என் மலர்
தொழில்நுட்பச் செய்திகள்
கூகுள் நிறுவனம் தனது பிளே ஸ்டோரில் இருந்து 100 செயலிகளை அதிரடியாக நீக்கி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
கூகுள் நிறுவனம் தனது பிளே ஸ்டோரில் இருந்து 100 செயலிகளை அதரடியாக நீக்கி இருக்கிறது. மத்திய அரசு உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. நீக்கப்பட்ட செயலிகள் கூகுள் விதிகளுக்கு புறம்பாக தனிநபர் விவரங்களை சேகரித்து, அவற்றை தவறாக கையாண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இவ்வாறு சேகரிக்கப்பட்ட விவரங்களை கொண்டு அச்சுறுத்தல் செய்தல், மக்களை பயமுறுத்துதல், தவறான வகையில் கடன்களை திரும்ப வசூலித்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டதாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் சார்பில் கூகுள் நிறுவனத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

தீங்கு விளைவிக்கும் செயலிகள் பற்றிய தகவல்களை மத்திய அமைச்சகம் சார்பில் கூகுள் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. மேலும் இவை கூகுள் விதிகளுக்கு புறம்பாக செயல்படும் வாய்ப்புகள் இருந்ததாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
மத்திய அரசு அளித்த தகவல்களின் அடிப்படையில் டிசம்பர் 2020 முதல் ஜனவரி 20, 2021 வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் 100 செயலிகளை கூகுள் நீக்கி இருக்கிறது. இதுபோன்ற நூற்றுக்கணக்கான செயலிகளை ஆய்வு செய்து, தவறான செயல்களில் ஈடுபட்ட செயலிகள் உடனடியாக நீக்கப்பட்டதாக கூகுள் தெரிவித்து இருக்கிறது.
மேலும் இதே சேவைகளை தொடர்ந்து வழங்கி வரும் இதர செயலிகள் உள்ளூர் சட்ட விதிகளுக்கு உட்பட வேண்டும் என அறிவுறுத்தி இருப்பதாக கூகுள் நிறுவனம் தெரிவித்து உள்ளது.
இந்தியாவில் அரசு நிறுவனங்கள் மற்றும் மத்திய மந்திரிகள் கவனத்தை ஈர்க்கும் கூ ஆப் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
ட்விட்டர் சமூக வலைதளத்துக்கு மாற்றாக இந்தியாவில் உருவாகி இருக்கும் புதிய சேவை கூ ஆப். இதனை பல்வேறு மத்திய அரசு துறைகள் மற்றும் மத்திய மந்திரிகளின் புதிய தகவல் பரிமாற்ற தளமாக மாறி வருகிறது.
மத்திய அரசு கடந்த வாரம் அனுப்பிய அறிக்கைக்கு ட்விட்டர் பதில் அளிக்காததால், மத்திய அரசின் உடனடி மாற்று சேவையாக கூ ஆப் மாறி இருக்கிறது. முன்னதாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் விவசாயிகள் இனப்படுகொலையை குறிக்கும் வகையில் #farmers genocide என்ற ஹேஷ்டேக் பயன்படுத்திய 257 ட்விட்களை நீக்க ட்விட்டர் இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்தது.
பிப்ரவரி 4 ஆம் தேதி தேசிய பாதுகாப்பு ஆணையங்களால் கண்டறியப்பட்ட பாகிஸ்தான் ஆதரவு ட்விட்டர் அக்கவுண்ட்களை நீக்க மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் உத்தரவிட்டது. எனினும், ட்விட்டர் இதற்கு எந்த பதிலும் வழங்கவில்லை. மாறாக ட்விட்டர் இந்தியா பொது கொள்கை பிரிவு தலைவர் மஹிமா கௌல் தனது பதவியை விட்டு விலகினார்.

இதனிடையே இந்தியாவில் உருவான கூ ஆப் சேவையை பல்வேறு மத்திய மந்திரிகள் மற்றும் அரசு நிறுவனங்கள் பயன்படுத்த துவங்கி இருக்கின்றன. கூ ஆப் ட்விட்டர் போன்றே செயல்படும் சமூக வலைதள செயலியாகும். இது கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. பின் ஆகஸ்டு 2020 மாதத்தில் இந்த செயலி பிரதமரின் ஆத்ம நிர்பார் பாரத் போட்டியில் வெற்றி பெற்றது.
இதுவரை கூ ஆப் பத்து லட்சத்திற்கும் அதிக டவுன்லோட்களை பெற்று இருக்கிறது. மேலும் பிரதமர் நரேந்திர மோடியும் இந்தியர்கள் கூ ஆப் பயன்படுத்த ஊக்குவித்தார். இந்த செயலியை அப்ரமேயா ராதாகிருஷ்ணா மற்றும் மயாங் பிதாவ்கா இணைந்து உருவாக்கி இருக்கின்றனர். இருவர் கூட்டணியில் taxiforsure மற்றும் redbus போன்ற ஸ்டார்ட்-அப்களை துவங்கி இருக்கின்றனர்.
தற்சமயம் கூ ஆப் தமிழ், தெலுங்கு, கன்னடா மற்றும் இந்தி என நான்கு மொழிகளில் கிடைக்கிறது. விரைவில் மலையாளம், மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி, பங்களா, ஒரியா மற்றும் அசாமிஸ் போன்ற மொழிகள் சேர்க்கப்பட இருக்கின்றன.
சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் சர்வதேச சந்தை விற்பனையில் புது மைல்கல் கடந்துள்ளது.
சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் சீரிஸ் ஸ்மார்ட்போன் விற்பனையில் புது மைல்கல் கடந்துள்ளது. அதன்படி உலகம் முழுக்க இதுவரை 20 கோடி ரெட்மி நோட் சீரிஸ் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து இருப்பதாக அறிவித்து இருக்கிறது. புதிய விற்பனை விவரத்தை ரெட்மி இந்தியா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் அக்கவுண்டில் தெரிவித்தது.
உலகம் முழுக்க ரெட்மி நோட் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் 20,00,00,000 யூனிட்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன. அதிக அம்சங்கள் நிறைந்த ஸ்மார்ட்போன் சீரிஸ் புதிய மைல்கல் கடந்துள்ளது. இந்த மைல்கல் உலகின் அதிகம் விரும்பப்படும் ஸ்மார்ட்போன் சீரிசாக ரெட்மி நோட் இருப்பதற்கு சான்றாக அமைந்துள்ளது என ரெட்மி இந்தியா தெரிவித்து இருக்கிறது.

கடந்த ஆண்டு பண்டிகை காலத்தில் சியோமி இந்தியா நிறுவனம் எம்ஐ 10டி ப்ரோ, ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ், ரெட்மி நோட் 9 ப்ரோ, ரெட்மி 9, ரெட்மி 9 பிரைம், ரெட்மி 9ஏ மற்றும் பல்வேறு இதர மாடல்கள் என மொத்தம் 90 லட்சம் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்தது.
2020 ஆண்டு மட்டும் உலகம் முழுக்க சுமார் 14.5 கோடி ஸ்மார்ட்போன்களை சியோமி வினியோகம் செய்து இருக்கிறது. அதன்படி 2020 நான்காவது காலாண்டில் சியோமி ஸ்மார்ட்போன் வினியோகம் 31 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. சீனாவில் மட்டும் சியோமி வினியோகம் 46 சதவீதம் அதிகரித்து இருககிறது.
ஆப்பிள் வாட்ச் பற்றிய சமீபத்திய ஆய்வில், அது இதையும் செய்யும் என கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.
அமெரிக்காவில் உள்ள மவுண்ட் சினய் மருத்துவமனையை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் கொரோனாவைரஸ் அறிகுறிகளை ஆப்பிள் வாட்ச் தற்போதைய வழிமுறைகளை விட வேகமாக கண்டறிய முடியும் என தெரியவந்துள்ளது.
ஆப்பிள் வாட்ச் அணிந்திருப்பவரின் இதய துடிப்பு வேறுபாடு விவரங்களை கொண்டு கொரோனாவைரஸ் அறிகுறி ஏற்படுமா என்பதை கண்டறிய முடிந்தது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. கொரோனாவைரஸ் காலக்கட்டத்தில் ஒருவருக்கு பாதிப்பு ஏற்படும் முன் கண்டறியும் வழிமுறை பெரும் திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.

ஆய்வில் மவுண்ட் சினய் மருத்துவமனையில் பணியாற்றும் சுகாதார ஊழியர்களில் பல நூறு பேர் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவரும் ஆப்பிள் வாட்ச் அணிந்திருந்தனர். ஆய்வின் போது தினமும் அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு இதற்கென உருவாக்கப்பட்ட செயலி கொண்டு பதில் அளித்து வந்தனர்.
இந்த ஆய்வு 2020 ஏப்ரல் மாதம் துவங்கி 2020 செப்டம்பர் வரை நடைபெற்றது. இவைதவிர, ஆய்வில் கலந்து கொண்டவர்களின் ஆரோக்கிய விவரங்கள் ஆப்பிள் வாட்ச் கொண்டு சேகரிக்கப்பட்டு வந்தது. அதன்படி பயனரின் நரம்பியல் முறைகளை கணக்கிட்டதில், ஒருவருக்கு பாதிப்பு ஏற்படுமா என்பதை முன்கூட்டியே கணிக்க முடிந்ததாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
ரியல்மி நிறுவனம் தனது நார்சோ 30 சீரிஸ் மாடல்களுக்கான டீசரை புதுவித முறையில் வெளியிட்டு உள்ளது.
ரியல்மி நிறுவனம் நார்சோ 30 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கான டீசரை வெளியிட்டு உள்ளது. டீசருடன் புதிய ஸ்மார்ட்போனிற்கான ரீடெயில் பாக்ஸ் எப்படி இருக்க வேண்டும் என வாடிக்கையாளர்களிடம் ரியல்மி கேள்வி எழுப்பி உள்ளது.
மேலும் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்ய ஆறு வெவ்வேறு வடிவமைப்பு கொண்ட ரீடெயில் பாக்ஸ் படங்களை தனது அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பதிவிட்டு இருக்கிறது. ஆறு வடிவமைப்புகளில் வாடிக்கையாளர்கள் விரும்பும் ஒன்றை தேர்வு செய்ய முடியும். இதற்கு வாக்களிக்க கூகுள் படிவம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஸ்மார்ட்போனிற்கான அறிவிப்புடன் தற்சமயம் சுமார் 30 லட்சம் நார்சோ பயனர்கள் இந்தியாவில் இருப்பதாக ரியல்மி தெரிவித்து உள்ளது. ரியல்மி நார்சோ 30 அந்நிறுவனம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்த நார்சோ 20 சீரிஸ் மாடல்களின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்.
ரீடெயில் பாக்ஸ் மற்றும் பெயர் தவிர புதிய ஸ்மார்ட்போன் பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை. கடந்த ஆண்டு மே மாதத்தில் ரியல்மி நார்சோ சீரிஸ் அறிமுகம் செய்யப்பட்டது. முதற்கட்டமாக நார்சோ 10 மற்றும் நார்சோ 10ஏ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
பின் செப்டம்பரில் நார்சோ 20, நார்சோ 20 ப்ரோ மற்றும் நார்சோ 20ஏ மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன. தற்சமயம் ரியல்மி நார்சோ 30 சீரிசில் நார்சோ 30 மற்றும் நார்சோ 30 ப்ரோ மாடல்கள் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய பயனர்கள் பற்றி அமேசான் அலெக்சா சார்பில் வெளியிடப்பட்டு இருக்கும் சுவாரஸ்ய தகவல் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
இந்திய சந்தையில் அமேசான் அலெக்சா சேவை மூன்றாவது ஆண்டை கடந்துள்ளது. இதையொட்டி அந்நிறுவனம் தனது விர்ச்சுவல் அசிஸ்டண்ட் சேவை பற்றிய தகவல்களை வெளியிட்டு உள்ளது.
அதன்படி இந்தியாவில் 2020 ஆண்டு அலெக்சா பயன்பாடு 67 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. மேலும் 2020 ஆண்டில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 19 ஆயிரம் முறை அலெக்சாவுக்கு இந்தியர்கள் I Love You என கூறி இருக்கின்றனர்.
இது 2019 ஆண்டுடன் ஒப்பிடும் போது 1200 சதவீதம் அதிகம் என அமேசான் தெரிவித்து உள்ளது. இந்தியா முழுக்க அலெக்சா சேவையை பயன்படுத்துவோரில் 50 சதவீதம் பேர் மெட்ரோ அல்லாத நகரங்களில் எக்கோ சாதனங்களை வாங்கி உள்ளனர்.

வீட்டில் உள்ள எக்கோ சாதனம் அல்லது 100-க்கும் அதிக அலெக்சா பில்ட்-இன் சாதனங்கள் அல்லது ஸ்மார்ட்போன் என பல விதங்களில் நாடு முழுக்க அலெக்சா பயனர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவது பெரும் மகிழ்ச்சியை தருகிறது என அலெக்சா சேவைக்கான இந்திய தலைவர் புனீஷ் குமார் தெரிவித்து இருக்கிறார்.
85-க்கும் அதிக அஞ்சல் குறியீட்டு பகுதிகளில் வசிக்கும் வாடிக்கையாளர்கள் 2020 ஆண்டில் எக்கோ ஸ்மார்ட் ஸ்பீக்கர்களை வாங்கி இருக்கின்றனர். மூன்றாவது ஆண்டை முன்னிட்டு அலெக்சா டிஜிட்டல் அசிஸ்டண்ட் சேவையின் கட்டணத்தை மேலும் குறைத்து, அதிக வாடிக்கையாளர்களை பெற திட்டமிடுவதாக அமேசான் தெரிவித்து உள்ளது.
அதன்படி பிப்ரவரி 15 நள்ளிரவு 12 மணி துவங்கி சரியாக 24 மணி நேரத்திற்கு எக்கோ சாதனங்களுக்கு சிறப்பு சலுகைகள் அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கின்றன.
மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய குறைந்த விலை 5ஜி ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
மோட்டோரோலா நிறுவனம் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை இபிசா (Ibiza) எனும் பெயரில் உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருந்தன. தற்சமயம் இதன் ரென்டர்கள் வெளியாகி இருக்கின்றன.
தற்போதைய ரென்டர்களில் புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் எப்படி காட்சியளிக்கும் என்ற விவரங்கள் தெரியவந்துள்ளது. மேலும் மோட்டோரோலா இபிசா ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் இது 5ஜி வசதி கொண்ட குறைந்த விலை மாடலாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
முன்னதாக மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி 5ஜி ஸ்மார்ட்போன் ரூ. 21,999 விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த வகையில் தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய ஸ்மார்ட்போனின் விலை ரூ. 20 ஆயிரம் பட்ஜெட்டிற்குள் நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

இது உண்மையாகும் பட்சத்தில் மோட்டோரோலா இபிசா ஸ்மார்ட்போன் இந்தியாவில் தற்சமயம் கிடைப்பதில் குறைந்த விலை 5ஜி மாடலாக வெளியாகலாம். சிறப்பம்சங்களை பொருத்தவரை மோட்டோ இபிசா ஸ்மார்ட்போனில் 90 ஹெர்ட்ஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே வழங்கப்படும் என தெரிகிறது.
இதன் ஸ்கிரீன் ஹெச்டி பிளஸ் ரெசல்யூஷன் கொண்டிருக்குமா அல்லது புல் ஹெச்டி பிளஸ் ரெசல்யூஷன் கொண்டிருக்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. முந்தைய தகவல்களின் படி மோட்டோரோலா இபிசா ஸ்மார்ட்போன் 2021 முதல் காலாண்டு வாக்கில் அறிமுகமாகும் என கூறப்பட்டது.
இத்துடன் இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 பிராசஸர், 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் கொண்டிருக்கும் என கூறப்பட்டது. இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் மோட்டோரோலா இபிசா அல்லது மோட்டோ ஜி40 என எந்த பெயரில் விற்பனைக்கு வரும் என்பதும் தற்சமயம் கேள்விக்குறியாகவே உள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எப்62 ஸ்மார்ட்போன் வெளியீட்டு தேதி மற்றும் இதர விவரங்கள் அறிவிப்பு.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எப்62 ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி ப்ளிப்கார்ட் தளத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்படி சாம்சங் கேலக்ஸி எப்62 ஸ்மார்ட்போன் பிப்ரவரி 15 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் எக்சைனோஸ் 9825 பிளாக்ஷிப் பிராசஸர் கொண்டிருக்கும் என ப்ளிப்கார்ட் தளத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் #FullOnSpeedy எனும் ஹேஷ்டேக்குடன் பதிவிடப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் சரியாக 12 மணிக்கு அறிமுகமாக இருக்கிறது.

சாம்சங் கேலக்ஸி எப்62 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்
- 6.7 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
- எக்சைனோஸ் 9825 பிராசஸர்
- 6 ஜிபி ரேம்
- 128 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- 64 எம்பி பிரைமரி கேமரா
- 7000 எம்ஏஹெச் பேட்டரி
- 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி
ஜனவரி மாதத்தில் அதிகம் டவுன்லோட் செய்யப்பட்ட ஆப் பற்றிய விவரங்கள் வெளியாகி உள்ளது.
சர்வதேச அளவில் 2021, ஜனவரி மாதத்தில் அதிகம் டவுன்லோட் செய்யப்பட்ட செயலியாக டெலிகிராம் இருக்கிறது. இந்த செயலி வாட்ஸ்அப்பை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்து உள்ளது. இதுபற்றிய விவரங்கள் சென்சார் டவர் எனும் ஆய்வு நிறுவனம் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் இடம்பெற்று உள்ளன.
இதில் அதிக டவுன்லோட்களை பெற்ற நாடாக இந்தியா இருக்கிறது. தற்சமயம் அதிகம் டவுன்லோட் செய்யப்பட்ட செயலிகள் பட்டியலில் வாட்ஸ்அப் 5-வது இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது. ஒட்டுமொத்த டவுன்லோட்களில் டெலிகிராம் மட்டும் 24 சதவீதம் ஆகும்.

ஜனவரி மாதத்தில் மட்டும் டெலிகிராம் செயலி சுமார் 6.3 கோடிக்கும் அதிகமாக இன்ஸ்டால் செய்யப்பட்டு இருக்கிறது. இந்தியாவுக்கு அடுத்தப்படியாக டெலிகிராம் செயலியை அதிகம் டவுன்லோட் செய்தவர்கள் பட்டியலில் இந்தோனேசியா இருக்கிறது. ஒட்டுமொத்த டவுன்லோட்களில் 10 சதவீதம் இந்தோனேசியாவில் இருந்து மட்டும் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.
கடந்த ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும் போது டெலிகிராம் செயலியின் பிரபலத்தன்மை 3.8 மடங்கு அதிகரித்து இருக்கிறது. ஜனவரி மாதத்தில் அதிகம் டவுன்லோட் செய்யப்பட்ட செயலிகள் பட்டியலில் டிக்டாக் மற்றும் சிக்னல் போன்ற செயலிகள் முறையே 2 மற்றும் 3-வது இடங்களை பிடித்துள்ளன.
இந்த பட்டியலில் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் செயலிகள் 4 மற்றும் 5வது இடங்களை பிடித்து இருக்கின்றன. சமீபத்திய பிரைவசி பாலிசி மாற்றம் காரணமாக வாட்ஸ்அப் டவுன்லோட்களில் பெருமளவு பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவில் வாட்ஸ்அப் செயலிக்கு மாற்றாக டெலிகிராம் மற்றும் சிக்னல் போன்ற செயலிகள் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மாடலின் உற்பத்தி போதுமான வரவேற்பு இல்லாததால் நிறுத்தப்பட இருப்தாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 12 மினி மாடல்களின் உற்பத்தியை நிறுத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மினி ஐபோன் மாடல் ஐபோன் 12, ஐபோன் 12 ப்ரோ மற்றும் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது.
புதிய ஐபோன் 12 சீரிசில் ஐபோன் 12 மினி தவிர மற்ற மாடல்களுக்கு அமோக வரவேற்பு கிடைப்பதாக கூறப்படுகிறது. விற்பனையில் ஐபோன் 12 மினி எதிர்பார்க்கப்பட்ட இலக்கை எட்டவில்லை என ஆய்வு நிறுவனங்கள் சார்பில் வெளியிடப்பட்டு இருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து ஜெபி மோர்கன் வினியோக பிரிவு ஆய்வளரான வில்லியம் யாங் ஐபோன் 12 மினி உற்பத்தி 2021 இரண்டாவது காலாண்டு வாக்கில் நிறுத்தப்படலாம் என தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது. உற்பத்தி நிறுத்தப்பட்டாலும், இந்த மாடல் விற்பனை சில காலம் வரை நடைபெறும் என கூறப்படுகிறது.
முதற்கட்டமாக ஐபோன் 12 மினி உற்பத்தி சுமார் ஒரு கோடி யூனிட்கள் வரை நிறுத்தப்படலாம் என தெரிகிறது. இதே போன்று ஐபோன் 12 உற்பத்தியும் குறைந்து இருப்பதாகவும், ஐபோன் 12 ப்ரோ மற்றும் ஐபோன் 11 உற்பத்தி கணிசமாக உயர்த்தப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
48 எம்பி குவாட் கேமரா, ஸ்னாப்டிராகன் பிராசஸர் கொண்ட புது நோக்கியா ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகமாகிறது.
நோக்கியா 5.4 ஸ்மார்ட்போனிற்கான டீசர் ப்ளிப்கார்ட் தளத்தில் வெளியாகி உள்ளது. முன்னதாக நோக்கியா 3.4 ஸ்மார்ட்போனின் டீசர் வெளியிடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
சிறப்பம்சங்களை பொருத்தவரை நோக்கியா 5.4 மாடலில் 6.39 இன்ச் ஹெச்டி பிளஸ் பன்ச் ஹோல் ஸ்கிரீன், 16 எம்பி செல்பி கேமரா, ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர், 48 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி அல்ட்ரா வைடு சென்சார், 2 எம்பி டெப்த் மற்றும் 2 எம்பி மேக்ரோ சென்சார் கொண்டிருக்கிறது.

நோக்கியா 5.4 சிறப்பம்சங்கள்
- 6.39 இன்ச் 720x1520 பிக்சல் HD+ 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 662 11nm பிராசஸர்
- அட்ரினோ 610 GPU
- 4 ஜிபி / 6 ஜிபி ரேம்
- 64 ஜிபி / 128 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம் ஸ்லாட்
- ஆண்ட்ராய்டு 10
- 48 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
- 5 எம்பி வைடு ஆங்கில் கேமரா
- 2 எம்பி டெப்த் சென்சார்
- 2 எம்பி மேக்ரோ கேமரா
- 16 எம்பி செல்பி கேமரா
- கைரேகை சென்சார்
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 4.2
- யுஎஸ்பி டைப் சி
- 4000 எம்ஏஹெச் பேட்டரி
- 10 வாட் சார்ஜிங்
நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் போலார் நைட் மற்றும் டஸ்க் நிறங்களில் கிடைக்கிறது. இதன் சரியான வெளியீட்டு தேதி மற்றும் விலை விவரங்கள் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.
கேமிங் சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஜிடிஏ 6 டிரெயிலர் மற்றும் வெளியீட்டு விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
சர்வதேச கேமிங் சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் கேமாக ஜிடிஏ 6 இருக்கிறது. ஜிடிஏ 6 சரியான வெளியீட்டு தேதி பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லாத நிலையிலும் கேம் தொடர்பான விவரங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன.
ஜிடிஏ 6 டிரெயலர் எனும் தலைப்பில் பல்வேறு டிரெயிலர்கள் யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கின்றன. எனினும், இவை எதுவும் கேமினை உருவாக்கும் ராக்ஸ்டார் நிறுவனம் சார்பில் வெளியிடப்படவில்லை. தற்சமயம் கிடைக்கும் டிரெயிலர்கள் பெரும்பாலும் கிராண்ட் தெப்ட் ஆட்டோ பிரியர்களால் பதிவேற்றம் செய்யப்பட்டவை ஆகும்.

ஜிடிஏ சீரிசின் புதிய கேமில் வரும் வாகனங்களில் கணிசமான அப்கிரேடுகள் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த கேம் கார் தொடர்பான கதையம்சம் அதிகம் கொண்டிருக்கும் என இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
தற்சமயம் வெளியாகி இருக்கும் டிரெயிலர்கள் பெரும்பாலும் கான்செப்ட் வீடியோக்கள் ஆகும். பைக், ரேசிங் கார், டிரக், ஹெலிகாப்டர், ஏர்பிளேன் மற்றும் பல்வேறு இதர ஆட்டோமொபைல் வாகனங்கள் இந்த கேமில் இடம்பெற்று இருக்கின்றன. தற்போதைய தகவல்களின் படி ஜிடிஏ 6 அக்டோபர் 2023 வாக்கில் வெளியாகும் என கூறப்படுகிறது.






