என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    சாம்சங் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் வெளியீடு மற்றும் புதிய தகவல்கள் அந்நிறுவனம் பதிவு செய்திருக்கும் காப்புரிமைகளில் தெரியவந்துள்ளது.
    புதுடெல்லி:

    சாம்சங் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய வசதி கொண்ட முதல் ஸ்மார்ட்போன் (கேலக்ஸி X) அடுத்த மாதம் வெளியிட இருப்பதை அந்நிறவன மொபைல் பிரிவு தலைவர் டி.ஜெ. கோ அதிகாரப்பூர்வமாக உறுதி செய்திருக்கிறார். 

    சாம்சங் கேலக்ஸி X என அழைக்கப்பட இருக்கும் மடிக்ககூடிய ஸ்மார்ட்போன் சார்ந்து சாம்சங் சார்பில் எவ்வித தகவலும் உறுதியாக வெளியிடப்படவில்லை. எனினும் புதிய ஸ்மார்ட்போனின் காப்புரிமைகளில் ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு சார்ந்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

    முந்தைய காப்புரிமைகளை விட இம்முறை வெளியாகியிருக்கும் காப்புரிமையில் பல்வேறு புதிய தகவல்கள் கிடைத்திருக்கிறது. ஏற்கனவே வெளியான தகவல்களில் ஸ்மார்ட்போனினை ஒருபக்கமாக மடித்து டேப்லெட் போன்று பயன்படுத்த முடியும் என தெரிவித்திருந்த நிலையில், இம்முறை வெளியாகியுள்ள தகவல்களில் ஸ்மார்ட்போனினை மேல் பக்கமாக மடிக்க முடியும் என்பது தெரியவந்துள்ளது.  



    இம்முறை வெளியாகியிருக்கும் புகைப்படங்கள் சர்வதேச காப்புரிமை அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தது தெரியவந்திருக்கிறது. மேலும் புதிய ஸ்மார்ட்போன் மடிக்கும் பகுதியில் எவ்வித வித்தியாசமும் தெரியவில்லை. இதனால் ஸ்மார்ட்போனினை மடிக்கும் போது எவ்வித அறிகுறியும் இருக்காது.

    எனினும் சாம்சங் இந்த பிரச்சனையை எவ்வாறு சாம்சங் சரி செய்ய இருக்கிறது என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை. புகைப்படங்களை பொருத்தவரை புதிய ஸ்மார்ட்போனில் சாம்சங் நிறுவனம் AMOLED டிஸ்ப்ளேக்களை அதிக உறுதியாகவும், அடிக்கடி மடிப்பதற்கு ஏற்ப தயாரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மற்றொரு புகைப்படத்தில் பக்கவாட்டுகளில் பெசல்கள் வளையும் படி உருவாக்கப்பட்டுள்ளது. மற்றொரு பிரச்சனை இந்த ஸ்மார்ட்போனின் பேட்டரி ஒருபக்கம் மட்டுமே வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 
    வாட்ஸ்அப் செயலியில் ஒரே நேரத்தில் பலருக்கும் அனுப்பப்படும் ஸ்பேம் மெசேஜ்களை எதிர்கொள்ள வாடிக்கையாளர்களுக்கு புதிய அப்டேட் வழங்கப்பட இருக்கிறது.
    சான்பிரான்சிஸ்கோ:

    வாட்ஸ்அப் செயலியில் ஒரே நேரத்தில் பலருக்கும் அனுப்பக்கூடிய ஸ்பேம் மெசேஜ்களை தடுக்கும் வசதியை புதிய அப்டேட் மூலம் வழங்கப்பட இருக்கிறது. அதன்படி வாட்ஸ்அப் 2.17.430 பதிப்பில் வாடிக்கையாளர்களுக்கு ஸ்பேம் மெசேஜ்களை தடுக்கும் வசதி வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

    வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்படும் புதிய அம்சங்களை பீட்டா பதிப்பில் சோதனை செய்யும் WABetaInfo வலைத்தளத்தில் புதிய அம்சம் பீட்டா பதிப்பில் சோதனை செய்யப்படுவதாகவும், ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தில் இந்த அம்சம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    ஒருவரது காண்டாக்டில் இடம்பெற்றிருக்கும் அனைத்து காண்டாக்ட்களுக்கும் ஒரே சமயத்தில் குறுந்தகவல்கள் அனுப்புவதை ஸ்பேம் என அழைக்கின்றோம். ஸ்பேம் மெசேஜ்களை எந்த ஸ்பேமரும் ஒருவருக்கு மட்டும் அனுப்புவதில்லை. காண்டாக்ட் லிஸ்ட்-இல் இடம்பெற்றிருக்கும் அனைத்து காண்டாக்ட்களுக்கும் ஸ்பேம் மெசேஜ்கள் அனுப்பப்படுகிறது. 



    இவ்வாறான மெசேஜ்களில் போலி செய்திகள், விளம்பரம், அல்லது காண்டாக்ட்களை குறிப்பிட்ட குறுந்தகவலை மற்றவர்களுக்கு அனுப்ப கோரும் என WABetaInfo வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதனால் வாட்ஸ்அப் ஃபாவேர்டு அம்சம் மூலம் ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட குறுந்தகவல்களை ஒரே சமயத்தில் பலருக்கும் அனுப்பும் போது, இந்த தகவல் பலமுறை ஃபார்வேர்டு செய்யப்பட்டுள்ளது என்பதை வாட்ஸ்அப் சார்பில் தெரிவிக்கப்படும். 

    மேலும் ஒரு குறுந்தகவலை பலருக்கும் அனுப்ப, செயலியில் உள்ள பிராட்காஸ்ட் லிஸ்ட் அம்சத்தை பயன்படுத்த வாட்ஸ்அப் சார்பில் கேட்டு கொள்ளப்பட இருக்கிறது. பிராட்காஸ்ட் லிஸ்ட் அம்சத்தை பயன்படுத்தும் போது குறுந்தகவல் அனுப்புவோரின் காண்டாக்ட் மற்றவரின் அட்ரஸ் புக்கில் சேமிக்கப்பட்டிருந்தால் மட்டுமே பெற முடியும்.
    சாம்சங் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் சி.இ.எஸ். 2018 விழாவில் தேர்வு செய்யப்பட்ட சிலருக்கு மட்டும் பிரத்யேகமாக காண்பிக்கப்பட்டது.
    லாஸ் வேகாஸ்:

    ஸ்மார்ட் டிவி, கம்ப்யூட்டர் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் மட்டுமின்றி மடிக்கக்கூடிய முதல் ஸ்மார்ட்போனினையும் சி.இ.எஸ். 2018 விழாவில் சாம்சங் அறிமுகம் செய்திருக்கிறது.

    எனினும் சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் தேர்வு செய்யப்பட்ட சில வாடிக்கையாளர்களுக்கு மட்டும் பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சந்திப்பில் அறிமுகம் செய்யப்பட்டது. முன்னதாக சாம்சங் நிறுவனம் ஃபோல்ட்-இன் மற்றும் ஃபோல்ட்-அவுட் வடிவமைப்பை கொண்ட ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்திருந்தது.

    எனினும் இம்முறை ஃபோல்ட்-இன் வடிவமைப்பு கொண்ட ஸ்மார்ட்போனினை சாம்சங் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஆண்டு நவம்பர் மாத வாக்கில் தயாரிப்பு பணிகள் துவங்க இருக்கும் நிலையில், சாம்சங் நிறுவனம் தனது இன்-ஃபோல்டிங் ஸ்மார்ட்போனினை வணிக ரீதியாக அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



    ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட இன்ஃபோல்டிங் மற்றும் அவுட்ஃபோல்டிங் தொழில்நுட்பங்களில் அவுட்ஃபோல்டிங் அதி நவீன தொழில்நுட்பம் கொண்டதாகும். அந்த வகையில் முதற்கட்டமாக இன்ஃபோல்டிங் ரக மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை சாம்சங் அறிமுகம் செய்ய இருக்கிறது.

    சி.இ.எஸ். 2018 விழாவில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனில் 7.3 இன்ச் மடிக்கக்கூடிய OLED ஸ்கிரீன் கொண்டிருக்கும். இதன் இன்ஃபோல்டு வடிவைப்பு 1R வரை வளையும் நிலையில், அவுட்ஃபோல்டு வடிவமைப்பு R5 வரை வளைகிறது. இதனால் ஸ்மார்ட்போனினை காகிதம் போன்று வளைக்க முடியும் என்பது உறுதியாகியுள்ளது.

    முன்னதாக வெளியான தகவல்களில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களில் கிளாஸ் பேனல்களுக்கு மாற்றாக பாலிமர் OLED வழங்கப்படும் என கூறப்பட்டது. எனினும் வளையும் தன்மை கொண்ட ஸ்மார்ட்போன்கள் ஒருமுறை கீழே விழுந்தாலே உடைந்து போகும். அந்த வகையில் புதிய ரக ஸ்மார்ட்போன்களின் உறுதி தன்மையை சரிபார்க்க சாம்சங் ஆய்வு குழுவினர் ஸ்மார்ட்போன்களை தினமும் 20 லட்சம் முறை கீழே போட்டு சோதனை செய்து வருகின்றனர். 

    மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை உருவாக்கும் பணிகள் நிறைவுற்றிருக்கும் நிலையில், இதற்கான எதிர்பார்ப்புகள் அதிகரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் 2019-ம் ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ஏர்டெல் சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு அமேசான் பிரைம் சேவையை பயன்படுத்த ஒரு வருடத்திற்கான சந்தா இலவசமாக வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    ஏர்டெல் நிறுவன போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களில் ரூ.499 அல்லது அதற்கும் அதிக விலையில் திட்டங்களை பயன்படுத்துவோர், ஏர்டெல் வி-ஃபைபர் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களில் ரூ.1099 அல்லது அதற்கும் அதிக விலை கொண்ட திட்டங்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு அமேசான் பிரைம் சந்தா ஒரு வருடத்திற்கு இலவசமாக வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

    அமேசான் பிரைம் சந்தா ஒரு வருடத்திற்கு ரூ.999 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், ஏர்டெல் சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. இதை கொண்டு வாடிக்கையாளர்கள் அமேசான் பிரைம் வீடியோக்களை ஒரு வருடத்திற்கு எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி பயன்படுத்த முடியும். 

    அமேசான் பிரைம் வீடியோ சேவையில் 11 லட்சத்திற்கும் அதிகமான வீடியோக்கள், பிரத்யேக தொடர்கள், சிறப்பு சலுகைகள் மற்றும் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஒரு வருடத்திற்கான அமேசான் பிரைம் சேவையினை வாடிக்கையாளர்கள் ஏர்டெல் டிவி செயலி மூலம் ஆக்டிவேட் செய்து கொள்ள முடியும். 



    ஏர்டெல் வழங்கும் அமேசான் பிரைம் சேவையை ஆக்டிவேட் செய்வது எப்படி?

    - ஏர்டெல் டி.வி. செயலியை ஆப் ஸ்டோர் அல்லது கூகுள் பிளேவில் இருந்து டவுன்லோடு செய்ய வேண்டும்.

    - ஏர்டெல் டி.வி. செயலியை திறந்து ஏர்டெல்-அமேசான் டிஜிட்டல் கார்டை கிளிக் செய்ய வேண்டும்.

    - இனி மொபைல் போன் நம்பர் மற்றும் கடவுச்சொல் பதிவு செய்து அமேசான் பிரைம் சேவையில் பதிவு செய்ய வேண்டும்.

    - அடுத்து பிரைம் வீடியோ செயலியை டவுன்லோடு செய்து வீடியோக்களை பார்க்க முடியும்.
    ஜெர்மனியை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் வாட்ஸ்அப் செயலியின் க்ரூப் சாட் அம்சத்தில் பிழை இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
    புதுடெல்லி:

    வாட்ஸ்அப் செயலியின் க்ரூப் சாட்களில் க்ரூப் அட்மின் உத்தரவின்றி மற்ற நபர்களை சேர்க்க முடியும் என ஜெர்மன் நாட்டு ஆராயாச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக முழுமையான என்க்ரிப்ஷன் சேவையை வழங்கி வரும் வாட்ஸ்அப் செயலியில் புதிய பிழை சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற க்ரிப்டோ பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொண்ட ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

    அதன்படி வாட்ஸ்அப் சர்வர்களை இயக்கும் வசதி கொண்டவர்கள், வாட்ஸ்அப் க்ரூப்களில் அட்மின் உத்தரவின்றி நேரடியாக மற்றவர்களை சேர்க்க முடியும் என தெரிவித்துள்ளனர். இதனால் க்ரூப்களில் பகிர்ந்து கொள்ளப்படும் அனைத்து தகவல்களையும் அட்மின் உத்தரவின்றி சேர்க்கப்படும் புதிய நபரால் முழுமையாக படிக்க முடியும். 

    இவ்வாறு அட்மின் உத்தரவின்றி, க்ரூப் சாட்டில் நுழையும் புதிய நபர், குறிப்பிட்ட க்ரூப் சாட்களை முழுமையாக படிக்க வழி செய்யும் புதிய பிழை வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்துவோரின் தனியுரிமையை வெகுவாக பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது. க்ரூப்களில் சேர்க்கப்பட்டிருக்கும் புதிய நபர் மற்றவர்களுக்கு க்ரூப் அட்மின் மூலம் சேர்க்கப்பட்டதாகவே தெரியும். 

    வாட்ஸ்அப் சர்வர்களை அந்நிறுவன ஊழியர்கள், சட்ட பூர்வமாக அனுமதி கோரும் அரசு அதிகாரிகள் மற்றும் உயர்-ரக ஹேக்கர்கள் உள்ளிட்டோர் மட்டுமே இயக்க முடியும். இதுகுறித்து வாட்ஸ்அப் தலைமை பாதுகாப்பு அலுவலர் அலெக்ஸ் ஸ்டமோஸ் தனது ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், 'வாட்ஸ்அப் குறித்து வையர்டு எழுதியிருக்கும் பயப்பட வைக்கும் செய்தியை படியுங்கள். வாட்ஸ்அப் க்ரூப் சாட்களை ரகசியமாக யாராலும் இயக்க முடியாது.' என குறிப்பிட்டிருக்கிறார்.

    மேலும் க்ரூப் சாட்களில் புதிய நபர் சேர்க்கப்படும் போது க்ரூப் சாட் செய்யும் அனைவருக்கும் நோட்டிஃபிகேஷன் அனுப்பப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
    அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் மனிதர்கள் உறங்கும் போது குறட்டை விடுவதை தானாக கட்டுப்படுத்தும் ஸ்மார்ட் மெத்தையை அறிமுகம் செய்துள்ளது.
    லாஸ் வேகாஸ்:

    அமெரிக்க நிறுவனம் உருவாக்கியிருக்கும் ஸ்மார்ட் மெத்தை, அதில் உறங்குபவர்களின் குறட்டை பிரச்சனையை தானாக சரி செய்து, சவுகரியமான உறக்கத்தை வழங்குகிறது. ஸ்லீப் நம்பர் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் மெத்தை ஸ்லீப் நம்பர் 360 i10 என அழைக்கப்படுகிறது.

    குறட்டை பிரச்சனையால் உலகம் முழுக்க பல்வேறு பிரச்சனை ஏற்படும் நிலையில், புதிய ஸ்மார்ட் மெத்தை இவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கண்டறியப்பட்டுள்ளது. லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்று வரும் சி.இ.எஸ். 2018 விழாவில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் ஸ்மார்ட் மெத்தை அதில் உறங்குபவர்களுக்கு இரவு முழுக்க நிம்மதியான உறக்கத்தை வழங்கும்.

    இரவில் உறங்கும் போது உடல் அசைவுகளுக்கு ஏற்ப மெத்தையை தானாக மாற்றியமைத்து கொள்ளும்படி ஸ்மார்ட் மெத்தை வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட் மெத்தையின் விற்பனை இந்த ஆண்டிற்குள் துவங்க இருக்கிறது. அமெரிக்காவில் இதன் விலை 4000 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.2,54,420 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 



    மெத்தையினுள் பொருத்தப்பட்டிருக்கும் இரண்டு ஏர்-சேம்பர்கள், மெத்தையின் சவுகரியத்தை கன நேரத்தில் டிராக் செய்து அதில் உறங்குபவர்களுக்கு ஏற்ப தானாக சரி செய்யும். உடற்பகுதியின் முதுகு பகுதி அல்லது வயிற்று பகுதிக்கு ஏற்ப மாற்றி கொள்ளும். மேலும் இதில் வழங்கப்பட்டிருக்கும் தானியங்கி அம்சம் குறட்டையை கண்டறிந்து, உறங்குபவர்களுக்கு ஏற்ப மெத்தையை மாற்றும்.

    உதாரணத்திற்கு ஸ்மார்ட் மெத்தையில் ஒருவர் குறட்டை விடும் போது, இந்த மெத்தை அதில் உறங்குபவரின் தலையை ஏழு கோணம் அளவு உயர்த்தும். இவ்வாறு செய்யும் போது அடிப்படையில் ஒருவர் குறட்டை விட காரணங்களாக இருக்கும் உடல் அசைவுகள் மாற்றப்பட்டு குறட்டை கட்டுப்படுத்தப்படுகிறது. 

    மேலும் இந்த மெத்தை அதனை பயன்படுத்துவோரின் நேர வழக்கத்தை அறிந்து கொண்டு மெத்தையின் அடிபாகத்தை வெப்பமாக்கும். இதில் வழங்கப்பட்டிருக்கும் ஸ்மார்ட் அலாரம் அம்சம் உறங்குபவர் எழ வேண்டிய நேரத்தில் எழுப்பி விடும். சி.இ.எஸ். வீட்டு உபயோக பொருட்கள் பிரிவில் சிறந்த கண்டுபிடிப்புக்கான விருது ஸ்மார்ட் மெத்தைக்கு வழங்கப்பட்டது.
    ஸ்பெக்டர் மற்றும் மெல்ட்டவுன் பாதுகாப்பு குறைபாடு கம்ப்யூட்டர் துறையை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், இவற்றில் இருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    கம்ப்யூட்டர் மற்றும் ஸ்மார்ட்போன் சாதனங்களின் பயன்பாடு அதிகரித்திருக்கிறது என்பதோடு இவை இல்லாமல் பெரும்பாலான பணிகளை மேற்கொள்வது சிரமமான காரியங்களாகி விட்டது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த சாதனங்களில் சிப் சார்ந்த பாதுகாப்பு பிழை இருப்பது சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது. 

    இந்த பிழை வாடிக்கையாளர்களின் கடவுச்சொல் மற்றும் மிக முக்கிய தகவல்களை ஹேக்கர்கள் திருட வழி செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பெக்டர் மற்றும் மெல்ட்டவுன் என அழைக்கப்படும் இரண்டு பிழைகளும் மைக்ரோ பிராசஸர்களின் வடிவமைப்பு கோளாறு ஆகும்.

    இவை கம்ப்யூட்டர் மட்டுமின்றி மொபைல் சாதனங்கள் மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங் பயன்படுத்தும் சர்வெர்களிலும் பாதிப்பை ஏற்படுத்தும். இதுகுறித்து அமேசான் வெளியிட்டுள்ள தகவல்களில் இந்த பிழை அதிநவீன பிராசஸர் வடிவமைப்புகளில் 20 ஆண்டுகளுக்கும் அதிகமாக இருந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    உண்மையில் இந்த பிழை என்றால் என்ன? இவை என்ன செய்யும்? இவற்றால் நமக்கு ஏற்படும் பாதிப்புகள் என்ன? என்பனவற்றை தொடர்ந்து பார்ப்போம். 



    மெல்ட்டவுன் மற்றும் ஸ்பெக்டர் எவ்வாறு இயங்குகின்றன?

    மைக்ரோபிராசஸர்களின் வேகத்தை மேம்படுத்த பின்பற்றப்படும் வழிமுறையை ஸ்பெகுலேட்டிவ் எக்சீகியூஷன் என அழைக்கின்றனர். இந்த வழிமுறையில் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனையை அறிந்து கொள்ள 2017-ம் ஆண்டு கூகுள் பிராஜக்ட் சீரோ குழுவினர் பல்வேறு பல்கலைக்கழகங்களை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்தனர். 

    வழக்கமான சி.பி.யு.க்களுடன் ஒப்பிடும் போது இவை கடினமான பணிகளையும் மிக வேகமாக செய்து முடிக்கும் படி உருவாக்கப்பட்டன. ஸ்பெகுலேட்டிவ் எக்சீகியூஷன் வழிமுறையை பயன்படுத்துவதில் பிராசஸர்கள் மிகப்பெரிய பிழையை இழைக்கின்றன. இந்த பிழை காரணமாக சில பணிகளை பிராசஸர்கள் சரிவர செய்யாது. 

    இதனால் குறிப்பிட்ட சாதனத்தில் உள்ள தகவல்கள் கசியும் வாய்ப்புகள் அதிகம் ஆகும். இந்த பிழை ஹேக்கர்களுக்கு வாடிக்கையாளர்களின் தகவல்களை திருடும் வசதியை ஏற்படுத்துகிறது என தி வெர்ஜ் எனும் வலைத்தளம் தெரிவித்துள்ளது. இவை பிரவுசர்களில் ஜாவாஸ்க்ரிப்ட் கோட் மூலம் ஹேக்கர்களை திருட வழி செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



    இதனால் ஏற்படும் பாதிப்பு?

    இந்த பிழை காரணமாக விண்டோஸ், மேக் ஓ.எஸ். மற்றும் லினக்ஸ் உள்ளிட்ட இயங்குதளங்கள் பாதிக்கப்படுகின்றன. இதனால் சாதனங்களில் சேமிக்கப்பட்டுள்ள கடவுச்சொல், கீஸ்டிரோக் உள்ளிட்டவை திருடப்படும் வாய்ப்பு அதிகமாகிறது. மேலும், பிரவுசர்களில் சேமிக்கப்பட்டிருக்கும் கடவுச்சொல் அல்லது பாஸ்வேர்டு மேனேஜர் உள்ளிட்டவற்றில் சேமிக்கப்பட்டுள்ள தனிப்பட்ட புகைப்படங்கள், மின்னஞ்சல்கள் உள்ளிட்டவை திருடுபோக வாய்ப்புகள் அதிகம். 

    ஆண்டிவைரஸ் பயன்படுத்துவோரும் இந்த பாதிப்பில் இருந்து தப்பிக்க முடியாது என தெரியவந்திருக்கிறது. மெல்ட்டவுன் பிழை இன்டெல் மூலம் இயங்கும் கணினிகள், லேப்டாப் மற்றும் மேக்புக் சாதனங்களை பாதிக்கும் நிவையில், ஸ்பெக்டர் பிழை AMD மற்றும் ARM பிராசஸர்களை பயன்படுத்தும் சாதனங்களை பாதிக்கும். 

    அந்த வகையில் ஸ்மார்ட்போன்களும் இந்த பாதிப்பில் பாதிக்கப்பட அதிக வாய்ப்புகள் இருக்கிறது. மேலும், இண்டர்நெட் மூலம் இணைக்கப்பட்ட சாதனங்களும் இந்த பிழையில் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்த பிழை கடந்த 20 ஆண்டுகளாக நீடித்திருப்பது தெரியவந்துள்ளது. 



    மெல்ட்டவுன் மூலம் உங்களை பாதுகாத்து கொள்வது எப்படி?

    - பிரவுசர்கள்: 

    வெப் பிரவுசர்கள் பெரும்பாலானோர் பயன்படுத்தி வரும் நிலையில், இவற்றுக்கு பாதுகாப்பு அப்டேட்கள் வழங்குவது அவசியமாகியுள்ளது. அந்த வகையில் மொசில்லா சார்பில் ஃபயர்ஃபாக்ஸ் 57 அப்டேட் வழங்கப்பட்டிருக்கிறது. கூகுள் மற்றும் மைக்ரோசாஃப்ட் தரப்பில் குரோம் மற்றும் எட்ஜ் பிரவுசர்களுக்கு விரைவில் அப்டேட் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    - ஆண்ட்ராய்டு:

    உலகில் பெரும்பாலானோர் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன் இயங்குதளமாக ஆண்ட்ராய்டு இருக்கிறது. அந்த வகையில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை பாதுகாக்கும் நோக்கில் அப்டேட் வழங்கப்பட வேண்டியது அவசியமாகியிருக்கிறது. இதுகுறித்து கூகுள் வெளயிட்டுள்ள தகவல்களின் படி சந்தையில் பயன்படுத்தப்பட்டு வரும் புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் இந்த பிழைகளில் இருந்து பாதுகாக்கப்பட்டிருப்பது தெரிவிக்கப்பட்டுள்ளது.

    - மைக்ரோசாஃப்ட்:

    மெல்ட்டவுன் பிழையை சரி செய்ய பெரும்பாலான நிறுவனங்கள் அப்டேட் வழங்கியுள்ளன. மைக்ரோசாஃப்ட் சார்பில் விண்டோஸ் 10 இயங்குதளத்திற்கு அப்டேட் வழங்கப்பட்டிருக்கிறது. விரைவில் விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் 7 இயங்குதளங்களுக்கும் அப்டேட் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அப்டேட்களை இன்ஸ்டால் செய்வதில் சிரமம் ஏற்படும் பட்சத்தில் ஆண்டிவைரஸ் மென்பொருளை செயலிழக்க செய்து மைக்ரோசாஃப்ட் செக்யூரிட்டி எசென்ஷியல்ஸ் அல்லது விண்டோஸல் டிஃபென்டர் சேவையை பயன்படுத்த கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

    - ஆப்பிள்:

    மேக் கணினிகள் மற்றும் ஐ.ஓ.எஸ். சாதனங்கள் இந்த பிழையால் பாதிக்கப்பட்டிருப்பதை ஆப்பிள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், ஐ.ஓ.எஸ். 11.2, டி.வி. ஓ.எஸ். 11.2 மற்றும் மேக் ஓ.எஸ். 10.13.2 அப்டேட்களின் மூலம் மெல்ட்டவுன் பிழை சரி செய்யப்பட்டுள்ளது. ஸ்பெக்டர் பிழையை சரி செய்வதற்கான அப்டேட் விரைவில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    ஏர்டெல் பிராட்பேண்ட் சேவையை பயன்படுத்தும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் மாதம் 5 ஜிபி அளவு டேட்டாவை இலவசமாக வழங்குவதாக ஏர்டெல் அறிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    ஏர்டெல் மைஹோம் ரிவார்ட்ஸ் திட்டத்தின் கீழ் ஏர்டெல் போஸ்ட்பெயிட் அல்லது டி.டி.எச். இணைப்புகளை பயன்படுத்தும் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் டேட்டா ஏற்கனவே வழங்கப்பட்டு வருகிறது. 

    முதற்கட்டமாக ஒரு இணைப்பிற்கு 5 ஜிபி கூடுதல் டேட்டா வழங்கப்பட்டு அதன்பின் 10 ஜிபியாக அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில், வீட்டில் ஏர்டெல் போஸ்ட்பெயிட் இணைப்பை பயன்படுத்தி வரும் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் இலவசமாக 5 ஜிபி மொபைல் டேட்டா வழங்குவதாக அறிவித்துள்ளது.

    ஏர்டெல் வழங்கும் இலவச கூடுதல் டேட்டாவினை போஸ்ட்பெயிட் மற்றும் பிராட்பேண்ட் இணைப்பை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் மைஏர்டெல் செயலி மூலம் பெற முடியும். மேலும் ஏர்டெல் வழங்கும் கூடுதல் டேட்டா ஒவ்வொரு வட்டாரத்திலும் தேர்வு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

    பிராட்பேண்ட் டேட்டா ரோல்ஓவர் வழங்கும் அனைத்து திட்டங்களிலும் கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது. எனினும் ஏர்டெல் வழங்கும் கூடுதல் டேட்டா போஸ்ட்பெயிட் ரோல்ஓவர் திட்டத்தில் சேர்க்கப்படாது. 



    இந்த சலுகையை பெறுவது எப்படி?

    - ஆண்ட்ராய்டு அல்லது ஐ.ஓ.எஸ். இயங்குதளங்களில் மைஏர்டெல் செயலியை இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

    - போஸ்ட்பெயிட் நம்பரை பதிவு செய்து, ஒரு முறை பயன்படுத்தும் கடவுச்சொல் மூலம் உறுதி செய்ய வேண்டும்.  

    - செயலியின் முகப்பு பக்கத்தில் இலவசமாக வழங்கப்படும் 5 ஜிபி டேட்டா விளம்பரத்தில் கிளிக் செய்து, அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி இலவச மாத டேட்டாவினை பெற முடியும். 

    - இந்த சலுகையை பெறாதவர்கள், முதலில் கிரியேட் மைஹோம் (create myHome) ஆப்ஷனை கிளிக் செய்து உங்களது பிராட்பேண்ட் மற்றும் போஸ்ட்பெயிட் இணைப்பை புதிய சேவைகளுக்கு சிறப்பு சலுகைகள் (Great Offers on New Products) இணைக்க வேண்டும்.
    ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவை தொடர்ந்து ஐடியா செல்லுலார் நிறுவனமும் குறைந்த விலையில் புதிய சலுகையை அறிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    பாரதி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ போன்றே ஐடியா செல்லுலார் நிறுவனமும் ரூ.93 விலையில் புதிய திட்டத்தை தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது. ஜியோ மற்றும் ஏர்டெல் போன்றே ஐடியாவும் டேட்டாவை விட அதிக அழைப்புகளை மேற்கொள்ளும் வாடிக்கையாளர்களை குறிவைத்தே இந்த திட்டத்தை அறிவித்துள்ளது. 

    பத்து நாட்கள் வேலிடிட்டி கொண்ட புதிய திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள், 1 ஜிபி 3ஜி டேட்டா வழங்கப்படுகிறது. இதில் வாடிக்கையாளர்களுக்கு எஸ்.எம்.எஸ். இலவசமாக வழங்கப்படவில்லை, மாறாக அன்லிமிட்டெட் அழைப்புகளும் தினமும் 250 நிமிடங்களும், வாரத்திற்கு 1000 நிமிடங்களும் வழங்கப்படுகிறது. 

    இந்த கெடு நிறைவுற்றதும் வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் அழைப்புகள் நொடிக்கு 1 பைசா வீதம் கட்டணம் வசூலிக்கப்படும். எனினும் ஐடியா அறிவித்துள்ள புதிய திட்டம் தேர்வு செய்யப்பட்ட சில வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என ஐடியா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அந்த வகையில் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் முன் வாடிக்கையாளர்கள் இந்த திட்டம் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டியது அவசியமாகியுள்ளது. ஐடியா அறிவித்துள்ள ரூ.93 திட்டம் ஏர்டெல் கடந்த வாரம் அறிவித்த ரூ.93 திட்டத்திற்கு போட்டியாக அமைந்துள்ளது. 

    ஏர்டெல் வழங்கும் ரூ.93 திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 100 எஸ்.எம்.எஸ். இலவசமாக வழங்கப்படுகிறது. மற்ற இரு நிறுவன திட்டங்களில் எவ்வித மாற்றங்களும் இல்லை. ஜியோ அறிவித்துள்ள ரூ.98 திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 14 நாட்கள் தினமும் 150 எம்பி டேட்டா, அன்லிமிட்டெட் அழைப்புகள், ரோமிங் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
    மொபைல் சிம் கார்டுடன் ஆதார் எண் இணைக்கும் வழிமுறை முன்பு இருந்ததை விட எளிமையாக்கப்பட்டுள்ளது. இதை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    இந்தியாவில் மொபைல் போன் நம்பருடன் ஆதார் எண் இணைக்கும் வழிமுறைகள் முன்பு இருந்ததை விட எளிமையாக்கப்பட்டுள்ளது. அனைத்து நெட்வொர்க் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களும், கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு தங்களது சிம் கார்டு நம்பருடன் ஆதாரை இணைத்து கொள்ளலாம். 

    நாடு முழுக்க வாடிக்கையாளர்கள் ஆஃப்லைன் ஸ்டோர்களில் நீண்ட நேரம் காத்திருந்து கைவிரல் ரேகையை வைத்து மொபைல் நம்பருடன் ஆதாரை இணைத்து வந்தனர். அந்த வகையில் வாடிக்கையாளர்கள் இனி அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்த படியே IVR சேவையை பயன்படுத்தி வழிமுறையை செய்யலாம். 

    இந்தியா முழுக்க மொபைல் போன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் தங்களது சிம் கார்டுடன் ஆதாரை இணைக்க பிப்ரவரி 6-ம் தேதி வரை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 



    ஆதாருடன் மொபைல் நம்பரை இணைப்பது எப்படி?

    ஏர்டெல், ஐடியா, ஜியோ வோடபோன், அல்லது மற்ற நெட்வொர்க் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் வழிமுறையை துவங்கு்ம முன் கையில் ஆதார் எண் வைத்திருக்க வேண்டும். 

    மத்திய அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள இலவச எண் 15456 தொடர்பு கொண்டு IVR வழிமுறைகளை பின்பற்றி, ஆதாருடன் மொபைல் நம்பரை இணைத்து கொள்ளலாம். 

    - மொபைல் போனில் இருந்து 14546 என்ற எண் டையல் செய்ததும், முதலில் இந்திய குடிமகனா அல்லது NRI என்பதை தேர்வு செய்ய வேண்டும். அடுத்து ஆதாருடன் இணைக்க எண் 1-ஐ அழுத்த வேண்டும். 

    - இதை தொடர்ந்து அதார் எண் பதிவு செய்து எண் 1-ஐ அழுத்தி உறுதி செய்ய வேண்டும். 

    - அதார் எண் பதிவு செய்ததும் உங்களது மொபைல் எண்ணிற்கு ஒரு முறை பயன்படுத்தக் கூடிய கடவுச்சொல் (OTP) அனுப்பப்படும். இனி உங்களது மொபைல் நம்பரை பதிவு செய்ய வேண்டும். 

    - இனி உங்களது பெயர், புகைப்படம், பிறந்த தேதி உள்ளிட்ட தகவல்களை UIDAI தளத்தில் இருந்து தேர்ந்தெடுக்க குறிப்பிட்ட டெலிகாம் ஆப்பரேட்டருக்கு அனுமதியளிக்க வேண்டும். 

    - இனி உங்களது மொபைல் போன் நம்பரின் கடைசி நான்கு எண்களை IVR தெரிவிக்கும். நீங்கள் முன்பு வழங்கிய மொபைல் எண் சரியாதாக இருப்பின் உங்களுக்கு அனுப்பப்பட்ட ஒருமுறை பயன்படுத்தக்கூடிய கடவுச்சொல் பதிவு செய்ய வேண்டும். 

    - ஆதார் - மொபைல் நம்பர் இணைக்கும் வழிமுறையை முடிக்க எண் 1-ஐ அழுத்த வேண்டும். 

    - உங்களிடம் மற்றொரு மொபைல் எண் இருப்பின் எண் 2-ஐ அழுத்தி அதனையும் IVR முறையில் இணைக்க முடியும். இவ்வாறு செய்யும் போது மற்றொரு மொபைல் நம்பரையும் வைத்திருக்க வேண்டும்.

    - ஆதாருடன் மொபைல் நம்பரை இணைக்க உங்களுக்கு அனுப்பப்படும் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய கடவுச்சொல், உங்களுக்கு அனுப்பிய நொடி முதல் 30 நிமிடங்களுக்கு செல்லுபடியாகும். 

    - கார்பரேட் திட்டங்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் இந்த வழிமுறையை பின்பற்ற வேண்டிய அவசியம் கிடையாது. 



    இதுவரை ஏர்டெல், ஐடியா மற்றும் வோடபோன் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த சேவையை இயக்க துவங்கியுள்ளன. ஜியோ ஏற்கனவே ஆதார் எண் கொண்டே சிம் கார்டுகளை ஆக்டிவேட் செய்து வருகிறது. இதனால் ஜியோ வாடிக்கையாளர்கள் மீண்டும் இந்த வழிமுறையை பின்பற்ற வேண்டிய அவசியம் கிடையாது. 

    ஆதார் சென்ட்ரல் நம்பர் என்பதால் ஏர்டெல் மற்றும் வோடபோன் வாடிக்கையாளர்கள் தங்களது மொபைல் நம்பருடன் ஆதாரை எந்த வட்டாரத்தில் வாங்கியிருந்தாலும் இணைக்க முடியும். எனினும் ஐடியா செல்லுலார் ட்விட்டரில் வெளியிட்டிருக்கும் தகவல்களில் மொபைல் நம்பர் பெறப்பட்ட வட்டாரத்திலேயே ஆதார் நம்பரை பெற்றிருக்க வேண்டும். ஐ.வி.ஆர். 

    வழிமுறை குறித்து ஏர்செல் சார்பில் எவ்வித தகவலும் வெளியிடப்படவில்லை. இதனால் வாடிக்கையாளர்கள் ஆஃப்லைன் ஸ்டோர்களுக்கு சென்று ஆதாருடன் மொபைல் நம்பரை பதிவு செய்ய வேண்டும். கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் டெலிகாம் ஆப்பரேட்டர்கள் வலைத்தளம் மூலமாக ஆதார் மற்றும் மொபைல் நம்பருடன் இணைக்க முடியும் என கூறப்பட்டது. எனினும் இந்த சேவையை வழங்கும் வலைத்தளங்கள் இதுவரை அமைக்கப்படவே இல்லை.
    ஃபேஸ்புக் சார்பில் சமீபத்தில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் அரசு அமைப்பு, அரசாங்க துறை மற்றும் அரசியல் கட்சிகளின் பிரபல தன்மை சார்ந்த சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளது.
    புதுடெல்லி:

    அரசு அமைப்புகள், அரசாங்க துறை மற்றும் அரசியல் கட்சிகளின் ஃபேஸ்புக் பிரபல தன்மையை அறிந்து கொள்ள ஃபேஸ்புக் முடிவு செய்திருந்தது. இதற்கென இந்திய ஃபேஸ்புக் வாடிக்கையாளர்களிடம் கணக்கெடுப்பு ஒன்றை நடத்தியது.

    ஃபேஸ்புக் நடத்திய கணக்கெடுப்பில் 2017-ம் ஆண்டு முழுவதும் இந்தியாவில் அதிக வரவேற்பை பெற்றிருக்கும் ஃபேஸ்புக் பக்கங்கள் சார்ந்த கேள்விகள் இடம்பெற்றிருந்தது. மத்திய அரசு அமைப்புகள், அரசு துறைகள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு ஃபேஸ்புக் வாடிக்கையாளர்கள் அளித்திருக்கும் வரவேற்பு பிரத்யேக பட்டியலாக வெளியிடப்பட்டுள்ளது.

    ஜனவரி 1, 2017 முதல் டிசம்பர் 31, 2017 வரையிலான காலகட்டத்தில் அதிக ரியாக்ஷன், ஷேர் மற்றும் கமெண்ட்களை பொருத்து பிரபலங்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.



    ஃபேஸ்புக் கணக்கெடுப்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அதிகம் விவாதிக்கப்பட்ட மக்களவை உறுப்பினராக தேர்வு ஃபேஸ்புக் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்திருக்கின்றனர். இவரை தொடர்ந்து மாநிலங்களவையின் பிரபல உறுப்பினராக முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

    ஃபேஸ்புக்கில் பிரபல அலுவலகங்களாக இந்திய பிரதமர் அலுவலகம் (PMO India) மற்றும் இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் (President of India, Ram Nath Kovind) அலுவலகம் ஆகியவை இடம்பெற்றிருக்கிறது. பிரபலமான அரசு துறைகளில் மத்திய வெளியுறவு துறை முதலிடம் பிடித்திருக்கிறது.

    அரசு திட்டங்களில் MyGov இந்தியா, டிஜிட்டல் இந்தியா, மேக் இன் இந்தியா உள்ளிட்டவை பிரபலமாக இருந்துள்ளன. பிரபல ஆயுத படைகளில் இந்திய ராணுவம் ஃபேஸ்புக்கில் பிரபலமாக இருந்துள்ளது. மாநில அரசு மற்றும் யூனியன் பிரதேசங்களில் உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தரா ராஜே ஆகியோர் பிரபலமாக இருந்துள்ளனர்.



    அரசியல் கட்சிகளை பொருத்த வரை பா.ஜ.க முதலிடத்தில் உள்ளது.  ஆம். ஆத்மி மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஃபேஸ்புக்கில் பிரபலமாக இருந்துள்ளன. பிரபலமான அரசு சுற்றுலா கழகமாக கேரளா மாநில சுற்றுலா துறை தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. இதை தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் மற்றும் குஜராத் மாநில சுற்றுலா கழகங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.

    பிரபலமான போக்குவரத்து காவல் துறை பக்கங்களில் பெங்களூரு நகர போக்குவரத்து காவல் துறை கடந்த ஆண்டு ஃபேஸ்புக்கின் பிரபல பக்கமாக இருந்துள்ளது. பெங்களூரை தொடர்ந்து கொல்கத்தா மற்றும் ஐதராபாத் நகர போக்குவரத்து காவல் துறைகள் உள்ளன.
    கூகுள் ஹோம் மினி ஸ்பீக்கரை வியப்புடன் பயன்படுத்தும் இத்தாலிய பாட்டியின் வீடியோ யூடியூப் டிரென்ட் ஆகியுள்ளது.
    ரோம்:

    தொழில்நுட்ப உலகில் கண்டறியப்படும் புதுப்புது சாதனங்களும், மக்களுக்கு பயன்படுவது மட்டுமின்றி, வாழ்க்கையை எளிமையாக்கும் ஒற்றை நோக்கத்தில் பொதுமக்களுக்கு வெளியிடப்படுகின்றன.

    அதிநவீன தொழில்நுட்ப யுகத்தில் நம் வாழ்க்கை முறையில் பல்வேறு சாதனங்களும் நம்முடன் ஐக்கியமாகி, நம்முள் உறவாடுகின்றன. இவ்வாறு நம்முடன் உரையாடும் செயற்கை நுண்ணறிவு சார்ந்து இயங்கும் வாய்ஸ் அசிஸ்டண்ட் தொழில்நுட்பம் துவக்கத்தில் வியப்பை ஏற்படுத்தி, தற்சமயம் நாம் அறியாத விவரங்களை மெல்லிய குரலில் அசத்தலாக தெரிவிக்கிறது.

    செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உதவியுடன் இயங்கும் ஹோம் ஸ்பீக்கர்களை பல்வேறு நிறுவனங்களும் தயாரித்து வெளியிட்டு வரும் நிலையில், இந்த சாதனங்கள் நம்முள் பிரபலமாகவும், பழகிப்போன உறவுமுறை போன்று முழுமையாக மாறிவிட்டது.



    தொழில்நுட்ப பிரியர்களுக்கு இதுபோன்ற சாதனங்கள் பழகிப்போயிருந்தாலும் நம் வீடுகளில் உள்ள முதியோருக்கு இவை புதிர் போடும், ஆச்சரிய பொருளாகவே இருக்கிறது. இவ்வாறு இத்தாலியை சேர்ந்த மூதாட்டி கூகுள் ஹோம் மினி ஸ்பீக்கருடன் உரையாடும் வீடியோ யூடியூபில் டிரென்ட் ஆகியுள்ளது.

    85 வயதான மூதாட்டி சிறிய கிண்ணம் போன்று காட்சியளிக்கும் கூகுள் ஹோம் மினி ஸ்பீக்கரிடம் கேள்விகள் கேட்கிறார். அதற்கு ஸ்பீக்கர் வழங்கும் பதில்களை கேட்டு மூதாட்டி பயம் கலந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார். கூகுள் ஹோம் மினி ஸ்பீக்கருடன் மூதாட்டி உரையாடும் வீடியோவினை பென் ஆக்டிக்ஸ் என்பவர் யூடியூபில் பதிவேற்றம் செய்திருக்கிறார்.

    ஹே கூகுள், ஓ.கே. கூகுள் போன்ற வார்த்தைகளை மூதாட்டி உச்சரிக்கும் விதம் மற்றும் மூதாட்டியின் கேள்விக்கு கூகுள் வழங்கும் பதில்களை கேட்டு அவர் வெளிப்படுத்திய உணர்ச்சி இணையவாசிகளை அதிகம் கவர்ந்துள்ளது. யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்ட குறைந்த காலக்கட்டத்திலே இந்த வீடியோவினை அதிகம் பேர் பார்த்து ரசித்துள்ளனர்.

    கூகுள் ஹோம் மினி ஸ்பீக்கருடன் மூதாட்டியின் அழகிய உரையாடல் வீடியோவை கீழே காணலாம்..,


    ×