தவிர்க்க முடியாதா?

    இதற்கு அறுவை சிகிச்சை ஒன்றே தீர்வாகும். நம் கண்களில் உள்ள லென்ஸ் பாகம், மறைக்கப்படும்போது பார்வையின் தரம் குறைய தொடங்குகிறது. வயது மூப்பு காரணங்களால், தலை முடி நரைப்பது போல, தோல் சுருங்குவது போல, 'காட்ராக்ட்' எனப்படும் பார்வை திறன் குறைபாடும் ஏற்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் இதை குணப்படுத்த, நவீன அறுவை சிகிச்சைகள் உண்டு. முன்பை போல கண்ணாடி அணிய வேண்டிய அவசியமில்லை. எல்லாமே எளிமையாகிவிட்டது. அல்ட்ரா சவுண்ட் தொழில்நுட்பத்தில் வலி இல்லாமல், மைக்ரோ மினிமம் (1.5 மி.மி.) நுட்பத்திலேயே அகற்றிவிடலாம்.

    * கண்களில் கட்டி வந்தால் என்ன செய்வது?

    கெலோசியன் (chalazion) மற்றும் ஹார்டியோலம் (hordeolum) என்ற இரு வகையான கட்டிகள், கண்களில் வரும். இதில் ஹார்டியோலம் வலி மிகுந்தது. இமைகளின் ஓரத்தில் வரும். கெலோசியன், வலி இல்லாதது. இரண்டையும் கரைக்க மருத்துவரின் ஆலோசனை அவசியம். மருந்துகள் மூலமாக கரையாத கட்டிகளை, மருத்துவர் துணையோடு இன்டிவிஷன் டிரைனேஜ் முறையில் அகற்றலாம். கண் கட்டி விஷயத்தில், நீங்களாகவே சிகிச்சை எடுப்பது ஆபத்தானது. கூர்மையான பொருட்களை கொண்டு நீங்களே சுத்தப்படுத்த நினைத்தால், பார்வை இழப்புகளை சந்திக்க நேரலாம்.

    * சர்க்கரை நோயாளிகள் கண் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டுமா?

    சர்க்கரை அளவை சரிவர பராமரிக்காவிட்டால், 'டயாபெடிக் ரெட்டினோபதி' எனப்படும் பாதிப்பிற்கு உள்ளாக நேரிடும். டயாபெடிக் ரெட்டினோபதி என்பது, கண் விழித்திரையில் நடக்கும் ஒழுங்கற்ற மாற்றம். மருத்துவர்களால் மட்டுமே கண்டறியமுடியும், மற்றபடி ஆரம்பத்தில் இதை அறிகுறிகளால் கண்டறியமுடியாது. இவை, முடியைவிட மெல்லியதாக இருக்கும் கண் நரம்புகளில் பாதிப்பை உண்டாக்கி, ரத்த கசிவு (retinal haemorhage) மற்றும் நீர் கசிவு (vitreous haemorhage) ஏற்படுத்தும். பார்வை திறனையும் குறைக்கும். இந்த பாதிப்பை ஆரம்பத்திலேயே கண்டுபிடிப்பதன் மூலம், லேசர் சிகிச்சை, இன்ட்ராவிட்ரியல் இன்ஜெக்‌ஷன், அறுவை சிகிச்சை ஆகியவை வழியாக பார்வையை காப்பாற்றலாம். பறிபோன பார்வையை திரும்ப பெறுவது சவாலானது. அன்றாட தேவைக்கேற்ற இன்டராக்குலர் லென்சுகளையும் பொருத்தலாம்.

    • சாப்பிட்டவுடன் கண்டிப்பாக வாய் கொப்பளிக்க வேண்டும்.
    • தினமும் இரண்டு வேளை பல் துலக்குவது அவசியம்.

    முகத்திற்கு அழகு சேர்க்கும் விஷயங்களில் பற்களுக்கும் முக்கிய பங்குண்டு. அதை எப்படி பாதுகாப்பது என தெரிந்து கொள்வோமா...?

    குழந்தைப் பருவம் முதலே பற்களை முறையாக சுத்தம் செய்யவேண்டும். தினமும் இரண்டு வேளை பல் துலக்குவது அவசியம். சாப்பிட்டவுடன் கண்டிப்பாக வாய் கொப்பளிக்க வேண்டும். சிலருக்கு சிறு வயதிலேயே பற்கள் நீண்டு வளர்வதால், அவர்களது முக அமைப்பே மாறிவிடுகிறது. இதற்குக் காரணம், குழந்தைப் பருவத்தில் விரல் சூப்புவதே.

    பால் பற்கள் விழுந்து நிரந்தரமான பற்கள் வளரும் பருவத்தில் இந்தப் பழக்கம் தொடரும் பட்சத்தில், பற்கள் நேரான வளர்ச்சிக்கு விரல்கள் இடையூறாக இருக்கின்றன. பற்கள் இயல்பை விட்டு விரல் சூப்பும் நிலைக்கேற்ப நீண்டு வளர ஆரம்பித்து விடுகின்றன. எனவே, 4 வயதுக்கு மேல் குழந்தைகள் இந்தப் பழக்கத்தைத் தொடர அனுமதிக்கக்கூடாது.

    பல் துலக்கும்போது பலரும் தெரியாமலேயே தவறு செய்கிறார்கள். அது, பற்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பல் ஈறுகளுக்கு கொடுக்க மறப்பதுதான்.

    ஈறுகளுக்கும், பற்களுக்கும் இடையில் உள்ள சின்ன இடைவெளிகளில் நாம் சாப்பிடும் உணவுப் பொருட்கள் தங்குவதால்தான் ஈறு தொடர்பான பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதைத் தவிர்க்க ஈறுகளை எப்படி பாதுகாப்பது என்பதை பல் மருத்துவர்கள் மூலம் அறிந்து, அதை குழந்தைகளுக்குக்கற்றுக் கொடுக்க வேண்டும். இப்படிச் செய்தால், பிற்காலத்தில் பல் தொடர்பாக ஏற்படும் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

    • மழைக்காலங்களில் கிட்டத்தட்ட எல்லா குழந்தைகளுக்குமே காய்ச்சல் வந்துவிடுகிறது.
    • சுகாதாரமில்லாத உணவுகள் காய்ச்சலுக்கு ஒரு முக்கியமான காரணம்.

    திடீர் பருவநிலை மாற்றம் காரணமாகத்தான் குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல் இரண்டும் வருகின்றன. இவை இயல்பானதுதான் என்பதால் பயப்பட வேண்டாம். ஒரு நாளைக்கு முன்னதாக லேசான மூக்கொழுகுதலுடன் நார்மலாக இருக்கிற குழந்தைகளுக்கு அன்றைக்கு சாயங்காலமோ, இரவோ காய்ச்சல் வர ஆரம்பிக்கும். இது சளியினால் வருகிற சாதாரணக் காய்ச்சல்.

    இப்படியில்லாமல் சளிப்பிடித்து இரண்டு அல்லது மூன்று நாள்கள் கழித்து காய்ச்சல் வருகிறது என்றால், மழைக்கால தொற்றுநோய்கள் காரணமாக இருக்கலாம். இன்னும் சில குழந்தைகளுக்கு காய்ச்சல் இரண்டு, மூன்று நாள் இருந்துவிட்டு போய்விடும். அம்மாக்கள் 'அப்பாடா' என்று சற்று ரிலாக்ஸ் ஆகிற நேரத்தில் மறுபடியும் மெல்ல தலைகாட்ட ஆரம்பிக்கும். இதுவும் மழைக்கால தொற்றுநோய்களால் வருகிற காய்ச்சல்தான்.

    இந்த மாதங்களில், சில குழந்தைகளுக்குக் காய்ச்சலுடன் தொண்டையில் இன்ஃபெக்‌ஷனும் ஏற்படும். இதனால், தொண்டையெல்லாம் புண்ணாகி சாப்பிட முடியாமல் தவிப்பார்கள். இவர்களுக்கு 10 அல்லது 15 நாள் மாத்திரை தர வேண்டி வரும். நான் மேலே சொல்லியிருக்கிற நான்கு காய்ச்சல்களுக்குமே குழந்தைகளின் வயது மற்றும் எடையைப் பொறுத்து மருந்து கொடுத்தாலே சரியாகிவிடும்.

    வராமல் தடுக்க வழிகள்

    பருவநிலை மாற்றத்தால் வருகிற காய்ச்சல், ஒரு குழந்தையிடம் இருந்துதான் இன்னொரு குழந்தைக்குப் பரவும். அதனால், உங்கள் பிள்ளைக்கு லேசான காய்ச்சல் இருந்தால்கூட பள்ளிக்கூடத்துக்கு அனுப்பாமல் இருப்பதுதான் நல்லது.

    இந்த மாதங்களில் குழந்தைகளுக்கு ஹோட்டல் உணவுகளை வாங்கித் தராதீர்கள். ஏனென்றால், சுகாதாரமில்லாத உணவுகள் காய்ச்சலுக்கு ஒரு முக்கியமான காரணம். கேன் வாட்டராக இருந்தாலும் கொதிக்க வைத்து ஆறிய நீரை மட்டும் குழந்தைகளுக்குக் கொடுங்கள்.

    இந்த சீஸனில் மழையும் வெயிலும் மாறி மாறி இருக்கும் என்பதால், உங்கள் வீட்டைச் சுற்றி சுத்தமான மழை நீர் எங்கும் தேங்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். அதுதான் கொசுக்களின் பிறப்பிடம். டெங்கு கொசுக்கள் இப்படிப்பட்ட சுத்தமான நீரில்தான் முட்டையிடும் என்பதால், கவனம்.

    வீட்டுக்கு முன்னால் தேங்கியிருக்கிற மழை நீரில் வெறுங்காலுடன் குதிப்பதற்கு பிள்ளைகளுக்கு ரொம்பப் பிடிக்கும்தான். ஆனால், அப்படிக் குதித்தால் காய்ச்சல், சளி, வயிற்றுப்போக்கு, எலிக் காய்ச்சல் என மழைக்கால தொற்றுநோய்கள் அத்தனையும் வந்துவிடலாம். 10 வயதுக்கு மேல் வளர்ந்த குழந்தைகள் என்றால், அவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி தேவையான அளவு உடலில் இருக்கும். அதுவரைக்கும் மழை நீரில் விளையாடுவதைத் தள்ளி வைப்பதுதான் நல்லது.

    பருவநிலை மாற்றத்தால் வருகிற காய்ச்சலைப் பொறுத்தவரைக்கும், அதிகமான வயிற்று வலி, அடிக்கடி வாந்தியெடுத்தல், கை, கால்கள் சில்லிட்டுப்போவது போன்ற அறிகுறிகள் குழந்தைகளிடம் இருந்தால், குடிப்பதற்கு நிறைய நீராகாரங்கள் கொடுங்கள். காய்ச்சல் இருந்தாலும் சின்னதாகவாவது விளையாடிக்கொண்டிருப்பதுதான் குழந்தைகளின் இயல்பு. அதற்கு மாறாக, சோர்ந்துபோய் படுத்துக்கொண்டே இருந்தாலும், தூங்கிக்கொண்டே இருந்தாலும் உடனடியாகக் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுவிடுங்கள்.

    • ஒரு வயதுக்குப் பிறகு குழந்தைக்கு பதப்படுத்தப்பட்ட பால் கொடுக்கலாம்.
    • குழந்தைக்கு செயற்கை பால் கொடுக்க வேண்டாம்.

    குழந்தைகள் பிறந்தது முதல் ஆறு மாத காலத்துக்கு வெறும் தாய்ப்பால் மட்டுமே போதுமானது. 6 முதல் 12 மாதக் குழந்தைகளுக்கு தாய்ப்பாலுடன் சேர்த்து பிற உணவுகளையும் பழக்க ஆரம்பிக்கலாம்.

    தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டிய பருவத்தில், ஒருவேளை தாய்க்கு போதிய அளவு பால் சுரப்பு இல்லாவிட்டால் மருத்துவரை ஆலோசித்தே முடிவு செய்ய வேண்டும். நீங்களாக குழந்தைக்கு செயற்கை பால் கொடுக்க ஆரம்பிக்க வேண்டாம்.

    ஒரு வயதுக்குப் பிறகு குழந்தைக்கு பதப்படுத்தப்பட்ட பால் கொடுக்க ஆரம்பிக்கலாம். 3 வயது வரையிலான குழந்தைகளுக்கு முழு கொழுப்புச்சத்துள்ள பால் கொடுக்கலாம்.

    பசும்பால் கொடுப்பதாக இருந்தால் குழந்தைக்கு ஒரு வயது முடிந்த பிறகுதான் தொடங்க வேண்டும். ஆவின் பால் கொடுப்பதாக இருந்தால் அதில் ஆரஞ்சு நிற பாக்கெட்டில் வரும் பால் குழந்தைகளுக்கு ஏற்றது. அதில் ஃபுல் க்ரீம் இருக்கும். அதில் தண்ணீர் சேர்க்க வேண்டிய அவசியமில்லை. அப்படியே காய்ச்சி ஆறவைத்துக் கொடுக்கலாம்.

    குழந்தைக்கு ஒரு நாளைக்கு 400 மில்லி அளவு வரை பால் கொடுக்கலாம். அந்த அளவைத் தாண்டும்போது குழந்தைக்கு மலச்சிக்கல் வர வாய்ப்புண்டு. இது 5 வயது வரையிலான குழந்தைகளுக்குப் பொருந்தும். அந்த வயதைத் தாண்டிய குழந்தைகளுக்கு ஆவினின் பச்சை நிற பாக்கெட் பால், அதன் பிறகு, நீல நிற பாக்கெட் என மாற்றலாம்.

    • தாய்ப்பால்தான் குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்வதற்கு அடிப்படையானது.
    • குழந்தையை தலைகீழாக பிடித்து ஆட்டுவார்கள்.

    பச்சிளம் குழந்தைகளைப் பராமரிப்பதில், மருத்துவர் ஆலோசனைப்படி நடப்பது இல்லை. அதற்கு பதிலாக, மற்றவர்கள் சொல்லும் அனுபவ வைத்தியத்தையும், மேலோட்டமான ஆலோசனைகளையும் பலர் பின்பற்றுகிறார்கள். முக்கியமாக, நாட்டு மருந்து மற்றும் பொதுவான மருந்துகளைத் தருகிறார்கள்.

    அவ்வாறு செய்யும்போதுதான் தவறு ஆரம்பிக்கிறது. தாய்ப்பால்தான் குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்வதற்கு அடிப்படையானது. அதிலும், முதல் இரண்டு நாட்கள் வருகிற பால்(Clostrum) நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக கொண்டு இருக்கும். எனவே, இதைத் தவறாமல் குழந்தைகளுக்குக் கொடுப்பது நல்லது. 6 மாதங்கள் வரை தாய்ப்பால் அவசியம் புகட்ட வேண்டும்.

    சில வீடுகளில் குழந்தையை நன்றாக பார்த்துக்கொள்கிறேன் என்ற பெயரில், குளிக்க வைத்த பிறகு, வாயோடு வாயாக வைத்து ஊதுவார்கள். பால் எடுக்கிறோம் என்ற பெயரில், நெஞ்சை அழுத்துவார்கள். மூக்கில் எண்ணெய் விடுவார்கள். குழந்தையை தலைகீழாக பிடித்து ஆட்டுவார்கள். இவை எல்லாம் தவறான வழிமுறைகள். எனவே, இவற்றை மறந்தும் செய்யக் கூடாது.

    பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பில், இளம் தாய்மார்களின் உடல்நலம் முக்கிய பங்கு வகிக்கிறது. இவர்கள் தண்ணீர் குடிப்பதைக் குறைத்து விடுவார்கள். பத்திய சாப்பாடு சாப்பிடுவார்கள். பால் புகட்ட வேண்டும் என்பதற்காக, சரியாக தூங்க மாட்டார்கள். இளம் தாய்மார்கள் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.

    சத்தான உணவுவகைகளை நிறைய சாப்பிட வேண்டும். பத்திய சாப்பாடு என்ற பெயரில் களி சாப்பிடக் கூடாது. சரியான தூக்கம் இல்லாத காரணத்தால் அடிக்கடி எரிச்சல் படுவார்கள். தூக்கம் இன்மையால் வரும் இடையூறுகளுக்கு மருத்துவரிடம் ஆலோசனை கேட்டுக்கொள்ளலாம்.

    பச்சிளம் குழந்தை பராமரிப்பு வாரம் கடைப்பிடிக்கப்படுகிற இந்த நிலையில், இது எல்லாக் குழந்தைகளையும் சென்றடைய வேண்டும். பெரியவர்கள், குழந்தைகளுக்கு ஏற்படுகிற பாதிப்புகள் பற்றி பலவிதமான ஆலோசனைகள் கூறுவார்கள்.

    ஆனால், டாக்டரிடம் குழந்தையைக் காண்பித்து, அந்தப் பாதிப்பைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு வயது வரை தேவையில்லாத மருந்துகளைத் தவிர்க்க வேண்டும். தடுப்பூசிகளைத்தவறாமல் போட வேண்டும்.

    • கைக்குழந்தையைப் பொறுத்தவரை ‘அழுகை’ என்பது ஒரு மொழி.
    • குழந்தை தினமும் மொத்தத்தில் சுமார் ஒரு மணி நேரம் அழுவது இயல்பு.

    குழந்தைச் செல்வத்தின் இன்பத்தை எடுத்துக் கூறியுள்ளார். அதே குழந்தைகள் அழத் தொடங்கினால் நம் மனது மிகவும் துன்பப்படும். எப்பேற்பாடுபட்டாவது அழுகையை நிறுத்த முயற்சிப்போம். பல நேரங்களில் தோல்விதான் மிஞ்சும்.

    ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தை அதிகமாக அழும்போது, அது எதற்காக அழுகிறது, என்ன செய்தால் அழுகை நிற்கும் எனத் தெரியாமல் திகைக்கிற தாய்மார்தான் அதிகம். கைக்குழந்தையைப் பொறுத்தவரை 'அழுகை' என்பது ஒரு மொழி. தாயின் கவனத்தைத் தன் மீது ஈர்ப்பதற்குப் பயன்படுத்தும் எளிய வழி. பசி, தாகம், தனிமை, களைப்பு போன்ற சாதாரணக் காரணங்களால் குழந்தை தினமும் மொத்தத்தில் சுமார் ஒரு மணி நேரம் அழுவது இயல்பு. இந்தக் கால அளவு அதிகரித்தால் அல்லது குழந்தை தொடர்ந்து அழுகிறது என்றால், அதைக் கவனிக்க வேண்டும்.

    குழந்தை பசிக்காகத்தான் அழுகிறது என்பது பல தாய்மாரின் முதன்மைக் கணிப்பு. இது பெரும்பாலும் உண்மைதான் என்றாலும், பசியையும் தாண்டிப் பல காரணங்களால் குழந்தை அழக்கூடும். குழந்தை பசிக்காகத்தான் அழுகிறதா என்பதை உறுதிசெய்ய, தாயானவர் தன் விரலை நன்றாகச் சுத்தப்படுத்திக் கொண்டு, குழந்தையின் வாய்க்குள் வைத்தால், உடனே குழந்தை விரலைச் சப்பத் தொடங்கிவிடும். இதன் மூலம் குழந்தை பசியால் அழுகிறது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். பொதுவாக, குழந்தை போதிய அளவு பால் குடித்த பின்னர், இரண்டு மணி நேரத்துக்குள் அழுதால், அது நிச்சயம் பசிக்காக இருக்காது. வேறு காரணத்தால் அது அழக்கூடும்.

    பசிக்கு அடுத்தபடியாகத் தாகம் எடுத்தால் குழந்தை அழும். உதாரணமாக, திட உணவு சாப்பிடும் குழந்தைக்குச் சில தாய்மார் உணவைக் கெட்டியாகப் பிசைந்து கொடுத்துவிடுவார்கள். இதனால் உணவு விக்கிக்கொள்ளும். குழந்தைக்குத் தாகம் எடுக்கும். இதனால் சாப்பிட்ட பிறகு குழந்தை அழும். அப்போது கொஞ்சம் தண்ணீரைக் கொடுத்தால், குழந்தையின் அழுகை நின்றுவிடும். பால் குடித்த பிறகு சிறுநீர் கழிப்பது, மலம் கழிப்பது போன்றவற்றால் உள்ளாடை, படுக்கை போன்றவை ஈரமாகி விடும்போது, அதைத் தெரியப்படுத்தவும் குழந்தை அழும். குழந்தை இரவில் அழுவதற்குப் பெரும்பாலும், இதுதான் காரணமாக இருக்கும். ஈரமான துணியை மாற்றிவிட்டால் அழுகை நிற்கும்.

    அதிகக் கனமான ஆடைகள், இறுக்கமான ஆடைகள், உறுத்துகிற ஆடைகள் மற்றும் கால் கொலுசு, கழுத்து செயின், இடுப்பு ஆபரணங்கள் ஆகியவற்றாலும் குழந்தை அடிக்கடி அழலாம். `டயபர்' என்பது அவசரத் தேவைக்கு என்பது போய், இப்போது எந்த நேரமும் அணிவிக்கப்படும் ஓர் உள்ளாடையாக அது மாறிவிட்டது. இதனால் ஒவ்வாமை ஏற்பட்டு, குழந்தைக்கு அரிப்பும் தடிப்பும் உண்டாகின்றன. இதன் காரணமாகவும் குழந்தைகள் அடிக்கடி அழுவதுண்டு.

    தன்னுடைய உடலில் ஏதேனும் புதிதாக ஊர்வது போல் உணர்ந்தால், அப்போது குழந்தை அழலாம். எறும்பு, கொசு, பூச்சி, பேன் கடித்தாலோ, சருமம் அரித்தாலோ குழந்தை அழும்.

    குழந்தைக்கு வயிற்று வலியும் காது வலியும் ஏற்படுவது மிகவும் சகஜம். குழந்தை தன்னுடைய தொடையை வயிற்றில் மடித்து வைத்துக்கொண்டு அழுதால், அதற்கு வயிற்றில் வலி இருக்கிறது என்று புரிந்துகொள்ளலாம். குழந்தைக்கு அளவுக்கு அதிகமாகப் பால் அல்லது திட உணவைக் கொடுத்துவிட்டால், வயிறு உப்பி அழ ஆரம்பிக்கும். இதுபோல் உணவுடன் அதிகக் காற்று வயிற்றுக்குள் சென்றுவிட்டாலும், குழந்தை அழும். தாய்ப்பால் கொடுத்து முடித்தவுடன், ஒவ்வொரு முறையும் குழந்தையைத் தூக்கித் தோளில் போட்டுக்கொண்டு அதன் முதுகைத் தட்டிக் கொடுக்க வேண்டும். இதனால் குழந்தையின் வயிறு தாயின் தோளில் அழுந்திக் காற்று வெளியேறிவிடும். குழந்தையும் அழுவதை நிறுத்திவிடும்.

    சளி, மூக்கு ஒழுகல், மூக்கு அடைப்பு, காய்ச்சல், தலைவலி, உடல் வலி, இளைப்பு, நெஞ்சில் வலி, சிறுநீர்க் கடுப்பு, மலச் சிக்கல், வாந்தி போன்ற காரணங்களாலும் குழந்தை அழக்கூடும்.

    குழந்தையின் உடலை மெல்லிய துணி கொண்டு சுற்றுவதால் குழந்தைகளின் அழும் நேரம் குறைக்கிறது என்று ஆய்வுகள் நிரூபித்துள்ளன. அதெற்கென ப்ரத்யேகமாக துணிகள் கடைகளில் கிடைக்கின்றன வாங்கி பயன்படுத்துங்கள். இது உங்கள் குழந்தையின் அழுகையை தடுத்து ஆறுதலையும் பாதுகாப்பையும் அளிக்கிறது. அதே நேரம் தலை மற்றும் முகம் மூடிவிடாமல் பார்த்து கொள்ளவும், இது குழந்தை எளிதாக சுவாசிக்க உதவும். உங்கள் குழந்தையின் கைகளை வெளியில் விட்டும் சுற்றலாம். குழந்தை வயிற்றினால் படுக்க அல்லது தவழ முயற்சிக்கும் காலங்களில் இம்முறையை நிறுத்தி விட வேண்டும்.

    குழந்தையின் அழுகையை நிறுத்துவதற்கு விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்ட முறைதான் மேலும் கீழும் (ராக்) உங்கள் குழந்தையை அசைத்தல். அதற்கு குழந்தையை பாதுகாப்பாக உங்கள் கைகளில் பிடித்து மெதுவாக ராக் செய்யவும். இம்முறையால் அழும் குழந்தை பாதுகாப்பாக உணர்கிறது. அதுமட்டுமல்லாமல் பின்வரும் காலங்களில் இது குழந்தை மனஉறுதியுடன் வளர்வதற்கு உதவுகிறது.

    வயிறு பிரச்சினை உங்கள் குழந்தை தொடர்ந்து அழ வைக்கும் ஒரு முக்கிய காரணி. ஏப்பத்தின் மூலமாக வயிற்றில் உள்ள காற்றை வெளியேற்றுவதன் மூலம் குழந்தையின் அழுகையை நிறுத்தலாம். அதற்கு உங்கள் குழந்தை கிடத்தி சைக்கிள் ஓட்டுவது போல் கால்களை அசைப்பதன் மூலம் வயிற்றில் உள்ள காற்றை வெளியேற்றலாம்.

    • தாமதமாகத் தூங்கி தாமதமாக எழும் குழந்தைகளுக்கு சுறுசுறுப்பு மிகவும் குறைவாகவே இருக்கும்.
    • சீக்கிரம் படுத்துத் தூங்கும் குழந்தைகளுக்கு அறிவுக் கூர்மையும் அதிகம் இருக்கும்.

    தூக்கத்திற்கும், மனித உடல்நலத்திற்கும் உள்ள தொடர்பை ஆராய்ந்த தெற்கு ஆஸ்திரேலிய பல்கலைக்கழகம், குழந்தைகளை இரவில் சீக்கிரமே தூங்க வைத்தால் அவர்கள் உடல் பருமனற்றும், சுலபமாக வேலை செய்பவர்களாகவும் இருப்பார்கள் எனக் கண்டறிந்துள்ளது.

    9 வயது முதல் 16 வயதுக்கு உட்பட்ட 2,200 குழந்தைகளை ஆய்வுக்கு உட்படுத்தி, தூங்கும் நேரம், உடற்பயிற்சி, வேலையின் அளவு ஆகியவற்றை கணக்கில் எடுத்துக்கொண்டு ஆய்வு செய்தனர். அதன்படி, இரவில் காலதாமதமாகத் தூங்கி காலையில் மிகவும் தாமதமாக எழுந்திருக்கும் குழந்தைகளை விட, இரவில் சீக்கிரம் தூங்கி காலையில் சீக்கிரமாக எழுந்திருக்கும் குழந்தைகளின் பருமன் அல்லது எடை ஒன்றரை மடங்கு குறைவாக உள்ளதாம்.

    ''சீக்கிரம் படுத்துத் தூங்கும் குழந்தைகளுக்கு அறிவுக் கூர்மையும் அதிகம் இருக்கும்'' என்கிறார் இந்த ஆய்வை தலைமையேற்று நடத்திய கரோல் மகேர். மேலும், ''தாமதமாகத் தூங்கி தாமதமாக எழும் குழந்தைகளுக்கு சுறுசுறுப்பு மிகவும் குறைவாகவே இருக்கும். இது போன்ற குழந்தைகள் மற்ற குழந்தைகளை விட, மூன்று மடங்கு அதிகமாக டி.வி பார்ப்பதிலும், கம்ப்யூட்டரில் ஈடுபாடு கொள்வதிலும் நேரத்தை செலவழிப்பார்கள்'' என்கிறார் டாக்டர் கரோல்.

    'பின் தூங்கி முன் எழுவது' என்பது இலக்கியத்தில் மட்டுமே இருக்கட்டும். 'முன் தூங்கி முன் எழுவதே' உடலுக்கு நல்லது என்கிறது அறிவியல்!

    • முதலில் தேர்வுக்கான பாடத்திட்டத்தை (Syllabus) பொறுமையாக, அமைதியாக படியுங்கள்.
    • முந்தைய ஆண்டு வினாத்தாள்களை படியுங்கள்.

    மத்திய அரசின் பல்வேறு துறைகளிலுள்ள குரூப்-பி மற்றும் குரூப்-சி பணிக்காலி இடங்களை நிரப்புவதற்காக ஒருங்கிணைந்த பட்டதாரி நிலையிலான தேர்வுக்கான (Combined Graduate Level Exam) அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. காலி இடங்களின் எண்ணிக்கை சுமார் 20 ஆயிரம் ஆகும். இந்த தேர்வுகளை ஸ்டாப் செலக்சன் கமிஷன்- எஸ்.எஸ்.சி (Staff Selection Commission-S.S.C) நடத்தி வருகிறது.

    இந்த தேர்வு குறித்த தகவல்கள் கடந்த வாரங்களில் வெளியானது. இந்த வாரம் இந்த தேர்வுக்கான பாடத்திட்டங்கள் குறித்தும், எவ்வாறு தேர்வுக்கு தயாராக வேண்டும் என்பது குறித்தும் காண்போம்.

    தேர்வுக்கு தயார் செய்யும் முறை

    முதலில் தேர்வுக்கான பாடத்திட்டத்தை (Syllabus) பொறுமையாக, அமைதியாக படியுங்கள். பின்பு அதை ஒரு தனித்தாளில், பாடவாரியாக (கணிதம், ஆங்கிலம், புத்திக்கூர்மை, பொது அறிவு) எழுதுங்கள். பின்பு மீண்டும் அதை வாசித்துப் பாருங்கள். முந்தைய ஆண்டு வினாத்தாள்களை படியுங்கள். எப்படி படிப்பது, எதிலிருந்து ஆரம்பிப்பது, எந்தப் பகுதிக்கு விடையளிப்பது, எது கடினமாக உள்ளது என்பது குறித்து ஒரு தெளிவு கிடைக்கும்.

    பொது அறிவுப்பகுதி, புத்திக்கூர்மைத் திறன் மற்றும் ஆங்கிலம் ஆகிய பகுதிகளில் இடம்பெறும் வினாக்கள் பட்டப்படிப்பு கல்வித் தரத்தில் அமையும். கணிதப்பகுதி மட்டும் பத்தாம் வகுப்பு கல்வித்தரத்தில் அமையும். பொது அறிவுப் பகுதியில் வரலாறு, புவியியல், இந்திய கலாச்சாரம், பொருளாதாரம், அறிவியல், இந்திய அரசியலமைப்பு மற்றும் நடப்பு நிகழ்வுகள் ஆகிய பகுதிகளிலிருந்து வினாக்கள் அமையும்.

    ஜெனரல் இன்டலிஜன்ஸ் (General Intelligence)

    அனைத்து திறனறி தேர்வுகளிலும் இப்பகுதி இடம்பெறுகிறது. இதில் Verbal Reasoning மற்றும் Non Verbal Reasoning என இரு பகுதி களாக வினாக்கள் அமைகின்றன. Non- Verbal Reasoning பகுதியில் படங்கள் (Diagrams மற்றும் Figures) இடம் பெறுகின்றன. இந்த படங்கள் ஒரு குறிப்பிட்ட தொடர்பில் அமைக்கப்படுகின்றன. இந்த தொடர்பைக் கண்டறிந்து, அதன் விடையை தேர்வு செய்வதில் நமது திறனைப் பயன் படுத்த வேண்டும். இத்தேர் வின் நோக்கம் விண்ணப்பதாரரின் ஆராய்ந்தறியும் திறனைக் கண்டறிதலே ஆகும்.

    இப்பகுதியில் வினாக்கள் மூன்று பிரிவுகளில் அமைகிறது.

    1) Series, 2) Analogy, 3) Classification

    ஒவ்வொரு பிரிவிலும் எப்படியெல்லாம் வினாக்கள் அமைக்கப்படுகின்றன என்பதை பயிற்சியின் மூலம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். தொடர் பயிற்சியின் மூலம், வேகமாக சிந்திக்கும் திறன், கொடுக்கப்பட்ட வினாவில் உள்ள படங்களுக்கு இடையே உள்ள தொடர்பு (Correlation) மற்றும் வேறுபாடு ஆகியவற்றை கண்டறியும் நுட்பம், அறிவுத்திறன் (Mental Ability) ஆகியவை மேம்படுவதுடன், இவ்வினாக்களைத் தீர்வு செய்ய தனி யுக்தியையும் வகுத்துக் கொள்ளலாம்.

    Verbal Reasoning பகுதியில் படங்களுக்குப் பதிலாக எண் தொடர்கள், ஆங்கில எழுத்துக்களைப் பயன்படுத்தி அமைக்கப்பட்ட தொடர்கள் Coding, Decoding ஆகிய பிரிவுகளில் வினாக்கள் அமைகிறது. இந்த வகை வினாக்கள் எத்தனை வகைகளில் (Pattern) அமைகிறது என்பதை அறிந்து அதைத் தீர்வு செய்ய பழகிய பின்பு, குறைந்த நேரத்தில் தீர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் இப்பகுதியில் நேர நிர்வாகம் மிக முக்கியம்.

    இப்பகுதிக்கு இதர மூன்று பகுதி களைப் போல் மனப்பாடம் செய்ய வேண்டியதில்லை. LOGIC-ஐ புரிந்து கொண்டாலே போதும். அதிக நேரம் பயிற்சி செய்வது நல்ல பலனைத் தரும். Analogy, Ranking, Sitting Arrangements, Blood relations, Directions, Series Problems போன்ற பகுதிகளை முதலில் முடித்து விட வேண்டும். Syllogism, Statement and Conclusion, Coding and Decoding போன்ற பகுதிகளுக்கு Analytical Reasoning தொடர்பான புத்தகங்களைப் படிக்கலாம். அதிக அளவில் இவ்வினாக்களை பயிற்சி செய்யும்போது உங்களுக்கே ஒரு தெளிவு கிடைக்கும்.

    லாஜிக்கல் ரீசனிங் (Logical Reasoning)

    பெறப்பட்ட தகவல்கள் மற்றும் அறிந்த தகவல் களைக் கொண்டு சரியாக யூகிப்பது அல்லது முடிவுகளை எடுப்பதை 'ரீசனிங்' என விளக்கலாம். அறி வியல் பூர்வமான சரியான காரணம் அறிதலே 'லாஜிக்' எனப்படுகிறது. பொதுவாக தர்க்க ரீதியாக சிந்திக்கும் திறன் புத்திசாலித்தனத்தின் அடையாளமாகவே கருதப்படுகிறது.

    நமது அன்றாட வாழ்வில் பல்வேறு செயல்களில் நம்மை அறியாமலேயே லாஜிக்கை (Logic) பயன்படுத்துகிறோம். ஆனால் பயன்படுத்தும் திறன் ஒருவருக்கொருவர் வேறுபடுகிறது.

    Logical Reasoning வகை வினாக்களில் இரண்டு அல்லது மூன்று கூற்றுகள் (Statement), புள்ளி விவரம், நிகழ்வுகள் மற்றும் சம்பவங்களின் அடிப்படையில் அளிக்கப்படும். இந்த கூற்றுகளின் (Premises) அடிப்படையில் இரண்டு அல்லது மூன்று முடிவுகளும் (Conclusion) இருக்கும். இவற்றில் எவை சரியானது, எவை தவறானது, அனைத்தும் சரியா அல்லது அனைத்தும் தவறா என்பதை விடையாகக் குறிக்க வேண்டும். கீழே உள்ள உதாரணத்தைப் பாருங்கள்.

    கூற்று: ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஒரு அணி 200 ரன்களை எடுத்தது. இதில் 160 ரன்களை எடுத்தவர்கள் அந்த அணியின் சுழல்பந்து வீச்சாளர்கள்.

    முடிவு: 1) அந்த அணியில் 80 சதவீதம் வீரர்கள் சுழற்பந்து வீச்சாளர்கள். 2) இந்த போட்டியில் துவக்க நிலை ஆட்டக்காரர்கள் சுழற்பந்து வீச்சாளர்கள்.

    இப்போது கீழே கொடுக்கப்பட்டவற்றில் இருந்து விடையைத் தேர்வு செய்யவும்.

    A. முடிவு 1 மட்டும் சரி, B. முடிவு 2 மட்டும் சரி, C. முடிவு 1 அல்லது 2 சரி, D. முடிவு 1 மற்றும் 2 தவறு, E. இரண்டும் சரி

    முதல் முடிவை ஆய்வு செய்வோம். அந்த அணியில் 80 சதவிகிதம் சுழற்பந்து வீசுபவர்கள் என்ற விவரம் கூற்றில் எங்கும் கொடுக்கப்படவில்லை. அதேபோல் 160 ரன்கள் சுழற்பந்து வீசுபவர்கள் எடுத்தார்கள் என்பதற்காக அவர்கள் துவக்கநிலை ஆட்டக்காரர்களாக இருந்திருக்கலாம் எனக் கூற முடியாது. எனவே இதற்கான விடை D ஆகும்.

    கூடுதல் மாதிரி வினாக்களை அடுத்த வாரம் பார்க்கலாம். அது உங்களை நீங்களே சோதித்துக் கொள்ள வழிவகுக்கும்.

    எம்.கருணாகரன்,

    துணை இயக்குநர் (வேலைவாய்ப்பு), கோவை.

    • தொலைக்காட்சி பெட்டியை அதன் எடைக்கேற்ற ஸ்டாண்டில் வையுங்கள்.
    • பெரும்பாலான பள்ளிகளில் குழந்தைகள் சாப்பிடும்போது கண்காணிக்க ஆட்கள் இருப்பதில்லை.

    பெரிய டேபிள் போட்டு அதன் மீது அலங்காரத் துணியை விரித்து, தொலைக்காட்சிப் பெட்டியை வைத்திருப்போம். குழந்தை அந்த துணியை இழுத்து, இழுத்து விளையாடி ஒரு கட்டத்தில் தொலைக்காட்சிப் பெட்டி நழுவி விழக்கூடும். சென்னையில் இப்படி தொலைக்காட்சி பெட்டி விழுந்து குழந்தை இறந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

    அதேபோல் தொலைக்காட்சி பெட்டியை அதன் எடைக்கேற்ற ஸ்டாண்டில் வையுங்கள். எடை குறைந்த, சக்கரங்கள் கொண்ட டீப்பாயில் தொலைக்காட்சி பெட்டியை வைக்க வேண்டாம். வாஷிங்மிஷின் எந்திரத்தை திறந்து வைக்காதீர்கள். எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்க்கும் இயல்புகொண்டது குழந்தை. எனவே உள்ளே இறங்கி கதவை மூடிக்கொள்ளும் வாய்ப்பு அதிகம்.

    டேபிள் பேனின் சுழற்சி குழந்தைகளை வசீகரிக்கும் இன்னொரு ஆபத்து. சுழலும் விசிறிகளுக்கு இடையே கையை நுழைக்க வேண்டும் என நினைக்க வாய்ப்பிருக்கிறது. எனவே நெருக்கமான கம்பித்தடுப்புகள் இருக்கும் டேபிள் பேன்களையே வாங்குங்கள். அப்படியே வாங்கினாலும், அதைத்தொட்டு விளையாட குழந்தைகளை அனுமதிக்காதீர்கள். டேபிள் பேனை போலவே எரியும் சுடர் விளக்கும் குழந்தைகளின் ஆவலைத் தூண்டக்கூடிய ஒன்று. இந்த வசீகரம் குழந்தையை எந்த அளவுக்கு பாதிக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. எனவே சுடர் விளக்கு, எரியும் மெழுகுவத்தி ஆகியவற்றை குழந்தையின் கைக்கு எட்டாத உயரத்தில் வையுங்கள்.

    குழந்தைகளின் பள்ளி உணவு டப்பாக்களில் விக்கிக்கொள்ளும் அளவுக்கோ, தொண்டையில் சிக்கிக் கொள்ளும் அளவுக்கோ கடினமான, பெரிய அளவிலான உணவு பொருட்களை கொடுப்பதைத் தவிருங்கள். குறிப்பாக, பெரிய இறைச்சி அல்லது எலும்புத்துண்டுகளை கொடுத்து அனுப்ப வேண்டாம். பெரும்பாலான பள்ளிகளில் குழந்தைகள் சாப்பிடும்போது கண்காணிக்க ஆட்கள் இருப்பதில்லை. குழந்தைகள் தூங்கும்போதோ அல்லது வீட்டில் இல்லாதபோதோ இஸ்திரி போடுவது, மின்சாதனங்கள் பழுது பார்ப்பது, ஆசிட் ஊற்றிக் கழிப்பறையை கழுவுவது, வெள்ளையடிப்பது போன்ற பணிகளை செய்வது நல்லது.

    • அவசர உலகில் பாக்கெட் உணவுகளை பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது.
    • சில வகை ‘ஜங்’ உணவுகளை உட்கொள்வதால் குழந்தைகளின் அறிவு மழுங்குகிறது.

    'ஜங் புட்' பற்றியும், அவை குழந்தைகளுக்கு உண்டாக்கும் தீமைகள் பற்றியும் தெரிந்து கொள்வோமா..!

    * 'ஜங் புட்' எவை?

    உடல் இயக்கத்திற்கான மூன்று வேளை உணவு போக, கூடுதலாக உட்கொள்ளும் உணவுகளும், ஸ்நாக்ஸ் எனப்படும் தின்பண்டங்களும் 'ஜங் புட்' பட்டியலில்தான் வருகிறது. குறிப்பாக ஆவியில் வேகவைத்தது தவிர, எண்ணெய்யில் பொரிப்பது, டின்களில் அடைத்து வைத்திருப்பது, பாக்கெட் உணவுகள், இனிப்பு சாக்லெட்டுகள் இவற்றுடன் அவசர கதியில் சமைக்கும் உணவுகள் போன்றவை எல்லாம் 'ஜங் புட்' உணவில்தான் வருகிறது. குறிப்பாக நூடுல்ஸ், பீட்சா, பிரைடு ரைஸ், நொடி பொழுதில் தயாராகும் அசைவ உணவுகள், சிப்ஸ் உணவுகள்... எல்லாம் ஜங் புட் ரகம்தான்.

    * ஜங் புட் உண்டாக்கும் விளைவுகள்

    'ஜங் புட்' களை அதிகம் உட்கொள்வதால், மூளையில் வேதியியல் மாற்றம் ஏற்பட்டு மன அழுத்தம், பதற்றம், உடற்பருமன் போன்றவை ஏற்படுகிறதாம். இந்த வகை உணவுகள் கொழுப்புச்சத்து அதிகம் கொண்டவை. குழந்தைகளுக்கு கற்றல் குறைபாடு, மறதி, விழிப்பு நிலை குறைபாடு, புலன் உணர்வு செயல்பாட்டில் மந்தம் ஆகியவையும் ஏற்படுகின்றன. குறிப்பாக உடற்பருமனில் தொடங்கி, எல்லா வகையான வியாதிகளுக்கு வழிவகை செய்கின்றன.

    சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், சில வகை 'ஜங்' உணவுகளை உட்கொள்வதால் குழந்தைகளின் அறிவு மழுங்குகிறது எனவும், மறதி அதிகரிக்கிறது எனவும் தெரிய வந்துள்ளது. இனிப்பு பதார்த்தங்கள், பல வியாதிகளை உடலுக்கு கொண்டு வருகின்றன. இனிப்பை தொடர்ந்து அதிகமாக எடுத்துக் கொள்பவர்களுக்கு, நரம்பியல் கோளாறுகளும் ஏற்படுகிறது. அதனால் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட பண்டங்கள், இனிப்புகள், செயற்கை ஜூஸ் வகைகளையும் தவிர்ப்பது நலம்.

    * பாக்கெட் உணவுகள்

    வறுத்த உணவு வகைகளில் சுவைக்காக செயற்கை பொருட்கள், ரசாயனம், உணவுக்கு நிறமேற்ற சாயப் பொருட்கள் ஆகியவை சேர்க்கப்படுகின்றன. இதனால் குழந்தைகள், பெரியவர்களுக்கு பழக்க வழக்கத்தில் மாற்றம் ஏற்படுகிறது. வறுப்பதற்காக பயன்படுத்தப்படும் சில எண்ணெய் வகைகள் நச்சுத்தன்மை வாய்ந்தவை.

    அதேபோல பதப்படுத்தப்பட்ட உணவுகள், ஏற்கனவே சமைக்கப்பட்டு பாக்கெட்டுகளில் அடைக்கப்படுகின்றன. வறுத்த உணவுகளால் ஏற்படும் அனைத்து பாதிப்புகளும் இந்த மாதிரியான பாக்கெட் உணவுகளிலும் ஏற்படுகின்றன. இந்த வகை உணவுகள் உடலின் நரம்பு மண்டலத்தை பாதிக்கின்றன. இதனால் அல்சீமர்ஸ் போன்ற மறதி நோய்களும் ஏற்பட வாய்ப்புள்ளது.

    அவசர உலகில் பாக்கெட் உணவுகளை பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. இதனை தவிர்த்து ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டும்.

    மூன்று வேளை உணவு போக, கூடுதலாக உட்கொள்ளும் உணவுகளும், ஸ்நாக்ஸ் எனப்படும் தின்பண்டங்களும் 'ஜங் புட்' பட்டியலில்தான் வருகிறது.

    • மனஅழுத்தத்தை ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்துவார்கள்.
    • சில குழந்தைகள் எப்போதும் கவலையோடு காணப்படுவார்கள்.

    குழந்தைகளின் மன அழுத்தத்தை அதிகமாக்கும் காரணங்கள் பலப்பல. தங்களுக்கு ஏற்பட்ட மனஅழுத்தத்தை ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்துவார்கள். சில குழந்தைகள் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு யாருடனும் பேசாமல் உம்மென்று இருப்பார்கள். சில குழந்தைகள் தங்கள் மன அழுத்தத்தைக் கோபமாகவும், ஆத்திரமாகவும் வெளிக்காட்டுவார்கள். சில குழந்தைகள் எப்போதும் கவலையோடு காணப்படுவார்கள். இதற்கெல்லாம் காரணங்கள் இருக்கலாம் என்று குழந்தை மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர். அவையாவன:

    * குடும்பத்தில் தொடர்ந்து நடைபெறும் குழப்பங்கள், வாக்குவாதங்கள்.

    * பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுடன் குழந்தைக்கு உறவில் ஏற்படும் விரிசல்.

    * நட்பில் உண்டாகும் மனவருத்தம்

    * குடும்பங்கள் பிரிந்து விடுதல்

    * மிக நெருக்கமானவர்களின் பிரிவு அல்லது செல்லப்பிராணிகளின் இறப்பு

    * பெரிதாக ஏற்படும் இழப்புக்கள் , அல்லது அதிர்ச்சி ஏற்படுத்திய நிகழ்ச்சிகள்

    * அடிக்கடி ஏற்படும் உடல்நோய்கள், தொற்றுநோய்கள்

    * குழந்தைகளை மற்றவர்கள் தவறாகப் பயன்படுத்துதல்

    * மற்ற குழந்தைகளின் முரட்டுத்தனம், பிடிவாதம்

    * பள்ளியில் அல்லது வெளிவட்டாரத்தில் தொடர்ந்து ஏற்படும் தோல்விகள்

    * பெற்றோரைப் பாதிக்கும் மனஉணர்வுகள் சில நேரங்களில் குழந்தையையும் பாதிக்கும்

    * உட்கொண்ட மருந்துகளினால் ஏற்படும் பக்க விளைவுகள்.

    இது போன்ற காரணங்களினால் குழந்தைகள் மனஅழுத்த நோய்க்கு ஆளாகி அவதிப்படுவார்கள். சில குழந்தைகளுக்கு இது பரம்பரையாகவும் வரலாம். அத்தகைய குழந்தைகள் மேலே காட்டப்பட்ட காரணங்களுள் ஏதேனும் ஒன்று ஏற்பட்டால் கூட அதை ஏற்றுக் கொள்ளவோ அல்லது சமாளிக்கவோ முடியாமல் அதிகம் திணறிப் போய்விடுவார்கள். வெகுவிரைவில் மனஅழுத்த நோய்க்கும் ஆளாகி விடுவார்கள்.

    • என்னால் முடியும் என்ற நம்பிக்கையுடன் இன்றே தேர்வுக்கான பயிற்சியை தொடங்குங்கள்.
    • இந்த தேர்வுக்கு அரசு சார்பில் அளிக்கப்படும் இலவச பயிற்சிகள் குறித்து காண்போம்.

    ஸ்டாப் செலக்சன் கமிஷன் - எஸ்.எஸ்.சி (Staff Selection Commission-S.S.C) என்ற அமைப்பு, மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப போட்டித்தேர்வுகளை நடத்தி வருகிறது. தற்போது 20 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக ஒருங்கிணைந்த பட்டதாரி நிலையிலான தேர்வுக்கான (Combined Graduate Level Exam) அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    இந்த தேர்வு நடைபெறும் விதம் குறித்த தகவல்கள் கடந்த வாரம் வெளியானது. இந்த வாரம் இந்த தேர்வுக்கு அரசு சார்பில் அளிக்கப்படும் இலவச பயிற்சிகள் குறித்து காண்போம்.

    மனத்தடையை அகற்றுங்கள்

    எஸ்.எஸ்.சி தேர்வுகள் கடினமானவை, ஆங்கிலப் பகுதிக்கு விடையளிப்பது என்னால் முடியாது, ஆங்கிலம் தெரியாது, கணிதம் எனக்கு வராது, ரீசனிங் (Reasoning) பகுதி எனக்குப் புரியாது.... போன்றவை இந்த தேர்வு எழுதாமைக்கு மாணவர்கள் சொல்லும் காரணங்கள்.

    பொதுவாக நமது மாணவர்கள், "எனக்கு கணக்கு வராது, ஆங்கிலம் புரியாது என தனக்குத்தானே மனத்தடைகளை (Mental Barriers) ஏற்படுத்திக் கொள்கிறார்கள். சிறு வயதில் அவ்வப்போது நாம் சந்தித்த சில தோல்வி களின் காரணமாக நமக்கு நாமே தடைகளையும், தவறான எண்ணங்களையும் உருவாக்கிக் கொண்டு அதை முழுமையாக நம்பி விடுகிறோம்.

    இதனால் கணக்கு பாடத்தை கண்டாலே வெறுப்பு வருவதுடன், அதில் தங்களால் நல்ல மதிப்பெண்கள் பெற முடியாது, தனக்கு அந்தப்பாடம் ஒத்துவராது என்ற எண்ணம் வந்துவிடுகிறது. இதனால் முயற்சியை கைவிடுகின்றனர். ஆனால் பயிற்சியின் மூலம் இந்த மனநிலையை மாற்ற முடியும்.

    1954-க்கு முன்பு வரை ஒரு மைல் தூரத்தை நான்கு நிமிடங்களுக்குள் ஓடிக் கடப்பது மனித சக்திக்கு அப்பாற்பட்டதாகவே தடகள வீரர்களால் நம்பப்பட்டு வந்தது. ஆனால் 1954-ம் ஆண்டு மே மாதம் இங்கிலாந்தைச் சேர்ந்த ரோஜர் பெனிஸ்டர் ஒரு மைல் தூரத்தை 3 நிமிடங்கள் 59.4 விநாடிகளில் கடந்து சாதனை படைத்தார். இதுபோல ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டியிலும் புதிய சாதனைகள் நிகழ்த்தப்படுகின்றன. முடியும் என்ற நம்பிக்கையும், கவனக்குவிப்புமே, தடைகளைத் தாண்டி வெற்றி பெற வழி வகுக்கிறது.

    எனவே, என்னால் முடியும் என்ற நம்பிக்கையுடன் இன்றே தேர்வுக்கான பயிற்சியை தொடங்குங்கள். உங்களுக்கான பயிற்சிகளை நீங்கள் வீட்டில் இருந்தபடி அல்லது வேலை செய்துகொண்டு மற்ற நேரங்களில் எடுத்துக்கொள்ள முடியும். இந்த பயிற்சிகளை தமிழக அரசு இலவசமாக அளிக்கிறது. அதுதொடர்பான விவரங்கள் வருமாறு:-

    மெய்நிகர் கற்றல் வலைத்தளம்

    தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையானது அரசு போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ளும் இளைஞர்களுக்கு உதவும் நோக்கில் இணைய வழியிலான மெய்நிகர் கற்றல் வலைத்தளத்தை (Virtual Learning Portal) செயல்படுத்தி வருகிறது. கிராமப்புற மாணவர்கள் உள்பட அனைத்துப் போட்டியாளர்களும் பயனடையும் வகையில் தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் மெய்நிகர் கற்றல் (Virtual Learning) என்ற இணையதளம் துவங்கப்பட்டுள்ளது.

    இது TNPSC (Group I, Group II, Group IV and Group VIIB/VIII) TNUSRPB, UPSC, SSC, Airforce, IBPS, RRB போன்ற பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கான மென்பாடக்குறிப்புகளை கொண்டுள்ளது.

    ஒருங்கிணைந்த இணைய வழியிலான மெய்நிகர் கற்றல் முறையின் மூலம் மாணவர்கள் எந்த இடத்திலிருந்தும் எந்த நேரத்திலும் கற்கும் சூழலை உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கம். போட்டித் தேர்வுக்கு தயார் செய்துவரும் இளைஞர்கள் https://tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையத்தில் தங்கள் பெயரை கட்டணமின்றி இலவசமாக பதிவு செய்து பயன் பெறலாம்.

    சிறப்பம்சங்கள்

    கிராமப் பகுதிகளில் வசிக்கும் இளைஞர்களின் தேவை அறிந்து தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் அனைத்து மென்பாடக்குறிப்புகளும் இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. மேலும், இம்மென்பாடக்குறிப்புகளை ஆஃப் லைன் முறையிலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதில், மாதிரி தேர்வுகள் மற்றும் மதிப்பீட்டுத் தேர்வுகளை மேற்கொண்டு பயிற்சி பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் தினந்தோறும் எடுக்கப்படும் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள இயலாத தொலைதூரத்தில் உள்ள இளைஞர்கள் பயனடையும் வகையில் பயிற்சி வகுப்புகளுக்கான காணொலி பாடக் குறிப்புகளும் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.

    தன்னார்வ பயிலும் வட்டம்

    தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும், தன்னார்வ பயிலும் வட்டம் செயல்படுகிறது. இதில் அனைவரும் உறுப்பினராகலாம். கட்டணம் எதுவுமில்லை. போட்டித் தேர்வுக்கு தேவையான அனைத்து மாதாந்திர சஞ்சிகைகள், தினசரி நாளிதழ்கள் மற்றும் TNPSC, வங்கிப்பணி (IBPS), SSC, ரெயில்வே தேர்வாணையம் மற்றும் யு.பி.எஸ்.சி, என்ஜினீயரிங் துறை போன்ற அனைத்து வகை தேர்வுகளுக்கான புத்தகங்களும் இங்கே உள்ளன.

    இதைத் தவிர இப்போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகளும், நடத்தப்படுகின்றன. அனைத்து வகுப்பு (கம்யூனிட்டி) இளைஞர்களும் இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம்.

    இத்தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வெளியாகும் விவரம், தேர்வு முடிவுகள், இதர துறை வேலைவாய்ப்புகள், ஒவ்வொரு வருடமும் எஸ்.எஸ்.சி, யு.பி.எஸ்.சி, டி.என்.பி.எஸ்.சி போன்ற பலவகை தேர்வு வாரியங்களில் என்னென்ன தேர்வுகள் எந்த மாதத்தில் நடைபெறும் என்னும் கால அட்டவணை போன்ற வேலைவாய்ப்பு விவரங்களும் இந்த தன்னார்வ பயிலும் வட்டத்தில் கிடைக்கிறது.

    கல்வி தொலைக்காட்சி

    வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் சார்பாக டி.என்.பி.எஸ்.சி (TNPSC), ரெயில்வே தேர்வாணையம் (RRB), பணியாளர் தேர்வு குழுமம் (SSC), வங்கிப் பணியாளர் சேவைகள் குழுமம் (IBPS) உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு தயாராகும் மாணவ - மாணவிகள் பயன்பெறும் வகையில் போட்டித் தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரடியாக நடைபெறும் இலவச பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள இயலாதவர்கள், தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து கொண்டு அரசுப் பணிக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ளும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் கல்வி தொலைக்காட்சியில் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் தினமும் காலை 7 மணியிலிருந்து 9 மணி வரையிலும், இதன் மறு ஒளிபரப்பு இரவு 7 மணியிலிருந்து 9 மணி வரையிலும் ஊக்கவுரைகள், முந்தைய ஆண்டுகளில் வினாத்தாள் பற்றிய கலந்துரையாடல் மற்றும் நடப்பு நிகழ்வுகள் ஆகிய பல்வேறு நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    மேலும், தினசரி நிகழ்ச்சிகளை TN Career Services Employment என்ற Youtube Channel - ல் அடுத்தடுத்த நாட்களிலும் காணலாம். எனவே, போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் அனைத்து இளைஞர்களும் கல்வி தொலைக்காட்சியில் இந்நிகழ்ச்சியினை கண்டு பயன்பெறலாம்.

    இந்த தேர்வுக்கு தயாராகும் முறைகள், மாதிரி வினாத்தாள்கள் குறித்த விவரங்களை அடுத்த வாரம் காணலாம்.

    எம்.கருணாகரன்,

    துணை இயக்குநர் (வேலைவாய்ப்பு), கோவை.

    ×