என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    தமிழ் புத்தாண்டையொட்டி ராமேசுவரம் கோவிலில் வாசிக்கப்பட்ட பஞ்சாங்கத்தில் சென்னையை புயல் தாக்கும் என்றும், தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் என்பது குறித்தும் தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
    ராமேசுவரம் :

    ராமேசுவரம் கோவிலில் ஆண்டு தோறும் தமிழ் புத்தாண்டு அன்று கோவிலின் சோமாஸ்கந்தர் சன்னதிக்கு முன்பாக பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது. அதன்படி தமிழ் புத்தாண்டையொட்டி ராமேசுவரம் கோவிலில் நேற்று பகல் 12 மணி அளவில் கோவிலின் சோமாஸ்கந்தர் சன்னதி முன்பாக பஞ்சாங்கம் வைக்கப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

    தொடர்ந்து பஞ்சாங்கம் படிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பஞ்சாங்கத்தை கோவிலின் சர்வசாதகம் சிவமணி வாசித்தார். அப்போது வாசிக்கப்பட்ட பஞ்சாங்கத்தில் இடம்பெற்ற தகவல்கள் வருமாறு:-

    இந்தியாவுக்கு வடகிழக்கில் உள்ள நாடுகளான தென் கொரியா, ஜப்பான், சீனா, மங்கோலியா, பர்மா போன்ற நாடுகளில் இருந்து புதிய வகை வைரஸ் காய்ச்சல் நோய் அதிகமாக பரவும். விளையாட்டு வீரர்களுக்கு விபத்து நடைபெறும். தங்கம், வெள்ளி உள்ளிட்ட ஆபரணங்களின் விலை ஏற்றம், இறக்கமாக சரிவை சந்திக்கும். உலகில் பணத்தட்டுப்பாடு அதிகரிக்கும். பணம் கையிருப்பு என்பது குறைந்து எல்லாவற்றிலும் ஆன்லைன் பரிவர்த்தனை அதிகரிக்கும்.

    புதிய வைரஸ் நோய் தொற்று நோயாக பரவி வர நேரும். இதனால் உலகத்தை ஆட்டிப்படைக்கும். உலகமே ஸ்தம்பித்து நிற்கும் நிலை உருவாகும். மூலிகை மருத்துவம் மூலம் தான் புதிய வைரஸ் நோயை அழிக்க முடியும். எண்ணெய் வித்துக்கள், எள், கடுகு, உளுந்து போன்ற பொருட்களின் விலை உயரும். கல்விக் கட்டணமும் உயரக்கூடும். தகவல் தொடர்பு சாதனங்களின் மென் பொருள் விலை அதிகரிக்கும்.

    ராமேசுவரம் ராமநாதசாமி கோவில்

    விவசாய பொருட்களின் உற்பத்தி அதிகரிக்கும். காபி, ஏலக்காய், மிளகு போன்ற மலைப்பகுதியில் விளையும் பொருட்கள் மற்றும் நறுமணப் பொருட்கள் போன்றவற்றின் விளைச்சல் அதிகமாக இருக்கும். நல்ல வியாபாரமும் இருக்கும். தேனீ, வண்டு, வவ்வால், வெட்டுக்கிளி போன்ற பூச்சிகளால் பயிர் விளைச்சலுக்கு சேதம் ஏற்படக்கூடும். புகழ் பெற்ற பழைய கட்சியே ஆட்சியை பிடிக்க நேரிடும். பழைய கட்சிகளுக்கு ராஜயோகம் காத்திருக்கிறது.

    இந்த ஆண்டு வரலாறு காணாத மழை பொழியும். இந்த ஆண்டு சென்னையை புயல் பலமாக தாக்கும். இதனால் சென்னை தத்தளிக்கும். இந்த ஆண்டு கடுமையான மழையால் சென்னை, புதுச்சேரி, கடலூர், திருச்சி மதுரை, ராமநாதபுரம், ராமேசுவரம், தனுஷ்கோடி, இலங்கை கச்சத் தீவு போன்ற இடங்கள் கடுமையாக பாதிக்கும்.

    அயல் நாடான பாகிஸ்தான் 3 நாடுகளாக பிரிய நேரும். நேபாளத்தை இந்தியாவுடன் இணைக்க நேரும். சீனா எடுக்கும் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் தான் முடியும். அண்டை நாடான பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகள் இந்தியாவின் மீது சண்டை போட நேரம் பார்த்துக் கொண்டே இருக்கும். விவசாய உபகரணங்களின் விலை கடுமையாக உயரும். ராக்கெட் ஏவுகணையை தயாரித்து இந்தியா வெற்றி அடையும்.

    மருத்துவத்தில் பெரும் முயற்சி செய்து ெதாற்று நோய்க்கான மருந்தை இந்திய விஞ்ஞானி கண்டுபிடிப்பார்.

    இவ்வாறு பஞ்சாங்கத்தில் தகவல்கள் இடம்பெற்று இருந்தது.
    கொரோனா பரவல் எதிரொலியாக பாபநாசம் கோவிலில் சித்திரை விசு திருவிழா தடை விதிக்கப்பட்டதால் கோவில் வளாகம் பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
    நெல்லை மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற ஆன்மிக தலமான பாபநாசம் உலகாம்பிகை சமேத பாபவிநாசர் கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை விசு திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த விழாவிற்கு பல்வேறு இடங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து, தாமிரபரணி ஆற்றில் புனித நீராடி இறைவனை தரிசனம் செய்வார்கள்.

    கடந்த 5-ந் தேதி இக்கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதே நேரத்தில் கொேரானா பரவலின் வேகமும் ஆரம்பமாகியது. எனவே கடந்த ஆண்டு போலவே இந்த வருடமும் கொரோனா நோய் தொற்று பரவல் அதிகரிப்பு காரணமாக சித்திரை விசு விழா அரசால் தடை செய்யப்பட்டது. ஆனால் ஆகம விதிப்படி கோவிலில் பூஜைகள் நடைபெற்றது.

    10-ம் திருநாளான நேற்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இந்த தடையால் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வருகை இன்றி கோவில் வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் ஆற்றில் குளிப்பவர்களின் கூட்டத்தை குறைப்பதற்காக அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது.

    கோவிலை சுற்றி தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டிருந்தது. கோவிலுக்கு வருவதற்கு சுமார் ஒரு கிலோ மீட்டருக்கு முன்பே ஆங்காங்கே போலீசாரால் தடுப்பு வேலி அமைத்து, கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் மற்றும் தாமிரபரணி ஆற்றில் குளிக்க வந்தவர்களை திருப்பி அனுப்பினர். இந்த தடையால் பக்தர்கள் தற்போது இரண்டாவது வருடமாக இந்த திருவிழாவை காண முடியாமல் வேதனை அடைந்துள்ளனர்.
    மிகுந்த வீரியம் கொண்ட சாமுண்டியை அவளின் ஸ்லோகங்கள் பாராயணம் செய்து வழிபடுவது எண்ணிலடங்காத நன்மைகளை வாரி வழங்கும் என்கிறார்கள் பக்தர்கள்.
    சாமுண்டீஸ்வரியின் ஸ்லோகங்கள் மிக மிக வலிமையானவை. மகா சக்தி கொண்டவை. மிகுந்த வீரியம் கொண்ட சாமுண்டியை அவளின் ஸ்லோகங்கள் பாராயணம் செய்து வழிபடுவது எண்ணிலடங்காத நன்மைகளை வாரி வழங்கும் என்கிறார்கள் பக்தர்கள்.

    ஓம் பிசாசத்வஜாய வித்மஹே
    சூலஹஸ்தாய தீமஹி
    தந்நோ காளி ப்ரசோதயாத்

    எனும் ஸ்லோகத்தையும்

    ஓம் சாமுண்டேஸ்வரி வித்மஹே
    சக்ரதாரிணி தீமஹி
    தந்நோ சாமுண்டிஹ் ப்ரசோதயாத்

    என்கிற ஸ்லோகத்தையும் வீட்டில் விளக்கேற்றி சொல்லி வரலாம். குறிப்பாக, செவ்வாய்க்கிழமைகளிலும் வெள்ளிக்கிழமைகளிலும் அதிகாலை பிரம்ம முகூர்த்த வேளையிலும் மாலையில் சந்திரோதயத்துக்குப் பின்னரும் விளக்கேற்றி வழிபட்டு வந்தால், இல்லத்தில் இதுவரை இருந்த எதிர்ப்புகளும் தீயசக்திகளும் விலகும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

    குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கவும், இதுவரை இருந்த தரித்திர நிலை விலகவும், தடைகள் அகலவும் நம்மை ஒரு குழந்தையைப் போல் பாவித்து கைதூக்கிவிடுவாள் அன்னை சாமுண்டீஸ்வரி.
    மதுரை சித்திரை திருவிழா நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. விழா நிகழ்ச்சிகளை காண அனுமதி இல்லை என்றாலும், பக்தர்கள் சுவாமி-அம்மனை வழக்கம் போல் தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் சித்திரை திருவிழா உலகப்புகழ் பெற்றது. இந்த திருவிழாவை காண உள்ளூர் மட்டுமின்றி, வெளியூர், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் பெருமளவில் மதுரைக்கு வருவர்.

    ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் 12 நாட்கள் இந்த திருவிழா நடைபெறும்.

    கடந்தாண்டு மார்ச் மாதம் இறுதியில் கொரோனா வைரஸ் வேகமாக பரவியதால் தமிழக அரசு 144 தடை விதித்தது. இதனால் ஏப்ரல் மாதம் இறுதியில் நடைபெற இருந்த சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டது. அது பக்தர்களை வேதனை அடையச் செய்தது.

    அதே நேரத்தில் கடந்த ஆண்டு பக்தர்கள் யாருமின்றி திருக்கல்யாண சம்பிரதாயங்கள் மட்டும் சுவாமி சன்னதியில் உள்ள சேத்தி மண்டபத்தில் 3 சிவாச்சாரியார்களால் நடத்தி வைக்கப்பட்டது. எனவே இந்தாண்டு சித்திரை திருவிழாவை சிறப்பாக நடத்த கோவில் நிர்வாகம் கடந்த மாதத்தில் இருந்தே அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தது.

    கொரோனா வைரஸ்

    இந்த நிலையில் கொரோனா பரவல் 2-வது அலை காரணமாக கோவில்களில் திருவிழாக்கள் நடத்த தடை விதிப்பதாக அரசு அறிவித்தது.

    எனவே மதுரையில் சித்திரை திருவிழா நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்தது. இதுதொடர்பாக கோவில் தக்கார் கருமுத்து கண்ணன் மற்றும் பல்வேறு தரப்பினர் அரசிடம் கோரிக்கை விடுத்தனர்.

    இதைதொடர்ந்து மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவை பக்தர்களின்றி கோவில் வளாகத்திற்குள் நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது.

    எனவே இந்தாண்டு சித்திரை திருவிழா நாளை (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி நாளை காலை 10.35 மணி முதல் 10.59 மணிக்குள் சாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றம் நடக்கிறது. கொடியேற்றம், விழா நிகழ்ச்சிகளை காண பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

    விழாவில் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் வருகிற 22-ந் தேதி இரவு 7.05 மணி முதல் 7.29 மணிக்கு நடக்கிறது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி திருக்கல்யாணம் 24-ந் தேதி காலை 8.35 மணி முதல் 8.59 மணி வரை நடக்கிறது.

    திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தும் கோவில் வளாகத்திற்குள் பக்தர்களின்றி உள் திருவிழாவாக நடக்க உள்ளது. மேலும் திருவிழா நடைபெறும் 12 நாட்களும் சுவாமி-அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி ஆடி வீதிகளில் காலை, இரவு நேரங்களில் வலம் வருவர். அந்த நேரத்தில் மட்டும் பக்தர்கள் யாரும் கோவிலில் தரிசிக்க அனுமதியில்லை.

    அதே நேரத்தில் வழக்கம் போல் தினமும் காலை, மாலையில் கோவில் நிர்வாகம் அறிவித்த நேரத்தில் சுவாமி, அம்மனை பக்தர்கள் தரிசிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    வேலூர் கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழா வருகிற 16-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    வேலூர் கோட்டையில் உள்ள அகிலாண்டேஸ்வரி சமேத ஜலகண்டேஸ்வரர் கோவிலில் 40-வது பிரம்மோற்சவ விழா வருகிற 16-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், கலவை சச்சிதானந்த சுவாமிகள், ஸ்ரீபுரம் சக்தி அம்மா ஆகியோர் முன்னிலையில் பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது.

    பிரம்மோற்சவ விழாவையொட்டி நாளை (புதன்கிழமை) மாலை 6 மணிக்கு கிராம தேவதை செல்லியம்மன் உற்சவம், 15-ந் தேதி மாலை 6 மணிக்கு விநாயகர் உற்சவம் ஆகியவை நடக்கிறது. 16-ந் தேதி காலை 9.30 மணிக்குமேல் கொடியேற்றம் நடக்கிறது. கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக தினமும் காலை மற்றும் மாலையில் நடைபெறும் பஞ்சமூர்த்திகள், விநாயகர், சந்திரசேகர் புறப்பாடு மற்றும் சாமி வீதிஉலா ஆகியவை இந்தாண்டு நடைபெறவில்லை. அதற்கு பதிலாக பஞ்சமூர்த்திகள், விநாயகர், சந்திரசேகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெறுகிறது.

    20-ந் தேதி மாலை 6 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், 63 நாயன்மார்கள் உற்சவம், 22-ந் தேதி காலை 10 மணியளவில் பஞ்சமூர்த்திகள் திருத்தேர் வடம் பிடித்தல் நடக்கிறது. 23-ந் தேதி காலை பிச்சாண்டவர் உற்சவம், 25-ந் தேதி காலை 8.30 மணிக்கு நடராஜர் அபிஷேகம், தீர்த்தவாரியும், மாலை 4.30 மணிக்கு கொடியிறக்கம் நடக்கிறது.

    26-ந் தேதி இரவு 8.30 மணிக்கு சண்டிகேஸ்வரர் உற்சவம், ஜலகண்டேஸ்வரர் புஷ்ப பல்லக்கு ஆகியவை நடக்கிறது. 27-ந் தேதி மாலை 6 மணிக்கு விடையாற்றி உற்சவம், 28-ந் தேதி மாலை 6 மணிக்கு உற்சவ சாந்தி அபிஷேகம் நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை ஜலகண்டேஸ்வரர் தரும ஸ்தாபனத்தினர் செய்து வருகின்றனர்.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தெலுங்கு வருடப் பிறப்பையொட்டி கோவில் உள்புறம் மற்றும் வளாகம் முழுவதும் வண்ண மின் விளக்குகள் மற்றும் மலர்கள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
    திருப்பதி

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தெலுங்கு வருடப் பிறப்பையொட்டி சாமிக்கு இன்று அதிகாலை சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது.

    இதையொட்டி கோவில் உள்புறம் மற்றும் வளாகம் முழுவதும் வண்ண மின் விளக்குகள் மற்றும் மலர்கள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே சாமி தரிசனம் செய்தனர்.

    ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஏழுமலையான் அலங்கரிக்க பட்ட பல்லக்கில் கொண்டு வந்து கொடிமரம் அருகே வைத்து மந்திரங்கள் ஓதி இந்த ஆண்டிற்கான புது பஞ்சாங்கம் படிக்கப்பட்டது.

    நேற்று முன்தினம் இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டதால் பக்தர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது.

    நேற்று காலை முதல் இரவு வரை 39 ஆயிரத்து 998 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 17,258 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.2.59 கோடி உண்டியல் காணிக்கை வசூலாகியிருந்தது.

    இதேபோல் சீனிவாச மங்காபுரம் கல்யாண வெங்கடேச பெருமாள் கோவில், கோதண்ட ராமர் கோவில், கோவிந்தராஜ சாமி கோவில் கபிலேஸ்வரர் கோவில், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில், அப்பலாயகுண்டா பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் காளகஸ்தி சிவன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடந்தன.
    ராஜ கணபதியை மனதார வணங்கி கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் சீரும் சிறப்புமாக வாழலாம். சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கும்.
    ஓம் நமோ ராஜகணபதே மஹாவீர தசபுஜ மதன கால
    விநாசன ம்ருத்யும் ஹந ஹந, யம யம, மத மத
    காலம் ஸம்ஹர ஸம்ஹர த்ரை லோக்யம் மோஹய மோஹய
    ப்ரும்ம விஷ்ணுருத்ரான் மோஹய மோஹய, அசிந்த்ய
    பல பராக்ரம ஸர்வ வ்யாதீன் விநாசய, விநாசய
    ஸர்வக்ரஹான் சூர்ணய சூர்ணய, நாகான் மூட ய
    மூட ய, த்ரிபுவனேச்வர ஸர்வதோ முக ஹும்பட் ஸ்வாஹா
    சித்திரை விஷூ தினத்தில் இறைவனை மனம், மெய் ஆகியவற்றால் வணங்கி துதித்தால், அந்த ஆண்டு முழுவதும் நமக்கு முன் வரும் துன்பங்கள், வினைகள் அனைத்தும் அகன்று போகும் என்பது நம்பிக்கை
    சித்திரை வருடப்பிறப்பானது, ‘சித்திரை விஷூ’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் முக்கியமான ஒரு நிகழ்வாகும்.
    இனிப்பான வாழ்வுதரும் சித்திரை பிறப்பு

    14-4-2021 தமிழ் வருடப்பிறப்பு

    உலகத்தின் இயக்கம் 9 கோள்களை கொண்டே நடைபெறுகிறது. அந்த நவ கோள்களில் தலைமை கோளாக இருப்பது சூரியன். இந்த சூரியன் ராசிகளில் முதல் ராசியான மேஷத்தில் உதயமாகி, பங்குனி வரை 12 ராசிகளிலும் சஞ்சரித்து, மறுபடியும் சித்திரையில் மேஷ ராசியில் உதயமாகும். இப்படி சூரியன் மேஷராசியில் பயணிக்கத் தொடங்கும் நாளே ‘சித்திரை வருடப்பிறப்பு’ என்று அழைக்கப்படுகிறது.

    தமிழக மக்களின் பண்டிகைகளில் முக்கியமானது சித்திரை வருடப்பிறப்பு. இந்துக்களின் முக்கிய பண்டிகையாகவும் இது இருக்கிறது. சித்திரை வருடப்பிறப்பானது, ‘சித்திரை விஷூ’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் முக்கியமான ஒரு நிகழ்வாகும். ‘விஷூ’ என்பதற்கு, இரவும் பகலும் சமமானது என்று பொருள்.

    இந்த தினத்தில் இறைவனை மனம், மெய் ஆகியவற்றால் வணங்கி துதித்தால், அந்த ஆண்டு முழுவதும் நமக்கு முன் வரும் துன்பங்கள், வினைகள் அனைத்தும் அகன்று போகும் என்பது நம்பிக்கை. நாம் முன்னெடுக்கும் எந்த நல்ல காரியமும் தங்கு தடையின்றி நிறைவேறி மகிழ்ச்சியளிக்கும். இது தவிர லட்சுமி கடாட்சமும், பிறவி துன்ப நீக்கமும், தெய்வ அனுக்கிரகமும் கிடைக்கும் என்று சான்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

    சித்திரை விஷூ நாளில், பலவகை மலர்கள், இலைகள், அருகு, மஞ்சள், பால் முதலானவை கொண்டு செய்யப்படும் ‘மருந்து நீர்’ தேய்த்து நீராட வேண்டும். பின்னர்களுக்கு சென்று இறைவனை மனதார தொழுதல் வேண்டும். அத்துடன் தங்களால் இயன்ற தான தர்மங்களை செய்து, பெரியவர்களிடம் ஆசீர்வாதம் பெறுவது ஒவ்வொருவரையும் வாழ்வாங்கு வாழச் செய்யும். மங்கலப் பொருட்கள் அணிந்து, இல்லங்களில் பொங்கல் வைத்து இறைவனுக்கு படைத்து, சூரிய நமஸ்காரம் செய்து பிரகாசம் நிறைந்த வாழ்வு வேண்டியும் வழிபாடு செய்யலாம்.

    சித்திரை விஷூவை வரவேற்பவர்கள், முன்தினம் வீட்டை சுத்தம் செய்ய வேண்டும். பிறகு பூஜை அறையில் உள்ள தெய்வ உருவங்கள் கொண்ட படங்களுக்கு கீழ், தட்டில் பழங்களை அடுக்கி வைத்து விட்டு உறங்கச் செல்ல வேண்டும். பின்னர் அதிகாலையில் அந்த பழங்களில் கண் விழிக்க வேண்டும். கனியில் கண்விழிப்பதன் காரணமாக, எப்போதும் கனியின் சுவை போன்று இனிப்பான வாழ்வு அமையும் என்பது நம்பிக்கையாகும்.

    சித்திரை மாதத்தில் பல சிறப்பு மிக்க ஆன்மிக நிகழ்வுகள் நடைபெற்றுள்ளதாக புராணங்களும், இதிகாசங்களும் தெரிவிக்கின்றன. அவற்றில் சில இங்கு...

    * சித்திரை மாதம் திருதியை அன்று மகாவிஷ்ணு மச்ச (மீன்) அவதாரம் எடுத்தார். அன்றைய தினம் ‘மத்ஸ்ப ஜெயந்தி’யாகக் கொண்டாடப்படுகிறது.

    *சித்திரை மாத சுக்ல பட்ச பஞ்சமி தினத்தில் லட்சுமிதேவி, வைகுண்டத்தில் இருந்து பூமிக்கு விஜயம் செய்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன. எனவே அன்றைய தினம் லட்சுமி பூஜை செய்தால் செல்வச் செழிப்பு ஏற்படும்.

    * சித்திரை மாதம் பவுர்ணமி தினத்தில்தான் சித்திரகுப்தர் தோன்றினார். ஒரு முறை சிவபெருமான் ஒரு சித்திரம் வரைந்தார். அந்த ஓவியம் உயிர்ப்பெற்று வந்தது. அவரே சித்திரகுப்தர். இவரை உயிர்கள் செய்யும் பாவ- புண்ணிய கணக்குகளை எழுதுவதற்காக எமதர்மனுக்கு உதவியாளராக சிவ பெருமான் நியமித்தார். இவர் எமதர்மனின் கணக்கராக இருந்து, பாவ- புண்ணிய கணக்குகளை எழுதி வருவதாக இதிகாச, புராணங்கள் கூறுகின்றன.

    * சித்திரை மாத பவுர்ணமியில் தான், கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் விழா வெகு விமரிசையாக நடைபெறும்.
    தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், மருதமலை முருகன் கோவிலில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கோவில் அடிவாரத்தில் விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது.
    கோவையில் பிரசித்தி பெற்ற மருதமலை முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு வெளியூர் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இந்த நிலையில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், மருதமலை முருகன் கோவிலில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கோவில் அடிவாரத்தில் விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது.

    அதில், மருதமலை முருகன் கோவிலில் சுவாமி தரிசனத்துக்கு பக்தர்கள் காலை 6 முதல் இரவு 7 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். மாலை 6 மணிக்கு மேல் பக்தர்கள் மலைப்பாதையில் செல்ல பக்தர்களுக்கு அனுமதியில்லை. மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து சாமி தரிசனம் செய்ய வேண்டும். கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி கோவில் நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    தமிழ் புத்தாண்டு தினமான நாளை கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
    சென்னை :

    தமிழ் புத்தாண்டு தினமான நாளை கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    வடபழனி முருகன் கோவிலில் நாளை காலை 6 மணிக்கு எப்போதும் போல நடை திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வருவதால், பக்தர்களுக்கு ஏற்கனவே பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அந்த கட்டுப்பாடுகளுடன் கொரோனா விதிமுறைகளும் கண்டிப்பாக கடைபிடிக்கப்படும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக் கப்பட்டுள்ளது.

    10 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர், சிறுமிகள், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அனு மதி கிடையாது என்று கோவில் நிர்வாகம் கூறி உள்ளது.

    பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் கோவிலிலும் நாளை வழக்கம் போல 6 மணிக்கே நடை திறக்கப் படுகிறது. பக்தர்கள் சிரமம் இன்றி தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    காலை 9 மணி முதல் 12 மணிவரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணிவரையிலும் காளிகாம்பாளுக்கு குங்கும லட்சார்ச்சனைக்கு கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த நேரத்தில் பக்தர்கள் கலந்து கொண்டு கொரோனா வழிகாட்டு நெறி முறைகளை கடைபிடித்து காளிகாம்பாளை தரிசிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

    திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலிலும் வழக்கம் போல சாமிதரிசனம் நடை பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் மதியம் 1 மணிவரையிலும், மாலை 5 மணிமுதல் இரவு 8 மணிவரையிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    கொரோனா பரவலுக்கு பிறகு திருவொற்றியூர் கோவிலில் குங்கும அர்ச்சனை நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நாளையும் குங்கும அர்ச்சனை நடை பெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயம், புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோவில்களிலும் காலை வழக்கமான தரிசனமே இருப்பதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருவேற்காடு கருமாரியம்மன், மாங்காடு காமாட்சியம்மன் கோவில்களிலும் பக்தர்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    பாடியில் உள்ள திருவல்லீஸ்வரர் சிவன் கோவிலிலும் நாளை தமிழ்ப்புத்தாண்டையொட்டி தரிசனத்துக்கு எப்போதும் போலவே ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. புத்தாண்டு அன்று அதிகாலையில் நடை திறக்கப்படுவது வழக்கம். கொரோனா பரவலை கருத்தில் கொண்டு அது இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது.

    அனைத்து கோவில்களிலும் முககவசம் அணிந்து வந்தால் மட்டுமே பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து தரிசனம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
    செங்கல்பட்டு அருகில் சிங்கபெருமாள் கோயில், பரிக்கல், திருச்சி ஸ்ரீரங்கம் காட்டழகிய சிங்கர் ஆகிய ஊர்களில் உள்ள ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம மூர்த்தியை வழிபட அனைத்து கடன்களும் தீரும்.
    செவ்வாய் கிழமைகளிலும் வரும் பிரதோஷம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மருக்கு ஏற்ற காலம் ஆகும். செவ்வாயின் உக்ர ரூபத்தை கொண்ட ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மருக்கு பாணக நிவேதனம் செய்தாலும் கடன் விரைவில் அடையும்.

    செங்கல்பட்டு அருகில் சிங்கபெருமாள் கோயில், பரிக்கல், திருச்சி ஸ்ரீரங்கம் காட்டழகிய சிங்கர் ஆகிய ஊர்களில் உள்ள ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம மூர்த்தியை வழிபட அனைத்து கடன்களும் தீரும்.

    விநாயகரை வழிபட கடன் தீரும் ருத்ர மூர்த்தியும் நரசிம்மரும் சேர்ந்த உருவமான ஸ்ரீ சரபேஸ்வர மூர்த்தியை பிரதோஷ காலத்தில் முக்கியமாக ருண விமோசன பிரதோஷ காலத்தில் வழிபட தீராத கடன் தீரும்.
    ஈரோட்டில் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் வகையறா கோவில்கள் கம்பம் பிடுங்கும் விழா நேற்று ஊர்வலம் இன்றி எளிமையாக நடந்தது.
    ஈரோட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக விளங்குவது பெரிய மாரியம்மன் கோவில். ஆண்டுதோறும் மாசி மாதம் பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும். பெரிய மாரியம்மன் கோவிலுடன் வகையறா கோவில்களாக உள்ள சின்ன மாரியம்மன் (நடுமாரியம்மன்), வாய்க்கால் மாரியம்மன் கோவில்களிலும் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டு திருவிழாவும் மாசி மாதம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கொரோனா கட்டுப்பாடுகள், தேர்தல் ஆகிய காரணங்களால் இந்த ஆண்டு திருவிழா தள்ளி வைக்கப்பட்டது.

    அதைத்தொடர்ந்து கடந்த 6-ந் தேதி பூச்சாட்டுதலுடன் பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், வாய்க்கால் மாரியம்மன் கோவில் திருவிழாக்கள் தொடங்கின. தொடர்ந்து கோவிலில் கம்பம் நடப்பட்டது. காரைவாய்க்கால் கோவிலில் குண்டம் திருவிழாவும், சின்னமாரியம்மன் கோவிலில் தேர்த்திருவிழாவும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பொங்கல் விழாவும் நடந்து முடிந்தது. அடுத்து பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கம்பம் பிடுங்கும் விழாவுக்காக பக்தர்கள் ஆர்வத்துடன் காத்து இருந்தனர்.

    ஆனால் கடந்த 10-ந் தேதி முதல் தமிழ்நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டதால் மத வழிபாட்டுத்தலங்களில் அதிக மக்கள் கூட்டம் சேர தடை விதிக்கப்பட்டது. இருப்பினும், கம்பம் பிடுங்கும் விழாவை தடையின்றி நடத்த பக்தர்கள் விரும்பினார்கள். அதன்பேரில் ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பி.தங்கதுரை, மாநகராட்சி ஆணையாளர் எம்.இளங்கோவன் ஆகியோரின் அறிவுரையின் பேரில் கம்பம் பிடுங்கும் விழாவை எளிமையாக மக்கள் கூட்டம் சேராமல், ஊர்வலம் இன்றி நடத்த முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி நேற்று கம்பம் பிடுங்கும் விழா நடந்தது. நேற்று அதிகாலையில் கோவிலில் பெரிய மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் கோவிலில் நடப்பட்டு இருந்த கம்பம் பிடுங்கும் பூஜைகள் தொடங்கின. கம்பத்தில் வைக்கப்பட்டு இருந்த அக்னி சட்டி அகற்றப்பட்டது. கம்பத்தில் கட்டப்பட்டு இருந்த வேப்பிலைகள், பூ மாலைகள் அகற்றப்பட்டது. கோவில் பூசாரிகள், கோவில் நிர்வாகிகள் கம்பத்தை புனித நீர் விட்டு சுத்தம் செய்தனர். பின்னர் கம்பத்தில் புதிய வேப்பிலை கட்டப்பட்டது. பூ மாலைகளும் கட்டப்பட்டன. கம்பத்துக்கு சந்தனம், குங்கும பொட்டுகள் வைக்கப்பட்டது.

    இதே நேரத்தில் சின்ன மாரியம்மன் கோவில், வாய்க்கால் மாரியம்மன் கோவில்களிலும் கம்பம் பிடுங்கும் நிகழ்வுகள் நடந்தன. கம்பம் பிடுங்கப்பட்டதும், மினி டோர் ஆட்டோக்களில் கம்பங்கள் எடுக்கப்பட்டு மணிக்கூண்டுக்கு கொண்டு வரப்பட்டன. முதலில் சின்னமாரியம்மன் கோவில் கம்பம் மணிக்கூண்டுக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் காரைவாய்க்கால் மாரியம்மன் கம்பம் வந்து சேர்ந்தது. ஏற்கனவே இருந்த கம்பத்தை சுற்றி வந்து அங்கேயே நிலை நிறுத்தப்பட்டது.

    அதன்பின்னர் பெரிய மாரியம்மன் கோவில் கம்பம் கொண்டு வரப்பட்டது. இந்த கம்பத்தை மற்ற 2 கம்பங்களையும் 3 முறை சுற்றி வந்து பூசாரிகள் நிலை நிறுத்தினார்கள். அப்போது நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் அங்கு கூடி இருந்தனர். அவர்கள் பாரம்பரியப்படி கம்பத்துக்கு பால், புனித நீர் ஊற்றியும், உப்பு-மிளகு போட்டும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினார்கள். அங்கு 3 கம்பங்களுக்கும் சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

    அதைத்தொடர்ந்து வேப்பிலை தோரணங்கள், கரும்புகள் கட்டி அலங்காரம் செய்யப்பட்ட லாரியில் 3 கம்பங்களும் ஏற்றப்பட்டன. பக்தி கோஷங்கள் முழங்க கம்பம் ஊர்வலம் தொடங்கியது. மணிக்கூண்டில் இருந்து கடை வீதி, ஆர்.கே.வி. ரோடு, காவிரி ரோடு வழியாக கருங்கல்பாளையம் காவிரி ஆற்றுக்கு வாகனம் வந்தது. காவிரிக்கரை முனியப்பசாமி கோவில்வரை லாரி கொண்டு வரப்பட்டது. அங்கு பாதுகாப்பான இடத்தில் கம்பங்கள் இறக்கப்பட்டு, காவிரி ஆற்றில் இறக்கப்பட்டன. சூரிய உதய நேரத்தில் கம்பங்களுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. காவிரி தீர்த்தத்தை எடுத்து பக்தர்கள் கம்பத்தின் மீது தெளித்தனர். அப்போது அங்கு கூடி இருந்த 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பக்தி முழக்கங்கள் எழுப்ப, கம்பங்கள் ஆற்றுக்குள் விடப்பட்டன.

    ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜூ தலைமையில், டவுன் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வன் மற்றும் போலீசார் அதிகாலை நேரத்திலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

    ஈரோடு மாநகரமே ஒட்டு மொத்தமாக கொண்டாடும் கம்பம் பிடுங்கும் விழா அதிகாலை நேரத்திலேயே மிகவும் எளிமையாக முடிக்கப்பட்டது.
    ×