என் மலர்
சினிமா செய்திகள்
- சின்னத்திரை நடிகைகள் மற்றும் தொகுப்பாளர்களுக்கு ஆடை வடிவமைப்பு செய்து கொடுத்து வருகிறார் மஞ்சு.
- மஞ்சு கடந்த ஜனவரி மாதம் 5 லட்சம் ரூபாயை அபர்ணா வங்கி கணக்கிற்கு செலுத்தியிருக்கிறார்.
சென்னை மேற்கு மாம்பலம் ஆற்காடு சாலையை சேர்ந்தவர் மஞ்சு. ஆடை வடிவமைப்பு தொழில் செய்து வருகிறார். சின்னத்திரை நடிகைகள் மற்றும் தொகுப்பாளர்களுக்கு ஆடை வடிவமைப்பு செய்து கொடுத்து வரும் மஞ்சுவுக்கு 2 மகள்கள் உள்ளனர். நடிகர் ஜெமினி கணேசன் மற்றும் நடிகை சாவித்திரியின் பேரனான நடிகர் அபிநய் மனைவி அபர்ணா ஆகியோர், மஞ்சுவிடம் வாடிக்கையாளராக நன்றாக பழகி வந்துள்ளனர்.
மஞ்சுவின் மகள் லாவண்யா ஸ்ரீ நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்ததை அறிந்த அபர்ணா ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் தனக்கு தெரிந்த நண்பர் இருப்பதாகவும் 20 லட்சம் ரூபாய் கொடுத்தால் லாவண்யா ஸ்ரீக்கு மருத்துவ கல்லூரியில் இடம் வாங்கி விடலாம் எனவும் கூறி இருக்கிறார். முதற்கட்டமாக 5 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்து மருத்துவ சீட்டை புக் செய்து ரசீது பெற்றுக் கொள்ளலாம் என அபர்ணா கூறியுள்ளார். மீதி பணத்தை கல்லூரியில் சேர்ந்த பின்பு செலுத்திக் கொள்ளலாம் எனவும் கூறி இருக்கிறார்
இதனை நம்பிய மஞ்சு கடந்த ஜனவரி மாதம் 5 லட்சம் ரூபாயை அவரது வங்கி கணக்கிற்கு செலுத்தியிருக்கிறார். பணத்தை பெற்றுக் கொண்ட அபர்ணா 5 நாட்களுக்கு பிறகு வாட்ஸ் அப்பில் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்து விட்ட தாக சான்றிதழ் ஒன்றை அனுப்பி இருக்கிறார்.
அந்த சான்றிதழை எடுத்துக் கொண்டு ராமச்சந்திரா மருத்துவ கல்லூரிக்கு சென்று மகளை சேர்ப்பதற்காக மஞ்சு சென்றபோது, அது போலியான சான்றிதழ் என மஞ்சுவுக்கு தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மஞ்சு, தான் கொடுத்த பணத்தை அபர்ணாவிடம் திரும்ப கேட்டுள்ளார்.
அப்போது 5 லட்சம் ரூபாய் பணத்தை தன் தம்பி வங்கிக் கணக்கிற்கு தான் அனுப்பியதாகவும், தனது தம்பியிடம் சென்று வாங்கிக் கொள்ளுமாறும் அபர்ணா கூறி அலைக்கழித்து உள்ளார். தொடர்ந்து பல்வேறு காரணங்களை கூறி அபர்ணா இழுத்தடித்ததால் மஞ்சு மாம்பலம் போலீசில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் அபர்ணா மீது 403, 406, 420, 465, 471, 120 பி ஆகிய 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இதேபோன்று அபர்ணா எவ்வளவு பேரிடம் மோசடி செய்துள்ளார் என்பது குறித்து விசாரணை நடத்தி வரும் மாம்பலம் போலீசார் அவரை கைது செய்ய தீவிரமாக தேடி வருகின்றனர். இதேபோன்று அபர்ணா வேறுயாரிடமும் மோசடி செய்துள்ளாரா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அபர்ணாவை கைது செய்ய போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
- போயபதி ஸ்ரீனு இயக்கத்தில் உஸ்தாத் ராம் பொத்தினேனி நடிப்பில் உருவாகவுள்ள படம் போயப்பட்டிராப்போ (BoyapatiRAPO).
- இப்படத்தின் ரிலீஸ் தேதியை போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.
பிரபல இயக்குனர் போயபதி ஸ்ரீனு இயக்கத்தில் உஸ்தாத் ராம் பொத்தினேனி நடிப்பில் உருவாகவுள்ள படம் போயப்பட்டிராப்போ (BoyapatiRAPO). இப்படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீனின் சார்பில் ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிக்கிறார். இப்படத்தின் கதாநாயகியாக நடிகை ஸ்ரீலீலா நடிக்கிறார். சந்தோஷ் டிடேக் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு எஸ்.எஸ்.தமன் இசையமைக்கிறார்.
இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ்யை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் வருகிற அக்டோபர் 20, 2023 அன்று தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த போஸ்டரை ரசிகர்கள் பலரும் வைரலாக்கி வருகின்றனர்.
- இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'பொன்னியின் செல்வன் -2'.
- இப்படம் வருகிற ஏப்ரல் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன்-2 திரைப்படம் வருகிற ஏப்ரல் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் முதல் பாகம் ரசிகர்களை கவர்ந்து நல்ல வரவேற்பை பெற்றதால் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

பொன்னியின் செல்வன் -2
பொன்னியின் செல்வன் படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நாளை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொள்ளவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.

பொன்னியின் செல்வன் -2
இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் எப்படி உருவாகுகிறது என்ற கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
- தயாள் பத்மநாபன் இயக்கத்தில் வரலட்சுமி சரத்குமார் புதிய படத்தில் நடித்து முடித்துள்ளார்.
- இப்படத்தின் தலைப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
தயாள் பத்மநாபன் இயக்கத்தில் வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் 'கொன்றால் பாவம்'. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது வரலட்சுமி சரத்குமார் மற்றும் ஆரவ் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் படத்தை தயாள் பத்மநாபன் இயக்கி தயாரித்துள்ளார்.
இதில் சந்தோஷ் பிரதாப், மஹத் ராகவேந்திரா, சுப்ரமணியம் சிவா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து அடுத்தக்கட்ட பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வரும் நிலையில் இப்படத்தின் தலைப்பு குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்திற்கு 'மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்
இது குறித்து இப்படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளருமான தயாள் பத்மநாபன் கூறியதாவது, "அடிப்படையில், நான் ஹனுமானின் தீவிரமான பக்தர் மற்றும் அவரது இருப்பை உள்ளடக்கிய சில தலைப்புகளை என்னுடைய படங்களுக்கு வைக்க விரும்பினேன். இந்தப்படம் பல சாதக பாதகங்களைக் கொண்ட காவல் நிலையத்தின் பின்னணியில் நடக்கும் சம்பவங்களைக் கதையாகக் கொண்டது.

மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்
உண்மையான ஸ்டேஷன் பெயர்கள் மற்றும் பகுதிகளை நாங்கள் இதில் படமாக்க விரும்பவில்லை. அதனால், 'மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்' என்று கற்பனையான பெயரைக் கொண்டு வர முடிவு செய்தோம். தற்போது படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டோம். போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது". இவ்வாறு அவர் கூறினார்.

மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்
வரலக்ஷ்மி சரத்குமார் & ஆரவ் இருவரும் போலீஸ் அதிகாரிகளாக முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நான்-லீனியர் பாணியில் புதிய பரிமாணத்தில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் சந்தோஷ் பிரதாப், மஹத் ராகவேந்திரா, சுப்ரமணியம் சிவா மற்றும் பல முக்கிய நடிகர்கள் முக்கிய வேடங்களில் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
- நடிகர் கார்த்தி தற்போது ராஜு முருகன் இயக்கத்தில் ஜப்பான் படத்தில் நடித்து வருகிறார்.
- கார்த்தி தற்போது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருப்பது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பருத்திவீரன் படத்தின் மூலம் திரையுலகிற்கு கதாநாயகனாக அறிமுகமானவர் கார்த்தி. அதன்பின்னர் ஆயிரத்தில் ஒருவன், பையா, மெட்ராஸ், கைதி, சுல்தான் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான சர்தார் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜப்பான் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் கார்த்தி, நடிகர் நானி குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருப்பது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில், நானி எல்லாம் இடங்களிலும் நீங்கள் தான் இருக்கிறீர்கள். இது மிக அற்புதமாகவும், சந்தோஷமாவும் இருக்கிறது. தசரா படத்திற்கு நிறைய சக்தி இருக்கிறது என்று பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
நடிகர் நானி தற்போது தசரா படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
. @NameisNani, you are everywhere, and it's amazing to see your energy. More power to #Dasara ???
— Karthi (@Karthi_Offl) March 28, 2023
- கௌதம் கார்த்திக் நடித்துள்ள '1947- ஆகஸ்ட் 16' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
- இதில் சிறப்பு விருந்தினராக சிவகார்த்திகேயன் கலந்துக் கொண்டார்.
தீனா, ரமணா, கஜினி, துப்பாக்கி, கத்தி, சர்க்கார் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ், 'எங்கேயும் எப்போதும்', 'ராஜா ராணி', 'மான் கராத்தே', 'ரங்கூன்' போன்ற படங்களையும் தயாரித்துள்ளார். இவருடைய 'ஏ.ஆர் முருகதாஸ் ப்ரொடைக்ஷன்ஸ்' சார்பில் தற்போது கௌதம் கார்த்திக் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் '1947- ஆகஸ்ட் 16' படத்தை தயாரித்துள்ளார்.

1947 ஆகஸ்ட் 16
இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸிடம் இணை இயக்குனராக பணியாற்றிய என்.எஸ்.பொன்குமார் இயக்கியுள்ளார். அறிமுக நாயகி ரேவதி நடித்திருக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். ஓம் பிரகாஷ் பட் மற்றும் நர்சிராம் சௌத்ரி இவர்களுடன் இணைந்து ஏ.ஆர் முருகதாஸ் இந்த படத்தை தயாரிக்கிறார்.

சிவகார்த்திகேயன் - ஏ.ஆர்.முருகதாஸ்
இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சிவகார்த்திகேயன், அவருடைய நடிப்பில் ரஜினியின் சாயல் இருக்கும் என்று தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, எனக்கு கார்த்திக் சார் ரொம்ப பிடிக்கும். கார்த்திக் சார் ரொம்ப ஸ்வீட். கவுதம் கார்த்திக் மீட் பண்ணதுக்கு அப்புறம் ரொம்ப வருஷம் கழிச்சு, கார்த்திக் சாரை பார்த்தேன். ரொம்ப அழகான நடிகர்.
அதை தாண்டி சார் கிட்ட ரொம்ப பிடிச்ச விஷயம், எந்த நடிகருடைய சாயலும் அவரிடம் இருக்காது. எல்லாரிடமும் யாருடைய சாயலாவது பார்க்க முடியும். என்னை எடுத்துக் கொண்டால் நான் பாதி ரஜினி சாருடைய நடிப்பை தான் வெளிப்படுத்துவேன் என்றார். இவர் பேசிய இந்த வீடியோவை ரசிகர்கள் பலரும் வைரலாக்கி வருகின்றனர்.
சிவகார்த்திகேயன், நடிகர் ரஜினியின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.
- நடிகை சமந்தாவின் சாகுந்தலம் திரைப்படம் ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
- இதைத்தொடர்ந்து இப்படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழு ஈடுப்பட்டுள்ளது.
நடிகை சமந்தா தற்போது சரித்திர கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ள சாகுந்தலம் படத்தில் நடித்துள்ளார். மலையாள நடிகர் தேவ் மோகன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை குணசேகர் இயக்கியுள்ளார். ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார்.

சமந்தா
இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற 5 மொழிகளில் வருகிற ஏப்ரல் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனிடையே நடிகை சமந்தாவுக்கு சில மாதங்களுக்கு முன்பு மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக சமந்தா சிகிச்சை பெற்று வந்தார்.

சமந்தா
இந்நிலையில் சமந்தா அளித்துள்ள நேர்காணல் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர் கூறியதாவது, "எனக்கு மயோசிடிஸ் நோய் இன்னும் முழுமையாக குணமாகவில்லை. தொடர்ந்து அதற்கான சிகிச்சை எடுத்து வருகிறேன். ஆனாலும் முன்பு இருந்த பாதிப்பில் இருந்து தேறி இருக்கிறேன். இந்த நோய் பாதிப்பில் இருந்து விரைவில் முழுமையாக மீண்டு வருவேன்" என்றார்.
- செல்வா இயக்கத்தில் வெளியான அமராவதி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானாவர் அஜித்.
- 30 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இப்படம் வெளியாகவுள்ளது.
1993 ஆம் ஆண்டு செல்வா இயக்கத்தில் வெளியான அமராவதி படத்தின் மூலம் தமிழ் திரையுகிற்கு கதாநாயகனாக அறிமுகமானவர் அஜித். சோழா கிரியேஷன்ஸ் சார்பில் சோழா பொன்னுரங்கம் தயாரித்திருந்த இப்படத்தில் சங்கவி கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் கவிதா, நாசர், தலைவாசல் விஜய், சார்லி, நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இந்நிலையில் 30 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அமராவதி திரைப்படம் வெளியாகவுள்ளது. அதன்படி இப்படம் அஜித் பிறந்தநாளை முன்னிட்டு வருகிற மே மாதம் டிஜிட்டலில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் மீண்டும் வெளியாகவுள்ளதால் ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் என்று பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
- இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘விடுதலை’.
- இப்படம் வருகிற 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
வெற்றிமாறன், தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் 'விடுதலை' படத்தை இயக்கியுள்ளார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. விஜய் சேதுபதி இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

விடுதலை
இளையராஜா இசையமைக்கும் இப்படத்தை ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார். இப்படம் வருகிற மார்ச் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இதனை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
- சிம்பு தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘பத்து தல’.
- இப்படம் வருகிற 31-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் 'பத்து தல'. இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் சிம்புவுடன் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இப்படம் வருகிற 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதைத் தொடர்ந்து படக்குழு புரொமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் நான்காவது பாடலான 'ஒசரட்டும் பத்து தல' பாடல் தற்போது வெளியாகியுள்ளது. மிகவும் மாஸாக உருவாகியுள்ள இந்த பாடலை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
- 'ஆர்.ஆர்.ஆர்.' திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
- இப்படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல் சமீபத்தில் ஆஸ்கர் விருதை வென்றது.
ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படம் உலகம் முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் 25-ஆம் தேதி வெளியானது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்கள் பெற்று வசூல் சாதனையும் நிகழ்த்தியது.

ஆர்.ஆர்.ஆர்
இப்படத்தில் இடம் பெற்றுள்ள 'நாட்டு நாட்டு' பாடல் சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதை வென்றது. இதைத்தொடர்ந்து படக்குழுவினரை பலரும் பாராட்டி வருகின்றனர். மறுபுறம் இயக்குனர் ராஜமவுலி ஆஸ்கர் விருது புரொமோஷனுக்காக ரூ.80 கோடி செலவு செய்ததாக தகவல் பரவி வந்தது.

ஆர்.ஆர்.ஆர். படக்குழு
இந்நிலையில், இந்த செய்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இயக்குனர் ராஜமவுலியின் மகன் எஸ்.எஸ். கார்த்திகேயா சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், ஆஸ்கர் விருது புரொமோஷன் நிகழ்ச்சியை ரூ.5 கோடியில் முடிக்க திட்டமிட்டதாகவும் ஆனால், ரூ8.5 கோடி செலவானதாக கூறினார் என்று தகவல் வெளியாகியுள்ளது. கார்த்திகேயா இப்படத்தின் புரொமோஷன் பணிகளை முன்னெடுத்து சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘லியோ’.
- சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நிறைவுற்றது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'லியோ' (Leo-Bloody Sweet). இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார்.

இப்படத்தில் நடிகை திரிஷா, நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குனர்கள் மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்ததையடுத்து சமீபத்தில் நிறைவுற்றது. இந்நிலையில், இப்படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 'லியோ' படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் வருகிற 29-ஆம் தேதி தொடங்கப்படவுள்ளதாகவும் இங்கு படப்பிடிப்பு முடிந்தவுடன் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்கு படக்குழு ஹைதராபாத் செல்லவுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.






