என் மலர்tooltip icon
    • தீப்பற்றக்கூடிய பொருட்களை பக்தர்கள் கொண்டு செல்லக்கூடாது.
    • 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மலை ஏறக்கூடாது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது.

    இந்த கோவிலுக்கு வைகாசி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு இன்று (புதன்கிழமை) முதல் வருகிற 20-ந்தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்வதற்கு வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    தற்போது கோடை காலம் என்பதால் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை பக்தர்கள் கொண்டு செல்லக்கூடாது. 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மலை ஏறக்கூடாது. காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவர் எனவும், அனுமதி நாட்களில் மழை பெய்தால் பக்தர்களுக்கு மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய தடை செய்யப்படும் எனவும் வனத்துறையினர் அறிவித்துள்ளனர். சிறப்பு பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • மோரை கோடைக்காலங்களில் தான் அதிகம் பருகுவோம்.
    • இன்று மசாலா மோர் செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    கெட்டித் தயிர் - 1 கப்

    தண்ணீர் - 1 கப்

    கொத்தமல்லி - சிறிதளவு

    மோர் மிளகாய் - 1

    உப்பு - தேவையான அளவு

    தாளிப்பதற்கு...

    எண்ணெய் - அரை டீஸ்பூன்

    கடுகு - 1/4 டீஸ்பூன்

    அரைப்பதற்கு...

    பச்சை மிளகாய் - பாதி

    கறிவேப்பிலை - 3 இலை

    இஞ்சி - 1/4 இன்ச்

    செய்முறை:

    தயிரை ஒரு பௌலில் போட்டு, அதனை நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.

    பின்னர் அதில் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    மிக்ஸியில் பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் இஞ்சி சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

    பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு சேர்த்து தாளித்த பின் மோர் மிளகாயை சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும்.

    அடுத்து அரைத்து வைத்துள்ளதை மோரில் சேர்த்து, அத்துடன் மோர் மிளகாயை உடைத்து போட்டு, தாளித்ததையும் ஊற்றி, கொத்தமல்லியைத் தூவி தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து பரிமாறினால், மசாலா மோர் ரெடி!!!

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • டயப்பர் அணிவது, சில நேரங்களில் குழந்தையின் சருமத்தில் காயங்களை ஏற்படுத்தும்.
    • குழந்தையின் தொடைப்பகுதியில் சருமம் வீக்கமடைந்து, திட்டுகள் போல இருக்கும்.

    பயன்படுத்துவதற்கு எளிதாகவும், வசதியாகவும் இருப்பதால் குழந்தைகளுக்கு டயப்பர் அணிவிப்பது தவிர்க்க முடியாத ஒன்றாக ஆகிவிட்டது. இதனால் குழந்தைகளுக்கு சரும பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டியது அவசியம். டயப்பர் உபயோகிப்பதற்கு முன்பு, சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தெரிந்துகொண்டால் இந்த பாதிப்புகளை எளிதாகத் தடுக்கலாம்.

    டயப்பர் அணிவது, சில நேரங்களில் குழந்தையின் மென்மையான சருமத்தில் எரிச்சலுடன் கூடிய காயங்களை ஏற்படுத்தும். இது 'டெர்மடிடிஸ்' என்று அழைக்கப்படுகிறது. குழந்தையின் தொடைப்பகுதியில் சருமம் வீக்கமடைந்து, திட்டுகள் போல இருக்கும். தொடைப்பகுதி சிவந்து காணப்படும். அரிப்பு உணர்வு தீவிரமாகும்போது அந்த இடத்தில் சிறு சிறு கொப்புளங்களும் உண்டாகலாம். இவை வந்த பிறகு தடுப்பதை விட, வரும் முன்பு காப்பது நல்லது. இதற்கான தீர்வுகள் என்ன என்று பார்ப்போம்.

    டயப்பரை மாற்றுங்கள்

    பருத்தித் துணி பயன்படுத்தும் போது, சிறுநீர் கழித்தவுடன் ஈரமானதை உணர்ந்து உடனே மாற்றுவோம். ஆனால் டயப்பர் பயன்படுத்தும் போது ஈரத்தை உறிஞ்சிவிடுவதால், நாள் முழுவதும் ஒரே டயப்பரை அணிவிப்பவர்களும் இருக்கிறார்கள். துணிகளையோ, டயப்பரையோ துவைத்துப் பயன்படுத்துவதாக இருந்தால் வெந்நீரில் நன்றாக அலசி, வெயிலில் உலர வைத்து பயன்படுத்துங்கள்.

    உலர்வாக இருக்கட்டும்: டயப்பரைக் கழற்றிய உடன் குழந்தையின் பிறப்புறுப்புகள், பிட்டப்பகுதி, தொடைப்பகுதியில் மிதமான வெந்நீர் கொண்டு துடைத்து விடுங்கள். பிறகு மென்மையான பருத்தித் துணி கொண்டு ஒற்றி எடுத்து, உலர விடுங்கள். இதனால் சருமத்துக்கு தேவையான காற்றோட்டம் உள்ளே செல்லும். சருமம் சுவாசிக்க இயலும்.

    சுத்தம் செய்யுங்கள்: காலை, மாலை இரு வேளைகளிலும் குழந்தைக்கு டயப்பர் அணிவிக்கும் இடங்களில் மிதமான சூடுள்ள நீரில் சுத்தம் செய்யுங்கள். டயப்பர் அணிந்த பகுதியில், சதை மடிப்புகள் உட்பட எல்லா இடங்களிலும் மென்மையாக சுத்தம் செய்யுங்கள். பருத்தித் துணி அணிவித்தாலும் இத்தகைய பராமரிப்புகள் அவசியம் செய்ய வேண்டும்.

    இரவில் டயப்பர் அணிவித்தல்: குழந்தைக்கு இரவு நேரத்தில் டயப்பர் அணிவிப்பதை முடிந்தவரை தவிர்க்கலாம் அல்லது ஒரு டயப்பர் மட்டும் பயன்படுத்தலாம். குழந்தை தூங்கும்போது அணிவிக்கலாம். மறுநாள் காலை எழுந்தவுடன் முதலில் அதை மாற்றிவிடலாம். இதனால் டயப்பர் உபயோகிப்பதால் வரும் சரும பிரச்சினைகளைத் தடுக்கலாம்.

    பரிசோதியுங்கள்: குழந்தைகளின் தொடைப்பகுதியை அவ்வப்போது பரிசோதியுங்கள். தோல் சிவத்தல், தடிப்புகள் இருக்கும்போது டயப்பர் பயன்படுத்த வேண்டாம். குழந்தை சிறுநீர், மலம் கழித்தால் உடனே சுத்தம் செய்யுங்கள். டயப்பரை வெளியில் செல்லும்போது மட்டும் பயன்படுத்துங்கள். வீட்டில் இருக்கும்போது பருத்தித் துணிகள் அணிவிப்பது பாதுகாப்பானது.

    • இன்று முதல் 21-ந்தேதி வரை வெளிக்கோடை உற்சவம் நடைபெறும்.
    • 22-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை உள்கோடை உற்சவம் நடைபெறும்.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான திருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் கோடை திருநாள் இன்று (புதன்கிழமை) தொடங்கி வருகிற 26-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதில் இன்று (புதன்கிழமை) முதல் 21-ந்தேதி வரை வெளிக்கோடை உற்சவம் நடைபெறும்.

    இதையொட்டி தினமும் காலை 5.30 மணிக்கு தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடும், மாலை 6.45 மணி முதல் இரவு 7 மணி வரை புஷ்பம் சாத்துப்படி கண்டருளல், இரவு 7 மணி முதல் 7.15 மணி வரை தீர்த்த கோஷ்டி, இரவு 7.15 மணி முதல் 8.30 மணி வரை பொதுஜன சேவை, இரவு 8.30 மணிக்கு தாயார் புறப்பாடு, 8.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைதல் நடைபெறுகிறது.

    அதேபோல் வருகிற 22-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை உள்கோடை உற்சவம் நடைபெறும். அப்போது, மாலை 5.30 மணிக்கு தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகிறார். 5.45 மணி முதல் 6 மணி வரை புஷ்பம் சாத்துப்படி கண்டருளும் தாயாருக்கு, 6 மணி முதல் 6.15 மணி வரை தீர்த்த கோஷ்டி நடக்கிறது. 6.30 மணிக்கு ஸ்ரீதாயார் உள்கோடை மண்டபம் சேருகிறார்.

    6.45 மணிக்கு அலங்காரம் அமுது செய்தல், இரவு 7 மணி முதல் 7.30 மணி வரை திருவாராதனம், வெள்ளிச்சம்பா அமுது செய்தல், தீர்த்த கோஷடி, 7.30 மணி முதல் 8.30 மணி வரை பொதுஜன சேவை, இரவு 8.45 மணிக்கு ஸ்ரீதாயார் மண்டத்தில் இருந்து புறப்பட்டு, இரவு 9.15 மணிக்கு வீணை வாத்தியத்துடன் மூலஸ்தானம் சேருகிறார். வருகிற 26-ந்தேதி அன்று வீணை வாத்தியம் கிடையாது.

    • நாளை ஏசுவின் புது நன்மை கூட்டு திருப்பலி நிகழ்ச்சி நடைபெறுகிறது.
    • உறவினர் நண்பர்களுக்கு தங்களது இல்லங்களில் அன்பின் விருந்து வழங்குகின்றனர்.

    திருச்சிற்றம்பலம் அருகே உள்ள புனல்வாசல் கிராமத்தில் புனித வனத்து அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலய தேர் திருவிழா இன்று (புதன்கிழமை) இரவு நடக்கிறது. இன்று நண்பகல் கிறிஸ்தவ மக்கள் உற்றார், உறவினர் நண்பர்களுக்கு தங்களது இல்லங்களில் அன்பின் விருந்து வழங்குகின்றனர்.

    நாளை (வியாழக்கிழமை) காலை 7.30 மணிக்கு 12 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஏசுவின் புது நன்மை கூட்டு திருப்பலி நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஏசு கிறிஸ்து உயிர்பெற்ற 40-ம் நாளை கிறிஸ்தவர்களின் விழாக்களில் முதன்மையான விழாவாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவை புனல்வாசல் கிறிஸ்தவ மக்கள் அந்தோணியார் திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர்.

    இந்த ஆண்டு திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஜான் எட்வர்ட், உதவி தந்தை அற்புத சந்தியாகு, அருட் சகோதரிகள், ஆலய நிர்வாகியும் பேராவூரணி ஒன்றிய குழு துணை தலைவருமான ஆல்பர்ட் குணாநிதி மற்றும் பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.

    • உணவுப் பொருட்களின் விலை உயர்வு குடும்பத் தலைவிகளுக்கு பிரச்சினையாக இருப்பதுண்டு.
    • சமையல் முறைகளில் சிக்கனத்தை கடைப்பிடிப்பதை யோசிப்பது நல்லது.

    பொருளாதார பற்றாக்குறை, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு போன்றவை, குடும்பத்தின் பட்ஜெட்டையும், சேமிப்பையும் பாதிக்கக்கூடும். இதில் உணவுப் பொருட்களின் விலை உயர்வு தான் குடும்பத் தலைவிகளுக்கு பிரச்சினையாக இருப்பதுண்டு. பணத்தை திட்டமிட்டு கையாள்வது, வருமானத்தை அதிகரிப்பது என்று பல வழிகளை முயற்சித்தாலும், மற்றொரு பக்கம் சமையல் முறைகளில் சிக்கனத்தை கடைப்பிடிப்பதையும் யோசிப்பது நல்லது. அதேசமயத்தில் ஆரோக்கியமான உணவுகளையும் சமைக்க வேண்டும். அதுபற்றிய குறிப்புகள் இங்கே:

    * மூன்று வேளையும் வெவ்வேறு வகையான உணவுகள் தயார் செய்வதைத் தவிர்க்கலாம். உதாரணத்துக்கு காலையில் தயாரித்த சாம்பாரை இரவு உணவுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம். மதிய உணவுக்கு தயாரித்த காய்கறி குழம்பை இரவு சப்பாத்திக்கு உபயோகிக்கலாம்.

    * மாலை வேளையில் பஜ்ஜி, போண்டா என்று எண்ணெய்யில் பொரித்த பண்டங்களை வாங்கி சாப்பிடுவதைத் தவிர்க்கலாம். மாதத்துக்கு தேவையான மளிகைப் பொருட்கள் வாங்கும்போதே கொண்டைக்கடலை, காராமணி, பட்டாணி போன்றவற்றையும் வாங்கினால், அவற்றில் சுண்டல் தயாரித்து சாப்பிடலாம். இதன் மூலம் செலவை கட்டுப்படுத்தவும், ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் முடியும்.

    * குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரும், ஒவ்வொரு நேரத்தில் தனித்தனியாக சாப்பிடாமல் சேர்ந்து சாப்பிடலாம். இதனால் ஒவ்வொரு முறையும் குழம்பு, பொரியல் போன்றவற்றை சூடுபடுத்தும் வேலை குறையும். சமையல் எரிவாயு மிச்சமாகும்.

    * நாகரிகம் என்ற பெயரில் இறக்குமதி செய்யப்பட்ட காய்கறிகள் மற்றும் உணவுப்பொருட்களை வாங்கி பயன்படுத்தாமல், நமக்கு அருகிலேயே கிடைக்கும் காய்கறிகளை சமைக்கலாம். அந்தந்த பருவகாலங்களில் கிடைக்கும் உணவுப் பொருட்கள் விலை மலிவாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.

    * ஒவ்வொரு நாளும் என்ன சமைக்கப் போகிறீர்கள் என்ற பட்டியலை, முன்னதாகவே ஒரு வார காலத்துக்கு தயார் செய்துகொள்வது நல்லது. இதன் மூலம் கடைசி நேரத்தில் திட்டமிடாமல் சமைத்து, உணவையும், உணவுப் பொருட்களையும் வீணடிப்பதை தவிர்க்கலாம்.

    * ஒவ்வொருவர் விருப்பத்துக்கு ஏற்ற வகையில், ஒரே நேரத்தில் பலவித உணவுகளை சமைப்பதற்கு பதிலாக, குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ஏற்ற ஒரு சமையலை மட்டுமே செய்வது நேரத்தையும், பணத்தையும் மிச்சப்படுத்தும்.

    * வெளியில் சாப்பிடுவதை தவிர்த்து, வீட்டில் சமைத்த ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். இதனால் அதிக பணத்தை சேமிக்கலாம்.

    * ஆரோக்கியமான, அனைத்து சத்துக்களும் நிறைந்த உணவை சமைப்பதற்கு, எல்லா வகையான சமையல் பொருட்களையும் வாங்கி வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. தேவையானப் பொருட்களை வாங்குவதற்கு மட்டும் முன்னுரிமை கொடுங்கள். மூலிகை தேநீர், பேக் செய்யப்பட்ட ஆரோக்கியமானப் பொருட்கள் போன்றவற்றை வாங்குவதை இரண்டாம் நிலைத் தேர்வாக வைத்திருங்கள்.

    * உணவை வீணாக்காமல் தேவையான அளவு மட்டும் சமைப்பது அல்லது மீதமான உணவுகளை முறையாக பயன்படுத்துவது பணத்தை மிச்சப்படுத்துவதற்கு உதவும் சிறந்த வழியாகும்.

    • வயிற்றில் உள்ள அதிகக் கொழுப்பை கரைக்க உதவுகிறது.
    • அடி முதுகையும் இடுப்பையும் தளர்த்துகிறது.

    தனுராசனத்துக்கு மாற்றாக செய்யப்படுவது பவன முக்தாசனம். காற்று விடுவிக்கும் நிலை (Wind Relieving Pose) என்று இதற்கு பொருள்.

    உடலின் நடுப்பகுதியை ஆரோக்கியமாக வைத்திருந்தால் நோய்கள் எதுவும் அண்டாது. அப்படி நமது உடல் ஆரோக்கியத்தின் அடிப்படை பகுதியை நலமாக வைத்திருக்க உதவுவதுதான் பவன முக்தாசனம். வட மொழியில் 'பவன' என்றால் 'காற்று', 'முக்த' என்றால் 'விடுவிப்பது' என்பதாகும். இதில் இரண்டு நிலைகள் உள்ளன. ஒவ்வொரு காலாக மடித்து செய்வது, இரண்டு கால்களையும் மடித்து செய்வது. ஒவ்வொரு காலாக மடித்து செய்யும் போது வயிறு பகுதியின் இரண்டு பக்கங்களிலும் அழுத்தம் ஏற்பட்டு மண்ணீரல், கல்லீரல், பித்தப்பை, சிறுநீரகம் முதலியவை நல்ல இயக்கம் பெறுகிறது.

    இரண்டாவது நிலையில் இரண்டு கால்களையும் சேர்த்து அழுத்தும் போது வயிறு பகுதியின் நடுப்பகுதி அழுந்தப்பட்டு வயிறு, கணையம், சிறுநீர்ப்பை, குடல்கள் இயக்கம் பெறுகின்றன. மொத்தத்தில் ஜீரண உறுப்புகள் அத்தனையும் இயக்கம் பெற்று மலச்சிக்கல், செரியாமை, அஜீரணம் இவற்றின் விளைவாக ஏற்படும் வாயுத் தொல்லைகள் எதுவும் ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறது. அபான வாயு என்று சொல்லக் கூடிய, கீழ் நோக்கிய வாயுவை, மேலேற விடாமல் சீராக கீழ்நோக்கி தள்ளுகிறது. இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்யும் போது உடலின் நடுப்பகுதி கல்லையும் ஜீரணிக்கும் ஆற்றலை பெறுகிறது.

    பலன்கள்

    வயிற்றில் உள்ள அதிகக் கொழுப்பை கரைக்க உதவுகிறது. ஜீரணத்தை பலப்படுத்துகிறது. முதுகெலும்பின் நெகிழ்வுத்தன்மையை (flexibility) அதிகரிக்கிறது. தொடைகளை உறுதியாக்குகிறது. அடி முதுகையும் இடுப்பையும் தளர்த்துகிறது.

    செய்முறை

    விரிப்பில் நேராக படுக்கவும். வலது காலை மடித்து இரண்டு கைகளாலும் வலது கால் முட்டிக்கு கீழ் பிடித்து காலை முகத்தை நோக்கி அழுத்தவும். முகத்தையும் மேல் முதுகையும் உயர்த்தி முகவாயும் காலும் படுமாறு வைக்கவும். இடது கால் தரையில் நீட்டியபடியே 20 வினாடிகள் இருக்க வேண்டும்.

    பின் வலது காலை தரையில் வைத்து இதே போல், கால் மாற்றி இடது காலை மடித்து வலது காலை நீட்டி செய்யவும். இதுதான் முதல் நிலை.

    இரண்டாவது நிலையில் இரண்டு கால்களையும் மடித்து, முட்டிக்கு கீழ் கைகளை சேர்க்கவும். பின், கால்களை அழுத்தி, முதலில் செய்தது போல், தலையையும் மேல் முதுகையும் உயர்த்தி முகவாயை கால் முட்டிக்கு இடையில் வைக்கவும். 20 வினாடிகள் இந்த நிலையில் இருந்த பின், கால்களை விடுவித்து ஆரம்ப நிலைக்கு வரவும்.

    கழுத்து வலி உள்ளவர்கள், தலையை தரையிலேயே வைத்து முடிந்த அளவு கால்களை மடக்கினால் போதுமானது.

    இருதய கோளாறு, அதிக இரத்த அழுத்தம், முதுகுத்தண்டு பிரச்சினை, குடலிறக்கம், அதிக அமில சுரப்பு மற்றும் சையாடிக் பிரச்சினை உள்ளவர்கள் இந்த ஆசனத்தை தவிர்ப்பது நல்லது.

    • இந்த தேர்தலில் லிங்காயத் சமுதாய மக்கள் காங்கிரசுக்கு ஆதரவு வழங்கினர்.
    • பா.ஜனதா மீதான நம்பிக்கையை லிங்காயத் மக்கள் இழந்துவிட்டனர்.

    பெங்களூரு :

    தார்வார்-உப்பள்ளி மத்திய தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ஜெகதீஷ் ஷெட்டர். இவர் தனக்கு பா.ஜனதா டிக்கெட் கொடுக்காததால் அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்தார். தார்வார்-உப்பள்ளி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் களமிறங்கிய அவர் தோல்வி அடைந்தார். இந்த நிலையில் பெங்களூருவில் ஜெகதீஷ் ஷெட்டர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-

    லிங்காயத் தலைவரான எடியூரப்பா கடந்த பா.ஜனதா ஆட்சியில் முதல்-மந்திரியாக பதவி வகித்தார். ஆனால் அவரை வலுக்கட்டாயப்படுத்தி பா.ஜனதா பதவி விலக வைத்தது. மேலும் அவரை அக்கட்சி ஓரங்கட்டியது. எடியூரப்பாவை முதல்-மந்திரி பதவியில் இருந்து விலகியது ஏன் என்பதை உயர்மட்ட குழு கூற வேண்டும்.

    நான் காங்கிரசில் இணைந்ததால் தான் வடகர்நாடகத்தில் பா.ஜனதா வேட்பாளர்கள் தோல்வி அடைந்துள்ளனர். இந்த தேர்தலில் லிங்காயத் சமுதாய மக்கள் காங்கிரசுக்கு ஆதரவு வழங்கினர். தம்மய்யா, லட்சுமண் சவதி உள்பட பல லிங்காயத் தலைவர்களை பா.ஜனதா மதிக்கவில்லை. அவர்களை யாரும் சமாதானப்படுத்தவில்லை. பா.ஜனதா மீதான நம்பிக்கையை லிங்காயத் மக்கள் இழந்துவிட்டனர். பி.எல்.சந்தோஷ் பா.ஜனதா தனது கட்டுப்பாட்டில் வைக்க நினைக்கிறார். இதனால் என்னை ஓரங்கட்டினர். தற்போது என்னை குறிவைத்து பா.ஜனதாவினர் தோற்கடித்தனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒவ்வொரு பிரதோஷமும் மகத்துவம் நிறைந்தது.
    • சிவராத்திரியும் சிவனுக்கு உரிய நாள்.

    சக்திக்கு நவராத்திரி சிவனுக்கு ஒருராத்திரி என்பார்கள். அது... சிவராத்திரி. மாத சிவராத்திரி நாளில், சிவ வழிபாடு செய்வதும் சிவனாரை தரிசனம் செய்வதும் நமசிவாயம் சொல்லி ஜபிப்பதும் மகோன்னதமான பலன்களைத் தந்தருளும் என்பது ஐதீகம். தன்னை நாடி வருவோருக்கெல்லாம் அருள் மழை பொழியச் செய்வார் சிவபெருமான்.

    இதேபோல், ஒவ்வொரு பிரதோஷமும் மகத்துவம் நிறைந்தது. பெளர்ணமி மற்றும் அமாவாசைக்கு முன்னதாக மூன்று நாட்களுக்கு முன்பு திரயோதசி திதியில் பிரதோஷம் வரும். பிரதோஷ நாளில் சிவாலயம் செல்வது இதுவரை இழந்தவற்றை தந்தருளும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

    திரயோதசி திதியில் பிரதோஷம். இதில் பிரதோஷ காலம் என்பது மாலை 4.30 முதல் 6 மணி வரை. இந்த நேரத்தில் எல்லா சிவன் கோயிலிலும் சிவலிங்கத் திருமேனிக்கும் நந்திதேவருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். 16 வகையான அபிஷேகங்கள் நடைபெறும். இந்த அபிஷேக ஆராதனையை கண்ணாரத் தரிசித்தாலே இதுவரை இருந்த காரியத்தடைகள் அனைத்தும் விலகும். தோஷங்கள் அனைத்தும் நீங்கும் என்பது ஐதீகம்.

    சிவராத்திரியும் சிவனுக்கு உரிய நாள். பிரதோஷமும் சிவனாருக்கு உகந்த நாள். சிவராத்திரியும் பிரதோசஷமும் இணைந்து வருவது ரொம்பவே விசேஷம். சிறப்புக்கு உரியது. பல மடங்கு பலன்களை வழங்கக் கூடியது. இன்று விரதம் இருந்து சிவ வழிபாடு செய்தால் எண்ணங்கள் அனைத்தும் ஈடேறும்.

    நாள் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதவர்கள் ஒரு வேளை மட்டும் உணவருந்தி விரதம் அனுஷ்டிக்கலாம்.

    இன்று அருகில் உள்ள சிவாலயத்துக்குச் செல்லுங்கள். மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான நேரத்தில் நடைபெறும் பிரதோஷ பூஜையை தரிசியுங்கள். முடிந்தால் அபிஷேகப் பொருட்களை வழங்குங்கள். நந்திதேவருக்கு அருகம்புல்லும் சிவனாருக்கு வில்வமும் சார்த்தி மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள். உங்கள் பிரச்சினைகள் அனைத்தையும் தீர்த்துவைப்பார் தென்னாடுடைய சிவனார்.

    • ராஜஸ்தானில் சச்சின் பைலட் நிலை எனக்கு வேண்டாம்.
    • தற்போது சச்சின் பைலட்டை கட்சியில் இருந்து நீக்கும் நிலை உள்ளது.

    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சியை பிடித்துள்ளது. அந்த கட்சியில் முதல்-மந்திரி பதவிக்கு காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், மூத்த தலைவர் சித்தராமையா ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. முதல்-மந்திரியாக சித்தராமையாவை அறிவிக்க காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளது.

    அதாவது முதல் 2½ ஆண்டுகள் சித்தராமையாவும், அடுத்த 2½ ஆண்டுகள் டி.கே.சிவக்குமாரும் முதல்-மந்திரி பதவி வகிக்க காங்கிரஸ் மேலிடம் அறிவுறுத்தி வருகிறது. ஆனால் டி.கே.சிவக்குமார், கர்நாடகத்தில் கட்சியை நான் தான் வளர்த்துள்ளேன். இந்த தேர்தலில் 135 இடங்களில் வெற்றி பெற நான் தான் காரணம் என கூறி, முதல்-மந்திரி பதவியை தனக்கே வழங்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கி வருகிறார். இதனால் முதல்-மந்திரி தேர்வில் இழுபறி நீடிக்கிறது.

    கட்சி மேலிட உத்தரவின் பேரில் சித்தராமையா நேற்று முன்தினமே டெல்லி புறப்பட்டு சென்றார்.

    ஆனால் முதல்-மந்திரி பதவி விவகாரத்தில் கட்சி மேலிட நடவடிக்கையில் அதிருப்தி அடைந்த டி.கே.சிவக்குமார் நேற்று முன்தினம் டெல்லி செல்லாமல் புறக்கணித்தார். பின்னர் அவரை மேலிட தலைவர்கள் சமாதானப்படுத்தினர். இதைத்தொடர்ந்து நேற்று காலை அவர் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.

    முன்னதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் பெங்களூருவில் வைத்து டி.கே.சிவக்குமாருடன் நேற்று காலை தனியாக ஆலோசனை நடத்தினார்.

    அப்போது அவர், முதல்-மந்திரி பதவி விவகாரத்தில் 50-50 பார்முலாவை ஏற்கும்படியும், ராகுல்காந்தி உத்தரவின் பேரில் உங்களுக்கு நிச்சயம் அடுத்த 2½ ஆண்டுகள் முதல்-மந்திரி பதவி வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார். எனவே இதற்கு சம்மதம் தெரிவிக்கும்படி டி.கே.சிவக்குமாரிடம் கூறினார்.

    ஆனால், டி.கே.சிவக்குமார், இவ்வாறு தான் ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட்டுக்கும், சச்சின் பைலட்டுக்கும் தலா 2½ ஆண்டுகள் முதல்-மந்திரி பதவி வழங்குவதாக ராகுல்காந்தி கூறினார்.

    ஆனால் இதுவரை அசோக் கெலாட் முதல்-மந்திரி பதவியில் இருக்கிறார். ராஜஸ்தானில் சச்சின் பைலட் நிலை எனக்கு வேண்டாம். தற்போது சச்சின் பைலட்டை கட்சியில் இருந்து நீக்கும் நிலை உள்ளது. இதே நிலை எனக்கும் நடக்காது என்பது என்ன உத்தரவாதம் என கேள்வி எழுப்பியதுடன், தலா 2½ ஆண்டுகள் முதல்-மந்திரி பதவி நிர்வகிக்கும் முறை வேண்டாம். என்னை முதலில் முதல்-மந்திரி ஆக்குங்கள் என திட்டவட்டமாக கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • பொய்களை கூறி காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துள்ளது.
    • போலீசார் நியாயத்தின் பக்கம் இருக்க வேண்டும்.

    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 135 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. பா.ஜனதா 66 இடங்களில் பெற்று பெற்று ஆட்சியை இழந்துள்ளது. இந்த நிலையில் ஒசக்கோட்டையில் பா.ஜனதா தொண்டர்கள் மீது காங்கிரசார் தாக்குதல் நடத்தியதாகவும், அதில் சிலர் காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

    இதில் கிருஷ்ணப்பா என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் கர்நாடக பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல், மூத்த தலைவர் ஈசுவரப்பா உள்ளிட்டோர் நேற்று ஒசக்கோட்டைக்கு சென்று காயம் அடைந்த பா.ஜனதா தொண்டர்களை நேரில் பார்த்து ஆறுதல் கூறினர். அதன் பிறகு நளின்குமார் கட்டீல் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று கர்நாடகம் குண்டர்கள் மாநிலமாக மாறுகிறது. எங்கள் கட்சி தொண்டர்களை காங்கிரசார் தாக்குகிறார்கள். பிற மாவட்டங்களிலும் இத்தகைய சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. ஒசக்கோட்டையில் எங்கள் கட்சியை சேர்ந்த கிருஷ்ணப்பாவின் வீட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்தி அவரை கொலை செய்துள்ளனர். அங்கிருந்த அம்பேத்கரின் சிலையையும் தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.

    இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறேன். காங்கிரசுக்கு அம்பேத்கர் மீது மரியாதை கிடையாது என்பது நாட்டிற்கே தெரியும். அரசியல் விரோதம் இருக்கலாம். ஆனால் அம்பேத்கரின் சிலையை தீவைத்து கொளுத்தியது சரியா?. தலித் மக்கள் மற்றும் அம்பேத்கருக்கு அவமரியாதை இழைத்தது காங்கிரஸ் தான். இந்த சம்பவத்திற்காக காங்கிரஸ் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.

    கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வரும் போதெல்லாம் வன்முறைகள் அதிகரிப்பது வழக்கம். இதற்கு இந்த சம்பவமே சாட்சி. காங்கிரஸ் கட்சியின் அடாவடித்தன உத்தரவாதம் தொடங்கியுள்ளது. காங்கிரசின் ரவுடித்தனத்தை கண்டு நாங்கள் பயப்பட மாட்டோம். இத்தகைய சம்பவங்களால் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு ஏற்பட்டால் அதற்கு காங்கிரசே பொறுப்பு.

    போலீசார் நியாயத்தின் பக்கம் இருக்க வேண்டும். மாநிலத்தில் சில இடங்களில் பாகிஸ்தானை ஆதரித்து கோஷங்கள் எழுப்பப்படுகின்றன. இத்தகையவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வன்முறைகள் தொடா்ந்தால், நாங்கள் தீவிர போராட்டம் நடத்துவோம். நாங்கள் கைகட்டி வேடிக்கை பார்க்க மாட்டோம். இதற்கு முன்பும் இத்தகைய சம்பவங்கள் நடந்தபோது நாங்கள் தக்க பாடம் கற்பித்தோம். போலீசார் காங்கிரஸ் தொண்டர்களாக மாறிவிட்டனரா?. சில இடங்களில் தாலிபான்கள் எழுந்து நின்றுள்ளனர்.

    இந்த மாநிலம் எதை நோக்கி செல்கிறது என்பது தெளிவாக தெரிகிறது. இதை பா.ஜனதா சகித்துக்கொள்ளாது. அதனால் காங்கிரஸ் கட்சி எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பொய்களை கூறி காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துள்ளது. அவர்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். முதல்-மந்திரி பதிக்கு சண்டை போட்டு கொண்டிருப்பதை மக்கள் பார்த்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

    இவ்வாறு நளின்குமார் கட்டீல் கூறினார்.

    • முதல்-மந்திரி பதவிக்கு சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே போட்டி எழுந்துள்ளது.
    • சித்தராமையா தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சிலரை டெல்லிக்கு அழைத்து சென்றுள்ளார்.

    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடித்துள்ளது. முதல்-மந்திரி பதவிக்கு சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே போட்டி எழுந்துள்ளது. சித்தராமையா தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சிலரை டெல்லிக்கு அழைத்து சென்றுள்ளார். தனக்கு கட்சி எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளதால் முதல்-மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்.

    இதுகுறித்து கர்நாடக காங்கிரஸ் முன்னாள் தலைவரும், முன்னாள் துணை முதல்-மந்திரியுமான பரமேஸ்வர் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், "எனக்கு முதல்-மந்திரி பதவி கொடுத்தால் வேண்டாம் என்று சொல்ல மாட்டேன். என்னாலும் 50 எம்.எல்.ஏ.க்களை டெல்லிக்கு அழைத்து செல்ல முடியும். ஆனால் கட்சி கட்டுப்பாட்டை நான் மீற மாட்டேன். கட்சியின் முடிவை நான் ஏற்பேன். பொதுவாக எங்கள் கட்சியில் மாநில தலைவராக இருப்பவருக்கு தான் முதல்-மந்திரி பதவி வழங்குவது சம்பிரதாயம். இது தான் எனது கருத்து" என்றார்.

    பரமேஸ்வருக்கு முதல்-மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் துமகூருவில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். பரமேஸ்வர் காங்கிரஸ் மாநில தலைவராக நீண்ட காலம் பணியாற்றியதாகவும், அவர் துணை முதல்-மந்திரியாக இருந்தபோது பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார் என்றும் அவர்கள் கூறினர்.

    ×