என் மலர்tooltip icon
    TNLGanesh

    About author
    அச்சு ஊடக துறையில் 12 வதுஆண்டு பயணம். மலை பயணமும்,மழையில் பயணமும் பிடித்தமான ஒன்று. படைப்பியலில் அதிக ஆர்வம் . இயற்கையின் அழகை தனிமையில் ரசிக்க பிடிக்கும். நகர்வுகளை கண்டறிய பிடிக்கும். நான் தமிழின் மூத்த மகன் என்பதில் பெருமை.
      • துலுக்கன்குளம் மூலம் வன்னிமாநகரம் உள்ளிட்ட 8 கிராமங்களில் மொத்தம் 500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
      • தூர்வாரும் பணியை புதுவாழ்வு சங்க நிர்வாகி கிளமென்ட் எபனேசர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

      குரும்பூர்:

      நாலுமாவடி புதுவாழ்வு சங்கம் சார்பில் துலுக்கன்குளத்தின் பாசன வாய்க்கால் தூர்வாரும் பணிகள் தொடங்கியது.

      சோனகன்விளை அருகே உள்ள துலுக்கன்குளம் மூலம் வன்னிமாநகரம், ராணிமகாராஜபுரம், கோயில்விளை, அடைக்கலாபுரம், நத்தக்குளம் உள்ளிட்ட 8 கிராமங்களில் மொத்தம் 500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. தற்போது குளம் மற்றும் வாய்க்கால்கள் தண்ணீரின்றி காணப்படுகிறது. இந்நிலையில் துலுக்கன் குளத்தின் மிகைநீர் வடிகால் வாய்க்கால்களை தூர்வாரி தருமாறு துலுக்கன்குளம் நீரினை பயன்படுத்தும் விவசாயிகள் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி லாசரசிடம் கோரிக்கை விடுத்தனர்+.

      இவர்களது கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக நாலுமாவடி புதுவாழ்வு சங்கம் சார்பில் துலுக்கன்குளத்தின் பாசன மடை ஒன்றின் கால்வாய் தூர்வாரும் பணி நேற்று தொடங்கியது.

      இந்த பணியை புதுவாழ்வு சங்க நிர்வாகி கிளமென்ட் எபனேசர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் துலுக்கன்குளம் நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர் தனசேகர், முன்னாள் தலைவர் ராஜபாண்டி, மடை உறுப்பினர்கள் கோயில்விளை கணேசன், சொர்ணகோபி, கனகராஜ், பால்ராஜ், விவசாய சங்கம் அம்மன்புரம் ஆறுமுகம், கவுரவ ஆலோசகர் கடற்கரை தங்கம், வண்ணான்குளம் தலைவர் உதய்சிங், நீர்வளத்துறை பாசன ஆய்வாளர் முத்துக்குமார், பாசன உதவியாளர் சுடலைமுத்து, இயேசு விடுவிக்கிறார் ஊழிய விளையாட்டுத்துறை எட்வின், மக்கள் தொடர்பு அதிகாரி சாந்தக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி லாசரஸ் தலைமையில் பொதுமேலாளர் செல்வக்குமார் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

      • விபத்தில் தாய் அல்லது தந்தையை இழந்து கல்வி பயிலும் மாணவ-மாணவிகளுக்கான நிதியுதவி பத்திரங்களை மதிப்பீட்டு குழுத்தலைவர் அன்பழகன் வழங்கினார்.
      • கலெக்டர் அலுவலகம் ரூ.120 கோடியில் கட்டப் பட்டு இன்னும் 4 மாதங்களில் திறக்கும் நிலையில் உள்ளது.

      தென்காசி:

      தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட ரங்கில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழுத் தலைவர் அன்பழகன் தலைமையில் துறை சார்ந்த அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடை பெற்றது.

      உறுப்பினர்கள் ராஜேஷ் குமார், ஜவாஹிருல்லா, சிவக்குமார், மணியன், காந்திராஜன், சிந்தனை செல்வன் மற்றும் கலெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

      அப்போது விபத்தில் தாய் அல்லது தந்தையை இழந்து கல்வி பயிலும் மாணவ-மாணவிக ளுக்கான நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் குறித்த கால வைப்புத் தொகையான ரூ.50 ஆயிரம் மற்றும் ரூ.75 ஆயிரத்துக்கான பத்திரங்களை மதிப்பீட்டு குழுத்தலைவர் அன்பழகன் வழங்கினார்.

      இக்கூட்டத்தில், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டுக்குழு தலைவர் அன்பழகன் தெரிவித்ததாவது:-

      தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரையிலும் பல்வேறு புதிய வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. புதிதாக மாவட்ட கலெக்டர் அலுவலகம் ரூ.120 கோடியில் கட்டப் பட்டு இன்னும் 4 மாதங்களில் திறக்கும் நிலையில் உள்ளது. கால்நடை மருந்தகம் ரூ.48 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு விரைவாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட உள்ளது. அரசு தலைமை மருத்துவமனையில் 6 தளங்களுடன் 76 ஆயிரம் சதுர அடியில் ரூ.22 கோடியில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மையம் கட்டப்பட்டு வருகிறது. தொகுதிக்கு ஒரு விளையாட்டு அரங்கம் என்ற முறையில் விளையாட்டு துறை அமைச்சர் மூலமாக ரூ.15 கோடியில் உள் விளையாட்டு அரங்கத்திற்கு ஒப்பந்தப்புள்ளி போடப்பட்டு விரைவாக இந்த பணி நடைபெற இருக்கிறது, காவல்துறையின் தலைமை கட்டிடம் ரூ.54 கோடி மதிப்பில் கட்டி திறக்கும் நிலையில் உள்ளது. ரூ.400 கோடிக்கும் மேல் தற்போது தென்காசியில் மட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.

      இவ்வாறு அவர் தெரிவித்தார்.

      கூட்டத்தில், தென்காசி எம்.எல்.ஏ.க்கள் பழனிநாடார், ராஜா, தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன், மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி, வன அலுவலர் முருகன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அழகிரிசாமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொறுப்பு) ராஜமனோகரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

      • ஒவ்வொரு வாகனத்திற்கும் ஒவ்வொரு பொறுப்பாளர் நியமனம் செய்து அவர்களுடன் வாகனத்தில் பயணிப்பவர்கள் தொடர்பில் இருக்க வேண்டும்.
      • மாநாட்டில் கலந்து கொள்பவர்களுக்கு உணவு, குடிநீர் வசதிகள் கிடைத்திட பொறுப்பாளர்கள் ஏற்பாடு செய்திட வேண்டும்.

      செங்கோட்டை:

      மதுரையில் நாளை நடைபெறும் அ.தி.மு.க. மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் செங்கோட்டையில் உள்ள தென்காசி வடக்கு மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.

      தென்காசி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாநில மகளிரணி துணைச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ராஜலட்சுமி முன்னிலை வகித்தார்.

      மாவட்ட பொருளாளர் சண்முகையா வரவேற்று பேசினார். தொடா்ந்து மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. பேசியதாவது:-

      700 வாகனங்கள்

      அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் அழைப்பை ஏற்று நாம் அனைவரும் குடும்பத்துடன் மதுரையில் நடைபெறும் பொன்விழா எழுச்சி மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும். அன்றைய தினம் விடுதலை போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு தினம் உள்ளது. எனவே அன்று அதிகாலையில் அவருடைய நினைவிடம் சென்று அ.தி.மு.க. சார்பில் மரியாதை செலுத்திய பின்னர் மாநாட்டிற்கு வாகனங்களில் அணிவகுத்து செல்ல வேண்டும்.

      ஒவ்வொரு ஒன்றிய, நகர, பேரூருக்கும் ஒதுக்கப் பட்டுள்ள வாகனங்களில் அனைவரும் பாதுகாப்புடன் பயணம் செய்து மாநாடு சென்று வர வேண்டும். வாடகை கார், வேன், லாரி மற்றும் சொந்த உபயோக வாகனங்கள் என சுமார் 700 வாகனங்கள் தயார் நிலையில் உள்ளது.

      குடிநீர் வசதி

      ஒவ்வொரு வாகனத் திற்கும் ஒவ்வொரு பொறுப்பாளர் நியமனம் செய்து அவர்களுடன் வாகனத்தில் பயணிப் பவர்கள் தொடர்பில் இருக்க வேண்டும். ஒருசேர சென்று மாநாட்டினை சிறப்பு செய்து மீண்டும் ஊருக்கு பாதுகாப்புடன் பயணிக்க வேண்டும்.

      மாநாட்டில் கலந்து கொள்பவர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வசதிகள் அனைவருக்கும் கிடைத்திட பொறுப்பாளர்கள் ஏற்பாடு செய்திட வேண்டும். மாநாட்டை வெற்றி அடைய செய்து அ.தி.மு.க. ஆட்சிக்கட்டிலில் அமர முதல்படி எடுத்து வைத்திடுவோம்.

      இவ்வாறு அவர் பேசினார்.

      கலந்து கொண்டவர்கள்

      கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் பொய்கை மாரியப்பன், மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் சிவஆனந்த், அண்ணா தொழிற்சங்க மண்டல செயலாளர் ராமையா, மாவட்ட விவசாய அணி செயலாளர் பரமகுருநாதன், ஒன்றிய செயலாளர்கள் எஸ்.ஆர். ராமசந்திரன், செல்லப்பன், வசந்தம் முத்துபாண்டியன், ஜெயகுமார், ரமேஷ், மகாராஜன், நகர செயலாளர்கள் கணேசன், ஆறுமுகம், எம்.கே. முருகன், பரமேஸ்வர பாண்டியன் மற்றும் நிர்வாகிகள், தொழிற்சங்க நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலா் கலந்து கொண்டனர்.

      • தென்காசி மாவட்டத்தில் அனைத்து மருந்தாளுனர்களும் கோரிக்கை அட்டைகள் அணிந்து பணிபுரிந்தனர்.
      • கோரிக்கை அட்டை அணியும் இயக்க பணியினை மாவட்டத் தலைவர் உள்பட நிர்வாகிகள் ஒருங்கிணைத்திருந்தனர்.

      தென்காசி:

      மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையில் காலியாக உள்ள 1,300-க்கும் மேற்பட்ட மருந்தா ளுநர் பணியிடங்களை மக்கள் நலன் கருதி உடனடி யாக நிரப்பிட வேண்டியும், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவ விதி தொகுப்பின் படி கூடுதலாக மருந்தா ளுனர் பணியிடங்களை உருவாக்கிட வேண்டியும், கொரோனா காலத்தில் பணிபுரிந்த அனைத்து மருந்தாளுநர்கள், தலைமை மருந்தாளுநர்கள், மருந்து கிடங்கு அலுவலர்களுக்கு கொரோனா ஊக்கத்தொகை வழங்கிட வேண்டியும் தென்காசி மாவட்டத்தில் அனைத்து மருந்தாளுனர்களும் கோரிக்கை அட்டைகள் அணிந்து பணிபுரிந்தனர்.

      இதுதொடர்பாக மாநில பொதுச்செயலாளர் சண்முகம், அனைத்து மருந்தாளுநர்களின் நியாயமான கோரிக்கை களை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

      தொடர்ந்து கோரிக்கை அட்டை அணியும் இயக்க பணியினை மாவட்டத் தலைவர் நவாஸ்கான், மாவட்ட செயலாளர் குமார், மாவட்ட பொருளாளர் கோமதி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் முருகன், லெட்சுமணன், அசோக் குமார், பேச்சியப்பன், சரவணன், சுவாமிநாதன் ஆகியோர் ஒருங்கிணைத்திருந்தனர். 

      • கூட்டத்தில் தென்காசி மாவட்ட கூட்டமைப்பு தலைவர் டி.கே.பாண்டியன் கலந்து கொண்டு பேசினார்.
      • கடையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வருகிற 25-ந்தேதி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

      கடையம்:

      கடையம் ஊராட்சி ஒன்றியத்தில் 23 ஊராட்சி மன்ற தலைவர்களின் அவசர கூட்டம் திருமலையப்பபுரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தலைவர் மாரியப்பன் தலைமையில், கூட்டமைப்பு செயலாளர் பூமிநாத் முன்னிலையில் நடைபெற்றது.

      சிறப்பு அழைப்பாளராக தென்காசி மாவட்ட கூட்டமைப்பு தலைவர் டி.கே.பாண்டியன் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் ஒற்றைத் தீர்மானமாக 23 ஊராட்சி மன்ற தலைவர்களும் ஒருங்கிணைந்து அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நடைபெறுகின்ற ஏ.ஜி.எம்.டி. வேலைகள் ஊராட்சி மன்ற தலைவர்களின் மேற்பார்வையில் நடைபெற வேண்டும், அதில் பிறர் தலையிட அனுமதிக்க மாட்டோம். இக்கோரிக்கையை 20 மாத காலமாக வலியுறுத்தி வருகிறோம். இது சம்பந்தமாக வட்டார வளர்ச்சி அலுவலர், மாவட்ட கலெக்டர், ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் மற்றும் தமிழக முதல்-அமைச்சரிடம் பலமுறை எடுத்துரைத்தும் எந்த பயனும் கிடைக்கவில்லை.

      ஆகவே வருகிற 25-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலையில், கடையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தீர்மானிக்கப்பட்டது.

      கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் செண்பகவல்லி ஜெகநாதன், அழகுதுரை, முகைதீன் பீவி அசன், பிரேமராதா ஜெயம், ரவிச்சந்திரன், மாரி சுப்பு, முருகன், முகமது உசேன், பொன் ஷீலாபரமசிவன், முத்துலட்சுமி ராமதுரை, கல்யாணசுந்தரம், ஜீனத் பர்வீன் யாகூப், கணேசன், மதியழகன், முத்தமிழ் செல்வி ரஞ்சித், குயிலி லட்சுமணன், ஜன்னத் சதாம், மலர்மதி சங்கரபாண்டியன், சாருகலா ரவி, முப்புடாதி பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

      • பள்ளியில் பயிலும் மாணவிகளிடம் அடிப்படை வசதி தேவைகள் குறித்து குழுவினர் கேட்டறிந்தனர்.
      • இந்த மாத இறுதிக்குள் பாலத்தில் போக்குவரத்து செல்வதற்கான நடவடிக்கை தொடங்கப்படும்.

      நெல்லை:

      நெல்லை மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் அரசு திட்டப்பணிகள் குறித்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக் குழு தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமையில் இன்று உறுப்பினர்கள் 2-வது நாளாக ஆய்வு மேற்கொண்டனர்.

      உயர்மட்ட பாலம் கட்டும் பணி

      இதில் உறுப்பினர்கள் ராஜேஷ்குமார், ஜவா ஹிருல்லா , மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி, துணை செயலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். இன்று நெல்லையை அடுத்த பொன்னாக்குடியில் நதிநீர் இணைப்பு திட்டப்பணிகள், அதே சாலையில் தேசிய நெடுஞ்சாலையில் உயர்மட்ட பாலம் கட்டும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

      அதனைத்தொடர்ந்து நெல்லை டவுன் கல்லணை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதுமான வகுப்பறைகள், கழிப்பறை உள்ளிட்ட மாணவிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து பார்வையிட்டனர். மேலும் பள்ளியில் பயிலும் மாணவிகளிடம் அடிப்படை வசதி தேவைகள் குறித்து கேட்டறிந்தனர்.

      பின்னர், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக் குழு தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

      தாமிரபரணி ஆறு, நம்பியாறு, கருமேனியாறு நதிநீர் இணைப்பு திட்டப்பணிகள் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியால் கடந்த 2009-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. கடந்த ஆட்சி காலங்களில் பணிகள் தொய்வு ஏற்பட்டிருந்தது. தற்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்றதும் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் விரைந்து நடைபெற்று வருகிறது.

      இதுவரை 95 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது. ஒரு பாலம் கட்டுமானப் பணி முடிவடைந்துள்ளது. அதில் இந்த மாத இறுதிக்குள் போக்குவரத்து செல்வதற்கான நடவடிக்கை தொடங்கப்படும். எஞ்சியுள்ள நதிநீர் இணைப்பு பணிகள் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு முதல்-அமைச்சரால் தொடங்கி வைக்கப்படும்.

      கல்லணை அரசுப்பள்ளி

      தொடர்ந்து, நெல்லை மாநகராட்சிக்குட்பட்ட கல்லணை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பள்ளியில் அடிப்படை வசதிகள் குறைவாக இருப்பதால் இந்த ஆண்டு மாணவிகளின் சேர்க்கை குறைந்துள்ளது. இனிமேல் பள்ளியில் மாணவிகள் சேர்க்கை குறையாத அளவிற்கு பள்ளிகளில் தேவையான அடிப்படை வசதி களை மேம்படுமங மப்படும். மேலும், பள்ளி அருகில் உள்ள கால்வாயில் அசுத்தமாக இருக்கிறது. அதனையும் சரிசெய்து, பள்ளியில் அதிக கழிப்பறை வசதி, வகுப்பறை வசதி கட்டி கொடுத்து, அனைத்து மாணவிகளும் பயன்பெறும் வகையில் வசதி ஏற்படுத்தி தருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள குழுவின் மூலம் அறிவுறுத்தப்படுகிறது.

      மாவட்ட கலெக்டர் அலுவலகம் புதிதாக கட்டப்பட்டு, தனித்தனியாக வெளியில் அமைந்துள்ள துறைகள் அனைத்தையும் பொதுமக்களின் நலன்கருதி ஒரே இடத்தில் கொண்டு வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

      கூடுதல் கட்டிடம்

      அரசு விருந்தினர் மாளிகையில் கூடுதலாக 10 அறைகள் கட்டுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள ப்பட்டுள்ளது. ரூ.92 கோடியில் நெல்லை அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டிடம் கட்டப்படும்.

      இவ்வாறு அவர் கூறினார்.

      தொடர்ந்து கல்லணை பள்ளி மாணவிகள் தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்த தேவையை மனுவாக எழுதி மதிப்பீட்டு குழுவினரிடம் வழங்கினர்.

      • மேலவடகரை குளத்தில் போலீசார் ரோந்து சென்றனர்.
      • மண் திருடிக் கொண்டிருந்த கும்பல் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடி விட்டது.

      களக்காடு:

      களக்காடு சப்-இன்ஸ்பெக்டர் வேலம்மாள் மற்றும் போலீசார் மேலவடகரை குளத்தில் ரோந்து சென்றனர். அப்போது குளத்தில் ஒரு கும்பல் டிராக்டரில் மண் திருடிக் கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்ததும் கும்பல் தப்பி ஓடி விட்டது. இதையடுத்து டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மண் திருட்டில் ஈடுபட்டு தப்பி ஓடிய மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

      • குளத்து மண் ஏற்றி வந்த டிராக்டரை நிறுத்தி போலீசார் சோதனையிட்டனர்.
      • டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார், டிராக்டரை ஓட்டி வந்த சிறுவனையும் கைது செய்தனர்.

      களக்காடு:

      களக்காடு சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி மற்றும் போலீசார் ஜெ.ஜெ. நகர் பகுதியில் ரோந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த குளத்து மண் ஏற்றி வந்த டிராக்டரை நிறுத்தி சோதனையிட்டனர்.

      இதில் அரசு அனுமதி இன்றி குளத்து மண்ணை திருடி விற்பனை செய்ய கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார், டிராக்டரை ஓட்டி வந்த 16 வயது சிறுவனை கைது செய்தனர். மேலும் டிராக்டர் உரிமையாளரான கடம்போடுவாழ்வு தெற்கு தெருவை சேர்ந்த பெருமாள் மகன் செண்டு என்பவரை தேடி வருகின்றனர்.

      • கடல் அலையில் சிக்கி பலியான 3 சிறுவர்களின் குடும்பங்களுக்கும் தமிழக அரசு நிவாரண நிதியாக தலா ரூ.50 லட்சம் வழங்க வேண்டும்.
      • மாலையில் மாணவர்கள் 3 பேரின் உடல்களும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நவ்வலடி கடற்கரை பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது.

      நெல்லை:

      உவரி அருகே நவ்வலடி பகுதியை சேர்ந்த பள்ளி மாணவர்களான ராகுல், முகேஷ், ஆகாஷ் ஆகிய 3 பேரும் கடலில் மூழ்கி பலியானார்கள். தகவல் அறிந்ததும் ராதாபுரம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. இன்பதுரை, 3 பேரின் வீடுகளுக்கு நேற்று காலை நேரில் சென்றார். அவர்களின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

      பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், "கடல் அலையில் சிக்கி பலியான 3 சிறுவர்களின் குடும்பங்களுக்கும் தமிழக அரசு நிவாரண நிதியாக தலா ரூ.50 லட்சம் வழங்க வேண்டும். ஏரி, கடல் போன்ற நீர்நிலைகளுக்கு செல்லும்போது பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் இல்லாமல் செல்லக்கூடாது என்பன போன்ற விழிப்புணர்வு பாடங்களையும், போதனைகளையும் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் வழங்க கல்வித்துறை முயற்சி எடுக்க வேண்டும்" என்றார்.

      பின்னர் மாலையில் மாணவர்கள் 3 பேரின் உடல்களும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நவ்வலடி கடற்கரை பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது. இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் ஊர்வலமாக நடந்து சென்ற முன்னாள் எம்.எல்.ஏ. இன்பதுரை, 3 பேரின் உடல்களுக்கும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் வள்ளியூர் அருண்குமார், வள்ளியூர் பேரூர் கழக துணை செயலாளர் கருப்பசாமி, மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் சந்திரசேகர், ஒன்றிய தலைவர் ஆவுடை மணிகண்டன் ஆகியோர் உடனிருந்தனர்.

      • பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வருகையையொட்டி பல்வேறு இடங்களில் பேனர்கள், சுவரொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது.
      • ஒன்டிவீரன் நிகழ்ச்சிகளுக்கும் பேனர், சுவரொட்டிகள் வைக்க அனுமதி வழங்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

      நெல்லை:

      மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க நிறுவன தலைவர் மாரியப்ப பாண்டியன், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செய லாளர் கலைக்கண்ணன், தமிழர் உரிமை மீட்பு களம் லெனின் கென்னடி மற்றும் பல்வேறு கட்சி மற்றும் அமைப்பினர் நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமாரிடம் ஒரு மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

      கடந்த ஜூலை 23-ந்தேதி மாஞ்சோலை தோட்ட தொழிலாளர் நினைவு தினத்தையொட்டி அஞ்சலி செலுத்தும் வகையில் பல்வேறு அமைப்புகள் சார்பில் பேனர்கள் வைக்க அனுமதி மறுக்கப்பட்டது.

      வருகிற 20-ந்தேதி சுதந்திர போராட்ட வீரர் ஒன்டிவீரன் வீரவணக்க நிகழ்ச்சியை முன்னெடுக்கும் வகையில் சுவரொட்டிகள் ஒட்ட அனுமதி கேட்ட போது போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். ஆனால் நாளை மறுநாள் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வருகையை யொட்டி பல்வேறு இடங்களில் பேனர்கள், சுவரொட்டிகள் வைக்கப் பட்டுள்ளது. இதற்கு போலீசார் அனுமதி மறுக்கவில்லை. எனவே ஒன்டிவீரன் நிகழ்ச்சிகளுக்கும் பேனர், சுவரொட்டிகள் வைக்க அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

      • பேச்சிமுத்து,செந்தில்குமார் ஆகியோர் பெருமாளை வழிமறித்து செலவுக்கு ரூ.200 தரும்படி கேட்டனர்.
      • ஆத்திரம் அடைந்த இருவரும், கத்தியை காட்டி மிரட்டி பெருமாளிடம் இருந்த ரூ. 100- ஐ பறித்தனர்.

      களக்காடு:

      களக்காடு அருகே உள்ள படலையார்குளம் கீழத்தெருவை சேர்ந்தவர் பெருமாள் (வயது40). விவசாயி இவர் நேற்று நாகன்குளம் விலக்கில் வந்து கொண்டிருந்த போது கடம்போடுவாழ்வு பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்த பேச்சிமுத்து (25), சிங்கிகுளத்தை சேர்ந்த செந்தில்குமார் (44) ஆகியோர் அவரை வழிமறித்து செலவுக்கு ரூ. 200 தரும்படி கேட்டனர். அதற்கு பெருமாள் மறுத்தார்.

      இதனால் ஆத்திரம் அடைந்த இருவரும், கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்த ரூ. 100- ஐ பறித்தனர். இதுபற்றி அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பேச்சிமுத்து, செந்தில் குமாரை கைது செய்தனர்.

      • ஜான்ஸ் பள்ளி அருகே உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்திலும், நெல்லை அரசு மல்டி ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
      • நெல்லை மாவட்டத்தில் திட்டப்பணிகள் அனைத்தும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

      நெல்லை:

      நெல்லை மாவட்டத்தில் இன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக்குழு தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

      திட்டப் பணிகள் குறித்து ஆய்வு

      நெல்லை மாவட்டத்தில் நடைபெற்று வரும் திட்டப்பணி கள் குறித்து ஆய்வு செய்வ தற்காக வந்த இந்த குழுவில் எம்.எல்.ஏ.க்கள் சந்திரன், சிவகுமார், பரந்தாமன், ராஜேஷ்குமார், ஜவாஹிருல்லா, அப்துல் வஹாப் ஆகியோர் வந்திருந்தனர். நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்தி கேயன், சட்டமன்ற பேரவை செயலர் சீனிவாசன், மாநகராட்சி மேயர் சரவணன், துணை மேயர் ராஜூ ஆகியோர் முன்னிலையில் அந்த குழுவினர் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

      மேலப்பாளையம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தின் அடிப்படை வசதிகள் மற்றும் போதுமான மருந்துவ வசதிகள் குறித்து மதிப்பீட்டுக் குழுதலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமையில் உறுப்பி னர்கள் பார்வையிட்டதோடு, பாம்பு கடி, நாய்கடி உள்ளிட்ட சிகிச்சைக்கான மருந்துகள் இருப்பு குறித்து பார்வையிட்டார்கள்.

      நான்கு வழிச்சாலைப் பணிகள்

      மேலும் இன்னுயிர் காப்போம், நம்மைக் காக்கும் திட்டம் மற்றும் மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் இதயம் காப்போம் மருத்துவ பெட்டகங்களை ஆய்வு மேற்கொண்டதோடு, சிகிச்சைக்காக வந்த நோயாளிகளிடம் மருத்துவ சிகிச்சை வழங்குவது குறித்து கேட்டறிந்தனர். தொடர்ந்து, வண்ணார்பேட்டை தெற்கு புறவழிச்சாலையில் நான்கு வழிசாலை விரிவாக்க பணிக்காக பாளையங்கால்வாய் விரிவாக்கம் செய்யப்பட்டு வருவதை பார்வையிட்டனர்.

      குலவணிகர்புரத்தில் "தோழி" பணிபுரியும் மகளிர் தங்கும் விடுதியினையும், அவ்விடுதியில் பயோமெட்ரிக் முறையில் கதவு திறக்கப்படுவது குறித்தும் பார்வையிட்டு, போதுமான இடவசதி உள்ளதா? என்பதையும் பணிபுரியும் மகளிர்களிடம் கேட்டறிந்தனர்.

      தொடர்ந்து பாளை ஏ.ஆர். லைனில் உள்ள வணிகவரி இணை ஆணையர் அலுவ லகத்தினை பார்வையிட்டு, இணைய வழியாக ஒவ்வொரு சோதனை சாவடிகளில் சரக்கு போக்குவரத்து சரியான முறையில் செல்லும் நடைமுறை கள் குறித்து பார்வையிட்டனர்.

      சித்தா கல்லூரி

      மேலும், அரசினர் சித்தா கல்லூரி மாணவிகள் ஆதிதிராவிடர் விடுதியினை நேரில் பார்வையிட்டு, அங்கு மாணவிகளுக்காக தயாரிக்கப்படும் உணவின் தரம் குறித்தும், சுகாதார முறையில் கழிப்பிட வசதி, தங்குமிடம் உள்ளிட்ட அடிப் படை வசதிகள் இருக்கிறதா? என்பது குறித்தும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக் குழுவினர் ஆய்வு செய்தனர்.

      பின்னர் ஜான்ஸ் பள்ளி அருகே உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்திலும், நெல்லை அரசு மல்டி ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியிலும் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மற்றும் அவரது சகோதரியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். அதனைத் தொடர்ந்து ரெட்டியார்பட்டி அரசு பள்ளியை ஆய்வு செய்தனர். பின்னர் சட்டமன்ற மதிப்பீட்டு குழு தலைவர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

      தாமிரபரணி ஆற்றில் இருந்து பிரிந்துள்ள பாளை யங்கால்வாயில் பார்வையிட்ட போது அமலை செடிகள் அதிகளவில் அடர்ந்திருந்தது. அதனை உடனடியாக பொதுப்பணித்துறை அதிகாரிகளை சரிசெய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. பல லட்சம் ரூபாய் செலவு செய்து ஆதிதிராவிடர் நல விடுதியில் சமையலுக்கு கொடுக்கப்பட்ட சமையல் எந்திரங்களை பயன்படுத்தாமல் உள்ளனர். நாங்குநேரியில் நடந்த சம்பவம் போல் இனியும் வராமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் .

      ரூ.652 கோடியில் 3-ம் கட்டப்பணி

      தமிழகத்தின் பாரம்பரிய மருத்துவமான சித்த மருத்துவத்தை மேம்படுத்தும் வகையில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்க தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்பும் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி 6 மாத காலமாக அந்த கோப்பை கிடப்பில் போட்டுள்ளார். இது வேதனை அளிக்கிறது.

      நெல்லை மாவட்டத்தில் திட்டப்பணிகள் அனைத்தும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நெல்லை மாநகரப் பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் 4 கட்டங்களில் நடைபெற்று வரும் நிலையில் அதில் தற்போது 2 கட்டப்பணி முடிந்து உள்ளது. ரூ.652 கோடி மதிப்பில் 3-ம் கட்ட பணிக்கு ஒப்பந்த புள்ளி கோரப்பட்டு பணிகள் கொடுக்கப் பட்டுள்ளது. இந்த பணிகள் இன்னும் ஓராண்டு காலத்திற்குள் முடிவடையும்.

      இவ்வாறு அவர் கூறினார்.


      பாளை சித்தா கல்லூரி மகளிர் விடுதியில் சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு மேற்கொண்ட போது எடுத்தபடம்.

      பாளை சித்தா கல்லூரி மகளிர் விடுதியில் சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு மேற்கொண்ட போது எடுத்தபடம்.


       


      ×