search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ராஜஸ்தானில் சச்சின் பைலட்டுக்கு நடந்தது எனக்கு நடக்காதா?: டி.கே.சிவக்குமார் கேள்வி
    X

    ராஜஸ்தானில் சச்சின் பைலட்டுக்கு நடந்தது எனக்கு நடக்காதா?: டி.கே.சிவக்குமார் கேள்வி

    • ராஜஸ்தானில் சச்சின் பைலட் நிலை எனக்கு வேண்டாம்.
    • தற்போது சச்சின் பைலட்டை கட்சியில் இருந்து நீக்கும் நிலை உள்ளது.

    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சியை பிடித்துள்ளது. அந்த கட்சியில் முதல்-மந்திரி பதவிக்கு காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், மூத்த தலைவர் சித்தராமையா ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. முதல்-மந்திரியாக சித்தராமையாவை அறிவிக்க காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளது.

    அதாவது முதல் 2½ ஆண்டுகள் சித்தராமையாவும், அடுத்த 2½ ஆண்டுகள் டி.கே.சிவக்குமாரும் முதல்-மந்திரி பதவி வகிக்க காங்கிரஸ் மேலிடம் அறிவுறுத்தி வருகிறது. ஆனால் டி.கே.சிவக்குமார், கர்நாடகத்தில் கட்சியை நான் தான் வளர்த்துள்ளேன். இந்த தேர்தலில் 135 இடங்களில் வெற்றி பெற நான் தான் காரணம் என கூறி, முதல்-மந்திரி பதவியை தனக்கே வழங்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கி வருகிறார். இதனால் முதல்-மந்திரி தேர்வில் இழுபறி நீடிக்கிறது.

    கட்சி மேலிட உத்தரவின் பேரில் சித்தராமையா நேற்று முன்தினமே டெல்லி புறப்பட்டு சென்றார்.

    ஆனால் முதல்-மந்திரி பதவி விவகாரத்தில் கட்சி மேலிட நடவடிக்கையில் அதிருப்தி அடைந்த டி.கே.சிவக்குமார் நேற்று முன்தினம் டெல்லி செல்லாமல் புறக்கணித்தார். பின்னர் அவரை மேலிட தலைவர்கள் சமாதானப்படுத்தினர். இதைத்தொடர்ந்து நேற்று காலை அவர் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.

    முன்னதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் பெங்களூருவில் வைத்து டி.கே.சிவக்குமாருடன் நேற்று காலை தனியாக ஆலோசனை நடத்தினார்.

    அப்போது அவர், முதல்-மந்திரி பதவி விவகாரத்தில் 50-50 பார்முலாவை ஏற்கும்படியும், ராகுல்காந்தி உத்தரவின் பேரில் உங்களுக்கு நிச்சயம் அடுத்த 2½ ஆண்டுகள் முதல்-மந்திரி பதவி வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார். எனவே இதற்கு சம்மதம் தெரிவிக்கும்படி டி.கே.சிவக்குமாரிடம் கூறினார்.

    ஆனால், டி.கே.சிவக்குமார், இவ்வாறு தான் ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட்டுக்கும், சச்சின் பைலட்டுக்கும் தலா 2½ ஆண்டுகள் முதல்-மந்திரி பதவி வழங்குவதாக ராகுல்காந்தி கூறினார்.

    ஆனால் இதுவரை அசோக் கெலாட் முதல்-மந்திரி பதவியில் இருக்கிறார். ராஜஸ்தானில் சச்சின் பைலட் நிலை எனக்கு வேண்டாம். தற்போது சச்சின் பைலட்டை கட்சியில் இருந்து நீக்கும் நிலை உள்ளது. இதே நிலை எனக்கும் நடக்காது என்பது என்ன உத்தரவாதம் என கேள்வி எழுப்பியதுடன், தலா 2½ ஆண்டுகள் முதல்-மந்திரி பதவி நிர்வகிக்கும் முறை வேண்டாம். என்னை முதலில் முதல்-மந்திரி ஆக்குங்கள் என திட்டவட்டமாக கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    Next Story
    ×