என் மலர்
ஆட்டோமொபைல்ஸ் - Archive
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த பல்சர் 250 சீரிஸ் மாடல்கள் வினியோகம் துவங்கி நடைபெற்று வருகிறது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது புதிய பல்சர் 250 சீரிஸ் மாடல்களின் வினியோகத்தை இந்தியாவில் துவங்கி இருக்கிறது. புதிய பல்சர் 250 முதல் யூனிட் நவம்பர் 15 ஆம் தேதி வினியோகம் செய்யப்பட்டது. புதிய பல்சர் என்250 மற்றும் எப்250 மாடல்கள் கடந்த மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன. இவற்றின் விலை முறையே ரூ. 1.38 லட்சம் மற்றும் ரூ. 1.40 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.
புதிய பல்சர் மாடல்களில் ஒரே மாதிரியான அம்சங்களே வழங்கப்பட்டு இருக்கின்றன. இவற்றில் 249.07சிசி, சிங்கில் சிலிண்டர், ஏர்/ஆயில் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 24 பி.ஹெச்.பி. திறன், 21.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

இந்திய சந்தையில் பஜாஜ் பல்சர் என்250 சுசுகி ஜிக்சர் 250 மற்றும் யமஹா எப்.இசட்.250 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. புதிய பஜாஜ் பல்சர் எப்250 மாடல் சுசுகி ஜிக்சர் 250 எஸ்.எப். மற்றும் யமஹா பேசர் 250 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
யமஹா நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஆர்15எஸ் வி3 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்து இருக்கிறது.
யமஹா நிறுவனத்தின் வை.இசட்.எப். ஆர்15எஸ் வி3 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மோட்டார்சைக்கிள் யுனிபாடி சீட் கொண்டிருக்கிறது. புதிய மாடல் யமஹா ஆர்15 வி4 மோட்டார்சைக்கிளுடன் சேர்ந்து நாட்டின் முன்னணி விற்பனை மையங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.
இந்தியாவில் புதிய யமஹா ஆர்15எஸ் வி3 யுனிபாடி சீட் கொண்ட மாடல் விலை ரூ. 1,57,600 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் ரேசிங் புளூ நிறத்தில் கிடைக்கிறது. ஆர்15எஸ் வி3 மாடலில் 155சிசி, 4 ஸ்டிரோக், லிக்விட் கூல்டு, 4 வால்வுகள் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்த என்ஜின் 18.6 பி.எஸ். திறன், 14.1 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த மாடலில் மல்டி-பன்ஷன் எல்.சி.டி. இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், டூயல் சேனல் ஏ.பி.எஸ்., அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச், சைடு ஸ்டாண்டு என்ஜின் கட்-ஆப் போன்ற அம்சங்கள் உள்ளன.
ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் பெங்களூரை சேர்ந்த இ.வி. சார்ஜிங் உள்கட்டமைப்பு நிறுவனத்துடன் இணைந்து ஒரு லட்சம் சார்ஜர்களை கட்டமைக்க இருக்கிறது.
ஹீரோ எலெக்ட்ரிக் மற்றும் சார்ஸர் நிறுவனங்கள் இணைந்து அடுத்த மூன்று ஆண்டுகளில் நாடு முழுக்க சுமார் ஒரு லட்சம் சார்ஜர்களை கட்டமைக்க திட்டமிட்டுள்ளன. நாட்டின் முன்னணி இருசக்கர வாகன உற்பத்தியாளரான ஹீரோ எலெக்ட்ரிக் பெங்களூரை சேர்ந்த இ.வி. சார்ஜிங் ஸ்டார்ட்-அப் நிறுவனமான சார்ஸர் உடன் கூட்டணி அமைத்து இருக்கிறது.
கூட்டணியின் அங்கமாக சார்ஸர் நிறுவனம் நாட்டின் 30 நகரங்களில் முதற்கட்டமாக 10 ஆயிரத்திற்கும் அதிக சார்ஜர்களை கட்டமைக்கிறது. ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் தனது விற்பனை மையங்களில் கிரானா சார்ஸர்களை நிறுவ இருக்கிறது. தற்போது ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் நாடு முழுக்க 20 நகரங்களில் விற்பனை மையங்களை கொண்டிருக்கிறது.

இ.வி. சார்ஜிங்கை அனைவரிடமும் கொண்டுசேர்க்கும் வகையில் ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் சார்ஜர்களை உள்ளூர் கடைகள் மற்றும் ஏராளமான பொது இடங்களில் கட்டமைக்க திட்டமிட்டு இருக்கிறது.
ஸ்கோடா நிறுவனத்தின் குஷக் மிட்-சைஸ் எஸ்.யு.வி. மாடல் இந்திய முன்பதிவில் புது மைல்கல் எட்டியுள்ளது.
ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் இந்திய ஆட்டோமொபைல் சந்தையின் மிட்-சைஸ் எஸ்.யு.வி. பிரிவில் குஷக் மாடலை அறிமுகம் செய்து களமிறங்கியது. இந்தியாவில் அறிமுகமாகி நான்கு மாதங்களில் குஷக் எஸ்.யு.வி. மாடல் முன்பதிவில் 15 ஆயிரம் யூனிட்களை கடந்துள்ளது.
ஸ்கோடா நிறுவனத்தின் இந்தியா 2.0 திட்டத்தின் கீழ் அறிமுகமான முதல் மாடல் குஷக் ஆகும். ஸ்கோடா குஷக் கேண்டி வைட், பிரிலியண்ட் சில்வர், ஹனி ஆரஞ்சு, கார்பன் ஸ்டீல் மற்றும் டொர்னாடோ ரெட் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இந்த எஸ்யுவி 1 லிட்டர் டி.எஸ்.ஐ. மற்றும் 1.5 லிட்டர் டி.எஸ்.ஐ. என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

இதன் 1 லிட்டர் டி.எஸ்.ஐ. என்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. 1.5 லிட்டர் டி.எஸ்.ஐ. என்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 7 ஸ்பீடு டி.எஸ்.ஜி. ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
அப்ரிலியா நிறுவனத்தின் புதிய எஸ்.ஆர். 125 மற்றும் எஸ்.ஆர். 160 ஸ்கூட்டர் மாடல்கள் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கின்றன.
அப்ரிலியா இந்தியா நிறுவனம் 2022 எஸ்.ஆர். 125 மற்றும் எஸ்.ஆர். 160 ஸ்கூட்டர் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இவற்றின் விலை ரூ. 1,07,595 (எக்ஸ்-ஷோரூம்) என துவங்குகிறது. புதிய ஸ்கூட்டர்களில் எல்.இ.டி. ஹெட்லைட், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிய அப்ரிலியா எஸ்.ஆர். 125 மாடல் ஒற்றை வேரியண்டில் கிடைக்கிறது. எஸ்.ஆர். 160 மாடல்- ஸ்டாண்டர்டு, கார்பன் மற்றும் ரேஸ் என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. எஸ்.ஆர். 160 விலை ரூ. 1,17,494 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அப்ரிலியா எஸ்.ஆர்.125 மாடலில் 124.45சிசி, சிங்கில் சிலிண்டர், ஏர்-கூல்டு, 3 வால்வுகள் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 9.78 பி.ஹெச்.பி. திறன், 9.70 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
எஸ்.ஆர். 160 மாடலில் 160.03 சிசி, சிங்கில் சிலிண்டர், ஏர் கூல்டு, 3 வால்வுகள் கொண்ட மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 10.86 பி.ஹெச்.பி. திறன், 11.6 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
ஆடி நிறுவனத்திற்கு விற்கப்பட்டதாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், மெக்லாரென் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டு இருக்கிறது.
மெக்லாரென் குழுமத்தை ஆடி நிறுவனம் முழுமையாக விலைக்கு வாங்கப் போவதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகி வந்தன. மெக்லாரென் பார்முலா 1 குழுவை முழுமையாக வாங்குவதற்கான பணிகளில் ஆடி ஈடுபட்டு வந்தது. இதன் மூலம் ஆடி நிறுவனம் 2026-இல் நடைபெற இருக்கும் பார்முலா 1 பந்தயத்தில் களமிறங்க இருப்பதாக கூறப்பட்டது.
ஏற்கனவே லம்போர்கினி மற்றும் வோக்ஸ்வேகன் குழுமத்தில் நிர்வகிக்கும் பங்குகளை ஆடி நிறுவனம் கைப்பற்றி வைத்திருக்கிறது. அந்த வகையில், தற்போது பார்முலா 1 உலகில் கால்பதிக்கவும் ஆடி திட்டமிட்டு வருகிறது. பெருந்தொற்று காலக்கட்டத்தில் மெக்லாரென் நிறுவனம் தொடர் இழப்பு காரணமாக 1,200 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது.

"மெக்லாரென் குழுமம் ஆடி நிறுவனத்திற்கு விற்கப்பட்டதாக வலம்வரும் செய்திகளை அறிவோம். இந்த தகவலில் துளியும் உண்மையில்லை. ஒப்பந்ததாரர்கள், உதிரிபாகங்களை வினியோகம் செய்வோர் மற்றும் கார் உற்பத்தியாளர்களுடன் தொடர்ந்து சந்திப்புகள் மற்றும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. எனினும், மெக்லாரென் குழுமத்தின் உரிமையாளர் பிரிவில் இதுவரை எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை," என மெக்லாரென் தெரிவித்து இருக்கிறது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புதிய ஏ.எம்.ஜி. மாடல் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் புத்தம் புதிய ஏ45 எஸ் ஏ.எம்.ஜி. மாடலை இந்த வாரம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், புது காருக்கான டீசரை மெர்சிடிஸ் பென்ஸ் வெளியிட்டு உள்ளது.
டீசரில் 2021 மெர்சிடிஸ் ஏ.எம்.ஜி. ஏ45 எஸ் மாடலின் வெளிப்புற தோற்றத்தில் அதிக மாற்றங்கள் இருக்காது என தெரியவந்துள்ளது. இந்த கார் சி.பி.யு. முறையில் இந்தியா கொண்டுவரப்பட இருக்கிறது. புதிய ஏ.எம்.ஜி. மாடலில் எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், அகலமான ஏர் இன்டேக், 19 இன்ச் அலாய் வீல்கள், புதிய எல்.இ.டி. டெயில் லைட்கள் உள்ளன.

புதிய மெர்சிடிஸ் ஏ.எம்.ஜி. ஏ45 எஸ் மாடலில் 2 லிட்டர், 4 சிலிண்டர், டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 416 பி.ஹெச்.பி. திறன், 500 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 8 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 3.9 நொடிகளில் எட்டிவிடும். மேலும் இது மணிக்கு அதிகபட்சம் 270 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.
மஹிந்திரா நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு அசத்தலான சலுகை மற்றும் தள்ளுபடி வழங்குகிறது.
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் நவம்பர் மாதத்திற்கான சலுகை விவரங்களை அறிவித்து இருக்கிறது. அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தின் படி மஹிந்திராவின் எஸ்.யு.வி. மாடல்களுக்கு அதிகபட்சம் ரூ. 81,500 வரையிலான சலுகை மற்றும் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இவை தள்ளுபடி, எக்சேன்ஜ் பலன்கள், கார்ப்பரேட் தள்ளுபடி மற்றும் கூடுதல் சலுகை வடிவில் வழங்கப்படுகின்றன. இந்த சலுகைகள் நவம்பர் 30 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது. சலுகை பலன்கள் ஒவ்வொரு விற்பனை மையத்திற்கு ஏற்ப வேறுபடும். மஹிந்திரா தார், பொலிரோ நியோ மற்றும் எக்ஸ்.யு.வி.700 மாடல்களுக்கு எந்த பலன்களும் வழங்கப்படவில்லை.

கே.யு.வி.100 என்.எக்ஸ்.டி. மாடலுக்கு ரூ. 61,055, மஹிந்திரா ஸ்கார்பியோவிற்கு ரூ. 32,320, அல்டுராஸ் ஜி4 மாடலுக்கு ரூ. 81,500, எக்ஸ்.யு.வி.300 மாடலுக்கு ரூ. 49 ஆயிரம், மஹிந்திரா மராசோ மாடலுக்கு ரூ. 40,200, பொலிரோ மாடலுக்கு ரூ. 13 ஆயிரம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன.
ஹோண்டா நிறுவனம் கிரேசியா 125 ரெப்சால் ஹோண்டா டீம் எடிஷன் ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்தது.
ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் கிரேசியா 125 ரெப்சால் ஹோண்டா டீம் எடிஷன் ஸ்கூட்டரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ. 87,138 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
புதிய கிரேசியா 125 ரெப்சால் ஹோண்டா டீம் எடிஷன் மாடலில் ரேசிங் டீம் சார்ந்த கிராபிக்ஸ், டிசைன் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஆரஞ்சு வீல் ரிம்கள் உள்ளன. ஸ்கூட்டரின் வெளிப்புறம் ரெப்சால் ஸ்டிக்கர்கள் இடம்பெற்று இருக்கின்றன. காஸ்மெடிக் மாற்றங்கள் தவிர இந்த ஸ்கூட்டரில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

அதன்படி கிரேசியா 125 ஹோண்டா டீம் எடிஷன் மாடலில் அப்ரான்-மவுண்ட் செய்யப்பட்ட எல்.இ.டி. ஹெட்லைட், எல்.இ.டி. டி.ஆர்.எல்., இண்டகிரேட் செய்யப்பட்ட பாஸ் லைட் ஸ்விட்ச், சைடு-ஸ்டாண்டு இண்டிகேட்டர், என்ஜின் கட்-ஆப் வசதி, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த ஸ்கூட்டரின் பின்புறம் 3-ஸ்டெப் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய போர்க், முன்புறம் டெலிஸ்கோபிக் போர்க் வழங்கப்பட்டு உள்ளது. பிரேக்கிங்கிற்கு முன்புறம் டிஸ்க், பின்புறம் டிரம் பிரேக் வழங்கப்பட்டு உள்ளது.
சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்வதால் மாருதி சுசுகி நிறுவன கார் உற்பத்தி சரிந்துள்ளது.
மாருதி சுசுகி நிறுவனம் அக்டோபர் மாதத்திற்கான உற்பத்தி விவரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது. கடந்த மாதம் மட்டும் மாருதி சுசுகி நிறுவனம் 1,34,779 யூனிட்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் மாருதி நிறுவனம் 1,82,490 யூனிட்களை உற்பத்தி செய்து இருந்தது.
அந்த வகையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும் போது 26 சதவீதம் குறைவு ஆகும். மின்சார உதிரிபாகங்கள் குறைபாடு காரணமாக உற்பத்தியில் சரிவு ஏற்படுவதாக மாருதி சுசுகி நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. எனினும், பாதிப்பை முடிந்தவரை குறைக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.

மினி ஹேட்ச்பேக் மாடல்களான ஆல்டோ மற்றும் எஸ் பிரெஸ்ஸோ உபற்பத்தி 25.6 சதவீதம் சரிந்துள்ளது. காம்பேக்ட் பிரிவு வாகனங்களான வேகன்ஆர், ஸ்விப்ட், டிசையர், பலேனோ, இக்னிஸ் மற்றும் இதர மாடல்கள் உற்பத்தி 63.41 சதவீதம் சரிந்துள்ளது.
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் புதிதாக எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடலை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மற்றும் குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை அடுத்த ஆண்டு முதல் உருவாக்க இருப்பதாக அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால் தெரிவித்து இருக்கிறார்.
முன்னதாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மட்டுமின்றி எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மற்றும் எலெக்ட்ரிக் கார் மாடல்களையும் உருவாக்க இருப்பதாக அகர்வால் தனது வலைப்பக்கத்தில் குறிப்பிட்டு இருந்தார். தற்போது எலெக்ட்ரிக் பைக் மற்றும் குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதில் அளித்துள்ளார்.

ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஓலா எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் சமீபத்தில் டெல்லி, பெங்களூரு, கொல்கத்தா மற்றும் ஆமதாபாத் போன்ற நகரங்களில் டெஸ்ட் ரைடு செய்யப்படுகின்றன. ஏற்கனவே ஸ்கூட்டரை வாங்க முன்பதிவு செய்தவர்களுக்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் டெஸ்ட் ரைடு செய்ய வழங்கப்படுகிறது.
போர்ஷ் நிறுவனத்தின் புதிய டேகேன் எலெக்ட்ரிக் கார் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
ஜெர்மனி நாட்டு ஆடம்பர கார் உற்பத்தியாளரான போர்ஷ் முழுக்க எலெக்ட்ரிக் திறன் கொண்டு இயங்கும் டேகேன் மாடலை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய போர்ஷ் டேகேன் இ.வி. மாடல் விலை ரூ. 1,50,28,000 ஆகும். டேகேன் மற்றும் டேகேன் கிராஸ் டூரிஸ்மோ என இரு மாடல்களும் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கின்றன.
புதிய போர்ஷ் டேகேன் ஜெர்மன் கார் உற்பத்தியாளரின் முதல் எலெக்ட்ரிக் வாகனம் ஆகும். புது டேகேன் எலெக்ட்ரிக் கார்- டேகேன், 4எஸ், டர்போ மற்றும் டர்போ எஸ் என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. நான்கு வேரியண்ட்களும் 2 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் மற்றும் ரேன்ஜ், ஸ்போர்ட், ஸ்போர்ட் பிளஸ் மற்றும் இண்டிவிஜூவல் போன்ற டிரைவிங் மோட்களை கொண்டிருக்கிறது.

டேகேன் பேஸ் மாடலில் ஒற்றை எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 469 பி.ஹெச்.பி. திறன், 357 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த எண்ட்ரி-லெவல் மாடல் முழு சார்ஜ் செய்தால் 484 கிலோமீட்டர் வரை செல்லும்.






