என் மலர்
சினிமா செய்திகள்
- இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் செல்வராகன் நடித்துள்ள பகாசூரன் படத்தின் டப்பிங் பணிகள் நிறைவடைந்துள்ளது.
- இதனை தனது சமூக வலைதளத்தில் மோகன் ஜி பதிவு ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.
பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. அதன்பின்னர் இவர் இயக்கிய 'திரெளபதி', 'ருத்ரதாண்டவம்' ஆகிய படங்கள் வரவேற்பை பெற்று சில சர்ச்சைகளையும் கிளப்பியது. இப்படங்களை தொடர்ந்து இவர் இயக்கி வரும் 'பகாசூரன்' படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதையின் நாயகனாகவும், நட்டி நட்ராஜ், ராதாரவி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்து வருகிறார்கள்.

பகாசூரன்
இந்த படத்திற்கு சாம்.சிஎஸ் இசையமைக்கிறார். 'பகாசூரன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது.

செல்வராகவன் - மோகன்ஜி
இந்நிலையில், இப்படத்தின் டப்பிங் பணிகள் நிறைவடைந்துள்ளது. இதனை தனது சமூக வலைதளத்தில் அறிவித்துள்ள இயக்குனர் மோகன் ஜி பதிவு ஒன்றையும் பகிர்ந்துள்ளார். அதில், "டப்பிங் பணிகள் முடிந்தது.. இந்த மாமனிதருடன் பணிபுரிந்த நாட்கள் மறக்க முடியாத நாட்கள்.. மீண்டும் செல்வா சாருடன் இணைந்து பணிபுரிய ஆசை.. இனிமையான, எளிமையான மாமனிதர் இவர்.. நன்றி செல்வராகவன் சார்" என்று புகைப்படம் ஒன்றை பகிர்ந்து குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக செல்வராகவன், "மகிழ்ச்சியான தருணங்கள் ! காலம் போனதே தெரியவில்லை ! பேரன்புக்கு நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.
மகிழ்ச்சியான தருணங்கள் ! காலம் போனதே தெரியவில்லை ! பேரன்புக்கு நன்றி 😍 https://t.co/WeWn3brcXb
— selvaraghavan (@selvaraghavan) October 11, 2022
- மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
- இப்படம் அமெரிக்காவில் வசூலில் சாதனை செய்துள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகி உலகம் முழுவதும் வரவேற்பைப் பெற்று வருகிறது. அமெரிக்காவில் இதுவரைக்கும் தமிழ் படங்கள் வசூலில் செய்த சாதனையை பொன்னியின் செல்வன் முறியடித்திருக்கிறது.

பொன்னியின் செல்வன்
தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் திரையிட்ட இடங்களில் ரசிகர்கள் உணர்ச்சிவயப்பட்டு படத்தை ரசித்து வருகிறார்கள். இதே போல தென்கொரியாவில் தமிழ் மொழியிலேயே இப்படம் ரிலீஸ் செய்யப்பட்டிருக்கிறது. இங்கு ஒரு திரையரங்கில் படத்தை திரையிடுவதற்கு முன்பாக ஏ.ஆர்.ரகுமான் இசையில் இடம்பெற்ற "பொன்னி நதி பார்க்கணுமே" என்ற பாடலை ஒலிக்க விட்டு அதை தென்கொரியாவின் ரசிகர்களும் சேர்ந்து பாடிய காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
பொன்னியின் செல்வன் நாவல் உலகில் உள்ள அனைவரையும் தமிழ் என்ற புள்ளியில் இணைத்திருப்பதோடு ராஜ ராஜ சோழனின் பெருமையை உலகறிய செய்திருக்கிறது என்கிறார்கள் தமிழ் ஆர்வலர்கள்.
- எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் 'துணிவு' படத்தில் நடித்து வருகிறார்.
- இப்படம் குறித்த புதிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் "துணிவு". இப்படத்தின் முதல் மற்றும் இரண்டாம் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்த படம் வங்கி கொள்ளையை மையமாக வைத்து தயாராவதாக ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், உண்மை கதையில் அஜித் நடித்து வருவதாக தகவல் வெளியானது.

அஜித் - சமுத்திரகனி
இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதனிடையே பிக்பாஸ் பிரபலங்கள் பாவனி, அமீர், சிபி ஆகியோர் நடிகர் அஜித்தை படப்பிடிப்பு தளத்தில் சந்தித்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

இந்நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த துணிவு படத்தின் படப்பிடிப்பு இன்று நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெரும் எதிர்ப்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக கூறப்பட்டதை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். மேலும் துணிவு பொங்கல் 2023 என்ற ஹேஷ்டாக்கையும் டிரண்ட் செய்து வருகின்றனர்.
- பாலிவுட்டின் முன்னணி நடிகர் அமிதாப் பச்சன்.
- இவர் இன்று தனது 80-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
பாலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அமிதாப் பச்சன். இவர் தனது சிறந்த நடிப்பாற்றலால் ரசிகர்கள் மத்தியில் தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டார். இரண்டு முறை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பின்பும் தொடர்ந்து நடித்து வரும் இவர் இன்று தனது 80-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

அமிதாப் பச்சன் - ரஜினிகாந்த்
இவருக்கு பிரதமர் மோடி மற்றும் திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் அமிதாப் பச்சனுக்கு வாழ்த்து தெரிவித்து சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதில், "தி லெஜண்ட். என்னை எப்போதும் ஊக்கப்படுத்திய ஒரு நபர். இந்திய சினிமாவின் இணையற்ற நடிகர் சூப்பர் ஹீரோ அமிதாப் பச்சன் 80-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். அவருக்கு அன்பும் மரியாதையும் கலந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்" என தெரிவித்துள்ளார்.
The legend.. someone who has inspired me always… the one true sensation and superhero of our glorious Indian film fraternity enters 80 .. happy birthday my dearest and most respected @SrBachchan Amitabh ji .. with lots of love and best regards always ❤️🙏🏻
— Rajinikanth (@rajinikanth) October 11, 2022
- நேற்று முன்தினம் நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதிக்கு இரட்டை குழந்தை பிறந்ததாக அறிவித்தனர்.
- இதனிடையில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றது தெரியவந்தது.
நடிகை நயன்தாராவின் காதல், கல்யாணம், குழந்தை எல்லாமே பரபரப்பாக பேசப்படும் விஷயமாகி விட்டது. நம்பர் ஒன் நடிகையாக இருக்கும் நயன்தாராவின் வாழ்க்கையும் சினிமாவை போலவே பரபரப்பு, எதிர்பார்ப்பு நிறைந்ததாக மாறிவிட்டது. நயன்தாராவின் காதல் கிளைமாக்ஸ் காட்சி இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் அரங்கேறியது. ஆறு ஆண்டுகளாக காதலித்தவர்கள் ஒன்றாகவே வாழ்ந்து வருகிறார்கள்.

கடந்த ஜூன் மாதம் 9-ந்தேதி மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கள் திருமணத்தையும் நடத்தினார்கள். திருமணமான நான்கு மாதத்தில் அதே 9-ந்தேதி தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்து இருப்பதாக அறிவித்தனர். பிஞ்சு குழந்தையின் கால்களை இருவரும் முத்த மிடுவது போன்ற புகைப்படத்தையும் இணையதளத்தில் வெளியிட்டு 2 குழந்தைகளுக்கு அம்மா, அப்பா ஆகிவிட்டோம் என்றனர்.

திருமணமான 4 மாதத்தில் குழந்தையா? என்று ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது. ஒரு வேளை திருமணத்துக்கு முன்பே கர்ப்பமாக இருந்திருப்பார். அதனால் அவசர அவசரமாக திருமணம் செய்திருப்பாரோ என்று பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. இந்த சந்தேகத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பது போன்று வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றிருப்பது தெரியவந்தது.

வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது என்பது எளிதான காரியமில்லை. பல்வேறு கட்டுப்பாடுகளையும் அதற்கான சட்டத்தையும் கடந்த ஆண்டு மத்திய அரசு கொண்டுவந்தது. எந்த சூழலில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்பது குறித்த விவரம் பின்வருமாறு:

* திருமணமான பெண்ணுக்கு கர்ப்பப்பை இல்லாமல் இருந்தால்.
* கர்ப்பப்பை வளர்ச்சி அடையாமல் இருந்தால்.
* கேன்சர் போன்ற நோய்களால் கர்ப்பப்பை அகற்றப்பட்டிருந்தால்.
* தெரியாத காரணங்களால் கரு பலமுறை தங்காத சூழ்நிலை.
* இயற்கையாகவே கருதங்கும் தன்மை இல்லாமல் பலமுறை கலைந்து போதல்.
* கருவை சுமந்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று உறுதிப்படுத்தப்பட்டால்.

இப்படிப்பட்ட ஏதாவது காரணங்கள் இருந்தால் மட்டுமே வாடகை தாயை நாட முடியும். இந்த சிகிச்சை அளிக்க சம்பந்தப்பட்ட மருத்துவமனை மத்திய அரசின் பிரத்தியேக கவுன்சிலில் பதிவு செய்து அனுமதி பெற்றிருக்க வேண்டும். அந்த மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவர், மயக்கவியல் நிபுணர், கருவை 56 நாட்கள் வரை வெளியில் வைத்து பாதுகாப்பதில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவ நிபுணர், ஒரு கவுன்சிலர் ஆகியோர் கட்டாயம் இருக்க வேண்டும்.

வாடகை தாய்க்கு 36 மாதங்களுக்கு மருத்துவ காப்பீடு கட்டாயம் எடுத்திருக்க வேண்டும். 56 நாட்கள் உருவான கருவை வாடகை தாயின் கர்ப்பப்பைக்குள் ஒரு முறை மட்டுமே செலுத்த வேண்டும். இந்த சட்டத்தை மீறும் தம்பதிக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை மற்றும் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். வாடகை தாயை கண்காணித்து வரும் மருத்துவமனைகள் கரு உருவான முதல் மாதத்தில் இருந்தே மாதந்தோறும் பரிசோதித்து வர வேண்டும். அதற்காக 'பிக்மி' வரிசை எண்ணும் வழங்க வேண்டும்.

இந்த எண் இருந்தால் தான் மட்டுமே பிறக்கும் குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் கூட பெற முடியும். இவ்வளவு நடைமுறை இருக்கும் போது அவற்றை நயன்தாரா பின்பற்றினாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. திருமணம் முடிந்து ஒரு குறிப்பிட்ட காலம் வரை காத்திருந்து சிகிச்சை, சோதனைகள் மேற்கொண்டு குழந்தை பெற்றுக்கொள்ள வாய்ப்பு இல்லை என்ற பிறகே வாடகைத்தாய் முறைக்கு செல்ல வேண்டும்.

ஆனால் நயன்தாரா விவகாரத்தில் திருமணத்துக்கு முன்பே வாடகைத் தாயிடம் கரு வளர்க்கப்பட்டுள்ளது. எனவே இது விதிமீறல் செயல் என பலரும் பேசி வருகின்றனர். இந்த பிரச்சினை சர்ச்சையானதும் இதுபற்றி மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரிடம் கேட்டபோது நயன்தாராவிடம் விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இதையடுத்து மருத்துவத்துறை அதிகாரிகள் உடனடியாக களத்தில் இறங்கி விசாரணை மேற்கொண்டனர். தமிழகத்தில் உள்ள பிரபலமான மருத்துவமனையில் தான் வாடகை தாய் குழந்தை பெற்றுள்ளார். அந்த மருத்துவமனை, வாடகை தாயின் பெயர் விபரங்கள், சிகிச்சை அளித்த மருத்துவர்கள் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் உடனடியாக சேகரித்தனர். அவற்றை ரகசியமாக வைத்துள்ள அதிகாரிகள் விபரங்களை வெளியிட மறுத்துவிட்டனர்.

இதற்கிடையில் நயன்தாரா விவகாரத்தில் விதிகள் மீறப்பட்டுள்ளதா? என்ன நடவடிக்கை எடுப்பது என்பது பற்றி விவாதிக்க மருத்துவதுறை உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் டி.எம்.எஸ்.சில் இன்று நடைபெற்றது. இதில் அமைச்சர் மா.சுப்பிரமணியனும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவை பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும் என்றனர் அதிகாரிகள்.
- நிவின் பாலி தற்போது கற்றது தமிழ் படத்தின் இயக்குனர் ராம் இயக்கி வரும் படத்தில் நடித்து வருகிறார்.
- இப்படம் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
2007-ஆம் ஆண்டு வெளியான 'கற்றது தமிழ்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ராம். அதன்பிறகு 'தங்கமீன்கள்', 'தரமணி', 'பேரன்பு' போன்ற படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்தார். இவர் தற்போது நிவின் பாலி நடிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தை இயக்கி வருகிறார்.

நிவின் பாலி - ராம்
இதில் நிவின் பாலிக்கு ஜோடியாக அஞ்சலி நடித்து வருகிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சூரி நடித்துள்ளார். வி ஹவ்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

படக்குழு
இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு படக்குழு 'ஏழு கடல் ஏழு மலை' என்று தலைப்பு வைத்துள்ளது. மேலும், இதனுடன் மோஷன் போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளது. மிகவும் வித்தியாசமான இந்த வீடியோ சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.
- அறிமுக இயக்குனர் லாரன்ஸ் ஜெயகுமார் இயக்கியுள்ள படம் 'அற்றைத்திங்கள் அந்நிலவில்'.
- இப்படத்தின் விழாவில் திண்டுக்கல் லியோனி கலந்துகொண்டு பேசினார்.
அறிமுக இயக்குனர் லாரன்ஸ் ஜெயகுமார் இயக்கியுள்ள 'அற்றைத்திங்கள் அந்நிலவில்' என்ற பட விழாவில் சிறப்பு விருந்தினராக திண்டுக்கல் லியோனி கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:- "என்னுடைய மாணவர் ஜெயக்குமார் லாரன்ஸ் தான் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். இன்னொரு மாணவர் பாபு ஆண்டனி. இந்த படத்தை சாதாரணமாக இவர்கள் எடுக்கவில்லை. பலவித யோசனைக்கு பிறகே எடுத்திருக்கிறார்கள். படம் என்றாலே ரத்தமும், சதையுமாக இருப்பதோடு காதல் காட்சிகள் இல்லாமல் இருக்கமுடியாது. ஆனால் இவர்கள், அதை மிக நாகரிகமாக கையாண்டிருக்கிறார்கள்.

அற்றைத்திங்கள் அந்நிலவில் படக்குழு
ரத்தம், சண்டை காட்சிகள், பழைய பாணியிலான காதல் காட்சிகள் என்று பார்த்து பார்த்து புளித்துப்போய் வெறுத்துப்போன ரசிகர்களுக்கு இந்த 'அற்றைத்திங்கள் அந்நிலவில்' படம் புதிய அனுபவத்தை கொடுப்பதுடன், ஒரு விருந்தாகவும் அமையும் என்பது என் நம்பிக்கை. சினிமாவில் நடிப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. அதை நான் அனுபவப்பூர்வமாக உணர்ந்திருக்கிறேன். ஒரு படத்தில் நான் நடிக்கும்போது, ஒரே ஒரு உணர்ச்சியை காட்டுவதற்காக நான் பட்ட கஷ்டம் எனக்குத்தான் தெரியும். அப்போது தான் புரிந்தது, நடிப்பு என்பது சாதாரண விஷயம் அல்ல." இவ்வாறு அவர் பேசினார்.
- மரகத நாணயம் படத்தை இயக்கிய ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கும் படத்தில் ஹிப்ஹாப் ஆதி நடித்து வருகிறார்.
- இப்படத்திற்கு வீரன் என்று பெயரிடப்பட்டுள்ளது.
இசையமைப்பாளர், ராப் பாடகர், நடிகர், இயக்குனர் என பன்முகத்தன்மை கொண்டவர் ஹிப்ஹாப் ஆதி. இவர் ஆம்பள, தனி ஒருவன், அரண்மனை-2, கதகளி, கத்தி சண்டை, இமைக்கா நொடிகள், கோமாளி, ஆக்ஷன் உள்பட பல படங்களுக்கு இசைமைத்துள்ளார். இதனிடையே மீசையை முறுக்கு என்ற படத்தை இயக்கி, கதாநாயகனாகவும் அறிமுகமானார். தொடர்ந்து நட்பே துணை, நான் சிரித்தால், அன்பறிவு ஆகிய படங்களிலும் கதாநாயகனாக நடித்தார்.

ஹிப்ஹாப் ஆதி
ஹிப்ஹாப் ஆதி தற்போது மரகத நாணயம் படத்தை இயக்கிய ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். ஃபேண்டசி காமெடி ஆக்ஷன் எண்டர்டெயினர் படமாக உருவாகி வரும் இப்படத்தில் ஆதிரா ராஜ் கதாநாயகியாகவும், வினய் ராய் வில்லனாகவும் நடித்துள்ளனர். வீரன் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் முனிஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஹிப்ஹாப் ஆதி
இப்படத்தை ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளியான சிவகுமாரின் சபதம், அன்பறிவு ஆகிய படங்களை தயாரித்த 'சத்யஜோதி பிலிம்ஸ்' டி.ஜி.தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரிக்க இணை தயாரிப்பை ஜி.சரவணன் மற்றும் சாய் சித்தார்த் செய்துள்ளனர். இப்படத்தின் ஒளிப்பதிவை தீபக் டி மேனன் மேற்கொள்ள, படத்தொகுப்பை ஜி.கே.பிரசன்னா கவனிக்க ஹிப்ஹாப் ஆதி இசையமைக்கிறார்.

ஹிப்ஹாப் ஆதி
இந்நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த வீரன் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும் இப்படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.
- கிரைம் பிராஞ்ச் படத்தின் மூலம் மலையாள திரையுலகிற்கு அறிமுகமானவர் காரியவட்டம் சசிகுமார்.
- உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார்.
பிரபல மலையாள நடிகர் காரியவட்டம் சசிகுமார், ஏராளமான மலையாள படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்திருக்கிறார். 1989-ல் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கிய கிரைம் பிராஞ்ச் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். அந்த படத்தில் அவரது நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்ததால் தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்தன.

காரியவட்டம் சசிகுமார்
அதன்பின்னர் நாகம், மிமிக்ஸ் பரேட், தேவசுரம், காம்பூலம், குஷ்ருத்தி கட்டு, ஆதாயத்தே கண்மணி உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். திருவனந்தபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வந்த காரியவட்டம் சசிகுமாருக்கு சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்களின் தீவிர சிகிச்சையில் இருந்து வந்த அவர் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார். காரியவட்டம் சசிகுமார் மறைவுக்கு மலையாள நடிகர்-நடிகைகள், திரைபிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
- 67வது தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளில் சூர்யாவின் சூரரைப் போற்று மற்றும் ஜெய்பீம் திரைப்படம் பல விருதுகளை குவித்துள்ளது.
- இதில் கலந்துக் கொண்ட சூர்யா ரோலக்ஸ் கேரக்டர் குறித்து பேசியுள்ளார்.
67வது தென்னிந்திய பிலிம்பேர் விருது வழங்கும் விழா நேற்று முன்தினம் பெங்களூரில் நடைபெற்றது. இதில் சூர்யா நடிப்பில் வெளியான 'சூரரைப் போற்று' திரைப்படம் 8 விருதுகளை பெற்றது. இதில் சிறந்த இயக்குனர் (சுதா கொங்கரா), சிறந்த நடிகர் (சூர்யா), சிறந்த நடிகை (அபர்ணா பாலமுரளி), சிறந்த இசை ஆல்பம் (ஜி.வி.பிரகாஷ்), சிறந்த துணை நடிகை (ஊர்வசி), சிறந்த பின்னணி பாடகர் (கோவிந்த் வசந்தா, கிறிஸ்டின் ஜோஸ்), சிறந்த பின்னணி பாடகி (தீ), சிறந்த ஒளிப்பதிவு (நிகோத் பொம்மி) ஆகிய பிரிவுகளில் விருதுகளை அள்ளி சென்றுள்ளது. மேலும் 'ஜெய்பீம்' திரைப்படம் 2 விருதுகளையும் பெற்றது.

விக்ரம் - ரோலக்ஸ்
இந்நிலையில் இவ்விழாவில் மனைவி ஜோதிகாவுடன் கலந்துகொண்ட சூர்யாவிடம், ரோலக்ஸ் கேரக்டர் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த சூர்யா, "நான் இன்று என்னவாக இருந்தாலும் அதற்கு ஊக்கமாக இருந்தவர் கமல்ஹாசன். அவர் இப்படி ஒரு வாய்ப்பு இருக்கிறது என்று சொன்னதும் மறுக்க முடியவில்லை. அவருக்காகவே அந்த ரோலக்ஸ் கேரக்டரில் நடித்தேன்" என்றார். 'ரோலக்ஸ் மீண்டும் வருவாரா?' என்ற கேள்விக்கு, "இதற்கு காலம் பதில் சொல்லும். படம் உருவானால் அந்த கேரக்டரில் நிச்சயம் மீண்டும் நடிப்பேன்" என்றார்.
- தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகை ராஷ்மிகா மந்தனா.
- இவர் விஜய்யின் ‘வாரிசு’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
தமிழில் சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக அறிமுகமான ராஷ்மிகா மந்தனா தற்போது விஜய்யுடன் தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இப்படம் 2023-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில் இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

வாரிசு
இந்நிலையில் நடிகை ராஷ்மிகா, தனுஷ் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் ஜனவரி மாதம் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

தனுஷ் - ராஷ்மிகா
இதையடுத்து இந்த படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கவுள்ளதாகவும் இது தொடர்பாக படக்குழு அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
- ஹன்சிகா இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் புதிய படத்தில் இணைந்துள்ளார்.
- இதன் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது.
தமிழ் திரையுலகில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே, விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு போன்ற பிரபலங்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் ஹன்சிகா. 'சின்ன குஷ்பு' என்று அன்போடு அழைக்கப்பட்ட ஹன்சிகா பட வாய்ப்புகள் குறைய தொடங்கியதும், தற்காலிகமாக சினிமாவுக்கு சிறிது காலம் ஓய்வு கொடுத்தார்.

ஹன்சிகா பட பூஜை
சிறிய இடைவெளிக்குப் பிறகு 'மஹா' என்ற படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கலவையான விமர்சனம் பெற்ற இப்படத்தில் சிம்பு கவுரவ வேடத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் ஆர்.கண்ணன் இயக்கும் புதிய திரைப்படத்தில் ஹன்சிகா நடிக்கிறார்.

படக்குழு
இப்படத்தில் மெட்ரோ சிரிஷ், மயில்சாமி, தலைவாசல் விஜய், பிரிகிடா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றதையடுத்து இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ளது.






