என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    புரட்டாசி மாத பூஜையையொட்டி, சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 16-ந்தேதி திறக்கப்படுகிறது. ஆன்லைன் முன்பதிவு நேற்று தொடங்கியது.
    திருவனந்தபுரம் :

    புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 16-ந் தேதி (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி நடையை திறந்து வைப்பார். 21-ந் தேதி வரை பூஜைகள் 5 நாட்கள் நடைபெறும்.

    இந்த நாட்களில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், உஷபூஜை, உச்ச பூஜைக்கு பின் மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படும். மாலை 5 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு தீபாராதனை, அபிஷேகம் நடைபெறும். அதை தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும். மேலும் தினசரி நெய்யபிஷேகம், உதயாஸ்தமன பூஜை, படி பூஜை உள்பட சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.

    கொரோனா கட்டுப்பாடு தளர்வு காரணமாக தினசரி 15 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.

    இதையொட்டி, சபரிமலையில் ஆன்லைன் முன்பதிவு நேற்று மாலை 5 மணிக்கு தொடங்கியது. தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர். நெகட்டிவ் சான்றிதழ் அல்லது கொரோனா தடுப்பூசி 2 டோஸ் போட்டதற்கான சான்றிதழ் கண்டிப்பாக கொண்டு வர வேண்டும்.

    நிலக்கல்லில் இதுதொடர்பான ஆய்வு நடைபெறும். 17-ந் தேதி முதல் முன்பதிவு செய்த பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.


    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் 150 கிலோ அளவில் ராட்சத கொழுக்கட்டை தயாரிக்கும் பணி நேற்று தொடங்கியது. 3 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
    தென் கைலாயம் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு பார்த்த நிலையில் பெரிய சிவலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். ரத்னாவதி என்ற பெண்ணுக்கு சிவபெருமான், அவளது தாய் வடிவில் வந்து சுகப்பிரசவம் பார்த்த தலம் என்பதால் இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் தாயுமான சுவாமி என்று அழைக்கப்படுகிறார்.

    கோவிலின் அடிவாரத்தில் மாணிக்க விநாயகர், மலையின் உச்சியில் உச்சிப்பிள்ளையார், மலையின் நடுப்பகுதியில் தாயுமானசுவாமி, மட்டுவார் குழலம்மையும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.

    மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்படும். அந்தவகையில் இந்த ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி விழா நாளை (வெள்ளிக்கிழமை) காலை நடைபெற உள்ளது. விழாவிற்காக 150 கிலோவில் ராட்சத கொழுக்கட்டை தயாரிக்கும் பணி நேற்று தொடங்கியது. இந்த கொழுக்கட்டை 24 மணி நேரம் ஆவியில் வேக வைத்து தயாரிக்கப்படுகிறது. இதற்காக தேங்காய், பச்சரிசி மாவு, உருண்டை வெல்லம், ஏலக்காய், நெய், பருப்பு உள்ளிட்ட பொருட்கள் பயன்படுத்தப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் விஜயராணி மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    இந்தநிலையில் கொரோனா நோய் தொற்றை தடுக்கும் வகையிலும், தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் படியும் நாளை (வெள்ளிக்கிழமை), நாளை மறுநாள் (சனிக்கிழமை) மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய 3 நாட்கள் கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.

    ஆனால், கோவிலில் தினந்தோறும் நடைபெறும் அனைத்து பூஜைகளும் நடைபெறும். நாளை நடைபெறும் விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சியில் கோவில் அர்ச்சகர்கள், பணியாளர்கள் மட்டும் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
    பூண்டி மாதா பேராலயத்தில் அன்னை மரியாள் பிறப்பு பெருவிழா நடைபெற்றது. விழாவில் சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் குறைந்த அளவிலான பக்தர்களே கலந்து கொண்டனர்.
    தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டி மாதா பேராலயம் உள்ளது. இந்த பேராலயத்தில் அன்னை மரியாள் பிறப்பு பெருவிழா கடந்த 30-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது.

    அதன்படி பூண்டி மாதா பேராலயத்தில் அன்னை மரியாள் பிறப்பு பெருவிழா பக்தர்கள் இன்றி தொடங்கியது. அன்னை மரியாளின் பிறப்பு நாளாக கருதப்படும் நேற்று மாலை சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் குறைந்த அளவிலான பக்தர்களே கலந்து கொண்டனர்.

    கும்பகோணம் மறைமாவட்ட பிஷப் அந்தோணிசாமி, பூண்டி மாதா பேராலய அதிபர் பாக்கியசாமி, துணை அதிபர் ரூபன் அந்தோணிராஜ், தியான மைய இயக்குனர் சாம்சன், உதவி பங்கு தந்தையர்கள் இனிகோ, ஜான்சன், ஆன்மிக தந்தை அருளானந்தம் ஆகியோர் கலந்துகொண்டு திருப்பலி நிறைவேற்றினர்.

    திருப்பலிக்கு பிறகு வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சிறிய தேரில் மாதாவின் உருவம் வைக்கப்பட்டு பேராலய வளாகத்தில் வலம் வந்தது. தேர்பவனியை கும்பகோணம் மறைமாவட்ட பிஷப் அந்தோணிசாமி புனிதம் செய்து ெதாடங்கி வைத்தார். இன்று(வியாழக்கிழமை) பூண்டி மாதா பேராலயத்தில் கொடி இறக்கப்பட்டு விழா நிறைவடைகிறது.
    வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய திருவிழா நிறைவடைந்ததையடுத்து அன்னையின் கொடி இறக்கப்பட்டது. இதில் பக்தர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.
    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. உலக பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் 29-ந் தேதி தொடங்கி செப்டம்பர் 8-ந் தேதி வரை 10 நாட்கள் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா கொரோனா பரவல் காரணமாக கடந்த மாதம் 29-ந் தேதி பக்தர்கள் இன்றி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவை முன்னிட்டு வேளாங்கண்ணிக்கு பக்தர்கள் வருவதை தடுக்க வேளாங்கண்ணி பகுதியை சுற்றி உள்ள 19 வழிகளும் அடைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி நேற்று முன்தினம் பக்தர்கள் இன்றி நடந்தது. விழாவின் நிறைவு நாளான நேற்று அன்னையின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

    காலையில் தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் திருவிழா சிறப்பு கூட்டு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. இரவு 7 மணிக்கு பங்கு தந்தை அற்புதராஜ் தலைமையில் நன்றி அறிவிப்பு ஜெபம் செய்து அன்னையின் கொடி இறக்கப்பட்டது. இதில் பக்தர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.

    பின்னர் பேராலயத்தில் மாதா மன்றாட்டு திவ்ய நற்கருணை ஆசீர், நன்றி அறிவிப்பும், தமிழில் திருப்பலியும் நிறைவேற்றப்பட்டது. விழாவில் பேராலய அதிபர் பிரபாகர், உதவி பங்கு தந்தையர்கள் டேவிட் தன்ராஜ், ஆண்டோ ஜேசுராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
    அமாவாசை என்பது முன்னோர்களை வழிபட முக்கியமானது என்பதுபோல், ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி தினத்தன்று ஓர் விரத தினமாக அமைந்திருக்கிறது. அவை பற்றிய தொகுப்பை இங்கே காணலாம்.
    அமாவாசை என்பது முன்னோர்களை வழிபட முக்கியமானது என்பதுபோல், ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி தினத்தன்று ஓர் விரத தினமாக அமைந்திருக்கிறது. அவை பற்றிய தொகுப்பை இங்கே காணலாம்.

    சித்திரை மாதம் பவுர்ணமியன்று. சித்ரா பவுர்ணமி என்று சொல்லப்படும். அன்று விரதம் இருந்து சித்ரகுப்த பூஜை செய்யப்படும்.

    வைகாசி மாதம் பவுர்ணமி வைகாசி விசாகம் ஆகும். அன்று நீராடி வைசாக தானம் என்று தயிர் சாதம், பானகம், நீர் மோர் ஆகியவற்றை தானமாக கொடுப்பது சிறந்தது.

    ஆனி மாதம் வளர்பிறையில் கோபத்ம விரதம் என்று மகா விஷ்ணுவுக்கு உகந்த விரதம் வருகிறது. அந்த விரதத்தை பெண்கள் விசேஷமாக கடைப்பிடிக்கிறார்கள்.

    ஆடி மாதம் பவுர்ணமி அன்று வட சாவித்ரி விரதம் மற்ற மாநிலங்களில் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் ஆடி மாத பவுர்ணமியில் கோகிலா விரதம் என்பதும் வட மாநிலங்களில் கடைப்பிடிக்கப்படுகிறது.

    ஆவணி மாதம் பவுர்ணமி அன்று ரட்ஷா பந்தனம் ஆகும். ரிக், யஜூர் வேதங்களுக்கு உபாகர்மம் எனப்படும் ஆவணி அவிட்டம் அனுசரிக்கப்படும்.

    புரட்டாசி மாத பவுர்ணமிக்கு அடுத்த நாள் முதல் தேய்பிறை முழுவதும் மகாளய பட்சம் என்று முன்னோர்களை வழிபட வேண்டும். அதற்கு மறுநாளில் இருந்து சாரதா நவராத்திரி ஆகும். துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய தேவிகளை கொலு பொம்மைகளில் ஆவாஹனம் செய்து, ஒன்பதாவது நாள் சரஸ்வதி பூஜை அன்று சரஸ்வதியை வழிபட்டால் கல்வியில் தேர்ச்சி பெறலாம். பத்தாவது நாள் விஜயதசமி ஆகும். மேலும் புரட்டாசி பவுர்ணமி அன்று உமாமகேஸ்வர விரதம். அன்று பார்வதி பரமேஸ்வரர்களுக்கு விரதம் இருந்து பூஜிப்பதால் நினைத்த காரியங்கள் கைகூடும் என்று சிவ ரகசியம் குறிப்பிடுகிறது.

    ஐப்பசி மாதம் பவுர்ணமி அன்று எல்லா சிவன் கோவில்களிலும் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் நடத்தப்படும். அன்றைய தினம் ‘கௌமுதீ ஜாகரண விரதம்’ என்று வட நாட்டில் விசேஷமாக அனுஷ்டிக்கப்படும். அன்று இரவில் நிலவு ஒளியில் லட்சுமி பூஜை செய்யப்படும். ஐப்பசி மாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தசி அன்று ‘நரக சதுர்த்தசி’ எனப்படும் தீபாவளி பண்டிகை நாடெங்கும் கொண்டாடப்படுகிறது.

    கார்த்திகை மாதம் பவுர்ணமி அன்று எல்லா வீடுகளிலும், சிவாலயங்களிலும், விஷ்ணு ஆலயங்களிலும் வரிசையாக கார்த்திகை தீபம் ஏற்றப்படும். அன்றைய நாளில் தீப தானம் செய்வது பெரும் புண்ணியத்தை அளிக்கும். மகாபலிக்கு மகா விஷ்ணு வரம் அளித்த தினம். அன்று பக்தேஸ்வர விரதம் என்று வட மாநில பெண்கள் பரமேஸ்வர பூஜை செய்வார்கள்.

    மார்கழி மாதம் முழுவதும் தேவர்களுக்கு விடியற்காலம் என்பதால் அதிகாலையிலேயே எல்லா கோவில்களிலும் அபிஷேகம், பூஜை நடைபெறும். கடவுளுக்கு பொங்கல் நிவேதனம் செய்து பக்தர்களுக்கு வினியோகம் செய்வார்கள். மார்கழி மாதம் பவுர்ணமி அன்று திருவாதிரை உற்சவம். எல்லா சிவன் கோவில்களிலும் நடராஜன் பெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். சிவகாமி அம்மையுடன் நடராஜப்பெருமானுக்கு சிதம்பரத்தில் விசேஷ அபிஷேகமும், புறப்பாடும் சிறப்பாக இருக்கும்.

    தைமாதம் பவுர்ணமி அன்று தைப்பூச விழாவானது, திருவிடை மருதூர் தலத்திலும், வடலூர், பழனி முதலிய ஸ்தலங்களிலும் சிறப்பாக நடைபெறும். மாசி மாதம் சுக்ல பஞ்சமி ‘வசந்த பஞ்சமி’ எனப்படும். வசந்த ருது ஆரம்பிக்கப் போவதாக பார்வதி பரமேஸ்வர வழிபாடு செய்வார்கள்.

    மாசி மாதம் பவுர்ணமி தினமானது மாசி மகம் ஆகும். அதற்கு பத்து நாட்கள் முன்னதாகவே உற்சவம் ஆரம்பித்து, பஞ்ச மூர்த்திகள் வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா வருதல் நடைபெறும். பவுர்ணமி அன்று தீர்த்த வாரி. மாசி மாதம் முழுவதுமே மகாஸ்நானம் என்று தினமும் நதியில் நீராடி கம்பளி, சந்தனக்கட்டை, பசு முதலான தானங்களை செய்வது புண்ணியமாக கருதப்படுகிறது. மாசி மாதம் பவுர்ணமி அன்று பன்னிரண்டு வருஷத்துக்கொரு மகாமகம் கும்பகோணத்திலும், பிரயாகை, ஹரித்வார் முதலான இடங்களில் கும்பமேளாவும் நடக்கும். அந்த இடங்களில் நீராடிய பின்னர் தானம் செய்வது விசேஷமானது.

    பங்குனி மாதம் பவுர்ணமி அன்று ‘ஹோலிகா’ என்னும் ஹோலி பண்டிகை வடநாட்டில் மிகுந்த கோலாகலத்துடன் கொண்டாடப்படுகிறது.

    விரதம், நோன்பை எல்லா மதத்தினரும் கடைப்பிடித்து வருகின்றனர். மன உறுதிக்கு துணையாக இருப்பது விரதம் தான். ஒவ்வொரு காலகட்ட விரதத்துக்கும் உரிய பலன்கள் கிடைக்கும்.

    இவ்விதம் பல விரதங்களையும், ஸ்நானம், தானம், பூஜை ஆகியவற்றை முறைப்படி செய்து, இவ்வுலகில் நல்வாழ்வு வாழலாம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
    பாடுகின்றவர் எழுதினால் பாடுகின்ற வேகம் தடைபடும். ஆதலால், தாம் பாடும் மகாபாரதத்தை எழுதி முடிக்க வல்லவர் யார் என்று வியாசர் சிந்தித்தார்.
    வியாசர் இமயமலையில் மூன்று ஆண்டுகள் கடும் தவம் செய்தார். அவருடைய சிந்தனையில் மகாபாரத வரலாறு தோன்றியது. பிரம்மர் அவர் முன் தோன்றி மகாபாரதத்தைப் பாடுக என்று உத்தவிட்டார்.

    பாடுகின்றவர் எழுதினால் பாடுகின்ற வேகம் தடைபடும். ஆதலால், தாம் பாடும் மகாபாரதத்தை எழுதி முடிக்க வல்லவர் யார் என்று வியாசர் சிந்தித்தார். விநாயகர்தான் அதற்கு ஏற்றவர் என்று முடிவு செய்தார்.

    விநாயகரை வழிபாடு செய்தார். விநாயகர் வியாசரின் முன் தோன்றினார். வியாசர் அவரிடம், மகாபாரதத்தை நான் பாடுவேன். நீர் அதை எழுத வேண்டும் என்று வேண்டினார்.

    அதற்கு சம்மதித்த விநாயகர் நான் வேகமாக எழுதுவேன். நான் எழுதுகின்ற வேகத்துக்கு உம்மால் பாட முடியுமா என்றார். வியாசர் அதுகேட்டு திகைத்தார். ஆகட்டும். நீர் எழுதுகின்ற வேகத்திற்கு ஏற்ப நான் பாடுவேன். ஆனால் பொருள் தெரிந்து எழுத வேண்டும் என்றார்.

    பொருள் தெரிந்து எழுதுவதென்றால் வேகமாக எழுத முடியாது. விநாயகர் சரி என்றார். வியாசர் பாட தொடங்கினார். விநாயகர் தமது கொம்பினால் மேரு மலையில் எழுதலானார். 60 லட்சம் கிரந்தங்கள் பாடினார். இதில் விநாயகருடைய எழுதும் வேகத்தை மட்டுப்படுத்தும் பொருட்டுக் கடினமான பதங்களை அமைத்து இடையே 8800 சுலோகங்கள் பாடினார்.

    இதற்கு என்ன பொருள் என்று விநாயகர் சிறிது சிந்திக்கும் பொழுது பலப் பல சுலோகங்களை வியாசர் மனதில் ஆயத்தம் செய்து கொண்டார்.

    இவ்வாறு வியாசர் பாடிய அறுபது லட்சம் கிரந்தங்களில் 30 லட்சம் தேவருலகில் நின்றது. 15 லட்சம் அசுரவுலகில் நின்றது. 14 லட்சம் யட்சவுலகில் நின்றது. ஒரு லட்சம் மட்டுமே பூவுலகில் நின்றது.
    எந்த காரியத்தை செய்வதாக இருந்தாலும் முதலில் விநாயகரை வழிபாடு செய்ய வேண்டும். அந்த வகையில் எந்த திதியில் எந்த விநாயகரை வழிபாடு செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
    அமாவாசை : நிருத கணபதி
    பிரதமை : பால கணபதி
    த்விதியை : தருண கணபதி
    திருதியை : பக்தி கணபதி
    சதுர்த்தி: வீர கணபதி
    பஞ்சமி: சக்தி கணபதி
    சஷ்டி : த்விஜ கணபதி
    சப்தமி : சித்தி கணபதி
    அஷ்டமி : உச்சிஷ்ட கணபதி
    நவமி : விக்ன கணபதி
    தசமி : க்ஷிப்ர கணபதி
    ஏகாதசி : ஹேரம்ப கணபதி
    துவாதசி : லசுட்மி கணபதி
    திரையோதசி : மகா கணபதி
    சதுர்த்தசி : விஜய கணபதி
    பவுர்ணமி : நிருத்ய கணபதி
    மயிலாடுதுறை வைத்தீஸ்வரன் கோவிலில் முழுவதுமாக தங்கத்தால் கொடிமரம் பொருத்தப்பட்டு இன்று கும்பாபிஷேக விழா நடந்தது. இதில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன்கோவிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட தையல்நாயகி அம்பாள் உடனாகிய வைத்தியநாதசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் தனி சன்னதியில் செல்வமுத்துக்குமார சுவாமி, நவகிரகங்களில் செவ்வாய்க்கு அதிபதியான அங்காரகன், தன்வந்திரி சுவாமிகள் அருள்பாலிக்கின்றனர்.

    இந்நிலையில் இக்கோவிலில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அருளாசியின்படி, வைத்தியநாதர்சுவாமி சன்னதி நேர் எதிரே உள்ள கொடிமரத்திற்கு தங்க தகடுகள் பதிக்கும் பணி தொடங்கியது.

    கோவிலுக்கு 5 கிலோ தங்க கட்டிகள் காணிக்கையாக வரப்பெற்றதையடுத்து இதனை தகடுகளாக மாற்றும் வகையிலான பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது. இந்நிலையில் கொடிமரத்திற்கு தங்க ரேக்குகள், அடி பகுதி தாமரை வடிவிலான பத்ம பீடம் ஆகியவை தயார் செய்யப்பட்டு அவற்றை கொடிமரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. முழுவதுமாக தங்கத்தால் கொடிமரம் பொருத்தப்பட்டு இன்று கும்பாபிஷேக விழா நடந்தது.

    முன்னதாக 2 கால யாகசாலை பூஜைகள் நேற்று தொடங்கியது. இன்று 2-ம் கால யாகசாலை பூஜைகள் முடிவடைந்து, பூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது தொடர்ந்து புனிதநீர் அடங்கிய கடங்கள் மேள, தாளங்களுடன் புறப்பட்டு கோவிலை வலம் வந்து கொடிமரத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.

    இந்த விழாவில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், கோவில் கட்டளைத் திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள், சீர்காழி கட்டளை விசாரணை சொக்கலிங்கம் தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
    திருமலையில் உள்ள பூவராகசாமி கோவிலில் வராஹ ஜெயந்தி விழா நாளை (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இதன் ஒருபகுதியாக காலையில் கலசஸ்தாபனம், கலசபூஜை நடைபெறும்.
    திருமலையில் உள்ள பூவராகசாமி கோவிலில் வராஹ ஜெயந்தி விழா நாளை (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.

    இதன் ஒருபகுதியாக காலையில் கலசஸ்தாபனம், கலசபூஜை நடைபெறும்.

    இதைத்தொடர்ந்து காலை 9 மணி முதல் 10 மணிவரை பால், தயிர், தேன், சந்தனம், இளநீர், பஞ்சாமிர்தம் ஆகியவற்றால் திருமஞ்சனம் நடைபெறுகிறது.
    அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் உள்ள அம்மை மண்டபத்தில் தங்கி அம்மனை மனமுருகி வேண்டி கொள்வர்.
    புன்னைநல்லூர் மாரியம்மனின் மகிமைகளை சொல்லி தெரியவேண்டியதில்லை. மிகவும் சக்தி வாய்ந்தவள். தீராத வியாதிகளை தீர்த்து வைப்பவள். கண் பார்வை கோளாறு உள்ளவர்கள் மாரியம்மனை மனமருகி வழிப்பட்டால் கண் பார்வை தெளிவுபெற்று செல்கின்றனர். ஒருமுறை ஆங்கிலேய துரை ஒருவர் அகம்பாவத்தால் மாரியம்மனை பற்றி அலட்சியமாக பேசினார்.

    அடுத்த நொடியிலேயே அவர் உடல் முழுவதும் அம்மை நோய் ஏற்பட்டு பார்வை பறிபோனது. பின்னர் தன் தவறை உணர்ந்து அம்மனிடம் சரணடைந்து மன்னிக்குமாறு வேண்ட, நோய் குணமாகி பார்வை மீண்டும் கிடைத்தது. இதேப்போல் பல்வேறு சம்பவங்களை கூறலாம்.

    வயிற்றுவலியால் துடிப்பவர்கள் அம்மனின் அருளால் குணம் பெறுவது வாடிக்கை. விபத்தில் சிக்கி மருத்துவர்களாகல் கைவிடப்பட்ட நிலையில் இருந்தவர்களை கூட அம்மன் காப்பாற்றியிருக்கிறார். இதற்கு உதாரணமாக, விபத்தில் சிக்கி மிக மிக ஆபத்தான நிலையில் இருந்தவரை காத்து அருள் செய்ய வேண்டி கண்ணீர் பெருக அவரது மனைவி மாரியம்மனிடம் வேண்டினார். அதன் பயனாக அவரை மாரியம்மன் காப்பாற்றினார் என்பது அனைவரும் நேரில் கண்ட உண்மையாகும்.

    இதேப்போல் அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கோவிலில் உள்ள அம்மை மண்டபத்தில் தங்கி அம்மனை மனமுருகி வேண்டி கொள்வர். அதன் பின்னர் அம்மை நோய் முற்றிலும் குணமாகி விடும் என்பது அனுபவப் பூர்வமான உண்மையாகும்.

    கன்னிபெண்கள் அம்மனுக்கு திருமாங்கல்யம் காணிக்கையாக்குவதாக வேண்டிகொள்ள அவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடுகிறது. தன்னை மனமுருகி வேண்டி கொள்ளும் பக்தர்களை அம்மன் ஒருபோதும் கைவிட்டதில்லை.
    4 நாட்களுக்கு பிறகு ராமேசுவரம் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனர்.
    ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் கடந்த 3-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரையிலும் 4 நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. இதனால் வெளியூர்களில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்ய முடியாமல் வாசலில் நின்று தரிசனம் செய்துவிட்டு மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    இந்த நிலையில் 4 நாட்கள் தடை காலம் முடிந்ததை தொடர்ந்து ராமேசுவரம் கோவிலில் நேற்று அதிகாலையிலேயே சாமி தரிசனம் செய்வதற்காக கிழக்கு வாசல் பகுதியில் இருந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நிற்க தொடங்கினர். வடக்கு கோபுர வாசல் வரையிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

    இதைத்தொடர்ந்து காலை 6 மணிக்கு பிறகு பக்தர்கள் ஒவ்வொருவராக கோவிலுக்குள் தரிசனம் செய்ய வரிசையாக அனுமதிக்கப்பட்டனர். 4 நாட்களுக்கு பிறகு கோவிலுக்குள் சென்ற பக்தர்கள் சாமி-அம்பாள், மகாலட்சுமி, ஆஞ்சநேயர் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் சென்று தரிசனம் செய்து விட்டு மிகுந்த மன மகிழ்ச்சியுடன் திரும்பி சென்றனர்.

    இதேபோல் 3 நாட்களுக்குப் பிறகு வழக்கம் போல் நேற்று அக்னிதீர்த்த கடலில் பக்தர்கள் புனித நீராட அனுமதிக்கப்பட்டனர். இதனால் நேற்று கடற்கரை பகுதியில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. கடலில் புனித நீராடிய பக்தர்கள் கடற்கரையில் அமர்ந்து திதி, தர்ப்பண பூஜை செய்து வழிபாடு நடத்தினர்.
    சாய்பாபா அருள் பெற சில விரத முறைகள் கூட உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விரத முறைகள் இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள பாபா பக்தர்களிடம் பரவி இருக்கிறது.
    ‘சீரடி சாய்பாபா யாருக்கும் எதுவும் தனிப்பட்ட முறையில் போதித்தது கிடையாது. அதே சமயத்தில் நிறைய பக்தர்களை கூட்டி வைத்து பிரசங்கம் செய்ததும் கிடையாது. மற்ற ஞானிகள் போல கட்டுரைகளையும் அவர் எழுதவில்லை. எப்போதாவது அவர் பரிபாஷையில் ஏதாவது சொல்வார். அவர் சொன்ன அந்த வார்த்தைகள் தான் இன்றும் அவர் காட்டிய தனித்துவ பாதைகளாக திகழ்ந்து கொண்டு இருக்கின்றன.

    பாபா தினமும் தன் பக்தர்களிடம் வலியுறுத்தியது மற்றவர்களிடம் அன்பாக இருங்கள் என்பதை தான். எல்லா உயிரினங்களிலும் அன்பை காட்டுங்கள் என்றார். எல்லா உயிரினங்களிலும் தான் வாழ்வதாக சொன்னார். அந்த உயிரினங்களிடம் அன்பை காட்டினால் அது தன்னிடம் காட்டப்படும் அன்புக்கு சமமாகும் என்றார்.

    அவர் ஒருபோதும் எந்த ஒரு விஷயத்திலும் பாகுபாடு பார்த்ததே கிடையாது. ஏழை -  பணக்காரன், நல்லவன் - கெட்டவன், ஆண் - பெண் என்றெல்லாம் அவர் எந்த காலத்திலும் பிரித்து பார்த்ததே கிடையாது. எல்லோரிடமும் ஒரே மாதிரி நடந்து கொண்டார். அதன் காரணமாகவே அவர் தனிப்பட்ட முறையில் யாருக்கும் குருவாக இருந்ததே கிடையாது.

    ஆனால் 1918 - ம் ஆண்டு அவர் பரிபூரணம் அடைந்த பிறகு இந்த கொள்கையில் மட்டும் எப்படியோ மாற்றம் ஏற்பட்டு விட்டது. அதாவது பாபா காட்டிய பாதையில் சற்று கிளைப்பாதையை சில பக்தர்கள் ஏற்படுத்தி உள்ளனர். பாபா மீது கொண்ட அளவுகடந்த பாசம் காரணமாக அந்த கிளைப்பாதைகள் உருவாகி விட்டன.

    அதில் ஒன்று தான் பாபாவை குருவாக நினைத்து வியாழக்கிழமை தோறும் விரதம் இருக்கும் பழக்கமாகும். இந்த பழக்கத்தை பாபா ஒருபோதும் அனுமதித்ததே கிடையாது. எந்த ஒரு காரணத்திற்காகவும் யாரும் பட்டினி கிடக்க கூடாது என்பதில் சீரடி சாய்பாபா மிகவும் தீவிரமாக இருந்தார். பசி இல்லாத உயிரினமே இந்த உலகில் இல்லை. பசி கொடுமையானது. வாயில்லா ஜீவன்களுக்கு பசியை சொல்லத்தெரியாது. எனவே வாயில்லா ஜீவன்களுக்கு உணவு கொடுத்து பசியாற்ற வேண்டும் என்று சீரடி சாய்பாபா அடிக்கடி சொல்வார்.

    ஆனால் அதை மறந்துவிட்ட பாபா பக்தர்கள் தங்கள் நலனுக்காக 9 வார வியாழக்கிழமை விரத வழிபாடு என்பதையே முன்னிலைப்படுத்தி கொண்டு இருக்கிறார்கள். 9 வியாழக்கிழமை பாபா படத்திற்கு அல்லது சிலைக்கு மஞ்சள், குங்குமம் வைத்து விரதம் இருந்தால் நினைத்தது நடக்கும் என்று சொல்கிறார்கள்.

    சாய்பாபா அருள் பெற சில விரத முறைகள் கூட உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விரத முறைகள் இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள பாபா பக்தர்களிடம் பரவி இருக்கிறது. குஜராத் மாநிலத்தை சேர்ந்த மகேஷ் - கோகிலா என்ற தம்பதியிடம் இருந்து இந்த 9 வார வழிபாடு தொடங்கியதாக குறிப்புகள் உள்ளன.

    மகேஷ் - கோகிலா தம்பதியிடம் சாது வடிவில் இருந்த முதியவர் ஒருவர் இந்த விரத முறைகளை சொன்னதாக கூறப்படுகிறது. ஆனால் பாபாவே நேரடியாக இப்படி விரதம் இருங்கள் என்று ஒரு தடவைகூட சொன்னது கிடையாது. நன்றாக சாப்பிடுங்கள். வயிறு நிரம்பினால் தான் ஆன்மிகத்தை பற்றி முழுமையாக நினைக்க முடியும் என்று தான் சொல்லியிருக்கிறார்.

    இன்னொரு வகையில் சொல்வது என்றால் பாபாவும் பட்டினி கிடந்தது இல்லை. தன்னை சுற்றி இருப்பவர்களையும் பட்டினி கிடக்க அவர் அனுமதிப்பதில்லை. சில தடவை அவரது பக்தர்களில் சிலர் விரதம் இருப்பதாக சொல்லிக்கொண்டு அவர் முன்பு அமர்ந்தது உண்டு. அவர்களையெல்லாம் பாபா கண்டித்து விரட்டி விட்டதாக வரலாறு உள்ளன.

    இது பற்றி ஒருதடவை பாபாவிடம் பக்தர் ஒருவர் கேள்வி எழுப்பினார். உங்களை கண்கண்ட தெய்வமாகவும், குருவாகவும் ஏற்றுக்கொண்டு தானே விரதம் இருப்பதாக சொல்கிறார்கள். அதற்கு ஏன் நீங்கள் அனுமதிப்பது இல்லை என்று அந்த பக்தர் கேள்வி எழுப்பினார். அதற்கு சாய்பாபா பட்டினி கிடப்பவரின் மனம் அமைதியாக இருக்காது. அமைதி இல்லாத மனதிலும், உடலிலும் எப்படி ஆன்மிக மேம்பாட்டை எட்ட முடியும். எனவே தான் நான் யாரையும் வெறும் வயிற்றுடன் இருந்து இறைவழிபாடு செய்யுங்கள் என்று சொன்னது கிடையாது. முதலில் உங்கள் ஆத்மாவை திருப்திபடுத்துங்கள். அதன் பிறகு மற்ற தேடல்களை வைத்துக்கொள்ளலாம் என்றார்.

    சாய்பாபா மேலும் கூறுகையில், ‘ஒருவர் குறிப்பிட்ட நேரத்திற்கு உரிய முறையில் உணவு எடுத்துக்கொள்ளாவிட்டால் அவரது உடல் உறுப்புகள் பலமிழந்து போய்விடும். உடலில் பலம் இல்லாவிட்டால் மனம் ஒத்துழைக்காது. உடலும், மனமும் சரியாக இல்லாத பட்சத்தில் இறைவனை எப்படி காணமுடியும்?

    விரதம் காரணமாக நாக்கு வறண்டு விட்டால் எப்படி இறைவன் புகழை பாட முடியும்? பசி காரணமாக காதுகள் அடைத்துக்கொண்டால் இறைவன் புகழை எப்படி கேட்க முடியும்? எனவே உடல் நலம் நன்றாக இருக்க வேண்டும். உடல் நலத்தில் முழுமையாக சக்தி இருக்க வேண்டும். சக்தி இல்லாத உடல் சீர்குலைந்து போகும்போது ஆன்மிக பாதையில் எப்படி நடைபோட முடியும்? எனவே விரதம் தேவை இல்லை’ என்றார்.

    ஒருதடவை ஒரு பெண்மணி நீண்ட தொலைவில் இருந்து சீரடிக்கு வந்திருந்தார். அவரது மனதில் சாய்பாபா முன்பு 3 நாட்கள் எதுவும் சாப்பிடாமல் விரதம் இருக்க வேண்டும் என்று நினைத்து இருந்தார். திட்டமிட்ட படி அவர் துவாரகமயியில் உள்ள பாபா அருகில் சென்றார். அந்த பெண் பற்றிய எல்லா தகவல்களையும் பாபா ஏற்கனவே அறிந்து இருந்தார்.

    அந்த பெண் பேசுவதற்கு முன்பு பாபாவே பேசத் தொடங்கினார். ‘உணவு என்பது மகா விஷ்ணுவின் வடிவம். அந்த உணவை சாப்பிடுபவரும் மகா விஷ்ணுவின் வடிவம் தான். அப்படி இருக்கும் போது எதற்காக பட்டினி கிடக்க வேண்டும்? எதற்காக தண்ணீர் கூட குடிக்காமல் நாக்கு வறண்டு அவஸ்தைப்பட வேண்டும்? எதற்காக இப்படி எல்லாம் வீணாக சிரமப்பட வேண்டும்? என்றார்.

    பாபா சொன்னதை கேட்டதும் அந்த பெண் அதிர்ச்சியில் உறைந்தார். நம் மனத்தில் இருப்பது பாபா அறிந்து இருக்கிறாரே என்று ஆச்சரியப்பட்டார். அந்த அதிர்ச்சி மற்றும் ஆச்சரியத்தில் இருந்து மீள்வதற்குள் பாபாவே முந்திக்கொண்டு மீண்டும் பேச ஆரம்பித்தார். ‘பெண்ணே பட்டினி கிடக்க வேண்டிய அவசியம் இல்லை. இங்குள்ள தாதாகேல்கர் வீட்டுக்கு செல். அங்கு உனக்கு தேவையான போளிகளை தயார் செய். அந்த உணவு வகைகளை குழந்தைகளுக்கும், ஏழைகளுக்கும் கொடு. பிறகு நீ திருப்தியாக சாப்பிடு. உன் வயிறு நிரம்பியபிறகு திருப்தியும், ஆனந்தமும் உண்டாகும். அதன்பிறகு நீ இங்கே வா போதும்’ என்றார்.

    பாபாவின் இந்த வார்த்தைகளை கேட்டதும் அந்த பெண்ணுக்கு வாயில் இருந்து எந்த வார்த்தையும் வரவில்லை. அன்றைய தினம் ஹோலி பண்டிகை தினமாகும். சீரடி கிராமமே உற்சாகத்துடன் இருந்தது. இதையெல்லாம் கணக்கில் கொண்டு தான் பாபா தனக்கு உத்தரவிட்டு இருக்கிறார் என்பதை அந்த பெண் புரிந்து கொண்டார்.

    உடனடியாக அவர் தாதாகேல்கர் வீட்டிற்கு சென்றார். அவரது மனைவி சமையல் செய்ய இயலாத நிலையில் பெண்களுக்குரிய பிரச்சினையுடன் காணப்பட்டார். இதனால் அந்த பெண் தாதாகேல்கர் வீட்டில் தானாக சமைக்க வேண்டிய சூழ்நிலை உருவானது. விரதம் இருக்க வேண்டும் என்ற மனவைராக்கியத்துடன் வந்த அந்த பெண் சமைக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டார். பாபாவின் உத்தரவை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக அன்று அவர் சமைக்க ஆரம்பித்தார்.

    பாபா சொன்னபடி சுவையான போளிகளை செய்தார். அதைபார்த்து தாதாகேல்கர் பிரமித்து போய் இருந்தார். அந்த சுவையான போளிகளை அவர்கள் ஏழைகளுக்கும், குழந்தைகளுக்கும் விநியோகம் செய்தனர். பிறகு அந்த பெண் அங்கேயே அமர்ந்து சாப்பிட்டார். அந்த பெண்மணியின் விரத வைராக்கியம் அந்த நிமிடமே கரைந்து போனது.

    இப்படி தன்னை தேடி வந்த பலரையும் பாபா பக்குவப்படுத்தி சாப்பிட வைத்துள்ளார். ஒரு தடவை பாபாவை பார்ப்பதற்கு நாசனே என்ற பக்தர் வந்தார். அவரிடம், ‘‘சாப்பிட்டு விட்டீர்களா?’’ என்று பாபா கேட்டார். அதற்கு நாசனே, ‘‘இன்று ஏகாதசி தினம். விரதம் இருப்பேன். சாப்பிடமாட்டேன்’’ என்றார்.

    உடனே பாபாவுக்கு சிரிப்பு வந்துவிட்டது. அவர் நாசனேயை பார்த்து, ‘‘முதலில் நீ போய் சாப்பிட்டுவிட்டு வா’’ என்றார். அதிர்ச்சி அடைந்த நாசனே, ‘‘இப்போது ஆரத்தி நடக்கும் நேரம். ஆரத்தி முடிந்ததும் சாப்பிடுகிறேன்’’ என்றார். ஆனால் பாபா விடவில்லை.

    ‘‘முதலில் நீ போய் சாப்பிட்டுவிட்டு வா. நீ வந்த பிறகுதான் எனக்கு இங்கு ஆரத்தி நடைபெறும். அதுவரை நான் ஆரத்தியை ஏற்றுக் கொள்ள மாட்டேன்’’ என்று உறுதியான குரலில் கூறிவிட்டார். இதனால்வேறு வழி தெரியாத நாசனே சாப்பிட்டு விட்டு வந்தார். அவரிடம் ஒரு பீடாவை கொடுத்து, ‘‘சாப்பிடு’’ என்று பாபா உத்தரவிட்டார்.

    ஏகாதசி தினத்தன்று வெற்றிலை, பாக்கு போடுவது சாஸ்திரத்துக்கு எதிரானது என்று அந்த காலத்தில் மிக தீவிரமாக கருதப்பட்டு கடைபிடிக்கப்பட்டது. அந்த சம்பிரதாயத்தை ஒரே நொடியில் பாபா உடைத்துக் காட்டினார். இப்படி பல பக்தர்களை அவர் சாப்பிட வைத்துள்ளார். மற்றொரு தடவை பீமாஜி என்ற பக்தர் கடுமையான உடல்நலக்குறைவால் ரத்த வாந்தி எடுத்தபடி சீரடிக்கு வந்தார். துவாரகமயி மசூதிக்குள் காலடி எடுத்து வைத்த சில மணி நேரங்களில் அவரது ரத்த வாந்தி நின்றது. பல மாதங்களாக நீடித்துவந்த உடல்நலக்குறைவு சீராகி குணமானது.

    சில நாட்கள் சீரடியில் தங்கி இருந்து பாபாவின் அருளைப் பெற்ற அவர், பின்னர் தனது வீட்டுக்கு புறப்பட்டார். பாபாவுக்கு நன்றி செலுத்தும் விதமாக அவர், ‘ஸ்ரீசாய் சத்திய விரத பூஜை’ என்ற வழிபாட்டை தொடங்கினார். இந்த வழிபாடு ‘சத்திய நாராயணா பூஜை’ போன்றே இருந்தது. அது பக்தர்களிடம் ‘பாபா பூஜை’ என்று பரவியது.

    இதேபோன்றுதான் பாபா பெயரில் விரத பூஜைகள் விதவிதமாக வந்துவிட்டன. இதுபற்றி சீரடி சாய்பாபா ஒரு தடவை கூறுகையில், ‘‘பக்தர்கள் தேவையில்லாத பழக்கத்தை உருவாக்குகிறார்கள். பட்டினி கிடந்து எதையும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. மக்கள் மாயையில் இருந்து விடுபடுவது கடினம். இத்தகைய மக்களை பற்றி இரவு, பகலாக நான் சிந்திக்கிறேன். என்னுடைய கஜானா நிரம்பி வழிகிறது. அதை தேடிக் கண்டுபிடித்து எடுத்து செல்ல யாரும் இல்லை’’ என்று வருத்தத்துடன் கூறினார்.

    ஆகையால் பாபா பக்தர்கள் பாபாவின் உண்மையான பாதையை புரிந்து கொள்ள வேண்டும். பட்டினி கிடந்து ஒரு போதும் அவரை வழிபடாதீர்கள். பாபா இதேபோன்று இன்னொரு பாதையையும் காட்டி உள்ளார்.
    ×