என் மலர்
சினிமா செய்திகள்
- பார்த்திபனின் டீன்ஸ் படம் விரைவில் வெளியாகிறது.
- இந்த படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார்.
இந்திய சினிமாவில் மூன்று தசாப்தங்களுக்கும் மேல் வெற்றிகரமாக இயங்கி வரும் நடிகர்-இயக்குநர் இராதாகிருஷ்ணன் பார்த்திபன் 'டீன்ஸ்' எனும் முற்றிலும் மாறுபட்ட, குழந்தைகளை மையமாகக் கொண்ட சாகச திரில்லர் திரைப்படத்தை உருவாக்கியுள்ளார்.
கால்டுவெல் வேள்நம்பி, டாக்டர் பாலசுவாமிநாதன், டாக்டர் பின்ச்சி ஸ்ரீநிவாசன் மற்றும் ரஞ்சித் தண்டபாணி ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர். பயாஸ்கோப் டிரீம்ஸ் எல் எல் பி மற்றும் அகிரா ப்ரொடக்ஷன்ஸ் பேனரில் 'டீன்ஸ்' தயாராகியுள்ளது. கீர்த்தனா பார்த்திபன் அக்கினேனி இதன் கிரியேட்டிவ் தயாரிப்பாளர்.

இந்த திரைப்படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார் . ஒளிப்பதிவு பணிகளை காவ்மிக் ஆரி மேற்கொண்டுள்ளார். இவர்களுடன் இராதாகிருஷ்ணன் பார்த்திபன் முதல் முறையாக இணைந்துள்ளார். இமான் மற்றும் காவ்மிக் ஆரியின் சிறந்த படைப்புகளில் முன்னணி வகிக்கும் வகையில் இந்த படம் உருவாகியுள்ளது. படத்தொகுப்புக்கு ஆர். சுதர்சன் பொறுப்பேற்றுள்ளார்.
இராதாகிருஷ்ணன் பார்த்திபனின் முந்தைய படைப்பான 'இரவின் நிழல்' தேசிய விருது உள்ளிட்ட பல்வேறு அங்கீகாரங்களையும் பெற்று சாதனை படைத்த நிலையில் அவரது புதிய படம் 'டீன்ஸ்' புதிய முத்திரையை பதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- சமாதானம் பேசுவதற்காக ஷகீலாவின் வழக்கறிஞர் சவுந்தர்யா, ஷீத்தலை ஷகீலா வீட்டிற்கு அழைத்து உள்ளார்.
- ஷீத்தலின் தாயார் சவுந்தர்யாவின் கையை பிடித்து கடித்து காயம் ஏற்படுத்திவிட்டு சென்றுள்ளனர்.
தமிழ், மலையாள சினிமாவில் கவர்ச்சி நடிகையாக திகழ்ந்தவர் ஷகீலா. தற்போது குணசித்திர வேடங்களிலும் காமெடி கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.
கோடம்பாக்கம் யுனைடெட் இந்தியா காலனியில் வசித்து வரும் ஷகீலா அவரது அண்ணன் மகள் ஷீத்தலை வளர்ப்பு மகளாக வளர்த்து வருகிறார்.
இந்த நிலையில் ஷகீலாவுக்கும் ஷீத்தலுக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. அப்போது ஷீத்தல், ஷகீலாவை தாக்கி விட்டு சென்றுள்ளார்.
இதுதொடர்பாக சமாதானம் பேசுவதற்காக ஷகீலாவின் வழக்கறிஞர் சவுந்தர்யா, ஷீத்தலை ஷகீலா வீட்டிற்கு அழைத்து உள்ளார். இதையடுத்து ஷீத்தலின் தாயார் சசி, அக்கா ஜமீலா ஆகியோர் ஷகீலாவின் வீட்டிற்கு சென்று உள்ளனர்.
அப்போது சமாதானம் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும்போது சவுந்தர்யாவை ஷீத்தல் தாக்கியுள்ளார். ஷீத்தலின் தாயார் சவுந்தர்யாவின் கையை பிடித்து கடித்து காயம் ஏற்படுத்திவிட்டு சென்றுள்ளனர்.
இதுபற்றி சவுந்தர்யா கோடம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் ஷீத்தல், அவரது தாயார் சசி ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
- போலி கணக்கில் இருந்து மெசேஜ் வந்தால் அந்த தளத்தை பிளாக் செய்துவிடுங்கள்.
- இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் வித்யாபாலன் தமிழில் அஜித்குமார் ஜோடியாக ‘நேர்கொண்ட பார்வை' படத்தில் நடித்திருந்தார்.
சமூக வலைதளங்களில் பிரபலங்கள் பெயரில் அவ்வப்போது போலி கணக்கு தொடங்கப்படுவதும், பின்னர் அது சர்ச்சையாகி வருவதும் நடந்துள்ளது. அந்தவகையில் பாலிவுட் நடிகை வித்யாபாலன், இதுபோன்ற பிரச்சனையில் சிக்கி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வித்யாபாலன் தனது சமூக வலைத்தள பக்கத்தில், 'எனது பெயரில் மர்ம நபர் ஒருவர் 'வாட்ஸ்-அப்' மூலம் மோசடியில் ஈடுபட்டுள்ளார். 'வாட்ஸ்-அப்'பில் எனது புகைப்படத்தை வைத்துக் கொண்டு, நான் தான் வித்யாபாலன் எனச் சொல்லி மோசடியில் ஈடுபட்டுள்ளார். இது இப்போதுதான் எனக்கு தெரிய வந்துள்ளது. எனவே அதுபோன்ற நபர்களிடம் இருந்து அழைப்பு அல்லது மெசேஜ் வந்தால் அதற்கு பதிலளிக்க வேண்டாம்', என்று கூறியுள்ளார்.
மேலும், 'இதுகுறித்து தனது குழுவினர் புகார் அளித்துள்ளனர். இதுபோன்ற விஷயங்களை ஊக்குவிக்க வேண்டாம். அப்படி அந்த போலி கணக்கில் இருந்து மெசேஜ் வந்தால் அந்த தளத்தை பிளாக் செய்துவிடுங்கள்' என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் வித்யாபாலன் தமிழில் அஜித்குமார் ஜோடியாக 'நேர்கொண்ட பார்வை' படத்தில் நடித்திருந்தார். மறைந்த கவர்ச்சி நடிகை சில்க் சுமிதா வாழ்க்கை கதையான 'தி டர்ட்டி பிக்சர்' படத்தில் நடித்து தேசிய விருதும் பெற்றார்.
- குழந்தைகளின் படிப்பு மற்றும் பெற்றோர் நலனுக்காக மும்பையில் தங்கியுள்ள ஜோதிகா, பாலிவுட் படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
- 26 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் இந்தி படத்தில் ஜோதிகா நடிக்கிறார்.
தமிழில் முன்னணி கதாநாயகியாக ஜொலித்த ஜோதிகா, நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகும் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் மலையாளத்தில் மம்முட்டியுடன் ஜோதிகா நடித்த 'காதல் தி கோர்' படம் திரைக்கு வந்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.
தற்போது குழந்தைகளின் படிப்பு மற்றும் பெற்றோர் நலனுக்காக மும்பையில் தங்கியுள்ள ஜோதிகா, பாலிவுட் படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், அஜய் தேவ்கன் நடிப்பில் உருவாகி இருக்கும் 'சைத்தான்' படத்தில் ஜோதிகா நடிக்கிறார்.
தமிழ் சினிமாவில் நடிப்பதற்கு முன்பாகவே, இந்தி சினிமாவில் ஜோதிகா நடித்திருந்தார். அந்த வகையில் 26 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் இந்தி படத்தில் ஜோதிகா நடிக்கிறார். 'சைத்தான்' படத்தில் நடிகர் மாதவனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஜோதிகா-மாதவன் நடிப்பில் வெளியான 'டும்... டும்... டும்...', 'பிரியமான தோழி' ஆகிய படங்கள் வெற்றி படங்களாக அமைந்தன.
அந்தவகையில் மாதவனும், ஜோதிகாவும் இந்தி படத்தில் இணைந்து நடிப்பது ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பை அதிகரித்து இருக்கிறது.
- சினிமாவில் பரவலாக சொல்லப்பட்டு வரும் அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனை குறித்து பாப்ரி கோஷ் துணிச்சலாக பேசியுள்ளார்.
- கூச்சத்தை நாம் தூக்கி எறிந்தால்தான், அப்படி கேட்கும் தைரியம் அந்த நபர்களை விட்டு போகும்.
'டூரிங் டாக்கீஸ்', 'ஓய்', 'சக்க போடு போடு ராஜா', 'பைரவா', 'விஸ்வாசம்' போன்ற படங்களில் நடித்தவர், பாப்ரி கோஷ். தெலுங்கு, பெங்காலி மொழி படங்களிலும் இவர் நடித்துள்ளார். சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வருகிறார்.
சினிமாவில் பரவலாக சொல்லப்பட்டு வரும் அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனை குறித்து பாப்ரி கோஷ் துணிச்சலாக பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, 'அட்ஜஸ்ட்மென்ட் செய்தால் மட்டுமே படவாய்ப்பு என்று யாராவது என்னிடம் கேட்டால், உடனே முடியாது என்று சொல்லிவிட மாட்டேன்.
அந்த நபரின் வீட்டுக்கு சென்று, அவரது மனைவி உள்பட குடும்பத்தினர் முன்பே அவருக்கு முத்தம் கொடுப்பேன். என்னை யாராவது கேட்டால், நடந்த விஷயத்தை சொல்வேன். அதன்பிறகு அந்த நபரை குடும்பத்தாரே கவனித்துக் கொள்வார்கள்.
பொதுவாகவே இதுபோன்ற பிரச்சனைகளில் சிக்கும் பெண்கள் கூச்சம், பயம் போன்றவற்றால் உண்மைகளை வெளியே சொல்ல முடியாமல் தவிக்கிறார்கள். அது தவறு. கூச்சத்தை நாம் தூக்கி எறிந்தால்தான், அப்படி கேட்கும் தைரியம் அந்த நபர்களை விட்டு போகும். நமக்கு தன்மானம் மிக முக்கியம். எனவே தான் இதுபோன்ற பிரச்சனைகளில் பொறுமை தேவையில்லை. துணிச்சலாக முடிவு எடுங்கள்', என்று பாப்ரி கோஷ் கூறியுள்ளார்.
- ரஜினி இன்று காலை மனைவி லதா மற்றும் தனுஷ், பேரன் ஆகியோருடன் சென்னையில் இருந்து விமானம் மூலம் அயோத்திக்கு புறப்பட்டு சென்றார்.
- 500 வருட பிரச்சனைக்கு சுப்ரீம் கோர்ட் மூலம் தீர்வு கிடைத்துள்ளது.
அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் திறப்பு விழா நாளை (22-ந் தேதி) நடைபெறுகிறது.
விழாவுக்கு முக்கிய திரைப்பிரபலங்கள் பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தி திரை உலகின் முன்னணி நடிகரான அமிதாப்பச்சன், தமிழ் திரையுலக சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் மற்றும் தமிழ் திரைப்பிரபலங்கள் பலருக்கு நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு கொடுக்கப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து ரஜினி இன்று காலை மனைவி லதா மற்றும் தனுஷ், பேரன் ஆகியோருடன் சென்னையில் இருந்து விமானம் மூலம் அயோத்திக்கு புறப்பட்டு சென்றார்.
முன்னதாக விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
500 வருட பிரச்சனைக்கு சுப்ரீம் கோர்ட் மூலம் தீர்வு கிடைத்துள்ளது. ராமர் கோவில் திறப்புவிழா வரலாற்றில் மறக்க முடியாத நாள். ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் பங்கேற்பது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறினார்.
- லியோ படத்தில் அர்ஜூன் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.
- புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்வருபவர் அர்ஜூன். இவர் கடந்த ஆண்டு வெளியான லியோ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதுதவிர இவர் மேலும் சில படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், நடிகர் அர்ஜூன் தனது மகள் ஐஸ்வர்யாவுடன் பிரதமர் மோடியை நேரில் சந்தித்துள்ளார். சந்திப்பின் போது, பிரதமர் மோடிக்கு புகைப்படம் ஒன்றை பரிசாக வழங்கினார்.
நடிகர் அர்ஜூன் தனது மகள் ஐஸ்வர்யாவுடன் பிரதமரை சந்தித்த போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக வைரல் ஆகி வருகின்றன.
- டிசம்பர் 29-ந் தேதி 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
- இவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த லட்சக்கணக்கான மக்கள் திரண்டனர்.
தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கான இடத்தை பிடித்தவர் விஜயகாந்த். கடந்த சில வருடங்களாக உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த் அரசியல் மற்றும் சினிமாவில் இருந்து விலகினார். இவர் கடந்த டிசம்பர் 28-ந் தேதி உடல் நலக்குறைவினால் காலமானார். இவரது மறைவு தமிழகம் முழுவதும் உள்ள மக்களை பெரிதும் பாதித்தது. இவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த லட்சக்கணக்கான மக்கள் திரண்டனர்.

மேலும் அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலர் நேரிலும், சமூக வலைதளத்தின் மூலமாகவும் அஞ்சலி செலுத்தினர். இவரது உடல் தேமுதிக அலுவலகத்தில் டிசம்பர் 29-ந் தேதி 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. அன்றுமுதல் பல பிரபலங்கள், தொண்டர்கள், ரசிகர்கள் என பலர் அங்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மறைந்த நடிகர் விஜயகாந்திற்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என்று தமிழக அரசிற்கு நடிகர் சவுந்தர ராஜா கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் மாலை மலருக்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியில், "மனித நேயம் உள்ள ஒரு மாமனிதன். மக்கள் மனதில் இடம் பிடித்த 'கேப்டன்' விஜயகாந்திற்காக அவரின் சொந்த ஊரான மதுரையில் ஒரு மணிமண்டபம் கட்ட வேண்டும்.

அவரின் மக்கள் பணி, படங்கள் எல்லாவற்றையும் ஒரு டிஜிட்டல் நூலகமாக வைத்து வருங்கால தலைமுறைக்கு எடுத்துக்காட்டாக இருக்கும்படி இந்த மணிமண்டபம் கட்ட வேண்டும் என்று தமிழ அரசிடம் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். விஜயகாந்தை பார்த்து பல கோடி இளைஞர்கள் வாழ்க்கையில் சாதித்திருக்கிறார்கள். இனியும் அவருடைய வாழ்க்கையை பார்த்து சாதிக்க வேண்டிய இளைஞர்கள் பலர் இருக்கிறார்கள் அதற்காக இதை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.
- நடிகை ராஷ்மிகா மந்தனா ஆபாச உடையில் லிப்ட் ஒன்றில் செல்வது போன்ற வீடியோ வெளியானது.
- அதனை உண்மையான வீடியோ என்று நினைத்து பலரும் பகிர்ந்து வைரலாக்கினர்.
கன்னட திரையுலகின் முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனா, தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். தெலுங்கு, கன்னடம், தமிழ், இந்தி என பல மொழிகளில் ராஷ்மிகா பிசியாக நடித்து வருகிறார்.

கடந்த நவம்பர் மாதம் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆபாச உடையில் லிப்ட் ஒன்றில் செல்வது போன்ற வீடியோ வெளியானது. அதனை உண்மையான வீடியோ என்று நினைத்து பலரும் பகிர்ந்து வைரலாக்கினர். ஆனால் அது ஏஐ தொழில்நுட்பத்தால் மார்பிங் செய்யப்பட்ட வீடியோ என்பது அதன்பின்னர் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து நடிகை ராஷ்மிகா 'தொழில்நுட்பத்தை இவ்வாறு தவறாக பயன்படுத்துவதை பார்க்கும் பொழுது எனக்கு பயமாக இருக்கிறது' என்று வேதனையுடன் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் ராஷ்மிகாவிற்கு ஆறுதல் தெரிவித்தனர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக டெல்லி போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், டெல்லியை சேர்ந்த முக்கிய குற்றவாளியை காவல்துறையினர் இன்று கைது செய்தனர். இவர் தான் ராஷ்மிகாவின் டீஃப் பேக் ( Deep Fake) வீடியோவை உருவாக்கியதாக கூறப்படுகிறது.
- ஆதிபுருஷ் திரைப்படத்தை ஒப்பிட்டால் இதற்கு 6 மடங்கு அதிகம் செலவானது
- இங்கிலாந்தில் படப்பிடிப்பு நடந்ததால் தயாரிப்பில் 25 சதவீதம் வரி சலுகை கிடைத்தது
சில வருடங்களாக இந்திய திரைப்படங்கள் உலகெங்கும் வெளியாகி பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷனில் புதிய உச்சங்களை தொடுகின்றன.
வசூலை வாரி குவிப்பதில் இந்திய திரைப்படங்கள் சாதனைகள் புரிவதால், அடுத்தடுத்து உருவாக்கப்படும் முன்னணி ஹீரோக்களின் திரைப்படங்களை தயாரிக்கும் செலவும் பல கோடிகள் அதிகரிப்பதாக திரைப்பட வர்த்தகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த வருடம் வெளியான "ஆதிபுருஷ்" திரைப்படம், சுமார் ரூ.600 கோடி பட்ஜெட்டில் தயாரானது.

2015ல், ஹாலிவுட்டில் உருவாகி உலகெங்கும் வெளியான "ஸ்டார் வார்ஸ்: தி ஃபோர்ஸ் அவேகன்ஸ்" (Star Wars: The Force Awakens) எனும் ஆங்கில படம், திரைப்பட வரலாற்றிலேயே மிக அதிக பட்ஜெட்டில் தயாரான திரைப்படம்.
பிரபல ஹாலிவுட் முன்னணி ஹீரோ ஹாரிசன் ஃபோர்டு (Harrison Ford) கதாநாயகனாக நடித்து, ஜே ஜே அப்ரம்ஸ் (JJ Abrams) இயக்கிய இப்பட செலவு சுமார் ரூ.3000 கோடி ($447 மில்லியன்) மதிப்பை தொட்டது.
படத்தின் தரத்தில் எந்த சமரசமும் செய்து கொள்ள இயக்குனரும், தயாரிப்பு நிறுவனமான டிஸ்னி நிறுவனமும் இணைந்து முடிவெடுத்தனர். எனவே, திரைப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு காட்சிகளை இங்கிலாந்தின் பைன்வுட் ஸ்டூடியோவில் படம் பிடித்தனர். இதன் மூலம் 25 சதவீத செலவு தொகை அந்நாட்டில் வரிவிலக்கு மூலம் திரும்ப கிடைத்தது.
இத்திரைப்படம் $2.07 பில்லியன் வசூல் புரிந்து சாதனை புரிந்தது.
இப்பட பட்ஜெட், ஆதிபுருஷ் படத்திற்கு ஆன செலவை விட 6 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
- இயக்குனர் வாலி மோகன் தாஸ் புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.
- நடிகர் கலையரசன் மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் இணைந்து நடிக்கிறார்.
ரங்கோலி படம் மூலம் பள்ளிச் சிறுவர்களின் வாழ்வியலை வண்ணங்களாக தீட்டிய, இயக்குனர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் "மெட்ராஸ்காரன்". இதில் மலையாளத்தில் புகழ்பெற்ற கும்பளாங்கி நைட்ஸ், ஆர் டி எக்ஸ், இஷ்க் படப்புகழ் நடிகர் ஷேன் நிகம், இப்படம் மூலம் தமிழில் நாயகனாக அறிமுகமாகிறார். நடிகர் கலையரசன் மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் இணைந்து நடிக்கிறார்.

எஸ்.ஆர் புரொடக்ஷன்ஸ் சார்பில் பி ஜகதீஸ் தயாரிப்பில் திரில்லர் டிராமாவாக உருவாகும் இந்த படத்தில் ஒரு சிறு சம்பவம் பெரும் பிரச்சனையாக, இருவர் வாழ்க்கையை புரட்டி எடுப்பதை, பரபரப்பான திரைக்கதையாக படைத்துள்ளார். தற்போது படத்தின் முன் தயாரிப்பு பணிகள் துவங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. வரும் பிப்ரவரி மாதம், இப்படத்தின் படப்பிடிப்பை சென்னை, மதுரை, கொச்சி ஆகிய இடங்களில் ஒரே கட்டமாக நடத்தி முடிக்க, படக்குழு திட்டமிட்டுள்ளது.
படத்தின் நாயகி மற்றும் துணை கதாப்பாத்திர நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
- நடிகர் சந்தானம் தற்போது 'வடக்குப்பட்டி ராமசாமி' திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- இப்படம் பிப்ரவரி 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
'டிக்கிலோனா' படத்தின் இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'வடக்குப்பட்டி ராமசாமி'. இந்த படத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், ரவி மரியா, மாறன், மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, சேஷு, இட் ஈஸ் பிரசாந்த், ஜாக்குலின் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பீப்பிள் மீடியா ஃபேக்டரி தயாரிக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். தீபக் ஒளிப்பதிவு செய்ய சிவன் நந்தீஸ்வரன் படத்தொகுப்பு பணியை மேற்கொண்டுள்ளார். இப்படம் பிப்ரவரி 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனையடுத்து சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியானது.

வடக்குப்பட்டி ராமசாமி
இந்நிலையில், 'வடக்குப்பட்டி ராமசாமி' திரைப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படத்தின் முதல் பாடலான 'ஆபராக்கோ டாபராக்கோ' பாடல் நாளை வெளியாகும் என படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது.
Wait For More Surprises Today At 5pm.#AbarakkoDabarakko - First Single from #VadakkupattiRamasamy will unfold tomorrow #VadakkupattiRamasamyFromFeb2@karthikyogitw @akash_megha @vishwaprasadtg @peoplemediafcy @vivekkuchibotla @RajaS_official @Sunilofficial @nuttypillai… pic.twitter.com/R98VNjGsCF
— Santhanam (@iamsanthanam) January 20, 2024






