என் மலர்
சினிமா செய்திகள்
பொன்ராம் இயக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க உள்ள ஹீரோயின் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சிவகார்த்திகேயன் நடித்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’, ‘சீமராஜா’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் பொன்ராம். இவர் அடுத்ததாக இயக்கும் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு டி இமான் இசையமைக்கிறார். பக்கா கமர்ஷியல் திரைப்படமாக உருவாகும் இதில் நடிகர் விஜய் சேதுபதி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

அனுகீர்த்தி வாஸ்
இந்நிலையில், இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இளம் நடிகை அனுகீர்த்தி வாஸ் நடிப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்படம் மூலம் அவர் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார். நடிகை அனுகீர்த்தி வாஸ், கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த பெமினா மிஸ் இந்தியா அழகிப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி, இந்தியில் மும்பைகார், மெரி கிறிஸ்துமஸ், காந்தி டாக்ஸ் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான படம் ‘அந்தாதூன்’. 3 தேசிய விருதுகளை வென்ற இப்படத்தை ஸ்ரீராம் ராகவன் இயக்கி இருந்தார். இவர் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகும் படம் ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’. இப்படத்தில் விஜய் சேதுபதி நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப்பும் நடிக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

கத்ரீனா கைஃப், விஜய் சேதுபதி
பாலிவுட் நடிகர் சல்மான் கானை மனதில் வைத்து தான் இந்தப் படத்தின் கதையை இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் எழுதியிருந்தாராம். கதை சல்மான் கானுக்கு பிடித்திருந்தாலும், படத்தில் கமர்ஷியல் அம்சங்கள் குறைவாக இருந்ததால் அவர் மெர்ரி கிறிஸ்துமஸ் படத்தில் நடிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து தான் அந்த வாய்ப்பு நடிகர் விஜய் சேதுபதிக்கு சென்றதாம்.
‘அருவி’, ‘வாழ்’ போன்ற படங்களை இயக்கிய அருண் பிரபு புருஷோத்தமன் அடுத்ததாக இயக்க உள்ள படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘அருவி’. அதிதி பாலன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்த இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்றது. ‘அருவி’ படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்திருந்தார்.
இதையடுத்து ‘வாழ்’ என்ற திரைப்படத்தை அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கி இருந்தார். கடந்த ஜூலை மாதம் நேரடியாக ஓடிடி-யில் வெளியான இந்தப் படம், கலவையான விமர்சனங்களை பெற்றது.

எஸ்.ஆர்.பிரபு, அருண் பிரபு புருஷோத்தமன்
இந்நிலையில், அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கவுள்ள புதிய படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ‘அருவி’ படத்தை தயாரித்த எஸ்.ஆர்.பிரபு தான் அருண் பிரபு இயக்க உள்ள புதிய படத்தையும் தயாரிக்க உள்ளாராம். இப்படத்தில் முன்னணி நடிகரை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார்களாம். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படத்தை நடிகர் கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.
மாஸ்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ‘விக்ரம்’. நடிகர் கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது.
இப்படத்தை நடிகர் கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், விக்ரம் படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி படத்தின் இறுதியில் இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பை வெளியிட்டு இருப்பார்கள். அதேபோல் தான் விக்ரம் படத்தின் இறுதியில் இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பை வெளியிட திட்டமிட்டு உள்ளார்களாம்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விக்ரம், அடுத்ததாக நடித்துள்ள படத்தின் ரிலீஸ் அப்டேட் வெளியாகி உள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘மகான்’. இப்படத்தில் விக்ரமும், அவரது மகன் துருவ் விக்ரமும் முதன்முறையாக இணைந்து நடித்துள்ளனர். கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ‘மகான்’ படத்தின் ரிலீஸ் குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் வருகிற நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகையன்று ரிலீசாக உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினியின் ‘அண்ணாத்த’, சிம்புவின் ‘மாநாடு’, அருண் விஜய்யின் ‘வா டீல்’ ஆகிய படங்கள் தீபாவளியன்று ரிலீசாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மாணவர்களின் வலியையும், பிரச்சினைகளையும் உணர்கிறேன், அதனால் நான் எப்போதும் அவர்கள் பக்கம் தான் என நடிகை சாய் பல்லவி தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு பயத்தால் மாணவ, மாணவியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், மருத்துவ படிப்பு படித்துள்ள நடிகை சாய் பல்லவி, சமீபத்திய பேட்டியில் இதுகுறித்து பேசியுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது: “மருத்துவம் என்பது ஒரு கடல் போன்ற படிப்பு. இதில் தேர்வின்போது எதிலிருந்து கேள்விகள் வரும் என்று சொல்ல முடியாது. அதனால் மனதளவில் நிச்சயம் பாதிப்பு ஏற்படும். பெற்றோர்களும் நண்பர்களும் தான் மாணவர்களுடன் பேசி நம்பிக்கையை ஊட்ட வேண்டும் .
என் குடும்பத்திலும் நீட் தற்கொலை சோகம் நிகழ்ந்திருக்கிறது. மதிப்பெண் குறைந்து விட்டதால் எனது உறவினர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இத்தனைக்கும் அவர் மோசமான மதிப்பெண் எடுக்கவில்லை. ஆனால் அவருக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு விட்டது. அதனால் அவர் அத்தகைய முடிவை எடுத்துவிட்டார்.

தற்கொலை செய்து கொள்ளாதீர்கள் என்று என்னால் எளிதில் பேசிவிட முடியும். ஆனால் அந்த இடத்தில் இருப்பவர்களுக்கு தான் அதன் வலி தெரியும். அந்த தேர்வை அவர்கள் எந்த நிலையில் இருந்து எழுதினார்கள் என்று பார்க்க வேண்டும்.
பதினெட்டு வயது கூட ஆகாத மாணவர்கள் இவ்வளவு இளம் வயதிலேயே தற்கொலை செய்து கொண்டார்கள் என்பது வேதனை அளிக்கிறது. மாணவர்களின் வலியை உணர்கிறேன். பிரச்சினைகளையும் உணர்கிறேன். நான் எப்போதும் அவர்கள் பக்கம் தான்” என்றார்.
பிரபு, குஷ்புவை மீண்டும் ஜோடியாக நடிக்க வைத்து, சின்னத்தம்பி 2-ம் பாகத்தை எடுக்க வேண்டும் என்று பி.வாசுவுக்கு ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நடிகை குஷ்பு உடல் எடையை குறைத்து மெலிந்த தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்களை சமீபத்தில் வெளியிட்டு இருந்தார். இதைப் பார்த்த ரசிகர்கள் ஆச்சரியப்பட்டனர். குஷ்புவை தொடர்ந்து தற்போது நடிகர் பிரபுவும் 20 கிலோ வரை உடல் எடையை குறைத்து உள்ளார். பொன்னியின் செல்வன் படத்துக்காக உடல் எடையை குறைத்து இருக்கிறார்.
அவர் ஸ்லிம்மான தோற்றத்தில் இருக்கும் புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மெலிந்த தோற்றத்திற்கு மாறியுள்ள பிரபுவும், குஷ்புவும் மீண்டும் இணைந்து நடிக்க வேண்டும் என்று பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள்.

பிரபு, குஷ்பு ஜோடியாக நடித்து 1991-ல் பெரிய வெற்றி பெற்ற சின்னத்தம்பி படத்தை இயக்கிய பி.வாசு தற்போது லாரன்சை வைத்து சந்திரமுகி 2-ம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளார். இந்த படத்துக்கு முன்பாக பிரபு, குஷ்புவை மீண்டும் ஜோடியாக நடிக்க வைத்து சின்னத்தம்பி 2-ம் பாகத்தை எடுக்க வேண்டும் என்று பி.வாசுவுக்கு ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த பதிவுக்கு குஷ்புவும் சம்மதம் தெரிவித்து வலைத்தளத்தில் தம்ஸ் அப் மற்றும் எமோஜிகளை வெளியிட்டு இருக்கிறார். இது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. சின்னத்தம்பி 2-ம் பாகம் உருவாகுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
உலக புகழ் பெற்ற பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன், இந்திய நடிகர் ஒருவருடன் சண்டை போட தயாராகி இருக்கிறார்.
விஜய் தேவரகொண்டா, பூரி ஜெகன்நாத், கரண் ஜோகர், சார்மி கவுர் தயாரிப்பில் உருவாகி வரும் படம் லிகர். விஜய் தேவரகொண்டா நாயகனாக நடிக்க, ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய், விஷ்ணு ரெட்டி, ஆலி மகரந்த் தேஷ் பாண்டே, கெட்டப் ஶ்ரீனு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பூரி ஜெகன்நாத் இயக்குகிறார்.
இந்த படத்தில் உலக புகழ் பெற்ற பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் நடிக்க இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்திய படம் ஒன்றில் இவர் நடிப்பது இதுவே முதல்முறையாகும். இப்படத்தில் அயர்ன் மைக் என்ற வேடத்தில் மைக் டைசன் நடிக்கிறார். அதிரடி ஆக்ஷனாக உருவாகும் இப்படம், தெலுங்கு, தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் உருவாகி வருகிறது.

மைக் டைசன் - விஜய் தேவரகொண்டா
இதுகுறித்து விஜய் தேவரகொண்டா தனது சமூக வலைத்தள பக்கத்தில், “நாங்கள் கொடுத்த வாக்கை, நிறைவேற்ற துவங்கியுள்ளோம்”. இந்திய திரையுலகில் முதன்முறையாக, லிகர் படத்தில் இணையும் முக்கிய பிரபலம். இந்த பிரபஞ்சத்தின் சக்திமிக்க மனிதர், குத்து சண்டையின் கடவுள், லெஜண்ட், பீஸ்ட், காலத்தால் அழிக்கவியலா புகழ் கொண்ட நாயகன், மைக் டைசனை இந்திய திரையுலகிற்கு வரவேற்கிறோம். இன்னும் சில நாட்களுக்கு, உங்கள் ஆர்வத்தை கட்டுபடுத்தி வைத்துகொள்ளுங்கள். இந்த படம் தியேட்டர்களில் வெளியாக தயாராகி கொண்டிருக்கிறது. கொண்டாட்டத்திற்கு தயாராகுங்கள்'' என பதிவிட்டுள்ளார்.
திருச்சியில் நடைபெற்ற மாரத்தான் போட்டியை துவங்கி வைத்த நடிகர் சௌந்தரராஜா, படிக்கும் மாணவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உலக இருதய தினம் மற்றும் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு திருச்சி எஸ்.ஆர்.எம் மருத்துவமனை, ஆராய்ச்சி மையம் மற்றும் எஸ்ஆர்எம் கல்வி குழுமத்தின் இதர கல்வி நிறுவனங்கள் இணைந்து மாரத்தான் போட்டியை நடத்தினார்கள். இதில் சிறப்பு விருந்தினராக நடிகரும், சமூக ஆர்வலருமான சௌந்தரராஜா கலந்துக் கொண்டு மாரத்தான் போட்டியை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

இப்போட்டியில், அனைத்து கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் சுமார் 700 பேர் கலந்துக் கொண்டனர். இதில் வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசு பொருட்களை நடிகர் சௌந்தரராஜா வழங்கினார். அதன்பின் கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்து பேசிய சௌந்தரராஜா, மறைந்த நடிகரும் சமூக ஆர்வலருமான விவேக் இறந்தாலும், அவர் இந்த மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

அவர் நட்டு வைத்த மரக்கன்றுகள் இன்னும் இந்த மண்ணில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறது. அவரது இடத்தினை தக்க வைக்க யாராலும் முடியாது. மண்ணுக்கும் மக்களுக்கும் உபயோகமாக வாழ்வதே வாழ்க்கை. படிக்கும் காலத்தில் மாணவ, மாணவிகள் காதலிக்க வேண்டாம். அந்த வயதில் உங்கள் வாழ்க்கையினை நீங்கள் தீர்மானிக்க முடியாது. படிப்பை முடித்த பிறகு திருமணம் செய்து கொள்ளுங்கள்’ என்றார். மேலும் படித்த இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
நடிகர் சௌந்தரராஜா, சுந்தர பாண்டியன், தர்மதுரை, கடைக்குட்டி சிங்கம், ஜிகர்தண்டா, தெறி, பிகில், ஜிகர்தண்டா உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.
பல படங்களில் பிசியாக நடித்து வரும் நடிகர் சிலம்பரசன், காந்தி ஜெயந்தி தினத்தில் ரசிகர்களுக்கு விருந்து கொடுக்க இருக்கிறார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் ‘மாநாடு’. இப்படத்தை வி ஹவுஸ் புரடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறார். இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கல்யாணி பிரியதர்ஷன் சிம்புவுக்கு ஜோடியாக வருகிறார்.
மேலும் எஸ்.ஏ.சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி, எஸ்.ஜே.சூர்யா, டேனியல் போப், ஒய்.ஜி.மகேந்திரன் மற்றும் பாரதிராஜாவின் மகன் மனோஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இப்படம் தீபாவளி தினத்தில் வெளியாக இருப்பதாக ஏற்கனவே படக்குழுவினர் அறிவித்து இருந்தனர்.

இந்நிலையில், தற்போது மாநாடு படத்தின் டிரைலரை காந்தி ஜெயந்தி தினத்தில் வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்து இருக்கின்றனர். இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.
நடிகர் விஜய் பெயரில் செயல்பட்டு வந்த விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டு விட்டதாக அவரது தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் பதில் மனு அளித்துள்ளார்.
நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டுமென அவரது ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், விஜய் அதில் ஆர்வம் காட்டாமல் இருந்து வருகிறார். விஜய்யின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியைப் பதிவு செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
கட்சித் தலைவராக உறவினர் பத்மநாபன், பொதுச் செயலாளராக எஸ்.ஏ.சந்திரசேகர், பொருளாளராக தாயார் ஷோபா ஆகியோர் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. கடந்த ஆண்டு நவம்பரில் இந்த செய்தி தீயாய் பரவிய நிலையில், கட்சியை பதிவு செய்த தகவல் தவறானது என விஜய் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் தனது பெயரை பயன்படுத்தி கூட்டங்களை நடத்தவோ அல்லது வேறு செயல்களில் ஈடுபடவோ தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் ஷோபா மற்றும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை நகர 5-வது உரிமையியல் நீதிமன்றத்தில் நடிகர் விஜய் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பதில் மனுவை எஸ்.ஏ.சந்திரசேகர் தாக்கல் செய்திருக்கிறார். அதில், விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டு விட்டது. கடந்த பிப்ரவரியில் நடந்த பொது கூட்டத்தில் விஜய் மக்கள் இயக்கத்தை கலைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அந்த மனுவில் அவர் கூறியிருக்கிறார். இதையடுத்து இந்த வழக்கு அக்டோபர் 29க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை, 30 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.
தமிழில் 1980-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் அமலா. இவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஜோடியாகவும் நடித்துள்ளார். மைதிலி என்னை காதலி, மெல்ல திறந்தது கதவு, வேலைக்காரன், வேதம் புதிது, அக்னி நட்சத்திரம், கொடி பறக்குது, மாப்பிள்ளை, வெற்றி விழா, மவுனம் சம்மதம் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து இருக்கிறார்.
1991-ல் கற்பூர முல்லை படத்தில் கடைசியாக நடித்து இருந்தார். தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்தார். 30 வருடங்களுக்கு பிறகு தற்போது கணம் என்ற தமிழ் படத்தில் அமலா மீண்டும் நடிக்கிறார். இந்த படத்தில் ஷர்வானந்த் கதாநாயகனாக நடிக்கிறார். இவரும் கடைசியாக 2015-ல் வெளியான ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை படத்தில் நடித்து இருந்தார்.

தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்தார். 6 வருடங்களுக்கு பிறகு மீண்டும் கணம் படம் மூலம் தமிழுக்கு வருகிறார். இதில் ஷர்வானந்த் ஜோடியாக ரீதுவர்மா நடிக்கிறார். நாசர், சதீஷ், ரமேஷ் திலக் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்கள். இந்த படத்தை ஸ்ரீகார்த்திக் இயக்குகிறார்.






