என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    தக்காளியில் பல்வேறு வைட்டமின் சத்துக்களும், மெக்னீசியம், நார்சத்து, இரும்புசத்து, பரஸ்பரஸ், பொட்டாசியம், கால்சியம் போன்ற சத்துக்களும் உள்ளன. இது எளிதில் ஜீரணமாகச் செய்யும். மலச்சிக்கலும் நீங்கும்.
    தேவையான பொருட்கள் :

    தக்காளி - 3,
    கறிவேப்பிலை - சிறிதளவு,
    சிறிய வெங்காயம் - 50 கிராம்,
    உப்பு - தேவையான அளவு
    மிளகு - 1 தேக்கரண்டி,  
    கடலை பருப்பு - 1 மேஜை கரண்டி,
    கடுகு - அரை தேக்கரண்டி
    எண்ணெய் - 1 தேக்கரண்டி

    செய்முறை:

    தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    அடுத்து தக்காளியை சேர்த்து கிளறவும்.

    உப்பு, மிளகு சேர்த்து கிளறி இறக்கி ஆறியதும் நன்றாக அரைக்கவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடலை பருப்பு, கறிவேப்பிலையை சேர்த்து தாளித்து, சட்னியில் சேர்த்து பரிமாறவும்.

    சூப்பரான தக்காளி சட்னி ரெடி.

    குறிப்பு: வெங்காயத்தை வதக்கிய பின்புதான் தக்காளியை சேர்க்கவேண்டும். முதலில் தக்காளியை கொட்டினால், அதன் சாறு வெங்காயத்தை வதங்கவிடாது.

    தாடிக்கு அழகும், ஆரோக்கியமும் சேர்ப்பதற்கு எண்ணெய் வகைகள் பயன்படுத்தப்படுகின்றன. அவை தாடியை மென்மையாகவும் அழகாகவும் மாற்றி கன்னங்களையும் ஈரப்பதத் தன்மையுடன் வைத்திருக்க உதவும்.
    தற்போது ஆண்கள் நிறைய பேர் தாடி வளர்க்கத் தொடங்கிவிட்டார்கள். தாடி வளர்த்தால் அதனை நேர்த்தியாக பராமரிப்பது முக்கியம். இல்லாவிட்டால் முகத்தின் அழகும், ஒட்டுமொத்த தோற்றமும் மாறிப்போய்விடும். தாடிக்கு அழகும், ஆரோக்கியமும் சேர்ப்பதற்கு எண்ணெய் வகைகள் பயன்படுத்தப்படுகின்றன. அவை தாடியை மென்மையாகவும் அழகாகவும் மாற்றி கன்னங்களையும் ஈரப்பதத் தன்மையுடன் வைத்திருக்க உதவும். தாடிக்கு பயன்படுத்தும் எண்ணெய்களை ரசாயன கலப்பு இல்லாமல் வீட்டிலேயே தயாரித்துவிடலாம்.

    யூக்கலிப்டஸ் எண்ணெயில் பாக்டீரியா மற்றும் நோய் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. மேலும் இந்த எண்ணெய் வேகமாக தாடியை வளர்க்க உதவும். ஒரு பாட்டிலில் 6 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யுடன் 3-4 சொட்டு யூக்கலிப்டஸ் எண்ணெய்யை கலந்தால் தாடி எண்ணெய் தயார். இந்த எண்ணெய்யை தினமும் பயன்படுத்தலாம். முதலில் ஈரமான துணியை கொண்டு முகத்தை நன்கு துடைத்துக்கொள்ளவும். பின்பு 4-5 சொட்டு எண்ணெய்யை உள்ளங்கையில் ஊற்றி தாடியில் தேய்த்து மசாஜ் செய்யவும். அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் தாடியை கழுவிவிடலாம்.

    தேங்காய் எண்ணெய்யையும் தாடிக்கு பயன்படுத்தலாம். 50 மி.லி தேங்காய் எண்ணெய்யுடன் பத்து சொட்டு ரோஸ்மேரி எண்ணெய் அல்லது லாவண்டர் எண்ணெய்யை கலந்து கொள்ளலாம். இந்த எண்ணெய் வாசனை மிக்கது. இரவில் தூங்க செல்வதற்கு முன்பு சிறிதளவு எண்ணெய்யை ஸ்பூனில் ஊற்றி மிதமாக சூடாக்கி தாடியில் தேய்த்து மசாஜ் செய்யவேண்டும். காலையில் எழுந்ததும் குளிக்கும்போது தாடியை கழுவிவிடலாம். தாடி மென்மையாகவும், அழகாகவும் காட்சியளிக்கும்.இந்த எண்ணெய் சருமத்திற்கும் நன்மை பயக்கும்.

    ‘டீ -ட்ரீ’ எண்ணெய்யும் தாடிக்கு நலம் சேர்க்கும். இது பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளையும் கொண்டது. தாடியை அடர்த்தியாகவும், ஈரப்பதமாகவும், பிரகாசமாகவும் வைத்திருக்கஉதவும். சரும நோய்களில் இருந்தும் பாதுகாக்கும். 50 மி.லி பாதாம் எண்ணெய்யுடன் 8 சொட்டு டீ-ட்ரீ எண்ணெய் கலந்து கொள்ளவும். தாடியை நன்றாக சுத்தம் செய்துவிட்டு சிறிதளவு எண்ணெய்யை தேய்த்து மசாஜ் செய்யவும். கால் மணி நேரம் கழித்து முகத்தை நீரில் கழுவிவிடலாம்.
    தனிநபர் பாலிசியில் காப்பீடு செய்பவர் மட்டும் ‘க்ளைம்’ செய்து கொள்ளலாம். புளோட்டர் பாலிசியில் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் ‘க்ளைம்’ செய்து கொள்ளலாம்.
    மருத்துவ செலவுகளுக்கு என்று பணம் சேர்த்து வைப்பதைவிட ஒரு மருத்துவக் காப்பீடு எடுத்துக் கொள்வது புத்திசாலித்தனமாகும்.

    குறைந்த செலவில் குடும்பத்தினர் அனைவருக்குமான மருத்துவ செலவுகளை இதன் மூலம் சமாளிக்கலாம். இந்த காப்பீடு தனித்தனியாகவும், குடும்பத்தினருக்கும் சேர்த்து புளோட்டர் என இரண்டு வகையிலும் கிடைக்கிறது.

    தனிநபர் பாலிசியில் காப்பீடு செய்பவர் மட்டும் ‘க்ளைம்’ செய்து கொள்ளலாம். புளோட்டர் பாலிசியில் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் ‘க்ளைம்’ செய்து கொள்ளலாம்.

    திருமணத்துக்கு முன்பு தனிநபர் பாலிசி எடுத்திருந்தால் திருமணத்துக்கு பிறகு மனைவி மற்றும் குழந்தைகளையும் இணைத்துக் கொண்டு புளோட்டர் பாலிசியாக மாற்றிக்கொள்ளலாம். வயதான பெற்றோருக்கு அடிக்கடி மருத்துவச் செலவுகள் ஏற்படும் என்பதால் இவர்களை புளோட்டர் பாலிசியில் சேர்க்காமல் தனி தனிநபர் பாலிசி எடுத்துக் கொள்வதும் நல்லது.

    3 மாத குழந்தை முதல் 86 வயது வரை இந்த பாலிசி அனுமதிக்கப்படுகிறது. நமது மருத்துவ தேவைகளை பொறுத்து மருத்துவ காப்பீட்டை முடிவு செய்ய வேண்டும். பிரீமியம் குறைவாக இருக்கிறது என்பதற்கான பாலிசியை தேர்ந்தெடுக்கக் கூடாது. பாலிசி மூலம் கிடைக்கும் பலன்களை பார்த்து முடிவு செய்ய வேண்டும்.

    பாலிசி எடுப்பதற்கு முன் காப்பீடு நிறுவனத்திடம் சில விஷயங்களை தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். முக்கியமாக பாலிசி எடுப்பதற்கு முன்பே சில நோய்கள் இருந்துவரலாம். உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நோய்கள், நீண்ட காலத்திற்கு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறக்கூடிய நோய்கள் இவற்றின் உண்மை தன்மைகளை மறைக்காமல் குறிப்பிட வேண்டும். சில பாலிசிகள் மருத்துவ செலவுகளை மட்டும் ஏற்பதாகக் குறிப்பிடும். மருத்துவமனை தங்கும் கட்டணங்கள் அதிகரித்துவரும் நிலையில் அதற்கும் கவரேஜ் கிடைக்க வேண்டும்.

    மேலும் மருத்துவமனை தங்கும் கட்டணம் நாள் ஒன்றுக்கு இவ்வளவுதான் என வரம்பு இருக்கும். இதில் அதிகபட்ச தொகை கிளைம் ஆவது போல பாலிசி எடுத்துக் கொள்ளுங்கள்.

    சில பாலிசிகளில் மருத்துவச் செலவுகளை நாம் எடுத்துக்ெகாண்ட பிறகு, ரசீதுகளை சமர்ப்பித்து க்ளைம் செய்து கொள்வதாக இருக்கலாம். இதற்கான காலம் எவ்வளவு என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். முக்கிய மருத்துவமனைகள், அல்லது அருகில் உள்ள பெரிய மருத்துவமனைகளுடன் காப்பீடு நிறுவனத்துக்கு ஒப்பந்தம் உள்ளதா என்பதையும் தெரிந்து கொண்ட பிறகே காப்பீடு எடுக்க வேண்டும்.

    பணிபுரியும் அலுவலகத்தில் குரூப் மெடிக்கல் இன்சூரன்ஸ் இருந்தாலும், தனியாக தனிநபர் அல்லது புளோட்டர் பாலிசியில் இருப்பதே நல்லது. ஒரு நிறுவனத்திலிருந்து வேலையை விட்டு விலகிவிட்டால் அந்த காப்பீட்டின் கவரேஜ் காலம் முடிந்துவிடும். எனவே எப்போதும் தனியாக எடுத்துக் கொள்வது நல்லது. அதிகரித்துவரும் மருத்துவ செலவுகள் காரணமாக மருத்துவக் காப்பீடு அத்தியாவசிய தேவை என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.


    பெண்கள் இறுக்கமாக அணியும் பாவாடை, உள்பாவாடை, சல்வார் நாடாக்களின் அழுத்தத்தாலும் அந்த இடங்களில் வெண்குஷ்டம் வர வாய்ப்பு அதிகம்
    தோல் நோய்களில் மிகவும் கடுமையாக, கொடுமையாக தோல்நோய் எதுவென்றால் அது வெண்குஷ்டம்தான்! வெண்குஷ்டம் காரணமாக ஒருவரின் உடல் நலமோ அல்லது அவருடன் தொடர்புடையவர்களின் உடல் நலமோ எந்த விதத்திலும் பாதிக்கப்பட மாட்டாது. அது தொற்று நோயும் அல்ல.

    இந்த நோய் காரணமாக ஆண்களை விட பெண்களே அதிகமாகப் பாதிக்கப்படுவதாக ஒரு கருத்து உள்ளது. இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 30 முதல் 40 சதவீத நோயாளிகளின் குடும்பத்தில் உள்ள பிற உறுப்பினர்களுக்கும் இந்த நோய் வர வாய்ப்பு உண்டு. அன்றாட வாழ்க்கைச் சூழலில் ஏற்படும் சில நிகழ்வுகளும், பழக்க வழக்கங்களுமே இந்த நோய் வர காரணமாக உள்ளன.

    உதாரணமாக அடிக்கடி உராய்வுக் காயங்கள் ஏற்படும் கால் மூட்டு, கை மூட்டு, மணிக்கட்டு போன்ற இடங்களில் வெண்குஷ்டம் வரலாம். சிறிய வெட்டுக் காயங்கள், நகம் கொண்டு பிராண்டிய இடங்களிலும் இந்த நோய் வரலாம். பெண்கள் தரமற்ற குங்குமப் பொட்டை வைத்துக் கொள்வதால் நெற்றியிலும், பிளாஸ்டிக் கைப்பை வைத்துக் கொள்பவர்களுக்கும் வெண்குஷ்டம் வர வாய்ப்பு உண்டு.

    மேலும் சிலர் அணியும் ரப்பர் செருப்புகளால் கால்களிலும், மூக்குக் கண்ணாடியின் சட்டம் படும் காதுப் பகுதிகளிலும், இறுக்கமாக அணியும் பாவாடை, உள்பாவாடை, சல்வார் நாடாக்களின் அழுத்தத்தாலும் அந்த இடங்களில் வெண்குஷ்டம் வர வாய்ப்பு அதிகம். சூரிய ஒளி அதிகம் படும் முகம், முதுகு, கைகளில்தான் வெண்குஷ்டம் முதலில் அதிகமாக தெரிய வரும்.

    தொடக்கத்தில் முகம், அக்குள், தொடை இடுக்குகள், மார்பகக் காம்பு, பிறப்பு உறுப்பு ஆகியவற்றில்தான் அதிகமாக வெண்குஷ்டம் ஏற்படும். பொதுவாக, இந்த வெண்படை உடலின் இரு பக்கங்களிலும் காணப்படும். எனினும் சில நேரங்களில் ஒரு பக்கமாகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட நரம்பு மண்டலத்தின் பகுதியிலோ காணப்படும்.

    சிலருக்கு இந்த நோய் ஏற்பட்டு அது பலகாலம் அப்படியே இருக்கும். சிலருக்கு மெதுவாகப் பரவலாம். மற்றும் சிலருக்கு அது மடமடவெனப் பரவி உடலின் பெரும் பகுதியை ஆக்கிரமிக்கலாம். மனிதனின் தோலுக்கு நிறம் கொடுக்கும் பொருள் “மெலனின்’ எனப்படும் நிறமி. மெலனின் நிறமியின் அடர்த்தியைப் பொருத்து, அது அதிகம் இருந்தால் தோலின் நிறம் கருப்பாகவும், குறைவாக இருந்தால் வெளுப்பாகவும் அமைகிறது.

    இந்த நோய் ஏற்பட்டதற்கான புறக்காரணங்கள் தெரிந்தால் அவற்றைத் தவிர்க்க வேண்டும். உதாரணமாக குங்குமம் வைப்பதால் நெற்றியில் அந்த இடம் வெளுப்பாகத் தெரிந்தால் குங்குமத்துக்குப் பதிலாக வேறு பொருளைப் பயன்படுத்த வேண்டும். செருப்பு, உள்ளாடைகள் போன்றவற்றைப் பயன்படுத்துவதில் கவனமாக இருக்க வேண்டும்.

    சிறிய கண்களாக இருந்தால் கீழ்ப்பாகத்தில் கெட்டியாக போடுவதற்கு முயற்சிக்கக்கூடாது. மேல்பகுதியை நன்றாக வரைந்து, சிறிய வால் கொடுத்தால் அதுவே பொருத்தமாக அமைந்துவிடும்.
    சிவப்பு நிற அழகுக்கு பெண்கள் ஏங்கிய காலம் விடைபெற்றுக்கொண்டிருக்கிறது. சிவப்பை மறந்து, கருப்பு அழகை விரும்பத் தொடங்கியிருக்கிறார்கள். இருண்ட நிறமும், இருட்டான மேக்கப்பும் தங்களுக்கு பிடித்தமானது என்று பெண்களில் பலரும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கருப்பாக தோன்ற `டார்க் ஸ்கின் ஷேட்ஸ்' பயன்படுத்துகிறார்கள். கருப்பை மேக்கப்பில் மட்டுமின்றி, ஆடையிலும் அதிக அளவில் உபயோகிக்கிறார்கள். பொருந்தாது என்று ஒதுக்கப்பட்ட கருப்பு நிற ஆடைகளும் இப்போது புதுப்புது வடிவங்களில் கவர்ச்சியாக வலம் வருகின்றன.

    டார்க் ஸ்கின் கொண்டவர்கள் கூடுதல் அழகுடன் திகழ மேற்கொள்ளவேண்டிய மேக்கப் முறை:

    கருப்பு நிறம் கொண்டவர்கள் பவுண்ட்டேஷனில் அதிக அக்கறை செலுத்தவேண்டும். பவுண்ட்டேஷனில் ஐவரி, பெய்ஜ், பிரவுன்ஸ் போன்றவை குறிப்பிடத்தக்கவை. டார்க் ஸ்கின் கொண்டவர்களுக்கு பிரவுன்ஸ் ஷேடுகள் பொருத்தமாக இருக்கும். டார்க் ஸ்கின்னாக தோன்ற விரும்புகிறவர்கள் வழக்கமாக பயன் படுத்தும் நிறத்தினோடு, பிரவுன்ஸ் ஷேடு கலந்து பயன்படுத்தவேண்டும்.

    பெண்கள் ஒவ்வொருவருக்கும் தங்கள் முகத்தில் அழகான உறுப்பு எதுவென்று தெரியும். கவர்ச்சியான அந்த பகுதிக்கு மேக்கப்பில் அதிக முக்கியத்துவம் கொடுத்து பட்டைத்தீட்டவேண்டும். அதாவது புருவம் அழகானதாக தோன்றினால், அதனை ஹைலைட் செய்யவேண்டும். பவுண்ட்டேஷன் பூசும்போது முகத்தின் அனைத்துப்பகுதியிலும் அது துல்லியமாக ஒரே மாதிரி பதிந்தால்தான் முழுஅழகு கிடைக்கும். பவுண்ட்டேஷன் என்பது சருமத்தை சிவப்பாக்குவதற்கு அல்ல. ஸ்கின் டோனை பாதுகாப்பதே அதன் வேலை. தென்னிந்திய பெண்களுக்கு பொதுவாகவே `வாம் டோன் பவுண்ட்டேஷன் பேஸ்' தான் சிறந்தது.

    கண்களை ஜொலிக்கவைத்தால் முகத்தின் அழகு இரட்டிப்பாகும். கண்களை அழகுபடுத்து வதில் ஒவ்வொருவரும் ஒரு ஸ்டைலை கடைப் பிடிப்பார்கள். அந்த ஸ்டைலில் சிறந்ததை அவர்கள் பின்பற்றினால்போதும். அதனை கல்லூரிக்கு செல்லும்போதும், விருந்து-விழாக்களுக்கு செல்லும்போதும் பயன்படுத்தவேண்டும்.

    சிறிய கண்களாக இருந்தால் கீழ்ப்பாகத்தில் கெட்டியாக போடுவதற்கு முயற்சிக்கக்கூடாது. மேல்பகுதியை நன்றாக வரைந்து, சிறிய வால் கொடுத்தால் அதுவே பொருத்தமாக அமைந்துவிடும்.

    அகன்ற கண்களை கொண்டவர்கள் மேலும், கீழும் கெட்டியாக வரைந்து வால்கொடுத்தால் நன்றாக இருக்கும். பெரிய கண்கள் அமையப்பெற்றவர்கள், முக்கியத்துவம் கொடுத்து கண் அழகை மேம்படுத்தவேண்டும். இப்போது பல நிறங்களில் கண் மை கிடைக்கிறது. கலர் பென்சில் பயன்படுத்துகிறவர்களுக்கு அடர்ந்த நீலமும், டீல் கிரீனும் பொருந்தும். ஐஷேடோ பயன் படுத்தும்போது சிங்கள் ஷேடுகள் கொடுக்காமல், சில நிறங்களை கலந்து கொடுத்தால் அதிக அழகு கிடைக்கும்.

    கூந்தல் அலங்காரமும் குறிப்பிடத்தக்கதாக இருக்கிறது. கூந்தல் அலங்காரத்திற்கும், சரும நிறத்திற்கும் சம்பந்தம் இல்லை. ஆனால் உடல் அமைப்பிற்கும், முக அமைப்பிற்கும் கூந்தல் அலங்காரத்திற்கும் தொடர்பு இருக்கிறது. குண்டான உடல்வாகினை கொண்ட பெண்கள் கூந்தலை அவிழ்த்துவிட்டுக்கொண்டால் பொருத்தமாக அமையும். குண்டான முக அமைப்பை கொண்டவர்களும் தலைமுடியை தோள் வரை வெட்டி, அலைபாயும் கூந்தலுடன் வலம் வரலாம். நீளமான கூந்தலை கொண்டவர்கள் பிடித்த மாதிரி கூந்தலை வெட்டிக்கொண்டு, ஒரு பக்கமாக வகிடு எடுத்து இருபக்கமாகவும் முன்னால் தூக்கிப் போட்டுக்கொள்ளலாம்.

    சிறிய முக அமைப்பை கொண்டிருந்தால் சுருண்ட கூந்தலுக்கும், ஸ்ட்ரைட் கூந்தலுக்கும் `பாய்கட்' பொருத்தமாக இருக்கும். கூந்தலை இறுக்கிப்பிடித்து கட்டிவைத்தாலும் இவர்களுக்கு அழகு கிடைக்கும். ஓவல் ஷேப் முக அமைப்பு கொண்டவர்களுக்கு `லோ ஷைடு பன் ஹேர் ஸ்டைல்' பொருந்தும். முடியை முழுவதுமாக வாரி எடுத்து பன் செய்து வட்டமாக கட்டும் முறை சிறந்தது.

    புஷ்டியான கன்னங்களை கொண்டவர்கள், பின்புறமாக வாரி சீவி, போனிடைல் போட்டுக்கொள்ளலாம். சதுரமான முக அமைப்பை கொண்டவர்கள் கூந்தலை அலையாக அவிழ்த்துவிடுவது பொருத்தமாக இருக்கும். நீளவாக்கில் சிறிய முகமாக இருந்தால் ஸ்ட்ரெய்ட் செய்து தோள் வரை பாப் செய்துகொள்ளலாம்.

    பெண்களுக்கு உதட்டு அலங்காரம் இன்றியமையாதது. லிப்ஸ்டிக்கை பொறுத்தவரையில் அது அவரவர் விருப்பத்திற்கு உரியது. ஆனாலும் அதில் சில பரி சோதனை முயற்சிகளை மேற்கொண்டால் அது உதடு களுக்கு கூடுதல் அழகு சேர்க்கும் என்பது உண்மைதான். கருப்பு நிறம் கொண்ட பெண்களுக்கு அடர் நிறத்திலான லிப்ஸ்டிக் பொருந்தாது என்ற எண்ணம் இப்போது மாறிவிட்டது. கருப்பு நிற பெண்களும் அடர் நிறத்திலான லிப்ஸ்டிக்குகளை பயன்படுத்தலாம்.

    டார்க் ஸ்கின் கொண்டவர்களுக்கு, சிவப்பு நன்றாக பொருந்தும். சிவப்பில் பலவிதமான ஷேடுகள் இருந்தாலும் ரூபி ரெட் நன்றாக இருக்கும். டார்க் ஸ்கின் கொண்டவர்களுக்கு நியான் ஆரஞ்சும் இணக்க மானது. டீப் பர்கண்டியும் பொருந்தும். இவைகளில் மேட் பினிஷ்க்கு பதில் கிரீம் பினிஷை தேர்ந்தெடுப்பது சிறந்தது.

    மேட் பினிஷ் லிப்ஸ்டிக் தேர்ந்தெடுப்பவர்களுக்கு மெஜந்தா ஷேடு அதிகம் பொருந்தும். சாக்லெட் மேட் பினிஷையும் பயன்படுத்தலாம். டார்க் ஸ்கின் டோன் கொண்டவர்கள் உதடுகளில் லிப் லைனரால் வரைந்து விட்டு லிப்ஸ்டிக் போட்டால் கூடுதல் கவர்ச்சி கிடைக்கும்.

    கருப்பு நிறம் கொண்ட பெண்கள் பளிச் நிறங்களின் மீது பாராமுகமாக இருக்கக்கூடாது. மாறாக எல்லா நிறமும் தனக்கும் பொருந்தும் என்று தன்னம்பிக்கைகொள்ள வேண்டும். அனைத்து சரும வகையினருக்கும் ஐவரி பொருத்தமாக இருக்கும். டார்க் ஸ்கின் வகையை சேர்ந்தவர்கள் புடவையானாலும், மாடர்ன் டிரஸ் என்றாலும் கண்களை மூடிக்கொண்டு ஐவரியை தேர்ந்தெடுக்கலாம். அனைத்து வகை சரும பிரிவினருக்கும் கருப்பு நிற உடைகளும் பொருத்தமாகத்தான் இருக்கும்.

    டார்க் ஸ்கின் கொண்டவர்கள் மஞ்சள் நிற உடைகளை தவிர்க்கவேண்டும். அதே நேரத்தில் மஞ்சள் நிற ஷேடு கொண்ட உடைகளை கருப்பு நிறமானவர் களுக்கும் ஆடை வடிவமைப்பாளர்கள் பரிந்துரைக் கிறார்கள். அதன் மூலம் அவர்களது அழகு மெரு கேறுகிறது.

    தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் வெளிப் படுத்த விரும்பும் கருப்பு நிற பெண்கள், நீல நிற ஆடைகளை தேர்ந்தெடுக்கலாம். அனைத்து வகை சருமத்தினருக்கும் லாவெண்டர் பொருந்தும். இது சுவீட் அன்ட் சிம்பிள் என்று வர்ணிக்கப்படுவதாகும். டார்க் ஸ்கின் கொண்டவர்கள் அணியும் ஆடைகளில் ஏதாவது ஒன்று வெள்ளை நிறத்தில் இருப்பது சிறப்பு. அப்படியிருந்தால் அவர்களது தன்னம்பிக்கை இரட்டிப்பாகும்.

    கருப்பு நிறம் கொண்டவர்கள் மணப்பெண் அலங்காரத்திலும் கவலைப்படவேண்டியதில்லை. மேக்கப் நிபுணர்கள் `உங்களுக்கு பிடித்த உடைகளை எடுத்துக்கொண்டு வாருங்கள். அதற்கு பொருத்தமாக உங்கள் மேக்கப் அலங்காரத்தை நாங்கள் மாற்றிக்காட்டுகிறோம்' என்கிறார்கள். பொருத்தமாக இருக்காது என்று நினைத்து நீங்கள் எதையும் தவிர்க்க வேண்டாம் என்று அவர்கள் சொல்கிறார்கள். கருப்பு நிறம் கொண்டவர்கள் அதிக ஜொலிப்புகொண்ட புடவைக்கு பதில், குறைந்த அளவு ஜரிகை கொண்ட புடவையை தேர்ந்தெடுத்தால் அழகு அதிகரிக்கும்.
    இன்றைய வாழ்க்கை சூழலில் உடல் சார்ந்த விளையாட்டுகளில் ஈடுபடுவதற்கு பெரும்பாலான குழந்தைகள் விரும்புவதில்லை. ஆன்லைன் விளையாட்டுகள், வீடியோ கேம்கள்தான் அதற்கு காரணமாக அமைந்திருக்கின்றன.
    குழந்தைகளிடத்தில் சுறுசுறுப்பை தக்கவைத்துக்கொள்ளும் தன்மை விளையாட்டுக்கு உண்டு. ஓடியாடி விளையாடும்போது அவர்களுடைய உடல் மட்டுமின்றி மனமும் உற்சாகம் அடையும். தேவையற்ற மன அழுத்தம், பதற்றம், மனச்சோர்வு போன்றவற்றை போக்க உதவும். குழந்தைகளை அவர்களுக்கு பிடித்தமான விளையாட்டுகளில் தினமும் குறிப்பிட்ட நேரமாவது ஈடுபட வைக்க வேண்டும்.

    ஆனால் இன்றைய வாழ்க்கை சூழலில் உடல் சார்ந்த விளையாட்டுகளில் ஈடுபடுவதற்கு பெரும்பாலான குழந்தைகள் விரும்புவதில்லை. ஆன்லைன் விளையாட்டுகள், வீடியோ கேம்கள்தான் அதற்கு காரணமாக அமைந்திருக்கின்றன. அதற்கு இடம் கொடுக்க பெற்றோர் அனுமதிக்கக்கூடாது. குழந்தைகள் வாழ்வில் உடல் சார்ந்த விளையாட்டுகள் ஒரு அங்கமாக அமைந்திருக்க வேண்டும்.

    * எலும்புகள் மற்றும் தசைகள் பலப்படும்.

    * உடல் எடையை சீராக பராமரிக்க உதவும்.

    * நோய்த்தொற்று ஏற்படும் அபாயத்தை குறைக்கும்.

    * சுவாசம் மேம்படுவதற்கு வழிவகுக்கும்.

    * கல்வி கற்கும் திறனை மேம்படுத்துவதற்கும் துணைபுரியும்.

    * விளையாட்டுகள் வெற்றி, தோல்விகளை தீர்மானிப்பதோடு ஒரு இலக்கை நோக்கி முன்னேறி செல்ல தூண்டுகோலாக அமையும். குழுவாக இணைந்து செயல்படுவதற்கும் வழிவகை செய்யும். சிக்கல்களுக்கு தீர்வு காண்பதற்கும், தீர்க்கமாக முடிவெடுப்பதற்கும் உதவும். குழந்தைகளிடத்தில் சுய மரியாதையையும் அதிகரிக்கச்செய்யும்.

    * கடின உழைப்புக்கு உரிய அங்கீகாரத்தையும் பெற்றுத்தரும்.

    * விளையாடுவதை வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாக மாற்றும்போது உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஆரோக்கியம் மேம்படும்.

    * இதய ஆரோக்கியம் சீராக இருக்கும். இதனால் மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை ஏற்படும் அபாயம் குறையும்.

    * ரத்த அழுத்தத்தை நிர்வகிக்கவும் உதவும்.

    * தசை வலிமை மேம்படும். தசைகள் நெகிழ்வுத்தன்மை அடையவும் கூடும். உடல் இயக்கமும் சீராக நடைபெறும்.

    * மன அழுத்தத்தில் இருந்து விடுவிக்கும். மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

    * சில வகையான புற்றுநோய்களின் அபாயத்தை குறைக்கும்.

    * உடலில் உள்ள கொழுப்பின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.

    * நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும்.

    * ஆழ்ந்த தூக்கத்திற்கு வித்திடும். ஆயுளை அதிகரிக்கும்.

    உணவு பழக்கம்:

    உடல் இயக்க செயல்பாடு என்பது உடற்பயிற்சியின் ஒரு அங்கமாகும். விளையாடுவது உடலுக்கு உகந்த பயிற்சியாகவும் அமையும். விளையாட்டு, உடற்பயிற்சி போன்ற செயல்களில் ஈடுபட்ட பிறகு உணவு விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பழங்கள், ஓட்ஸ், உருளைக்கிழங்கு, சர்க்கரைவள்ளிக்கிழங்கு போன்ற மாவுச்சத்து கொண்ட காய்கறிகள், பச்சை இலை காய்கறிகள், கீரைகள், பிராக்கோலி, முழு தானியங்கள் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதேசமயத் தில் எனர்ஜி பானங்கள், சோடா, அதிக கொழுப்பு கொண்ட பொருட்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். காபின் கலந்த உணவுகளை குறைவாக உட்கொள்ள வேண்டும்.

    அன்றாட செயல்பாடுகளில் ஏரோபிக் பயிற்சிகள் மற்றும் தசை, எலும்புகளை வலுப்படுத்தும் உடற்பயிற்சிகளையும் சேர்க்க வேண்டும். மேலும், காலை உணவை தவிர்க்காமல் உண்ண வேண்டும். தேவைப்பட்டால் வழக்கமாக சாப்பிடும் நேரத்திற்கு இடையே சிறிது உணவு உட்கொள்ளலாம்.
    பாகற்காயினை தினமும் வேகவைத்து சாப்பிடுவதால் நோயெதிர்ப்பு சக்தி கூடும். ஒரு வாரம் தொடர்ந்து பாகற்காய் ஜூஸ் குடித்தால் ஈரல் தொடர்பான பிரச்சனைகள் தீரும்.
    தேவையான பொருட்கள்:

    பிஞ்சு பாகற்காய் - 100 கிராம்,
    மஞ்சள்தூள் - 2 சிட்டிகை,
    மோர் - 2 டேபிள்ஸ்பூன்,
    சின்ன வெங்காயம் - 6 ,
    தக்காளி - 2 ,
    சீரகம் - ஒரு டீஸ்பூன்,
    மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்,
    அரிசி கழுவிய தண்ணீர் - 200 மில்லி,
    சோள மாவு (கார்ன் ஃப்ளார்) கரைசல் - ஒரு டீஸ்பூன்,
    எண்ணெய் - 2 டீஸ்பூன், தண்ணீர்,
    உப்பு - தேவைக்கேற்ப.

    செய்முறை:

    சின்ன வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பிஞ்சு பாகற்காயைச் சுத்தம்செய்து பொடியாக நறுக்கி மோர்விட்டு அரை மணி நேரம் கழித்து மோரிலிருந்து எடுத்து மஞ்சள்தூள், உப்பு சேர்த்து பிசைந்து 15 நிமிடங்கள் ஊறவைக்கவும்.

    ஒரு வாணலியில் எண்ணெய்விட்டு சீரகம் தாளித்து, நறுக்கிய சின்ன வெங்காயம், தக்காளி போட்டு வதக்கியபின் ஊறவைத்த பாகற்காயைச் சேர்த்து வதக்கவும்.

    பின்னர் அதில் அரிசி கழுவிய தண்ணீர், சோள மாவுக்கரைசல் சேர்த்து நன்கு வேகவைத்து மிளகுத்தூள் தூவி இறக்கவும்.

    வடிகட்டி அல்லது அப்படியே பரிமாறவும்.

    சத்து நிறைந்த பிஞ்சு பாகற்காய் சூப் ரெடி.

    கொரோனா - டெங்கு காய்ச்சல் இந்த இரண்டு நோய்களும் ஒரே மாதிரியான அறிகுறிகளை வெளிப்படுத்துவது போல் தோன்றலாம். ஆனால் ஒருசில அறிகுறிகள் மாறுபடுகின்றன.
    கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா முடிவுக்கு வராத நிலையில் பருவ கால நோய்களும் பாதிப்பை அதிகப்படுத்திக்கொண்டிருக்கின்றன. கொரோனா மற்றும் டெங்கு ஆகிய இரண்டு நோய்த்தொற்று அறிகுறிகளுடன் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள். இரண்டு நோய்களும் ஒரே மாதிரியான அறிகுறிகளை வெளிப்படுத்துவது போல் தோன்றலாம். ஆனால் ஒருசில அறிகுறிகள் மாறுபடுகின்றன.

    கொரோனாவில் இருந்து டெங்கு எவ்வாறு வேறுபடுகிறது?

    * வாசனை மற்றும் சுவையை அறிந்து கொள்ள முடியாமை கொரோனா பாதிப்பின் அறிகுறியாகும். டெங்கு, அதுபோன்ற அறிகுறிகளை கொண்டிருப்பதில்லை.

    * சுவாச தொற்று நோயான கோவிட்-19 உடன் ஒப்பிடுகையில் டெங்கு பாதிப்பின்போது வயிற்றுப்போக்கு ஏற்படுவது பொதுவானது. தொடர்ந்து வயிற்று போக்கு ஏற்படுவது டெங்கு காய்ச்சலின் அறிகுறியாக அமையலாம்.

    * காய்ச்சல், வறட்டு இருமல், சோர்வு, தொண்டை புண், வெண்படலம், தலைவலி, மூச்சுத் திணறல், மார்பு வலி போன்றவை கொரோனாவின் பொதுவான அறிகுறிகளாகும்.

    * ஆனால் கொசுவால் பரவும் டெங்கு காய்ச்சல் அப்படிப்பட்டதல்ல. டெங்குவின் தீவிரத்தைப் பொறுத்து லேசான டெங்கு காய்ச்சல், ரத்தப்போக்குடன் கூடிய காய்ச்சல் பாதிப்பு உண்டாகும். 10 வயது குட்பட்ட குழந்தைகளுக்கு வயிற்றுவலி, ரத்தப்போக்கு போன்ற பாதிப்புகள் நேரும்.

    லேசான டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள்:

    மூட்டு மற்றும் தசை வலி, அதிக காய்ச்சல், உடலில் தடிப்பு ஏற்படுவது, அடிக்கடி வாந்தி எடுப்பது, கடுமையான தலைவலி போன்றவை லேசான டெங்கு காய்ச்சலின் அறிகுறியாக இருக்கலாம். முறையாக சிகிச்சை பெற்றால் இந்த அறிகுறிகள் ஒரு வாரத்தில் மறைந்துவிடும் .

    ரத்தக்கசிவுடன் கூடிய காய்ச்சலின் அறிகுறிகள்

    பல் ஈறுகள், மூக்கு, வாய் பகுதியில் ரத்தப்போக்கு, ரத்தத் தட்டுக்களின் எண்ணிக்கை குறைவது, வயிற்றுப்போக்கு, வலிப்பு, சருமத்தில் சிறு சிறு தடிப்புகள் தோன்றுவது, வயிற்றுவலி, ஒவ்வாமை போன்றவை இதன் அறிகுறிகளாக இருக்கும். முறையான மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால் உடல் நிலை மோசமடைந்துவிடும்.

    டெங்கு சிண்ட்ரோம்

    ‘டெங்கு ஷாக் சிண்ட்ரோம்’ எனப்படும் இந்த நோய் பாதிப்பின் அறிகுறிகள் ஆபத்தை அதிகப்படுத்தக் கூடியவை. குறைந்த ரத்த அழுத்தம், நாடி துடிப்பு அதிகரிப்பது அல்லது குறைவது, மூளைக்கு செல்லும் ஆக்சிஜன் தடைபடுவது, மூளை வீக்கம் அடைவது, அதிக ரத்தப்போக்கு, காய்ச்சல் ஏற்படுவது, வாந்தி, கடுமையான வயிற்றுவலியை அனுபவிப்பது போன்றவை இதன் அறிகுறிகளாகும்.

    இத்தகைய அறிகுறிகள் தென்பட்டால் அது டெங்கு காய்ச்சல்தான் என்பதை உறுதிபடுத்தி விடலாம். நிலைமை மோசமாக இருந்தால் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற வேண்டியிருக்கும்.
    சேமிப்பு நிதியில் இருந்து வீடு கட்டுவோர் தம்மிடம் உள்ள தொகைக்கும், தமது தேவைக்கும் போதுமான இடத்தில் தம் விருப்பத்திற்கு ஏற்றார்போல் வீடு கட்ட வேண்டும்.
    புதிதாக வீடு கட்டுபவரா நீங்கள்? வீடு கட்டுவதற்கான நிதி, வங்கி கடன் போன்ற சில பயனுள்ள தகவல்கள் இதோ...

    வீடு கட்டும் இடத்தை தேர்வு செய்யும் முன் தொழில், சூழ்நிலை, வருமானம், எதிர்கால தேவை போன்றவற்றை கருத்தில் கொண்டு முடிவு செய்ய வேண்டும். வீடு கட்ட தேவையான நிதியை சேமிப்பு நிதியில் இருந்து எடுத்துக்கொள்வதா, வங்கி கடன் பெறுவதா என்று முடிவு செய்யவேண்டும்.

    சேமிப்பு நிதியில் இருந்து வீடு கட்டுவோர் தம்மிடம் உள்ள தொகைக்கும், தமது தேவைக்கும் போதுமான இடத்தில் தம் விருப்பத்திற்கு ஏற்றார்போல் வீடு கட்ட வேண்டும். வீடு கட்டும் முன் எவ்வளவு செலவுக்குள் செய்து முடிக்க வேண்டும் என்று முன்பே தீர்மானித்துக்கொள்ள வேண்டும். வீடு கட்டும் முன் ஒரு சிறந்த கட்டிட பொறியாளரின் ஆலோசனையை பெற வேண்டும். நமக்கு மட்டுமின்றி எதிர்காலத்தில் நம் சந்ததியினருக்கும் உதவக்கூடிய வீட்டை சிறந்த முறையில் கட்ட திட்டமிடவேண்டும்.

    கடன் வாங்கி வீடுகட்டுவோர்: முதலில் தம்முடைய கடன் தேவை எவ்வளவு என்று கணக்கிட வேண்டும். அதேபோல் வங்கி கடனை எத்தனை ஆண்டுக்குள் திருப்பி செலுத்த வேண்டும் என்பதையும் முடிவு செய்ய வேண்டும்.

    அரசு, அரசு சார்ந்த மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவோர் அல்லது சொந்த தொழில் செய்வோர் (வருமான வரி செலுத்துபவர்கள்) மட்டுமே கடன் பெற முடியும். குறைந்த வட்டியில் தகுதியான நிறுவனத்தில் கடனை பெற முடிவு செய்ய வேண்டும். வீடு கட்டும் இடம் கடன் கேட்டு விண்ணப்பிக்கும் நபர் பெயரிலோ, அல்லது அவரது மனைவியின் பெயரிலோ இருக்க வேண்டும்.

    விண்ணப்பதாரரின் கடனை திருப்பிச் செலுத்தும் கால அளவு, அவருடைய வயது, வருமானம் இவற்றை வைத்து முடிவு செய்யப்படும்.

    அதிகபட்சமாக வீடு கட்ட, அல்லது கட்டிய வீடு வாங்குவதற்கு, அதனுடைய ஒட்டுமொத்த செலவில் 85 சதவீதம் மட்டுமே கடன் பெறமுடியும். எனவே மீதியுள்ள தொகையை முதலில் முதலீடு செய்து வீட்டு வேலையை தொடங்க வேண்டும்.

    கடன் வாங்கிய பிறகு அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் இருப்பவர்கள், தங்களுடைய வேலையில் இருந்து ஓய்வு பெறும் முன்கடனை முடிக்க தீர்மானிக்கவேண்டும். தொழில் புரிவோர் குறுகிய காலத்திற்குள் கடனை அடைக்க முயற்சிக்க வேண்டும்.

    நம்மிடம் மொத்தமாக பணம் கிடைக்கும்போது கடனை திருப்பிச் செலுத்தும் முறையில் வங்கியில் வீட்டுக்கடன் பெற வேண்டும். கடனை செலுத்தும்போது மீதி வரும் கடன் தொகைக்கு மட்டுமே வட்டி கணக்கிடும் முறையில் வங்கியில் கடன் பெற வேண்டும். கடன் அதிகமாக கிடைக்கிறது என்பதற்காக அதிக தொகையை வாங்கிவிடக்கூடாது. தேவைக்கு ஏற்ப மட்டுமே கடன் வாங்க வேண்டும். அப்போதுதான் கடனை எளிதாக திருப்பி செலுத்த முடியும்.

    அதனால் நாம் நம்முடைய வருமானத்தில் 35 சதவீதத்தை மட்டுமே கடனாக திருப்பி செலுத்தும் தொகையாக பார்த்துக்கொண்டு அதற்கேற்ப கடன் வாங்க வேண்டும். சிறப்பான முறையில் வீடு கட்டுவதற்கு மேற்கண்ட வழிமுறைகள் உதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
    தாய்ப்பால் கொடுப்பதில் சிக்கல்களும், சவால்களும் இருக்கத்தான் செய்கிறது. தாய்ப்பால் கொடுக்கும்போது தாய்மார்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து பார்ப்போம்.
    பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால்தான் சிறந்த ஊட்டச்சத்தாக உள்ளது. அதுதான் குழந்தையின் உடலுக்கு தேவையான கொழுப்பு, புரதம், வைட்டமின்கள் மற்றும் நோய் எதிர்ப்பு தன்மையை வழங்குகிறது. குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்துக்குள் பாலூட்ட வேண்டும்.

    முதல் ஆறு மாதங்களுக்கு பிரத்யேகமாக தாய்ப்பால்தான் கொடுக்க வேண்டும். தாய்ப்பால் கொடுப்பதில் சிக்கல்களும், சவால்களும் இருக்கத்தான் செய்கிறது. தாய்ப்பால் கொடுக்கும்போது தாய்மார்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து பார்ப்போம்.

    பால் கசிதல்: முதல் குழந்தையை பெற்றெடுக்கும் தாய்மார்கள் சில சமயங்களில் பால் கசிவு பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடும். திடீரென்று மார்பகத்தில் இருந்து பால் சுரந்து வெளியேற தொடங்கும். இந்த கசிவு எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் ஏற்படலாம். மூன்று முதல் ஆறு வாரங்களுக்குள் பால் கசிவு பிரச்சினை சரி செய்யப்பட வேண்டும். குழந்தைக்கு பால் கொடுப்பதை தவிர்க்கவோ அல்லது நீண்ட நேரம் கழித்து கொடுக்கவோ கூடாது.

    பால் கசிவு பிரச்சினை இருந்தால் ‘நர்சிங் பேடுகளை’ பயன்படுத்தலாம். அவை ஈரப்பதத்தை உறிஞ்சுவதற்கும், ஆடையில் பால் கசிந்து வருவதை தடுக்கவும் உதவும். பிளாஸ்டிக் பேடுகளை தவிர்க்க வேண்டும். அவை சருமத்தில் இருக்கும் ஈரப்பதத்திற்கு எதிராக செயல்படுவதோடு மார்பு காம்புகளில் வலியை ஏற்படுத்தும். பால் கசிவதை உணர்ந்தாலோ, குழந்தைக்கு பாலூட்ட முடியாவிட்டாலோ மார்பு காம்புகளை மென்மையாக அழுத்துவது பால் கசிவை தடுக்க உதவும்.

    மார்பு காம்புகளில் வலி: குழந்தைக்கு பால் கொடுக்க தொடங்கும் ஆரம்ப நாட்களில் மார்பக காம்பில் வலி ஏற்படக்கூடும். மார்பகங்களில் கடுமையான வலியையோ, அசவுகரியத்தையோ உணர்ந்தால் தாய்க்கும், சேய்க்கும் இடையேயான பிணைப்பில் குறைபாடு இருப்பதாக அர்த்தம். குழந்தை சரியாக பாலை உறிஞ்சவில்லை, சரியாக கையாளவில்லை என்பதை குறிக்கும். எனவே தாய்ப்பால் கொடுக்கும்போது கடுமையான வலியை அனுபவித்தால் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. உரிய ஆலோசனை பெறுவது அவசியம்.

    புண்: தாய்ப்பால் கொடுக்கும்போது ஊசி குத்துவது போன்ற உணர்வை சிலர் அனுபவிப்பார்கள். மார்பக காம்புகளில் புண்களும் உண்டாகக்கூடும். இந்த பிரச்சினை தற்காலிகமானது. சில வாரங்களில் சரியாகிவிடும். தொடர்ந்து காயங்கள் உண்டானாலோ, காயங்கள் ஆறாமல் இருந்தாலோ கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமானது.

    குழந்தைக்கு பால் கொடுப்பதற்கு பயிற்சி அளிக்க வேண்டும். ஆரம்பத்தில் குழந்தை வலுவாக உறிஞ்சும். தாய்ப்பால் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருப்பதால், குழந்தைக்கு நோய்த் தொற்று ஏற்படுவதற்கான அபாயத்தைக் குறைக்க உதவும். அதனால் தாய்ப்பால் கொடுப்பதை தவிர்க்கக்கூடாது. மார்பக காம்பில் புண் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற்று லோஷன் தடவலாம்.

    மார்பக அழுத்தம்: தாய்ப்பால் கொடுக்க தொடங்கும் சமயத்தில் மார்பகங்கள் கனமாக இருப்பது இயல்பானது. ஆனால் தொடர்ந்து அதே அசவுகரியத்தை அனுபவித்தால் மூச்சுத்திணறல் ஏற்படக்கூடும். குழந்தைக்கு நீண்ட நேரம் பால் கொடுக்கவில்லை என்றால் பால் நிரம்பிவிடும். அதன் காரணமாகவும் இந்த பிரச்சினை ஏற்படலாம்.

    இதனை தவிர்ப்பதற்கான எளிதான அணுகுமுறை, குறைந்தது இரண்டு முதல் மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை பாலூட்டும் வழக்கத்தை பின்பற்றுவதாகும். குழந்தைக்கு பால் கொடுப்பதற்கு முன்பு மார்பகங்களை மென்மையாக அழுத்தி மசாஜ் செய்தும் வரலாம்.

    பிறந்த குழந்தைகளுக்கு முதல் முறையாக தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்.

    குழந்தைகளின் தலையை மார்பிலிருந்து 45 டிகிரி கோணத்தில் வைக்க வேண்டும். அமர்ந்த நிலையில் இருந்து குழந்தைக்கு பாலூட்டுவது நல்லது. பாலூட்டிய உடனேயே குழந்தையை தூங்க விடாதீர்கள். பாலூட்டிய பிறகு, குழந்தையின் தலையை உங்கள் தோள்பட்டையில் சாய்ந்த நிலையில் இரண்டு நிமிடங்கள் வைத்திருங்கள்.

    கடந்த 25 ஆண்டுகளில் உலக அளவில் சுமார் 80 மில்லியன் குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கின்றன. ஆனால் கொரோனா வைரஸ் பரவல் நிலைமையை மோசமாக்கிவிட்டது.
    உலகின் பல பகுதிகளிலும் குழந்தை திருமணங்கள் தொடர்கதையாக தொடர்ந்து கொண்டிருக்கின்றன. தெற்காசியாவில் கிட்டத்தட்ட 6 பெண்களும், உலகம் முழுவதும் 60 சிறுமிகளும் குழந்தை திருமணம் காரணமாக ஏற்படும் கர்ப்பம் மற்றும் பிரசவம் காரணமாக தினமும் இறக்கிறார்கள்.

    இதுதொடர்பாக ‘சேவ் தி சில்ட்ரன் 'அறக்கட்டளை ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் 22 ஆயிரம் பெண்கள் உயிரிழக்கிறார்கள். மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்கா நாடுகளில் இறப்பு விகிதம் அதிகமாக பதிவாகிறது.

    அதாவது உலகளவில் நடக்கும் இறப்புகளில் கிட்டத்தட்ட பாதி இறப்புகள் (9,600 ) அங்குதான் நடக்கின்றன. நாள் ஒன்றுக்கு 26 பேர் இறக்கிறார்கள். அதற்கு அடுத்தபடியாக தெற்காசியாவில் சுமார் 2 ஆயிரம் இறப்புகளும், கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் பகுதியில் 650 இழப்புகளும், லத்தீன் அமெரிக்கன் மற்றும் கரீபியனில் 500 இழப்பு களும் வருடந்தோறும் பதிவாகின்றன.

    அடிப்படை உரிமைகளை இழந்த பெண்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டும் அமைப்பின் சர்வதேச தலைமை நிர்வாக அதிகாரி இங்கர் ஆஷிங் கூறுகையில், ‘‘பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறையின் கொடிய வடிவங்களில் குழந்தை திருமணமும் ஒன்று. ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கானவர்கள் வயதான ஆண்களுடன் திருமண பந்தத்தில் இணைத்துவைக்கப்படுகிறார்கள். தங்களின் அடிப்படை உரிமைகளை பயன்படுத்துவதற்கான வாய்ப்பையும் இழக்கிறார்கள்.

    பிரசவம், டீன்ஏஜ் பெண்களின் `முதல் கொலையாளி'யாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் அவர்களின் இளம் உடல் குழந்தை பெற்றெடுக்க தகுதியானதாக இருக்காது. அந்த சமயத்தில் ஏற்படும் உடல்நல பிரச்சினைகளையும் புறக்கணிக்கக் கூடாது’’ என்கிறார்.

    குழந்தை திருமணத்தை தடுப்பதற்கான முயற்சிகள் தீவிரமடைந்த நிலையில் கொரோனா காலகட்டம் முட்டுக்கட்டை போட்டுவிட்டது. கடந்த 25 ஆண்டுகளில் உலக அளவில் சுமார் 80 மில்லியன் குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கின்றன. ஆனால் கொரோனா வைரஸ் பரவல் நிலைமையை மோசமாக்கிவிட்டது.

    நோய்த்தொற்று காரணமாக மில்லியன் கணக்கான குடும்பங்கள் வறுமையில் தள்ளப்பட்டன. ஊரடங்கு மத்தியில் பல பெண்கள் வன்முறை, பாலியல் தாக்குதல் போன்றவற்றை எதிர்கொண்டனர். 2030-ம் ஆண்டுக்குள் 10 மில்லியன் சிறுமிகள் திருமணம் செய்து கொள்ளும் நிர்பந்தத்திற்கு தள்ளப்படுவார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
    செல்போன், கணினி போன்றவற்றில் அதிக நேரம் செலவிடும் நபர்களுக்கு மனிதர்களை முகத்தோடு முகம் பார்த்து இயல்பாக பேசும் திறனும், உண்மையான மனித தொடர்பியல் சார்ந்த திறன்களும் குறைகின்றன.
    காலம் மாற மாற, புதிய புதிய தொழில்நுட்பங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அதற்கேற்றவாறு நோய்களும் வித விதமாக தோன்றி உருமாறுகின்றன. எலும்புகள் தொடர்பாக எத்தனையோ உடல் நல கோளாறுகள் ஏற்கனவே உண்டு.

    அது தற்சமயம் வாட்ஸ்-அப் பைட்டிஸ் என்ற புதிய பெயரோடு புழக்கத்துக்கு வந்திருக்கிறது. இது வாட்ஸ்-அப் அதிகம் பயன்படுத்துகிறவர்களுக்கு ஏற்படும் பிரச்சினை என்பதால் அதையே பெயரிலும் வைத்துவிட்டார்கள். எனவே இது வாட்ஸ்-அப் பயன்படுத்துகிற அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய அவசியமாகிறது.

    செல்போன் வருவதற்கு முன்பு தட்டச்சு எந்திரத்தில் அதிக நேரம் தட்டச்சு செய்பவர்களுக்கு அனைத்து விரல்களிலும் தேய்மானம் ஏற்பட்டு தசை மற்றும் எலும்புகளில் பிரச்சினைகள் ஏற்படுவதை ‘ஸ்டெனோகிராபர் தம்ப் டிசார்டர்’ என்று சொல்வது உண்டு. செல்போனில் வாட்ஸ்-அப் போன்ற செயலிகளில் நாம் அதிக நேரம் தொடர்ந்து டைப் செய்து சாட்டிங் செய்கிற போது, நமது கையில் உள்ள விரல்களை அதிக அளவு பயன்படுத்துவதோடு நீண்ட நேரம் தலையை குனிந்த நிலையில் இருக்கிறோம்.

    இதனால் உடல் நல பாதிப்பு ஏற்படக் கூடும். சிலர் செல்போனில் டைப் செய்வதற்கு ஒரு கையை மட்டுமே பயன்படுத்துவது உண்டு. இதனால் ஒரு கையில் மட்டும் அதிக பாதிப்பு ஏற்படும். இதற்கு பதிலாக இரண்டு கைகளாலும் டைப் செய்கிற போது கைகளில் ஏற்படுகிற பாதிப்புகள் சற்று குறைய வாய்ப்புள்ளது. அதேபோல செல்போனின் அளவு பெரிதாக பெரிதாக டைப் செய்கிற பகுதி பெரிதாவதால் சற்று சுலபமாக டைப் செய்யலாம். டேப்லெட், லேப்டாப் போன்ற சற்று பெரிய திரையை உடைய கருவிகளை கீழே வைத்து பயன்படுத்தும் போது அதிக அளவு தலையை குனிந்து இருப்பதால் தோள்பட்டை, கழுத்து பகுதிகளில் அதிக வலி ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    தசைகள், எலும்புகள் சார்ந்த பாதிப்புகள் ஏற்படுவதோடு நீண்ட நேரம் செல்போன் மற்றும் கணினி திரைகளை பார்த்து கொண்டிருப்பதால் கண்கள் உலர்ந்து விடுகின்றன. இதுபோன்ற டிஜிட்டல் திரைகளில் இருந்து வெளிப்படும் நீலநிற ஒளிக்கதிர்களால் தற்காலிக கண்பார்வை குறைபாடு ஏற்படுவதோடு கண் விழித்திரை குறைபாடும் உண்டாகிறது. இரவு நேரங்களில் தூக்கத்தை தவிர்த்து இந்த கருவிகளை பயன்படுத்துவதால் தூக்கக் குறைபாடுகள் மற்றும் நினைவுத்திறன் குறைபாடுகள் ஏற்படுகின்றன.

    செல்போன், கணினி போன்றவற்றில் அதிக நேரம் செலவிடும் நபர்களுக்கு மனிதர்களை முகத்தோடு முகம் பார்த்து இயல்பாக பேசும் திறனும், உண்மையான மனித தொடர்பியல் சார்ந்த திறன்களும் குறைகின்றன. மேலும் இதனால் அதிக கோபமும், அதிக மன அழுத்தமும் உண்டாகிறது.

    குழந்தை பருவத்தில் இதுபோன்ற டிஜிட்டல் திரைகளை அதிக அளவு பயன்படுத்துவதால் குழந்தைகளுக்கு கவனக்குறைவு, மொழியை கற்றுக்கொள்ளும் திறனில் பிரச்சினை ஏற்படுவதோடு கண்ணில் கிட்டப்பார்வை கோளாறு ஏற்படவும் வழிவகுக்கிறது. மேலும் இது குழந்தைகளின் மூளை வளர்ச்சியில் பிரச்சினை ஏற்படவும் காரணமாகிறது. பெற்றோர் குழந்தைகளிடம் அதிக நேரம் செலவிடுவதை தவிர்த்து வருவதோடு, அவர்களை அமைதிப்படுத்துவதற்காக செல்போனை கொடுத்து பழக்கப்படுத்துவதால், நாளடைவில் அவர்கள் அதற்கு அடிமை யாகிவிடும் நிலை உண்டாகிறது.

    ×