என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    அலிபிரியில் உள்ள பூதேவி ஸ்ரீதேவி காம்ப்ளக்ஸில் வழங்கப்பட்டு வந்த தரிசன டிக்கெட்டுகள் வழங்கும் இடம் மாற்றப்பட்டு இன்று முதல் பஸ் நிலையம் அருகே உள்ள ஸ்ரீனிவாசம் விடுதி வளாகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
    திருப்பதி :

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ரூ.300-க்கான 3 ஆயிரம் டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்து வந்தனர்.

    பின்னர் தொற்று குறைந்ததால் பக்தர்களின் எண்ணிக்கை 8 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. மொத்தம் தினமும் ரூ.300 கட்ட தரிசனம் வி.ஐ.பி. தரிசனம் என 20 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்துவந்தனர். ஆனால் இலவச தரிசனம் அனுமதிக்கபடவில்லை. வெளியூர் வெளி மாநிலங்களில் இருந்து தரிசனத்திற்காக வரும் பக்தர்கள் ஆன்லைனில் தரிசன டிக்கெட் கிடைக்காததால் அவதி அடைந்து வந்தனர்.

    இலவச தரிசனத்தை தொடங்கவேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் பக்தர்களின் கோரிக்கையை பரிசீலனை செய்த தேவஸ்தான அதிகாரிகள் சோதனை ஓட்டமாக இலவச தரிசனம் தொடங்க முடிவு செய்துள்ளனர். அதன்படி இன்று முதல் சித்தூர் மாவட்ட பக்தர்களுக்கு மட்டும் 2000 தரிசன டிக்கெட்டுகள் வழங்க முடிவு செய்தனர்.

    இன்று காலை 8 மணி முதல் டிக்கெட்டுகள் வழங்கப்படும் என அதிகாரிகள் அறிவித்திருந்தனர். திருப்பதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், ஏற்கனவே அலிபிரியில் உள்ள பூதேவி ஸ்ரீதேவி காம்ப்ளக்ஸில் வழங்கப்பட்டு வந்த தரிசன டிக்கெட்டுகள் வழங்கும் இடம் மாற்றப்பட்டு இன்று முதல் பஸ் நிலையம் அருகே உள்ள ஸ்ரீனிவாசம் விடுதி வளாகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படும் என்ற தகவல் அறிந்த சித்தூர் மாவட்ட பக்தர்கள் ஏராளமானோர் இலவச தரிசன டிக்கெட்டுகள் பெறுவதற்காக அதிகாலையிலேயே ஸ்ரீனிவாசம் விடுதி வளாகத்தில் குவிந்தனர்.

    நேரம் அதிகரிக்க அதிகரிக்க 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சமூக இடைவெளியை மறந்து குவிந்ததால் பக்தர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பக்தர்களை கட்டுப்படுத்த முடியாமல் தேவஸ்தான ஊழியர்கள் திக்குமுக்காடினர்.

    இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பக்தர்களை வரிசையில் நிற்க வைத்து டிக்கெட்டுகளை பெற்றுச் செல்ல வைத்தனர். இன்று டிக்கெட் பெற்ற பக்தர்கள் நாளை தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

    இதுகுறித்து தேவஸ்தான அதிகாரிகள் கூறுகையில்:- சோதனை ஓட்டமாக சித்தூர் மாவட்ட பக்தர்களுக்கு மட்டும் தினமும் 2,000 இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படுகிறது. இதையடுத்து வெளியூர் மற்றும் வெளி மாவட்ட மாநில பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதி அளிப்பது குறித்து அதிகாரிகள் முடிவு செய்வார்கள் என்றனர்.
    முளகுமூடு தூய மரியன்னை பசிலிக்கா அறிவிப்பு விழாவையொட்டி மதுரை பேராயர் அந்தோணி பாப்புசாமி தலைமையில் திருப்பலி நடந்தது.
    முளகுமூடு தூய மரியன்னை ஆலயத்தை போப் ஆண்டவர் பிரான்சிஸ் பசிலிக்காவாக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டார். இதையொட்டி பசிலிக்கா அறிவிப்பு விழா முளகுமூட்டில் தமிழக அரசின் வழிகாட்டுதல்படி நேற்று முன்தினம் எளிமையாக நடந்தது. மதுரை பேராயரும், குழித்துறை மறைமாவட்ட பொறுப்பாளருமான அந்தோணி பாப்புசாமி தலைமை தாங்கினார்.

    பசிலிக்கா கொடியை முளகுமூட்டின் முதல் பங்குதந்தை விக்டர் பணியாற்றிய குளச்சல் காணிக்கை மாதா ஆலயத்தில் இருந்து அருட்பணியாளர்களால் கொண்டு வரப்பட்டது.

    தொடர்ந்து குழித்துறை மறைமாவட்ட முதல் ஆயர் ஜெரோம்தாஸ் வறுவேல் பசிலிக்கா கொடியை ஏற்றி வைத்தார். பசிலிக்காவின் அறிவிப்பு ஆணை மற்றும் பசிலிக்காவின் அடையாள சின்னமான ஆம்பூரியம் ஆகியவற்றை மறைமாவட்ட நிர்வாகிகள், வட்டார முதல்வர் மற்றும் பங்குத்தந்தை இணைந்து பீடத்திற்கு கொண்டு வந்தனர்.

    லத்தீன் மொழியில் பசிலிக்கா அறிவிப்பாணையை கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் படித்தார். அறிவிப்பாணையின் தமிழ் மொழிப்பெயர்ப்பை மார்த்தாண்டம் மறை மாவட்ட ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ் படித்தார்.

    பசிலிக்காவின் அடையாள சின்னமான ஆம்பூரியத்தை கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை அர்ச்சித்து வைத்தார்கள்.

    தொடர்ந்து மதுரை பேராயரும், குழித்துறை மறைமாவட்ட பொறுப்பாளருமான அந்தோணி பாப்புசாமி தலைமையில் திருப்பலி நடந்தது. இதில் ஆயர்கள், அருட்பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    திருப்பலி நிறைவில் முல்லை தொடர்பு இதழை குழித்துறை மறைமாவட்ட தொடர்பாளர் அருட்பணியாளர் யேசுரெத்தினம் வெளியிட்டார். முளகுமூடு அன்னையின் புகழ் பாடும் நிறைமதியே என்ற இசை சி.டி.யை பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் ஜூடு பால் ராஜ் வெளியிட்டார்.

    முளகுமூட்டின் முதல் பங்கு தந்தை விக்டர் குறித்த புத்தகத்தை தக்கலை மறைமாவட்ட ஆயர் மார் ஜார்ஜ் ராஜேந்திரன் வெளியிட்டார். விழாவில் குழித்துறை மறைமாவட்ட செயலாளர் அருட்பணியாளர் ரசல் ராஜ், பொருளாளர் அருட்பணியாளர் அகஸ்டின், முளகுமூடு வட்டார முதல்வர் ராஜேந்திரன், முன்னாள் பங்குத்தந்தை வில்லியம் மற்றும் பல அருட்பணியாளர்கள், அருட்சகோதரிகள் கலந்து கொண்டனர்.

    விழா ஏற்பாடுகளை பசிலிக்கா பங்குத்தந்தை டோமினிக் கடாட்ச தாஸ், இணை பங்குத்தந்தை தாமஸ், அருட்பணியாளர் ஜெரால்டு ஜஸ்டின், பங்குப்பேரவை துணை தலைவர் வின்சென்ட் ராஜ், செயலாளர் விஜிமோன் மணி, துணை செயலாளர் ஹெலன் மேரி, பொருளாளர் விஜிகலா, பங்குப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் பசிலிக்கா உருவாக்கல் குழு உறுப்பினர்கள் இணைந்து செய்திருந்தனர்.

    விழாவில் நேற்று காலை முதல் திருவிருந்து திருப்பலி தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அவர்கள் தலைமையில் நடந்தது. மாலை திருப்பலி குழித்துறை மறைமாவட்ட முதல் ஆயர் ஜெரோம் தாஸ் வறுவேல் தலைமையில் நடந்தது. கொரோனா கட்டுப்பாடு காரணமாக தேர்ப்பவனி நடைபெறவில்லை. ஆனால் இரண்டு தேர்களும் அலங்கரிக்கப்பட்டு ஆலய வளாகத்தினுள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
    வேளாங்கண்ணிக்கு பக்தர்கள் வருவதை தடுக்கும் வகையில் பக்தர்கள் வரும் 8 வழிகளும் அடைக்கப்பட்டு இந்த இடங்களில் பாதுகாப்பு பணிக்காக போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர்.
    வேளாங்கண்ணி

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாகவும், சர்வ மதத்தினரும் நம்பிக்கையுடன் வழிபட்டு செல்லும் ஆன்மிக சுற்றுலா தலமாகவும் இந்தப் பேராலயம் திகழ்கிறது.

    உலக பிரசித்தி பெற்ற இந்த பேராலயத்தில் ஆண்டுப்பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் 8-ந் தேதி வரையில் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.

    இந்த விழாவில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    இந்த ஆண்டுக்கான பெருவிழா கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி பக்தர்கள் இன்றி கடந்த மாதம்(ஆகஸ்டு) 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    வேளாங்கண்ணிக்கு பக்தர்கள் வருவதை தடுக்கும் வகையில் பக்தர்கள் வரும் 8 வழிகளும் அடைக்கப்பட்டு இந்த இடங்களில் பாதுகாப்பு பணிக்காக போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர். இங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ள போலீசார், பக்தர்கள் யாரேனும் கோவிலுக்கு வருகிறார்களா? என்பதை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    விழாவின் முக்கிய நிகழ்வான பெரிய தேர் பவனி நேற்று நடந்தது. வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பேராலயம் முன்பு புனித மிக்கேல் சம்மனசு தேரும், அதனைத்தொடர்ந்து செபஸ்தியார், அந்தோணியார், சூசையப்பர் தேரும் கடைசியாக ஆரோக்கிய மாதா சொரூபம் அடங்கிய பெரிய தேரும் சென்றது. தேர்பவனி ஆலய வளாகத்தை சுற்றி வந்து தேர்கொட்டகையை அடைந்தது.

    முன்னதாக தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் புனிதம் செய்து தேர் பவனியை தொடங்கி வைத்தார். இதில் பேராலய அதிபர் பிரபாகர், பங்குதந்தை அற்புதராஜ், பொருளாளர் யாகப்பா ராஜரெத்தினம், நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ், போலீஸ் சூப்பிரண்டு ஜவகர், உதவி பங்கு தந்தையர்கள் டேவிட் தன்ராஜ், ஆண்டோ ஜேசுராஜ் மற்றும் அருட்சகோதரர்கள், சகோதரிகள் கலந்து கொண்டனர். இந்த தேர் பவனியில் பக்தர்கள் யாரும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை.

    இன்று(புதன்கிழமை) அன்னையின் பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது. காலையில் தஞ்சை மறைமாவட்ட பேராயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் திருவிழா சிறப்பு கூட்டு திருப்பலி நிறைவேற்றப்படுகிறது.

    இரவு 7 மணிக்கு அன்னையின் திருக்கொடி இறக்கப்பட்டு பேராலயத்தில் மாதா மன்றாட்டு திவ்ய நற்கருணை ஆசீர், நன்றி அறிவிப்பு நடக்கிறது. தொடர்ந்து தமிழில் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது.

    தட்சனின் சாபத்தால் தனது ஒளியையும் அழகையும் இழந்து வருந்திய சந்திரன், சிவபெருமானை நோக்கி உடுப்பியில் கடும் தவம் செய்து இழந்த ஒளியையும் அழகையும் திரும்பப் பெற்றார்.
    உடுப்பி கிருஷ்ணன் கோவில் கர்நாடக மாநிலம் உடுப்பி எனும் நகரில் அமைந்துள்ளது. இத்தலத்தின் மூலவர் கிருஷ்ணர். இக்கோவிலில் மத்வ புஷ்கரிணி எனும் தீர்த்தமுள்ளது. சந்திரக் கடவுள் தனது மனைவிகளான இருபத்து ஏழு நட்சத்திரங்களுடன் கிருஷ்ணரை வழிபட்ட தலம். இங்கு நாள்தோறும் அன்னதானம் அளிக்கின்றனர்.

    விஸ்வகர்மாவால் செய்யப்பட்டு துவாரகையில் ருக்மிணி தேவியால் வழிபடப்பட்டு துவாரகை கடலில் மூழ்கிய போது மூழ்கி பல ஆயிரம் ஆண்டுகள் கழித்து மத்வருக்குக் கிடைத்து, மத்வராலேயே பிரதிஷ்டை செய்யப்பட்ட பாலகிருஷ்ணரின் திருவுருவமே உடுப்பி கிருஷ்ணரின் கோவிலில் உள்ளது.

    தட்சனின் சாபத்தால் தனது ஒளியையும் அழகையும் இழந்து வருந்திய சந்திரன், சிவபெருமானை நோக்கி உடுப்பியில் கடும் தவம் செய்து இழந்த ஒளியையும் அழகையும் திரும்பப் பெற்றார். அப்போது சந்திரன் நிர்மாணித்த திருக்குளம் ’சந்திர புஷ்கரணி’. நட்சத்திரங்களின் அதிபதியான சந்திரன் தவம் புரிந்ததால் (உடு=சந்திரன்;பா=அதிபதி) உடுபா என்றும் பின்னர் அது மருவி உடுப்பி என்றும் ஆனது.

    உடுப்பி கிருஷ்ணனுக்கு வழிபாடு செய்வதற்காக எட்டு சீடர்களைத் தேர்ந்தெடுத்து கணியூர் மடம், சோதே மடம், புதிகே மடம், அத்மார் மடம், பேஜாவர் மடம், பாலிமார் மடம், கிருஷ்ணாபுரம் மடம், சிரூர் மடம் என எட்டு மடங்களையும் நிர்மாணித்து ஒவ்வொரு மடமும் இரண்டு மாதங்கள் நிர்வகிக்க வேண்டும் என்ற நடைமுறையை மத்வர் ஏற்படுத்தினார்.

    புதிய சுவாமி மடத்தின் பொறுப்பை ஏற்கும் விழா பர்யாய வைபவம் என்று கொண்டாடப்படுகின்றது. உடுப்பியில் மிகச் சிறப்பாகக்கொண்டாடப்படும் விழாவாக இது அமைகிறது. இவ்விழாவின் போது விறகுத்தேர் அமைக்கப்படுகின்றது. இத்தேர் விறகுதான் கோவில் சமையலுக்குப் பயன்படுகின்றது.

    முன்பு கனகதாசர் என்ற மகான் தாழ்த்தப்பட்டிருந்த குலத்தில் பிறந்திருந்ததால் உடுப்பி கோவிலில் நுழைய அனுமதிக்கப்படவில்லை. அவர் தினமும் உடுப்பி கிருஷ்ணனின் கருவறைக்குப் பின்னால் நின்று ஏகதாரி வீணை எனும் ஒரு கம்பி மட்டும் கொண்ட வாத்தியக் கருவியை மீட்டி வழிபட்டுவந்தார். ஒருநாள் கருவறையின் பின்பக்கச் சுவரின் கற்கள் தாமாகவே விழுந்து உடுப்பி கிருஷ்ணரும் பின்புறச்சுவர் நோக்கித் திரும்பி கனகதாசருக்கு காட்சியளித்தார்.

    கனகதாசர் கண்ணனை வழிபட வழிவகுத்த ஒன்பது துவாரங்கள் கொண்ட பலகணி கனகதண்டி என அழைக்கப்படுகிறது. பக்தர்கள் அனைவரும் கனகதாசர் கிருஷ்ணரை தரிசித்த பலகணி வழியாகவே மூலவரை தரிசனம் செய்யும் வழக்கமும் இந்நிகழ்வுக்குப் பின்னர் ஏற்பட்டது. தற்போது அதுவே நடைமுறையில் உள்ளது.
    தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலிலும் பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்த கட்டணம் இல்லை. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    தஞ்சையை அடுத்த புன்னைநல்லூரில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து தரிசனம் செய்வார்கள்.

    இந்த கோவிலில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளை தவிர ஞாயிற்றுக்கிழமைகளிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். இந்த கோவிலில் முடிகாணிக்கை செலுத்த கோவில் நிர்வாகம் சார்பில் ரூ.10 கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இதில் ரூ.5 கோவில் நிர்வாகத்துக்கும், ரூ.5 முடி எடுக்கும் ஊழியருக்கும் வழங்கப்பட்டு வந்தது.

    கோவிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்த வரும் பக்தர்கள் இதற்காக கோவில் அலுவலகத்தில் ரூ.10 செலுத்தி ரசீது மற்றும் முடிகாணிக்கை செலுத்த பிளேடை பெற்று செல்வார்கள். அந்த ரசீதை முடிகாணிக்கை செலுத்தும் இடத்துக்கு எடுத்துச்சென்று ரசீதை கொடுத்து முடிகாணிக்கை செலுத்துவது வழக்கம்.அதன்படி வாரத்தில் திங்கட்கிழமை முதல் வியாழக்கிழமை வரை 50 பேர் வரையிலும், வெள்ளி, சனிக்கிழமைகளில் 50 பேர் வரையிலும், ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் 150-க்கும் அதிகமானோர் என ஒவ்வொரு மாதமும் 1000 முதல் 1,500 பேர் வரை நேர்த்திக்கடனுக்காக முடிகாணிக்கை செலுத்துவது வழக்கம்.

    ஆனால் தமிழக அரசு கோவில்களில் முடிகாணிக்கை செலுத்த கட்டணம் இல்லை என அறிவித்தது. அதன்படி இந்த அறிவிப்பு நேற்று முதல் அமலுக்கு வந்தது. அதன்படி தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன்கோவிலிலும் நேர்த்திக்கடன் செலுத்த வந்த பக்தர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படவில்லை. பக்தர்கள் நேரிடையாக முடிகாணிக்கை செலுத்தும் இடத்திற்கே சென்று முடிகாணிக்கை செலுத்தினர். முடிகாணிக்கை செலுத்த கட்டணம் வசூலிக்கப்படாததால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    மனதளவில் நாம் சோர்வுறும் சமயங்களில் கீழே உள்ள மாரியம்மன் ஸ்லோகத்தை சொன்னால் அம்மன் தானாக மனம் இறங்கி நம் கவலையை போக்குவாள்.
    மனிதர்களுக்கு துன்பம் வருவது இயம்பு தான். ஆனால் அந்த துன்பத்தை இன்பமாகும் சக்தி இறைவன் ஒருவருக்கே உண்டு. இறைவன் மனதை குளிர்வித்தால் அவர் தானாக நம் மனதை குளிரச்செய்வார். அந்த வகையில் மனதளவில் நாம் சோர்வுறும் சமயங்களில் கீழே உள்ள மாரியம்மன் தாலாட்டை பாடினால் அம்மன் தானாக மனம் இறங்கி நம் கவலையை போக்குவாள்.

    தினமும் அல்லது செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மாரியம்மனுக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை சொல்லி வந்தால் பெண்களின் மனக்குறைகள் படிப்படியாக குறையும்.

    அக்நிஜ்வாலாசிகாம் அக்னிநேத்ராம் அக்னிஸ்வரூபிணீம்
    கரண்ட மகுடோபேதாம் கதா டக்கா கராம்புஜாம்|
    வீராஸநாம் கபாலாஸி பாச ஹஸ்தாம் ரவிப்ரபாம்
    வந்தே தேவீம் மஹாமாரீம் நாகாபரணபூஷிதாம்.
    காஞ்சரம்பேட்டை பேசும் கன்னிமார் கோவிலில் சுவாமிக்கு 7 வகையான வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனைகள் நடந்தது.
    காஞ்சரம்பேட்டை அருகே பாரைப்பட்டியில் உள்ள பேசும் கன்னிமார் கோவிலில் ஆவணி மாத அமாவாசையையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் சுவாமிக்கு தீர்த்த அபிஷேகமும், சம்மங்கி, ரோஜா, மல்லிகை, செவ்வந்தி உள்ளிட்ட 7 வகையான வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனைகள் நடந்தது.

    அங்குள்ள புதிய மண்டப வளாகத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக பேசும் கன்னிமார் சுவாமிக்கு கிராம மக்கள் சார்பில் பொங்கல் வைத்து, அணையா விளக்குகள் ஏற்றப்பட்டு உலக மக்கள் நன்மைக்காகவும், கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்கள் விடுபட வேண்டியும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.
    இங்கு திருமணம் நடத்துவதற்காகவும், ஆன்மிக சொற்பொழிவு பயன்படும் வகையில் ஒரு விசாலமான மண்டபம் உள்ளது. இந்த கோவில் ராஜகோபுரத்தில் கந்த புராண காட்சிகள் விளக்கும் சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன.
    மூலவர் : வடபழநி ஆண்டவர்
    அம்மன்/தாயார் : வள்ளி, தெய்வானை
    தல விருட்சம் : அவதும்பரவிருக்ஷம் (அத்திமரம்)
    தீர்த்தம் : குகபுஷ்கரணி (திருக்குளம்)
    ஆகமம்/பூஜை : காமிகாகமம் (சிவாகமம்)
    அமைந்த இடம் : வடபழநி, சென்னை, தமிழ்நாடு

    கோவில் வரலாறு

    1890-ம் ஆண்டு மிகவும் எளிய ஓலைக்கூரைக் கொட்டகையுடன் இந்த கோவில் கட்டப்பட்டது. பின்னர் மக்களின் அதிக வருகையாலும், ஆதரவாலும் கோவில் புகழ் பெற்றது. ஆண்டுக்கு சுமார் 7 ஆயிரம் தம்பதியர் இந்த ஆலயத்தில் திருமணம் செய்து கொள்கின்றனர். இந்த கோவில் அண்ணாசாமி நாயக்கர் எனும் முருக பக்தர் தனது சொந்த வழிபாட்டிற்காக கொட்டகையுடன் இந்த கோவில் அமைத்தார் எனவும். அங்கு பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமியின் வண்ணப்படத்தை வைத்து வழிபட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    அவர் ஒரு சமயம் கடுமையான வயிறு வலியால் அவதிப்பட்டார். அவரின் நோய் தீர வேண்டி அடிக்கடி திருத்தணி மற்றும் திருப்போரூர் முருகன் ஆலயத்திற்கு சென்று வந்தார். ஒரு முறை தென் பழநி யாத்திரை சென்ற போது அங்கு ஒரு சாது சொல்லியபடி, அண்ணாசாமி தங்கியிருந்த கொட்டகையில் பழநி முருகன் உருவ படம் வைத்து வழிபடலானார்.

    தன்னுடைய நாக்கை அறுத்து முருகனுக்கு காணிக்கையாக்கினார். இதற்கு "பாவாடம்" என்று பெயர். இதனால் அவருடைய வயிற்றுவலி நீங்கியது. நாளடைவில் அவர் முருகப்பெருமானின் தெய்வீக சக்தியை உணரத் தொடங்கினார். அதன் பின் அவர் சொல்லக்கூடிய “அருள்வாக்கு” பலருக்கும் உண்மையாக நடப்பதாக கூறினர். அதனால் மக்கள் தங்களின் அன்றாட பிரச்னை தீர அண்ணாசாமி நாயக்கரிடம் அருள்வாக்கு பெற்றனர்.

    தனிச் சன்னதிகள்

    இந்த கோவிலில் பல தெய்வங்களுக்குரிய தனிச் சன்னதிகள் உள்ளன. இங்கு வரசித்தி விநாயர், சொக்கநாதர் சிவன், மீனாட்சி அம்மன், காளி, பைரவர், மற்றும் வள்ளி, தேவசேனா சமேத சண்முகர் சன்னதிகள், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், மகாலட்சுமி என பல சன்னதிகள் இங்கு உள்ளன. இந்த ஆலயத்தின் மூலவராக பழநி முருகன் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கின்றார். முருகப்பெருமானின் காலில் பாதரட்சைகளுடன் காட்சியளிக்கிறார்.

    இங்கு திருமணம் நடத்துவதற்காகவும், ஆன்மிக சொற்பொழிவு பயன்படும் வகையில் ஒரு விசாலமான மண்டபம் உள்ளது. இந்த கோவில் ராஜகோபுரத்தில் கந்த புராண காட்சிகள் விளக்கும் சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன.

    கோவிலின் சிறப்பு

    பல முருகன் கோவில்களில் இல்லாத ஆஞ்சநேயர் சன்னதி இங்கு உண்டு. தென்பழநி கோவிலுக்குச் செய்வதாக வேண்டிக்கொண்ட காணிக்கைகளை இக்கோவிலில் செலுத்துவதும் உண்டு.

    வழிபாடு

    கோவில் தினமும் அதிகாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. 7 மணிக்கு காலசந்தி பூஜை, 12 மணிக்கு உச்சிகால பூஜை நடக்கும். 5 மணிக்கு சாயரட்சை, 9அர்த்தசாம பூஜை நடைபெறுவது வழக்கம்.

    திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் தீர்த்தவாரி நடந்தது. இதையொட்டி மூன்று குளங்களில் அஸ்திரதேவருக்கு தீர்த்தவாரி நடந்தது.
    சிவபெருமானின் 3 கண்களில் இருந்து பொறிகள் தோன்றி, திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் விழுந்து, அந்த இடங்களில் அக்னி, சூரியன் மற்றும் சந்திரன் என பெயரில் தீர்த்தக் குளங்களாக மாறியதாக புராண வரலாறுகள் கூறுகின்றன.

    இந்த கோவிலில் நேற்று ஆவணி மாத அமாவாசையையொட்டி தீர்த்தவாரி நடந்தது. இதையொட்டி மூன்று குளங்களில் அஸ்திரதேவருக்கு தீர்த்தவாரி நடந்தது. அப்போது அஸ்திர தேவருக்கு பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது..

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் மேலாளர் சிவக்குமார் செய்திருந்தார்.
    உழைப்பாளிகளிடமிருந்து கடின உழைப்பை மட்டுமே எதிர்பார்க்கும் சாராரிடம் அவர்களின் ஊதியத்திற்காக உரத்த குரல் கொடுத்த உத்தமர் முகம்மது நபி (ஸல்) ஆவார்.
    உழைப்பாளர்களின் உழைப்பில்தான் உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. அவர்களின் வியர்வைத் துளிகளால் தான் உலகம் பல உயரிய கண்டுபிடிப்புகளை கண்டு கொண்டுள்ளது.

    வானில் பறக்கும் வானூர்திகள், விண்வெளி ஆய்வுகள், வானளாவிய கட்டிடங்கள், கடலில் மிதக்கும் மிதவைகள், நிலப்பரப்பில் இயங்கும் வாகனங்கள், ஆலைகள், நிலத்தில் கிடைக்கும் உற்பத்திகள் அனைத்தும் உழைப்பாளர்களின் உன்னதமான வியர்வைத் துளிகளால் உருவானவைகளாகும்.

    உழைப்பாளிகளிடமிருந்து கடின உழைப்பை மட்டுமே எதிர்பார்க்கும் சாராரிடம் அவர்களின் ஊதியத்திற்காக உரத்த குரல் கொடுத்த உத்தமர் முகம்மது நபி (ஸல்) ஆவார். அவர்களின் உழைப்பையும், ஊதியத்தையும் ஒன்றாக சேர்த்து பார்த்த மார்க்கம் இஸ்லாம் ஆகும்

    இஸ்லாம் எவருடைய கூலி விஷயத்திலும் அநீதி இழைத்ததில்லை. அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதரும் அநீதி இழைக்கவில்லை.

    “எவருடைய கூலியிலும் நபி (ஸல்) அவர்கள் அநீதி இழைத்ததில்லை”. (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி)

    உழைப்பாளியின் ஊதியத்தை தர மறுப்பது குற்றமாகும். உழைப்பாளியின் ஊதியத்தை அறவே கொடுக்க மறுப்பதும், அல்லது குறைத்துக் கொடுப்பதும் மோசடியாகும். இத்தகைய அரக்கர்களுக்கெதிராக (நபி (ஸல்) இறைவனிடம் மறுமையில் வாதாடி தண்டனை பெற்றுத்தருவார்கள்) இறைவனும் தானே வாதாடி தக்க பதிலடி கொடுப்பான்.

    “மூவருக்கெதிராக மறுமைநாளில் நான் வாதாடுவேன். 1) என் பெயரால் சத்தியம் செய்து மோசடி செய்தவன், 2) சுதந்திரமானவனை (அடிமையாக) விற்று அந்தக்கிரயத்தைச் சாப்பிட்டவன், 3) கூலிக்கு ஒருவரை அமர்த்தி அவரிடம் உழைப்பை வாங்கிக் (சுரண்டிக்) கொண்டு ஊதியம் கொடுக்காமல் இருந்தவன், என இறைவன் இவ்வாறு கூறியதை நபி (ஸல்) தெரிவித்தார்கள்”. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி)

    உழைப்பாளிகளுக்கு ஆதரவாக இறைவனே முன்வந்து வாதாடுவது உழைப்பின் உன்னதத்தை உயர்த்திக் காட்டுகிறது. அதுபோல வேலைக்கு முன்பு கூலியை நிர்ணயம் செய்ய இஸ்லாம் வலியுறுத்துகிறது.

    “எவர் ஒருவர் ஒரு கூலியாளை பணியமர்த்துவாரோ அவர் அவரின் கூலியை தெரிவித்து விடட்டும் என நபி (ஸல்) கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: அபூஸயீத் குத்ரீ (ரலி), நூல்: பைஹகீ)

    “கூலி குறிப்பிடப்படாமல் கூலியாளை பணியமர்த்துவதை நபி (ஸல்) தடுத்தார்கள்”. (அறிவிப்பாளர்: அபூஸயீத் குத்ரீ, நூல்: அஹ்மது)

    வேலை முடிந்ததும் வியர்வை உலரும் முன்பு பேசிய ஊதியத்தை வழங்கிட இஸ்லாம் பரிந்துரைத்துள்ளது.

    “உழைப்பாளியின் வியர்வை உலரும் முன்பாகவே அவருக்கு நீங்கள் ஊதியம் வழங்கிவிடுங்கள் என நபி (ஸல்) கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி), நூல்: இப்னுமாஜா)

    தினக்கூலி, வாரக்கூலி, மாதக்கூலி என வழங்கப்படுகிறது. இவற்றில் நிர்ணயிக்கப்பட்ட தினத்தில் ஊதியத்தை வழங்கிட வேண்டும். இவற்றை இழுத்தடிக்கக் கூடாது. இதுவும் உழைப்பாளிக்கு இழைக்கப்படும் அநீதமே. இவ்வாறு செய்ய நேர்ந்தால் அவரின் ஊதியத்தை முதலாளி முதலீடு செய்து லாபத்தையும் சேர்த்து வழங்கிட வேண்டும்.

    “மழைக்காக மூவர் மலைப்பகுதியிலுள்ள குகை ஒன்றில் தஞ்சம் அடைந்தனர். எதிர்பாராதவிதமாக பெரும்பாறை ஒன்று உருண்டு வந்து அந்தக் குகையின் பாதையை அடைத்துவிட்டது. இதிலிருந்து மீள ஒவ்வொருவரும் இறைவனுக்காகச் செய்த தமது நற்செயலை நினைவு கூர்ந்தனர். இதனால் அந்தப் பாறை அகன்றது. அவர்களில் ஒருவர் “இறைவா! நான் ‘பரக்’ எனும் அளவு நெல்லைக் கூலியாக நிர்ணயித்து ஒரு கூலியாளை அமர்த்தினேன்.

    வேலை முடிந்ததும் நிர்ணயித்தக் கூலியை அவர் வாங்க மறுத்து சென்றுவிட்டார். அதை நான் நிலத்தில் விதைத்து, விவசாயம் செய்து வந்தேன். அதன் வருவாயிலிருந்து பல மாடுகளையும், இடையர்களையும் சேகரித்து விட்டேன். அவர் சில காலங்களுக்குப் பிறகு வந்து, ‘இறைவனை அஞ்சு, எனது கூலியைக் கொடு’ என்றார். நான், ‘இவற்றையெல்லாம் எடுத்துக் கொள்’ என்றேன். அவரும் எடுத்துச் சென்றார் என இந்த நிகழ்வை அவர் கூறியதாக நபி (ஸல்) கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி)

    அ. செய்யது அலி மஸ்லஹி, திருநெல்வேலி டவுண்.
    ஆனைமலை மாசாணியம்மன் கோவில் மூடப்பட்டு இருந்ததால் நுழைவு வாயிலில் தேங்காய், பழம் வைத்தும், தீபம் ஏற்றியும் வழிப்பட்டுவிட்டு திரும்பி சென்றனர்.
    கொரோனா பரவல் காரணமாக வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுதலங்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் நேற்று அமாவாசை என்பதால், கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் முக்கிய கோவில்களில் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது.

    இதையடுத்து நேற்று ஆனைமலை மாசாணியம்மன் கோவில் நுழைவு வாயில் மூடப்பட்டது. இருந்தபோதிலும் கோவிலில் வழக்கமான பூஜைகள் நடந்தன. இந்த நிலையில் கோவிலில் அம்மனை தரிசனம் செய்ய வெளிமாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் ஆனைமலைக்கு வந்தனர்.

    கோவில் மூடப்பட்டு இருந்ததால் நுழைவு வாயிலில் தேங்காய், பழம் வைத்தும், தீபம் ஏற்றியும் வழிப்பட்டுவிட்டு திரும்பி சென்றனர். அதுபோன்று பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலில் அமாவாசையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். சூலக்கல் மாரியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது. இதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

    கோவிலில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றி பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதே போன்று கரியகாளியம்மன் கோவில், பத்ரகாளியம்மன் கோவில், மாகாளியம்மன் கோவில் உள்ளிட்ட அம்மன் கோவில்களில் அமாவாசையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதற்கிடையில் அமாவாசையையொட்டி அம்பராம்பாளையம் ஆழியாற்றில் நேற்று சிலர் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிப்பட்டனர்.
    திருவலஞ்சுழி வெள்ளை விநாயகர் கோவிலில் 10-ந்தேதி(வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தேவேந்திரன் பூஜையும், மாலை மூஷிக வாகனத்தில் சாமி புறப்பாடும் நடக்கிறது.
    சுவாமிமலை அருகே உள்ள திருவலஞ்சுழி வெள்ளை விநாயகர் என அழைக்கப்படும் சுவேத விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    வருகிற 11-ந் தேதி(சனிக்கிழமை) வரை விழா நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 5-ம் நாள் விழாவாக

    பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். மேலும் அஸ்திரதேவர் உட்புற புறப்பாடு நடைபெற்றது. நாளை(புதன்கிழமை) திருக்கல்யாணமும், 10-ந் தேதி(வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தேவேந்திரன் பூஜையும், மாலை மூஷிக வாகனத்தில் சாமி புறப்பாடும் நடக்கிறது.

    தற்போது கொரோனா கட்டுப்பாடு காரணமாக விநாயகர் சதுர்த்தி நாளில் கோவிலுக்குள் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. மேலும் தேரோட்டமும் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

    ×