என் மலர்
ஆட்டோமொபைல்ஸ் - Archive
ஹீரோ மோட்டோகார்ப் தனது எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்ய புது பிராண்டு உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் வாகனத்தை அடுத்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்ய இருக்கிறது. எனினும், புதிய எலெக்ட்ரிக் வாகனங்களை 'ஹீரோ' பிராண்டிங்கில் விற்பனை செய்ய முடியாது. இதற்கான காப்புரிமையை ஹீரோ சைக்கிள்ஸ் வைத்திருக்கிறது.
எலெக்ட்ரிக் வாகனங்களுக்கென புது பெயரை ஹீரோ மோட்டோகார்ப் தேடி வந்தது. இந்த நிலையில், 'விடா எலெக்ட்ரிக்' எனும் பெயரை பயன்படுத்த உரிமை கோரி அந்நிறுவனம் விண்ணப்பித்து இருந்தது. விடா என்றால் உயிர் என்று பொருள்படும். இதனால், இதே பெயர் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் துணை பிராண்டாக மாறலாம் என கூறப்படுகிறது.

தற்போது எலெக்ட்ரிக் வாகனங்கள் வெளியீட்டை மட்டும் ஹீரோ மோட்டோகார்ப் உறுதிப்படுத்தி இருக்கிறது. இவை எந்த பெயரில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன, பிராண்டிங் பற்றிய விவரங்கள் உள்ளிட்டவை மர்மமாகவே இருக்கின்றன.
மினி இந்தியா நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகமாகும் முன்பே விற்றுத்தீர்ந்தது.
மினி இந்தியா நிறுவனத்தின் மினி கூப்பர் எஸ்.இ. எலெக்ட்ரிக் கார் விற்றுத்தீர்ந்தது. மொத்தம் 30 யூனிட்கள் விற்பனைக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், முன்பதிவு துவங்கிய 2 மணி நேரத்தில் அனைத்து யூனிட்களும் விற்றுத்தீர்ந்ததாக மினி இந்தியா அறிவித்தது.
இதுபற்றிய அறிவிப்பு மினி இந்தியா அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் வெளியாகி உள்ளது. புதிய மினி கூப்பர் எஸ்.இ. மாடலுக்கான முன்பதிவு அக்டோபர் 29 ஆம் தேதி துவங்கியது. இந்திய சந்தையில் மினி எலெக்ட்ரிக் மாடல் முன்பதிவு கட்டணம் ரூ. 1 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

மினி கூப்பர் எஸ்.இ. விலை விவரங்கள் மற்றும் வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. எனினும், புதிய கூப்பர் எஸ்.இ. மாடல் முழு சார்ஜ் செய்தால் 270 கிலோமீட்டர் வரை செல்லும் என கூறப்படுகிறது. இதில் உள்ள எலெக்ட்ரிக் மோட்டார் 184 ஹெச்.பி. திறன் மற்றும் 270 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
ஆடி நிறுவனம் தனது இ டிரான் எலெக்ட்ரிக் கார் மாடலுக்கு புது அப்டேட் வழங்கி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ஆடி நிறுவனம் 2019 மற்றும் 2020 இ டிரான் மாடல்களுக்கு மென்பொருள் அப்டேட் வெளியிட்டு வருகிறது. இலவசமாக வழங்கப்படும் அப்டேட் இ டிரான் மாடலில் முன்பை விட 20 கிலோமீட்டர்கள் அதிக ரேன்ஜ் வழங்குகிறது.
மென்பொருள் மூலம் வெளியிடப்படும் அப்டேட் செப்டம்பர் 2018 முதல் நவம்பர் 2019 வரையிலான காலக்கட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட அனைத்து இ டிரான் மாடல்களுக்கும் வழங்கப்படுகிறது. அருகாமையில் உள்ள ஆடி சர்வீஸ் மையங்களில் பயனர்கள் தங்களின் இ டிரான் மாடலை இலவசமாக புதிய மென்பொருளுக்கு அப்டேட் செய்து கொள்ளலாம்.

நீட்டிக்கப்பட்ட ரேன்ஜ் மட்டுமின்றி, புது மென்பொருள் அப்டேட் இ டிரான் காரின் முன்புற எலெக்ட்ரிக் மோட்டார் கண்ட்ரோலை மேம்படுத்துகிறது. இதன் காரணமாக தேவையான இடங்களில் முன்புற மோட்டாரை முழுமையாக ஸ்விட்ச் ஆப் செய்ய முடியும்.
மஹிந்திரா நிறுவனத்தின் புதிய எக்ஸ்.யு.வி.700 மாடல் இந்திய சந்தையில் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளரான மஹிந்திரா தனது புதிய எக்ஸ்.யு.வி.700 மாடல் முன்பதிவில் புது மைல்கல் எட்டியதாக அறிவித்தது. இந்தியாவில் அறிமுகமான ஒரே மாதத்தில் புதிய எக்ஸ்.யு.வி.700 மாடல் முன்பதிவில் 70 ஆயிரத்திற்கும் அதிக யூனிட்களை கடந்துள்ளது.
முன்னதாக மஹிந்திரா எக்ஸ்.யு.வி.700 மாடலின் முதல் யூனிட் பாராலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற சுனில் அன்டிலுக்கு வினியோகம் செய்யப்பட்டது. தற்போது மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்.யு.வி.700 பெட்ரோல் வேரியண்ட்களை மட்டும் வினியோகம் செய்து வருகிறது. இம்மாத இறுதியில் டீசல் வேரியண்ட்களின் வினியோகம் துவங்குகிறது.

மஹிந்திரா நிறுவனம் அடுத்த ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதிக்குள் நாடு முழுக்க 14 ஆயிரம் எக்ஸ்.யு.வி.700 யூனிட்களை வினியோகம் செய்ய இலக்கு நிர்ணயித்து இருப்பதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் புதிய மஹிந்திரா எக்ஸ்.யு.வி.700 நான்கு வேரியண்ட்கள், இரண்டு என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
சூர்த் நகரை மையமாக கொண்டு இயங்கும் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு அசத்தலான தீபாவளி பரிசு வழங்கி இருக்கிறது.
இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு ஒருபக்கம், வட இந்தியாவில் காற்று மாசு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், சூரத்-ஐ சேர்ந்த அலையன்ஸ் குரூப் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு அசத்தலான தீபாவளி பரிசை வழங்கி இருக்கிறது.
பெட்ரோல் விலை உயர்வு மற்றும் காற்று மாசு அதிகரிப்பதை கருத்தில் கொண்டு இந்நிறுவனம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை தனது ஊழியர்களுக்கு பரிசாக வழங்கி இருக்கிறது. ஒகினவா நிறுவனத்தின் பிரைஸ் ப்ரோ மாடல் அந்நிறுநனத்தின் 35 ஊழியர்களுக்கு பரிசாக வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டரின் விலை ரூ. 76,848 (எக்ஸ்-ஷோரூம்) ஆகும்.

'பெட்ரோல் விலை உயர்வு மற்றும் இதர காரணங்களை கருத்தில் கொண்டு ஊழியர்களுக்கு எலெக்ட்ரிக் வாகனங்களை பரிசளிக்க திட்டமிட்டோம். இதன் மூலம் எரிபொருளுக்கான கட்டணம் குறைவதோடு, சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் நிறுவனமும் பங்கெடுக்க வாய்ப்பாக அமைந்துள்ளது,' என அலையன்ஸ் குரூப் இயக்குனர் சுபாஷ் தவர் தெரிவித்தார்.
ஹோண்டா நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு அசத்தலான சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் வாடிக்கையாளர்களை கவரும் வகையில், தி கிரேட் ஹோண்டா பெஸ்ட் எனும் பெயரில் சிறப்பு திட்டத்தை அறிவித்து இருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 38,600 மதிப்பிலான சலுகை மற்றும் பலன்கள் வழங்கப்படுகிறது.
இந்த சலுகைகள் ஹோண்டா அமேஸ், ஜாஸ், புதிய சிட்டி, 4-ம் தலைமுறை சிட்டி மற்றும் டபிள்யூ.ஆர்.வி. போன்ற மாடல்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த சலுகைகள் நவம்பர் 30 ஆம் தேதி அல்லது ஸ்டாக் இருக்கும் வரை வழங்கப்படும் என ஹோண்டா அறிவித்து இருக்கிறது.

சிறப்பு திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட சலுகைகள்- தள்ளுபடி, லாயல்டி போனஸ், எக்சேன்ஜ் தள்ளுபடி வடிவில் வழங்கப்படுகின்றன. ஹோண்டா அமேஸ் பேஸ்லிப்ட் மாடலுக்கு ரூ. 15 ஆயிரம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஹோண்டா ஜாஸ் மாடலுக்கு ரூ. 36,147 வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது.
ஹோண்டா டபிள்யூ.ஆர்.வி. மாடலுக்கு ரூ. 29,058 வரையிலான சலுகைகளும், 4-ம் தலைமுறை ஹோண்டா சிட்டி மாடலுக்கு ரூ. 38,608 வரையிலான பலன்களும் வழங்கப்படுகின்றன.
வோக்ஸ்வேகன் நிறுவனம் தனது 2021 டி ராக் மாடல் முன்பதிவை திடீரென நிறுத்தி இருக்கிறது.
வோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் 2021 டி ராக் மாடலுக்கான முன்பதிவை நிறுத்தியது. டி ராக் மாடலுக்கான இரண்டாம் கட்ட யூனிட்கள் விற்றுத்தீர்ந்த நிலையில் முன்பதிவு நிறுத்தப்பட்டு இருக்கிறது. இறக்குமதி செய்யப்படும் வோக்ஸ்வேகன் டி ராக் விலை ரூ. 21.35 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஒற்றை வேரியண்ட்டில் விற்பனை செய்யப்படும் டி ராக் எஸ்யுவி 1.5 லிட்டர் TSI பெட்ரோல் என்ஜினுடன் கிடைக்கிறது. இந்த என்ஜின் 148 பிஹெச்பி பவர், 250 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

காரின் உள்புறம் டூயல் சோன் கிளைமேட் கண்ட்ரோல், 10.25 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, பானரோமிக் சன்ரூப் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்படுகின்றன.
போர்ஷ் நிறுவனத்தின் புதிய டேகேன் எலெக்ட்ரிக் கார் மாடல் இந்திய வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.
ஜெர்மன் நாட்டு ஆட்டோ உற்பத்தியாளரான போர்ஷ் தனது முதல் எலெக்ட்ரிக் கார் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. வெளியீட்டின் போது புதிய டேகேன் மாடல் இந்தியாவின் சக்திவாய்ந்த எலெக்ட்ரிக் கார் என்ற பெருமையை பெறும்.
முன்னதாக போர்ஷ் டேகேன் மாடல் இரண்டு ஆண்டுகளுக்கு முன் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த காரின் பெயர் துருக்கி மொழியில் இருந்து எடுக்கப்பட்டு இருக்கிறது. போர்ஷ் டேகேன் மாடல்- டேகேன், டேகேன் 4எஸ், டேகேன் டர்போ மற்றும் டேகேன் டர்போ எஸ் என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இத்துடன் டேகேன் கிராஸ் டூரிஸ்மோ வேரியண்டிலும் கிடைக்கிறது.

இந்த எலெக்ட்ரிக் கார் 402 பி.ஹெச்.பி. திறன், 344 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும். இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 431 கிலோமீட்டர் வரை செல்லும். இதன் பெர்பார்மன்ஸ் பேட்டரி பிளஸ் வேரியண்ட் முழு சார்ஜ் செய்தால் 484 கிலோமீட்டர் செல்லும்.
எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய ஆஸ்டர் எஸ்.யு.வி. மாடல் வினியோக விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் ஆஸ்டர் எஸ்.யு.வி. மாடல் வினியோகத்தை துவங்கியது. முன்னதாக இந்த மாடல் ரூ. 9.78 லட்சம், எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த வாரம் இந்த காருக்கான முன்பதிவு துவங்கியது. முன்பதிவு துவங்கிய முதல் நாளிலேயே 5 ஆயிரம் யூனிட்கள் விற்றுத்தீர்ந்தன.
இந்த நிலையில், முன்பதிவு செய்யப்பட்ட 5 ஆயிரம் யூனிட்களில் முதல் 500 யூனிட்கள் ஏற்கனவே வினியோகம் செய்யப்பட்டன. இந்த ஆண்டு இறுதிக்குள் 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் யூனிட்களை வினியோகம் செய்ய எம்ஜி மோட்டார் திட்டமிட்டுள்ளது.

புதிய ஆஸ்டர் மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல், 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இவை முறையே 110 பி.எஸ். திறன், 144 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசை மற்றும் 140 பி.எஸ். திறன், 220 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகின்றன.
எம்ஜி ஆஸ்டர் மாடலின் அனைத்து வேரியண்ட்களிலும் 27 பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் டாப் எண்ட் மாடல்களில் 49 பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.
ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் இந்திய சந்தையில் புது மைல்கல் எட்டியதாக அறிவித்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் இந்திய சந்தை விற்பனையில் 50 ஆயிரம் யூனிட்களை கடந்துள்ளது. தற்போதைய நிதியாண்டில் கடும் வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து இது சாத்தியமானது என ஹீரோ எலெக்ட்ரிக் தெரிவித்து உள்ளது.
இதன் மூலம் 2022 நிதியாண்டு இறுதியில் சந்தையில் கணிசமான பங்குகளை பெற முடியும் என ஹீரோ எலெக்ட்ரிக் நம்பிக்கை தெரிவித்தது. ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தின் ஆப்டிமா மற்றும் என்.வை.எக்ஸ். மாடல்கள் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கின்றன.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் பத்து லட்சம் எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்ய ஹீரோ எலெக்ட்ரிக் இலக்கு நிர்ணயித்து உள்ளது. இதற்காக ஹீரோ எலெக்ட்ரிக் 300 புதிய விற்பனை டச் பாயிண்ட்களை திறக்க திட்டமிட்டுள்ளது.
ரெவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது விற்பனையை நீட்டிக்க திட்டமிட்டுள்ளது.
ரெவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனம் கொல்கத்தா, கோயம்புத்தூர், மதுரை, விசாகபட்டினம் மற்றும் விஜய்வாடா என ஐந்து புதிய நகரங்களில் விற்பனையை நீட்டிக்க இருப்பதாக அறிவித்து உள்ளது. இதன் மூலம் ரெவோல்ட் மோட்டார்ஸ் நாடு முழுக்க 14 முக்கிய நகரங்களில் மொத்தம் 19 விற்பனை மையங்களை கொண்டிருக்கும்.
முன்னதாக அக்டோபர் மாதத்தில் இந்தியாவின் மூன்று நகரங்களில் விற்பனையை துவங்க இருப்பதாக ரெவோல்ட் மோட்டார்ஸ் அறிவித்தது. தொடர்ந்து பெட்ரோல் விலை அதிகரித்து வருவதை ஒட்டி எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது.

ரெவோல்ட் ஆர்.வி.400 எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளில் 72 வோல்ட், 3.24 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் மணிக்கு அதிகபட்சம் 85 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.
சீனாவை சேர்ந்த பி.வை.டி. நிறுவனம் இந்திய சந்தையில் முதல் எலெக்ட்ரிக் எம்.பி.வி. மாடலை அறிமுகம் செய்தது.
சீன நாட்டு நிறுவனமான பி.வை.டி. (பில்டு யுவர் டிரீம்ஸ்) நிறுவனம் இந்திய சந்தையில் இ6 எலெக்ட்ரிக் எம்.பி.வி. மாடலை அறிமுகம் செய்தது. இந்தியாவில் புதிய பி.வை.டி. இ6 விலை ரூ. 29.15 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
புதிய பி.வை.டி. இ6 மாடல் டெல்லி என்.சி.ஆர்., பெங்களூரு, ஐதராபாத், மும்பை, சென்னை, விஜய்வாடா, கொச்சி மற்றும் ஆமதாபாத் நகரங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. எனினும், பி.வை.டி. மாடல் பி2பி பிரிவில் மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால் வாடகை கார் ஓட்டுவோர் மற்றும் கார்ப்பரேட் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.

பி.வை.டி. இ6 மாடலில் உள்ள எலெக்ட்ரிக் மோட்டார் 94 பி.ஹெச்.பி. திறன், 180 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 130 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இந்த காரில் 71.6 கிலோவாட் ஹவர் பிளேட் லித்தியம் பெரோ பாஸ்பேட் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த பேட்டரியை முழு சார்ஜ் செய்தால் 415 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும். இத்துடன் பி.வை.டி. இ6 மாடலில் உள்ள சிட்டி ஒன்லி ரேன்ஜ் 520 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. கோபால்ட் இல்லாத பேட்டரி என்பதால், இது மற்ற பேட்டரிகளை விட பாதுகாப்பானது ஆகும்.






