என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    மயிலாடுதுறையில் காவிரி துலாக்கட்டத்தில் கடைமுகதீர்த்தவாரி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடிய போது எடுத்த படம்.
    மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் முழுவதும் நடைபெறும் தீர்த்தவாரி நிகழ்ச்சியின் முக்கிய உற்சவமான கடைமுக தீர்த்தவாரி விழா நேற்று நடந்தது. இதை முன்னிட்டு மயூரநாதர், ஐயாறப்பர், வதாரண்யேஸ்வரர், காசிவிஸ்வநாதர் ஆகிய கோவில்களில் இருந்து பஞ்சமூர்த்திகள் காவிரியின் இரு கரைகளிலும் எழுந்தருளினர். அப்போது உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.

    தொடர்ந்து தென்கரையில் திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சன்னிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையிலும், வடக்கு கரையில் தருமபுரம் ஆதீன கட்டளை சிவகுருநாத தம்பிரான் முன்னிலையிலும் காவிரி துலாக்கட்டத்தில் அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.

    இதையடுத்து தீர்த்தவாரி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர். கடைமுக தீர்த்தவாரி விழாவையொட்டி காவிரியின் இரு கரைகளிலும் பல இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது. மயிலாடுதுறை போலீஸ் சூப்பிரண்டு சுகுணா சிங் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
    ஒரு சிலருக்கு கிரக தோஷ அமைப்பின் காரணமாக தடைகள், இடையூறுகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். இதற்குச் ஜோதிட ரீதியாக பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது.
    ஜாதகப் பொருத்தம் பொதுவாக தம்பதிகளின் ஜனன கால ஜாதகத்தில் 7, 8-ம் இடங்கள் இருவருக்கும் சுத்தமாக அமைவது மிகவும் உத்தமம். லக்னம் ,8-ம் இடம் பலம் குறைந்து பாவ கிரகங்களின் ஆளுமைக்கு உட்பட்டால் ஆயுள் கேள்விக்குரியதாகும். பெண்ணின் ஜாதகத்தில் 7, 8-ம் இடம் பலமாக அமைந்து சுபகிரகங்கள் சம்பந்தம் பெற்றால் ஆணின் ஆயுள் நீடிக்கும்.

    அதே போல் ஆணின் ஜாதகத்தில் 2, 7-ம் இடம் வலுவாக இருந்தால் பெண் நூறு ஆண்டு வாழ்வாள்.
    இவ்வாறு வலுவாக உள்ள ஜாதகத்தை திருமண பந்தத்தில் இணைத்தால் பாதிப்பைத் தடுக்கலாம். 8-ம் இடம் மிகவும் வலுப்பெற்ற ஜாதகர்கள் முரட்டுப் பிடிவாதம், முன் கோபம், கடுமையான வார்த்தைகளால் பிறரை நோகச் செய்யும் இயல்பு உடையவர்களுக்கு சகிப்புத் தன்மை நிறைந்த சுபக்கிரக ஆளுமையும், வசியமும் கூடிய ஜாதகத்தை இணைத்தால் மண வாழ்க்கை பாதிக்காது.

    2, 8-ம் இட ராகு-கேதுக்கள் பிரச்சினையான மணவாழ்க்கை, குடும்ப சண்டை வீதிக்கு வந்து அவமானம், வாழ்க்கை துணையின் பேச்சும் செயலும் மன வருத்தம் தரும்படியாகவும் அமையும். 2, 8-ல் ராகு,கேது அமர்ந்த வாழ்க்கைத் துணையை இணைத்தால் சுமூகமான மணவாழ்க்கை உண்டாகும்.

    8-ல் செவ்வாய் இருப்பவர்களுக்கு 2, 7, 8-ம் இடங்களில் செவ்வாய் இருக்கும் ஜாதகத்தை இணைப்பது சிறப்பு. 8-ல் சனி இருந்தாலும்,8-ம் இடத்தைச் சனி பார்த்தாலும், 8-ம் அதிபதியுடன் சனி இணைந்தால் மட்டுமே மாங்கல்ய தோஷம் வாழ்நாள் முழுவதும் தொடரும். இவர்கள் தீர்க்கமான ஆயுள் நிரம்பிய ஒருவரை மணந்தால் திருமண பந்தம் நூறு ஆண்டுகள் நீடிக்கும்.
    கார்த்திகை மாதம் பிறந்தாலே எங்கும் “சுவாமியே சரணம் ஐயப்பா” என்ற பக்தி கோ‌ஷம் கேட்கும். கார்த்திகை முதல் நாளான இன்று அனைத்து கோவில்களிலும் ஐயப்ப பக்தர்கள் கூட்டமாக காணப்பட்டது.
    சென்னை :

    சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலத்தில் கோடிக்கணக்கான பக்தர்கள் செல்வார்கள்.

    அவ்வாறு செல்லக்கூடிய பக்தர்கள் கார்த்திகை 1-ந்தேதி மாலை அணிந்து விரதத்தை தொடங்குவார்கள். பின்பு அவர்கள் 41 நாட்கள் அல்லது 60 நாட்கள் விரதம் இருந்து சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசனம் செய்வார்கள்.

    கொரோனா காரணமாக சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு அமலுக்கு கொண்டு வரப்பட்ட இந்த விதி முறைகள் தற்போது வரை நீடித்து வருகிறது.

    கடந்த ஆண்டு தினமும் ஆயிரம், 2 ஆயிரம், 5 ஆயிரம், 10 ஆயிரம் என பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு தினமும் 30ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் சாமி தரிசனத்துக்கு ஆன்லைன் முன்பதிவு என்ற நடைமுறையே பின்பற்றப்படுகிறது.

    மேலும் கொரோனா தொற்று இல்லை என்பதற்கான ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை “நெகட்டிவ்” சான்றிதழ் அல்லது கொரோனா தடுப்பூசி 2 டோஸ் செலுத்திக்கொண்டதற்கான சான்றிதழ் கொண்டுவர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    கொரோனா கட்டுப்பாடுகளால் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருந்தாலும், வழக்கமாக கார்த்திகை மாதம் வந்தவுடன் மாலை அணிந்து விரதம் இருந்தே வருகிறார்கள். சபரிமலைக்கு செல்ல முன்பதிவு செய்யமுடியாத பக்தர்கள், தங்களது ஊரின் அருகில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு செல்லலாம் என்ற நம்பிக்கையில் வழக்கம் போல் ஐயப்பனுக்கு மாலை அணிந்து வருகிறார்கள்.

    கார்த்திகை மாதம் இன்று (புதன்கிழமை) பிறந்ததை முன்னிட்டு ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். குமரி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள், குருசாமிகளிடம் மாலை அணிந்து கொண்டனர்.

    கார்த்திகை மாதம் பிறந்தாலே எங்கும் “சுவாமியே சரணம் ஐயப்பா” என்ற பக்தி கோ‌ஷம் கேட்கும். கார்த்திகை முதல் நாளான இன்று அனைத்து கோவில்களிலும் ஐயப்ப பக்தர்கள் கூட்டமாக காணப்பட்டது.

    காலையில் இருந்தே பல பக்தர்கள் மாலை அணிந்தபடி இருந்ததால் அனைத்து கோவில்களிலும் பக்தர்களின் சரண கோ‌ஷம் கேட்டபடி இருந்தது. பல கோவில்களில் ஐயப்பன் பாடல்கள் ஒலித்ததால் பக்தர்கள் பரவசமடைந்தனர்.

    சென்னை மகாலிங்கபுரம், ராஜா அண்ணாமலைபுரம், அண்ணாநகர், மடிப்பாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள ஐயப்பன் கோவில்களில் இன்று பக்தர்கள் திரண்டு சென்று மாலை அணிந்தனர்.

    சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் பல மாநிலங்களில் இருந்து செல்வது வழக்கம். குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து ஆண்டுக்கு 20 லட்சம் பக்தர்கள் சபரிமலை சென்று ஐயப்பனை தரிசனம் செய்வார்கள்.

    ஐயப்பனுக்கு மாலை அணிந்த பக்தர்கள்

    இந்த ஆண்டு 13 லட்சம் பேர் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. பக்தர்கள் அனைவரும் ஆன்லைனில் முன்பதிவு செய்தே சபரிமலைக்கு செல்ல வேண்டும். முன்பதிவு செய்யாமல் சபரிமலை செல்லும் பக்தர்கள் பம்பையில் தடுத்து நிறுத்தப்படுவார்கள். இந்த ஆண்டு சபரிமலை செல்வதற்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கி விட்டது.

    அதேநேரத்தில் இன்று மாலை அணிந்து விரதம் இருப்பவர்களின் எண்ணிக்கை ஓரளவு குறைவாகவே காணப்பட்டது. மகாலிங்கபுரம் ஐயப்பன் கோவிலில் இன்று காலை முதல் சுமார் 3 ஆயிரம் பேர் மாலை அணிந்தனர்.

    பக்தர்களிடம் பொருளாதார நெருக்கடி மற்றும் கொரோனா கட்டுப்பாடு ஆகிய காரணங்களால் சபரிமலை செல்வதில் தயக்கம் இருக்கிறது. மேலும் பக்தர்கள் சபரிமலை செல்ல தயக்கம் காட்டுவதில் இன்னொரு காரணமும் இருக்கிறது.

    கொரோனா பரவலுக்கு பிறகு சபரிமலை சன்னிதானத்தில் பக்தர்கள் தங்க அனுமதி அளிக்கப்படவில்லை. சபரிமலையில் அதிகாலை 5.30 மணிமுதல் மதியம் 12 மணி வரை நடைபெறும் நெய்அபிஷேகம் பிரதானமானது.

    இருமுடி கட்டி நெய் சுமந்து செல்லும் பக்தர்கள் நெய் அபிஷேகத்தில் பங்கேற்க விரும்புவார்கள். ஒருவேளை 12 மணிக்கு பிறகு பக்தர்கள் சன்னிதானம் செல்ல நேர்ந்தால் அங்கேயே இரவில் தங்கி விட்டு மறுநாள் நெய் அபிஷேகத்தில் பங்கேற்பார்கள்.

    ஆனால் தற்போது சபரிமலை சன்னிதானத்தில் பக்தர்கள் தங்க அனுமதி இல்லாததால் 12 மணிக்கு பிறகு செல்ல நேர்ந்தால் நெய் அபிஷேகத்தில் பங்கேற்க முடியாமல் போய்விடுமோ என்ற தயக்கமும் இருக்கிறது.

    இருந்தாலும் வழக்கம் போல் அவர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கி உள்ளனர். ஒருவேளை சபரிமலை செல்ல அனுமதி கிடைக்காவிட்டாலும் உள்ளூர்களில் உள்ள கோவில்களுக்கு சென்று வரலாம் என்ற எண்ணத்திலும் பலர் மாலை அணிந்து உள்ளனர்.

    வழக்கமாக மகாலிங்கப்புரம் ஐயப்பன் கோவிலில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் இருமுடி கட்டி செல்வது வழக்கம். இதேபோல் தமிழகம் முழுவதும் உள்ள ஐயப்பன் கோவில்களில் இருமுடி கட்டி சபரிமலை செல்வார்கள். இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை சற்றே குறைந்து உள்ளது.

    அதை உறுதிப்படுத்தும் வகையில் சபரிமலை செல்லும் பக்தர்களின் முன்பதிவும் குறைவாகவே உள்ளது. ஜனவரி 16-ந் தேதி வரை பக்தர்கள் சபரிமலை செல்ல முன்பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் இன்னும் முன்பதிவு காலியாகவே உள்ளது.

    துலாம் மாதம் முழுவதும் நீராட முடியாவிட்டாலும், முதல்நாள் மற்றும் கடைசி நாள் நீராடினாலே புண்ணியப்பேறு அடைவார்கள் என்பது ஐதீகம்.x
    ஐப்பசி மாதம் துலாம் மாதம் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஐப்பசி மாதத்தில் காவிரி ஆற்றில் நீராடினால் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். மக்கள் தங்கள் செய்த பாவங்களை போக்குவதற்காக கங்கையில் சென்று நீராடி புனிதம் பெறுவர். ஆனால் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய 3 புண்ணிய நதிகளும், 3½ கோடி தேவர்களும் காவிரியில் மூழ்கி தங்களுடைய பாவத்தை போக்கி கொள்வதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளன.

    துலாம் மாதம் முழுவதும் காவிரியில் நீராடினால், 7 ஜென்மங்களில் செய்த பாவம், முன்னோர்களின் சாபம் நீங்குவதாக நம்பிக்கை.

    துலாம் மாதம் முழுவதும் நீராட முடியாவிட்டாலும், முதல்நாள் மற்றும் கடைசி நாள் நீராடினாலே புண்ணியப்பேறு அடைவார்கள் என்பது ஐதீகம். இந்த நிலையில் துலாம் (ஐப்பசி) மாதத்தின் கடைசி நாளான நேற்று தஞ்சை மாவட்டம் திருவையாறில் உள்ள காவிரி ஆற்றில் ஐப்பசி மாத கடைமுழுக்கு தீர்த்தவாரி நடந்தது. இதையொட்டி ஐயாறப்பர் கோவிலில் இருந்து சூலபாணி காவிரி ஆற்றங்கரையில் உள்ள புஷ்யமண்டப படித்துறைக்கு எடுத்து வரப்பட்டு அபிஷேகம் நடந்தது. இதைத்தொடர்ந்து ஏராளமானோர் ஆற்றில் புனித நீராடினர். சிலர் தர்ப்பணம் கொடுத்தனர்.

    வெளியூர்களில் இருந்து வந்தவர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி ஐயாறப்பர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். இதன் காரணமாக காவிரி புஷ்யமண்டப படித்துறை மற்றும் கோவிலில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

    ஆற்றங்கரை மற்றும் கோவில் பகுதிகளில் திருவையாறு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    சிவன் கோவில்களில் பிரதோஷத்தையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    நாகை காயாரோகணசாமி மற்றும் நந்திகேஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு சாமிக்கு மஞ்சள், திரவியம், மாப்பொடி, பச்சரிசி, இளநீர், தேன், பால், தயிர், சந்தனம், விபூதி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு நந்திக்கு வில்வ இலை மற்றும் அருகம்புல் மாலை சாற்றப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதேபோல அமரநந்தீஸ்வரர் கோவில், காசி விஸ்வநாதர் கோவில், கட்டியப்பர் கோவில், நடுவதீஸ்வரர் கோவில், அழகிய நாதர் கோவில், வீரபத்திரர் கோவில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், நாகநாதர் கோவில், சட்டையப்பர்கோவில், வெளிப்பாளையம் அகஸ்தீஸ்வரர் கோவில், வடக்கு பொய்கை நல்லூர் நந்தி நாதேஸ்வரர் கோவில், நாகூர் நாகநாதர் கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

    இதேபோல தோப்புத்துறை கைலாசநாதர் கோவில், வடமறைக்காடர் கோவில், தேத்தாகுடி வடக்கு அழகியநாதர் கோவில், கோடியக்காடு குழவர் கோவில், அகஸ்தியன்பள்ளி அகஸ்தீஸ்வரர் கோவில், நாலுவேதபதி அமராபதீஸ்வரர் கோவில், வெள்ளப்பள்ளம் சிவன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

    புஷ்பவனம் சுகந்தனேஸ்வரர் கோவில், ஆயக்காரன்புலம் எழுமேஸ்வரமுடையார் கோவில், அகரம் அழகியநாதர் கோவில், கரியாப்பட்டினம் கைலாசநாதர் கோவில், வடகட்டளை சோமநாதர் கோவில் மற்றும் ருத்ரசோமநாதர் கோவில், மறைஞாயநல்லூர் மேலமறைக்காடர் சிவன்கோவில், கத்தரிப்புலம் கோவில்குத்தகை காசிநாதர் கோவில் ஆகிய சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கரும்பு தொட்டில் அமைத்து மாட வீதியை வலம் வந்து நேர்த்தி கடன் செலுத்தினர்.
    பஞ்ச பூதஸ்தலங்களில் அக்னி ஸ்தமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் கார்த்திகை தீபத்திருவிழாவும் ஒன்றாகும்.

    இந்த ஆண்டிற்காக தீபத்திருவிழா கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது.

    கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின் காரணமாக சாமி வீதி உலா ரத்து செய்யப்பட்டு உள்ளதால் விழா நாட்களில் கோவிலின் 3-ம் பிரகாரத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் காலையில் விநாயகர், சந்திரசேகரர், வள்ளி-தெய்வானையுடன் முருகன், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை செய்யப்பட்டு 5-ம் பிரகாரத்தில் உற்சவ உலா நடைபெற்று வருகின்றது.

    கார்த்திகை தீபத்திருவிழாவில் தேரோட்டம் நடைபெறும் நாளன்று நேர்த்தி கடனாக கரும்பில் சேலையால் தொட்டில் கட்டி தங்கள் குழந்தையை சுமந்தபடி மாட வீதியை வலம் வருவார்கள். அதன்படி, நேற்று ஏராளமான பக்தர்கள் கரும்பு தொட்டில் அமைத்து மாட வீதியை வலம் வந்து நேர்த்தி கடன் செலுத்தினர். இதனால் அருணாசலேஸ்வரர் கோவில் முன்பும், மாட வீதியை சுற்றியும் பக்தர்கள் கூட்டம் இருந்தது.
    சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் உள்ள மேலும் சில முக்கியமான கோவில்களைப் பற்றி சிறிய குறிப்பாக இங்கே அறிந்து கொள்ளலாம்.
    சென்னை நகரைச்சுற்றி ஏராளமான பிரசித்திபெற்ற திருக்கோவில்கள் அமைந்துள்ளன. வெளிமாவட்டங்களைச் சேர்ந்த பலருக்கும், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் உள்ளிட்டவைதான் அதிகமாகத் தெரிந்திருக்கும். சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் உள்ள மேலும் சில முக்கியமான கோவில்களைப் பற்றி சிறிய குறிப்பாக இங்கே பார்ப்போம்.

    காளிகாம்பாள் கோவில்: சென்னை மாநரகத்தின் பரபரப்பு மிகுந்த பகுதியான பாரீஸ் கார்னரில், தம்புசெட்டி தெருவில் இந்த ஆலயம் உள்ளது. கி.பி.17-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சென்னை கடற்கரையை ஒட்டிய பகுதியில் இருந்த இந்தக் கோவில், பல்வேறு கால மாற்றங் களின் காரணமாக, தற்போதைய இடத்தில் எழுப்பப்பட்டிருக்கிறது. போர்ச்சுகீசியர்களின் ஆதிக்க காலத்தில் இந்த மாற்றம் நிகழ்ந்திருக்கலாம் என்கிறார்கள். இந்தக் கோவிலில் ‘காளி’ என்றும், ‘காமாட்சி’ என்றும் அழைக்கப்படும் பெண் தெய்வம் பிரதான மூலவராக அருளாட்சி செய்கிறார். முன்காலத்தில் உக்கிர காளியாக காட்சியளித்த இத்தல மூலவர், தற்போது சாந்தமான கோலத்தில் காமாட்சி வடிவில் அருள்வதாக ஐதீகம்.

    திருநீா்மலை ரங்கநாதர்: தென் சென்னைப் பகுதியில் உள்ள குரோம்பேட்டையில் இருந்து 5 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது, திருநீர்மலை. பல்லாவரத்தில் இருந்தும் 5 கிலோமீட்டர் சென்றால், இந்த ஊரை அடையலாம். திவ்ய தேசங்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்த ஆலயம், மலைக் குன்றின் மீது அமைந்திருக்கிறது. மலையின் அடிவாரத்திலும் சிறிய கோவில் உள்ளது. இங்கு நீர்வண்ணப்பெருமாள் வீற்றிருக்கிறார். மலையின் மீதுள்ள ஆலயத்தில் ரங்க நாதர் அருளாட்சி செய்கிறார். கோவிலுக்கு எதிரே ஒரு தீர்த்தக்குளம் அமைந்துள்ளது.

    மருந்தீஸ்வரர் கோவில்: சென்னை, திருவான்மியூர் பகுதியில் அமைந்திருக்கிறது இந்தத் திருக்கோவில். இங்கு மூலவராக சிவபெருமான் வீற்றிருக்கிறார். நோய்களை தீர்க்கும் சக்தி படைத்தவர் என்பதால், இவருக்கு ‘மருந்தீஸ்வரர்’ என்று பெயர். அதோடு, அகத்திய முனிவருக்கு, தெய்வீக மருந்து முறைகளை உபதேசம் செய்ததாலும், இவருக்கு இப்பெயர் வந்தது. தேவாரப் பாடல்கள் பெற்ற 274 திருக்கோவில்களில் இந்த ஆலயமும் ஒன்று. இந்தக் கோவில் அமைந்த சாலை, அந்த காலத்தில் சோழ நாட்டை, பல்லவ நாட்டோடும், ஆந்திராவில் ஆட்சி செய்த சில ராஜ்ஜியங்களோடும் இணைக்கும் முக்கிய சாலையாக விளங்கியதாக சொல்லப்படுகிறது.

    ஜெகந்நாதர் கோவில்: சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் இருந்து விலகி, ரெட்டிக்குப்பம் சாலையில் கானாத்தூர் என்ற இடத்தில் இந்தக் கோவில் இருக்கிறது. ஒடிசாவில் உள்ள பூரிஜெகந்நாதர் கோவிலை போன்ற வடிவமைப்பிலேயே இந்தக் கோவில் அமைக்கப்பட்டிருக்கிறது. பூரி ஜெகந்நாதர் கோவிலில் உள்ளதுபோலவே, இங்கும் ஜெகந்நாதர், பலராமர் மற்றும் சுபத்ரா தேவி ஆகியோரை தரிசிக்க முடியும். தெய்வங்களின் சிலைகளும், பூரியில் உள்ளது போலவே மரத்தால் செய்யப்பட்டவைதான். இதற்காக வேப்ப மரத் துண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பிரதான தெய்வங்களைத் தவிர யோக நரசிம்மர், விநாயகர், விமலாதேவி மற்றும் கஜலட்சுமி ஆகியோருக்கும் சன்னிதிகள் அமைந்துள்ளன. இந்த ஆலயம் வெண் சலவைக் கற்களாலும், கருப்புப் பளிங்கு கற்களாலும் கட்டப்பட்டுள்ளது. பளிங்கு கருங்கல் காஞ்சிபுரத்தில் இருந்தும், வெள்ளை சலவைக் கல் ராஜஸ்தானில் இருந்தும் வரவழைக்கப்பட்டுள்ளன.

    தேவி கருமாரியம்மன்: சென்னை புறநகர் பகுதியில் மேற்கு பக்கத்தில் உள்ளது திருவேற்காடு கருமாரியம்மன் கோவில். புராண காலத்தில் இந்தப் பகுதியில் மருத்துவக் குணம் மிகுந்த மூலிகை வனம் இருந்ததாக சொல்லப்படுகிறது. தெய்வீக மூலிகை (வேர்) நிறைந்த வனம் என்பதால், இந்த பகுதி ‘திருவேற்காடு’ என்று பெயர் பெற்றதாக கூறுகிறார்கள். இந்த ஆலய அம்மன், குறி சொல்லும் பெண் வேடத்தில் சூரிய பகவானை பார்க்க அவரது இருப்பிடம் சென்றாள். ஆனால் அன்னையை அடையாளம் கண்டுகொள்ளாத சூரியபகவான், அவளுக்கு உரிய மரியாதை தராததோடு, அவமரியாதையும் செய்தான். இதையடுத்து சூரியனின் இடத்தில் இருந்து அன்னை புறப்பட்ட மறுநொடி, சூரியன் தன்னுடைய ஒளியை இழந்தான். இதனால் உலக உயிர்களும் துன்பத்தில் துவண்டன. தன் தவறை உணர்ந்த சூரியன், அன்னையிடம் மன்னிப்பு கோரினான் என்று தல வரலாறு சொல்கிறது. இதனால் சூரிய பகவானுக்கு உரிய ஞாயிற்றுக்கிழமையில் இந்த ஆலயத்தில் அருளும் கருமாரியம்மனுக்கு, சிறப்பு பூஜைகள் செய்யப்படு கின்றன.

    சுப்பிரமணியர் ஆலயம்: சென்னையை அடுத்துள்ளது, பழமையும் பெருமையும் வாய்ந்த குன்றத்தூர். பல்லாவரத்தில் இருந்து மேற்கே 8 கிலோமீட்டர் தொலைவில்இந்த ஊர் இருக்கிறது. இங்குள்ள முருகன் கோவில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். சிறிய குன்றின் மீது அமைந்திருக்கும் இந்த ஆலயத்தில் உள்ள மூலவர், வடக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்கிறார். இந்த ஆலயம், இரண்டாம் குலோத்துங்கச் சோழனால் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. பெரிய புராணம் என்னும் 63 நாயன்மார்களின் வரலாற்றை எழுதிய சேக்கிழார் அவதரித்த தலமாக குன்றத்தூர் குறிப்பிடப்படுகிறது.
    ராஜகோபுரத்தின் முன்பு எழுந்தருளிய பஞ்சமூர்த்திகளுக்கும் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்போது பக்தர்கள் அண்ணாமலையாருக்கு ‘அரோகரா’ என்று பக்தி கோஷம் எழுப்பினர்.
    பஞ்ச பூதஸ்தலங்களில் அக்னி ஸ்தமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் கார்த்திகை தீபத்திருவிழாவும் ஒன்றாகும்.

    இந்த ஆண்டிற்காக தீபத்திருவிழா கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது.

    கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின் காரணமாக சாமி வீதி உலா ரத்து செய்யப்பட்டு உள்ளதால் விழா நாட்களில் கோவிலின் 3-ம் பிரகாரத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் காலையில் விநாயகர், சந்திரசேகரர், வள்ளி-தெய்வானையுடன் முருகன், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை செய்யப்பட்டு 5-ம் பிரகாரத்தில் உற்சவ உலா நடைபெற்று வருகின்றது.

    இந்த நிலையில் நேற்று தீபத்திருவிழாவின் 7-ம் நாள் விழாவாகும். வழக்கமாக 7-ம் நாள் விழாவின் போது பஞ்சமூர்த்திகள் தேரோட்டம் நடைபெறும். அதிகாலையில் தொடங்கி அன்று இரவு வரை தேரோட்டம் நடைபெறும். இதில், உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    இந்த நிலையில் கடந்த ஆண்டை போன்றே இந்த ஆண்டும் கொரோனா காரணமாக கோவிலில் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது. ஆனால் அதற்கு பதிலாக கோவிலில் நிர்வாகம் சார்பில் ஆகம விதிகளின்படி கோவிலின் 5-ம் பிரகாரத்தில் பஞ்சமூர்த்திகளின் ரதங்கள் பிரகார உலா வந்தது.

    முன்னதாக அதிகாலையில் கோவிலின் நடை திறக்கப்பட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து திருகல்யாண மண்டபத்தில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

    பின்னர் அங்கிருந்து மேளதாளங்கள் முழங்க பஞ்சமூர்த்திகள் 3-ம் பிரகாரத்தில் வலம் வந்து 5-ம் பிரகாரத்தில் ராஜகோபுரத்தின் முன்பு கொண்டு வரப்பட்டது. அப்போது அங்கு தேரோட்டம் நிகழ்ச்சிக்காக பிரத்யேகமாக செய்யப்பட்டு இருந்த சிறப்பு ரதங்களில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளினர்.

    முன்னதாக இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் அனுமதி கிடையாது என்று மாவட்ட நிர்வாகம் மூலம் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் பக்தர்கள் அனுமதி அளிக்கப்படவில்லை.

    பின்னர் கோவிலில் நடைபெறும் நிகழ்ச்சியை காண ராஜகோபுரத்தின் நுழைவு வாயில் அருகில் நின்று சாமி தரிசனம் செய்து கொண்டிருந்த குறைந்த அளவிலான பக்தர்களை கோவிலுக்குள் செல்ல போலீசார் அனுமதித்தனர். தொடர்ந்து ராஜகோபுரத்தின் முன்பு எழுந்தருளிய பஞ்சமூர்த்திகளுக்கும் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்போது பக்தர்கள் அண்ணாமலையாருக்கு ‘அரோகரா’ என்று பக்தி கோஷம் எழுப்பினர்.

    இதையடுத்து வழக்கமாக நடைபெறுவது போன்று முதலில் விநாயகர் ரதத்தை பக்தர்கள் வடம் பிடித்து சிறிது தூரம் இழுத்தனர். தொடர்ந்து முருகர், அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ரதங்களும் இழுக்கப்பட்டது. இதையடுத்து பஞ்சமூர்த்திகள் பிரகார உலா நடைபெற்றது.

    பஞ்சமூர்த்திகள் உலா காலை 6.30 மணி அளவில் மேளதாளங்கள் முழங்க தொடங்கி 9 மணி அளவில் நிறைவடைந்தது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான 19-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலையில் கோவிலில் பரணி தீபமும், மாலையில் கோவிலின் பின்புறம் உள்ள மலையின் உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.

    பின்னர் தொடர்ந்து 3 நாட்கள் இரவில் கோவில் வளாகத்தில் உள்ள பிரம்ம தீர்த்த குளத்தில் தெப்ப உற்சவமும், நிறைவாக 23-ந்தேதி சண்டீகேஸ்வரர் உலாவும் நடைபெற உள்ளது.
    சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு பூஜைகள் தொடங்கிய நிலையில், தரிசனத்திற்கு 13 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
    சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக நேற்று முன்தினம் நடை திறக்கப்பட்டது. நேற்று முதல் மண்டல பூஜைக்கான வழிபாடுகள் தொடங்கின. அதிகாலை 4 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் புதிய மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார்.

    தொடர்ந்து கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உதயாஸ்தமன பூஜை, கலசாபிஷேகம் மற்றும் களபாபிஷேகம், உச்ச பூஜை போன்றவை நடந்தது. பின்னர் மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.

    மாலை 4 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு, 6.30 மணிக்கு தீபாராதனை, இரவு 7 மணிக்கு படி பூஜை ஆகியவை நடைபெற்றது. நேற்று கட்டுப்பாடுகளுடன் குறைந்த அளவிலான பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

    இதற்கிடையே சபரிமலையில் காலை நடை திறக்கப்பட்டதும், சாமி தரிசனம் செய்த கேரள தேவஸ்தான துறை மந்திரி கே.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சபரிமலையில் தரிசனத்திற்கு இதுவரை 13 லட்சம் பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர். தினசரி 30 ஆயிரம் பேர் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். அப்பம், அரவணை தேவையான அளவுக்கு இருப்பு உள்ளது. தட்டுப்பாடு இன்றி பக்தர்களுக்கு வினியோகம் செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்களுக்கு புனித பிரசாதமாக அப்பம், அரவணை தயாரிப்பு பணிகள் முழுவதும் தேவஸ்தானத்தின் செயல் அதிகாரி கட்டுப்பாட்டில் நடைபெற்று வருகிறது.

    இந்தநிலையில் அப்பம், அரவணை ஆகியவை முற்றிலும் ஹலால் செய்யப்பட்ட சர்க்கரை மூலமாக தயாரிக்கப்படுவதாக சர்ச்சை எழுந்துள்ளது. அதாவது, ஹலால் செய்யப்பட்ட அப்பம், அரவணை என பாக்கெட்டில் எழுதப்பட்டிருப்பதாக பக்தர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இதற்கு பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
    மண்டல பூஜை தரிசனத்துக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் 41 நாட்களும் மகரவிளக்கு தரிசனத்திற்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் 60 நாட்களும் விரதம் கடைப்பிடிப்பது வழக்கமாகும்.
    கேரளாவில் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி, தெலுங்கானா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஐயப்ப பக்தர்கள் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு தரிசனத்துக்காக கார்த்திகை மாதம் 1-ந்தேதி அன்று மாலை அணிந்து 41 நாட்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி தலையில் சுமந்து சென்று ஐயப்பனை தரிசனம் செய்வது வழக்கம்.

    அதேபோல இந்த ஆண்டு மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை 15-ம் தேதி திறக்கப்பட்டுஉள்ளது. இதைத்தொடர்ந்து சபரிமலைக்கு இருமுடி கட்டி செல்லும் ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் 1-ந்தேதியான இன்று கோவில்களுக்கு சென்று மாலை அணிந்து விரதம் தொடங்குகிறார்கள். அதன்படி குமரி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கோவில்களான கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில், நாகர்கோவில் நாகராஜா கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், பூதப்பாண்டி பூதலிங்கசுவாமி கோவில், குமாரகோவில் வேளிமலை சுப்ரமணியசாமி கோவில், பார்வதிபுரம் ஐயப்பன் கோவில், உள்பட பல்வேறு கோவில்களில் இன்று அதிகாலையில் இருந்தே சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் துளசி மாலை அணிந்து விரதம் தொடங்குகிறார்கள்.

    அதிலும் குறிப்பாக கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறைகடலில் ஐயப்ப பக்தர்கள் நாளை அதிகாலையில் புனித நீராடிவிட்டு கடற்கரையில் உள்ள பரசுராமர் விநாயகர் கோவில் மற்றும் பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று துளசி மாலை அணிந்து சரணகோ‌ஷம் எழுப்புகிறார்கள்.

    இதில் மண்டல பூஜை தரிசனத்துக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் 41 நாட்களும் மகரவிளக்கு தரிசனத்திற்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் 60 நாட்களும் விரதம் கடைப்பிடிப்பது வழக்கமாகும். சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவதற்காக நேற்று முதலே கடைகளில் துளசி மாலைகளை வாங்குவதற்காக படையெடுத்துச் சென்ற வண்ணமாக உள்ளனர். இதனால் பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் விரதம் தொடங்கும் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது.

    இந்த கடைகளில் துளசி மாலை மற்றும் முத்து மணி மாலைகள் விற்பனை படு ஜோராக நடந்து கொண்டிருக்கிறது. மேலும் இந்த கார்த்திகை மாதம் 30 நாட்களும் குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் கார்த்திகை மாத சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. கார்த்திகை, மார்கழி, தை ஆகிய 3 மாதங்களும் இனி எங்கு பார்த்தாலும் ஐயப்ப சரணகோ‌ஷம் ஒலிப்பதைதான் கேட்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
    கொரோனா பரவலை தடுக்கும் வகையில் நாளை (17-ந்தேதி) மதியம் 1 மணி முதல் வருகிற 20-ந்தேதி வரை பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்யவும், கிரிவலம் செல்லவும் அனுமதி இல்லை.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 10-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது.

    6-ம் திருநாளான நேற்று (15-ந்தேதி) காலையில் விநாயகர், சந்திர சேகரர் வெள்ளி யானை வாகனத்தில் பிரகாரத்தில் வலம் வந்தார். 63 நாயன்மார்கள் பிரகார விழா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    அதன் பின்னர் இரவு பஞ்ச மூர்த்திகள் வெள்ளி ரதத்தில் பிரகார உலா வந்தனர்.

    இதைத்தொடர்ந்து 7-ஆம் திருநாளான இன்று காலை 6.30 மணி முதல் 7.30மணிக்குள் விருச்சிக லக்கனத்தில் விநாயகர் தேர் தேரோட்டம் நடந்தது. கோவில் பிரகாரத்திலேயே தேர் வலம் வந்தது. அதைத் தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் மகா ரதங்களில் எழுந்தருளி பிரகாரத்தில் வலம் வந்தனர்.

    மேளதாளங்கள் முழங்க தேர் அசைந்தாடி வந்தது கண் கொள்ளா காட்சியாக இருந்தது. நிகழ்ச்சியில் கோவில் ஊழியர்கள், உபயதாரர்கள், உள்ளூர் பிரமுகர்கள் பங்கேற்றனர். தேரோட்ட நிகழ்ச்சியில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

    கொரோனா பரவலை தடுக்கும் வகையில் நாளை (17-ந்தேதி) மதியம் 1 மணி முதல் வருகிற 20-ந்தேதி வரை பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்யவும், கிரிவலம் செல்லவும் அனுமதி இல்லை. இதுதொடர்பாக பஸ் நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் ஒலிபெருக்கிகள் மூலம் அறிவிப்பு செய்யப்பட்டு வருகிறது.

    மேலும் பக்தர்கள் தங்களது நகை மற்றும் பணத்தை பத்திரமாக கொண்டு செல்ல வேண்டும் என்றும் போலீசார் சார்பில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் அறிவிப்பு செய்யப்பட்டு வருகிறது.

    தீப விழாவின் உச்ச நிகழ்வாக வருகிற 19-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் சன்னதி முன்பு பரணி தீபம் ஏற்றப்படுகிறது.

    இதைத்தொடர்ந்து மாலை 6 மணிக்கு அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.அப்போது பஞ்சமூர்த்திகள் தங்க ரி‌ஷப வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்கள். அர்த்தநாரீஸ்வரர் நடனமாடியபடி காட்சி தருவார்.

    இந்த நிகழ்ச்சிகளிலும் பக்தர்கள் பங்கேற்க அனுமதி இல்லை.உள்ளூர் பக்தர்கள் கோவில் வெளியிலிருந்து மகா தீபத்தை தரிசனம் செய்யலாம். அவர்கள் மகாதீபமண்டபத்துக்கு செல்ல அனுமதி இல்லை.

    தீபத் திருவிழாவை முன்னிட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ரெட்டி உத்தரவின்பேரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
    கார்த்திகை மாத பிரதோ‌ஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு இன்று முதல் 19-ந் தேதி வரை மொத்தம் 4 நாட்கள் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல கோவில் நிர்வாகம் அனுமதி வழங்கி இருந்தது.
    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில். இந்த கோவிலானது தரை மட்டத்தில் இருந்து சுமார் 4 ஆயிரத்து 500 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

    இந்த கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை 4 நாட்கள், பவுர்ணமி 4 நாட்கள் என மொத்தம் 8 நாட்கள் மட்டுமே பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது .

    இந்த நிலையில் கார்த்திகை மாத பிரதோ‌ஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு இன்று முதல் 19-ந் தேதி வரை மொத்தம் 4 நாட்கள் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல கோவில் நிர்வாகம் அனுமதி வழங்கி இருந்தது.

    மேலும் மழை பெய்தால் பக்தர்களுக்கு அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் நேற்று இரவு பெய்த மழையின் காரணமாகவும், இன்று மழை பெய்வதற்கான அறிகுறி இருப்பதாலும் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு இன்று பிரதோ‌ஷத்தை முன்னிட்டு பக்தர்கள் செல்ல கோவில் நிர்வாகம் திடீர் தடை விதித்துள்ளது.

    இதனால் பிரதோ‌ஷத்தை முன்னிட்டு வருகை தந்த ஏராளமான பக்தர்கள் அடிவாரத்தில் குவிந்தனர். அவர்களிடம் போலீசாரும், வனத்துறையினரும் மழை விவரங்களை கூறி திருப்பி அனுப்பினர்.

    ×