search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தை திருமணம்
    X
    குழந்தை திருமணம்

    குழந்தை திருமணமும்.. உயிரிழப்புகளும்..

    கடந்த 25 ஆண்டுகளில் உலக அளவில் சுமார் 80 மில்லியன் குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கின்றன. ஆனால் கொரோனா வைரஸ் பரவல் நிலைமையை மோசமாக்கிவிட்டது.
    உலகின் பல பகுதிகளிலும் குழந்தை திருமணங்கள் தொடர்கதையாக தொடர்ந்து கொண்டிருக்கின்றன. தெற்காசியாவில் கிட்டத்தட்ட 6 பெண்களும், உலகம் முழுவதும் 60 சிறுமிகளும் குழந்தை திருமணம் காரணமாக ஏற்படும் கர்ப்பம் மற்றும் பிரசவம் காரணமாக தினமும் இறக்கிறார்கள்.

    இதுதொடர்பாக ‘சேவ் தி சில்ட்ரன் 'அறக்கட்டளை ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் 22 ஆயிரம் பெண்கள் உயிரிழக்கிறார்கள். மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்கா நாடுகளில் இறப்பு விகிதம் அதிகமாக பதிவாகிறது.

    அதாவது உலகளவில் நடக்கும் இறப்புகளில் கிட்டத்தட்ட பாதி இறப்புகள் (9,600 ) அங்குதான் நடக்கின்றன. நாள் ஒன்றுக்கு 26 பேர் இறக்கிறார்கள். அதற்கு அடுத்தபடியாக தெற்காசியாவில் சுமார் 2 ஆயிரம் இறப்புகளும், கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் பகுதியில் 650 இழப்புகளும், லத்தீன் அமெரிக்கன் மற்றும் கரீபியனில் 500 இழப்பு களும் வருடந்தோறும் பதிவாகின்றன.

    அடிப்படை உரிமைகளை இழந்த பெண்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டும் அமைப்பின் சர்வதேச தலைமை நிர்வாக அதிகாரி இங்கர் ஆஷிங் கூறுகையில், ‘‘பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறையின் கொடிய வடிவங்களில் குழந்தை திருமணமும் ஒன்று. ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கானவர்கள் வயதான ஆண்களுடன் திருமண பந்தத்தில் இணைத்துவைக்கப்படுகிறார்கள். தங்களின் அடிப்படை உரிமைகளை பயன்படுத்துவதற்கான வாய்ப்பையும் இழக்கிறார்கள்.

    பிரசவம், டீன்ஏஜ் பெண்களின் `முதல் கொலையாளி'யாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் அவர்களின் இளம் உடல் குழந்தை பெற்றெடுக்க தகுதியானதாக இருக்காது. அந்த சமயத்தில் ஏற்படும் உடல்நல பிரச்சினைகளையும் புறக்கணிக்கக் கூடாது’’ என்கிறார்.

    குழந்தை திருமணத்தை தடுப்பதற்கான முயற்சிகள் தீவிரமடைந்த நிலையில் கொரோனா காலகட்டம் முட்டுக்கட்டை போட்டுவிட்டது. கடந்த 25 ஆண்டுகளில் உலக அளவில் சுமார் 80 மில்லியன் குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கின்றன. ஆனால் கொரோனா வைரஸ் பரவல் நிலைமையை மோசமாக்கிவிட்டது.

    நோய்த்தொற்று காரணமாக மில்லியன் கணக்கான குடும்பங்கள் வறுமையில் தள்ளப்பட்டன. ஊரடங்கு மத்தியில் பல பெண்கள் வன்முறை, பாலியல் தாக்குதல் போன்றவற்றை எதிர்கொண்டனர். 2030-ம் ஆண்டுக்குள் 10 மில்லியன் சிறுமிகள் திருமணம் செய்து கொள்ளும் நிர்பந்தத்திற்கு தள்ளப்படுவார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
    Next Story
    ×