search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அருணாசலேஸ்வரர் கோவில் பிரகாரத்தில் தேரோட்டம் நடந்த காட்சி.
    X
    அருணாசலேஸ்வரர் கோவில் பிரகாரத்தில் தேரோட்டம் நடந்த காட்சி.

    கார்த்திகை தீபம் 7-ம் நாள் விழாவை முன்னிட்டு திருவண்ணாமலை கோவில் பிரகாரத்தில் தேரோட்டம்

    கொரோனா பரவலை தடுக்கும் வகையில் நாளை (17-ந்தேதி) மதியம் 1 மணி முதல் வருகிற 20-ந்தேதி வரை பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்யவும், கிரிவலம் செல்லவும் அனுமதி இல்லை.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 10-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது.

    6-ம் திருநாளான நேற்று (15-ந்தேதி) காலையில் விநாயகர், சந்திர சேகரர் வெள்ளி யானை வாகனத்தில் பிரகாரத்தில் வலம் வந்தார். 63 நாயன்மார்கள் பிரகார விழா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    அதன் பின்னர் இரவு பஞ்ச மூர்த்திகள் வெள்ளி ரதத்தில் பிரகார உலா வந்தனர்.

    இதைத்தொடர்ந்து 7-ஆம் திருநாளான இன்று காலை 6.30 மணி முதல் 7.30மணிக்குள் விருச்சிக லக்கனத்தில் விநாயகர் தேர் தேரோட்டம் நடந்தது. கோவில் பிரகாரத்திலேயே தேர் வலம் வந்தது. அதைத் தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் மகா ரதங்களில் எழுந்தருளி பிரகாரத்தில் வலம் வந்தனர்.

    மேளதாளங்கள் முழங்க தேர் அசைந்தாடி வந்தது கண் கொள்ளா காட்சியாக இருந்தது. நிகழ்ச்சியில் கோவில் ஊழியர்கள், உபயதாரர்கள், உள்ளூர் பிரமுகர்கள் பங்கேற்றனர். தேரோட்ட நிகழ்ச்சியில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

    கொரோனா பரவலை தடுக்கும் வகையில் நாளை (17-ந்தேதி) மதியம் 1 மணி முதல் வருகிற 20-ந்தேதி வரை பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்யவும், கிரிவலம் செல்லவும் அனுமதி இல்லை. இதுதொடர்பாக பஸ் நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் ஒலிபெருக்கிகள் மூலம் அறிவிப்பு செய்யப்பட்டு வருகிறது.

    மேலும் பக்தர்கள் தங்களது நகை மற்றும் பணத்தை பத்திரமாக கொண்டு செல்ல வேண்டும் என்றும் போலீசார் சார்பில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் அறிவிப்பு செய்யப்பட்டு வருகிறது.

    தீப விழாவின் உச்ச நிகழ்வாக வருகிற 19-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் சன்னதி முன்பு பரணி தீபம் ஏற்றப்படுகிறது.

    இதைத்தொடர்ந்து மாலை 6 மணிக்கு அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.அப்போது பஞ்சமூர்த்திகள் தங்க ரி‌ஷப வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்கள். அர்த்தநாரீஸ்வரர் நடனமாடியபடி காட்சி தருவார்.

    இந்த நிகழ்ச்சிகளிலும் பக்தர்கள் பங்கேற்க அனுமதி இல்லை.உள்ளூர் பக்தர்கள் கோவில் வெளியிலிருந்து மகா தீபத்தை தரிசனம் செய்யலாம். அவர்கள் மகாதீபமண்டபத்துக்கு செல்ல அனுமதி இல்லை.

    தீபத் திருவிழாவை முன்னிட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ரெட்டி உத்தரவின்பேரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
    Next Story
    ×