என் மலர்
குழந்தை பராமரிப்பு
- ஃப்ளு வைரஸ் சுவாச மண்டலத்தைதான் அதிகமாக தாக்கும்.
- இந்த வகை காய்ச்சல் ஏற்படுபவர்களுக்கு சளி தொல்லை இருந்து கொண்டே இருக்கும்.
* குழந்தைகளை அதிகமாக பாதிக்கக்கூடிய ஃப்ளு வைரஸ் காய்ச்சல் சென்னையில் பரவி வருவதால் பெற்றோர்கள் கலக்கமடைந்துள்ளனர்.
* பல பள்ளிகளில் குழந்தைகளின் 'ஆப்சென்ட்' எண்ணிக்கை கணிசமான அளவில் காணப்படுவதாகவும், பள்ளிக்கு வந்திருக்கும் குழந்தைகளில் கூட பலர் தொடர்ந்து இருமிக்கொண்டிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
* அதே சமயம் இந்தக் காய்ச்சலால் பெரியவர்கள் கூட பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகக்குறைவாக இருக்கும் என்பதால், அவர்களை இந்த வைரஸ் காய்ச்சல் எளிதில் தொற்றுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
அறிகுறிகள்:
* ஜலதோஷம், மிக அதிக காய்ச்சல், விடாமல் ஏற்படும் இருமல் ஆகியவை ஃப்ளு வைரஸ் காய்ச்சலின் அறிகுறியாகும். இதற்கு ஏற்கனவே தடுப்பூசி உள்ளது.
என்றாலும், ப்ளு வைரஸ் பாதிக்கும் பட்சத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
* ஃப்ளு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டால் அது சுவாச மண்டலத்தைதான் அதிகமாக தாக்கும்.
* இதனால் இருமல் இருந்து கொண்டே இருக்கும். பொதுவாக உடல் வலி, தலைவலி, சோர்வு, தொண்டை வறட்சி, வாந்தி, வயிற்று வலி போன்றவையும் ஏற்படக் கூடும்.
* ஃப்ளு வைரஸ் காய்ச்சல் பெரும்பாலும் 2 முதல் 4 நாட்களில் குணமாகிவிடும். சிலருக்கு மட்டும் இருமலுடன் ஒரு வாரம் வரை நீடிக்க வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
எப்படி பரவுகிறது?
* ஃப்ளு வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு மிக எளிதாக பரவிவிடும். இந்தக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் இருமும் போது வெளிப்படும் துளிகள் மூலம் மற்றவர்களைப் பாதிக்கும்.
இந்த வகை காய்ச்சல் ஏற்படுபவர்களுக்கு சளி தொல்லை இருந்து கொண்டே இருக்கும்.
* எனவே காய்ச்சல், இருமல் இருப்பவர்கள் பக்கத்தில் செல்லும்போது முகக்கவசம் அணிந்துகொண்டு சென்றால் ஃப்ளு வைரஸ் தாக்கத்தில் இருந்து தப்பிக்க முடியும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
பரவல் ஏன்?
வைரஸ் காய்ச்சல்களில் ஃப்ளு வகை வைரஸ் காய்ச்சல் பொதுவாக செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் அதிகளவு பரவுவது உண்டு. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா வைரஸ் தாக்கத்தால் பொதுமக்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டதாலும், முகக் கவசம் அணிந்ததாலும் இத்தகைய வைரஸ்கள் தாக்கம் இல்லாமல் இருந்தது.
ஆனால் தற்போது கொரோனா அச்சுறுத்தல் விலகி உள்ள நிலையில் முகக்கவசம் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தையும் பொது மக்கள் கைவிட்டு இருப்பதால் மீண்டும் வைரஸ் காய்ச்சல்கள் தலையெடுக்கத் தொடங்கி உள்ளன. அந்த வகையில் தற்போது சென்னையில் ஃப்ளு வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது.
இந்த நிலையில், சென்னையைத் தொடர்ந்து மற்ற மாவட்டங்களில் அரசு தரப்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
- உடலை மட்டுமல்ல, மனதையும் வலுவாக்கும்.
- எல்லா குழந்தைகளுடனும் பழகும் மனப்பக்குவத்தை உருவாக்கும்.
இளம் வயதிலேயே நிறைய குழந்தைகளுக்கு கூன் விழுந்ததுபோல முதுகு வளைந்திருப்பதை பார்த்திருப்பீர்கள். அதை தவிர்க்கவும், குழந்தைகள் நேராக நடக்கவும், நிமிர்ந்து உட்கார பழகவும், தசைப்பிடிப்பு வராமல் ஓடவும்... சிறுசிறு உடற்பயிற்சிகள், சிறுவயதில் இருந்தே அவசியம். இது உடலை மட்டுமல்ல, மனதையும் வலுவாக்கும். மூளை வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி, நினைவாற்றலை மேம்படுத்தும்.
எல்லா குழந்தைகளுடனும் பழகும் மனப்பக்குவத்தை உருவாக்கும். கணிதத் திறனை வளர்க்கும். அவர்களை எப்போதும் உற்சாகமாக வைத்துக் கொள்ளும். விளையாட்டு துறைகளில் சாதிக்கும் குழந்தைகள் கூட இந்த பயிற்சிகள் வாயிலாக உடலை வளைத்து நெளித்து வலுப்படுத்துகிறார்கள். அவர்களது உடலை, விளையாட்டு பயிற்சிகளுக்காக பழக்கப்படுத்துகிறார்கள்.
இந்த விஷயத்தில் குழந்தைகளுக்கு பெற்றோர்தான், முன்மாதிரியாக இருக்க வேண்டும். குறிப்பாக அம்மாக்களின் வழிகாட்டுதல்களும், உடற்பயிற்சி முன்னெடுப்புகளும் அவசியம். ஏனெனில் பெற்றோர்களை பார்த்துதான், குழந்தைகள் பேச, சிரிக்க, விளையாட பழகுகிறார்கள். அந்தவகையில், குழந்தைகளுக்கு பெற்றோர்கள்தான் உடற்பயிற்சிகளையும் கற்றுக்கொடுக்க வேண்டும். அவர்களுக்கு முன்மாதிரியாக இருக்கவேண்டும்.
வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே, உடலையும், உடல் பாகங்களையும் அசைக்கும் வகையிலான எளிய பயிற்சிகளாக இருக்கும். உட்கார்ந்து நிமிர்வது, நாற்காலி மீது ஏறி இறங்குவது, படிகளில் ஏறுவது... இப்படி அன்றாட வாழ்க்கையின் இயல்பான வேலைகளைத்தான், இதற்கு தீர்வாக மாற்றி இருக்கிறேன்.
- தட்டமை பாதிப்பு குடிசைப்பகுதிகளில் தான் அதிகளவில் பரவி உள்ளது.
- சுகாதாரம், ஊட்டத்து விஷயத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியது.
மும்பை பெருநகரம் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்த நிலையில், குழந்தைகளை தட்டம்மை நோய் மிரட்டி வருவது கவலையை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 3 வாரத்தில் மட்டும் மும்பை பெருநகரில் 5 வயதுக்கு உட்பட்ட 12 குழந்தைகள் உயிரிழந்து உள்ளனர்.
தற்போது இந்த நோய் நவிமும்பை, புனே, தானே பகுதிகளுக்கும் பரவி உள்ளது. மும்பையில் கடந்த வெள்ளிக்கிழமை வரை 371 குழந்தைகள் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 18 குழந்தைகள் உயிரிழந்து உள்ளன. மும்பையில் தட்டமை பாதிப்பு குடிசைப்பகுதிகளில் தான் அதிகளவில் பரவி உள்ளது. அங்குள்ள உள்ள குழந்தைகள் தடுப்பூசி போடாதது நோய் பரவலுக்கு காரணமாக கூறப்பட்டது. இந்தநிலையில் ஊட்டச்சத்து குறைபாடும் குழந்தைகள் இடையே தட்டம்மை பரவ காரணமாக இருப்பதாக தெரியவந்து உள்ளது.
மும்பையில் நோய் பரவல் அதிகம் உள்ள சிவாஜிநகர் பகுதியில், கடந்த 2010-ம் ஆண்டு குப்பை சேகரிக்கும் மக்களின் 16 குழந்தைகள் ஊட்டத்துகுறைபாடு காரணமாக உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
புதிதாக அமைக்கப்பட்டுள்ள மாநில தட்டம்மை தடுப்பு குழு தலைவர் டாக்டர் சுபாஷ் சலுங்கே கூறியதாவது:-
ஊட்டத்சத்து குறைபாடு உள்ள மற்றும் தடுப்பூசி போடாத குழந்தைகள் தட்டம்மையால் பாதிக்கப்படும் போது அதிக விளைவுகளை சந்திக்கின்றனர். ஊட்டச்சத்து உணவு கிடைக்காத குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு கிரேடு-4 பிரச்சினையை சந்திக்கும் போது அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலை வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
குடிசைப்பகுதி குழந்தைகளுக்கு ஊட்டத்துகுறைபாடு ஏற்பட்டது குறித்து மூத்த குழந்தைகள் நல மருத்துவர் மிருதுளா பட்கே கூறியதாவது:-
கொரோனா ஊரடங்கு உழைக்கும் வர்க்கத்தினர் இடையே கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அது அவர்களின் சுகாதாரம், ஊட்டத்து விஷயத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியது. வேலையின்மை மற்றும் கையில் போதிய பணம் இல்லாத காரணத்தால் குடிசைப்பகுதி மக்களால் சரியாக சாப்பிட முடியாமல் போனது.
கொரோனா ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளின் விகிதத்தை அதிகரித்து உள்ளது. குறிப்பாக பின்தங்கிய பகுதிகளை சேர்ந்த குழந்தைகள் பார்க்க நன்றாக தெரிந்தாலும் அவர்களுக்கு இரும்பு, வைட்டமின் டி போன்ற சத்து குறைபாடுகள் உள்ளன. தடுப்பூசி போடாதது, ஊட்டசத்து குறைபாடு தான் தட்டம்மைக்கு அதிக உயிரிழப்புகள் ஏற்பட காரணம். நல்ல ஊட்டச்சத்துள்ள குழந்தை கூட தட்டம்மை காரணமாக ஒரு வாரத்திற்கு மேல் சாப்பிடுவதை நிறுத்துகிறது.
ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தை கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு செல்லலாம். அந்தவகையில் ஊட்டச்சத்தின்மை அம்மை நோயின் சிக்கலாகும். இந்த நோய் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளை மிகவும் கடுமையாக பாதிக்கிறது என்பதில் ஆச்சரியமில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- இவர்களால் வேகமாக நடக்க முடியாது.
- மாடிப் படிகளில் ஏறி, இறங்க முடியாது.
உணவு முறை, வாழ்க்கை முறை மாற்றங்கள் பெரியவர்கள் மட்டுமின்றி, குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. அதேசமயம் கொரோனாவிற்கு முன்புவரை, இந்த பாதிப்புகள் குறைவாகத்தான் இருந்தன. ஆனால் கொரோனா பொதுமுடக்க காலங்களில், செல்போன் உலகிற்குள் சிக்கிக்கொண்டவர்களால் இன்றுவரை அதிலிருந்து வெளிவர இயலவில்லை. மக்களின் இயல்பான வெளியுலக செயல்பாடுகள் குறைந்துவிட்டன. அவர்கள், ஒரே இடத்தில் படிக்கவும், வேலை செய்யவும், வீட்டிற்குள்ளேயே விளையாடவும் கற்றுக்கொண்டதால், உடல் பருமன் பாதிப்பிற்கு ஆளாகிறார்கள்.
இயல்பான குழந்தைகளை விட, இவர்கள் மிக எளிதாகவே சோர்ந்து விடுவார்கள். குறிப்பாக, அன்றாட வேலைகளை செய்வதே இவர்களுக்கு பெரிய சவாலாக இருக்கும். உடல் பருமன் காரணத்தால், நிறைய குழந்தைகள் கவன சிதைவிற்கு உள்ளாவதாக நிறைய ஆய்வுகள் விளக்குகின்றன. பலர் இளம் வயதிலேயே நீரிழிவு நோய் பாதிப்பிற்கும் உள்ளாகிறார்கள்.
'ஒபிசிட்டி' எனப்படும் உடல் பருமன் பிரச்சினைகள், இப்போது சிறு குழந்தைகள் வரை வந்துவிட்டது. ஒரு வகுப்பில், 50 குழந்தைகள் படிக்கிறார்கள் என்றால், அதில் 5 குழந்தைகள் உடல் பருமனாக இருப்பது சகஜமாகிவிட்டது. இவர்களால் மற்ற குழந்தைகளைப் போல வேகமாக நடக்க முடியாது. மாடிப் படிகளில் ஏறி, இறங்க முடியாது. உடற்கல்வி வகுப்புகளில், இயல்பான குழந்தைகளைப் போல துள்ளிக் குதித்து விளையாட முடியாது.
இத்தகைய காரணங்களால், அவர்கள் இயல்பான குழந்தைகளிடமிருந்து வேறுபடுகிறார்கள். கூடவே பருமனான குழந்தைகள் அணியக்கூடிய பெரிய சைஸ் உடை நாகரிகமும், அவர்களை மற்ற குழந்தைகளிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டும். இதனால் அவர்கள், தனிமை நிறைந்த தனி உலகிற்குள் சிக்கிக்கொள்கிறார்கள். இது அவர்களை உடலளவிலும், மனதளவிலும் பாதிக்கும்.
- மசாஜ் செய்வதால் குழந்தைகளின் சரும ஆரோக்கியம் மேம்படும்.
- சருமத்தில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும்.
சில தலைமுறைகள் முன்புவரை கர்ப்பிணி பெண்களுக்கு வீட்டிலேயே சுகப்பிரசவம் நடந்தது. வீட்டில் இருந்த பெரியவர்களே புதிதாகப் பிறந்த குழந்தைகளைக் குளிப்பாட்டுவது, மருந்து ஊட்டுவது என அனைத்துப் பராமரிப்புப் பணிகளையும் சிறப்பாகச் செய்தார்கள். சிலர் இதற்கெனத் தாதிகளை (குழந்தை பராமரிப்பாளர்) நியமித்துப் பராமரித்தார்கள். கருப்பையில் வளரும் குழந்தையின் மண்டை ஓடு மற்றும் எலும்புகள் மென்மையாக இருக்கும்.
பிரசவத்தின் போது பிறப்புப் பாதை வழியாக சிரமப்பட்டு வெளியே வருவதால் குழந்தையின் தலைப்பகுதி நீண்டு இருக்கும். பெரியவர்கள் குளிப்பாட்டும்போது குழந்தையின் தலை, கை கால்கள், மூக்கு போன்ற பகுதிகளை மென்மையாக அழுத்தியும், பிடித்தும், நீவியும் விடுவார்கள். இதனால் அந்த உறுப்புகள் சரியான வடிவம் பெறும். குழந்தையைப் பாயில் படுக்க வைத்து தூங்கச் செய்வது மற்றும் விளையாடச் செய்வதன் மூலம் அதன் நீளமான தலைப்பகுதி உருண்டையான வடிவம் பெறும்.
குழந்தையை அதன் தாய் உபயோகப்படுத்திய சேலையைக் கொண்டு தூளி கட்டி அதில் படுக்க வைப்பார்கள். இது குழந்தைக்குத் தாயின் அரவணைப்பு உணர்வை கொடுப்பதோடு மட்டுமில்லாமல் தலைப்பகுதி இயல்பாக உருண்டை வடிவம் பெறுவதற்கும் உதவும். குழந்தையை ஒரே நிலையில் படுக்க வைக்காமல், வெவ்வேறு நிலைகளில் மாற்றிப் படுக்க வைக்கலாம்.
தலைப்பகுதிக்குத் துணிகளை அடுக்கி தலையணை போல அமைப்பதைத் தவிர்க்கவும். குழந்தை பிறந்து சில மாதங்கள் கழித்து மருத்துவரின் ஆலோசனையுடன், குளிப்பாட்டுவதற்கு முன்பு தேங்காய் எண்ணெய்யை உடல் முழுவதும் தடவி மென்மையாக மசாஜ் செய்யலாம். குழந்தை நடை பழகும் வயதில் கட்டை வண்டியில் கைப்பிடித்து நடக்கும் போது, கால் தசைகளுக்கு வலிமை கிடைக்கும். பாயில் படுக்க மற்றும் விளையாட வைப்பது, தூளியில் தூங்க வைப்பது போன்ற முன்னோர்களின் பழக்கங்களைக் கடைப்பிடித்தால், குழந்தையின் தலைப் பகுதியை சரியான வடிவத்திற்கு கொண்டு வர முடியும்.
அதேநேரம், இயல்பிலேயே நீண்டு இருக்கும் தலைப்பகுதியை உருண்டையாக மாற்றுவதற்காக தவறான முறைகளைப் பின்பற்றக் கூடாது.
குழந்தைகளுக்கு மசாஜ் செய்வதன் பலன்கள்
குழந்தைகளுக்கு இயற்கையான எண்ணெய்களைக் கொண்டு மசாஜ் செய்வதால் அவர்களின் சரும ஆரோக்கியம் மேம்படும். தசை மற்றும் எலும்புகள் வலுப்பெறும். குழந்தைக்கும் அன்னைக்குமான பாசம் அதிகரிக்கும். குழந்தைகளுக்கு மசாஜ் செய்வதற்குத் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தும்போது, அதில் இருக்கும் நுண்ணுயிர் எதிர்ப்புப் பண்புகள் மற்றும் ஆன்டி ஆக்சிடன்டுகள் சருமத்தில் தொற்று மற்றும் வறட்சி ஏற்படாமல் காக்கும். சூரியகாந்தி எண்ணெய், நல்லெண்ணெய்யை உபயோகப்படுத்தினால் எலும்புகளின் வளர்ச்சி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பாதாம் எண்ணெய் தோல் நோய்கள் உண்டாகாமல் காக்கும். சருமத்தில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும்.
- குழந்தைகள் நோய்த்தொற்றுக்கு ஆளாக மருத்துவமனைகளும் காரணமாக உள்ளன.
- கைகளை சோப்பு போட்டு நன்றாகக் கழுவ வேண்டும்.
சுகாதாரமற்ற குடிநீர், சுகாதார சீர்கேடு, தூய்மையின்மை போன்றவைதான் நோய்களுக்கு அடிப்படை. இவற்றின் மூலமே பலவிதமான தொற்றுநோய்கள் பரவுகின்றன.
குறிப்பாக. உலகம் முழுவதும் தினமும் வாந்திபேதி நோய்க்கு ஆளாகி 5 வயதுக்கு உட்பட்ட 1,400 குழந்தைகள் உயிரிழப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.
தூய்மையின்மை காரணமாகவும், கை சுத்தம் இல்லாமல் இருப்பதும் நோய்த்தொற்று ஏற்பட வசதியாக உள்ளது. அதனால் தூய்மையை கடைபிடித்தாலே வாந்தி, பேதியை ஏற்படுத்தும் நோய்த் தொற்றுகளில் இருந்து தப்பித்துவிடலாம். அதற்கு மிகவும் எளிய வழி, வெளியே எங்காவது சென்று வந்த பிறகு, கழிப்பறையைப் பயன்படுத்திய பிறகு கைகளை சோப்பு போட்டு நன்றாகக் கழுவுவதுதான்.
பல குழந்தைகள் நோய்த்தொற்றுக்கு ஆளாக மருத்துவமனைகளும் காரணமாக உள்ளன. மருத்துவமனையில் உள்ள குழந்தைகளையும் நோயாளிகளையும் கூட்டம் கூட்டமாக பார்க்கச் செல்லும் உறவினர்களும் இதற்கு ஒரு காரணம். மேலும் கழிவறை, குளியல் அறை, பொது இடங்களைப் பயன்படுத்தும் போதும் குழந்தைகள் நோய்த் தொற்றுக்கு ஆளாகிறார்கள். எனவே அதுபோன்ற இடங்களுக்கு செல்லும்போது கைசுத்தம் மிக அவசியம்.
கை கழுவுவதன் அவசியத்தை சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு பெற்றோர்களும், ஆசிரியர்களும் விளக்க வேண்டும். குழந்தைகள் மட்டுமல்லாமல், பெரியவர்களும் கை கழுவும் பழக்கத்தை பின்பற்ற வேண்டும். குறிப்பாக கர்ப்பிணிகள் சாப்பிடுவதற்கு முன்னும் பின்னும் கை கழுவ வேண்டும்.
தாய்மார்கள் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பும்போதும், பால் புகட்டும்போதும், உணவு ஊட்டும்போதும், குழந்தைகளின் துணி, உடைகளை கையாளும்போதும் கைகளை கண்டிப்பாக கழுவ வேண்டும். அப்படிச்செய்தால் நோய் பாதிப்பின்றி, ஆரோக்கியமாக வாழலாம்.
கை கழுவுவதன் அவசியம் தொடர்பான விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் வகையில் உலகக் கை கழுவும் நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. குழந்தைகள், பள்ளிக்கூடங்களில் படிக்கும் சிறுவர் சிறுமிகளுக்காக இந்த நாள் ஏற்படுத்தப்பட்டது.
- குழந்தைகள் தவறு செய்யும் போது சுட்டிக் காட்ட பெற்றோர் தவறி விடுகிறார்கள்.
- குழந்தைகளின் உலகம் தனிமைப்படுத்தப்பட்டு வருகிறது.
நவீன தொழில்நுட்ப காலத்தில் பிறந்து வளரும் குழந்தைகள் புத்திசாலிகளாக இருக்கிறார்கள். தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பின் மூலம் நிறைய செய்திகளை தெரிந்து கொள்கிறார்கள். வயதிற்கும், மனவளர்ச்சிக்கும் தொடர்பு இல்லாத அளவிற்கு பல நேரங்களில் நடந்து கொள்கிறார்கள். ஆனால் உறவு குறித்த புரிதலோ, வாழ்வின் நடைமுறை சிக்கல்களோ அறிந்து கொள்ள முடியாதவர்களாக இருக்கிறார்கள்.
குழந்தைகள் தவறு செய்யும் போது சுட்டிக் காட்ட பெற்றோர் தவறி விடுகிறார்கள். இதனால் எது சரியானது என்பதை குழந்தைகள் கற்றுக் கொள்ள முடியாமல் போய் விடுகிறது. ஏதோ ஒரு கோபத்தில் லேசாக கண்டித்தாலே தாங்கி கொள்ள முடியாத மனநிலைக்கு ஆளாகின்றனர்.
குழந்தை எது கேட்டாலும் அதை வாங்கிக் கொடுத்து மகிழ்ச்சிப்படுத்த விரும்புகிறார்கள். குழந்தைகளை கஷ்டம் தெரியாமல் வளர்க்க வேண்டும் என்று பெற்றோர் நினைக்கிறார்கள். இந்த இடத்தில் தான் குழந்தைகளின் உலகம் தனிமைப்படுத்தப்பட்டு வருகிறது. தான் நினைத்ததை அடைய அடம் பிடிக்கும் குழந்தைகளால் யாரோடும் இணங்கி செல்லவோ, விட்டுக் கொடுத்து போகவோ முடிவது இல்லை.
குழந்தைகள் பெற்றோர்களிடம் இருந்து தான் எதையும் முதலில் கற்றுக் கொள்கிறார்கள். எனவே குழந்தைகள் நம்பிக்கையோடு அணுகும் வகையில் பெற்றோரின் செயல்பாடு இருக்க வேண்டும். அவர்களிடம் மனம் விட்டு பேச வேண்டும். அவர்களின் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டும். அப்போது தான் குழந்தைகள் எந்த பிரச்சினை என்றாலும் தீர்வு கேட்டு அணுகுவார்கள். மனரீதியாக சிரமப்படும் குழந்தைகளுக்கு நம்பிக்கை அளித்து தேற்ற முடியும். தோல்வியே கண்டாலும் தொடர்ந்து முயன்று வெற்றி வீரர்களாக வலம் வர குழந்தைகளை தயார்படுத்த முடியும்.
- மதிப்பெண்களை வைத்து ஒருவரின் அறிவை மதிப்பிட முடியாது.
- நம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் நீட் தேர்வு தற்கொலைகள் அவ்வப்போது பெரும் அதிர்வுகளை ஏற்படுத்துகிறது. ஆனால் இன்னும் 10 மற்றும் 12 வகுப்பு தேர்வு தோல்விகளை கூட தாங்கிக்கொள்ள முடியாத நிலையில் மாணவ- மாணவிகள் இருப்பது கவலை அளிக்கிறது. அதற்கு வீடு மற்றும் சமூகத்தின் பார்வையால் எழும் அழுத்தமே காரணமாக கூறப்படுகிறது. மராட்டியத்தில் 1834 மாணவர்கள், மத்திய பிரதேசத்தில் 1308 மாணவர்கள் தற்கொைல செய்து உள்ளனர். தமிழகத்தில் 1246 மாணவர்கள் தற்கொைல செய்து உள்ளனர்.இந்தியாவில் மொத்தம் 13,089 மாணவர்கள் தற்கொைல செய்து உள்ளனர். இதில் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் 10,732 பேர். தேர்வில் தோல்வி காரணமாக தற்கொலை செய்தவர்கள் மட்டும் 864 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2020-ம் ஆண்டு 12,526 பேர் தற்கொலை செய்து உள்ள னர். இதில் ஆண்கள்- 55.62 சதவீதம். பெண்கள்- 44.38 சதவீதம். 2021-ம் ஆண்டு 13,089 பேர் தற்கொலை செய்து உள்ளனர். இதில் ஆண்கள்- 56.51 சதவீதம். பெண்கள்- 43.49 சதவீதம் என்று குறிப் பிடப்பட்டு உள்ளது. இதனால் மாணவிகளை விட மாணவர்களே அதிகம் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
மதிப்பெண்களை வைத்து ஒருவரின் அறிவை மதிப்பிட முடியாது. ஆனால் மதிப்பெண்கள் தான் உயர் கல்விக்கும், நல்ல வேலை பெறவும் ஆதாரமாக இருக்கிறது. எனவே நம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொள்ள வேண்டும். தேர்வில் மதிப்பெண் பெற முடியாத நிலை ஏற்படும் போது குற்ற உணர்ச்சி கொள்ள எந்த அவசியமும் இல்லை. மீண்டும் படித்து தேர்ச்சி பெற முயற்சி செய்ய வேண்டும். இதற்கு மாணவர்- ஆசிரியர் இடையே உறவு மேம்பட வேண் டும். பாடம், படிப்பு, தேர்வு என்பதை தாண்டி உலகம் எவ்வளவு அதிசயங்களை உள்ளிடக்கியது என்பதை ஆசிரியர்கள் மாணவர் களுக்கு புரிய வைக்க வேண்டும் ஆசிரியர்கள், மாணவர்களை சமூகத்தில் தைரியமாக வாழத் தகுதி உடையவர்களாக உருவாக்க வேண்டும். அதற்கான வழிகாட்டுதல்களை தொடர்ந்து வழங்க வேண்டும்.
பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகளில் தோல்வி அடைவது என்பது கவனக்குறைவால் ஏற்படும் சிறு சறுக்கல், தடுமாற்றம் தான் என்பதை மாணவர்கள், இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தவறுகள், தோல்விகள், இழப்புகள், பலவீனங்களில் இருந்து மீண்டும் வர முடியும். படிப்பு, தேர்வு உள்பட எந்த தோல்வியும் வாழ்க்கையை விட மேலானது, உயர்ந்தது அல்ல. எத்தனை தோல்வி அடைந்தாலும் வாழ்ந்து காட்ட வேண்டும். அது தான் ஒரு பிறப்பின் அர்த்தத்தை சமூகத்துக்கு விளக்கும் சான்றாக இருக்க முடியும்.
- குழந்தைகளின் கவனத்தை திசை திருப்பும் விஷயங்களில் ஈடுபட வேண்டும்.
- மன ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும்.
குழந்தைகள் தங்களுக்கு பிடித்தமான பொருட்களை கேட்டு அடம்பிடிப்பது இயல்பானது. அவர்கள் விரும்பிய விஷயங்களை செய்வதற்கும் அனுமதி கேட்பார்கள். அவற்றுக்கு மறுப்பு தெரிவிக்கும்பட்சத்தில் அழுது அடம்பிடிப்பார்கள்.
அப்படி அழுது அடம்பிடித்த உடனேயே அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவது தவறான செயலாகும். அவர்கள் விரும்பும் பொருட்கள், விஷயங்கள் ஏற்புடையதா? என்பதை உறுதிப்படுத்திய பின்னரே அவர்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்க வேண்டும். அவை ஏற்புடையதாக இல்லாதபட்சத்தில் கண்டுகொள்ளாமல் இருப்பதும் தவறானது.
எதற்காக மறுப்பு தெரிவிக்கிறீர்கள் என்பதை பெற்றோர் குழந்தைகளுக்கு விளக்கி புரியவைக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்களின் பிடிவாதம் அதிகரித்துவிடும். அது அவர்களுடைய செயல்பாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்தும். மன ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தும். பெற்றோர் மீதான நம்பிக்கையை இழக்கவும் வைத்துவிடும்.
'நீ அழுது அடம்பிடிப்பதற்காக உன் விருப்பப்படி எதுவும் செய்ய மாட்டேன்' என்று அவர்களுடன் விவாதம் செய்வதும் கூடாது. அது பலனும் தராது. ஏனெனில் அதனை காதுகொடுத்து கேட்கும் மன நிலையில் அவர்கள் இருக்கமாட்டார்கள். அதனால் அது குறித்து பேசாமல் குழந்தைகளின் கவனத்தை திசை திருப்பும் விஷயங்களில் ஈடுபட வேண்டும்.
அவர்களுக்கு பிடித்தமான மற்றொரு விஷயம் குறித்து பேசி, அதனை செய்வதற்கு அனுமதிக்க வேண்டும். அது அவர்களை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கு உதவும். அந்த சமயத்தில் அவர்களின் கோரிக்கையை மறுப்பதற்கான காரணத்தை விளக்கி புரியவைத்துவிடலாம். அதனை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அவர்களுக்கு வந்துவிடும்.
- வலைதளப் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்கு பல மென்பொருள்கள் உள்ளன.
- சிறுவர், சிறுமிகள் இணையத்தை கவனமாக பயன்படுத்துவார்கள்.
வெளிவிளையாட்டுகளைவிட இணையதள விளையாட்டுகள், மொபைல்போன் விளையாட்டுகள் போன்றவை குழந்தைகள், வளர்இளம் பருவத்தினரை அதிகமாக ஈர்க்கின்றன. தனிநபர் ஆதிக்கம் செலுத்துவதற்கு உள்ள சாத்தியம், தனிமை மற்றும் மனச்சோர்வின்போது அதைத் தணியச்செய்வது போன்ற காரணங்களால், அதற்கு அடிமையாகும் அளவுக்குப் பலரும் மாறிவிடுகின்றனர். அது மட்டுமல்லாமல் துப்பாக்கியால் சுடுவது போன்ற ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தும் விளையாட்டுகள் நிஜ வாழ்க்கையிலும் அவர்களுடைய நடவடிக்கைகளில் மூர்க்கக் குணத்தை உண்டாக்கும். பெரும்பாலான நேரம் இத்தகைய விளையாட்டுகளிலேயே மூழ்கிவிடுவதால் மனச் சோர்வும் தூக்கமின்மையும் ஏற்படுகின்றன.
மேலும் தனக்கு பிடிக்காதவர்களை பற்றி தவறான தகவல்களை பரப்புவது, ஆபாச படங்களை வெளியிடுவது, பிறரை புண்படுத்தும் வகையில் கேலியான அல்லது மிரட்டும் வகையில் பதிவுகளை அனுப்புவது போன்ற பல விஷயங்கள் சமூக வலைதளங்களில் மிகச் சாதாரணமாக நடைபெற்று வருகின்றன. இதைத்தான் 'சைபர் புல்லியிங்' என்கிறார்கள்.
நமக்கு இந்த வார்த்தை புதிதாக இருக்கலாம். ஆனால், மேற்கத்திய நாடுகளில் 40 சதவீத இளைஞர்களை பாதிக்கும் முக்கியப் பிரச்சினையாக இது கருதப்படுகிறது. அதேபோல, வளர்இளம் பருவத்தில் ஏற்படும் பாலியல் நாட்டம் மற்றும் அந்தரங்க ஆசைகளை நிறைவேற்றும் ஒரு வடிகாலாக வலைதளம் பயன்படுத்தப்படுவது நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
ஆபாச வலைதளங்கள் மற்றும் குறுஞ்செய்திப் பரிமாற்றங்களில் ஈடுபடும் வளர்இளம் பருவத்தினரை அவர்களுடைய நடவடிக்கை மாற்றங்கள் காட்டிக்கொடுத்துவிடும். இரவில் வெகுநேரம் அல்லது அதிகாலைவரை இணையத்தைப் பயன்படுத்துவது, கணினி, மடிகணினி பயன்படுத்தும்போது அதிகம் தனிமையை நாடுவது, யாராவது குறுக்கிட்டால் எரிச்சல்படுவது, மொபைல்போன் பயன்பாடுகளுக்குப் பாஸ்வேர்ட் வைத்துக்கொள்வது, குடும்ப நபர்களிடம் கலந்துரையாடும் நேரம் குறைவது, வலைதள வரலாற்றை முற்றிலும் அழித்துவிடுவது உள்பட பல மாற்றங்கள் ஒருவரிடம் காணப்படும்.
'முள்ளை முள்ளால் எடுப்பது' போல வளர்இளம் பருவத்தினரின் வலைதளப் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்கு பல மென்பொருள்கள் உள்ளன. அவற்றைக் கணினியிலோ, ஸ்மார்ட் போனிலோ பதிவேற்றிவிட்டால் குறிப்பிட்ட ஆபாச, விளையாட்டு வலைதளங்களை பயன்படுத்தும்பட்சத்தில் வலைதளம் தானாகவே தடுத்துவிடும். தடை செய்யப்பட்ட வலைதளத்தை ஒருவர் அணுகினால், அது குறித்த விவரம் பெற்றோரின் மின்னஞ்சலுக்கு வந்துசேரும் வகையில் மென்பொருள்கள் உள்ளன. தாங்கள் இந்த விஷயத்தில் கண்காணிக்கப்படுகிறோம் என்று ஆரம்பத்தில் தெரிந்துவிட்டாலே, சிறுவர், சிறுமிகள் இணையத்தை கவனமாக பயன்படுத்துவார்கள்.
- நீண்டகாலப் பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை.
- இவை குழந்தைகளில் புற்றுநோயை உருவாக்கக்கூடியவை.
பொதுவாக நாம் உண்ணும் உணவில் இருந்தும் சுற்றுச்சூழலில் இருந்தும் வேதிப்பொருட்கள் நாள்தோறும் நம் உடலை வந்தடைகின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்க அளவு உடலின் கழிவு நீக்க அமைப்பு மூலம் வெளியேற்றப்படுகின்றன. ஆனால், குழந்தைகளின் உடலில் கழிவு நீக்க அமைப்பு முழு வளர்ச்சி அடையாத நிலையில் உள்ளதால், தேவையற்ற நச்சு வேதிப்பொருட்களை கழிவாக வெளியேற்ற முடிவதில்லை. எனவே, இந்த வேதி பொருட்களால் பெரியவர்களைவிட குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
குழந்தைகளின் உடலை அடையும் வேதிப்பொருட்களின் பாதிப்புகள் உடனடியாக குழந்தையாக இருக்கும்போதே வெளிப்பட்டு விடுவதில்லை. நம்மைவிட குழந்தைகளின் எதிர்காலம் நீண்டது. அதனால் பின்விளைவுகள் காலம் தாழ்த்தி, அவர்கள் பெரியவர்கள் ஆனபிறகும் வெளிப்படலாம். நாம் பெரியவர்களான பிறகு எதிர்கொள்ளும் புற்றுநோய், மூளை பாதிப்பு, இனப்பெருக்க குறைபாடுகள் போன்றவற்றுக்கான காரணங்களை, தாயின் கருவில் நாம் வளரத்தொடங்கிய காலத்தில் இருந்தே தேட வேண்டியுள்ளது.
குழந்தை பிறந்த பிறகு எதிர்கொள்ளும் வேதிப்பொருட்களின் தாக்கத்தைவிட கருவில் இருக்கும்போதும் சிசு வளர்ச்சியின்போதும் எதிர்கொள்ளும் வேதிப்பொருட்களின் தாக்கம் ஆபத்தானவை என்பதை வாஷிங்டனை சேர்ந்த சுற்றுச்சூழல் பணிக்குழு என்ற அமைப்பின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. வளர்ந்த மனிதன் வேதிமாசுகளை எதிர்கொள்ளும்போது ஏற்படும் ஆபத்துகளைவிட குழந்தைகள் வேதி மாசுகளை எதிர்கொள்ளும்போது ஏற்படும் ஆபத்துகள் கடுமையானவை. நீண்டகாலப் பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை. குறிப்பாக அவர்களுடைய முதிர்ச்சியடையாத மூளை, எளிதில் பாதிக்கப்படக்கூடியது. குழந்தைகளின் உடலில் வேதி கூட்டுப்புரதங்கள் குறைவாக இருப்பதால், வெளியிலிருந்து உள்ளே வரும் வேதி மாசுகளை வரவேற்கும் நிலையில் அவர்களுடைய உடல் செயல்பாடுகள் அமைந்துள்ளன. அப்படி உள்ளே வரும் நஞ்சுகள், அவற்றுக்கான இலக்கு உறுப்புகளை அடைந்து அவற்றை எளிதாக நாசம் செய்கின்றன.
பெட்ரோலிய பொருட்களை எரிப்பதாலும், குப்பையை எரிப்பதாலும் வெளியிடப்படும் பி.ஏ.எச். எனப்படும் பலபடியாக்க அரோமட்டிக் ஹைட்ரோகார்பன்கள், உண்ணும் உணவின் மூலம் தாயை அடைந்து தாயின் வயிற்றில் வளரும் கருவை அடைகிறது. இவை குழந்தைகளில் புற்றுநோயை உருவாக்கக்கூடியவை.
- ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமான குழந்தைப் பருவ அனுபவம் இருக்கும்.
- இன்றைய தலைமுறையைச் சீர்படுத்துவது என்பது சற்று சிரமமானது.
ஒவ்வொரு குழந்தைக்கும் தனது பெற்றோர் குறித்த கண்ணோட்டம் வெவ்வேறாக இருக்கும். ஆனால், அவர்களின் வெற்றிக்கும், நிறைவான வாழ்க்கைப் பயணத்துக்கும் பெற்றோரும், அவர்களது வளர்ப்பு முறையும்தான் படிக்கட்டுகளாக அமை கின்றன. அதுதான் ஒரு குழந்தை எவ்வாறு மற்றவர்களுடன் பேச, பழக, நடந்துகொள்ள வேண்டும் என்பதைக் கற்றுத் தருகிறது. குழந்தைகளின் மனநலம், ஆரோக்கியம், நம்பகத்தன்மை, குடும்பம் மற்றும் சமூகத்துடனான உறவை மேம்படுத்த உதவுகிறது. இந்த உலகில் அனைத்து வேலையைச் செய்வதற்கும் அதுசார்ந்த தனிப்பட்ட பயிற்சி இருக்கிறது. ஆனால், குழந்தையை வளர்ப்பதற்கான பயிற்சி என்பது, சிறுவயதில் நாம் நமது பெற்றோரைப் பார்த்துத் தெரிந்துகொண்ட அனுபவமாக மட்டுமே உள்ளது. ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமான குழந்தைப் பருவ அனுபவம் இருக்கும். இந்த அனுபவத்தைக் கொண்டு இன்றைய தலைமுறையைச் சீர்படுத்துவது என்பது சற்று சிரமமானது. இது சிறந்த பெற்றோராக நடந்துகொள்வதற்கும், அவர்களது கடமைகளைச் சரியாகச் செய்வதற்கும் உதவும்.
வேலைச்சூழலில், பெற்றோரின் மன நிலையை புரிந்துகொண்டு, அவர்களுக்குக் குழந்தை வளர்ப்பு பற்றிய வழிகாட்டுதலை உருவாக்கிக் கொடுப்பதில் அதிகப்படியான சவால்கள் இருக்கும். ஒவ்வொரு பெற்றோரின் மனநிலையும், ஒவ்வொரு விதமாக இருக்கும். குழந்தைகளைச் சிறந்த முறையில் வளர்ப்பதற்காக, அவர்கள் தங்களைத் தயார்படுத்திக்கொள்வதற்கு எந்த அளவுக்கு முயற்சிக்கிறார்கள்? அவர்களின் உணர்ச்சிகளையும், சூழலையும் எவ்வாறு கையாள்கிறார்கள் என்பதை வகைப்படுத்துவதில் அதிக சவால்கள் இருக்கின்றன.
அப்ப எல்லாம்.. என்று நாங்க குழந்தைகளை எப்படி வளர்த்தோம் என்று பெருமைப்பட்டாலும் அங்கும் நிறைய சிக்கல்கள் இருக்கவே செய்தன. பெண் – ஆண் குழந்தை பாகுபாடு தற்காலத்தில் வெகுவாக குறைந்து விட்டது. அது பூஜ்ஜியத்தை நோக்கி நகரவேண்டும். குழந்தை வளர்ப்பில் பெரும்பாலும் பெண்களின் பங்கே அதிகமாக உள்ளது. ஆண்களின் பங்கும் இன்னும் பெரும்பாலும் குறைச்சலாகவே உள்ளது.
நாம் ஆண்டாண்டாக பெற்ற கல்வியும் தொழில்நுட்பமும் எப்படி குழந்தை வளர்ப்பில் வலுசேர்க்கப்போகின்றது என்பதில் கவனம் தேவை. தொழில்நுட்பம் நிறைய கவனச்சிதைவினை நோக்கிச்செல்கின்றது. நாமும் எதனை நோக்கி செல்கின்றோம் என்றே பலசமயம் புரிவதில்லை. குழந்தை என்னவாக வேண்டும் என்ற கேள்வியை திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டே இருந்தால் அது ஒவ்வொரு முறையும் புதிய புதிய பரிமாணத்தினை எடுக்கும். சிறப்பாக வளர்க்க வேண்டும் என்பதில் சிறந்த என்பதற்கான அர்த்தம் கூர்மையாகிக்கொண்டே செல்லும்.
வாழ்க்கை, வேலை என எதுவாக இருந்தாலும் தோல்வி ஏற்படுவது இயல்பானது. அதை நேர்மறையாக எடுத்துக்கொண்டு, தோல்விக்கான காரணத்தை ஆராய்ந்து, அதில் இருந்து வெற்றிக்கான வழியை உருவாக்கிக் கொள்ள வேண்டும். உங்களையும், உங்கள் முயற்சிகளையும் முழுமையாக நம்புகிற நபரைத் தேர்ந்தெடுத்து, அவருடன் சேர்ந்து பயணிப்பதே வளமான எதிர்காலத்துக்கான சரியான பாதைக்கு வழிவகுக்கும்.






