என் மலர்
அறிந்து கொள்ளுங்கள்
- டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனங்களை நடத்தி வரும் எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை தன்வசமாக்கி இருக்கிறார்.
- நிறுவனத்தை கையகப்படுத்தியதும் ட்விட்டர் சிஇஒ உள்பட முக்கிய அதிகாரிகளை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் ட்விட்டர் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்று இருப்பதாக அறிவித்து இருக்கிறார். கடந்த வாரம் தான் எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 3 லட்சத்து 63 ஆயிரத்து 700 கோடி கொடுத்து வாங்கினார்.
ஸ்பேஸ்-எக்ஸ், நியூராலின்க் ஸ்டார்ட்-அப், போரிங் கம்பெனி போன்ற நிறுவனங்களை எலான் மஸ்க் நிர்வகித்து வருகிறார். ட்விட்டரை முழுமையாக தன்வசமாக்கிய எலான் மஸ்க், ட்விட்டரின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி பராக் அகர்வால் மற்றும் மூத்த அதிகாரிகள் சிலரை பணி நீக்கம் செய்தததாக கூறப்படுகிறது.

இத்துடன் ட்விட்டர் வெரிபிகேஷன் சேவையை வைத்திருக்க கட்டணம் செலுத்தும் முறையையும் எலான் மஸ்க் அறிவித்து இருக்கிறார். இவ்வாறு செய்வதன் மூலம் பாட்களை முறியடிக்க முடியும் என்றும் நிறுவனத்தின் ஒட்டுமொத்த செலவீனங்களுக்கும் விளம்பரதாரர்களை மட்டும் சார்ந்து இருக்க முடியாது என்றும் எலான் மஸ்க் தெரிவித்து இருக்கிறார்.
செக்யுரிட்டி ஃபைலிங்கில் ட்விட்டர் தலைமை செயல் அதிகாரி பொறுப்பேற்று இருப்பதை எலான் மஸ்க் தெரிவித்து இருந்தார். மற்றொரு ஃபைலிங்கில் ட்விட்டர் நிறுவனத்தின் ஒற்றை இயக்குனராக தான் பதவி வகிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்து இருக்கிறார். இயக்குனர் குழு நீக்கப்பட்ட நடவடிக்கை தற்காலிகமான ஒன்று தான் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
- ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் உள்பட பல்வேறு சாதனங்கள் சீனா ஆலையில் அதிகளவில் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.
- ஐபோன் மட்டுமின்றி ஆப்பிள் நிறுவன சாதனங்களின் உற்பத்தியை மெல்ல சீனாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு ஆப்பிள் மாற்றி வருகிறது.
சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஐபோன் உற்பத்தி சரியும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதன் காரணமாக ஆப்பிள் நிறுவனம் உற்பத்தி இலக்குகளை குறைப்பது பற்றி பரிசீலனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. சீனாவில் உள்ள உலகின் மிகப்பெரிய உற்பத்தி ஆலையான செங்சௌ-வில் அடுத்த மாதத்திற்கான ஐபோன் உற்பத்தி 30 சதவீதம் வரை குறையும் என தகவல் வெளியாகி உள்ளது.
இந்த ஆலையில் குறையும் ஐபோன் உற்பத்தியை ஓரளவு ஈடுசெய்ய ஷென்சென் ஆலையில் பாக்ஸ்கான் நிறுவனம் உற்பத்தியை அதிகப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. ஷென்செனில் உள்ள பாக்ஸ்கான் ஆலையில் சுமார் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். எனினும், கொரோனாவை கட்டுக்குள் வைக்க பல பணியாளர்கள் சில நாட்களுக்கு முன் ஆலையை விட்டு வெளியேறினர்.

உலகளவில் மின்சாதன பொருட்களுக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், இது போன்ற இடர்பாடான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர திட்டமிட்டு வருவதாக பாக்ஸ்கான் நிறுவனம் அறிக்கை வெளியிட்டு உள்ளது. இதுதவிர மற்ற ஆலைகளுடன் தொடர்பு கொண்டு உற்பத்தி சரிவை முடிந்த வரை ஈடுகட்ட முயற்சித்து வருவதாக தெரிவித்து உள்ளது.
உற்பத்தி சரிவு குறித்து ஆப்பிள் நிறுவனம் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. பாக்ஸ்கான் நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்திற்கு மிகப்பெரிய உற்பத்தியாளராக விளங்கி வருகிறது. செங்கௌ ஆலையில் உற்பத்தி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், கொரோனா பரவலை கட்டுக்குள் வைக்கும் நடவடிக்கையாக மிக கடுமையான கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
- ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் விலைக்கு வாங்கும் முழு நடவடிக்கைகள் கடந்த வாரம் நிறைவு பெற்றன.
- ட்விட்டர் தலைமையகத்திற்கு சென்ற எலான் மஸ்க் கையில் சின்க் ஒன்றை எடுத்து செல்லும் வீடியோ வைரலானது.
ட்விட்டர் நிறுவனம் வெரிபிகேஷனை பயன்படுத்த ஒவ்வொரு மாதமும் கட்டணம் வசூலிக்க திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதவிர பணியை சரியான காலக்கெடுவுக்குள் செய்து முடிக்க தவரும் ஊழியர்களை எலான் மஸ்க் பணி நீக்கம் செய்ய முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
கடந்த வாரம் ட்விட்டர் மற்றும் எலான் மஸ்க் இடையே நிறுவனத்தை விலைக்கு வாங்கும் பரிவர்த்தனை நிறைவு பெற்றது. ட்விட்டர் நிறுவனத்தின் ஒரு பங்கு விலை 54.20 டாலர்கள் வீதம் மொத்தம் 44 பில்லியன் டாலர்கள் கொடுத்து எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கி இருக்கிறார். ட்விட்டரை கைப்பற்றியதும் அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி மற்றும் தலைமை நிதி அலுவலர் ஆகியோரை எலான் மஸ்க் பணி நீக்கம் செய்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது ட்விட்டர் புளூ சந்தாவுக்கு மாதம் 4.99 டாலர்கள் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த சேவையில் இருந்து அதிக வருவாய் ஈட்டும் வகையில், வெரிபிகேஷன் சேவையையும் இதில் கொண்டுவர ட்விட்டர் முடிவு செய்து இருப்பதாக தனியார் செய்தி நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. அதன் படி ட்விட்டர் புளூ சந்தாவுக்கான மாதந்திர கட்டணம் 19.99 டாலர்கள் என மாறும் என கூறப்படுகிறது.
வெரிபைடு பயனர்கள் 90 நாட்கள் வரை புளூ டிக் வைத்திருக்க முடியும். அதற்குள் சந்தா செலுத்தாத பட்சத்தில் புளூ டிக் நீக்கப்பட்டு விடும். இதற்கான வசதியை ட்விட்டரில் செயல்படுத்த நவம்பர் 7 ஆம் தேதி கடைசி நாள் என காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதை செய்ய தவறும் பட்சத்தில் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவர் என தகவல் வெளியாகி உள்ளது.
- கூகுள் நிறுவனத்தின் பிக்சல் ஸ்மார்ட்போன் மாடல்களில் டென்சார் பிராசஸர்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
- டென்சார் பிராசஸரின் பென்ச்மார்க் புள்ளிகள் பற்றி கூகுள் நிறுவன மூத்த அதிகாரி அதிரடி கருத்தை தெரிவித்துள்ளார்.
ஸ்மார்ட்போன்கள் பென்ச்மார்க், டிஎக்ஸ்ஒ மார்க் உள்ளிட்ட சோதனைகளில் எவ்வளவு புள்ளிகளை பெறுகின்றன என்பதை அறிந்து கொள்வதில் ஸ்மார்ட்போன் வல்லுனர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் ஊடகத்தினர் அதிக ஆர்வம் செலுத்துவது வாடிக்கையான விஷயமாகி விட்டது. பல முறை இதுபோன்ற சோதனை முடிவுகள் ஸ்மார்ட்போன் வெற்றி, தோல்வியை முடிவு செய்ய உதவும் அளவுக்கு பேசு பொருளாகி விடுன்றன.
அந்த வகையில் பிக்சல் 6 மற்றும் பிக்சல் 7 சீரிஸ் மாடல்களில் உள்ள டென்சார் சிப்செட்கள் எதிர்பார்த்த அளவுக்கு நல்ல பிராசஸர் இல்லை என்ற கருத்து பரவலாக பரவி வருகிறது. பென்ச்மார்க் சோதனைகளின் படி புதிய டென்சார் சிப்களை விட ஸ்னாப்டிராகன் அல்லது ஏ சீரிஸ் பிராசஸர்கள் பின்னுக்குத் தள்ளி அதிக புள்ளிகளை பெற்றதே இதற்கு காரணம் ஆகும். இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் "மேட் பை கூகுள்" போட்காஸ்ட் அமைந்துள்ளது.

"பாரம்பரியம் மிக்க் பென்ச்மார்க்குகள் ஒருகாலத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது சந்தை பல வழிகளில் அதிக முன்னேற்றம் அடைந்து விட்டது. கூகுள் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியை ஸ்மார்ட்போனிற்குள் கொண்டுவர முயற்சித்து வருகிறது. இதுவே மக்களுக்கு பயனுள்ள அம்சங்களை கொடுக்கும் என நாங்கள் நம்புகிறோம்."
"பென்ச்மார்க்குகள் செயற்கை நுண்ணறிவு மற்றும் போன்கள் பழக்கத்தில் இல்லாத காலத்தில் பயன்படுத்தப்பட்டு வந்தன. பென்ச்மார்க் டெஸ்டில் அதிக புள்ளிகளை பெறுவதை விட செயற்கை நுண்ணறிவு சார்ந்த வசதிகளை வெற்றிகரமாக பிக்சல் போனகளில் வழங்குவதே முக்கியத்துவம் வாய்ந்தது," என கூகுள் சிலிகான் பிராடக்ட் மேனேஜ்மெண்ட் பிரிவு மூத்த இயக்குனர் மோனிகா குப்தா தெரிவித்து இருக்கிறார்.
- இந்திய சந்தையில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் விற்பனை பற்றிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
- வருடாந்திர அடிப்படையில் ஐபோன் விற்பனை உலகளவில் பலமடங்கு அதிகரித்து இருக்கிறது.
ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக் ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் இந்திய ஐபோன் விற்பனையில் வரலாறு காணாத வருவாய் ஈட்டப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவில் ஐபோன் விற்பனை இருமடங்கு வளர்ச்சியை பதிவு செய்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
உலகளவில் செப்டம்பர் மாதம் வரையிலான காலாண்டில் ஆப்பிள் நிறுவனம் 90.1 மில்லியன் டாலர்கள் வருவாயை ஈட்டி இருக்கிறது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது எட்டு சதவீதம் வரை அதிகம் ஆகும். ஆப்பிள் நிறுவனத்தின் வருடாந்திர வருவாய் 394.3 பில்லியன் டாலர்களாக இருக்கிறது. இது முந்தைய ஆண்டை விட எட்டு சதவீதம் அதிகம் ஆகும்.

"ஒவ்வொரு பகுதி வருவாயிலும் நாங்கள் புதிய சாதனையை இந்த காலாண்டில் எட்டியிருக்கிறோம். இந்தியா, தென் கிழக்கு ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்கா போன்ற வளரும் நாடுகளில் தொடர்ந்து இருமடங்கு வளர்ச்சியை பதிவு செய்து வருகிறோம்," என ஆப்பிள் நிறுவனத்தில் கால் தெரிவித்தார்.
"புதிய ஐபோன் 14 சீரிஸ் பல்வேறு தலைசிறந்த தொழில்நுட்பம் மற்றும் மிக முக்கிய பாதுகாப்பு அம்சங்களை கொண்டிருக்கிறது. இந்தியாவில் ஐபோன் 14 சீரிஸ் உற்பத்தியை மேற்கொள்வதில் சுவாரஸ்ய அனுபவத்தை வழங்குகிறது," என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. புதிய ஐபோன் 14 உற்பத்தி சென்னை அருகில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் நடைபெற்று வருகிறது.
- டிஜிட்டல் பண பரிவர்த்தனை மற்றும் இணையவழி சேவைகள் அதிகரித்ததில் இருந்து சைபர்குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
- சைபர் குற்றங்களை தடுக்கவும், மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் அரசாங்கம் மற்றும் காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
சைபர் குற்ற செயல்களுக்காக பயன்படுத்தப்பட்டு வந்த சுமார் 28 ஆயிரம் மொபைல் நம்பர்களை கண்டறிந்துள்ளதாக ஹரியானா காவல் துறையை சேர்ந்த மூத்த அதிகாரி தெரிவித்து இருக்கிறார். சைபர்கிரைம் உதவி எண் 1930 மற்றும் சைபர் குற்றங்கள் பற்றி தகவல் தெரிவிக்கும் அதிகாரப்பூர்வ வலைதளம் மூலம் 27 ஆயிரத்து 824 மொபைல் போன் நம்பர்கள் கண்டறியப்பட்டதாக கூடுதல் காவல் துறை தலைவர் ஒ பி சிங் தெரிவித்து இருக்கிறார்.
கண்டறியப்பட்டு இருக்கும் மொபைல் போன் நம்பர்களின் சேவைகள் விரைவில் துண்டிக்கப்பட்டு விடும் என காவல் துறை அதிகாரி தெரிவித்து இருக்கிறார். இந்த நம்பர்கள் சைபர்சேப் போர்டலில் பதிவேற்றம் செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் இந்திய சைபர் கிரைம் மையம் சார்பில் இந்த பாதுகாப்பு தளம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

குருகிராமில் இருந்து 7 ஆயிரத்து 142, பரிதாபாத்தில் இருந்து 3 ஆயிரத்து 896 நம்பர்களும், பஞ்ச்குலாவில் இருந்து 1420. சோனிபட்டில் இருந்து 1408, ரோடக்கில் இருந்து 1045, ஹிசரில் இருந்து 1,228, அம்பாலாவில் இருந்து 1,101 மொபைல் போன் நம்பர்கள் கண்டறியப்பட்டன என்று ஒ பி சிங் தெரிவித்துள்ளார். மொபைல் போன் நம்பர்கள் தவறாக பயன்படுத்தப்படுவதாக மாவட்ட சைபர்கிரைம் அலுவலகங்களுக்கு தகவல் கொடுக்குப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை 1930 உதவி எண், 29 சைபர் காவல் நிலையங்கள், 309 சைபர் உதவி மையங்களில் இருந்து 47 ஆயிரத்திற்கும் அதிகமான குற்றச்சாட்டுகள் பெறப்பட்டுள்ளன. இதுவரை ரூ. 15 கோடிக்கும் அதிகமான பணத்தை காவல் துறை மீட்டுள்ளது என ஒ பி சிங் மேலும் தெரிவித்தார். இந்தியாவில் அக்டோபர் மாதம் தேசிய சைபர் செக்யுரிட்டி மாதமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
- ரியல்மி நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கும் புது ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
- ரியல்மி குளோபல் அதிகாரப்பூர்வ ட்விட்டர் அக்கவுண்டில் புது ரியல்மி போன் வெளியீடு பற்றிய தகவல் இடம்பெற்றுள்ளது.
ரியல்மி நிறுவனம் பல்வேறு புது ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்தற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஸ்மார்ட்போனாக ரியல்மி 10 சீரிஸ் உள்ளது. ரியல்மி குளோபல் அதிகாரப்பூர்வ ட்விட்டர் அக்கவுண்டில் புதிய ரியல்மி 10 சீரிஸ் வெளியீடு நவம்பர் மாத வாக்கில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
புதிய 10 சீரிசில் ஏராளமான சாதனங்களை அறிமுகம் செய்ய ரியல்மி திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இவற்றில் வென்னிலா வேரியண்ட், ரியல்மி 10 ப்ரோ, ரியல்மி 10 ப்ரோ பிளஸ் போன்ற மாடல்கள் இடம்பெறும் என கூறப்படுகிறது. இத்துடன் இந்தியா போன்ற நாடுகளில் ரியல்மி 10 4ஜி வேரியண்ட் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம். எனினும், இதுபற்றி ரியல்மி எந்த தகவலும் வெளியிடவில்லை.

புது சாதனம் அறிமுகமாவதை உணர்த்தும் வகையில் ரியல்மி நிறுவன துணை தலைவர் மாதவ் சேத் மூன்று படங்களை பகிர்ந்து இருந்தார். இத்துடன் "மூன்று முக்கிய லீப்-ஃபார்வேர்டு தொழில்நுட்பங்கள்" என அவர் குறிப்பிட்டு இருக்கிறார். இதன் காரணமாக ரியல்மி 10 சீரிசில் குறிப்பிடத்தக்க அப்கிரேடு வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். இவரின் ட்விட்டர் பதிவுக்கு பதில் அளித்த ரியல்மி குளோபல் இவை நவம்பர் மாதம் அறிமுகமாகும் என தெரிவித்து இருந்தது.
அதில், "புதிய ரியல்மி நம்பர் சீரிஸ் நவம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும்" என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இத்துடன் #realme10Series எனும் ஹேஷ்டேக் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக ரியல்மி நிறுவனம் விரைவில் புதிய ரியல்மி 10 ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கலாம். ரியல்மி 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் பற்றிய தகவல்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.
அந்த வகையில், இதுவரை வெளியான தகவல்களின் படி புதிய ரியல்மி 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் குறைந்த பட்சம் ரியல்மி 10 ப்ரோ அல்லது ரியல்மி 10 ப்ரோ பிளஸ் மாடல்களில் மீடியாடெக் டிமென்சிட்டி 1080 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி வழங்கப்படலாம்.
- ஆப்பிள் நிறுவனம் உருவாக்கி வரும் புது ஐபேட் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
- சமீபத்தில் தான் ஆப்பிள் புதிய ஐபேட் ப்ரோ மற்றும் ஐபேட் மாடல்களை அறிமுகம் செய்து இருந்தது.
ஆப்பிள் நிறுவனம் 16 இன்ச் அளவில் பெரிய ஐபேட் மாடலை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. புது ஐபேட் மாடல் அடுத்த ஆண்டின் நான்காவது காலாண்டு வாக்கில் அறிமுகாகும் என தெரிகிறது. இது தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் 12.9 இன்ச் ஐபேட் ப்ரோ மாடலை விட அளவில் பெரியதாக இருக்கும். புதிய டேப்லெட் மாடல் ஐபேட் மற்றும் மேக்புக் மாடல்களிடையே நிலைநிறுத்தப்படும்.
சமீபத்தில் தான் ஐபேட் (10th Gen), M2 பிராசஸர் கொண்ட ஐபேட் ப்ரோ மாடல்களை ஆப்பிள் அறிமுகம் செய்து இருந்தது. புதிய ஐபேட் மாடல் அடுத்த ஆண்டின் நான்காவது காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய தகவல்களின் படி 16 இன்ச் ஐபேட் மாடல் அறிமுகமாகும் பட்சத்தில் ஆப்பிள் இதுவரை உற்பத்தி செய்ததில் பெரிய டேப்லெட் மாடலாக இது அமையும். கிராபிக் டிசைனர்கள் மற்றும் கலைஞர்களுக்கு பயனுள்ள சாதனமாக 16 இன்ச் ஐபேட் இருக்கும்.

புதிய 16 இன்ச் ஐபேட் மாடலை ஆப்பிள் எவ்வாறு தனது சாதனங்களுடன் நிலைநிறுத்தும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. புதிய மாடல் ஐபேட் ப்ரோ என்று அழைக்கப்படுமா அல்லது ஐபேட் என்றே அழைக்கப்படுமா என்பதும் மர்மமாகவே இருக்கிறது. ஆப்பிள் உருவாக்கும் பெரிய ஐபேட் மாடல் டேப்லெட் மற்றும் லேப்டாப் மாடல்கள் இடையே உள்ள இடைவெளியை மேலும் சிறியதாக்கும்.
- வாட்ஸ்அப் செயலியில் சோதனை செய்யப்படும் புது அம்சம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
- புது அம்சம் பற்றிய விவரங்கள் செயலியின் பீட்டா வெர்ஷனில் இடம்பெற்று இருக்கிறது.
வாட்ஸ்அப் செயலியின் பீட்டா வெர்ஷன் 2.22.23.14/15 அப்டேட் வெளியிடப்பட்டு வருகிறது. பிளே ஸ்டோரில் இந்த அப்டேட் வெளியிடப்பட்டு இருக்கிறது. புது அப்டேட்டில் மல்டி டிவைஸ்-க்கான லாக்-அவுட் ஸ்கிரீன், புகைப்படம், வீடியோ, ஜிஃப் மற்றும் டாக்யுமெண்ட் உள்ளிட்டவைகளை கேப்ஷனுடன் ஃபார்வேர்டு செய்யும் வசதி போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.
லாக்-அவுட் ஸ்கிரீனை மேம்படுத்தும் பணிகளில் வாட்ஸ்அப் ஈடுபட்டு வருகிறது. புதிய லாக்-அவுட் பகுதி வாட்ஸ்அப்-இல் இருந்து லாக்-அவுட் செய்ததும் காண்பிக்கும். செயலியின் செட்டிங்ஸ்-இல் இருந்தபடி இரண்டாவது சாதனத்தில் இருந்து லாக்-அவுட் செய்ய முடியும்.

வாட்ஸ்அப் செட்டிங்ஸ் -- லின்க்டு டிவைசஸ் ஆப்ஷன் மூலம் பிரைமரி போனில் இருந்து டேப்லெட் செஷனை விட்டு வெளியேற முடியும். மேலும் வாட்ஸ்அப் செட்டிங்ஸ் -- அக்கவுண்ட் ஆப்ஷன்களில் இருந்து நம்பரை மாற்றுவதற்கான "சேஞ்ச் நம்பர்" அம்சம் இடம்பெற்று இருக்கிறது.
இத்துடன் புகைப்படம், ஜிஃப், வீடியோ உள்ளிட்டவைகளை ஃபார்வேர்டு செய்யும் போது அவற்றுக்கு தலைப்பிடும் வசதி வாட்ஸ்அப் செயலியில் சோதனை செய்யப்படுகிறது. இதன் மூலம் தரவுகளை டவுன்லோட் செய்யும் முன் அவற்றின் தலைப்பை பார்க்க முடியும். இதே வசதி டாக்யுமெண்ட்களுக்கும் வழங்கப்பட்டு இருக்கிறது.
இரு அம்சங்களில் லாக்-அவுட் ஸ்கிரீன் அம்சம் உருவாக்கப்பட்டு வருகிறது. அனைவருக்குமான வெர்ஷனில் வெளியாகும் முன் இந்த அம்சம் தொடர் சோதனை செய்யப்படும். ஃபார்வேர்டு மீடியா வித் கேப்ஷன் அம்சம் பீட்டா பயனர்களில் சிலருக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.
Photo Courtesy: WABetaInfo
- உலகின் முன்னணி குறுந்தகவல் செயலிகளில் ஒன்றாக மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் விளங்குகிறது.
- இந்தியா மட்டுமின்றி உலகளவில் வாட்ஸ்அப் சேவை நீண்ட நேரம் முடங்கிய சம்பவம் அரங்கேறியது.
இந்தியாவில் வாட்ஸ்அப் சேவை நேற்று (அக்டோபர் 25) மதியம் முடங்கியது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்கிய வாட்ஸ்அப் சேவை இரண்டு மணி நேரம் கழித்து மீண்டும் செயல்பாட்டு வந்தது. இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளிலும் வாட்ஸ்அப் சேவை முடங்கி போனது. இந்த செயலி சுமார் இரண்டு மணி நேரம் முடங்கி போனது.
வாட்ஸ்அப் வரலாற்றில் இத்தனை மணி நேரம் செயலி முடங்கியது இதுவே முதல் முறை ஆகும். சேவை முடங்கியதால் பயனர்களால் புகைப்படம், வீடியோ, குறுந்தகவல் உள்ளிட்டவைகளை வாட்ஸ்அப்-இல் அனுப்பவோ, பெறவோ முடியாத சூழல் ஏற்பட்டது. இது குறித்து டவுன்டிடெக்டர் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் நாடு முழுக்க சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வாட்ஸ்அப் சேவையை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டது.

திடீரென முடங்கிய நிலையில், வாட்ஸ்அப் சேவைகள் மதியம் 2 மணி அளவில் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது. எனினும், செயலியில் அவ்வப்போது சில இடர்பாடுகள் ஏற்பட்டதாக பயனர்கள் குற்றம்சாட்டினர். இதைத் தொடர்ந்தே வாட்ஸ்அப் மீண்டும் முழுமையாக செயல்பாட்டுக்கு வந்தது.
முந்தைய தகவல்களில் வாட்ஸ்அப் சர்வெர்களில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக சேவை முடங்கி இருக்கலாம் என கூறப்பட்டது. எனினும், வாட்ஸ்அப் சேவை தொழில்நுட்ப குறைபாடு காரணமாக முடங்கியது என மெட்டா நிறுவன செய்தி தொடர்பாளர் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
- ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் டிம் குக் தீபாவளி வாழ்த்து தெரிவித்து இருந்தார்.
- இத்துடன் டிம் குக் பகிர்ந்து இருந்த புகைப்படம் பற்றி புது தகவல் வெளியாகி உள்ளது.
ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக் தீபாவளி வாழ்த்து தெரிவித்த செய்தி இந்தியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருந்தது. தற்போது டிம் குக் வாழ்த்து சொல்ல பயன்படுத்திய புகைப்படம் இந்தியாவின் மும்பையை சேர்ந்த புகைப்பட கலைஞர் தனது ஐபோனில் எடுத்தது என தெரியவந்துள்ளது.
இது குறித்து டிம் குக் தனது ட்விட்டரில் கருத்து தெரிவித்து இருந்தார். அதில், "இந்த படம் ஒளி திருநாள் இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளிலும் எப்படி இருக்கும் என்பதை கச்சிதமாக பிரதிபலிக்கும் வகையில் எடுக்கப்பட்டு இருக்கிறது," என குறிப்பிட்டு இருக்கிறார். இத்துடன் புகைப்படத்தில் ஷாட் ஆன் ஐபோன் எனும் வாசகம் இடம்பெற்று உள்ளது.

டிம் குக் பகிர்ந்த புகைப்படத்தை அபெக்ஷா மகர் என்ற புகைப்பட கலைஞர் தனது ஐபோனில் எடுத்து இருக்கிறார். தனது புகைப்படத்தை டிம் குக் பகிர்ந்து இருப்பதை பார்த்த அபெக்ஷா மகர் டிம் குக்கின் ட்விட்டர் பதிவில் தனது கருத்துக்களை பகிர்ந்து இருக்கிறார்.
அதில், "தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எனது ஷாட் ஆன் ஐபோன் புகைப்படத்தை டிம் குக் பகிர்ந்து இருப்பது எனக்கு பெருமிதமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்," என அபெக்ஷா மகர் குறிப்பிட்டுள்ளார். இத்துடன் ஐபோனில் எப்படி சிறப்பான புகைப்படங்களை எடுக்க வேண்டும் என்ற தகவல்களையும் அபெக்ஷா மகர் தெரிவித்து இருக்கிறார்.
- பிஎஸ்என்எல் நிறுவனம் தனது பிரீபெயிட் பயனர்களுக்கு இரண்டு புதிய சலுகைகளை அறிவித்து இருக்கிறது.
- இரு சலுகைகளும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அறிவிக்கப்பட்டு உள்ளன.
பிஎஸ்என்எல் நிறுவனம் தீபாவளி சலுகையாக இரண்டு பிரீபெயிட் சலுகைகளை அறிவித்து உள்ளது. இவை நாடு முழுக்க அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்கப்படுகிறது. எனினும், சில வட்டாரங்களில் இந்த சலுகை வழங்கப்படாமலும் இருக்கலாம். பிஎஸ்என்எல் தீபாவளி சலுகையின் கீழ் அறிவிக்கப்பட்டு இருக்கும் புது சலுகைகளின் விலை முறையே ரூ. 1198 மற்றும் ரூ. 439 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளன.
குறைந்த விலையில் நீண்ட வேலிடிட்டி கொண்ட பிரீபெயிட் சலுகை விரும்புவோருக்கு ஏற்ற வகையில் பிஎஸ்என்எல் ரூ. 1198 சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதில் பயனர்களுக்கு மொத்தம் 3 ஜிபி டேட்டா, 300 நிமிட வாய்ஸ் கால், ஒவ்வொரு மாதமும் 30 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இந்த சலுகை வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். இந்த சலுகை நிறைவு பெறும் வரை ஒவ்வொரு மாதமும் பலன்கள் புதுப்பிக்கப்படும்.

பிஎஸ்என்எல் ரூ. 439 சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் காலிங், மொத்தத்தில் 300 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இந்த சலுகை வேலிடிட்டி 90 நாட்கள் ஆகும். வாய்ஸ் காலிங் மட்டும் பயன்படுத்த விரும்புவோருக்கு இந்த சலுகை பயனுள்ளதாக இருக்கும். இந்த இரு சலுகைகளும் பிஎஸ்என்எல் தீபாவளி சலுகையின் கீழ் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இரண்டு புதிய பிஎஸ்என்எல் சலுகைகளை பயனர்கள் அதிகாரப்பூர்வ பிஎஸ்என்எல் வலைதளம் மட்டும் பிஎஸ்என்எல் செல்ப்கேர் செயலியில் ரிசார்ஜ் செய்து கொள்ளலாம்.






