என் மலர்tooltip icon
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உணவில் இனிப்பை முழுமையாகக் குறைக்க வேண்டும்.
    • நீரிழிவு நோயாளிகள் பலரும் (ஸ்வீட்னர்கள்) பயன்படுத்துகிறார்கள்.

    புதுடெல்லி :

    நீரிழிவு நோயாளிகள் பலரும் சர்க்கரை எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதால் அதற்கு மாற்றான பொருட்களை (ஸ்வீட்னர்கள்) பயன்படுத்துகிறார்கள். ஆனால் சர்க்கரைக்கு மாற்றான பொருட்களைப் பயன்படுத்தக்கூடாது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை மணி அடித்துள்ளது. இது குறித்து உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் (ஊட்டச்சத்து மற்றும் உணவு பாதுகாப்பு) பிரான்செஸ்கோ பிரான்கா கூறியதாவது:-

    சர்க்கரைக்கு மாற்றாக இனிப்பு இல்லாத பொருட்களை (ஸ்வீட்னர்கள்) பயன்படுத்துவது, நீண்ட காலத்துக்கு உடல் எடையை கட்டுக்குள் வைப்பதற்கு உதவாது. மாற்று பொருளாக பயன்படுத்தக்கூடிய பொருட்கள் இன்றியமையாத உணவுப்பொருட்கள் ஆகிவிடாது. அவற்றில் ஊட்டச்சத்தும் இல்லை. மக்கள் தங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு ஆரம்பத்தில் இருந்தே உணவில் இனிப்பை முழுமையாகக் குறைக்க வேண்டும். எனவே பழங்கள், இனிப்பு இல்லாத உணவுகள், பானங்கள் போன்ற இயற்கையாக சர்க்கரையுடன் கூடிய உணவை சாப்பிடுவது உள்ளிட்ட பிற வழிகளை பயன்படுத்தி சர்க்கரை உட்கொள்வதைக் குறைக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அரசு வேலைக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு தானே சம்பளம் கொடுப்பதுபோல் மோடி நடந்து கொள்கிறார்.
    • நிர்வாகத்தை கீழ்நிலைக்கு கொண்டு சென்று விட்டார்.

    புதுடெல்லி :

    பிரதமர் மோடி 'வேலைவாய்ப்பு திருவிழா' நடத்தியதை கிண்டல் செய்து, காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், தனது 'டுவிட்டர்' பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

    'வேலைவாய்ப்பு திருவிழா' மூலம் அரசு நிர்வாகத்தை முன்எப்போதும் இல்லாத அளவுக்கு தனிப்பட்ட சொத்தாக பிரதமர் மோடி மாற்றி விட்டார். நிர்வாகத்தை கீழ்நிலைக்கு கொண்டு சென்று விட்டார். இந்த வேலைவாய்ப்புகளை அவரே உருவாக்கியது போலவும், தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அவரே சம்பளம் கொடுப்பது போலவும், தேர்வு செய்யப்பட்டவர்கள் தனக்கு மட்டுமே நன்றிக்கடன்பட்டவர்கள் என்று நினைக்க வேண்டும் என்பது போலவும் அவர் நடந்து கொள்கிறார்.

    ஆனால், அரசு மற்றும் தனியார் துறையில் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை அழித்தவரே பிரதமர் மோடிதான் என்பதை வேலை தேடும் இளைஞர்கள் அறிவார்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது பதிவில் கூறியிருப்பதாவது:-

    ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு அளிப்பதாக உறுதி அளித்த பிரதமர் மோடி, கடந்த 9 ஆண்டுகளில் 18 கோடி இளைஞர்களின் கனவுகளை தகர்த்து விட்டார்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • இம்ரான்கான் மீது 20-க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளை சுமத்தி பல்வேறு வழக்குகளை பதிவு செய்தனர்.
    • இம்ரான்கானை இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு ஜாமீனில் விடுதலை செய்தது.

    லாகூர் :

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கடந்த 9-ந் தேதி தன் மீதான ஊழல் வழக்கு விசாரணைக்காக இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் ஆஜராக சென்றிருந்தபோது அந்த நாட்டின் துணை ராணுவம் அவரை கைது செய்தது.

    இம்ரான்கானின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். ராவல்பிண்டி நகரில் உள்ள ராணுவ தலைமையகத்தை சூறையாடிய இம்ரான்கான் ஆதரவாளர்கள் லாகூர் நகரில் உள்ள மூத்த ராணுவ அதிகாரியின் வீட்டுக்கு தீவைத்தனர்.

    இதனையடுத்து பஞ்சாப் மாகாண போலீசார் இம்ரான்கான் மீதும், அவரது நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் மீதும் கொலை, பயங்கரவாதம் உள்பட 20-க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளை சுமத்தி பல்வேறு வழக்குகளை பதிவு செய்தனர்.

    இதனிடையே ஊழல் வழக்கில் கைதான இம்ரான்கானை இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு ஜாமீனில் விடுதலை செய்தது. அதனை தொடர்ந்து பஞ்சாப் மாகாணத்தில் தனக்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளிலும் ஜாமீன் வழங்க கோரி லாகூர் ஐகோர்ட்டில் இம்ரான்கான் மனுதாக்கல் செய்தார்.

    இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் இம்ரான்கான் ஏன் நேரில் ஆஜராகவில்லை என அவரது வக்கீலிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த இம்ரான்கானின் வக்கீல், குறிப்பிட்ட நேரத்துக்கு அவர் கோர்ட்டுக்கு வருவார் என தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட அரசு தரப்பு வக்கீல் கோர்ட்டில் ஆஜராகாத இம்ரான்கானுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என வாதிட்டர்.

    இரு தரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள் இம்ரான்கானின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

    • வருமான வரி செலுத்துவோரின் பெயரில் போலி வங்கி கணக்கை தொடங்கி உள்ளார்.
    • அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    பெங்களூரு :

    பெங்களூருவில் வருமான வரித்துறை இணையதளத்தை முடக்கி பல கோடி ரூபாயை மர்மநபர்கள் சுருட்டி இருப்பதாக சைபர் கிரைம் போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவாகி இருந்தது. இதையடுத்து, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கும்பலை பிடிக்க தனிப்படை அமைத்து சி.ஐ.டி. போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. சரத் சந்திரா உத்தரவிட்டு இருந்தார்.

    அதன்பேரில், சைபர் கிரைம் போலீசார் மர்மநபர்களை பிடிக்க நடவடிக்கை எடுத்து வந்தனர். இந்த நிலையில், மோசடியில் ஈடுபட்டதாக வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர், ஹாசன் மாவட்டம் இரேசாவே பகுதியை சேர்ந்த திலீப் ராஜுகவுடா (வயது 32) என்று தெரிந்தது. இவர், கம்ப்யூட்டர் என்ஜினீயர் ஆவார்.

    வருமான வரித்துறையின் இணையதளமான 'இ-பைலிங் போர்டல்' என்ற இணையதளத்தை முடக்கி உள்ளார். பின்னர் வருமான வரி செலுத்துவோரின் பெயரில் போலி வங்கி கணக்கை தொடங்கி உள்ளார். அதாவது வருமான வரித்துறை இணையதளத்தை முடக்கி 6 நபர்களின் பெயரிலான பான் கார்டு உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் தெரிந்து கொண்டு, அந்த 6 நபர்களின் வங்கி கணக்குகளில் இருந்து போலியாக தொடங்கப்பட்ட வங்கி கணக்குக்கு பணத்தை மாற்றி இருக்கிறார்.

    ஒட்டுமொத்தமாக 6 நபர்களின் வங்கி கணக்குகளில் இருந்து ரூ.3.60 கோடியை திலீப் சுருட்டி இருந்தார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் வருமான வரித்துறை இணையதளத்தில் சில தவறுகள் இருப்பதால், அதனை சாதகமாக பயன்படுத்தி தான், முடக்கம் செய்து மோசடியில் ஈடுபட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, இணையதளத்தில் இருக்கும் தவறுகள், தொழில்நுட்ப கோளாறுகளை சரி செய்யும்படி அதிகாரிகளுக்கு, சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

    • கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 135 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது.
    • முதல்-மந்திரி பதவியை பிடிப்பதில் டி.கே.சிவக்குமார் மற்றும் சித்தராமையா இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.

    புதுடெல்லி :

    கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 135 இடங்களில் அமோக வெற்றிபெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இந்த நிலையில் முதல்-மந்திரி பதவியை பிடிப்பதில் டி.கே.சிவக்குமார் மற்றும் சித்தராமையா இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. இருவரும் டெல்லி சென்றுள்ள நிலையில் நேற்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை அவரது இல்லத்தில் தனித்தனியாக சந்தித்தனர். இந்த சந்தர்ப்பத்தில் ராகுல்காந்தி மல்லிகார்ஜுன கார்கேவின் வீட்டுக்கு வந்தார்.

    அவர் டி.கே.சிவக்குமார் மற்றும் சித்தராமையாவிடம் முதல்-மந்திரி விவகாரம் குறித்து பேசி ஆலோசனை நடத்தினார். பின்னர் இருவரிடமும் தனித்தனியாகவும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த சந்தர்ப்பத்தில் மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடக மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆகியோரும் உடன் இருந்துள்ளனர். இந்த சந்திப்பு சுமார் 90 நிமிடங்கள் நீடித்தது. அதையடுத்து ராகுல் காந்தி அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டார்.

    அதையடுத்து கே.சி.வேணுகோபால் ராகுல்காந்தியை அவருடைய இல்லத்தில் தனியாக சந்தித்து கர்நாடக முதல்-மந்திரியாக யாரை நியமிக்கலாம் என்பது குறித்து பேசினார். இதற்கிடையே நேற்று இரவு சித்தராமையா திடீரென கே.சி.வேணுகோபால், ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தலைவர்களின் வீடுகளுக்கு மாரத்தான் ஓட்டப்பந்தயம் போல் விறுவிறுவென காரில் சென்று அவர்களை சந்தித்தார்.

    இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் பவன் கேரா நேற்று ஐதராபாத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கர்நாடக முதல்-மந்திரி தேர்வில் ஓரளவுக்கு முடிவு எட்டப்பட்டு விட்டதாகவும், இறுதி முடிவை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியுடன் ஆலோசித்து இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிப்பார்கள் என்றும் கூறினார்.

    • மோடியை 3-வது முறையாக பிரதமர் பதவியில் அமர்த்த பா.ஜனதா விரும்புகிறது.
    • ஒரு மாத காலத்தில் நாடு முழுவதும் 51 பொதுக்கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    புதுடெல்லி :

    பிரதமர் மோடி, 2014-ம் ஆண்டு முதல்முறையாக பிரதமராக பதவி ஏற்றார். 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று அந்த ஆண்டில் மே 30-ந்தேதி, தொடர்ந்து 2-வது தடவையாக பிரதமராக பதவி ஏற்றார். வருகிற 30-ந்தேதியுடன் அவர் ஆட்சி பொறுப்பேற்று 9 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதை ஒருமாத காலம் பிரமாண்டமாக கொண்டாட பா.ஜனதா திட்டமிட்டுள்ளது. அதாவது, மே 30-ந்தேதி தொடங்கி, ஜூன் 30-ந்தேதிவரை இந்த கொண்டாட்டம் நடைபெறும். பிரதமர் மோடி, இம்மாதம் 30 அல்லது 31-ந்தேதி, ஒரு பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். அத்துடன், ஒரு மாத கொண்டாட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

    முன்னதாக, மே 29-ந்தேதி, பா.ஜனதா ஆளும் மாநிலங்களின் முதல்-மந்திரிகளும், துணை முதல்-மந்திரிகளும் பத்திரிகையாளர் சந்திப்புகளில் பங்கேற்பார்கள். 9 ஆண்டுகால மோடி அரசின் சாதனைகளை எடுத்துக்கூறுவார்கள். பா.ஜனதா ஆட்சியில் இல்லாத மாநிலங்களில், மத்திய மந்திரிகள் பேட்டி அளிப்பார்கள்.

    ஒரு மாத காலத்தில் நாடு முழுவதும் 51 பொதுக்கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவற்றில், பா.ஜனதா மூத்த தலைவர்கள் பங்கேற்று பேசுவார்கள். இதுதவிர, ஒவ்வொரு மக்களவை தொகுதியிலும் 250 பிரபலமான குடும்பங்களை சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம், நாடு முழுவதும் 1 லட்சம் குடும்பங்களை சந்திப்பார்கள். அடுத்த ஆண்டு நடக்கும் பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் ஆட்சியை பிடித்து மோடியை 3-வது முறையாக பிரதமர் பதவியில் அமர்த்த பா.ஜனதா விரும்புகிறது.

    • தமிழ்நாட்டில் 15 கட்சிகள் பழைய பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
    • 282 கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு உள்ளன.

    புதுடெல்லி :

    இந்திய தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகள், பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகள் மற்றும் பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத மாநில கட்சிகள் அவ்வப்போது மதிப்பாய்வு செய்யப்பட்டு புது பட்டியல் தயாரிக்கப்படுவது வழக்கம். அதன்படி தற்போது இந்திய தேர்தல் கமிஷன் புதிய பட்டியலை தயாரித்து உள்ளது.

    இதன்படி நாட்டில் பா.ஜனதா, காங்கிரஸ், ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மற்றும் தேசிய மக்கள் கட்சி ஆகிய 6 கட்சிகள் தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகளாக உள்ளன

    மாநில கட்சிகளைப் பொறுத்தவரை தமிழ்நாட்டில் தி.மு.க., அ.தி.மு.க., தே.மு.தி.க. மற்றும் இந்திய கம்யூனிஸ்டு ஆகிய 4 கட்சிகள் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் ஆகும்.

    இவை தவிர தமிழ்நாட்டின் மற்ற மாநிலக்கட்சிகள் அனைத்தும் தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்பட்ட, தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்படாத கட்சிகளாக உள்ளன. தமிழ்நாட்டில் இந்த கட்சிகளின் எண்ணிக்கை 200 ஆகும். நாடு முழுவதும் இப்படி பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்படாத கட்சிகளின் எண்ணிக்கை 2,597 என்பது குறிப்பிடத்தக்கது

    இதற்கு முன்பு பதிவு செய்யப்பட்டு முறையாக செயல்படாத கட்சிகள் என 218 மாநிலக்கட்சிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. 282 கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு உள்ளன. தமிழ்நாட்டில் 15 கட்சிகள் பழைய பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    புதுச்சேரி மாநிலத்தைப் பொறுத்தவரை தி.மு.க., அ.தி.மு.க. மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் ஆகியவை அங்கீகரிக்கப்பட்ட மாநிலக்கட்சிகளாக உள்ளன.

    • ஜனாதிபதி மாளிகை, பொதுமக்கள் பார்வைக்கு ஏற்கனவே திறந்துவிடப்பட்டுள்ளது.
    • பார்வையிட ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம்

    புதுடெல்லி :

    ஜனாதிபதி மாளிகை, பொதுமக்கள் பார்வைக்கு ஏற்கனவே திறந்துவிடப்பட்டுள்ளது. பிரதான கட்டிடம், புல்வெளி பகுதி, அசோகா மண்டபம் உள்ளிட்ட பகுதிகள் முதல் பகுதியாகவும், அருங்காட்சியக வளாகம் 2-வது பகுதியாகவும் பிரிக்கப்பட்டு பார்வையிட அனுமதிக்கப்படுகின்றன.2 பகுதிகளையும் செவ்வாய்க்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை 5 நாட்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில், ஜனாதிபதி மாளிகை அருங்காட்சியக வளாகத்தை திங்கட்கிழமை தவிர, வாரத்தில் 6 நாட்கள் பார்வையிடலாம் என்று ஜனாதிபதி மாளிகை அறிவித்துள்ளது. ஜூன் 1-ந் தேதி முதல் இது அமலுக்கு வருகிறது.பொதுமக்கள் காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணிவரை 7 தனித்தனி நேரங்களில் பார்வையிட ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் ஜனாதிபதி மாளிகை தெரிவித்துள்ளது.

    • கைதான விஞ்ஞானியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
    • இவர் அரசு பணி நிமித்தமாக 5 முதல் 6 வெளிநாடுகளுக்கு பயணம் செய்துள்ளார்.

    புனே :

    டி.ஆர்.டி.ஓ. என அழைக்கப்படும் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகத்துக்கு சொந்தமான ஆய்வகம் மராட்டிய மாநிலம் புனேயில் உள்ளது. இதில் இயக்குனராக பணியாற்றி வந்தவர் பிரதீப் குருல்கர்.

    இவர் பாகிஸ்தானை சேர்ந்த உளவு அமைப்பு ஏஜென்டுடன் வாட்ஸ்அப் மூலம் தொடர்பில் இருந்ததாக கடந்த 3-ந் தேதி மராட்டிய பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். கைதான விஞ்ஞானியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

    பாகிஸ்தான் உளவு அமைப்பை சேர்ந்தவர்கள் பெண்ணை வைத்து ஆபாசமாக பேசி விஞ்ஞானியை அவர்களது வலையில் வீழ்த்தி உள்ளனர். பின்னர் அதன் மூலம் அவர்கள் விஞ்ஞானியிடம் இருந்து இந்திய ராணுவம் குறித்த ரகசிய தகவல்களை கறந்தது தெரியவந்தது.

    இவர் அரசு பணி நிமித்தமாக 5 முதல் 6 வெளிநாடுகளுக்கு பயணம் செய்துள்ளார். இந்த பயணத்தின் போது அவர் யார், யாரை எல்லாம் சந்தித்தார் என்ற தகவல்களை சேகரித்து விசாரிக்க இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் விஞ்ஞானியின் விசாரணை காலம் முடிந்ததை அடுத்து அவரை நேற்று போலீசார் புனேயில் உள்ள சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கோர்ட்டு விஞ்ஞானியை வருகிற 29-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டது. அதன்படி அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

    முன்னதாக கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட விஞ்ஞானி தனக்கு ரத்த உயர் அழுத்தம் இருப்பதால் அதற்கான மருந்து மாத்திரைகளை ஜெயிலுக்கு எடுத்து செல்லவும், வீட்டில் இருந்து உணவு கொடுத்துவிடவும் அனுமதி கேட்டார். ஆனால் மருந்து மாத்திரை எடுத்து செல்ல அனுமதி அளித்த கோர்ட்டு, வீட்டு உணவுக்கு அனுமதி மறுத்துவிட்டது.

    • கடந்த 3 நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
    • நேற்று சென்னையில் 109 டிகிரி வெயில் பதிவானது.

    சென்னை

    சென்னை மற்றும் அதனையொட்டியுள்ள பகுதிகளில் கடந்த 3 நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து இருப்பதற்கான காரணம் குறித்து வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரனிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-

    வங்க கடலில் கடந்த வாரம் உருவான மோக்கா புயல், கடந்த 13 மற்றும் 14-ந் தேதிகளில் கரையை கடந்தது. இதனால் சென்னை கடல் பகுதிகளில் அந்த 2 நாட்கள் கடல் காற்று இல்லாமல் போய்விட்டது. கடந்த 15-ந் தேதி (நேற்று முன்தினம்) கடல் காற்று பிற்பகல் 12.45 மணிக்கு தான் சற்று வீசத்தொடங்கியது.

    இன்று (நேற்று) பிற்பகல் 1.15 மணிக்கு பிறகுதான் வீச ஆரம்பித்தது. இதனால் வெப்பத்தின் தாக்கம் சென்னை மற்றும் அதனையொட்டியுள்ள பகுதிகளில் அதிகமாக உணரப்பட்டு இருக்கிறது.

    இனி வரக்கூடிய 2 நாட்களுக்கும் இப்படித்தான் இருக்கும். கடல் காற்று ஓரளவுக்கு வீசத்தொடங்கியதும், வெயிலின் தாக்கம் ஓரளவுக்கு குறையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் உக்கிரமடைந்து வருகிறது.
    • பிற்பகல் 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.

    சென்னை :

    தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதமே கோடை வெயிலின் தாக்கம் ஆரம்பித்தது.

    தொடக்கத்திலேயே வீறு கொண்டு வெப்பத்தை கக்கிய நிலையில், இதையே தாங்க முடியவில்லையே? மே மாதத்தில் எப்படி தாக்கு பிடிக்க போகிறோமோ? என்றுமக்கள் பேசும் அளவுக்கு அப்போது இருந்தது.

    மார்ச் மாதம் 15-ந் தேதியில் இருந்து கோடை மழையும் தமிழ்நாட்டில் பெய்யத்தொடங்கியது. சில இடங்களில் கனமழையும் பதிவானது. இதனால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்தது. பின்னர், கடந்த ஏப்ரல் மாதம் 10-ந் தேதிக்கு பிறகு மீண்டும் வெயிலின் தாக்கம் காணப்பட்டது.

    ஏப்ரல் 22-ந் தேதிக்கு பிறகு மீண்டும் கோடை மழை தயவு காட்டியது. தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் மழை கொட்டியது. இது கோடை காலமா? அல்லது மழை காலமா? என்று யோசிக்கும் அளவுக்கு மழை பதிவானதை பார்க்க முடிந்தது. இதனால் கோடை காலத்தில் பதிவாகும் இயல்பான அளவை விட 88 சதவீதம் அதிகமாக இதுவரை மழை பெய்திருக்கிறது.

    இந்த தொடர் மழை காரணமாக, கடந்த 4-ந் தேதி முதல் கத்தரி வெயில் தொடங்கினாலும், வெப்பத்தின் தாக்கம் பெருமளவில் தெரியாமலேயே இருந்தது. இதனால் மக்கள் சற்று பெருமூச்சு விட்ட நிலையில், கடந்த சில நாட்களாக கத்தரி வெயிலின் கோரத்தாண்டவம் விஸ்வரூபம் எடுக்க தொடங்கி இருக்கிறது. அதுவும் கடந்த 3 நாட்களாக தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் வெயில் வாட்டி வதைக்கிறது.

    பகல் நேரங்களில் வெளியில் செல்வதற்கும் முடியாமல், வீடுகளில் இருக்கலாம் என்று நினைத்தால் வெப்பக்காற்றாலும், புழுக்கத்தாலும் தவிக்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

    ஏதோ அனல் அதிகம் நிறைந்த அடுப்புக்கு அருகில் இருந்தால் எப்படி இருக்குமோ? அதே போல் பகல் நேரங்களில் வியர்வை சொட்ட சொட்ட வீடுகளில் தஞ்சம் அடைந்திருப்பதாகவும், பகல் நேரத்தில்தான் அப்படி என்றால், இரவிலும் வெப்பத்தின் தாக்கம் சற்று இருக்கத்தான் செய்வதாகவும், அதிகாலை 3 மணிக்கு மேல் தான் ஓரளவுக்கு குளிர்ச்சியை உணர முடிவதாகவும் பலர் தெரிவிக்கின்றனர்.

    ஏ.சி. இருக்கும் வீடுகளில் கூட வெயிலினால் ஏற்படும் உஷ்ணத்தால், கூடுதலாக மின்விசிறிகளையும் இயக்க வேண்டியிருப்பதாக சொல்கின்றனர். பணியின் நிமித்தமாக வாகனங்களில் சென்றவர்களும், நடந்து சென்றவர்களும் வெயிலின் உக்கிரத்தால் வாடிவதங்கினா். இதனால் சாலையோர குளிர்பான கடைகள், இளநீர், கம்பங்கூழ், மோர், தர்பூசணி உள்பட பழ ஜூஸ் விற்பனை கடைகளில் கூட்டம் அதிகமாக இருந்ததை பார்க்க முடிந்தது.

    இதன் தொடர்ச்சியாக நேற்றும் தமிழ்நாட்டில் பல இடங்களில் வெயில் உக்கிரமாக இருந்தது. அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கத்தில் 108.86 டிகிரி வெயில் பதிவானது. அதற்கு அடுத்தபடியாக வேலூரில் 107.96 டிகிரியும், சென்னை நுங்கம்பாக்கத்தில் 107.24 டிகிரியும் வெப்பம் பதிவாகி இருந்தது. தமிழ்நாட்டில் நேற்று மொத்தம் 19 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவாகியுள்ளது. இதுதவிர புதுச்சேரியில் 106.16 டிகிரியும், காரைக்காலில் 100.94 டிகிரியும் வெயில் பதிவானது.

    சென்னையில் நேற்று பதிவான 109 டிகிரி தான் இதுவரை பதிவானதிலே அதிகமானது என்று பேசப்பட்ட நிலையில், இதற்கு முன்பும் இதைவிட அதிகமாக வெயில் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதற்கு முன்பு கடந்த 2003-ம் ஆண்டு 113 டிகிரியும், 2012-ம் ஆண்டு மே மாதம் 110 டிகிரியும் வெயில் பதிவாகியிருப்பதாகவும், 109 டிகிரியை பொறுத்தவரையில் கடந்த 2008-ம் ஆண்டும், அதற்கு பிறகு கடந்த 2012-ம் ஆண்டு மே மாதம் 18-ந் தேதியும், 2017-ம் ஆண்டு மே மாதம் 19-ந் தேதியும் பதிவாகியுள்ளதாகவும் ஆய்வு மையத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதற்கு பிறகு, நடப்பாண்டில் கத்தரி வெயில் தொடங்கிய பின்னர், பதிவான அதிகபட்ச வெயில் அளவாக இது பார்க்கப்படுகிறது

    வெயிலின் தாக்கம் இனி வரக்கூடிய நாட்களிலும் அதிகரித்து காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, இன்றும் (புதன்கிழமை), நாளையும் (வியாழக்கிழமை) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பான அளவை விட 2 முதல் 4 டிகிரி வரை அதிகரிக்க கூடும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் போது வெப்ப அழுத்தம் காரணமாக அசவுகரியமான சூழல் ஏற்படும் என்றும் ஆய்வு மையம் கூறியிருக்கிறது. இருப்பினும், மேற்கு திசை காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், பிற்பகல் 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும், தாகம் இல்லாவிட்டாலும் போதுமான அளவு தண்ணீரை முடிந்தளவுக்கு குடிக்க வேண்டும் என்றும், வெளிர்நிற, இலகுரக பருத்தி ஆடைகளை அணிய வேண்டும் என்றும் ஆய்வு மையம் அறிவுறுத்தி இருக்கிறது.

    வெளியில் செல்ல அவசியம் இருந்தால் குடை, தொப்பி எடுத்து செல்லவும், கூடுமான வரையில் வீட்டில் தயாரிக்கப்பட்ட லஸ்ஸி, வடித்த கஞ்சி, எலுமிச்சை தண்ணீர், மோர் போன்றவற்றை குடிக்கவும் அறிவுரை வழங்கியிருக்கின்றனர்.

    • சிவபெருமானை வழிபட உகந்த நாள்.
    • பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு.

    இன்று பிரதோஷம். மாத சிவராத்திரி. திருப்பதி ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். காரைக்குடி கொப்புடையம்மன் யானை வாகனத்தில் திருவீதி உலா. வீரபாண்டி கவுமாரியம்மன் விடையாற்று, மஞ்சள் நீராட்டு விழா. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை. சென்னை சென்ன கேசவப் பெருமாள் விடையாற்று உற்சவம். பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி காலை சிறப்பு திருமஞ்சனம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, வைகாசி-3 (புதன்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: திரயோதசி இரவு 10.59 மணி வரை பிறகு சதுர்த்தசி

    நட்சத்திரம்: ரேவதி காலை 8.14 மணி வரை பிறகு அசுவினி

    யோகம்: மரணயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 12 மணிமுதல் 1.30 மணி வரை

    எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-நலம்

    ரிஷபம்-பாராட்டு

    மிதுனம்-ஆசை

    கடகம்-பரிசு

    சிம்மம்-செலவு

    கன்னி-மேன்மை

    துலாம்- ஆர்வம்

    விருச்சிகம்-உதவி

    தனுசு- உறுதி

    மகரம்-பக்தி

    கும்பம்-ஜெயம்

    மீனம்-இனிமை

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    ×