என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    தேவர் பிலிம்சின் பெரிய வெற்றிப்படம் "ஆட்டுக்கார அலமேலு." இதன் கதாநாயகியாக 'படாபட்' ஜெயலட்சுமியை நடிக்க வைக்கலாம் என்று பலர் யோசனை கூறினார்கள். அதை ஏற்க சாண்டோ சின்னப்ப தேவர் மறுத்துவிட்டார்.

    தேவர் பிலிம்சின் பெரிய வெற்றிப்படம் "ஆட்டுக்கார அலமேலு." இதன் கதாநாயகியாக 'படாபட்' ஜெயலட்சுமியை நடிக்க வைக்கலாம் என்று பலர் யோசனை கூறினார்கள். அதை ஏற்க சாண்டோ சின்னப்ப தேவர் மறுத்துவிட்டார்.

    ஸ்ரீபிரியாதான் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்பதில் தேவர் உறுதியாக இருந்தார். அதற்கு அவர் சொன்ன காரணம் வேடிக்கையானது. "ஸ்ரீபிரியாவின் உண்மைப் பெயர் அலமேலு. எனவே, அலமேலுவாக அந்தப் பெண்தான் நடிக்க வேண்டும்" என்றார், தேவர்!

    இந்தக் காலக்கட்டத்தில் தேவர் பிலிம்ஸ் தயாரித்த இரண்டொரு படங்கள் சரியாக ஓடவில்லை. இதனால் அடுத்த படம் நிச்சயம் வெற்றிப்படமாக அமையவேண்டும் என்று முனைப்புடன் செயல்பட்டார், தேவர்.

    "ஆட்டுக்கார அலமேலு"வின் "முதல்நாள் படப்பிடிப்பு மேட்டுப்பாளையத்தில் நடந்தது. தேவரின் மருமகன் தியாகராஜன்தான் டைரக்டர். ஸ்ரீபிரியா ஆற்றில் குளிக்கிறபோது பாடுகிற பாடல் காட்சிதான் முதல் காட்சியாக எடுக்கப்பட இருந்தது.

    அப்போது படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு, வேகமாக காரில் வந்து இறங்கினார் தேவர். டைரக்டரை பார்த்து, "மாப்ளே! முதல் 'ஷாட்'டே ஓ.கே. ஆகணும். இல்லாவிட்டால் 'பேக்கப்' பண்ணிட்டு, எல்லாரும் ஊருக்குப் புறப்பட வேண்டும்" என்றார். இதனால் ஸ்ரீபிரியாவுக்கும், மற்றவர்களுக்கும் பரபரப்பும், படபடப்பும் அதிகமாயின. ஆயினும், அவற்றையெல்லாம் தாங்கிக்கொண்டு ஸ்ரீபிரியா இயல்பாக நடித்தார். முதல் ஷாட்டே ஓகே ஆகியது. "ஆத்துல மீன் பிடிச்சு ஆண்டவனே உன்னை நம்பி" என்ற பாடல் காட்சிதான் அது.

    இந்தப் படத்துக்குப் பிறகு, தேவர் பிலிம்சில் ஏழெட்டு படங்களில் தொடர்ச்சியாக நடித்தார், ஸ்ரீபிரியா. பூஜை போட்டதும், முதல் ஷாட்டில் ஸ்ரீபிரியாவைத்தான் படம் பிடிக்கச் சொல்வார், தேவர். அந்த முதல் ஷாட் என்ன தெரியுமா? "மருதமலை முருகன் அருளால் மகத்தான வெற்றி கிடைக்கணும்" என்று ஸ்ரீபிரியா வசனம் பேசுவதுதான்!

    பிரபல ஹீரோக்கள் நடிக்கும் சமயத்தில்கூட, முதல் ஷாட்டில் ஸ்ரீபிரியாதான் இந்த வசனத்தைப் பேசி நடிக்க வேண்டும். இதை கதாநாயக நடிகர்கள் கவுரவப் பிரச்சினையாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதற்காக அவர்களிடம், "தப்பா நினைச்சுக்காதீங்க. இது 'லக்கி பாப்பா'ங்கறதால முதல் வசனத்தைப் பேச வைக்கிறேன்" என்பார்.

    ஆட்டுக்கார அலமேலு படம் தமிழில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து அதை இந்தியிலும் எடுத்தார்கள். இந்தியில் ஸ்ரீபிரியா கேரக்டரில் ராமேஸ்வரி நடித்தார். தொடர்ந்து தெலுங்கில் 'கொட்டேலு பொன்னம்மா' என்ற பெயரில் எடுத்தபோது அதில் ஸ்ரீபிரியா நடித்தார். தமிழில் அலமேலு. தெலுங்கில் பொன்னம்மா. "கொட்டேலு" என்றால் தெலுங்கில் ஆடு என்று அர்த்தம்.

    இந்தப்படமும் வெற்றி பெற, ஸ்ரீபிரியாவுக்கு தெலுங்கு ரசிகர்களின் எண்ணிக்கை அதிகமாகியது. அவரை ஆந்திராவில் எங்கே பார்த்தாலும் "கொட்டேலு" பொன்னம்மா என்றே அழைக்கத் தொடங்கினார்கள்.

    இப்போதும் ஆந்திரா பக்கம் யாராவது அவரைப் பார்த்தால்கூட, 'கொட்டேலு பொன்னம்மா' என்று அழைப்பது தான் ஆச்சரியம்!

    ஸ்ரீபிரியா நடிக்க வந்த புதிதில் யாருடனும் பேசவே ரொம்பத் தயங்குவார். படப்பிடிப்பு இடைவேளையில்கூட, முகத்தை 'உம்' என்று வைத்துக் கொண்டிருப்பார். 'கலகல'வென்று பேசும் அளவுக்கு அவரை மாற்றியது அவரது அம்மா கிரிஜாதான்.

    'எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்க வேண்டும். அப்போதுதான் எல்லோரும் உன்னிடம் மதிப்பும், மரியாதையும் வைப்பார்கள். வாழ்க்கையில் வெற்றி பெற, சிரித்த முகமும், கலகலப்பான பேச்சும் அவசியம்' என்று எடுத்துக் கூறினார். இதனால், ஸ்ரீபிரியா தன் சுபாவத்தை மாற்றிக்கொண்டார்.

    ஸ்ரீபிரியா, எல்லோருடனும் கலகலப்பாகப் பேசாமல் இருந்ததற்கு, இன்னொரு காரணமும் உண்டு. அதுதான் மொழிப்பிரச்சினை! தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர் என்றாலும், ஆங்கிலப் பள்ளியில் படித்த காரணத்தால், நாக்கில் ஆங்கிலம்தான் துள்ளி விளையாடியதே தவிர, தமிழில் கோர்வையாகப் பேசத் திணறினார்!

    அப்படியிருந்த ஸ்ரீபிரியா, பின்னர் அழகாகவும், சரளமாகவும் தமிழ் பேசியது எப்படி? அவரே கூறுகிறார்:-

    "நான் இந்த அளவுக்கு தெளிவாக தமிழ் பேசுவதற்கு பின்னணியில் இருப்பது "தினத்தந்தி"தான். என் முதல் தமிழ் ஆசான் "தினத்தந்தி"தான் என்பதை எப்போதும் பெருமையுடன் சொல்லிக் கொள்வேன்.

    அம்மா சொன்ன யோசனையின் பேரில், தினமும் "தினத்தந்தி" வந்ததும், பெரிய எழுத்துக்களை ஒவ்வொன்றாக எழுத்துக்கூட்டி படிக்க ஆரம்பித்தேன். நாளடைவில் சேர்த்து படிக்கும் அளவுக்கு முன்னேறி விட்டேன்.

    கலைஞரின் அழகுத் தமிழ் வசனங்கள் எனக்குப் பிடித்தன. கலைஞரின் வசனங்களை சிவாஜி சார் பேசுவது தனி அழகு. இந்த அழகு என்னை கவர்ந்ததால், கலைஞரின் வசனங்களையும் உச்சரிக்கப் பழகினேன்.

    சமீபத்தில் ஒரு டெலிவிஷன் பேட்டியில் முதல்வர் கலைஞர் அவர்கள், தமிழில் நன்றாக வசனம் பேசும் 5 பேரைப் பற்றி கூறினார்கள். அந்த 5 பேரில் என்னையும் அவர் சேர்த்திருந்ததைப் பார்த்ததும், நிஜமாகவே நெகிழ்ந்து போய்விட்டேன். தமிழ்த்தாயின் தவப்புதல்வரின் அங்கீகாரம் கிடைத்ததில் எனக்கு அளவு கடந்த மகிழ்ச்சி.

    இப்போது எனக்கிருக்கும் தமிழ் ஆர்வம் மட்டும் நான் நடிக்க வந்த புதிதில் இருந்திருந்தால், எனக்கு தமிழ் அல்லாத "ஸ்ரீபிரியா" என்ற பெயரைக்கூட வைக்க விட்டிருக்கமாட்டேன். இப்போது தமிழில் திருமூலரை படித்து ரசிக்கும் அளவுக்கு என்னை வளர்த்துக் கொண்டிருப்பதை எனக்கு கிடைத்த பெருமையாகவே உணர்கிறேன்" என்றார் ஸ்ரீபிரியா.

    டைரக்டர் பி.மாதவனின் முதல் படத்தில் அறிமுகமான ஸ்ரீபிரியா, தனது 5-வது படமாக மீண்டும் மாதவன் இயக்கிய படத்தில் நடித்தார். அந்தப் படம் "பாட்டும் பரதமும்." சிவாஜிகணேசன் இரட்டை வேடத்தில் நடித்த இந்தப் படத்தில், அவருடன் ஜெயலலிதாவும், ஸ்ரீபிரியாவும் இணைந்து நடித்தனர்.

    கதாநாயகிகள் இருவரே தவிர, ஒருநாள் படப்பிடிப்பில் கூட இருவரும் சேர்ந்து வருகிற மாதிரி காட்சிகள் வரவில்லை என்பதில் ஸ்ரீபிரியாவுக்கு ரொம்பவே வருத்தம். கதை அப்படி என்றாலும், கடைசியில் 'கிளைமாக்ஸ்' பாடல் காட்சியில் இருவரும் வருகிற மாதிரி ஒரு காட்சி இருந்தது. ஆனால் தனது காட்சியை முடித்துக் கொடுத்துவிட்டு ஜெயலலிதா போன பிறகே, ஸ்ரீபிரியா அந்தக் காட்சியில் நடிக்க அழைக்கப்பட்டார். அப்போதும் ஜெயலலிதாவைப் பார்க்க முடியாததில் ஸ்ரீபிரியாவுக்கு ஏக வருத்தம். 
    நடிகை பாவனா கடத்தல் மற்றும் துன்புறுத்தல் வழக்கில் மலையாள நடிகர் திலீப்பை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.
    கொச்சி:

    பிரபல நடிகை பாவனா கடந்த பிப்ரவரி மாதம் 17-ந்தேதி படப்பிடிப்பு முடிந்து காரில் கொச்சியில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுகொண்டிருந்த போது கடத்தி பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இது தொடர்பாக பல்சர் சுனில் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    முதலில் பணம் கேட்டு மிரட்டுவதற்காகவே பாவனா கடத்தல் நடந்ததாக பல்சர் சுனில் தெரிவித்தார். பிறகு பாவனா கடத்தல் பின்னணியில் ஒரு நடிகருக்கு தொடர்பு இருப்பதாக கூறியதால் இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. அந்த நடிகர் திலீப்பாக இருக்கலாம் என்ற தகவல் பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அதை திலீப் மறுத்தார்.



    இந்நிலையில், பாவனா கடத்தல் சம்பவம் நடப்பதற்கு முன்பும், கடத்தப்பட்ட பின்பும் பல்சர் சுனில் பல்வேறு நபர்களுடன் போனில் பேசி உள்ளார். அவர் அடிக்கடி பேசிய போன் நம்பரை வைத்து போலீசார் விசாரணை நடத்தியபோது அந்த போன் நம்பர் நடிகர் திலீப்பின் மேலாளர் அப்புனிக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. ஜெயிலில் இருந்தபடி சுனில், திலீப்பின் நண்பரான டைரக்டர் நாதிர்ஷாவை 3 முறை போனில் தொடர்புகொண்டு பேசிய தகவலும் வெளியானது. இதனால் திலீப் மீதான சந்தேகம் வலுத்தது.

    இதன் அடிப்படையில் நடிகர் திலீப்பிடம் இன்று காலை முதல் போலீசார் துருவித்துருவி விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில் நடிகர் திலீப் இன்று மாலை கைது செய்யப்பட்டார்.
    மீண்டும் கவர்ச்சியாக நடிக்கலாமா? என்று சூப்பர்ஸ்டார் நடிகை ஆழ்ந்த யோசனையில் இருந்து வருகிறாராம்.
    தமிழ் திரையுலகின் முன்னணி நாயகியாக வலம் வருபவர் சூப்பர்ஸ்டார் நடிகை. அவர் தேர்வு செய்து நடித்து வரும் அனைத்து படங்களுமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதற்கேற்றாற் போல், அவரும் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

    தமிழ் சினிமா மட்டுமல்லாமல், தெலுங்கு திரையுலகிலும் நடிகைக்கு அவ்வப்போது வாய்ப்பு வருகிறது. அந்த வகையில் சூப்பர் ஸ்டார் நடிகை, தற்போது தெலுங்கின் முன்னணி நாயகர் ஒருவருடன் வரலாற்று கதை ஒன்றில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அந்த நாயகருடன் இரு படங்களில் நடிகை நடித்திருக்கும் போது, மூன்றாவதாக ஒரு வாய்ப்பு கிடைக்க உள்ளதாக கூறப்படுகிறது.



    ஆனால் அந்த படத்தில் நடிகை கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் விரும்புகிறாராம். தெலுங்கு திரையுலகத்தை பொறுத்த வரையில், தெலுங்கு ரசிகர்களுக்காக நடிகைகளின் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்பது நாம் அறிந்ததே.

    நடிகை தொடக்கத்தில் கவர்ச்சி வேடங்களில் நடித்திருந்தாலும், தற்போது நடித்து வரும் படங்கள் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்துள்ளதால், மீண்டும் கவர்ச்சியாக நடித்தால் ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா? என்று யோசிக்கிராராம். எனவே அந்த படத்தில் நடிக்கலாமா? வேண்டாமா? என்று நடிகை தீவிரமாக யோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
    தெலுங்கில் ‘ரா ரா கிருஷ்ணய்யா’ என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்ற படம் தமிழில் ‘மகேந்திரா’ என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது.
    ஐமாவதி சாம்பமூர்த்தி வழங்கும் வி.வி.எஸ். கிரியேசன்ஸ் பட நிறுவனம் சார்பாக என்.சாய்ராம் தயாரிக்கும் படம் ‘மகேந்திரா’.

    ‘மாநகரம்’ பட ஜோடியான சந்தீப் கி‌ஷன் - ரெஜினா இதில் மீண்டும் இணைகிறார்கள். இவர்களுடன் ஜெகபதிபாபு, காவேரி, தணிகலபரணி, ரவிபாபு ஆகியோர் நடிக்கிறார்கள்.

    ஒளிப்பதிவு - சாய் ஸ்ரீராம், இசை - அச்சுராஜாமணி, நடனம் - பிரதீப் அந்தோணி சேகர், சுசித்ரா சந்திரபோஸ், ஸ்டண்ட் - வெங்கட், எடிட்டிங் - கே.வெங்கடேஷ், இயக்கம் - மகேஷ்பாபு, தயாரிப்பு - என்.சாய்ராம்.



    தெலுங்கில் ‘ரா ரா கிருஷ்ணய்யா’ என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்ற இந்த படம், மொழி மாற்றம் செய்யப்பட்டு ‘மகேந்திரா’ என்ற பெயரில் தமிழில் வருகிறது.

    தீயவர்கள் நிறைந்த குடும்பத்தில் பிறந்த நாயகன் சிறுவனாக இருந்த போதே நல்லவனாக வாழ்கிறான். அவன் அவர்களை தன் வழிக்கு கொண்டு வர முயற்சிக்கிறான். இதில் யார் ஜெயித்தார்கள் என்பது கதை. இது காதல், காமெடி கலந்த கமர்ஷியல் படமாக உருவாகி உள்ளது.

    தீய சக்திகள் அழிய வேண்டும் என்று சந்தீப் கி‌ஷன் இதில் போராடுகிறார்” என்றார்.

    ‘மகேந்திரா’ விரைவில் திரைக்கு வருகிறது.
    விரைவில் கோலிசோடா படத்தின் இரண்டாம் பாகம் வருவதாக கோலிசோடா குறித் ரகசியத்தை இயக்குநர் சுசீந்திரன் உடைத்துள்ளார்.
    பல வெற்றி படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த விஜய் மில்டன் தமிழில் `அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது' என்ற படத்தை இயக்கினார். படம் சரியாக போகவில்லை. இருப்பினும் சில வருடங்கள் கழித்து `கோலிசோடா' படத்தை இயக்கி மிக பெரும் வெற்றியை ருசித்தார். அதனைத் தொடர்ந்து விக்ரமை வைத்து `பத்து என்றதுக்குள்ள' என்ற படத்தை இயக்கினார். அந்த படம் தோல்வியை தழுவியது.



    இதனையடுத்து `கோலிசோடா' ஸ்டைலில் `கடுகு' என்ற படத்தை எடுத்தார். படம் சுமாராக ஓடியதால் தற்பொழுது கட்டாய வெற்றியை தர வேண்டிய சூழலில் இருக்கிறார் விஜய் மில்டன்.

    இதனால் `கோலிசோடா' படத்தின் இரண்டாம் பாகத்தை தொடங்கிவிட்டார். இதனை  சத்தமில்லாமல் ஷூட்டீங்கை தொடங்கிய விஜய்க்கு இயக்குநர் சுசீந்திரன் வாழ்த்து தெரிவிக்க அனைவருக்கும் ரகசியம் தெரிந்துவிட்டது.
    அமிதாப்பச்சன், ராஜேஷ்கன்னாவுடன் நடித்த பழம்பெரும் நடிகையான சுமிதா சான்யல் கொல்கத்தாவில் உடல்நிலை சரியில்லாததால் காலமானார்.
    பழம்பெரும் நடிகை சுமிதா சான்யல். கொல்கத்தாவை சேர்ந்த இவர், இந்தி மற்றும் பெங்காலி மொழிப்படங்களில் நடித்துள்ளார். வயது முதிர்வு காரணமாக இவர் சில காலம் உடல் நலம் சரியில்லாமல் இருந்தார். அதற்காக பல்வேறு சிகிச்சைகளை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் சுமிதா சான்யல் கொல்கத்தாவில் உள்ள தனது வீட்டில் மாரடைப்பால் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 71. சுமிதா சான்யல் 1945-ம் ஆண்டு அக்டோபர் 9-ந் தேதி டார்ஜிலிங்கில் பிறந்தார். 1960-ம் ஆண்டு பெங்காலி மொழிப்படத்தில் அறிமுகம் ஆனார். மஞ்சுளா என்ற அவரது பெயர் முதல் படத்துக்கு பிறகு சுமிதா என்று மாற்றம் செய்யப்பட்டது.



    1968-ம் ஆண்டு பாலிவுட்டில் அறிமுகம் ஆனார். ‘ஆசிர்வாத்’ அவரது முதல் படமாகும். 1971-ம் ஆண்டு அவர் ராஜேஷ்கண்ணா, அமிதாப்பச்சன் ஆகியோருடன் இணைந்து ‘ஆனந்த’ என்ற படத்தில் நடித்து இருந்தார். பல்வேறு இந்தி படங்களில் நடித்து இருந்தார். கடைசியாக 1993-ல் `ஸ்ரீமதி' என்ற படத்தில் நடித்து இருந்தார்.

    இவர் திரைப்பட தொகுப்பாளர்ரான சுபோத் ராயை திருமணம் செய்து இருந்தார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். பழம் பெரும் நடிகை சுமிதா சான்யல் மரணத்துக்கு மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி உள்பட பலர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
    பெரோஸ் இயக்கத்தில் கிருஷ்ணா - ஆனந்தி நடிப்பில் உருவாகியுள்ள 'பண்டிகை' படத்தின் சிறப்பு வீடியோ ஒன்றை நடிகர் பிரேம்ஜி வெளியிட இருக்கிறார்.
    பெரோஸ் இயக்கத்தில் கிருஷ்ணா - ஆனந்தி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் திரைப்படம் 'பண்டிகை'. 'டி டைம் டாக்கீஸ்' சார்பில் நடிகை விஜயலக்ஷமி இப்படத்தை தயாரித்து இருக்கிறார். இப்படம் கடந்த 7-ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால் தமிழக அரசின் கேளிக்கை வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து திரையரங்கு உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால், படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போயுள்ளது.

    இந்த படத்தின் 'நெகட்டிவ் உரிமையை' வாங்கி இருக்கும் 'ஆரா சினிமாஸ்' மகேஷ் கோவிந்தராஜ், 'பண்டிகை' படத்தை வருகிற ஜுலை 21-ஆம் தேதி வெளியிடுகிறார்.



    இப்படத்தில் சரவணன், நிதின் சத்யா, கருணாஸ், ப்ளாக் பாண்டி, சபரிஷ், மதுசூதனன் என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. ஆர்.எச்.விக்ரம் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    இந்நிலையில், `பண்டிகை' படம் குறித்த சிறப்பு வீடியோ ஒன்றை நடிகர் பிரேம்ஜி இன்று மாலை 6 மணிக்கு வெளியிடுகிறார். அந்த வீடியோ டெம்பிள் மங்கி என்ற யூடியூப் பக்கத்தில் வெளியாகிறது. இதனை படத்தின் தயாரிப்பாளரான விஜயலக்ஷ்மி அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
    ஜான் வாட்ஸ் இயக்கத்தில் டாம் ஹாலண்டு, ராபர்ட் டவுனி, மைக்கேல் ஹீட்டன் நடிப்பில் உருவாகியிருக்கும் `ஸ்பைடர்மேன்: ஹோம்கம்மிங்' படத்தின் விமர்சனம்.
    கடந்த 2015-ஆம் ஆண்டு வெளிவந்த கேப்டன் அமெரிக்கா: சிவில் வார் படத்தில் ஒரு முக்கிய காட்சியில் பீட்டர் பார்க்கர் எனப்படும் ஸ்பைடர் மேன் பங்கேற்றிருப்பார். அதில் அவெஞ்சர்கள் எனப்படும் சூப்பர் ஹீரோசுடன் இணைந்து பல்வேறு சாதனைகளை படைத்திருந்தார் என்பது நாம் அறிந்ததே. அந்த படத்தின் தொடர்ச்சியாக `ஸ்பைடர்மேன்: ஹோம்கம்மிங்' உருவாகியிருக்கிறது.

    அந்த சாதனைக்கு பிறகு அடுத்த வேலை வரும் வரை மக்களோடு மக்களாக வாழும் படி அறிவுறுத்துகிறார் ஐயர்ன் மேன் எனப்படும் ராபர்ட் டவுனி. இதையடுத்து, பள்ளி செல்லும் பீட்டர் பார்க்கர் மீண்டும் பல்வேறு சாதனைகளை படைக்க வேண்டும் என்று ஏங்கிக் கொண்டிருக்கிறார். அப்போது திருட்டு உள்ளிட்ட சிறிய குற்றங்கள் செய்பவர்களை போலீசில் மாட்டிவிடுகிறார். அப்போது அவர்களிடம் அதிபயங்கரமான ஆயுதங்கள் இருப்பதையும் பார்க்கிறார்.



    இதையடுத்து, அந்த ஆயுதங்களை அவர்களுக்கு சப்ளை செய்வது யார் என்பதை கண்டுபடிக்கும் முயற்சியிலும் ஈடுபடுகிறார். இதனை ஐயர் மேனிடம் சொல்கிறார். ஆனால் ஸ்பைடர் மேனின் பேச்சை ஐயர்ன் மேன் பொருட்படுத்தாததால், அந்த ஆயுதங்கள் சப்ளை செய்பவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் களமிறங்குகிறார் பீட்டர் பார்க்கர்.

    அப்போது, அந்த ஆயுதங்களை கைமாற்றும் கும்பல் கப்பலில் இருப்பதாக கிடைக்கும் தகவலை அடுத்து, அவர்களை பிடிக்க ஸ்பைடர் மேன் அந்த கப்பலுக்கு செல்கிறார். அப்போது, ஸ்பைடர் மேன் மீது நடத்தப்படும் தாக்குதலில், அந்த கப்பல் இரண்டாக உடையும் நிலை ஏற்படுகிறது. இதையடுத்து தனது சக்தியின் மூலம் அந்த கப்பலை மீண்டும் ஒட்ட வைக்க முயற்சிக்கிறார். இதையடுத்து அங்கு வந்த ஐயர்ன் மேன், இரண்டாக பிளந்த கப்பலை ஒன்றிணைத்து, அதில் இருந்த மக்களையும் காப்பாற்றுகிறார்.



    ஆனால் தனது பேச்சை கேட்காமல், அதிகப்பிரசங்கித்தனமாக ஈடுபடுவதால், தான் கொடுத்த ஸ்பைடர் மேன் சிறப்பு சூட்டை அவரிடமிருந்து ஐயர்ன் மேன் திரும்பப் பெற்று விடுகிறார். மேலும் பீட்டர் பார்க்கரை அவரது குழுவில் இருந்தும் நீக்கி விடுகிறார். அதுவே உனது அதிகப்பிரங்கித்தனத்துக்கான தண்டனை என்றும் கூறிவிடுகிறார்.

    ஸ்பைடர் மேன் சூட் இல்லாமல், கடத்தல் கும்பலை எப்படி முறியடித்தார்? அவருக்கு மீண்டும் சூட் கிடைத்ததா? அவஞ்சர்ஸ் குழுவில் இடம்பிடித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.



    முந்தைய பாகங்களில் நடித்திருந்த ஸ்பைடர் மேன் போல, இந்த பாகத்தில் நடித்திருக்கும் டாம் ஹோலண்டும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். பள்ளி செல்லும் ஒரு இளைஞனுக்கு உண்டான துடிப்புடனும், காதல், சண்டை, நகைச்சுவை என அனைத்து பரிணாமங்களிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிக்க வைத்திருக்கிறார்.

    ஐயர்ன் மேனாக வரும் ராபர்ட் டவுனி எப்போதும் போல ஒரு சூப்பர் ஹீரோவுக்கு உண்டான கெத்துடன் வந்து செல்கிறார். அவரது கதாபாத்திரம் படத்திற்கு முக்கியமானதாக அமைகிறது. முன்னாள் பேட்மேனான மைக்கேல் கீட்டன் வில்லனாக நடித்திருப்பது படத்திற்கு ப்ளஸ். ஜேக்கப் பேட்டலான் வரும் காட்சிகள் ரசிக்கும்படி இருக்கிறது. முக்கியமான காட்சியிலும் காமெடி செய்து சிரிக்க வைக்கும் ஜேக்கப்பின் கதாபாத்திரம் படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது. மற்றபடி ஜான் பேவ்ரியூ, செண்டயா, டொனால்டு க்ளோவர், டைன் டேலி உள்ளிட்ட அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.



    சூப்பர் ஹீரோக்கள் படங்களிலேயே ஸ்பைர் மேன் பாகங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்று சொல்லலாம். அந்த வகையில் சூப்பர் ஹீரோக்களை வைத்து வந்து கொண்டிருக்கும் படங்களில், ஏலிகன்களின் வருகையால் ஏற்பட்ட பிரச்சனையால் கிளம்பும் புதிய பிரச்சனையை ஸ்பைடர் மேன் எப்படி முறியடிக்கிறார் என்பதை திரைக்கதையில் சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார். சூப்பர் ஹீரோ படங்கள் பெரும்பாலும் அதிகளில் சீரியசாக இருக்கும் நிலையில், இந்த படம் ரசிகர்களை பெருமளவில் சிரிக்க வைப்பது சிறப்பு. குறிப்பாக தமிழ் டப்பிங்கும், அதற்கு பயன்படுத்தப்பட்டுள்ள வசனங்களும் ரசிக்கும் படி இருக்கிறது.

    மைக்கேல் ஜியேசினோவின் இசை படத்திற்கு கூடுதல் பலம். சால்வடோர் டோடினோவின் ஒளிப்பதிவு பிரமிக்க வைக்கிறது.

    மொத்தத்தில் `ஸ்பைடர்மேன்: ஹோம்கம்மிங்' காமெடி சீரியஸ்
    இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி இரண்டாம் பாகம் பற்றிய அறிவிப்பினை இயக்குநர் ஷங்கர் அறிவித்துள்ளார்
    11 ஆண்டுகளுக்கு முன்னர் ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் சார்பில் இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் வைகை புயல் வடிவேலு இரட்டை வேடத்தில் நடித்த படம் இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி .இப்படம் மிக பெரிய அளவில் வெற்றிபெற்றது

     இந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தொடுங்குவதாக ஷங்கர் தெரிவித்துள்ளார்.

    புலிகேசி வெளியாகி 11 ஆண்டு ,விரைவில் புலிகேசி 2 விரைவில் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியீட்டுள்ளார்
    தமிழ் திரை உலகில் புதிய கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தும் மதன் கார்க்கி, இயக்குனர் அருண் வைத்தியநாதன் பாராட்டு.
    அர்ஜுன் நடிக்கும் 150 ஆவது படம் "நிபுணன்".இதில் இவருடன் பிரசன்னா, வரலக்ஷ்மி உட்பட பெரும் நட்சத்திர பட்டாளம் நடித்து உள்ளது. அருண்  வைத்தியநாதன்  இயக்கத்தில் உருவான இந்த படத்தின் பாடல் ஒன்று சமீபத்தில் வெளி ஆனது. "இதுவும் கடந்து போகும்" என்கிற  வரிகளுடன் துவங்கும் இந்தப் பாடல் மிக குறுகிய காலக் கட்டத்தில்  ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பு பெற்று உள்ளது. அறிமுக இசை அமைப்பாளர் நவீணின் இசையில், பிரதீப் பாடி உள்ள இந்த  பாடலை  தனது ட்விட்டர் மூலம் மிகவும் பாராட்டி உள்ளார் பாடல் ஆசிரியர் மதன் கார்க்கி.  அந்த பாடலை தான் இயற்ற வில்லை என்றாலும் , அந்த பாடலை இயற்றிய மற்றொரு கவிஞரை மனதார பாராட்டி உள்ளதை திரை உலகம் மனதார  வரவேற்று உள்ளது. இந்த பாடலை எழுதி  உள்ளவர் இயக்குனர் அருண் வைத்தியநாதன் என்பது குறிப்பிட தக்கது. 

    "மதன் கார்க்கியின் இந்த நல்ல குணமே அவரை இந்த இளம் வயதில் உச்சத்தில் உட்கார வைத்து உள்ளது. அறிமுகம் இல்லாத இன்னொருவர் இயற்றிய பாடலை ஒரு பாடல்  ஆசிரியர் பாராட்டுவது , நமது கலாச்சாரத்தை ஒட்டி உள்ள நம் நல் குண நலனை பிரதிபலிக்கிறது.போட்டிகள் நிறைந்த இந்த படவுலகில் இவரை போன்ற  இளைஞர்கள் இத்தகைய நட்பு  மனப்பான்மை  போற்றுவது எதிர்கால சினிமாவுக்கு நல்லது" என  மகிழ்ச்சியுடன் கூறினார் இயக்குனர் , பாடல் ஆசிரியர் அருண் வைத்தியநாதன்
    தயாரிப்பாளராக அவதாரம் எடுத்திருக்கும் நடிகை விஜயலக்ஷ்மி
    நடிகை விஜயலக்ஷ்மி தயாரிப்பாளராக அவதாரம் எடுத்திருக்கும் படம் பண்டிகை  , படத்தினை மஹாலக்ஷ்மியின் கணவர் ஃபரோஸ் தான் இயக்குகிறார்.
    இதில் கிருஷ்ணா- கயல் ஆனந்தி ,சரவணன் ,நிதின் சத்யா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் அறிமுக விழாவில் பேசிய விஜயலக்ஷ்மி தான் முதலில்
    நடிக்க வரும் பொழுது  வீட்டில் ஆதரவு கொடுத்தார்கள். ஆனால் தயாரிக்க போவதாக கூறியதும் வேண்டாம் என்றும் எதற்காக ரிஸ்க் எடுக்க வேண்டும் என்றும் கூறினார்கள்
    இருப்பினும் தனது கணவர் மீது உள்ள நம்பிக்கையால் தயாரித்ததாகவும் அந்த நம்பிக்கை வீந் போகவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

    கதை எழுதும் போதே கதையின் நாயகியாக கயல் ஆனந்தி என்று முடிவு செய்ததாகவும் படத்தில் பருதி வீரன் சரவணன் நான்ற நடித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

    கிருஷ்ணா முதல் முறையாக அதிக சண்டை காட்சிகளில் நடித்துள்ளார். இதன் மூலம் படம் தயாரிப்பது எவ்வளவு கடினம் என்பதை தெரிந்துகொண்டதாகவும் .படம் சிறப்பாக வந்துள்ளதாகவும் தெரிவித்தார். படத்தின் மீது உள்ள நம்பிக்கையால் ஆரா ப்லீம்ஸ் மகேஷ் வெளியிடுகிறார்

      ஒரு கட்டத்தில் படம் தயாரிக்க  வேண்டாம் என்று தோன்றியதாகவும் ஆனால் பண்டிகை படம் முடிந்து சிறப்பாக வந்திருப்பதை உணர்ந்ததால் மேலும் நான்கு படங்கள் தயாரிக்க ஆவலாக இருப்பதாக கூறினார்
    சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் ஃபர்ஸ்ட் லுக் தேதி அறிவிப்பு
    இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கும் நடிகர் சூர்யாவின் `தானா சேர்ந்த கூட்டம்' மிக பிரமாண்டமாக படபிடிப்பு நடந்துகொண்டிருக்கின்றது. இதுவரை படத்தை பற்றி பெரிய அளவில் எந்த செய்தியையும் வெளியிடாமல் இருக்கின்றனர் படக்குழுவினர்.        

    இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சூர்யா பிறந்தநாளான ஜுலை 23-ம் தேதி வெளியாக இருப்பதாக விக்னேஷ் சிவன் தன்னுடைய டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.



    இதனால் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கின்றார்கள் சூர்யாவின் ரசிகர்கள்.

    வருகின்ற ஜுலை 23-ஆம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருடைய ரசிகர்கள் மகிழும் வண்ணம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடுவதாக படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.
    ×