என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • ஹிரானி அனைத்து வயதினரும் கொண்டாடும் படங்களை தொடர்ந்து வழங்கி வந்துள்ளார்.
    • டங்கியில் பூமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் நடித்துள்ளனர்.

    மக்களின் இதயங்களைத் தொடும் அழகான சினிமாவை தொடர்ந்து வழங்கியவர், திரையுலக மாஸ்டர் கதாசிரியரான இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். பார்வையாளர்களின் மனதில் நீங்காத அளவில், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் படங்களை வழங்கி, பிளாக்பஸ்டர் வெற்றிச்சாதனையையும் படைத்துள்ளார்.

    'சஞ்சு,' 'பிகே,' '3 இடியட்ஸ்,' போன்ற கிளாசிக் படங்கள் மற்றும் அனைவரும் கொண்டாடிய 'முன்னா பாய்' என, ஹிரானி அனைத்து வயதினரும் எப்போதும் கொண்டாடும் படங்களை தொடர்ந்து வழங்கி வந்துள்ளார். இப்போது, ஷாருக்கானுடன் 'டங்கி' மூலம் முதல் முறையாக இணைந்திருக்கும் அவர் மீண்டும் திரையில் மாயாஜாலத்தை நிகழ்த்தவுள்ளார்.

    ஷாருக்கானுடன், பூமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் உள்ளிட்ட நட்சத்திரக் குழுவைக் கொண்ட 'டங்கி' திரைப்படத்தில் நகைச்சுவை, இதயம் வருடும் அழகான அனுபவம் என மீண்டும் திரையில் ஒரு காவியத்தை காட்டவுள்ளது.

    இத்திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் ராஜ்குமார் ஹிரானி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. ராஜ்குமார் ஹிரானி மற்றும் கௌரி கான் இணைந்து தயாரித்துள்ளனர். அபிஜத் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி மற்றும் கனிகா தில்லான் இணைந்து எழுதியுள்ள, "டங்கி" திரைப்படம் அடுத்த மாதம் வெளியிடப்பட உள்ளது.

    • கேப்டன் மில்லர் படத்தில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சசிஷ் நடித்துள்ளனர்.
    • இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்துள்ளார். வரலாற்று பாணியில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    இந்த நிலையில், கேப்டன் மில்லர் படத்தின் அப்டேட்டை படக்குழு வெளியிட்டு உள்ளது. அதன்படி இந்த படத்தின் முதல் பாடல் "கில்லர் கில்லர்" நவம்பர் 22-ம் தேதி வெளியிடப்பட்டும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஜி.வி. பிரகாஷ் இசையில் வெளியாக இருக்கும் பாடலுக்கு ஏற்கனவே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    • மன்சூர் அலிகான் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
    • இவருக்கு திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான 'லியோ' திரைப்படத்தில் நடிகர் மன்சூர் அலிகான் நடித்திருந்தார். இவர் சமீபத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், திரிஷா குறித்து ஆபாசமாக பேசினார். மன்சூர் அலிகானின் சர்ச்சை பேச்சின் வீடியோ இணையத்தில் வைரலானது.

    மன்சூர் அலிகானின் இந்த பேச்சுக்கு நடிகை திரிஷா கடும் கண்டனத்தை பதிவு செய்தார். தொடர்ந்து, மன்சூர் அலிகானின் இந்த சர்ச்சை பேச்சுக்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், நடிகர் சாந்தனு, பாடகி சின்மயி, நடிகை மாளவிகா மோகனன் உள்ளிட்டோரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.


    இந்த சர்ச்சைக்கு விளக்கமளித்த நடிகர் மன்சூர் அலிகான், "உண்மையில திரிஷாவை உயர்வாத்தான் சொல்லிருப்பேன். திரிஷாட்ட தப்பா வீடியோவ காட்டிருக்காங்க. அய்யா என்கூட நடிச்சவங்கள்ளாம் எம்எல்ஏ., எம்.பி., மந்திரின்னு ஆயிட்டாங்க பல கதாநாயகிகள். பெரிய தொழில் அதிபர்கள கட்டிட்டு செட்டில் ஆகிட்டாங்க. நான் எப்பவும் சக நடிகைகளுக்கு ரொம்ப மரியாத குடுக்கறவன் எல்லாருக்கும் தெரியும் சில சொம்பு தூக்கிகளோட பருப்பெல்லாம் என்ட்ட வேகாது. திரிஷாட்ட தப்பா கட் பண்ணி காமிச்சு கோபப்பட வச்சுருக்காங்கண்ணு தெரியுது உலகத்துல எத்தனயோ பிரச்சின இருக்கு... பொழப்ப பாருங்கப்பா.." என்று கூறியிருந்தார்.

    அதுமட்டுமல்லாமல், தேசிய மகளிர் ஆணையமானது நடிகர் மன்சூர் அலிகான் மீது தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. சட்டப்பிரிவு 509 மற்றும் இது தொடர்பான இதர பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


    திரையரங்க உரிமையாளர் சங்கம் அறிக்கை

    இந்நிலையில், மன்சூர் அலிகானுக்கு திரையரங்க உரிமையாளர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்திய பேச்சு எமது சங்கத்தின் சார்பாக கடுமையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன். நடிகர் சங்கம் எடுக்கும் முடிவுக்கு முழு ஒத்துழைப்பு தருவோம் என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளது. 

    • நடிகை ராதாவின் மகள் கார்த்திகா.
    • இவர் 'கோ' என்ற படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

    80 கால கட்டத்தில் ரஜினி, கமல் மற்றும் பல நடிகர்களுக்கு கதாநாயகியாக நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் ராதா. மும்பை தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு கார்த்திகா, துளசி என்ற மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.


    கார்த்திகா 'கோ' என்ற படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். தொடர்ந்து சில படங்களில் நடித்து வந்த கார்த்திகா போதிய பட வாய்ப்புகள் வராததால் தந்தையுடன் பிசினசில் ஈடுபட்டு வந்தார்.


    இதையடுத்து கார்த்திகாவுக்கும், ரோகித் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் கார்த்திகா வெளியிட்டு உன்னை சந்திக்க வேண்டும் என்று விதி எழுதப்பட்டு உள்ளது. உன்னை விரும்பியது மேஜிக்காக நிகழ்ந்தது. உன்னுடன் இணைந்து பயணிப்பதற்கான கவுண்டவுன் தொடங்கி விட்டது என்று பதிவிட்டிருந்தார்.



    நேற்று கார்த்திகா-ரோகித் திருமணம் திருவனந்தபுரத்தில் ராதாவுக்கு சொந்தமான ஓட்டலில் நடந்தது. விழாவில் நடிகர் சிரஞ்சீவி, மோகன்லால் ஆகியோர் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். மேலும், நடிகைகள் ராதிகா, ரேவதி, சுஹாசினி, கவுசல்யா உள்பட ஏராளமான நடிகர்-நடிகைகள் கலந்து கொண்டனர்.

    திருமண விழாவில் பங்கேற்ற விருந்தினர்களை ராதாவின் சகோதரியும், நடிகையுமான அம்பிகா மற்றும் குடும்பத்தினர் வரவேற்றனர்.


    • நடிகர் ஜோஜு ஜார்ஜ் ‘பனி’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
    • இப்படத்தின் மூலம் இவர் இயக்குனராக அறிமுகமாகிறார்.

    sமலையாளத்தில் பிரபல நடிகரான ஜோஜு ஜார்ஜ், தமிழில் தனுசுடன் ஜெகமே தந்திரம், பபூன் ஆகிய படங்களில் நடித்து கவனம் பெற்றார். இவர் தற்போது 'பனி' என்ற படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகுகிறார். இதில், அபிநயா, சீமா, சாந்தினி ஸ்ரீதரன், அபயா ஹிரண்மயி, ஆபிரகாம் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும், 'குணா', 'மின்சார கனவு', 'அன்பே ஆருயிரே' போன்ற படங்களில் ஒளிப்பதிவாளராக இருந்த பிரபல ஒளிப்பதிவாளர் வேணு இதில் பணியாற்றி வந்தார்.


    இப்படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பில் ஒளிப்பதிவாளர் வேணு அநாகரிகமாக நடந்து கொண்டதாகவும் இதனால் ஜோஜு ஜார்ஜுக்கும் வேணுவுக்கும் இடையில் பிரச்சனை ஏற்பட்டு இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாகவும் தகவல் வெளியானது. அதுமட்டுமல்லாமல், வேணுவை நீக்கிவிட்டு வேறொரு ஒளிப்பதிவாளரை வைத்து படத்தைத் ஜோஜு ஜார்ஜ் தொடங்கியுள்ளதாகவும் கூறப்பட்டது.

    இந்நிலையில், இது முற்றிலும் வதந்தி என ஜோஜு ஜார்ஜ் கூறியுள்ளார். அதாவது, "மலையாள சினிமாவில் நான் மதிக்கும் பல நபர்களில் வேணுவும் ஒருவர். நாங்கள் அவரை நீக்கவில்லை. அவராகதான் சென்றார். இன்றும் அவர் மீது எனக்கு அதே மரியாதை உள்ளது. இந்த படத்தை இயக்க சொன்னதே வேணு சார் தான். தயவு செய்து இது மாதிரியான வதந்திகளை பரப்ப வேண்டாம்" என்று கூறியுள்ளார்.

    • ரன்பீர் கபூர் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் 'அனிமல்' திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படம் வருகிற டிசம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    பாலிவுட்டின் பிரபல நடிகரான ரன்பீர் கபூர் தற்போது 'அர்ஜுன் ரெட்டி', 'கபீர் சிங்' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் 'அனிமல்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்த படத்தில் அனில் கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.


    பூஷன் குமார் மற்றும் பிரணவ் ரெட்டி வங்கா இணைந்து டி சீரிஸ் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் மூலம் இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படம் வருகிற டிசம்பர் 1-ஆம் தேதி இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.


    அனிமல் டிரைலர்

    இந்நிலையில், 'அனிமல்' படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படத்தின் டிரைலர் வருகிற 23-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக இயக்குனர் தனது சமூக வலைதளத்தில் போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளார்.


    • கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘ஜிகர்தண்டா 2’.
    • இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    'ஜிகர்தண்டா' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவானது. தீபாவளியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

    கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


    இந்நிலையில், சீமான் இப்படத்திற்கு வாழ்த்து தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்!

    பூர்வகுடி மக்களின் வலிமிகுந்த வாழ்வியல் காவியம்!

    அன்புத்தம்பி கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், தம்பிகள் எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ் ஆகியோர் இரு கதாநாயகர்களாக நடித்து வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' திரைப்படத்தின் சிறப்புக் காட்சியைக் கண்டு களித்தேன்.

    உலகெங்கும் பூர்வகுடி மக்கள் அன்றாடம் சந்தித்து வரும் மிக முக்கிய வாழ்வியல் சிக்கலை கதைக்களமாக கொண்டு, தற்காலச் சூழலில் சொல்லப்பட வேண்டிய மிக அழுத்தமான கருத்தினை மிக அழகாக திரையில் காட்சிப்படுத்தியுள்ளார் தம்பி கார்த்திக் சுப்புராஜ்.

    'நீரின்றி அமையாது உலகு' என்று வள்ளுவப் பெருந்தகை கூறியது எந்த அளவிற்கு உண்மையோ, காடின்றி அமையாது நாடு என்பதும் அதே அளவிற்கு உண்மை. அதனாலேயே மற்றொரு குறளில் "மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடையது அரண்" என்கிறார். அந்த வகையில் காடு மனிதர்களுக்கு மட்டுமல்ல, அனைத்து உயிர்களுக்கும் மிக முக்கியமானது என்பதனை இத்திரைப்படம் வலியுறுத்துகிறது. அங்கு வாழும் பழங்குடி மக்களின் வாழ்வியலை அழுத்தமான உரையாடல்களோடு இத்திரைப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது மிகச்சிறப்பானது.

    யானைகள் இல்லாமல் காடு இல்லை! காடு இல்லாமல் நாடு இல்லை! என்பவை போகிற போக்கில் சொல்லிவிட்டு போகிற செய்தியல்ல; மிகப்பெரிய புவியியல் உண்மையாகும். நாம் வாழும் பூமி 70 விழுக்காடு நீரால் சூழப்பட்டுள்ளது. 30 விழுக்காடுதான் நிலத்தால் ஆனது. அதில் பெரும்பகுதி காடுகள்தான். மனிதர்கள் நாம்தான் சமூக விலங்காக மாறிவிட்டோம். ஆனால் கோடிக்கணக்கான உயிரினங்கள் இன்றளவும் காடுகளை நம்பியே வாழ்கின்றன. அத்தகைய அதிமுக்கியத்துவம் வாய்ந்த பல்லுயிர்ப் பெருக்க வாழ்விடமாக விளங்கக்கூடிய வனங்களையும், அதன் வளங்களையும் அழித்தொழிப்பதென்பது எத்தகைய பேராபத்தினை ஏற்படுத்தும் என்பதை மிக ஆழமாக பதிவுசெய்யுள்ளர் தம்பி கார்த்திக் சுப்புராஜ்.


    இதை வெறும் படம் என்று கூறிவிட முடியாது. நம் அனைவருக்குமான பாடம். நாம் காட்டுவாசி, ஆதிவாசி என்றெல்லாம் வாய்மொழியாக கூறிவிடுகிறோம். உண்மையில் அவர்கள் மலைவாழ் மக்கள். நம் மண்ணின் தொல்குடி மக்கள். காடும், காடு சார்ந்த நிலத்திற்கும் பாதுகாப்பு அரணே அவர்கள்தான். ஆனால் இன்றைக்கு வளவேட்டைக்காக முதலில் பலியிடப்படுவதும் அம்மக்கள்தான். தண்டகாரண்யத்தில் பச்சை வேட்டை என்றொரு திட்டத்தைத் தொடங்கி அங்கு இருக்கும் 250 இலட்சம் கோடி மதிப்பிலான வளங்களை எடுப்பதற்காக அங்கு வாழும் மக்களை அப்புறப்படுத்த முனைந்தபோது, உங்களுக்கு இது காடு, எங்களுக்கு இது வீடு இதை விட்டு செல்லமாட்டோம் என்று மறுத்துவிட்டனர். அந்த கருத்தைத்தான் இத்திரைப்படமும் வலியுறுத்துகிறது.

    என் மண், என் நிலம், என்னுடைய வாழ்விடம் அதைவிட்டு ஒருபோதும் செல்ல முடியாது, உயிர் போனாலும் இந்த மண்ணில்தான் என்று படம் பேசும் கருத்தில்தான் ஒவ்வொரு தேசிய இனங்களின் போராட்டமும் தொடங்கியது. அதுதான் நேற்று ஈழத்தில் நடந்தது; இன்று பாலஸ்தீனத்திலும் நடைபெறுகிறது. 'சூழலியலின் தாய்' வங்காரி மாதாய் உலகெங்கிலும் போர் என்பதே வள வேட்டைக்காகத்தான் நடைபெறுகிறது என்கிறார். அப்பேருண்மையை குறிப்பிட்ட நேரத்திற்குள் திரைமொழியில் அழுத்தமாக சொல்ல முடிந்தது என்பதே இத்திரைப்படத்தின் மிகப்பெரிய சாதனையாகும்.

    தம்பி கார்த்திக் சுப்புராஜ் அவர்களால் மிகுந்த சமூக அக்கறையோடு எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் தான் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். நான் தரையில் பேசுவதை தம்பிகள் திரையில் நேர்த்தியாக மொழிப்பெயர்த்துள்ளதைக் கண்டபோது, இத்திரைப்படம் என் இதயத்திற்கு நெருக்கமாக நேரடித் தொடர்பினை ஏற்படுத்திவிட்டது.


    சீமான் அறிக்கை

    இத்திரைப்படத்தில் என்னுடைய தம்பி எஸ்.ஜே.சூர்யா அவர்கள் இதுவரை இல்லாத வகையில் நடிப்பில் புதியதொரு பாய்ச்சலை வெளிப்படுத்தியுள்ளார். மீண்டும் கதையின் நாயகனாக வேறு ஒரு பரிணாமத்தில் தோன்றி அசத்தியுள்ளார். அதைப்போன்று தம்பி ராகவா லாரன்சு அவர்களுக்கும் இது முற்றிலும் மாறுதலான படமாக அமைந்துள்ளது. இரு நாயகர்களுமே போட்டி போட்டு நடித்து படத்தினை வெற்றிப்பெறச்செய்துள்ளனர். புதுமுகம் தம்பி விது அவர்களின் நடிப்பு வியக்க வைக்கிறது. மாமா இளவரசு மற்றும் கதையின் நாயகிகளான நிமிஷா சஜயன், சஞ்சனா நடராஜன் உள்ளிட்டோரின் நடிப்பும் படத்தினை மேலும் மெருகேற்றியுள்ளது. யானைகள் வரும் சண்டைக் காட்சிகள் வரைகலையில் எடுக்கப்பட்டதுதானா என்று சந்தேகிக்கும் அளவிற்கு மிகவும் உயிரோட்டமாகவும், உணர்வுப்பூர்வமாகவும் அமைந்துள்ளது.

    தம்பி திருநாவுக்கரசுவின் மிகச்சிறப்பான ஒளிப்பதிவும், தம்பி சபீக் முகமதுவின் படத்தொகுப்பும் காடுகளில் பயணித்த அனுபவத்தை தருகிறது. தம்பி சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை படத்திற்கு மேலும் வலுசேர்க்கிறது. கலை இயக்குநர் சந்தானத்தின் கலைப் பணிகள் உண்மையின் நெருக்கத்திற்கு கொண்டு சென்று நம்மை படத்தோடு ஒன்றச் செய்கிறது. படத்தில் பல விதமான சண்டை காட்சிகள் இருந்தாலும் ஒவ்வொன்றும் தனித்துவமாக செய்திருக்கின்ற தம்பி திலீப் சுப்புராயனின் பணி பாராட்டத்தக்கது. அதேபோன்று, படத்தில் நடித்துள்ள அனைத்து புது முகங்களின் தேர்வும், அவர்களின் இயல்பான நடிப்பும் மிகச்சிறப்பாக அமைந்துள்ளது.

    இப்படியொரு அழுத்தமான கதையினை திரைப்படமாக எடுக்க முன்வந்த தயாரிப்பு நிறுவனத்திற்கும், படம் மிகச்சிறப்பாக வெளிவந்து வெற்றி பெற்றுள்ளமைக்குக் காரணமான திரைக்கதை, கதைக்களம், திரை உருவாக்கம் என அனைத்திலும் தனக்கென்று தனிவழியைப் பின்பற்றி ஆகச்சிறந்த படைப்புகளை அளித்து வரும் இயக்குநர் தம்பி கார்த்திக் சுப்புராஜ் அவர்களுக்கும், தம்பிகள் எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்சு ஆகியோருக்கும், கதை மாந்தர்களாக நடித்துள்ள அனைத்து நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    பழங்குடி மக்களின் வாழ்வியலை, அவர்களின் உரிமைப்போராட்டத்தை பேசும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தை இதுவரை காணத் தவறிய உலகெங்கும் பரவிவாழும் என் பேரன்பிற்குரிய தமிழ் மக்கள் அனைவரும், நம் உள்ளத்து உணர்வினைப் பேசும் இத்திரைக்காவியத்தைத் திரையரங்குகளுக்குச் சென்று கண்டு களித்து படத்திற்கு மிகப்பெரிய ஆதரவினை வழங்கிட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.


    • ரியோ ராஜ் நடித்துள்ள திரைப்படம் ‘ஜோ’.
    • இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

    விஷன் சினிமா ஹவுஸ் சார்பில் அருள் நந்து, மாத்யூ அருள் நந்து தயாரிப்பில் ஹரிஹரன் ராம் இயக்கத்தில் ரியோ ராஜ் நடித்துள்ள திரைப்படம் 'ஜோ'. இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குனர் சீனுராமசாமி, "இந்த படத்தில் உள்ள கலைஞர்களுக்கும் தயாரிப்பாளருக்கும் எனது வாழ்த்துக்கள். இதில் நடித்த ரியோ, இயக்குனர் ஹரிஹரன் என யாருமே எனக்கு பெரிய அறிமுகம் இல்லை. தயாரிப்பாளர் அருள் நந்து மட்டுமே எனக்கு தெரியும். அவர்தான் இந்த படத்தை என்னை பார்க்க சொல்லி சொன்னார். படம் பார்த்த பின்பு படத்தின் புரொமோஷனுக்காக ஒரு சாட்சியாக நானும் வந்திருக்கிறேன். அவ்வளவு அருமையான படம் இது.


    படம் பார்த்த பின்பு எனக்கு 20 வயது குறைந்தது போல உள்ளது. இந்த படம் பார்த்த பின்பு மக்களிடம் கொண்டு போய் சேர்க்க ஏதாவது சொல்ல வேண்டுமென்று என்னை உந்தியது. குடும்பத்தோடு எல்லோரும் இந்த படத்தை நிச்சயம் பார்க்கலாம். சமீபத்தில், மனநிறைவோடு நான் பார்த்த படம் 'ஜோ'. இளைஞர்களே நம்பி படம் எடுத்த இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் நான் நன்றி சொல்கிறேன்.

    ஒரு மனிதனை காதல் எப்படி தோற்கடிக்கிறது வாழவைக்கிறது என்பதை இந்த படம் சொல்லும். இந்த படம் என்னை பயங்கரமாக தாக்கி அழ வைத்தது. இந்த படத்தில் யுவன் சங்கர் ராஜா இதில் ஒரு பாடல் பாடியுள்ளார். அவரை என் படத்தில் கூட இப்படி நான் பயன்படுத்தவில்லை. அவர் குரல் வரும் போது எல்லாம் மனம் கலங்குகிறது. படம் நல்ல திரையரங்க அனுபவத்தை நிச்சயம் கொடுக்கும்" என்றார்.


    மேலும், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசியதாவது, இந்த படத்தின் டிரைலரை அருள் நந்து போட்டு காண்பித்தபோது நன்றாக இருக்கிறது எனது தோன்றியது. புரமோஷன் பாடலுக்காக யுவன் வந்தபோது படத்தை பார்க்க வேண்டும் என்று எண்ணம் தோன்றியது. தான் கமிட் செய்த புராஜெக்ட்டை மிகவும் விரும்பி, முழு அர்ப்பணிப்பு கொடுத்து அருள் நந்து செய்துள்ளார். அதற்காகவே இந்த படமும் அவருக்கு வெற்றியை கொடுக்க வேண்டும். 'ஜோ' படத்தின் கிளைமாக்ஸ் நிச்சயம் உங்களை நெகிழ வைக்கும். படம் வெற்றி பெற வாழ்த்துகள் என பேசினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விஜய் நடிப்பில் 'லியோ' திரைப்படம் சமீபத்தில் வெளியானது.
    • இந்த படத்தில் மன்சூர் அலிகான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான 'லியோ' திரைப்படத்தில் நடிகர் மன்சூர் அலிகான் நடித்திருந்தார். இவர் சமீபத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், திரிஷா குறித்து ஆபாசமாக பேசினார். மன்சூர் அலிகானின் சர்ச்சை பேச்சின் வீடியோ இணையத்தில் வைரலானது. மன்சூர் அலிகானின் இந்த பேச்சுக்கு நடிகை திரிஷா கடும் கண்டனத்தை பதிவு செய்தார். தொடர்ந்து, மன்சூர் அலிகானின் இந்த சர்ச்சை பேச்சுக்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், நடிகர் சாந்தனு, பாடகி சின்மயி, நடிகை மாளவிகா மோகனன் உள்ளிட்டோரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்த சர்ச்சைக்கு விளக்கமளித்த நடிகர் மன்சூர் அலிகான், "உண்மையில திரிஷாவை உயர்வாத்தான் சொல்லிருப்பேன். திரிஷாட்ட தப்பா வீடியோவ காட்டிருக்காங்க. அய்யா என்கூட நடிச்சவங்கள்ளாம் எம்எல்ஏ., எம்.பி., மந்திரின்னு ஆயிட்டாங்க பல கதாநாயகிகள். பெரிய தொழில் அதிபர்கள கட்டிட்டு செட்டில் ஆகிட்டாங்க.

    மேலும். லியோ பூஜையிலேயே என் பொண்ணு தில் ரூபா உங்களோட பெரிய ரசிகைன்னு சொன்னேன். இன்னும் 2 பொண்ணுகளுக்கு கல்யாணம் பண்ணனும் 360 படங்கள்ல நடிச்சிட்டேன். நான் எப்பவும் சக நடிகைகளுக்கு ரொம்ப மரியாத குடுக்கறவன் எல்லாருக்கும் தெரியும் சில சொம்பு தூக்கிகளோட பருப்பெல்லாம் என்ட்ட வேகாது. திரிஷாட்ட தப்பா கட் பண்ணி காமிச்சு கோபப்பட வச்சுருக்காங்கண்ணு தெரியுது உலகத்துல எத்தனயோ பிரச்சின இருக்கு... பொழப்ப பாருங்கப்பா.." என்று கூறியிருந்தார்.

    இந்த விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு கண்டிப்பாக இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் தேசிய மகளிர் ஆணையமானது நடிகர் மன்சூர் அலிகான் மீது தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. சட்டப்பிரிவு 509 மற்றும் இது தொடர்பான இதர பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் 'லியோ'.
    • இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான படம் லியோ.

    செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்து இருக்கும் லியோ படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


    சமீபத்தில் வெளியான இந்த படம் வசூல் ரீதியிலும், விமர்சன ரீதியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இன்றும் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள "நா ரெடி" பாடலின் வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் வைப் செய்ய வைத்தது.


    இந்நிலையில், இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'லியோ' திரைப்படம் வருகிற 24-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இந்தியாவில் வெளியாகவுள்ளது. மேலும், 28-ஆம் தேதி உலக அளவில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது.


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இயக்குனர் செல்வராகவன் பல படங்களை இயக்கியுள்ளார்.
    • இவர் தற்போது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

    துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான செல்வராகவன், அதன்பின்னர் காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம், என்ஜிகே, நெஞ்சம் மறப்பதில்லை, நானே வருவேன் உள்ளிட்ட பல படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்தார். தற்போது 7ஜி ரெயின்போ காலனி படத்தின் இரண்டாம் பாகத்தில் செல்வராகவன் மும்முரம் காட்டி வருகிறார்.


    இதனிடையே நடிப்பிலும் கவனம் செலுத்தி வரும் செல்வராகவன் 'பீஸ்ட்', 'சாணிக் காயிதம்', 'பகாசூரன்' போன்ற திரைப்படங்களில் நடித்து கவர்ந்தார். தொடர்ந்து ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டை பெற்றார்

    இந்நிலையில், இயக்குனர் செல்வராகவன் 'தான் அழுது கொண்டே இருந்ததாக' சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதாவது, "நேற்று கிரிக்கெட்டில் தோற்றபிறகு அழுது கொண்டே இருந்தேன். என் குழந்தைகளுக்கு புரியவில்லை. தந்தை அழுது அவர்கள் பார்த்தது இல்லை. பாவம். அது கிரிக்கெட்டில் தோற்றதற்கு வரும் கண்ணீர் அல்ல. என் நாடு தோற்பதை என்னால் பார்க்க முடிய வில்லை. அதில் வரும் வலியை சொல்ல இயலாது. நெஞ்சம் உடைந்து சிதறியது" என்று குறிப்பிட்டுள்ளார்.


    நேற்று குஜராத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இந்திய அணி நிச்சயமாக வெற்றி பெரும் என நம்பி இருந்த ரசிகர்களுக்கு இந்த தோல்வி பேரிடியாக இருந்தது. அதுமட்டுமல்லாமல், இந்திய அணி வீரர்களும் களத்திலேயே மனமுடைந்து கண்ணீர் சிந்தியபடி வெளியேறினர்.


    • தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் அருண் விஜய்.
    • இவர் தற்போது வணங்கான் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் அருண் விஜய். இவரது நடிப்பில் வெளிவந்த "யானை" திரைப்படம் அருண் விஜய்க்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. மேலும், அருண் விஜயின் வில்லன் கதாபாத்திரம் அனைவரையும் கவரக்கூடியவை. தற்போது நடிகர் அருண் விஜய் நடித்த மிஷன் திரைப்படம் திரையங்குகளில் விரைவில் வெளிவர உள்ளது.



    மேலும், இவர் இயக்குனர் பாலா இயக்கத்தில் வணங்கான் திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    இந்நிலையில், நடிகர் அருண் விஜய் தனது பிறந்த நாளை ஆதரவற்றோர் இல்லத்தில் கொண்டாடியுள்ளார். அதாவது, உதவும் கரங்கள் ஆதரவற்றோர் இல்லத்தில் உணவு பரிமாறி, அவர்களுடன் இணைந்து கொண்டாடினார். அதன்பின் அருண் விஜய் ரசிகர்கள் நற்பணி மன்றம் மூலம் இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் நடத்திய மாபெரும் இரத்ததான முகாமில் கலந்து கொண்டார். அங்கு ரசிகர்களுடன் இணைந்து தானும் இரத்த தானம் செய்தார்.

    ×