என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    தொட்டியம் மதுரை காளியம்மன் கோவிலில் பங்குனி தேர் திருவிழாவை முன்னிட்டு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியை தொடர்ந்து அம்மனுக்கு 1,000 பானைகளில் பொங்கல் வைத்து வழிபாடு நடைபெற்றது.
    திருச்சி மாவட்டம் தொட்டியம் மதுரைகாளியம்மன் கோவில் பங்குனி பெருவிழா கடந்த 16-ந்தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தினமும் பல்வேறு அமைப்புகள் சார்பில் பூச்சொரிதல் விழா நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு காப்புக்கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதையொட்டி காவிரியில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து வரதராஜபுரத்தில் இருந்து பக்தர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளநீர்கள் கொண்டு இளநீர் காவடி எடுத்து வந்து அம்மனுக்கு விடிய, விடிய சிறப்பு பூஜைகளும் அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    நள்ளிரவு கருவறையில் மதுரைகாளியம்மன் முன் இரண்டு பெரிய பானைகளில் நெய் ஊற்றி எட்டுமுழ வேட்டியால் இரண்டு பெரிய திரிகள் தயாரிக்கப்பட்டு விளக்கு ஏற்றப்பட்டது. தொடர்ந்து கோவில் நடை அடைக்கப்பட்டது. கோவில் ஒருவாரம் அடைக்கப்பட்டிருக்கும்.

    அப்படி அடைக்கப்படும் கோவில் ஒரு வார காலத்திற்கு எந்தவித பூஜையும், பக்தர்கள் அனுமதியும் கிடையாது. நேற்று இரவு அடைத்த கோவிலுக்கு 1,000 பானைகளில் பொங்கல் வைத்து கோவில் முன் படையலிட்டு சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது. விழாவில் பக்தர்கள் மற்றும் சுற்று புற பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    கரிசல்பட்டியில் மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா நடைபெற்றது. விழாவில் நடன குதிரைகள் நடனமாட வண்ண விளக்குகளால் அலங்கரிப்பட்ட சந்தனக்கூடு, அனைத்து மக்களும் இணைந்து தூக்கி நகர் வலம் வந்தனர்.
    எஸ்.புதூர் ஒன்றியம் கரிசல்பட்டியில் ஆண்டுதோறும் அனைத்து சமுதாய மக்களும் இணைந்து நடத்தக்கூடிய மத நல்லிணக்க ஹஜ்ரத் பீர்சுல்தான் ஒலியுல்லாஹ் உரூஸ் எனும் சந்தனக்கூடு திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான சந்தனக்கூடு திருவிழா ஷாபான் 1-ம் பிறையில் கொடி ஏற்றம் நடைபெற்று, ஷாபான் 10-ம் பிறையில் சந்தனக்கூடு நகர் வலம் வந்து ஹஜ்ரத் பீர்சுல்தான் ஒலியுல்லாஹ் தர்ஹாவை வந்தடைந்தது.

    கொடியேற்றம் தொடங்கிய நாள் முதல் அனைத்து மக்களும் இணைந்து, வீடுகளில் சர்க்கரை, பேரிச்சம்பழம், பழங்கள் வாங்கி தினமும் பாத்தியா ஓதப்பட்டு அனைத்து வீடுகளுக்கும் நார்ஷா எனும் இனிப்பு வழங்கப் பட்டது. இது கரிசல்பட்டி, கே.புதுப்பட்டி, கரியாம்பட்டி என 3 கிராமத்தைச் சேர்ந்த அனைத்து சமுதாய மக்கள் இணைந்து நடத்தும் விழாவாகும்.

    இந்த விழாவிற்கு கரிசல்பட்டி நாட்டாண்மை அபி முகமது தலைமை தாங்கினார். ஜமாத் கமிட்டி தலைவர் சையது முன்னிலை வகித்தார். நிர்வாக குழு கமிட்டி மக்கள் ஷாஜகான், அப்துல் ரஷீது, சாகுல் ஹமீது, இதயத்துல்லா, ரகுமத்துல்லா ஆகியோர் மேற்பார்வையில் நடைபெற்றது.

    விழாவில் நடன குதிரைகள் நடனமாட வண்ண விளக்குகளால் அலங்கரிப்பட்ட சந்தனக்கூடு, அனைத்து மக்களும் இணைந்து தூக்கி நகர் வலம் வந்தனர். பின்னர் ஹஜ்ரத் பீர்சுல்தான் ஒலியுல்லாஹ் தர்காவிற்கு சந்தனக்கூடு வந்து சேர்ந்தது. அங்கு சந்தனக்கூட்டில் வைக்கப்படிருந்த சந்தனக்குடத்தில் இருந்து சந்தனம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொண்டு சாதி, மத பேதமின்றி நடத்தக்கூடிய மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா என்பது குறிப்பிடத்தக்கது.
    மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி திருவிழாவையொட்டி இன்று (வியாழக்கிழமை) தேரோட்டம் நடக்கிறது. கொரோனா பரவல் எதிரொலியாக இணையதளத்தில் நேரலையில் தேரோட்டம் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
    சென்னை :

    சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி திருவிழா மற்றும் விடையாற்றி கலை விழா கடந்த 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் பல்வேறு வாகனங்களில் பகல், இரவு நேரங்களில் சாமி வீதி உலா நடந்து வருகிறது.

    நேற்று முன்தினம் நள்ளிரவு 12.45 மணிக்கு வெள்ளி ரிஷப வாகனத்தில் சாமி, அம்பாள் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    விழாவில் முக்கிய திருவிழாவான தேரோட்டம் இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி காலை 8 மணி அளவில் சாமி, அம்பாள் திருத்தேரில் எழுந்தருள்கின்றனர். 8.45 மணிக்கு திருத்தேர் வடம் பிடிக்கப்பட்டு கிழக்கு மாடவீதியில் இருந்து புறப்பட்டு தெற்கு மாட வீதி, ராமகிருஷ்ண மடம் சாலை, வடக்கு மாட வீதி வழியாக மீண்டும் கிழக்குமாட வீதி வழியாக தேர் நிலைக்கு வந்தடைகிறது. மாலையில் ஐந்திருமேனிகள் திருவீதி உலா நடக்கிறது.

    கொரோனா தொற்று அதிகரித்து வருவதன் எதிரொலியாக தேரோட்டத்தை பொதுமக்கள் வீட்டில் இருந்து பார்க்கும் வகையில் https://www.youtube.com/c/MYLAPORE KAPALEESWARARTEMPLE என்ற ‘யூடியூப்’ சேனலில் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    விழாவையொட்டி நாளை (வெள்ளிக்கிழமை) காலை திருஞானசம்பந்த சாமிகள் எழுந்தருளலும், பூம்பாவை உயிர்பெற்று எழுகின்ற நிகழ்ச்சி நடக்கிறது. மதியம் 2.45 மணிக்கு வெள்ளி விமானத்தில் இறைவன் 63 நாயன்மார்களோடு திருக்காட்சி திருவிழா நடக்கிறது. விழாவையொட்டி விநாயகர் முன்செல்ல, தொடர்ந்து பவளக்கால் சப்பரத்தில் நாயன்மார்களுடன் கபாலீசுவரர்- கற்பகாம்பாள், வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமானும், சண்டிகேசவருடன் மாட வீதிகளில் வலம் வருகின்றனர்.

    அவர்களுடன் திருவள்ளுவர்-வாசுகி, முண்டககண்ணி அம்மன், அங்காள பரமேஸ்வரி, திரவுபதி அம்மன், சிந்தாதிரிப்பேட்டை முத்துக்குமரன், கோலவிழி அம்மன் என பலரும் சேர்ந்து கொண்டு வீதி உலா வருகின்றனர். தொடர்ந்து 28-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7.30 மணிக்கு திருக்கல்யாணத்துடன் விழா நிறைவு பெறுகிறது. விழாவில் 10 நாட்களிலும் பகல், இரவு காலங்களிலும் ஐந்திருமேனிகள் திருவீதி உலா மற்றும் நாதஸ்வர நிகழ்ச்சிகள் மற்றும் இரவு 6.30 மணிக்கு விடையாற்றி சொற்பொழிவுகளும் நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை தக்கார் பி.விஜயகுமார் ரெட்டி, இணை-ஆணையர் த.காவேரி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து உள்ளனர்.
    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா வருகிற 28-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. மேலும், கோவில் உண்டியலில் பக்தர்கள் ரூ.1.97 கோடி காணிக்கை செலுத்தி உள்ளனர்.
    திருச்செந்தூர் :

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா வருகிற 28-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. அன்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது. காலை 6 மணிக்கு வள்ளி அம்பாள் தபசுக்கு எழுந்தருளுகிறார்.

    மாலை 4 மணி அளவில் சுவாமி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி, மேலக்கோவில் பந்தல் மண்டபம் முகப்பிற்கு செல்கிறார். அங்கு சுவாமிக்கும், வள்ளி அம்பாளுக்கும் தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் சுவாமியும், அம்பாளும் வீதி உலா வந்து கோவிலை சேர்கிறார்கள். இரவு 10 மணிக்கு மேல் கோவிலில் 108 மகாதேவர்கள் சன்னதி முன்பு சுவாமிக்கும், வள்ளி அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது.

    இதேபோன்று சுப்பிரமணிய சுவாமி கோவிலின் உப கோவிலான கீழ நாலுமூலைக்கிணறு குன்று மேலய்யன் சாஸ்தா கோவிலிலும் பங்குனி உத்திர திருவிழா வருகிற 28-ந் தேதி நடக்கிறது. அன்று சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடக்கிறது.

    இதையொட்டி பக்தர்களுக்கு தேவையான குடிநீர், மின்சாரம், பந்தல் வசதிகள் செய்யப்பட்டு உள்ளது.

    இதற்கிைடயே, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இந்த மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, கோவில் வளாகத்தில் உள்ள கோவிந்தம்மாள் ஆதித்தனார் திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் நடந்தது.

    சிவகாசி பதினெண்சித்தர் மடம் குருகுல வேதபாடசாலை உழவாரப்பணி குழுவினர், கோவில் பணியாளர்கள் உண்டியல் காணிக்கையை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

    இதில் கோவில் நிரந்தர உண்டியலில் ரூ.1 கோடியே 89 லட்சத்து 45 ஆயிரத்து 550-ம், கோசாலை உண்டியலில் ரூ.1 லட்சத்து 33 ஆயிரத்து 932-ம், யானை பராமரிப்பு உண்டியலில் ரூ.27 ஆயிரத்து 691-ம், அன்னதான உண்டியலில் ரூ.5 லட்சத்து 76 ஆயிரத்து 595-ம், மேலக்கோவில் அன்னதான உண்டியலில் ரூ.14 ஆயிரத்து 711-ம் என மொத்தம் ரூ.1 கோடியே 96 லட்சத்து 98 ஆயிரத்து 479-யை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.

    மேலும், ஒரு கிலோ 544 கிராம் தங்கமும், 11 கிலோ 500 கிராம் வெள்ளி பொருட்களும், 55 வெளிநாட்டு பண நோட்டுகளும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.
    பிரசித்திப் பெற்ற பிரார்த்தனை தலமாகவும், பதினெட்டு சித்தர்களில் ஒருவரான பாம்பாட்டி சித்தரின் குருவாகத் திகழ்ந்த அகப்பேய் சித்தர் ஜீவசமாதி (வாய்மொழிக் கூற்று) அடைந்த திருத்தலமாகவும் இது விளங்குகிறது.
    எங்கும் நிறைந்த, எல்லாம் அறிந்த இறைவன், தன்னை மனமுருகி மெய்யுருகி வேண்டுவோருக்கு வேண்டியதை அருள்பவன். அந்த அருளாளன் உருவமாகவும் அருவமாகவும் அருள்பாலிக்கும் ஆலயங்கள், நம்முடைய ஆன்மாவுக்கு சக்தி அளிக்கும் கேந்திரங்களாகும். இதை வலியுறுத்தும் விதமாகவே அவ்வை பிராட்டி ‘கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்று பாடினார். பண்டைய அரசர்கள் இத்தகைய ஆலயங்களை மையமாக வைத்தே ஆட்சி செய்தனர். இதனால் நாடும் சுபீட்சமாக இருந்தது; நல்லாட்சியும் நடந்தது. அதற்காக எந்த மன்னரும் தன்னிச்சையாக எந்த ஆலயத்தையும் உருவாக்கிவிடவில்லை. புராண வரலாறு அல்லது வழிவழி வந்த வரலாற்றின் அடிப்படையிலேயே ஒவ்வொரு ஆலயத்தையும் உருவாக்கினர்.

    இப்படிப்பட்ட வழிவழி வந்த வரலாற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஆலயங்களில் ஒன்றே ‘கொளஞ்சியப்பர் திருக்கோவில்.’ சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் அடர்ந்த காடாக இருந்த பகுதியில் உருவாக்கப்பட்ட இவ்வாலயம், கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் மணவாளநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் கொளஞ்சியப்பர் என்ற பெயரில் அருள்பாலிப்பவர் சாட்சாத் முருகப்பெருமானே ஆவார்.

    முன்னொரு காலத்தில் இந்தப் பகுதிக்கு மேய்ச்சலுக்கு வந்த பசுமாடு ஒன்று, கொளஞ்சி செடிகள் புதராய் மண்டிக் கிடந்த ஒரு இடத்தை தன் கால்களால் தேய்த்து, பலிபீட உருவில் இருந்த கற்சிலையின் மேல் தானாக பால் சொரிந்தது. அனுதினமும் இதை வழக்கமாக மேற்கொள்ள இதை கண்ணுற்ற பொதுமக்கள், அந்த பலிபீடம் புனிதத்துக்குரியது என்று கருதி அதை வெளியே எடுத்து வழிபடத் தொடங்கினர். உருவ அடையாளம் இல்லாததால் அது என்ன தெய்வம் என்று தெரியாமல் வணங்கி வந்தனர். காலப்போக்கில் இதற்கான தேடல்களை மேற்கொண்டபோது, விருத்தாசலம் திருத்தல வரலாற்றில் இருந்து விடை கிடைத்தது.

    ஒரு சமயம் தம்பிரான் தோழன் (இறைவனின் தோழன்) என்று போற்றப்படுகின்ற சுந்தரமூர்த்தி சுவாமிகள் தில்லைக்கு மேற்கேயுள்ள தலங்களை தரிசித்தவாறு விருத்தாசலம் எனப்படும் திருமுதுகுன்றத்துக்கு வந்தார். அப்படி வந்தவர் ஊர் மற்றும் சுவாமியின் பெயரை கேள்விப்பட்டு முதுமையை எட்டியுள்ள இவ்வூரையும் இப்பெருமானையும் பாடினால் பொன்பொருள் கிடைக்காது என்று முடிவுசெய்து பண் பாடாது பயணத்தைத் தொடர்ந்தார். இதுபுரிந்த திருமுதுகுன்றீசுவரபெருமான், அவரோடு விளையாட விரும்பி தன் மைந்தன் முருகனிடம், ‘சுந்தரர் எம்மை மதியாது செல்வதால் அவரை எமது இடத்திற்கு வருவிக்கச்செய்’ என்று வாய்மொழியாக வேண்டுகோள் வைத்தார். (இதை எழுத்து வடிவமாக தரும்போது அது ‘பிராது’ எனப்படும். பிராது என்பது முறையீடு செய்தல் அல்லது நியாயம் வேண்டி புகார் அளித்தலாகும்).

    அதை ஏற்ற முருகப்பெருமான், கள்ளர் வடிவில் சென்று சுந்தரரின் கைவசம் இருந்த பொன் பொருளை அபகரித்தார். பதறிய சுந்தரரிடம், ‘நீ உன்பொருளை திரும்பப் பெறவேண்டுமானால் திருமுதுகுன்றீஸ்வரரிடம் சென்று முறையிடு’ என்று கூறி அனுப்பிவைத்தார். சுந்தரரும் அதை ஏற்று திரு முதுகுன்றீசுவரரிடம் வந்து நின்றார். அவரிடம் ஈசன், ‘எம்மை மதியாமல் சென்ற உமக்கு பாடம் புகட்டவே முருகனை விட்டு களவாடச்செய்தோம். இதோ உமது பொன்னும் பொருளும். எடுத்துக் கொள்’ என்று கூறி தந்தார்.

    மனமகிழ்ந்த சுந்தரர் தன் தவறுக்கு மன்னிப்புக் வேண்டியதுடன், இத்தலப் பெருமானை பாடவும் செய்தார். அதற்காக ஈசன் பன்னிராயிரம் பொற்காசுகளைத் தர, ஏற்கனவே வழிப்பறிக்கு ஆளான அனுபவத்தில் ‘இவ்வளவு பொற்காசினை எப்படி எடுத்துச் செல்வேன்’ என்றார், சுந்தரர்.

    அதற்கு சிவன் ‘இப்பொற்காசினை மணிமுத்தாற்றில் போட்டுவிட்டு திருவாரூர் கமலாலயம் குளத்தில் சென்று எடுத்துக் கொள்’ என்று கூறினார். சுந்தரரும் அதன்படியே செய்தார்.

    சுந்தரர் மீது ஈசன் பிராது கொடுத்த இடம் மணவாளநல்லூர் எல்லை என்பது தெரியவந்தது. அதன்படி விருத்தாசலம் நகருக்கு மேற்கே பலிபீட உருவில் அமர்ந்திருப்பவர் சாட்சாத் முருகன் என்று உறுதி செய்யப்பட்டது. கொளஞ்சி செடியின் ஊடேயும், பசுவின் குளம்புகளின் மூலமும் வெளிப்பட்ட அவருக்கு ‘கொளஞ்சியப்பர்’ என்னும் திரு நாமத்தை சூட்டி வழிபடலாயினர்.

    தமிழ் கடவுள் உருவமின்றி அருவுருவ நிலையில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் ஒரே திருத்தலமாக இத்தலம் விளங்குகிறது. பிரசித்திப் பெற்ற பிரார்த்தனை தலமாகவும், பதினெட்டு சித்தர்களில் ஒருவரான பாம்பாட்டி சித்தரின் குருவாகத் திகழ்ந்த அகப்பேய் சித்தர் ஜீவசமாதி (வாய்மொழிக் கூற்று) அடைந்த திருத்தலமாகவும் இது விளங்குகிறது.

    இவ்வாலயத்தில் முருகப்பெருமான் நீதி வழங்குபவராகவும், வைத்தியராகவும் இருந்து அருள்பாலித்து வரு கிறார். எனவே தீராத நோய் உள்ளவர்கள் இத்திருத்தலத்தில் ஒரு மண்டலம், அரை மண்டலம் என அவரவர்களுக்கு வசதிப்படும் நாட்கள் தங்கி கொளஞ்சியப்பரை தரிசிப்பதுடன், அவரது சன்னிதியில் பூஜித்து வழங்கப்படும் வேப்ப எண்ணையைப் பெற்று உடம்பில் பூசியும், அருந்தியும் பூரண குணமடைந்து செல்வதும் இத்திருக்கோவிலின் மகிமையாகக் கூறலாம்.

    தங்களது குறை நீங்கப் பெற்றவர்கள் திருக் கோவிலுக்கு தங்கம், வெள்ளி, பித்தளை, ரொக்கப்பணம், தானியங்கள் கால்நடைகள் ஆகியவற்றை நேர்த்தி காணிக்கையாகச் செலுத்துவதும் வழக்கமாக உள்ளது.

    இந்த ஆலயத்தில் தினசரி நான்குகால பூஜைகள் நடைபெறுகின்றது. பவுர்ணமி, கிருத்திகை போன்ற மாத பூஜைகள் தவிர, சித்திரை பவுர்ணமிஅன்று பால்குட அபிஷேக விழா, வைகாசி விசாகத்தன்று புஷ்பாஞ்சலி மற்றும் ஏக தின லட்சார்ச்சனை, கந்தசஷ்டி லட்சார்ச்சனை, ஆங்கிலப்புத்தாண்டு மற்றும் தமிழ்புத்தாண்டு வழிபாடு, பங்குனி மாதத்தில் பத்துநாட்கள் பிரம்மோற்சவம் என வருடம் முழுவதும் உற்சவங்கள் நடைபெறுகின்றன. பங்குனி உத்திரத்தின் போது நேர்த்திகடன் செலுத்த இவ்வாலயத்திற்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருகிறார்கள்.

    கிழக்கு நோக்கிய ராஜகோபுரம் மற்றும் வடக்கு கோபுரம் என இரு கோபுரங்களுடன் ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. கருவறை அர்த்தமண்டபம், மகாமண்டபம் என அனைத்தும் சமீபகால கட்டிடமாக, அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் விளங்குகிறது. மகாமண்டபத்தின் வலது பக்கத்தில் அலங்கார மண்டபம் இருக்கிறது. அதனுள் கொளஞ்சியப்பரின் உற்சவ திருமேனி இடம்பெற்றுள்ளது. இடதுபுறத்தில் குதிரை வாகனத்துடன் கூடிய சுதைவடிவ முனீஸ்வரர் அருள்பாலிக்கிறார். அலங்கார மண்டபத்தின் பின்பகுதியில் காணிக்கை தானிய களஞ்சியமும், கிழக்குப் பகுதியில் அகப்பேய் சித்தரின் மண்டபமும் உள்ளது.

    கருவறையில் விநாயகரும், மூன்றடி உயரத்தில் பலிபீட வடிவிலான முருகப்பெருமானும் தனித்தனி சன்னிதியில் காட்சிதந்து அருள்பாலிக்கின்றனர். வடக்குகோபுரம் அருகில் மகாமண்டபத்தை ஒட்டி பிராது கொடுக்கும் முனீஸ்வரர் சன்னிதி உள்ளது. ஆலயத்தின் பின்பகுதியில் ஏரழிஞ்சி மரங்களுக்கு இடையே இடும்பன் கடும்பனுக்கு தனி சன்னிதி அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் தல விருட்சமான கொளஞ்சி செடி நந்தவனத்தில் வளர்க்கப்படுகிறது.

    தமிழக அரசின் இந்துசமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழுள்ள இந்த ஆலயம், தினமும் காலை மணி 6.30 முதல் இரவு 8 மணி வரை திறந்து இருக்கும்.

    பிராது கொடுக்கும் வழிபாடு :

    பக்தர்கள் தங்களின் அனைத்து வித நியாயமான கோரிக்கைகளையும், எழுத்து மூலம் சுவாமியிடம் பிராது செலுத்தும் நடைமுறை இங்கு வழக்கத்தில் உள்ளது. அப்படி பிராது செலுத்திய நாளிலிருந்து 90 நாட்களுக்குள், அந்த கோரிக்கை முழுவதுமாக நிவர்த்திப் பெறுவதும், வேண்டுதல் பலித்தவர்கள் சுவாமியிடம் செலுத்திய பிராதினை திரும்பப் பெற்றுக் கொள்வதும் நடைமுறை வழக்கமாகும்.

    இதற்கு சுவாமி உள்ள இடமான மணவாளநல்லூரை தலைமையிடமாகக் கொண்டு கோரிக்கை உள்ள ஊரின் தொலைவினை கணக்கிட்டு, கிலோமீட்டர் ஒன்றுக்கு இருபத்தைந்து பைசா கட்டணமாகவும், சம்மன் மற்றும் தமுக்கு பணமாக இருபது ரூபாயும் செலுத்த வேண்டும். அதேபோன்று கோரிக்கை நிறைவேறியவர்கள், பிராது வாபஸ் கட்டணமாக ஐம்பது ரூபாய் செலுத்தி பிராதினை வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டும். பிரார்த்தனையுடன் கூடிய இவ்வழிபாடு இவ்வாலயத்தின் பிரசித்திப் பெற்ற வழிபாடாகும்.
    திருப்பதியில் வருடாந்திர தெப்பல் உற்சவம் இன்று தொடங்கி வருகிற 28-ந் தேதி வரை தொடர்ந்து 5 நாட்களுக்கு நடைபெற உள்ளது. கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் இன்றி தெப்பல் உற்சவம் நடைபெறுகிறது.
    திருமலை :

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாத ஏகாதசி அன்று தொடங்க கூடிய வருடாந்திர தெப்பல் உற்சவம் பவுர்ணமியன்று நிறைவு பெறும் விதமாக நடத்தப்படும்.

    அதன்படி வருடாந்திர தெப்பல் உற்சவம் இன்று தொடங்குகிறது. வருகிற 28-ந் தேதி வரை தொடர்ந்து 5 நாட்களுக்கு நடைபெற உள்ளது. முதல் நாளான இன்று சீதா லட்சுமணர், ஆஞ்சநேயர் ராமருடன் 3 சுற்றுகள் அலங்கரிக்கப்பட்ட தெப்பலில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளனர்.

    2-வது நாளான நாளை ருக்மணி சமேத ஸ்ரீகிருஷ்ணர் சாமி 3 சுற்றுகள் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர்.

    கடைசி 3 நாட்களான 26, 27, 28-ந்தேதிகளில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சாமி எழுந்தருளி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர். 3-வது நாள் 3 சுற்றுகளும், 4-வது நாள் 4 சுற்றுகளும், 5-வது நாள் 7 சுற்றுகள் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் இன்றி தெப்பல் உற்சவம் நடைபெறுகிறது.

    வருடாந்திர தெப்பல் உற்சவத்தையொட்டி, இன்று மற்றும் நாளை ஆன்லைனில் நடைபெற சகஸ்கர தீப அலங்கார சேவையும், 18, 19, 20-ந்தேதிகளில் ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்கர தீப அலங்கார சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    தினமும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை தெப்பல் உற்சவம் நடக்கிறது.
    நிலக்கோட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மனுக்கு பக்தர்கள் அக்னி சட்டி, மாவிளக்கு, முளைப்பாரி, பால்குடம் எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன் செய்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்கள்.
    நிலக்கோட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்வார்கள். பக்தர்கள் அக்னி சட்டி, மாவிளக்கு, முளைப்பாரி, பால்குடம் எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன் செய்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்கள்.

    மிளகு, உப்பு காணிக்கை

    உடலில் தோன்றும் பல தொந்தரவுகள் தீர அம்மனுக்கு மிளகு, உப்பு காணிக்கை செலுத்துவதாக பக்தர்கள் வேண்டிக் கொள்வார்கள். அதன்படி நோய் குணமானதும் திருவிழாவின்போது அம்மனுக்கு உகந்த நாளான வெள்ளிக்கிழமையில் மிளகு, உப்பு காணிக்கையை கொடிக்கம்பத்தில் செலுத்துவார்கள்.

    மாவிளக்கு எடுத்து நேர்த்திக்கடன்

    நிலக்கோட்டை மாரியம்மன் கோவிலில் நடக்கும் பங்குனி மாத திருவிழாவில் பக்தர்களின் அக்னிசட்டி ஊர்வலத்துடன் பெண்கள் மாவிளக்கு எடுத்து நேர்த்திக் கடனை செலுத்துவது வழக்கம். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்வார்கள். அதன்படி இந்த ஆண்டும் பங்குனி மாத திருவிழாவையொட்டி ஏராளமான பெண்கள் மாவிளக்கு எடுத்து அம்மனை வழிபட்டு வருகின்றனர்.

    மாரியம்மனை நகர்வலம் அழைத்து செல்லும் கஜேந்திரன் யானை

    நிலக்கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்கள் மாவிளக்கு எடுத்தல், பால்குடம் எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடனை செலுத்துவது வழக்கம். முக்கிய நிகழ்ச்சியான சிம்ம வாகனத்திலும், ரிஷப வாகனத்திலும், பூப்பல்லக்கில் அம்மன் நகர்வலம் வரும்போது கோவில் யானை கஜேந்திரன் முன் செல்லும். மாரியம்மனை கஜேந்திரன் யானை நகர்வலம் அழைத்து செல்லும் கண்கொள்ளா காட்சியை அனைத்து தரப்பினரும் கண்டுகளித்து, அம்மன் அருளை பெறுவார்கள்.

    வாழைப்பழம் சூறையிடுதல்

    நிலக்கோட்டை மாரியம்மன் கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள், நேர்த்திக்கடன் நிறைவேற்றியவுடன் கூடைகளில் வாழைப்பழங்களை எடுத்து வருவார்கள். பின்பு அவற்றை கோவில் முன்பு நின்று பழங்களை சூறையிட்டு வழிபாடு நடத்துவார்கள். இந்த வேண்டுதல் நிகழ்ச்சியும் ஆண்டாண்டு காலமாக தொன்றுதொட்டு இக்கோவிலில் நடைபெற்று வருகிறது.
    பொதுவாக சாஸ்தா கோவில்களில், ஐயப்ப சுவாமி போலவே சாஸ்தாவின் சிலையும், கால்களை மடக்கி உட்கார்ந்த வடிவில் இருக்கும். ஆனால் இங்கே சாஸ்தா இடது காலை மடக்கி, ஒரு கையை அதன் மீது வைத்துள்ளார்.
    இறை வழிபாட்டில் குல தெய்வ வழிபாட்டுக்கு மிக முக்கியமான இடம் உண்டு. எத்தனை கோவில்களுக்கு சென்று வந்தாலும், ஹரித்வார், ரிஷிகேஷ், காசி, ராமேஸ்வரம் என்று புனிதப் பயணம் சென்று வந்தாலும், தனது குல தெய்வத்தை வணங்கி வழிபட்டால்தான் வாழ்க்கையில் ஏற்படும் தடைகளையும், சவால்களையும் ஒருவரால் தாண்டி வர முடியும்.

    கூட்டுக்குடும்பம் என்பது பழங்கதையாகி, கணவன்- மனைவி- ஒரு குழந்தை என்னும் சிறிய குடும்பமாக இன்றைய உலகம் மாறிவிட்ட நிலையில், தனது குல தெய்வம் எது என்பதே பலருக்கும் தெரியாமல் போய்விட்டது. ஜோதிடம், பிரசன்னம் என்று பல வழிகளிலும் முயற்சித்த போதிலும் தமது குல தெய்வம் எது என்று தெரியாமல் கலங்கித் தவிக்கும் குடும்பங்கள் ஏராளம். இவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது, ‘அஞ்சனம் எழுதிய கண்டன் சாஸ்தா’ திருக்கோவில். தமது குல தெய்வம் எது என்று தெரியாமல் தவிப்பவர்கள், இந்த சாஸ்தாவை தரிசித்து மனம் உருகி வேண்டினால், அவர்கள் வாழ்க்கையில் ஏற்படும் தடைகளெல்லாம் நீங்கி, அவர்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி நிரம்பி வழியும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த சாஸ்தாவை வழிபட்டால் சனி தோஷமும் நீங்குகிறதாம்.

    இந்தக் கோவில், கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தின் அருகே, ஆஸ்ராமம் என்னும் அழகிய சிற்றூரில் அமைந்துள்ளது. கன்னியாகுமரிக்கு புனிதப் பயணம் வரும் பக்தர்கள் தவறாமல் சென்றுவரும் கோவில் இது. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமையான இக்கோவிலின் வரலாறு, சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் வரலாற்றோடு தொடர்புடையது.

    ஒரு காலத்தில் வனமாக இருந்த சுசீந்திரம் பகுதி ‘ஞானாரண்யம்’ என அழைக்கப்பட்டது. அந்த வனத்தின் ஒரு பகுதியில், அத்ரி மகிரிஷி ஆசிரமம் அமைத்து தவ வாழ்க்கை வாழ்ந்து வந்தார். அவருடைய மனைவி அனுசூயா தேவி, கற்பில் சிறந்தவள். அவளது கற்பை சோதிக்க எண்ணிய மும்மூர்த்திகளான சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகியோர், அத்ரி மகிரிஷி இல்லாத நேரத்தில் துறவிகள் போல வேடமணிந்து ஆசிரமத்துக்கு வந்தனர். மூன்று துறவிகளும் அனுசூயா தேவியிடம் பிச்சை கேட்டனர். சற்றும் தாமதிக்காமல் அனுசூயா தேவி, தன் கணவனின் பாத தீர்த்த சக்தியால் அறுசுவை உணவுகளை நொடிப் பொழுதில் தயாரித்தாள். அவர்களுக்கு ஆசனம் இட்டு அமரச் செய்து விருந்தளிக்க வந்தபோது, துறவிகள் மூவரும் திடுக்கிட்டது போல் எழுந்துவிட்டனர்.

    “நான் என்ன தவறு செய்துவிட்டேன்?” என அனுசூயா அழுதபடியே அவர்களிடம் கேட்டாள்.

    அதற்கு துறவிகள், “மழை இல்லாத காரணத்தால் ஒரு மண்டலம் உணவில்லாமல் வருந்திய நாங்கள், உண்ண வேண்டுமென்றால் அதற்கு ஒரு நோன்பு உண்டு. அந்நோன்பு முடியாமல் நாங்கள் உணவு உட்கொள்ளக்கூடாது” என பதில் கூறினர். தொடர்ந்து “பிறக்கும்போது எந்தக் கோலத்தில் இருந்தாயோ அந்தக் கோலத்தில் அன்னம் பறிமாறினால்தான் நாங்கள் உணவு அருந்துவோம்” என்றனர்.

    இதைக்கேட்ட அனுசூயாதேவி திடுக்கிட்டாள். எனினும், ‘கணவனே கடவுள் என்றும், கற்பே நன்னெறி என்றும் நினைத்து வாழும் நான் என் கற்பின் பெருமையால் முனிவர்கள் கூறியவாறு அமுது படைப்பேன்’ எனத் தெளிந்து, தனது கணவர் காலைக் கழுவி வைத்திருந்த பாத தீர்த்தத்தை கையில் எடுத்து, கணவனை மனதில் தியானித்துக் கொண்டு “இவர்கள் குழந்தைகளாக மாறக்கடவது” என அத்துறவிகளின் தலையில் தீர்த்த நீரைத் தெளித்தாள்.

    என்ன ஆச்சரியம்? ஆக்கல், அழித்தல், காத்தல் ஆகிய முத்தொழிலையும் செய்யும் அந்த மும்மூர்த்திகளும் பால் மணம் மாறாத பச்சிளம் குழந்தைகளாக மாறிவிட்டனர். பின்பு, தான் பிறந்தபோது இருந்த நிலையில் அமர்ந்து மூவருக்கும் உணவூட்டினாள் அனுசூயா தேவி. தங்களின் கணவர்கள் குழந்தையாக மாறியதைக் கேள்விப்பட்ட பார்வதி, சரஸ்வதி, லட்சுமி ஆகிய மூவரும், அத்ரி மகரிஷி ஆசிரமம் வந்து தங்களுக்கு மாங்கல்ய பிச்சை அளிக்குமாறு அனுசூயா தேவியை வேண்டிக்கொண்டனர். இதையடுத்து அனுசூயாதேவி, அவர்களுக்கு சுயவுருவை மீண்டும் அளித்தாள்.

    அப்படிப்பட்ட பெருமை நிறைந்த அத்ரி மகிரிஷியும் அனுசூயா தேவியும் தங்கியிருந்த ஆசிரமம்தான் இன்று ‘ஆஸ்ராமம்’ என்றழைக்கப்படும் சிற்றூர். இந்த அத்ரி மகிரிஷியே இங்கு சாஸ்தாவாக அமர்ந்து அருள்பாலிப்பதாகக் கூறுவதும் உண்டு. அத்ரி மகரிஷி யாகம் செய்த ஓமகுண்டம்தான் கோவிலின் அருகில் உள்ள தீர்த்தக்குளம் என்கின்றனர். இக்குளத்தில் ஒரு மண்டலம் நீராடினால் எல்லா நோய்களும் நம்மைவிட்டு நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    நூற்றாண்டுகளுக்கு முன்பு, பார்வை இழந்த ஒருவர் தினமும் இக்கோவிலில் சாஸ்தாவை வழிபட்டு வந்துள்ளார். ஒருநாள் இவர் கோவிலில் படுத்து உறங்கிக்கொண்டிருந்தபோது அவரது கண்களில் யாரோ மைதீட்டுவது போல உணர்ந்துள்ளார். உடனே திடுக்கிட்டு எழுந்துள்ளார். என்ன ஆச்சரியம்? அவரது இரு கண்களிலும் பார்வை வந்துவிட்டது. உடனே சாஸ்தாவை வணங்கி ‘அஞ்சனம் எழுதியது கண்டேன் சாஸ்தா’ என உரக்கக் கூவினார். அது நாளடைவில் மருவி ‘அஞ்சனம் எழுதிய கண்டன் சாஸ்தா’வாக மாறிவிட்டதாம். ‘அஞ்சனம்’ என்றால் ‘மை’ என்று பொருள். கண்களில் மை தீட்டிய கடவுள் என இவரை வழிபடுகின்றனர்.

    இங்கே உள்ள சாஸ்தா வித்தியாசமான வடிவில் காட்சியளிக்கிறார். பொதுவாக சாஸ்தா கோவில்களில், ஐயப்ப சுவாமி போலவே சாஸ்தாவின் சிலையும், கால்களை மடக்கி உட்கார்ந்த வடிவில் இருக்கும். ஆனால் இங்கே சாஸ்தா இடது காலை மடக்கி, ஒரு கையை அதன் மீது வைத்துள்ளார். வலது காலை வித்தியாசமாக மடக்கி வைத்திருப்பதோடு, வலது கையில் கதாயுதம் ஏந்தியபடி காட்சியளிக்கிறார். சாஸ்தாவின் தலைமுடி சுருள் கேசமாக தோள்பட்டைக்குக் கீழே கிடப்பதோடு, நடு உச்சியில் கொண்டையும் பூநூலும் போட்டிருப்பதும் ஒரு விசேஷமான அம்சமாகும். கழுத்தில் பதக்கமும், இரு கைகளிலும் கோதண்டராம பதக்கமும், திருநீற்றுப் பட்டையும் அணிந்து உள்ளார்.

    இங்குள்ள சாஸ்தாவின் உருவம் மற்ற கோவில் சாஸ்தாவின் சிலைகளோடு ஒப்பிடும் போது மிகவும் பெரியது. முன் மண்டபத்தைத் தாண்டி கருவறையின் மேல்பகுதியில் விமானம் அமைக்கப்பட்டுள்ளது. கோவிலின் உள்ளே நாகர், கணபதி சிலைகள் காணப்படுகின்றன. கோவிலின் அருகில் ஆலமரத்தடியில், தீர்த்த குண்டம் மோன தவத்தில் ஆழ்ந்திருக்கிறது. பங்குனி உத்திரத் திருவிழா இக்கோவிலில் வெகு பிரசித்தம்.

    அமைவிடம்

    கன்னியாகுமரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், நாகர்கோவிலில் இருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் ஆஸ்ராமம் அமைந்துள்ளது.
    நிலக்கோட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் திருவிழாவில் ஜாதி,மத வேறுபாடுகள் இன்றி அனைத்து மக்களும் கலந்து கொள்கிறார்கள்.
    நிலக்கோட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் திருவிழாவில் ஜாதி,மத வேறுபாடுகள் இன்றி அனைத்து மக்களும் கலந்து கொள்கிறார்கள். குறிப்பாக இந்த திருவிழாவின்போது அனைத்துத் தரப்பினரும் ஆர்வத்துடன் கூட்டம் கூட்டமாக விடியும் வரை காத்திருந்து அம்மன் பூப்பல்லக்கில் வரும் காட்சியை பக்தி பரவசத்துடன் கண்டு மகிழ்ந்து அம்மனின் அருளை பெற்று செல்கிறார்கள்.

    இந்த திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்வார்கள். பக்தர்கள் அக்னி சட்டி, மாவிளக்கு, முளைப்பாரி, பால்குடம் எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன் செய்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்கள்.

    நிலக்கோட்டை மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் திருவிழாவில் கலந்துகொண்டு அம்மனை தரிசித்து அருளை பெற்று வருகிறார்கள். ஏராளமான ஆண்களும், பெண்களும், சிறுவர்களும், சிறுமியர்களும், மேளதாளம் முழங்க பக்திபரவசத்துடன் தீச்சட்டி எடுத்து அம்மனுக்கு காணிக்கை செலுத்துவது பக்தி பரவசமாக இருக்கும்.


    நிலக்கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்களும் அக்னிச்சட்டி, மாவிளக்கு, முளைப்பாரி, பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.
    நிலக்கோட்டையில் இந்து நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாத திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 14-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. திருவிழாவில் ஒவ்வொரு நாளும், வெவ்வேறு வாகனங்களில் அம்மன் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும் பக்தர்களும் அக்னிச்சட்டி, மாவிளக்கு, முளைப்பாரி, பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.

    இந்தநிலையில் திருவிழாவின் 10-ம் நாளான நேற்று பக்தர்களின் பால்குட ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அலகு குத்தி வந்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். இதைத்தொடர்ந்து இரவு அம்மன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இதற்கான ஏற்பாடுகளை நூற்றாண்டு கண்ட இந்து நாடார் உறவின்முறை காரியதரிசிகள் சுசீந்திரன், பாண்டியராஜன், ஜெயபாண்டியன், சுரேஷ்பாபு, கருமலைப்பாண்டியன் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர். திருவிழாவில் இன்று (புதன்கிழமை) முக்கிய நிகழ்ச்சியாக அம்மன் பூப்பல்லக்கில் எழுந்தருளி வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பங்குனி தேர் திருவிழாவின் 4-ம் நாளில் நம்பெருமாள் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வந்தார்
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பங்குனி தேர் திருவிழா கடந்த 20-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் 4-ம் நாளான நேற்று மாலை நம்பெருமாள் தங்க கருட வாகனத்தில் வீதி உலா வந்தார்.

    இதையொட்டி ரெங்கவிலாச மண்டபத்தில் இருந்து மாலை 6.30 மணியளவில் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வந்தார். 5-ம் நாளான இன்று நம்பெருமாள் காலை சேஷவாகனத்திலும், மாலை கற்பவிருட்ச வாகனத்திலும் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றார்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத்தலைவர் வேணுசீனிவாசன், ஸ்ரீரங்கம் கோவில் இணைஆணையர் மாரிமுத்து, உதவி ஆணையர் கந்தசாமி, அறங்காவலர்கள் கே.என்.சீனிவாசன், கவிதா ஜெகதீசன், ரெங்காச்சாரி, கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
    பிரதோஷம் அன்று ஈசனை வழிபட்டால் நாம் செய்த சகல பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம். எந்த கிழமையில் பிரதோஷ வழிபாடு செய்தால் என்ன பிரச்சனை தீரும் என்று பார்க்கலாம்.
    பிரதோச வழிபாடு சிவ வழிபாட்டிற்குரிய மிகச் சிறப்பான மிக முக்கியமான வழிபாடாகும். தோசம் என்ற வடமொழிச் சொல்லிற்கு குற்றம் என்று பொருள். பிரதோசம் என்றால் குற்றமற்றது என்று பொருள். குற்றமற்ற இந்தப் பொழுதில் ஈசனை வழிபட்டால் நாம் செய்த சகல பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம். பிரதோச காலமென்பது மாலை 4 மணி முதல் 6 மணி வரையான காலமாகும்.

    ஞாயிறு பிரதோஷம் - சுப மங்களத்தை தரும்

    திங்கள் சோம பிரதோஷம் - நல் எண்ணம், நல் அருள் தரும்

    செவ்வாய் பிரதோஷம் - பஞ்சம், வறுமை, பட்டினி அகலும்

    புதன் பிரதோஷம் - நல்ல குழந்தை பாக்கியம் தரும்

    வியாழன் பிரதோஷம் - திருமணத் தடை விலகி மாங்கல்ய பலன் கிட்டும்.

    வெள்ளி பிரதோஷம் - எதிரிகள், எதிர்ப்பு விலகும்

    சனிப் பிரதோஷம் - அனைத்து துன்பமும் விலகும்.

    தினசரி கோவிலுக்கு சென்று வழிபட்டால் பஞ்சமா பாவங்கள் விலகும்.

    ஒரு சனிப்பிரதோஷ வழிபாடு 108 சிவபூஜை செய்த பலன் உண்டாகும்.
    ×