என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    சகலமும் அருளும் இந்த தேவியின் சொரூபத்தை மிக அருமையாக விவரிக்கின்றன ஞான நூல்கள். ஸ்ரீபிரத்யங்கிராதேவி ஓங்காரம் எனும் பிரணவ ரூபிணியாக விஸ்வரூபம் கொண்டவள்.
    ஸ்ரீபிரத்யங்கிராதேவி மகா பைரவ பூஜிதா என வணங்கப்படும் சக்தியின் அம்சம் இந்த தேவி. இவளை விரதம் இருந்து வழிபட்டால், எண்ணியது ஈடேறும்; எல்லா நற்காரியங்களிலும் வெற்றி கிடைக்கும் என்கின்றன ஞானநூல்கள். அதேநேரம் அதர்மத்துக்கு ஒருபோதும் துணைபோக மாட்டாள் இந்த சக்தி.

    சகலமும் அருளும் இந்த தேவியின் சொரூபத்தை மிக அருமையாக விவரிக்கின்றன ஞான நூல்கள். ஸ்ரீபிரத்யங்கிராதேவி ஓங்காரம் எனும் பிரணவ ரூபிணியாக விஸ்வரூபம் கொண்டவள்.

    ஒவ்வொன்றிலும் முக்கண்கள் கொண்ட ஆயிரம் சிம்ம முகங்கள், விரிந்த கூந்தல், ஆயிரம் திருக்கரங்களுடன் ராஜசிம்ம வாகனத்தில் வீற்றிருப்பாள். சூலம், முண்டம், சர்ப்பம், பாசம், டமருகம் முதலானவற்றை திருக்கரங்களில் கொண்டு காட்சியளிப்பாள் என்கின்றன புராணங்கள். வேறுசில நூல்கள், பதினாறு கரங்கள் கொண்டவளாகவும் இந்த அன்னையைச் சித்திரிக்கின்றன.

    பில்லிசூன்யம் போன்ற தீவினைகளைப் பொசுக்கும் மாதாவான இந்த தேவியை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் அமாவாசை தினங்களில், விரதம் இருந்து எள்ளு புஷ்பம் கொண்டு அர்ச்சித்து, உரிய மந்திரங்கள் பாராயணம் செய்து வழிபட்டால், சகல தீவினைகளும் நீங்கும். சத்ரு பயம், மனக்கலக்கங்கள் அகலும். எடுத்த நற்காரியங்களில் தடைகள் யாவும் நீங்கி வெற்றி சர்வநிச்சயம் ஆகும்.

    மேலும், 'மகா பிரத்யங்கிராதேவியே போற்றி போற்றி’ என்று எளிய முறையில் துதித்து, பயபக்தியுடனும் பிரத்யங்கிராதேவியை வணங்கி வழிபட்டால், நமது பிரச்சனைகள் யாவும் நீங்கி வாழ்வு செழிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை!
    உத்தமர் கோவில் உற்சவர் புருஷேத்தம பெருமாள் கொள்ளிடம் ஆற்றில் தீர்த்தவாரி கண்டருளினார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாள்களை தரிசனம் செய்தனர்.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான அன்பில் சுந்தர்ராஜ பெருமாள் கோவிலில் மாசிமகத்திருவிழா நடைபெற்று வருகிறது.

    விழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு கோவிலில் இருந்து சுந்தர்ராஜ பெருமாள் புறப்பட்டு உத்தமர்கோவில் மண்டபம் வந்தடைந்தார். இரவு முழுவதும் அங்கு தங்கினார். பின்னர் நேற்று காலை புறப்பட்டு 9 மணிக்கு கொள்ளிடம் ஆற்றிற்கு வந்தார். அங்கு அமைக்கப்பட்டிருந்த அலங்கார பந்தலில் எழுந்தருளி தீர்த்தவாரி கண்டருளினார்.

    பின்னர் சிறப்பு திருவாராதனங்கள் நடைபெற்றன. அங்கு இரவு 9 மணிவரை பக்தர்களுக்கு காட்சியளித்தார். இரவு 9.15 மணிக்கு புறப்பட்டு இன்று (வெள்ளிக்கிழமை) காலை அன்பில் சென்றடைகிறார்.

    இதேபோல, மாசிமகத்தையொட்டி உத்தமர் கோவில் உற்சவர் புருஷேத்தம பெருமாள் கொள்ளிடம் ஆற்றில் நேற்று தீர்த்தவாரி கண்டருளினார். பின்னர் சிறப்பு திருவாராதனங்கள் நடைபெற்றன. அங்கு பக்தர்களுக்கு காட்சியளித்த பின் இரவு அங்கிருந்து புறப்பட்டு கோவில் சென்றடைந்தார். தீர்த்தவாரி நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாள்களை தரிசனம் செய்தனர்.
    கன்னியாகுமரி பகவதி அம்மனுக்கு தங்க ஆபரணங்கள் மற்றும் வைர கிரீடம், வைரக்கல் மூக்குத்தி அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
    பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பவுர்ணமி பூஜை நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய பூஜை, விஸ்வரூப தரிசனம், 5 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம், காலை 6 மணிக்கு தீபாராதனை, 7 மணிக்கு ஸ்ரீ பலி பூஜை, உச்சிகால பூஜை, தீபாராதனை நடந்தது.

    தொடர்ந்து 10 மணிக்கு அம்மனுக்கு எண்ணெய், பால், பன்னீர், இளநீர், தேன், தயிர், பஞ்சாமிர்தம், களபம், சந்தனம், குங்குமம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம், 11 மணிக்கு தங்க ஆபரணங்கள் மற்றும் வைர கிரீடம், வைரக்கல் மூக்குத்தி அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    11.30 மணிக்கு அலங்கார தீபாராதனை, அன்னதானம், மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 8 மணிக்கு சிறப்பு பூஜை, அம்மன் வெள்ளி பல்லக்கில் எழுந்தருளச் செய்து கோவில் பிரகாரத்தை சுற்றி மேளதாளம் முழங்க 3 முறை வலம் வரும் நிகழ்ச்சி, 8.30 மணிக்கு அம்மனுக்கு வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டு, அத்தாழ பூஜை, ஏகாந்த தீபாராதனை ஆகியவை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    துர்க்கை அம்மனை, விரதம் இருந்து ஒவ்வொரு தினத்திலும் குறிப்பிட்ட வேளையில் வழிபாடு செய்து வந்தால், திருமணத் தடையால் அவதிப்படுபவர்கள் அதில் இருந்து விடுபடுவார்கள்.

    துர்க்கை அம்மனை செவ்வாய்க்கிழமைகளில் வழிபாடு செய்வது மிகவும் விசேஷமானதாகும். அதே போல் துர்க்கை அம்மனை, விரதம் இருந்து ஒவ்வொரு தினத்திலும் குறிப்பிட்ட வேளையில் வழிபாடு செய்து வந்தால், திருமணத் தடையால் அவதிப்படுபவர்கள் அதில் இருந்து விடுபடுவார்கள். ஒவ்வொரு கிழமையிலும் துர்க்கையை வழிபட வேண்டிய நேரம் பற்றிய விவரத்தைப் பார்க்கலாம்.

    ஞாயிறு: துர்க்கை சன்னிதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள், புதிய வெள்ளைத்துணியில் திரி செய்து விளக்கேற்றி வழிபட வேண்டும். மேலும் சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் செய்ய வேண் டும். இதனால் குடும்பத்தில் வறுமை நீங்கி, செல்வம் பெருகி எல்லா நலன்களும் உண்டாகும்.

    திங்கள்: திங்கட்கிழமைகளில் காலை 7.30 மணி முதல் 9 மணிக்குள், துர்க்கைக்கு வெண்ணெய் காப்பு செய்து வெண் பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும். இதனால் மூட்டு சம்பந்தமான நோய் நீங்கும். மேலும் வெளிநாட்டில் கல்வி பயில வாய்ப்பு கிடைக்கும்.

    செவ்வாய்: ராகு கால நேரமான மாலை 3 மணி முதல் 4.30 மணிக்குள் வடக்கு முகமாக தீபமேற்றி, தக்காளி சாதம் நைவேத்தியம் செய்து துர்க்கையை வழிபட வேண்டும். இதனால் மாங்கல்ய பலமும், குழந்தை பாக்கியமும் கிடைக்கும்.

    புதன்: மதியம் 12 மணி முதல் 1.30 மணிக்குள் பஞ்சில் திரிசெய்து விளக்கேற்றி, புளியோதரை நைவேத்தியம் செய்து துர்க்கையை வழிபட வேண்டும். இதனால் பதவி உயர்வு கிடைக்கும். மேலும் ரத்த சம்பந்தமான நோய் ஏதாவது இருந்தால் நீங்கும்.

    வியாழன்: வியாழக்கிழமைகளில் மதியம் 1.30 மணி முதல் 3 மணிக்குள் விளக்கேற்றி, எலுமிச்சம் பழம் சாதம் நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும். இதனால் வியாபாரிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும். மேலும் இதய சம்பந்தமான நோய்கள் நீங்கும்.

    வெள்ளி: வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து ராகுகால நேரமான காலை 10.30 மணி முதல் 12 மணிக்குள் துர்க்கையை வழிபட வேண்டும். இது மற்ற நாட்களை விட மிகவும் ஏற்றம் தரும் காலம் ஆகும். எலுமிச்சம்பழத்தை பிழிந்து விட்டு, அதை குழிவாகச் செய்து, நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி, பஞ்சில் திரியிட்டு தீபம் ஏற்ற வேண்டும். தேங்காய் சாதம் அல்லது பாயசம் நைவேத்தியமாக படைக்க வேண்டும். இதனால் தீராத துன்பம் தீரும். மாங்கல்ய பலம் பெருகும்.

    சனி: சனிக்கிழமை காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் மஞ்சள் துணி திரியில் விளக்கேற்றி, காய்கறி கலந்த அன்னத்தை நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும். இதனால் வேலைவாய்ப்பு கிட்டும், அரசியல்வாதிகள் ஏற்றம் பெறுவர், சிறுநீரக கோளாறு நீங்கும்.
    வாழ்க்கை, எதிரிகள், வாட்டி வதைக்கும் நோய் மற்றும் வறுமை என எதுபற்றிய பயமாக இருந்தாலும், அது நீங்க, பைரவரை தரிசித்து வந்தால் போதுமானது. பயத்தைப் போக்குபவராக பைரவர் திகழ்கிறார்.
    சிவாலயங்கள் தோறும் வீற்றிருப்பவர், காலபைரவர். இவரை வழிபடாது, சிவ வழிபாடு பூர்த்தியடையாது என்பது குறிப்பிடத்தக்கது. எந்த ஆலயத்திற்குச் சென்றாலும், முதலில் விநாயகப்பெருமானை வழிபட்டு ஆலயத்திற்குள் நுழைய வேண்டும் என்பது ஐதீகம். அதே போல் சிவாலயங்கள் சென்று வழிபடும் போது, இறுதியாக காலபைரவரை தரிசிக்காமல் வரக்கூடாது. ஒவ்வொரு சிவாலயத்தின் பாதுகாவலராகவும் இந்த பைரவமூர்த்தியே இருக்கிறார். வாழ்க்கை, எதிரிகள், வாட்டி வதைக்கும் நோய் மற்றும் வறுமை என எதுபற்றிய பயமாக இருந்தாலும், அது நீங்க, பைரவரை தரிசித்து வந்தால் போதுமானது. பயத்தைப் போக்குபவராக பைரவர் திகழ்கிறார்.

    சிவபெருமானின் 64 திருவடிவங்களில் முக்கியமானவராக, பைரவர் திகழ்கிறார். இவர் பிரம்மாவின் ஆணவத்தை அகற்றுவதற்காக, சிவபெருமானால் தன்னுடைய அம்சமாக தோற்றுவிக்கப்பட்டவர். இவர் தோன்றிய தினமாக, கார்த்திகை மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமி குறிப்பிடப்படுகிறது. பைரவரை வழிபட தேய்பிறை அஷ்டமி சிறப்புக்குரிய நாள் என்றாலும், கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி, அவரது ஜென்மாஷ்டமியாகவும் வருவதால், இது ‘காலபைரவ அஷ்டமி’யாக கொண்டாடப்படுகிறது.

    12 ராசிகள் மற்றும் 27 நட்சத்திரங்களை தனக்குள் அடக்கி வைத்திருக்கும் பைரவ மூர்த்தியை, காலபைரவ அஷ்டமி அன்று, திருமகளின் எட்டு வடிவங்களுமான ‘அஷ்ட லட்சுமி’களும் வணங்குவதாக ஐதீகம். காலத்தின் கடவுளாக பார்க்கப்படும் பைரவர், தன்னை வணங்குபவர்களின் தலைவிதியை மாற்றும் சக்தி படைத்தவர். எனவே அவரை காலபைரவ அஷ்டமி அன்று, வில்வம் அல்லது செவ்வரளி மாலை சூட்டி வழிபடலாம். அதோடு நல்லெண்ணெய் தீபம் ஏற்றியும், விபூதியால் அபிஷேகம் செய்தும் வணங்கலாம். பைரவருக்கு தேங்காயில் தீபம் ஏற்றுவது மிகவும் விஷேசம். தேங்காயை இரண்டாக உடைக்கும்போது, அதில் மூன்று கண் இருக்கும் பகுதியில் 5 விதமான எண்ணெய்களை ஊற்றி தீபமிடுவது சிறப்பான பலனை பெற்றுத்தரும்.

    ஒரு முறை தாருகாவனத்தில் வசித்து வந்த முனிவர்கள், ஆணவத்தின் காரணமாக ஈசனையே அழிக்க எண்ணினர். அப்போது பிட்சாடனராக வந்த சிவபெருமான், தனக்குள் இருந்த கால அக்னியைக் கொண்டு, தாருகாவனத்தை அழித்தார். இதனால் உலகம் முழுவதும் இருள் சூழ்ந்தது. சூரியன் கூட தோன்றவில்லை. அப்போது பைரவமூர்த்தியே, எட்டு திசைகளிலும் தோன்றி ஒளியை உண்டாக்கியதாக சொல்லப்படுகிறது. அப்படி அவர் எட்டு திசைகளிலும் தோன்றிய வடிவங்களை ‘அஷ்ட பைரவர்’களாக வழிபட்டு வருகிறோம்.

    ருரு பைரவர், சண்ட பைரவர், குரோதன பைரவர், உன்மத்த பைரவர், சம்ஹார பைரவர், பீட்சன பைரவர், கபால பைரவர், கால பைரவர் ஆகியோரே அந்த எட்டு பைரவர்கள் ஆவர். பொதுவாக பைரவருக்கு நாய் தான் வாகனமாக இருக்கும். ஆனால் அஷ்ட பைரவர்களுக்கும், அன்னம், யானை, குதிரை என்று எட்டு விதமான விலங்குகள் வாகனங்களாக உள்ளன.
    ஆணவம் கொண்டவர்களை அடக்கும் ஆதிசக்தியின் அம்சமாக இந்தத் தாய் விளங்குகிறாள். இந்த தேவியை வழிபாடு செய்தால், வழக்குகளில் வெற்றி காணலாம்.
    இந்த அன்னை, அதிகாலை சூரியனைப் போல ஜொலிப்பவள். ஐந்து முகம் கொண்ட இவள், பட்டாடை அணிந்து, கண்களைக் கவரும் ஒளி பொருந்திய மகுடமும், நெற்றியில் பிறை நிலவும் சூடியிருப்பாள். திருக்கரங்களில் சங்கு, சக்கரம், பாசம், அங்குசம், வாள், கேடயம், வில், அம்பு, மாதுளம் கனி, அல்லி மலர் ஆகியவற்றை ஏந்தி, வலது காலை மடித்து வைத்தும் இடதுகாலைத் தொங்கவிட்டு, அதை தாமரை மலரில் வைத்திருக்கும் தோற்றத்துடனும் காணப்படுகிறாள்.

    சுகாசனத்தில் அமர்ந்துள்ள இந்த அம்பிகையை போரில் வெற்றி பெற தியானம் செய்வது வழக்கம். புலியின் மீது அமர்ந்துள்ள எண்ணற்ற சக்திகள் இவளைச் சுற்றிலும் எப்போதும் இருப்பார்கள். ஆணவம் கொண்டவர்களை அடக்கும் ஆதிசக்தியின் அம்சமாக இந்தத் தாய் விளங்குகிறாள். இந்த தேவியை வழிபாடு செய்தால், வழக்குகளில் வெற்றி காணலாம். கலைகளில் தேர்ச்சி பெறலாம்.

    வழிபட வேண்டிய திதிகள்:-

    வளர்பிறை துவாதசி, தேய்பிறை சதுர்த்தி.

    மந்திரம்:-

    ஓம் விஜயா தேவ்யை வித்மஹே
    மஹா நித்யாயை தீமஹி
    தன்னோ தேவி ப்ரசோதயாத்
    புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் விஷ்ணு துர்க்கை அம்மனுக்கு சந்தனக்காப்பு மற்றும் உற்சவ அம்மன் ஊஞ்சல் சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    தஞ்சையை அடுத்துள்ளது புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில். இந்த கோவில் இந்து சமயஅறநிலையத்துறைக்கு சொந்தமானது. உள்ளுர் பக்தர்கள் மட்டும் இன்றி வெளியூர் பக்தர்களும் ஏராளமானோர் வந்து செல்வார்கள். இந்த கோவிலில் ஆவணி திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.மாசிமகத்தையொட்டி முத்து மாரியம்மன் கோவில் சுக்ரவார வழிபாட்டுக்குழு சார்பில் 16-வது ஆண்டாக 1008 பால்குட ஊர்வலம் நேற்று நடைபெற்றது.

    பால் குட ஊர்வலம் கைலாச நாதர் கோவிலில் இருந்து தொடங்கியது. பால்குட ஊர்வலத்தை சுக்ரவார வழிபாட்டு குழு தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார் தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து பக்தர்கள் 1008 பால்குடத்தை ஊர்வலமாக எடுத்து கோவிலை சுற்றி வந்தனர். பின்னர் அம்மனுக்கு பால் அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து விடையாற்றி விழா மாலையில் நடைபெற்றது.

    இதில் விஷ்ணு துர்க்கை அம்மனுக்கு சந்தனக்காப்பு மற்றும் உற்சவ அம்மன் ஊஞ்சல் சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.விழாவில் சுக்ரவார வழிபாட்டுக்குழு செயலாளர் வேல்சாமி, பொருளாளர் துரைராஜன், துணை பொருளாளர் ராமகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர்கள் முருகன், பிரபு, சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    மதுரை மன்னர் திருமலை நாயக்கர் தனது ஆட்சிக் காலத்தில் இத்திருத்தலத்திற்கு வந்து மூலவர்-தாயார் சன்னதிகளையும் மதில், தேர் திருப்பணியும், செய்ததாக வரலாறு கூறுகிறது.
    கோவை மாவட்டம் காரமடையில் பிரசித்தி பெற்ற அரங்கநாதர் கோவில் உள்ளது. லிங்க வடிவில் சுயம்புவாக உள்ள அரங்கன் இங்கு மூலவராக அருள்பாலிக்கிறார். காரமடையில் முன்பு காரை செடிகளும், தண்ணீர் மடைகளும் ஆங்காங்கே இருந்ததால் காரைமடை என்று பெயர் பெற்று, பிறகு மருவி காரமடை என ஆனது. காரை புதர்கள் நிறைந்து இருந்ததால் புற்களும் நிறைந்து இருந்தது.

    அப்போது எர்ற கொல்ல தொட்டியர்கள் பசுக்களை இங்கு ஓட்டி வந்து மேய்த்துவிட்டு பால் கறப்பது வழக்கம். இப்பசுக்களில் பால் கொடுக்கும் காறாம் பசு ஒன்று மாலையில் வீடு திரும்பும்போது மடி வற்றி பால் இல்லாமல் இருப்பதை வெகு நாட்கள் கவனித்து வந்த தொட்டிய நாயக்கர் பசு மீது சந்தேகம் கொண்டு ஒரு நாள் பசு மேய்கிற இடத்திற்கு சென்றார். அந்த பசு காரை புதரில் பாலை சுரந்து கொண்டிருந்தது. பசு புதருக்கு பால் கொடுக்கிறதே என்ன ஆச்சரியம் என்று எண்ணி, கையில் வைத்திருந்த கொடுவாளை கொண்டு அவர் புதரை வெட்டினார். அப்போது புதரிலிருந்து ரத்தம் பீறிட்டு வந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தொட்டிய நாயக்கர் மயங்கி கிழே விழுந்து விட்டார். பசுக்கள் மட்டும் வீடு திரும்பி விட்டன.

    காலையில் சென்ற தொட்டிய நாயக்கர் இரவு ஆகியும் வீடு திரும்பவில்லை என்பதை அறிந்த உறவினர்கள் இருட்டில் போவதற்கு துணிகளை பந்தமாக கட்டி எண்ணை ஊற்றி தீப்பந்தங்களை பற்றவைத்து கொண்டு மிருகங்கள் இருட்டில் பக்கத்தில் வராமல் இருக்க பறையடித்து கொண்டும், சத்தமிட்டுக் கொண்டும் காரை வனத்திற்குள் தேடினார்கள்.

    அப்போது அங்கு இருந்த புதரில் ரத்தம் பீறிட்ட இடத்தில் சிவப்பாக மடைபோல் காட்சி அளித்தது. மயக்கம் தெளிந்த தொட்டிய நாயக்கர் நடந்தவற்றை எல்லாம் கூறினார். மற்றவர்கள் புதரை விலக்கி, தீப்பந்த வெளிச்சத்தில் பார்த்த போது சுயம்பு லிங்கம் வெட்டப்பட்டு இருந்தது தெரியவந்தது.

    அப்போது அங்கு இருந்த தொட்டிய நாயக்கர்களில் ஒருவருக்கு அருள் வந்து ஆடி “நான் தான் அரங் கன், எனக்கு தான் பசு பாலை சுரந்து கொடுத் தது. என்னுடைய இடத் தை சுத்தம் செய்து கோவில் கட்டி வணங்குங் கள்” என்று கூற நின்றிருந்த தொட்டிய நாயக் கர்கள் தோல் பைகளில் தண்ணீர் கொ ண்டு வந்து இறை வன் மீது ஊற்றி பச்சை பந்தல் போட்டு வணங்கினர். வெட்டப்பட்ட அடையாளம் இப்போதும் மூலவரின் மேல் பக்கத்தில் உள்ளதை பார்க்கலாம்.

    பின் பட்டர் வம்சத்தினர் தொட்டிய நாயக்கர்களுக்கு உதவியாய் இருந்து அரங்கனின் பெருமையை கூறினர். அதன் பின்னர் மதுரை மன்னர் திருமலை நாயக்கர் தனது ஆட்சிக் காலத்தில் இத்திருத்தலத்திற்கு வந்து மூலவர்-தாயார் சன்னதிகளையும் மதில், தேர் திருப்பணியும், செய்ததாக வரலாறு கூறுகிறது. இங்கு பல கல்கார வேலைகளிலும், இத்திருக்கோவிலுக்கான மண்டபங்களிலும், தெப்பக்குள படிக்கட்டுகளிலும் மீன் சிற்பங்கள் இருப்பது மதுரை மன்னரால் கட்டப்பட்டது என்பதற்கு சாட்சியாகும்.
    மாசி மகம் தெப்ப உற்சவத்தையொட்டி மதுரை கூடலழகர் பெருமாள் டவுன்ஹால் ரோடு தெப்பக்குளத்தில் எழுந்தருளினார். அதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
    கூடலழகர் பெருமாள் கோவில் மாசி திருவிழா மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே அமைந்துள்ள கூடலழகர் பெருமாள் கோவில் மாசிமகம் திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. கூடலழகர் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    விழாவில் தெப்பத்திருவிழாவையொட்டி பல்லக்கில் முட்டுத் தள்ளுதல் நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதை யொட்டி கூடலழகர் பெருமாள் கோவிலில் இருந்து புறப் பாடாகி டவுன்ஹால் ரோட்டில் உள்ள தெப்பக்குளத்தில் எழுந்தருளினார். அங்கு பல்லக்கில் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    மேலும் விழாவின் சிகர நிகழ்ச்சியான மாசி மகம் தெப்ப உற்சவம் நேற்று இரவு நடந்தது. இதற்காக டவுன்ஹால் ரோட்டில் உள்ள தெப்பக்குளத்தை சுற்றிலும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. பின்னர் கூடலழகர் பெருமாள் தங்க சிவிக்கையில் உபய நாச்சியாருடன் நேற்று மாலை கோவிலில் இருந்து தெப்பத்திற்கு வந்தடைந்தார்.

    அங்கு இரவு 7 மணிக்கு தெப்பம் சுற்றுதல் நடந்தது. அப்போது அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் பெருமாள், அம்பாளுடன் தெப்பக்குளத்திற்குள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் கோவில் உதவி ஆணையர்கள் அனிதா, விஜயன், கோவில் மழைநீர் சேகரிப்பு கமிட்டி தலைவர் சுந்தரம் ஆகியோர் தலைமை தாங்கினர். மதுரை மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் குமரதுரை முன்னிலை வகித்தார். ஜெயபிரபா ஜூவல்லர்ஸ், காவேரி மகால் உரிமையாளர் கே.வி.கே.ஆர்.பிரபாகரன் வரவேற்றார். திடீர்நகர் போலீஸ் உதவி கமிஷனர் ரவீந்திரபிரகாஷ் விழாவை தொடங்கி வைத்தார். மாநகராட்சி தெற்கு மண்டல அதிகாரி தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று இரவு சுவாமி அம்பாள் தனித்தனி மலர் கேடய சப்பரத்தில் எழுந்தருளி வீதிஉலா நடைபெற்று விழா நிறைவு பெறுகிறது.
    முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித் திருவிழா கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவில் ஒவ்வொரு நாளும் சுவாமியும், அம்பாளும் 4 ரதவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

    சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 10-ம் திரு விழாவான நேற்று முன்தினம் நடைபெற்றது. 11-ம் திருவிழாவான நேற்று இரவு தெப்ப உற்சவம் நடைபெற்றது.

    இதை முன்னிட்டு தெப்பக்குளம் அருகில் உள்ள நெல்லை நகரத்தார் மண்டபத்தில் சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்று சுவாமி அம்பாளுடன் தெப்பத்தில் 11 முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    12-ம் திருவிழா நிறைவு நாளான இன்று மாலை 4.30 மணிக்கு சுவாமி அம்பாள் மஞ்சள் நீராட்டு திருக்கோலத்துடன் 4 ரத வீதிகள் வழியாக வலம் வந்து 12-ம் திருவிழா மண்டபம் சேர்கின்றனர்.

    பின்னர் இரவு 9 மணிக்கு சுவாமி அம்பாள் தனித்தனி மலர் கேடய சப்பரத்தில் எழுந்தருளி வீதிஉலா நடைபெற்று விழா நிறைவு பெறுகிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா. கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பொறுப்பு குமரதுரை மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.
    ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருகிற 24-ந் தேதி மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா தொடங்குகிறது. மாடவீதிகளில் வீதி உலா நடத்த அனுமதி அளித்துள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    சித்தூர் மாவட்டம் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோவிலில் மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா வருகிற 24-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் (மார்ச்) 9-ந் தேதி வரை 14 நாட்கள் நடக்கிறது. கொரோனா கட்டுப்பாடுகள் இன்றி வழக்கம் போல் நடத்துவதற்கு மாநில அறநிலையத் துறை அனுமதி அளித்துள்ளது.

    கொரோனா தொற்று அதிகமாக இருந்து வந்த நிலையில் நான்கு மாடவீதிகளில் சாமி வீதிஉலா நடக்குமா? என கோவில் அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் கடந்த சில நாட்களாக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த நிலையில் உற்சவ மூர்த்திகளை 4 மாட வீதிகளில் ஊர்வலம் நடத்த அனுமதி அளித்ததால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    மேலும் மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ஏற்பாடுகளும் மும்முரமாக நடந்து வருகிறது. கோவில் வளாகத்தில் உள்ள அனைத்து கோபுரங்களுக்கும் வர்ணங்கள் பூசுவது, தேர் திருவிழாவையொட்டி ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர், ஞானபிரசுனாம்பிகை தாயாரின் தேர்களை பழுது பார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. மகாசிவராத்திரியன்று பக்தர்கள் எந்த வித இடையூறும் இன்றி சாமி தரிசனம் செய்திட கோவிலுக்குள் கூடுதல் வசதிகளை செய்து வருகின்றனர்.

    வருகிற 28-ந் தேதி அரசு சார்பில் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரருக்கு பட்டு வஸ்திரங்களை சமர்ப்பிக்க உள்ளனர். மேலும் மகா சிவராத்திரி பிரம்மோற்சவத்தையொட்டி கோவில் அருகில் உள்ள கலை அரங்கத்தில் கலை நிகழ்ச்சிகள் நடத்தவும் ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.
    தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல பேராயர் தேவசகாயம் தலைமையில் பிரதிஷ்டை பண்டிகை ஆராதனை, எலியட் டக்ஸ்போர்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள கனம் ரேனியஸ் சிற்றாலயத்தில் திருவிருந்து ஆராதனை நடந்தது.
    மெஞ்ஞானபுரம் பரிசுத்த பவுலின் ஆலய 175-வது பிரதிஷ்டை மற்றும் அசன விழா கடந்த 8-ந்தேதி ஐ.எம்.எஸ். கலை நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழா நாட்களில் கிறிஸ்தவ இன்னிசை நிகழ்ச்சி, நற்செய்தி கூட்டங்கள், திடப்படுத்தல் ஆராதனை, பாகவதர் கிளமெண்ட் வேதநாயகம் சாஸ்திரியாரின் பஜனை பிரசங்கம், ஸ்தாபனங்களின் கலைநிகழ்ச்சி போன்றவை நடைபெற்றது.

    நேற்று முன்தினம் தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல பேராயர் தேவசகாயம் தலைமையில் பிரதிஷ்டை பண்டிகை ஆராதனை, எலியட் டக்ஸ்போர்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள கனம் ரேனியஸ் சிற்றாலயத்தில் திருவிருந்து ஆராதனை நடந்தது.

    தொடர்ந்து அசன வைபவ மங்களகால் நடப்பட்டது. மாலையில் பரிசுத்த ஞானஸ்நான ஆராதனை, ஆயத்த பண்டிகை ஆராதனையை கன்னியாகுமரி திருமண்டல பேராயர் செல்லையா நடத்தினார். தொடர்ந்து ஆலய 175-வது ஆண்டு சிறப்பு மலரை வெளியிட்டார்.

    விழாவின் சிகர நாளான நேற்று அதிகாலை 3.30 மணிக்கு ஆலய பிரதிஷ்டை பண்டிகை ஆராதனை நடந்தது. நெல்லை திருமண்டல பேராயர் பர்னபாஸ் தேவ செய்தி வழங்கினார். காலையில் ஜான் தாமஸ் ஐயர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அசனத்துக்கு உலை ஏற்றப்பட்டது. மதியம் 3 மணியளவில் அசன விழா தொடங்கியது.

    பின்னர் நள்ளிரவு வரையிலும் பல ஆயிரக்கணக்கானவர்களுக்கு அசன உணவு வழங்கப்பட்டது. தொடர்ந்து வாணவேடிக்கை நடந்தது.

    விழா ஏற்பாடுகளை மெஞ்ஞானபுரம் பொது மகமை சங்க தலைவர் ஜெயபோஸ், துணை தலைவர் ஜெரால்டு ஜான்சன், செயலாளர் நவமணி ராபர்ட், இணை செயலாளர் செல்வின், பொருளாளர் சொர்ணராஜ், தலைமை குருவானவர் கோல்டுவின், உதவி குருவானவர் ஐசக்துரை ஜோயல், திருப்பணிவிடையாளர் எட்வின் ஜெபராஜ், சபை ஊழியர் பிளசிங் ஜிம்ரோஸ் மற்றும் சபை மக்கள் செய்து இருந்தனர்.

    ×