search icon
என் மலர்tooltip icon

    பாராளுமன்ற தேர்தல் 2024

    • தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றிய அனைத்து வாக்காளர்களுக்கும் எனது இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
    • அவர்களின் தீவிர பங்கேற்பே நமது ஜனநாயகத்தின் அடிக்கல்லாகும்.

    இந்திய பாராளுமன்ற மக்களவை தேர்தலின் 7 கட்ட வாக்குப்பதிவு இன்றுடன் முடிவடைந்தது. ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி இன்று வரை ஏழு கட்டங்களாக நடைபெற்றது. ஜூன் 4-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது.

    இந்த நிலையில் மக்கள் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்க வாக்களித்து இருப்பார்கள் என்ற நம்பிக்கை பிரதமர் மோடி வெளிப்படுத்தியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

    இந்தியா வாக்களித்துள்ளது. தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றிய அனைத்து வாக்காளர்களுக்கும் எனது இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் தீவிர பங்கேற்பே நமது ஜனநாயகத்தின் அடிக்கல்லாகும்.

    அவர்களின் ஈடுபாடும், அர்ப்பணிப்பும் நமது தேசத்தில் ஜனநாயக உணர்வு செழித்து வளர்வதை உறுதி செய்கிறது. இந்தியாவின் நரி சக்தி மற்றும் யுவ சக்தி ஆகியவற்றை நான் சிறப்பாகப் பாராட்ட விரும்புகிறேன். தேர்தலில் அவர்கள் வலுவாக இருப்பது மிகவும் ஊக்கமளிக்கும் அறிகுறியாகும்.

    அவர்கள் (வாக்காளர்கள்) எங்களின் சாதனைகளையும், ஏழைகள், விளிம்புநிலை மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வில் தரமான மாற்றத்தை ஏற்படுத்திய விதத்தையும் பார்த்து மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியை மீண்டும் தேர்ந்தெடுக்க வாக்களித்திருப்பார்கள் என்பதை என்னால் சொல்ல முடியும்.

    சந்தர்ப்பவாத இந்தியா கூட்டணி வாக்காளர்களை ஒருங்கிணைக்க தவறிவிட்டது. அவர்கள் சாதி வெறி, வகுப்புவாத மற்றும் ஊழல்வாதிகள். இந்த கூட்டணி வாரிசு அரசியலை பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டு தேசத்திற்கான எதிர்கால பார்வையை முன்வைக்கத் தவறிவிட்டது.

    மோடி வசை பாடுதல் என்ற ஒரே விசயத்துடன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். இத்தகைய பிற்போக்கு அரசியலை மக்கள் நிராகரித்துள்ளனர்.

    எங்களின் வளர்ச்சி திட்டங்களை மிக நுணுக்கமாக மக்களுக்கு விளக்கி அவர்களை வாக்களிக்க தூண்டியதற்காக ஒவ்வொரு பாஜக தொண்டரையும் நான் பாராட்டுகிறேன். இவர்கள் வெற்றிக்கு மிகப்பெரிய பலம்.

    இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    • உத்தர பிரதேச மாநிலத்தில் 70 தொகுதிகள் வரை பிடிக்கும் வரை தகவல்.
    • ஆந்திராவில் 22 இடங்கள் வரை பிடிக்கும் என கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மக்களவை தேர்தலுக்கான ஏழு கட்ட வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியிடப்பட்டன.

    பாஜக கூட்டணியால் 200 இடங்களை தாண்ட முடியாது என இந்தியா கூட்டணி கட்சிகள் தெரிவித்தன. ஆனால் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணி 350 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என அனைத்து கருத்துக் கணிப்புகளும் தெரிவிக்கின்றன.

    பாஜக 400 இடங்கள் என்பதை இலக்காக கொண்டு தேர்தல் பிரசாரம் மேற்கொண்டது. கடந்த முறை 333 இடங்களை கூட்டணியாக பிடித்தது. தற்போது 20 இடங்கள் கூடுதலாக பிடிக்கும் என கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த மாநிலங்கள் கைக்கொடுத்தன என்பதை பார்ப்போம்.

    ஆந்திரா

    ஆந்திர பிரதேசத்தில் மொத்தம் 25 தொகுதிகள் உள்ளன. கடந்த முறை ஜெகன்மோகன் ரெட்டி கட்சி 22 இடங்களில் வெற்றி பெற்றது. தெலுங்கு தேசம் 3 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக-வுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.

    தற்போது கருத்துக் கணிபபில் 19 முதல் 22 இடங்கள் பாஜக கூட்டணிக்கு கிடைக்கும என தெரிவிக்கப்பட்டுள்ளது. 22 இடங்கள் என்றால் பாஜக கூட்டணிக்கு 19 இடங்கள் அதிகரிக்கும். இது மிகப்பெரிய வித்தியாசத்தை பாஜக கூட்டணிக்கு கொடுக்கும்.

    மேற்கு வங்காளம்

    மேற்கு வங்காளத்தில் பாஜக கடந்த முறை 18 இடங்களில் வெற்றி பெற்றது. தற்போது 4 இடங்கள் அதிகமாக பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநிலத்தில் 4 இடங்கள் அதிகமாக கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

    உத்தர பிரதேசம்

    உத்தர பிரதேச மாநிலத்தில் பாஜக கூட்டணி 64 இடங்களை பிடித்திருந்தது. தற்போது 70 இடங்கள் வரை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 6 இடங்கள் கிடைக்கும்.

    தெலுங்கானா

    17 தொகுதிகளை கொண்ட இந்த மாநிலத்தில் பாஜக கடந்த முறை 4 தொகுதிகளை பிடித்தது. 10 தொகுதிகள் பிடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆறு தொகுதிகள் அதிகமாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • ரிபப்ளிக் டிவி கருத்து கணிப்பில் பா.ஜனதா 359 தொகுதிகளை கைப்பற்றும்.
    • இந்தியா நியூஸ் கருத்து கணிப்பில் பா.ஜனதா 371 தொகுதிகளை கைப்பற்றும்.

    543 தொகுதியில் ஒரு இடத்தில் பா.ஜனதா போட்டியின்றி வெற்றி பெற்றது. இதனால் 542 இடங்களுக்க ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைறெ்றது. இன்று மாலை 6 மணியுடன் கடைசி கட்ட வாக்குப்பதி முடிவடைந்தது.

    இதனைத் தொடர்ந்து செய்தி நிறுவனங்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட்டன.

    ரிபப்ளிக் டிவி- பி.மார்க்-மேட்ரிஸ் (Republic TV- PMARQ-Matrize)

    பா.ஜனதா கூட்டணி  359 தொகுதிகளில் வெற்றி பெறும். இந்தியா கூட்டணி 154 தொகுதிகளில் வெற்றி பெறும்.

    இந்தியா நியூஸ்- டி. டையாமிக்ஸ் (India News- D-Dyamics)

    பா.ஜனதா கூட்டணி 371 தொகுதிகளில் வெற்றி பெறும். இந்தியா கூட்டணி 125 தொகுதிகளில் வெற்றி பெறும்.

    ஜன் கி பாத் (jan Ki Baat)

    பா.ஜனதா கூட்டணி 362 முதல் 392 வரை. இந்தியா கூட்டணி 141 முதல் 161 வரை

    ரிபப்ளிக் பாரத்- மாட்ரிஸ்

    பா.ஜனதா கூட்டணி 353 முதல் 368 வரை. இந்தியா கூட்டணி 118 முதல் 133 வரை

    என்டி-டிவி

    பா.ஜனதா கூட்டணி 365 தொகுதிகளில் வெற்றி பெறும். இந்தியா கூட்டணி 142 தொகுதிகளில் வெற்றி பெறும்.

    • கடந்த முறை பீகாரில் 40 தொகுதியில் 39 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
    • நிதிஷ் குமார் அடிக்கடி பல்டி அடிப்பதால் அவர் மீது விமர்சனம் எழுந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் நம்புகின்றன.

    பா.ஜனதா பெரிதும் நம்பும் மாநிலங்களில் பீகார் மாநிலமும் ஒன்று. இங்கு 40 தொகுதிகள் உள்ளன. கடந்த தேர்தலில் 40 தொகுதிகளில் 39 தொகுதிகளில் பா.ஜனதா கூட்டணி வெற்றி பெற்றது. காங்கிரஸ் ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது.

    கடந்த முறை நிதிஷ் குமார் பா.ஜனதாவுடன் இருந்தார். பின்னர் லாலு கட்சியுடன் இணைந்து பீகாரில் ஆட்சி அமைத்தார். அதன்பின் மீண்டும் பா.ஜனதாவுக்கு தாவினார்.

    காங்கிரஸ் மற்றும் லாலு கட்சிகள் இணைந்து பீகாரில் பா.ஜனதா கூட்டணியை எதிர்த்து போட்டியில் இறங்கியுள்ளது. இந்த முறை பீகாரில் பா.ஜனதாவுக்கு 39 தொகுதிகள் கிடைக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 400 இலக்கை நிர்ணயித்துள்ள பா.ஜனதாவுக்கு பீகார் கைக்கொடுக்காவிடில் கடந்த முறை எட்டிய 303-ஐ தொடக்கூட கடினமானதாகிவிடும்.

    இந்த நிலையில்தான் டெல்லியில் மல்லிகார்ஜூன கார்கே வீட்டில் இந்தியா கூட்டணி தலைவர்கள் கூட்டம் நடைபெற இருக்கிறது. இதில் கலந்து கொள்ள தேஜஸ்வி யாதவ் செல்கிறார்.

    அவர் தேர்தல் முடிவு, இந்த கூட்டம் குறித்து கூறியதாவது:-

    இது ஒரு வழக்கமான ஆலோசனைக் கூட்டம். நாங்கள் இதுபோன்று கூட்டங்களை நடத்துகிறோம். நாங்கள் 300 தொகுதிகளுக்கு மேல் பிடிப்போம். பீகாரில், நாங்கள் ஷாக்கிங் ரிசல்ட்-ஐ பெறுவோம். நாங்கள் அதிகப்பட்டியான இடங்களை பிடிக்கும் அதே நேரத்தில், மத்தியில் பா.ஜனதாவால் ஆட்சி அமைக்க முடியாது.

    இவ்வாறு தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.

    • வாக்குப்பதிவுகள் முழுமையாக முடிவடைந்த பின்னர் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியிடப்படும்.
    • பெரும்பாலான இந்த கருத்துக் கணிப்புகளை அரசியல் தலைவர்கள் விமர்சனம் செய்வது வழக்கமாக உள்ளது.

    இந்திய பாராளுமன்ற மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19-ந்தேதி தொடங்கியது. மொத்தம் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. கடைசி கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது.

    தேர்தல் தேதி அறிவித்ததில் இருந்து கருத்து கணிப்புகள் வெளியிட தடைவிதிக்கப்பட்டுள்ளது. நாளை கடைசி கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை செய்தி நிறுவன தொலைக்காட்சிகள் வெளியிடும்.

    அப்போது கட்சித் தலைவர்களை அழைத்து விவாதங்கள் நடத்தப்படும். அப்போது கருத்துக் கணிப்பு குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் அவர்கள் கட்சி சார்பாக பேசுவார்கள். இந்த விவாதங்களில் எங்கள் கட்சி தலைவர்கள் கலந்து கொள்ளமாட்டார்கள் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் பவன் கெரா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் "மக்கள் வாக்களித்து தீர்ப்பு உறுதி செய்யப்பட்டள்ளது. முடிவு 4-ந்தேதி வெளியாகப்போகிறது. டிஆர்பி-க்கான ஊகங்களில் ஈடுபதற்கான எந்த காரணத்தையும் நாங்கள் பார்க்கவில்லை.

    காங்கிரஸ் கட்சி தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் கலந்து கொள்ளாது. எந்தவொரு விவாதத்தின் நோக்கம் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். ஜூன் 4-ந்தேதிக்குப் பிறகு நடைபெறும் விவாதங்களில் மகிழ்ச்சியாக கலந்து கொள்வோம்" எனத் தெரிவித்துள்ளார்.

    • கடந்த 15 நாட்களில் மட்டும் காங்கிரஸ் பெயரை 232 முறை எடுத்துள்ளார்.
    • அவருடைய பெயரை 758 முறை பயன்படுத்தியுள்ளார்.

    இந்திய பாராளுமன்ற மக்களவை தேர்தலின் கடைசி கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்வடைகிறது. ஜூன் 1-ந்தேதி கடைசி கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஜூன் 4-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

    இந்த தேர்தலின் பிரசாரத்தில் பிரிவினையை தூண்டும் வகையிலும், மதம் தொடர்பாகவும் தலைவர்கள் வாக்கு சேகரித்த நிகழ்வு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பா.ஜனதா கூட்டணி சார்பிலும், இந்தியா கூட்டணி சார்பிலும் மாறிமாறி தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனால் தேர்தல் ஆணையம் சாதி மற்றும் மதம் அடிப்படையில் வாக்கு கேட்கக் கூடாது என தேர்தல் ஆணையம் கட்சிகளுக்கு உத்தரவிட்டிருந்தது.

    இந்த நிலையில் தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் மோடி 421 முறை கோவில்- மசூதி, பிரிவினை பற்றி பேசியுள்ளார் என காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக மல்லிகார்ஜூன கார்கே கூறியதாவது:-

    பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தில் 421 முறையை கோவில்-மசூதி, பிரிவினை பற்றி பேசியுள்ளார். கடந்த 15 நாட்களில் மட்டும் காங்கிரஸ் பெயரை 232 முறை எடுத்துள்ளார். அவருடைய பெயரை 758 முறை பயன்படுத்தியுள்ளார். ஆனால் அவர் வேலைவாய்ப்பின்மையை பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

    ஜூன் 4-ந்தேதி மாற்று அரசை அமைப்பதற்கான அதிகாரத்தை மக்கள் வழங்குவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இந்தியா கூட்டணி முழுப்பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்கும். எங்களுடைய பார்வையில் இந்த அரசு (மோடி தலைமையிலான மத்திய அரசு) இன்னொரு முறை வாய்ப்பு பெற்றால், அது ஜனநாயகத்தை முடிவுக்கு கொண்டு வரும்.

    இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.

    • பா.ஜனதா தலைவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வர வாக்கு கேட்கிறார்கள்.
    • அதே தலைவர்கள் கருப்பு சட்டங்களை கொண்டு வந்தவர்கள் என்பதை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ராபர்ட்ஸ்கஞ்ச் மக்களவை தொகுதியின் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் சோட்டேலால் கர்வாருக்கு வாக்கு சேகரித்தார். அப்போது அகிலேஷ் யாதவ் கூறியதாவது:-

    பா.ஜனதா தலைவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வர வாக்கு கேட்கிறார்கள். அதே தலைவர்கள் கருப்பு சட்டங்களை (விவசாயிகள் தொடர்பான மூன்று சட்டங்கள்) கொண்டு வந்தவர்கள் என்பதை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    அந்த கருப்பு சட்டங்கள் விவசாயிகள் ஒருங்கிணைந்து போராட்டம் நடத்திய பிறகு திரும்பப் பெறப்பட்டது. கருப்பு சட்டங்கள் திரும்பப் பெற்ற போதிலும் நாம் இன்னும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அதேபோல் சட்டங்களை கொண்டு வந்து விவசாயிகள் மற்றும் பழங்குடியினரின் நிலத்தை பறித்து விடுவார்கள்.

    இந்தத் தேர்தல் நம்முடைய எதிர்காலத்தின் பாதுகாப்பை பற்றியது. அதே நேரத்தில் இந்த தேர்தல் நம்முடைய அரசியலமைப்பு பாதுகாப்பு பற்றியது. அது நமக்கு மரியாதை கொடுக்கக் கூடியது. நமது உரிமை பாதுகாக்கக் கூடியது.

    இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை மக்கள் இலவச மாவு பெறுவார்கள். மொபைல் டேட்டே இலவசமாக வழங்கப்படும். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும்.

    இவ்வாறு அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

    • அவர்களால் அரசு கூட அமைக்க முடியாது. 200 இடங்களை தாண்டி அவர்களால் பிடிக்க முடியாது.
    • பா.ஜனதா மகாராஷ்டிராவில் பலவீனமாக உள்ளது. மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசாவில் கடும் போட்டி நிலவுகிறது.

    பஞ்சாப் மாநிலத்தில் ஜூன் 1-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதனால் பஞ்சாப் மாநிலத்தில் தீவிர தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகாரஜூன கார்கே இன்று அமிர்தசரஸ் நகரில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

    அப்போது மல்லிகார்ஜூன கார்கே கூறியதாவது:-

    பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களில் வெற்றி பெறுவோம் எனக் கூறி வருகிறது. ஆனால், அவர்களுடைய சீட் எண்ணிக்கை குறையும்போது, எங்களுடைய எண்ணிக்கை அதிகரிக்கும். 400 இலக்கை அவர்கள் மறந்துவிட வேண்டியதுதான். அது அர்த்தமற்றது. அவர்களால் அரசு கூட அமைக்க முடியாது. 200 இடங்களை தாண்டி அவர்களால் பிடிக்க முடியாது.

    பா.ஜனதா மகாராஷ்டிராவில் பலவீனமாக உள்ளது. மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசாவில் கடும் போட்டி நிலவுகிறது. அப்படி இருக்கும்போது எப்படி 400 இடங்கை பிடிக்க முடியும்.

    நான் அரசியலில் இணைந்தது பதவிக்காக இல்லை. நான் சிறுவயதில் இருந்து, மோடி வயதை காட்டிலும் கிட்டதட்ட அதிக ஆண்டுகள் மக்களுக்கு சேவை செய்வதற்காக அரசியலில் இருக்கிறேன். இதனால் எனதை பதவியை பற்றி யோசிக்காமல், ஜூன் 4-ந்தேதிக்குப் பிறகு அவருடைய பதவி குறித்து அமித் ஷா யோசிக்க வேண்டும்.

    இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.

    • ஓபிசிகளுக்கு எதிராக திரிணாமுல் காங்கிரசின் துரோகத்தை நீதிமன்றம் வெளிப்படுத்தியுள்ளது.
    • மேற்கு வங்காள ஓபிசிகளுக்கு திரிணாமுல் காங்கிரஸ் துரோகம் செய்துள்ளது.

    பிரதமர் மோடி இன்று மேற்கு வங்காள மாநிலம் பராசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பேரணியில் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:-

    ஓபிசிகளுக்கு எதிராக திரிணாமுல் காங்கிரசின் துரோகத்தை நீதிமன்றம் வெளிப்படுத்தியுள்ளது. சமரச அரசியல் மற்றும் வாக்கு ஜிஹாத் வசதிக்காக ஓபிசி இளைஞர்களின் உரிமைகளை அந்த கட்சி பறித்து விட்டது. மேற்கு வங்காள ஓபிசிகளுக்கு திரிணாமுல் காங்கிரஸ் துரோகம் செய்துள்ளது.

    துரோகத்தையும், பொய்களையும் வெளிப்படுத்துபவர்களை திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு பிடிக்காது என்பதற்கு நீதிமன்ற உத்தரவை எதிர்ப்பது சிறந்த சாட்சி. நீதித்துறையை இந்த கட்சியால் எப்படி கேள்வி கேட்க முடிகிறது என்று நான் வியப்படைகிறேன். நீதித்துறை மற்றும் நம்முடைய அரசியலமைப்பு மீது அவர்களுக்கு எந்த நம்பிக்கையும் இல்லையா? அவர்கள் நீதிபதிகளை தாக்கும் முறை இதுவரை இல்லாததாகும்.

    இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    • ஒடிசாவில் 21 மக்களவை தொகுதியில் 17-ல் பா.ஜனதா வெற்றி பெறும்.
    • 147 சட்டமன்ற இடங்களில் 75-ல் வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்போம்.

    மத்திய உள்துறை மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவருமான அமித் ஷா இன்று ஒடிசா மாநிலத்தில் உள்ள பத்ராக் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட சந்த்பாலியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அமித் ஷா கூறியதாவது:-

    ஜூன 4-ந்தேதி வரும்போது, நவீன் பாவு நீண்ட காலத்திற்கு முதல்வராக இருக்க முடியாது. அவர் முன்னாள் முதல்வராவார். பா.ஜனதா 21 இடங்களில் 17 மக்களவை தொகுதிகளில் வெற்றிபெறும். 147 சட்டமன்ற இடங்களில் 75-ல் பெற்றி பெற்று ஒடிசாவில் ஆட்சி அமைக்கும்.

    தற்போது ஒடிசா இளைஞர்கள் அடுத்த மாநிலங்களுக்கு வேலை தேடிச் செல்கிறார்கள். பா.ஜனதா ஆட்சி அமைத்த பிறகு, நாங்கள் தொழிற்சாலைகளை உருவாக்குவோம். அதன்பிறகு இளைஞர்கள் வேலைத்தேடி வெளி மாநிலங்களுக்கு செல்ல வேண்டிய நிலைமை ஏற்படாது.

    இவ்வாறு அமித் ஷா தெரிவித்துள்ளார்.

    • ஒடிசாவில் நடைபெற்ற முதல் மூன்று கட்ட தேர்தலில் பா.ஜனதா ஏறக்குறைய மெஜாரிட்டியை பெற்றுள்ளது.
    • பா.ஜனதா அரசு ஜூன் 10-ந்தேதி பதவி ஏற்கும். நவீன் பட்நாயக்கிற்கு வலது கையாக திகழும் 5T சேர்மன் வி.கே. பாண்டியனை தமிழ்நாட்டிற்கு அனுப்புவோம்.

    ஒடிசாவில் சட்டமன்ற தேர்தலும், மக்களவை தேர்தலும் ஒரே நேரத்தில் நடைபெறுகிறது. அங்கு நான்கு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதுவரை மூன்று கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. 4வது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ந்தேதி நடைபெற இருக்கிறது.

    இந்த நிலையில் ஒடிசாவில் ஜூன் 10-ந்தேதி பா.ஜனதா பதவி ஏற்கும். ஜூன் 11-ந்தேதி நாங்கள் பி.கே. பாண்டியனை தமிழ்நாட்டிற்கு அனுப்புவோம் என அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா கூறியதாவது:-

    என்னுடைய கணிப்பின்படி, ஒடிசாவில் நடைபெற்ற முதல் மூன்று கட்ட தேர்தலில் பா.ஜனதா ஏறக்குறைய மெஜாரிட்டியை பெற்றுள்ளது. ஆட்சியமைக்க இன்னும் ஒருசில இடங்கள்தான் தேவை. ஜூன் 1-ந்தேதி அதுவும் நிரப்பப்படும்.

    பா.ஜனதா அரசு ஜூன் 10-ந்தேதி பதவி ஏற்கும். நவீன் பட்நாயக்கிற்கு வலது கையாக திகழும் 5T சேர்மன் வி.கே. பாண்டியனை தமிழ்நாட்டிற்கு அனுப்புவோம்.

    இன்று, ஒடிசா இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாத காரணத்தினால் வெளி மாநிலத்திற்கு புலம்பெயர்ந்து செல்கிறார்கள். மற்றொரு பக்கம் ஒரு லட்சம் அரசு வேலைகள் காலியாக உள்ளது. ஒடிசா இளைஞர்கள் உள்ளூர் தொழிற்சாலைகளில் வேலை செய்யவில்லை. பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் ஒரு வருடத்திற்குள் காலியாக உள்ள இடங்கள் நிரப்பப்படும்.

    பிஜு ஜனதா தளத்தின் 5T-ல் ஒரு T-ன் அர்த்தம் டீம் ஒர்க். ஒடிசாவில் ஏதாவது டீம் ஒர்க் நடைபெறுகிறதா?. தேர்வான எம்.எல்.ஏ.-க்கள், எம்.பி.க்கள், மந்திரிகள் அவர்களுடைய அதிகாரத்தை செயல்படுத்த முடியவில்லை. அங்கு ஒரே ஒரு டீம்தான் உள்ளது. பாண்டியன் மற்றும் பாண்டியன் மனைவிக்கு இடையிலான ஒரு T. அது தமிழ்நாட்டை குறிக்கும்.

    ஒடிசாவில் கேபினட் அமைச்சர்கள் அல்லது எந்த அதிகாரிகளும் அதிகாரத்தை பெறவில்லை. பாண்டியன் மற்றும் பாண்டியன் மனைவி ஆகிய இரண்டு பேரும் அனைத்து அதிகாரத்தையும் கொண்டுள்ளனர். நவீன் பட்நாயக்கை பாண்டியன் பிணைக்கைதியாக பிடித்து வைத்துள்ளனர். ஒடிசா மக்களின் மரியாதை பெற அவர் அதில் இருந்து வெளியே வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு ஹிமாந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

    • காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள ஸ்ரீநகர், பாரமுல்லா, அனந்த்நாக்-ரஜோரி தொகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு 19.16 சதவீத வாக்குகள்தான் பதிவானது.
    • இந்த மூன்று தொகுதிகளிலும் தற்போது 50.86 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

    இந்திய பாராளுமன்ற மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதுவரை ஆறு கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஸ்ரீநகர், பாரமுல்லா, அனந்த்நாக்-ரஜோரி, உதம்பூர், ஜம்மு ஆகிய ஐந்து மக்களவை தேர்தலில் வாக்குப்பதிவு முடிவடைந்து விட்டது.

    இந்த ஐந்து தொகுதிகளிலும் கடந்த 35 வருடங்கள் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய அளவில் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். அதேபோல் போட்டியிடும் வாக்காளர்களின் எண்ணிக்கை 25 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

    இந்த அளவிற்கு தேர்தலில் பங்கேற்றுள்ளது, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில சட்டசபை தேர்தலை நடத்துவதற்கு மிகப்பெரிய அளவில் நேர்மறையானதாகும். ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் ஜனநாயக செயல்முறை தொடர்ந்து செழித்து வருகிறது எனத் தெிவித்துள்ளார்.

    ஐந்து தொகுதிகளிலும் 58.46 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள ஸ்ரீநகர், பாரமுல்லா, அனந்த்நாக்-ரஜோரி தொகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு 19.16 சதவீத வாக்குகள்தான் பதிவானது. தற்போது 30 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த மூன்று தொகுதிகளிலும் 50.86 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. ஸ்ரீநகரில் 38.49 சதவீத வாக்குகள், பாரமுல்லாவில் 59.1 சதவீத வாக்குகள், அனந்த்நாக்-ரஜோரியில் 57.84 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.

    உதம்பூர் தொகுதியில் 68.27 சதவீத வாக்குகளும், ஜம்முவில் 72.22 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.

    ஜம்மு-காஷ்மீரில் 83 சட்டமன்ற இடங்கள் 90 ஆக அதிகரித்துள்ளது. உச்சநீதிமன்றம் செப்டம்பர் மாதம் 30-ந்தேதிக்குள் சட்டமன்ற தேர்தலை நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×