என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • மாதவரம் பொன்னியம்மன்மேடு வி.பி.சி. நகர் முதல் தெருவை சேர்ந்தவர் கலைச்செல்வன்.
    • இவர் நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யாவிடம் ரூ.94 ஆயிரம் கடன் வாங்கி இருந்தார்.

    மாதவரம் பொன்னியம்மன்மேடு வி.பி.சி. நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் கலைச்செல்வன் (29). இவர் அதே பகுதியில் வசித்து வரும் நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யாவிடம் ரூ.94 ஆயிரம் கடன் வாங்கி இருந்தார். இதில் ரூ.52 ஆயிரத்தை திருப்பி கொடுத்த கலைச்செல்வன் மீதி பணத்தை கொடுக்கவில்லை என்று தெரிகிறது.

    இந்த நிலையில் பணம் தொடர்பாக நேற்று இரவு கலைச்செல்வனின் வீட்டிற்கு சென்று நித்யா கேட்டார். இதில் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டதாகவும் தெரிகிறது. இதுகுறித்து இருதரப்பினரும் மாதவரம் போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் சிவகுமார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்.

    • நடிகர் தனுஷ் தற்போது நடித்து வரும் திரைப்படம் ‘கேப்டன் மில்லர்’.
    • இப்படத்தின் புதிய அறிவிப்பை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.

    இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் தற்போது 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். சத்திய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார்.


    கேப்டன் மில்லர்

    மேலும் நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன் மற்றும் சுமேஷ் மூர், சிவராஜ்குமார்,எட்வர்ட் சொனின்ப்ளிக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இடையிலான போரை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டு வரும் இந்த படத்தில் ஏராளமான துப்பாக்கி குண்டுகள் மற்றும் குண்டுவெடிப்புகளுடன் படக்குழு பெரிய அளவில் காட்சியை பதிவு செய்து வருகிறது.


    கேப்டன் மில்லர் போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் வருகிற ஜுன் மாதமும் டீசர் ஜூலை மாதமும் வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.



    • பா.இரஞ்சித்தின் உதவி இயக்குனரான விடுதலை சிகப்பி, இந்து கடவுளை இழிவுப்படுத்தும் வகையில் பேசியதாக புகார் எழுந்தது.
    • இதைத்தொடர்ந்து அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

    சென்னை அபிராமபுரத்தில் கடந்த ஏப்ரல் 30-ம் தேதி நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கவிஞரும், பா.இரஞ்சித்தின் உதவி இயக்குனருமான விடுதலை சிகப்பி, இந்து கடவுளை இழிவுப்படுத்தும் வகையில் பேசியதாக புகார் எழுந்தது. அதன்பின்னர் பாரத் இந்து முன்னணி அமைப்பின் மத்திய சென்னை மாவட்ட தலைவர் சுரேஷ் இது தொடர்பாக போலீசில் புகார் அளித்திருந்தார்.

    இதையடுத்து இந்து கடவுளை இழிவுப்படுத்தும் வகையில் பேசியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் பா.இரஞ்சித்தின் உதவி இயக்குனரும், கவிஞருமான விடுதலை சிகப்பி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

    இந்நிலையில், இந்த வழக்கில் முன் ஜாமின் கோரி விடுதலை சிகப்பி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், கடவுளை அவமதிக்கும் வகையில் தாம் பேசவில்லை என்றும் அரசியல் பழிவாங்கும் நோக்கத்தோடு போலியாக அளிக்கப்பட்ட புகாரில் காவல் துறை தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

    இந்த வழக்கு கே.ஜி. திலகவதி முன்பு விசாரணைக்கு வந்த போது காவல் துறை விசாரணைக்கு தேவைப்படும் போது ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் விடுதலை சிகப்பிக்கு முன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.

    • நடிகர் விஜய் தன் தொண்டர்கள் மூலம் பல சமூக சேவைகளை செய்து வருகிறார்.
    • இவர் 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை சந்திக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

    நடிகர் விஜய்யின் விஜய் மக்கள் இயக்கம் விரைவில் அரசியல் இயக்கமாக மாறும் என்ற எதிர்பார்ப்பு சில ஆண்டுகளாகவே இருந்து வருகிறது. இவர் தன் தொண்டர்கள் மூலம் சமூக சேவை பல செய்து வருகிறார்.

    இந்நிலையில், பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை நேரில் அழைத்து பாராட்டி, கல்வி உதவித்தொகை வழங்க நடிகர் விஜய் திட்டமிட்டுள்ளதாகவும் மாவட்டம் தோறும் மாணவர்களின் விவரங்களை அனுப்ப விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    மொத்தமுள்ள 234 சட்டசபை தொகுதிகளில் உள்ள 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற தலா மூன்று மாணவர்கள் வீதம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ - மாணவியருக்கு பரிசு, கல்வி உதவித் தொகை வழங்க, விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இதற்கான நிகழ்ச்சி, அடுத்த மாதம், சென்னை அல்லது திருச்சியில் நடத்தப்பட உள்ளதாகவும் அதில் கூடும் ரசிகர்களுக்கு மத்தியில், மாணவ - மாணவியருக்கு விஜய் உதவித் தொகைகளை வழங்க உள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

    • ஆந்திராவின் முன்னாள் முதல்-அமைச்சர் என்.டி. ராமாராவ் நூற்றாண்டு விழாவில் நடிகர் ரஜினி சந்திரபாபு நாயுடுவை பாராட்டி பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • தற்போது நடிகர் சுமன் சந்திரபாபு நாயுடுவை பாராட்டி பேசியுள்ளார்.

    ஆந்திராவின் முன்னாள் முதல்-அமைச்சர் என்.டி. ராமாராவ் நூற்றாண்டு விழாவில் நடிகர் ரஜினி சந்திரபாபு நாயுடுவை பாராட்டி பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது நடிகர் சுமன் சந்திரபாபு நாயுடுவை பாராட்டி பேசியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:- ஐதராபாத் நகரின் வளர்ச்சிக்கு சந்திரபாபு நாயுடு தான் காரணம். அவரது ஆட்சியில் விமான நிலையம், தொழில் நுட்ப நிறுவனங்கள் ஏராளமானவற்றை கொண்டு வந்தார். இந்த நிறுவனங்கள் மூலம் இப்போது எத்தனையோ பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. அதற்கெல்லாம் காரணம் சந்திரபாபுவின் திட்டமே. அரசியலில் ஏற்ற தாழ்வுகள் உண்டு. அவர் நல்ல முதல்-அமைச்சர்.

    நடிகர் ரஜினி தனது உரையில் எந்த கட்சியையும், தலைவரையும் விமர்சிக்கவில்லை. முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி குறித்து ரஜினிகாந்த் எதுவும் குறிப்பிடாவிட்டாலும், அவரை ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர் விமர்சிப்பது சரியல்ல. இவ்வாறு அவர் கூறினார்.

    ரஜினியை தொடர்ந்து நடிகர் சுமன் சந்திரபாபு நாயுடுவை பாராட்டி பேசி உள்ளது ஆந்திர அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது நடிகர் சுமனின் பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

    • நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா தனது சொகுசு காரின் சாவி தொலைந்து போய்விட்டதாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
    • இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா வீட்டில் உள்ள லாக்கரில் வைத்திருந்த தங்க, வைர நகைகளைக் காணவில்லை என்று தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் கடந்த பிப்ரவரி மாதம் புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி ஐஸ்வர்யா வீட்டு பணிப்பெண்களான ஈஸ்வரி, லட்சுமி, கார் டிரைவர் வெங்கடேசன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பணிப்பெண் ஈஸ்வரி மற்றும் வெங்கடேசன் இருவரும் ஐஸ்வரியாவின் வீட்டிலிருந்து திட்டமிட்டு நகைகளை திருடியது தெரியவந்தது.


    சௌந்தர்யா ரஜினிகாந்த்

    சௌந்தர்யா ரஜினிகாந்த்

    இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா தனது சொகுசு காரின் சாவி தொலைந்து போய்விட்டதாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆர்.ஜே.பாலாஜி தற்போது நடித்துள்ள படம் சிங்கப்பூர் சலூன்.
    • இப்படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

    ஆர்.ஜே.பாலாஜி தற்போது கதாநாயகனாக நடித்து வரும் படம் 'சிங்கப்பூர் சலூன்'. இந்த படத்தை 'ரவுத்திரம்', 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா', 'காஷ்மோரா' உள்ளிட்ட படங்களை இயக்கிய கோகுல் இயக்குகிறார். ஆர்.ஜே.பாலாஜி இதில் சிகையலங்கார நிபுணராக நடிக்கிறார். இதற்காக அவர் சுமார் ஒன்றரை மாதம் சிகையலங்கார நிபுணர்களிடம் பயிற்சி பெற்றுள்ளார்.


    லோகேஷ் கனகராஜ் - ஆர்.ஜே.பாலாஜி

    லோகேஷ் கனகராஜ் - ஆர்.ஜே.பாலாஜி

    இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பில் ஐசரி கே கணேஷ் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜுடன், ஆர்.ஜே.பாலாஜி எடுத்துக் கொண்ட புகைப்படமும் ஒன்றும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனால் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    • இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'கஸ்டடி'.
    • இப்படம் வருகிற 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் 'கஸ்டடி'. இப்படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடித்துள்ளார். ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் சார்பாக ஸ்ரீனிவாசா சித்தூரி இதனை தயாரித்துள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்திருக்கிறார்.


    கஸ்டடி 

    கஸ்டடி 

    'கஸ்டடி' திரைப்படத்தில் வில்லனாக அரவிந்த் சாமி நடித்திருக்கிறார். மேலும், இதில் சரத்குமார், வென்னேலா கிஷோர், பிரேம்ஜி, சம்பத் ராஜ், பிரியாமணி மற்றும் பிரேமி விஷ்வநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர்.


    லியோ

    லியோ

    இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இதையடுத்து இப்படத்தின் புரொமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் புரொமோஷனுக்காக இயக்குனர் வெங்கட் பிரபு நேர்காணலில் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் தமிழ் திரையுலகம் ஏன் ஒரு பெரிய பான் இந்திய படத்தை கொடுக்கவில்லை? என்று நெறியாளர் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த வெங்கட் பிரபு, நான் என்ன நினைக்கிறேன் என்றால் அவர்கள் தமிழ் பார்வையாளர்களுக்காக படத்தை இயக்குகின்றனர். லியோ திரைப்படம் கண்டிப்பாக அனைத்து மொழிகளிலும் கவனிக்கத்தக்க ஒரு படமாக இருக்கும் என்றார்.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

    • நடிகர் ஜெய் தற்போது நடித்துள்ள திரைப்படம் ’தீராக்காதல்’.
    • இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

    இயக்குனர் ரோகின் இயக்கத்தில் ஜெய் நடிக்கும் திரைப்படம் 'தீராக் காதல்'.இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவதா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சித்து குமார் இசையமைக்கிறார். ரவிவர்மன் நீலமேகம் ஒளிப்பதி செய்கிறார். பிரசன்னா ஜி.கே. படத்தொகுப்பு மேற்கொள்கிறார்.


    தீராக்காதல் போஸ்டர்

    இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், 'தீராக் காதல்' திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் டிரைலர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.


    • நாடு முழுவதும் கடந்த 5-ந் தேதி 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் வெளியானது.
    • இப்படம் 4 நாட்களில் ரூ.50 கோடி வசூலை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

    நாடு முழுவதும் கடந்த 5-ந் தேதி 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் வெளியானது. கேரளாவில் இந்து, கிறிஸ்தவ பெண்களை மூளை சலவை செய்து வெளிநாட்டுக்கு கடத்தி சென்று தீவிரவாத இயக்கத்தில் சேர்ப்பதாக இந்த படத்தின் கதை சித்தரிக்கப்பட்டு இருந்தது. இதற்கு கேரளா, மேற்கு வங்காளம், தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. என்றாலும் எதிர்ப்பை மீறி நாடு முழுவதும் இந்த படம் திரையிடப்பட்டது.

    தமிழ் நாட்டில் பல தியேட்டர்களில் இந்த படம் வெளியானது. இதுபோல கேரளாவிலும் 30-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இந்த படம் திரையிடப்பட்டது. படம் வெளியான 4 நாட்களில் ரூ.50 கோடி வசூலாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே இந்த படத்திற்கு மேற்கு வங்காளம் தடை விதித்து உள்ளது.

    இந்நிலையில், 'தி கேரளா ஸ்டோரி' படக்குழுவை சேர்ந்த ஒருவருக்கு சமீபத்தில் கொலை மிரட்டல் வந்தது. இதுபற்றி படத்தின் இயக்குனர் சுதிப்தோ சென் மும்பை போலீசில் புகார் கொடுத்தார். அதில் படக்குழுவை சேர்ந்தவருக்கு டெலிபோன் மூலம் மிரட்டல் வந்துள்ளது. வீட்டை விட்டு தனியாக வெளியே வந்தால் மீண்டும் வீடு போய் சேரமுடியாது என்று மர்ம நபர் மிரட்டியுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.

    இது தொடர்பாக மும்பை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மிரட்டல் வந்த நபருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

    • நடிகை நயன்தாரா ’டெஸ்ட்’ திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.
    • இப்படத்திற்கு பின்னணி பாடகி சக்தி ஸ்ரீ கோபாலான் இசையமைக்கிறார்.

    தமிழ்ப் படம், விக்ரம் வேதா, இறுதி சுற்று, மண்டேலா உள்ளிட்ட படங்களை தயாரித்த YNOT ஸ்டுடியோஸ் சஷிகாந்த் தற்போது இயக்குனராக அறிமுகமாகும் முதல் படத்தில் நயன்தாரா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் மாதவன், சித்தார்த் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.


    'டெஸ்ட்' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் படக்குழு தெரிவித்திருந்தது. சமீபத்தில் இப்படத்திற்கு பிரபல பின்னணி பாடகி சக்தி ஸ்ரீ கோபாலான் இசையமைக்க உள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது.



    இந்நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'டெஸ்ட்' திரைப்படத்தில் நடிகை மீரா ஜாஸ்மின் இணைந்துள்ளார். இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.


    • விஜய் ஆண்டனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பிச்சைக்காரன் -2’.
    • இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

    சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த படம் 'பிச்சைக்காரன்'. கடந்த 2016-ம் ஆண்டு வெளியான இப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றதோடு, விஜய் ஆண்டனியின் திரையுலக பயணத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இதில் விஜய் ஆண்டனி நடிப்பதோடு மட்டுமல்லாமல் இயக்கியும் உள்ளார்.


    பிச்சைக்காரன் -2

    இப்படம் ஏப்ரல் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு சில காரணங்களால் ரிலீஸ் தள்ளிப்போனது. இதைத்தொடர்ந்து 'பிச்சைக்காரன் -2' படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் புதிய பாடல் நாளை மாலை 4 மணிக்கு வெளியாகும் என விஜய் ஆண்டனி தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார். அதில், "நேத்து நைட்டு கனவுல கடவுளோட மடியில பேயி ஒன்னு படுத்துருக்கத பாத்தேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    'பிச்சைக்காரன் -2' திரைப்படம் வருகிற மே 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.


    ×