என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    ஜூலை மாதம் 13-ம் தேதியில் இருந்து ஜூலை மாதம் 19-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
    13-ம் தேதி செவ்வாய் கிழமை :

    * சதுர்த்தி விரதம்
    * சங்கரன் கோவில் கோமதியம்மன் உற்சவாரம்பம்
    * மதுரை மீனாட்சி வெள்ளி அன்ன வாகனத்தில் வீதிஉலா
    * ராமநாதபுரம் கோதண்டராமசுவாமி கருட வாகனத்தில் புறப்பாடு
     * சந்திராஷ்டமம் - உத்திராடம், திருவோணம்

    14-ம் தேதி புதன் கிழமை :
     
    * ஆனி உத்திர அபிஷேகம்
    * சிதம்பரம் சிவபெருமான் ரதோற்சவம்
    * சந்திராஷ்டமம் - திருவோணம், அவிட்டம்
     
    15-ம் தேதி வியாழக்கிழமை :

    * சஷ்டி விரதம்
    * ஆனி உத்திர தரிசனம்
    * நடராஜர் அபிஷேகம்
    * மதுரை மீனாட்சி வெள்ளி யானை வாகனத்தில் பவனி
    * சந்திராஷ்டமம்- அவிட்டம், சதயம்

    16-ம் தேதி வெள்ளிக்கிழமை  :

    * சுபமுகூர்த்த நாள்
    * மதுரை மீனாட்சி விருஷப சேவை
    * கள்ளழகர் உற்சவாரம்பம்
    * சந்திராஷ்டமம் - சதயம், பூரட்டாதி

    17-ம் தேதி சனிக்கிழமை :

    * மதுரை மீனாட்சி கிளி வாகனத்தில் வீதி உலா
    * திருவண்ணாமலை சிவபெருமான் பவனி
    * திருவள்ளூர் வீரராகவர் புறப்பாடு
    * சந்திராஷ்டமம் - பூரட்டாதி, உத்திரட்டாதி

    18-ம் தேதி ஞாயிற்று கிழமை :

    * உபேந்தர நவமி
    * மதுரை புஷ்ப பல்லக்கில் புறப்பாடு கண்டருளல்
    * ராமநாதபுரம் கோதண்டராமசுவாமி ரதோற்சவம்
    * சந்திராஷ்டமம் - உத்திரட்டாதி, ரேவதி

    19-ம் தேதி திங்கள் கிழமை  :

    * மதுரை மீனாட்சி தங்க குதிரையில் பவனி
    * திருமலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் கஜேந்திர மோட்சம்
    * திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டாள் புறப்பாடு
    * சந்திராஷ்டமம் -   ரேவதி, அசுபதி
    ‘சிவனும், விஷ்ணுவும் ஒன்று' என்ற ஒப்பற்ற தத்துவத்தை உலகுக்கு உணர்த்தும் வகையில் ஆடித்தபசு திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற சிவ ஆலயங்களில் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதங்களில் ஆடித்தபசு திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த திருவிழா தொடர்ந்து 12 நாட்கள் வரை நடக்கும். ‘சிவனும், விஷ்ணுவும் ஒன்று' என்ற ஒப்பற்ற தத்துவத்தை உலகுக்கு உணர்த்தும் வகையில் ஆடித்தபசு திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவில் தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்வது வழக்கம்.

    கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் ஆடித்தபசு திருவிழா நடத்தப்படவில்லை. இந்த ஆண்டு ஊரடங்கு அமலில் இல்லாத நிலையில் கொரோனா தொற்று காரணமாக திருவிழாக்கள் நடத்த அரசு வழிகாட்டு முறைகளை வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில் திருவிழா நடத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

    இந்த ஆண்டுக்கான ஆடித்தபசு திருவிழா நாளை (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று காலை 6 மணியில் இருந்து 6.30 மணிக்குள் கோமதி அம்மன் சன்னதி முன்பு உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் நடக்கிறது. பின்னர் அம்பாள் சிவிகையில் எழுந்தருளி கோவில் உள்பிரகாரத்தில் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து தினமும் காலையும், இரவும் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    திருவிழா தொடர்பான சிறப்பு பூஜைகளில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் நாளை முதல் 24-ந் தேதி வரை 12 நாட்களும் காலை 8 மணிக்கு மேல் தான் பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். அதே போல் இரவு 7.30 மணி வரை மட்டுமே பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    நாம் ஆன்மீகத்தில் பின்பற்றும் சில பழக்க வழக்கங்கள். மேலோட்டமாக பார்க்கும்போது இவை சாதாரணமானதாக் தெரியலாம். ஆழ்ந்து நோக்கினால் அதன் உண்மைப் பொருளை உணரலாம்.
    ஆன்மீகத்தில் ஒரு செயலை செய்யும்போது கண்டிப்பாக வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருந்தால், அந்த செயல் நல்லதாகவே அமையும். அது போன்றதுதான் நாம் ஆன்மீகத்தில் பின்பற்றும் சில பழக்க வழக்கங்கள். மேலோட்டமாக பார்க்கும்போது இவை சாதாரணமானதாக் தெரியலாம். ஆழ்ந்து நோக்கினால் அதன் உண்மைப் பொருளை உணரலாம்.

    சில நம்பிக்கைகள்....

    1. மளிகை பொருட்களை மற்ற நாட்களில் வாங்கிவிட்டு உப்பு மட்டும் வெள்ளிக்கிழமைகளில் வாங்கினால் வீட்டில் செல்வம் எப்போதும் சேர்ந்து கொண்டே இருக்கும்.

    2. அஷ்டமி, நவமி நாட்களில் வெளியே செல்ல நேர்ந்தால் துளசி செடியை வலமாக 3 முறை வலம்வந்து வணங்கிச் சென்றால் நினைத்த காரியம் கைகூடும்.

    3. செவ்வாய், வெள்ளி, பவுர்ணமி நாட்களில் வீட்டில் குத்து விளக்கு ஏற்றி வழிபாடு செய்வது சகல சந்தோஷத்தையும் அள்ளித்தரும்.

    4. உப்பு, வெந்தயம், கருப்பு எள் ஆகியவற்றை சிறிது இடித்து அதை ஒரு வெள்ளைத் துணியில் கட்டி வீட்டின் தென்மேற்கு மூலையில் (கன்னிமூலை) வைத்து விட்டால், வரவேண்டிய பணம் விரைவில் வந்து சேரும். 48 நாட்களுக்கு ஒருமுறை வெள்ளைத்துணியை பிரித்து மாற்றிக் கொள்ளலாம்.

    5. வீட்டிற்கு வருபவர்களுக்கு குங்குமம் கொடுப்பது பண்டைய தமிழர்களின் மரபு. அதை வீட்டிற்கு வந்தவுடன் கொடுக்க வேண்டும். வந்தவர்கள் வெளியே செல்லும்போது கொடுத்தால் ந்ம் வீட்டின் சக்தி அவர்களுடன் சென்றுவிடும் என்பது ந்ம்பிக்கை.
    ஜெகநாதர் ரத யாத்திரையில் இந்த ஆண்டும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. இதைப்போல மாநிலத்தின் பிற பகுதிகளிலும் கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
    ஒடிசாவின் பூரி ஜெகநாதர் ரத யாத்திரை உலக புகழ்பெற்றதாகும். கடந்த ஆண்டு கொரோனாவின் முதல் அலை காரணமாக இந்த ரத யாத்திரை பக்தர்கள் இன்றி நடந்தது.

    இந்த ஆண்டுக்கான ரத யாத்திரை இன்று தொடங்குகிறது. ரத யாத்திரையை முன்னிட்டு நேற்று இரவு 8 மணி முதல் ஜூலை 13ம் தேதி இரவு 8 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

    கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் பக்தர்களின்றி ஒடிசா அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி ரத யாத்திரை நடைபெறும்.

    பூரி ஜெகநாதர் ரத யாத்திரையின்போது, கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்படும். போலீசார் மட்டுமின்றி சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில் ஊழியர்கள் தேரோட்டத்தில் பங்கேற்பார்கள்.

    இது குறித்து சிறப்பு நிவாரண கமிஷனர் ஜெனா கூறுகையில், ‘ஜெகநாதர் ரத யாத்திரையில் இந்த ஆண்டும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. இதைப்போல மாநிலத்தின் பிற பகுதிகளிலும் கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது’ என்று தெரிவித்தார்.

    ரத யாத்திரையின்போது பூரியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கும் எனக்கூறிய அவர், கடந்த ஆண்டைப்போல மக்கள் தொலைக்காட்சியில் நேரலையாக பார்த்து மகிழலாம் என தெரிவித்தார். 2 டோஸ் தடுப்பூசி போட்ட மற்றும் கொரோனா இல்லாத 500 ஊழியர்கள் மட்டுமே ரதத்தை இழுத்து செல்ல அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அவர் கூறினார்.
    காங்கேயம் அருகே உள்ள சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் தமிழ்பஞ்சாங்கம் வைத்து பூஜை செய்யப்படுகிறது.
    திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவிலில் ஆண்டவன் உத்தரவு பெட்டி உள்ளது. சுப்பிரமணியசாமியே பக்தர்களின் கனவில் தோன்றி குறிப்பிட்ட பொருளைக் கூறி அதை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைக்க உத்தரவிடுவார்.

    உத்தரவு பெற்ற பக்தர் கோவில் நிர்வாகத்தை அணுகி விவரத்தை கூறினால் சாமியிடம் பூப்போட்டு உத்தரவு கேட்கப்படும். அதன்பின்னர் பக்தரின் கனவில் வந்த பொருளை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைத்து தினமும் பூஜை நடத்துவார்கள். இவ்வாறு உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் பொருளுக்கு காலநிர்ணயம் ஏதும் கிடையாது. இந்த நிலையில் கோவை மாவட்டம் நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த லதாசம்பத்குமார் என்ற பக்தரின் கனவில் உத்தரவான தமிழ் பஞ்சாங்கம், ஆதார் அட்டை, மணி, 10 ரூபாய் நாணயங்கள் (60 நாணயங்கள்) ஆகிய பொருட்கள் நேற்று முதல் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைத்து பூஜிக்கப்பட்டு வருகிறது.

    ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் பொருட்கள் சமுதாயத்தில் ஏதாவது ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்பட்டு வருகிறது.

    இதற்கு முன்பு ஆண்டவன் உத்தரவு பெட்டியில் கடந்த மே மாதம் 18-ந் தேதி முதல் வேப்பிலை, துளசி, வில்வ இலை, அருகம்புல், விபூதி, மஞ்சள்தூள் ஆகிய பொருட்கள் வைத்து பூஜிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
    பாதுகாப்பு கருதி அன்றிலிருந்து நெல்லையப்பர் கோவிலின் வடக்கு, தெற்கு, மேற்கு கோபுர வாசல்கள் மூடப்பட்டது. அந்த வழியாக பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
    தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயம் நெல்லை டவுன் நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள் கோவில் ஆகும். கடந்த 2004-ம் ஆண்டு நெல்லையப்பர் கோவில் வடக்குப்புற வாசல் அருகே ஒரு கொலை சம்பவம் அரங்கேறியது. இதையடுத்து பாதுகாப்பு கருதி அன்றிலிருந்து கோவிலின் வடக்கு, தெற்கு, மேற்கு கோபுர வாசல்கள் மூடப்பட்டது. அந்த வழியாக பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

    கடந்த 17 ஆண்டுகளாக அந்த வாசல் கதவுகள் பூட்டியே கிடந்தது. தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சமீபத்தில் நெல்லையப்பர் கோவிலில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பக்தர்கள் சார்பில் கோவிலில் பூட்டிக்கிடக்கும் வாசல்களை திறக்க கோரிக்கை வைக்கப்பட்டது.

    இதையடுத்து அமைச்சர் அங்கு ஆய்வு நடத்தி, உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அவரது உத்தரவை தொடர்ந்து கோவிலின் மேற்கு, வடக்கு, தெற்கு வாசல்களில் உடனடியாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று வடக்கு, தெற்கு, மேற்கு வாசல் கதவுகள் திறக்கப்பட்டன. 3 வாசல் கதவுகளுக்கும் சிறப்பு தீபாராதனை காண்பித்து கதவுகள் திறக்கப்பட்டன.

    17 ஆண்டுகளுக்கு பிறகு நெல்லையப்பர் கோவிலில் நான்கு வாசல் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் அந்த வழியாக சென்று சாமி தரிசனம் செய்தனர்.
    சிவாலயங்களுக்கு செல்பவர்கள் அங்கு இருக்கும் வன்னி மரம், வில்வ மரத்தை 21 முறை வலம் வந்து வழிபாடு செய்து வந்தால், நம்முடைய பிரச்சினைகள் அனைத்தும் விலகும்.
    சிவன் கோவில்களில் பெரும்பாலும் வில்வ மரங்களே தல விருட்சமாக இருக்கும். ஒரு சில ஆலயங்களில் வன்னி மரமும் இருப்பதைக் காணலாம். சிவாலயங்களுக்கு செல்பவர்கள் அங்கு இருக்கும் வன்னி மரம், வில்வ மரத்தை 21 முறை வலம் வந்து வழிபாடு செய்து வந்தால், நம்முடைய பிரச்சினைகள் அனைத்தும் விலகும். வழக்குகள் சாதகமாகும்.

    இரண்டு சர்ப்பங்கள் இணைந்தது போல் காணப்படும் நாகர் சிலைக்கு, வெள்ளிக்கிழமை அன்று வரும் ராகு காலத்தில் (காலை 10.30 மணி முதல் 12 மணி வரை) மஞ்சள் குங்குமம் வைத்து, செவ்வரளிப் பூ அணிவித்து, அபிஷேகம் செய்ய வேண்டும். மேலும் நெய் தீபம் ஏற்றி, தம்பதியர் தங்களின் பெயருக்கு அர்ச்சனை செய்து கொண்டால், கணவன்- மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும்.

    குடும்பம் என்று இருந்தால், அனைவருக்கும் பிரச்சினைகள், துன்பங்கள் வரத்தான் செய்யும். ஒருவேளை தாங்க முடியாத துன்பங்கள் வந்து, மன அமைதி குறைந்தால், அருகில் உள்ள ஆலயங்களில் தீபம் ஏற்றி வழிபடுவது அந்த பிரச்சினைகளில் இருந்து உங்களைக் காக்கும்.

    கடன் தொல்லைகள் அதிகரித்து, குடும்பத்தை நடத்த முடியாத நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருப்பவர்கள், யோக நரசிம்மரையும், லட்சுமி நரசிம்மரையும் வழிபடலாம். இதன் மூலம் அந்த கடன் தொல்லையில் இருந்து விடுபட வழிபிறக்கும். நரசிம்மரின் எந்த திருக்கோலத்தை தரிசித்தாலும் கடன் தொல்லைகள், பில்லி, சூனியம், ஏவல், திருஷ்டி, திருமண தடை போன்றவை விலகி நன்மைகள் வந்துசேரும்.

    அம்மன் கோவில்களுக்குச் சென்றால், அங்கு பலிபீடத்தின் முன்பாக, திரிசூலம் வைத்திருப்பார்கள். இந்த திரிசூலத்தில் ஒரு எலுமிச்சைப் பழத்தை குத்தி வைத்து, குங்கும பொட்டு வைத்து வழிபட்டு வந்தால், செய்வினை தோஷங்கள் நீங்கும்.

    வெள்ளெருக்கு விநாயகரை வீட்டு அறைகளில் கைக்கு எட்டாத உயரத்தில் வைத்து வழிபட்டு வாருங்கள். இதன் மூலமாக வீட்டில் ஏதேனும் ஏவல், பில்லி, பூதகண சேஷ்டைகள் இருந்தால் நின்று விடும்.

    பெருமாளிள் கையில் இருக்கும் சக்திவாய்ந்த ஆயுதம், சுதர்சன சக்கரம். பெரும்பாலான பெருமாள் கோவில்களில், சக்கரத்தாழ்வார் என்ற பெயரில் இவர் தனிச் சன்னிதியில் காட்சி தருவார். இவரது சன்னிதியில் தொடர்ச்சியாக 48 நாட்கள் நெய் தீபம் ஏற்றி, 12 முறை வலம் வந்து வழிபட்டால், தொழில் மேம்படும். வழக்குகள் சாதகமாகும். 21 செவ்வாய்க்கிழமைகள் நெய் தீபம் ஏற்றி வழிபட, கொடுத்த கடன் வசூலாகும்.

    சிவபெருமானின் 64 வடிவ மூர்த்தங்களில் ஒருவராக இருப்பவர் பைரவர். இவரது சன்னிதியில் தொடர்ந்து 8 செவ்வாய்க்கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி சகஸ்ர நாம அர்ச்சனை செய்தால், கடன் தொல்லைகள் அகலும்.

    திங்கட்கிழமை வழிபாடு சிவபெருமானுக்கு உகந்தது. ஒருவரின் ஜாதகத்தில் சனி பகவானின் பாதிப்பு இருந்தால், பால் அபிஷேகம் செய்து, அர்ச்சித்து வழிபட்டால், அந்த பாதிப்புகள் விலகும். சனிக்கிழமைகளில் சனி பகவான் சன்னிதியில் தேங்காய் உடைத்து, இரண்டு மூடிகளிலும் நல்லெண்ணெய் ஊற்றி, தீபம் ஏற்றினாலும், சனி தோஷம் நீங்கும்.

    நவக்கிரகத்தில் இருக்கும் சுக்ரனுக்கு, வெள்ளிக் கிழமைகளில் அகல் விளக்கில் கற்கண்டு போட்டு, அதில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால், கணவன்- மனைவி இடையேயான கருத்து வேறுபாடுகள் மறையும்.

    பிரதோஷ காலத்தில், ரிஷபாரூட மூர்த்தியாய் விளங்கும் சிவபெருமானை பார்வதிதேவியுடன் வழிபாடு செய்து வந்தால், ஆயிரம் அஸ்வமேத யாகம் செய்த பலனைப் பெறலாம். அதிலும் ஈசானிய மூலையில் ஈஸ்வரனுக்கு காட்டப்படும் தீபாரதனையை கண்டு வணங்குவது, நோய் நொடிகளையும், வறுமையையும் அகற்றும்.
    வடலூர் சத்திய ஞானசபையில் இந்த மாத ஜோதி தரிசனம் பக்தர்கள் இன்றி நடந்தது. ஆனால் ஞானசபையின் வெளிப்பகுதியில் அகன்ற திரையில் ஜோதி தரிசனம் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
    வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் ஒவ்வொருமாதமும் பூசம் நட்சத்திரம் அன்று ஜோதி தரிசனம் நடைபெறும். கொரோனா 2-வது அலை ஊரடங்கு காரணமாக ஜோதியை தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட வில்லை.

    எனவே நேற்று ஆனிமாத ஜோதி தரிசனம் பக்தர்கள் இன்றி நடந்தது. ஆனால் ஜோதி தரிசனத்தை பக்தர்கள், வள்ளலார் தெய்வ நிலையம் யூடியூப் சேனல் மூலம் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

     மாறாக யூடியூப் சேனலில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. அப்போது ஞானசபையின் வெளிப்பகுதியில் அகன்ற திரையில் ஜோதி தரிசனம் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில் பக்தர்கள் சமூக இடைவெளியில் அமர்ந்து தரிசனம் செய்தனர்.
    ஏர்வாடி தர்கா ஹக்தார்கள் முன்னிலையில் கொடி இறக்கப்பட்டு இந்த ஆண்டு சந்தனக்கூடு திருவிழா கோலாகலமாக முடிவடைந்தது.
    ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்காவில் சுல்தான் செய்யது இபுராகிம் ஷஹீதின் 847-ம் ஆண்டு சந்தனக்கூடு திருவிழா கடந்த ஜூன் மாதம் 22-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 5-ந் தேதி அதிகாலை சந்தனம் பூசும் திருவிழா மிக எளிமையான முறையில் நடைபெற்றது.

    அதன் பின்னர் 5-ந்தேதி முதல் அனைத்து வழிபாட்டு தலங்களையும் திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து தமிழ்நாடு உள்பட கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்து ஏராளமான யாத்திரீகர்கள் ஏர்வாடி தர்கா கொடி இறக்கத்தை காண்பதற்கு குவிந்தனர். நேற்று காலை குர்ஆன் ஓதப்பட்டு நேர்ச்சைகள் வழங்கப்பட்டு திருவிழா நிகழ்ச்சி நிறைவு நடைபெற்றது.

    மாலை 5.45 மணி அளவில் ஏர்வாடி தர்கா ஹக்தார்கள் முன்னிலையில் கொடி இறக்கப்பட்டு இந்த ஆண்டு சந்தனக்கூடு திருவிழா கோலாகலமாக முடிவடைந்தது. முன்னதாக காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டு ஏழை எளிய மக்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்கினார். முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    தற்போது ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் தினமும் 5 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு 17-ந்தேதி முதல் அனுமதிக்கப்படுவார்கள்.
    சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆடி மாத பூஜைக்காக வருகிற 16 -ந் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராஜ் நடையை திறந்து வைக்கிறார். தொடர்ந்து 21 -ந் தேதி வரை பூஜைகள் நடைபெறும்.

    இந்த நாட்களில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், உஷபூஜை, உச்ச பூஜைக்கு பின்பு மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படும். பின்னர் மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு 6 மணிக்கு தீபாராதனை, அபிஷேகம், இரவு 8.30 மணிக்கு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும்.

    கொரோனா கட்டுப்பாடு காரணமாக கடந்த சில மாதங்களாக கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. தற்போது ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் தினமும் 5 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு 17-ந்தேதி முதல் அனுமதிக்கப்படுவார்கள்.

    தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர். நெகட்டிவ் சான்றிதழ் அல்லது கொரோனா தடுப்பூசி 2 டோஸ் போட்டதற்கான ஆன்லைன் சான்றிதழ் கண்டிப்பாக கொண்டு வர வேண்டும். இந்த சான்றிதழ்கள் அல்லாத பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். பக்தர்களுக்கான மருத்துவ சான்று மற்றும் ஆன்லைன் சான்றிதழ் பரிசோதனை நிலக்கல்லில் நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    ஆஷாட நவராத்திரி விழா வருகிற 19-ந் தேதி நிறைவடைகிறது. அன்றைய தினம் வராஹி அம்மனுக்கு புஷ்ப அலங்காரமும், இரவு கோவில் வளாகத்திற்குள் சாமி புறப்பாடும் நடைபெறுகிறது.
    தஞ்சை பெரியகோவிலில் வராஹி அம்மன் தனி சன்னதியில் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். ஆண்டுதோறும் வராஹி அம்மனுக்கு 10 நாட்கள் ஆஷாட நவராத்திரி விழா கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டிற்கான ஆஷாட நவராத்திரி விழா கணபதி ஹோமத்துடன் 9-ம் தேதி தொடங்கியது.

    பின்னர் வராஹி அம்மனுக்கு பல்வேறு வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    வராஹி அம்மனுக்கு 10-ம்தேதி (சனிக்கிழமை) வராஹி அம்மன் மஞ்சள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    3-வது நாளான நேற்று வராஹி அம்மன் குங்கும அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் பக்தர்கள் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் சாமி தரிசனம் செய்தனர்.

    இன்று சந்தன அலங்காரமும், 13-ந் தேதி தேங்காய்பூ அலங்காரமும், 14-ந் தேதி மாதுளை அலங்காரமும், 15-ந் தேதி நவதானிய அலங்காரமும், 16-ந் தேதி வெண்ணெய் அலங்காரமும், 18-ந் தேதி காய்கனி அலங்காரமும் நடைபெறுகிறது.

    ஆஷாட  நவராத்திரி விழா வருகிற 19-ந் தேதி நிறைவடைகிறது. அன்றைய தினம்  வராஹி அம்மனுக்கு புஷ்ப அலங்காரமும், இரவு கோவில் வளாகத்திற்குள் சாமி புறப்பாடும் நடைபெறுகிறது.
    இந்த மாரியம்மன், விருப்பங்களை நிறைவேற்றும் இச்சா சக்தியாக அவதரித்த தலம் இதுவாகும். இந்த அன்னையை தரிசித்தால், பக்தர்கள் விருப்பங்கள் அனைத்தும் பூர்த்தியாகும் என்பது நம்பிக்கை.
    அரவக்குறிச்சி அருகே அமைந்துள்ளது கோடந்தூர் கிராமம். இங்குள்ள நாய்க்கன்வலசு என்ற பகுதியில் மாரியம்மன் திருக்கோவில் ஒன்று இருக்கிறது. 300 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயத்தில் அருளும் மாரியம்மன், சுயம்புவாகத் தோன்றியவர். தன்னை தேடி வந்து வேண்டிக்கொள்பவர்களுக்கு, வேண்டிய வரத்தை அருளும் ஒப்பற்ற தேவியாக, இந்த அன்னை விளங்குகிறாள்.

    இந்த மாரியம்மன், விருப்பங்களை நிறைவேற்றும் இச்சா சக்தியாக அவதரித்த தலம் இதுவாகும். இந்த அன்னையை தரிசித்தால், பக்தர்கள் விருப்பங்கள் அனைத்தும் பூர்த்தியாகும் என்பது நம்பிக்கை. இது ஒன்றும் பெரிய கோவில் இல்லை. ஒரு ஊஞ்ச மரத்தின் அடியில் அமர்ந்து மகா சக்தியாக அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார், இந்த அன்னை. இங்கு ஊஞ்ச மரத்தில் இணைந்து வில்வ மரமும் இருப்பது ஆச்சரியமானதாகும். இந்த ஆலயத்தில் இருக்கும் அமைதி, நமக்கு மன நிம்மதியை வழங்குவதை நாம் உணர முடியும்.

    அழகு கொஞ்ச அருள்பாலிக்கும் அம்மனை பார்த்தாலே மெய்சிலிர்க்கும். இந்த அம்மனை பவுர்ணமி தினத்தில் தரிசிப்பது மிகவும் சிறப்பானது. பொருளாதாரத்தில் உயர்வு பெறவும், கணவன்- மனைவி இடையே உள்ள பிரச்சினை தீரவும், சுகப் பிரசவம் நடைபெறவும், குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறவும், நோய் நொடி நீங்கவும், மன அமைதி கிடைக்கவும் அம்மனை பிரார்த்தனை செய்தால், அந்த பிரார்த்தனை விரைவிலேயே நடந்தேறுவதை பார்க்கலாம்.

    இந்த ஆலயம் திருமணத் தடை நீக்கும் தலமாகவும் விளங்குகிறது. இங்கு வரும் பக்தர்கள், தங்களின் மகள் அல்லது மகனின் ஜாதகத்தை, அம்மனின் திருவடியில் வைத்து வணங்கி வேண்டிச் செல்கிறார்கள். அவர்களின் வேண்டுதல் விரைவிலேயே நிறைவேறுகிறது. இதையடுத்து அவர்கள் மணமக்களை அழைத்து வந்து நேர்த்திக்கடனைச் செலுத்திச் செல்கிறார்கள்.

    அமைவிடம்

    திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டம் வெள்ளக்கோவிலில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் இந்த திருத்தலம் உள்ளது. கரூர் சாலையில் உள்ள குருக்கத்தியில் இருந்து 6 கிலோமீட்டர் தூரத்திலும், வைரமடையில் இருந்து 4 கிலோமீட்டர் தூரத்திலும் இந்த திருத்தலத்தை அடையலாம். பேருந்து வசதிகள் அவ்வளவாக கிடையாது. வாடகை வாகன வசதிகள் இருக்கின்றன.
    ×