என் மலர்
அறிந்து கொள்ளுங்கள்
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எஸ்.இ. 2 ஸ்மார்ட்போன் இரண்டு வேரியண்ட்களில் உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்பிள் நிறுவனம் சற்றே விலை குறைந்த ஐபோன் மாடல்களை இந்த ஆண்டு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இவை ஐபோன் எஸ்.இ. 2 பிராண்டிங் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கலாம். புதிய ஐபோன் வெளியீட்டு விவரங்கள் உறுதியாகாத நிலையில், ஐபோன் எஸ்.இ. 2 பற்றிய புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி இம்முறை ஆப்பிள் நிறுவனம் ஐபோன் எஸ்.இ. 2 ஸ்மார்ட்போனினை இரண்டு வேரியண்ட்களில் அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இவை ஐபோன் எஸ்.இ. 2 மற்றும் ஐபோன் எஸ்.இ. 2 பிளஸ் என்ற பெயரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவற்றில் முதல் மாடலில் 4.7 இன்ச் எல்.சி.டி. ஸ்கிரீன் வழங்கப்படும் என்றும் இது பார்க்க ஐபோன் 8 போன்று காட்சியளிக்கும் என கூறப்படுகிறது. மேலும் இதில் ஐபோன் 11 சீரிஸ்களில் வழங்கப்பட்ட ஏ13 பயோனிக் சிப்செட் வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் டச் ஐ.டி. கைரேகை சென்சார், 3 ஜி.பி. ரேம், அதிகபட்சம் 128 ஜி.பி. மெமரி வழங்கப்படலாம்.

புகைப்படங்களை எடுக்க ஒற்றை பிரைமரி கேமரா வழங்கப்படலாம். ஐபோன் எஸ்.இ. 2 ஸ்மார்ட்போன் சமீபத்தில் 3சி சான்று மற்றும் 5வாட் சார்ஜர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. புதிய ஐபோன் எஸ்.இ. 2 மாடல் இந்த ஆண்டின் முதல் அரையாண்டிற்குள் அறிமுகம் செய்யப்படலாம். இதன் துவக்க விலை 450 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 32,500) வரை நிர்ணயம் செய்யப்படலாம்.
ஐபோன் எஸ்.இ. 2 பிளஸ் மாடலிலும் எல்.சி.டி. ஸ்கிரீன் வழங்கப்படலாம். எனினும், இதன் டிஸ்ப்ளே அளவு 5.5 இன்ச் அல்லது 6.1 இன்ச் வரை வழங்கப்படலாம். இந்த ஐபோன் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
ரியல்மி பிராண்டின் புதிய பட்ஜெட் ரக ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ரியல்மி பிராண்டின் ரியல்மி 5ஐ ஸ்மார்ட்போன் சமீபத்தில் வியட்நாமில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில், வியட்நாமை தொடர்ந்து ரியல்மி 5ஐ ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படுகிறது.
அந்த வகையில் ரியல்மி 5ஐ ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜனவரி 9-ம் தேதி ப்ளிப்கார்ட் தளத்தில் வெளியாக இருக்கிறது. இதனை அந்நிறுவனம் புதிய டீசரில் தெரிவித்துள்ளது.
சிறப்பம்சங்களை பொருத்தவரை ரியல்மி 5ஐ ஸ்மார்ட்போனில் ரியல்மி 5 மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டுள்ளது. எனினும், இதில் 8 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. ரியல்மி 5 மற்றும் ரியல்மி 5எஸ் ஸ்மார்ட்போன்களில் 13 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டிருக்கிறது.

ரியல்மி 5ஐ சிறப்பம்சங்கள்:
- 6.5 இன்ச் 1600x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் மினி டிராப் டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3+
- ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர்
- அட்ரினோ 610 GPU
- 3 ஜி.பி. ரேம்
- 32 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம் ஸ்லாட்
- கலர் ஒ.எஸ். 6.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 9.0 பை
- 12 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8, PDAF, எல்.இ.டி. ஃபிளாஷ், EIS
- 8 எம்.பி. 118° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 1.12μm, f/2.25
- 2 எம்.பி. டெப்த் சென்சார்
- 2 எம்.பி. கேமரா, 1.75μm, f/2.4
- 8 எம்.பி. செல்ஃபி கேமரா
- கைரேகை சென்சார்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
- எஃப்.எம். ரேடியோ
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- மைக்ரோ யு.எஸ்.பி.
- 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 10 வாட் சார்ஜிங்
வியட்நாமில் ரியல்மி 5ஐ ஸ்மார்ட்போன் புளு மற்றும் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 160 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 11,530 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்10 லைட் மற்றும் கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இவற்றின் முழு விவரங்களை பார்ப்போம்.
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எஸ்10 லைட் மற்றும் கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. இவற்றில் 6.7 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED பிளஸ் இன்ஃபினிட்டி-ஒ டிஸ்ப்ளே, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 32 எம்.பி. செல்ஃபி கேமரா, 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போனில் ப்ளூடூத் எஸ் பென் ஏர் கமாண்ட் வசதியுடன் வழங்கப்பட்டுள்ளது. கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸரும், கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போனில் எக்சைனோஸ் 9810 சிப்செட் வழங்கப்பட்டுள்ளது.
கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போனில் புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, OIS, 12 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா, 5 எம்.பி. மேக்ரோ கேமராவும், கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போனில் 12 எம்.பி. பிரைமரி கேமரா, OIS, 12 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா, 12 எம்.பி. டெலிபோட்டோ கேமரா கொண்டிருக்கிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ்10 லைட் சிறப்பம்சங்கள்:
- 6.7-இன்ச் FHD+ 2400x1080 பிக்சல் சூப்பர் AMOLED பிளஸ் இன்ஃபினிட்டி-ஒ டிஸ்ப்ளே
- ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர்
- அட்ரினோ 640 GPU
- 6 ஜி.பி. / 8 ஜி.பி. LPDDR4x ரேம்
- 128 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யு.ஐ. 2.0
- டூயல் சிம்
- 48 எம்.பி. பிரைமரி கேமரா, OIS, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.0
- 12 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா, f/2.2
- 5 எம்.பி. மேக்ரோ கேமரா, f/2.0
- 32 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.2
- இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- 4,500 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 25வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

சாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட் சிறப்பம்சங்கள்:
- 6.7-இன்ச் FHD+ 2400x1080 பிக்சல் சூப்பர் AMOLED பிளஸ் இன்ஃபினிட்டி-ஒ டிஸ்ப்ளே
- ஆக்டா-கோர் சாம்சங் எக்சைனோஸ் 9810 பிராசஸர்
- மாலி G72MP18 GPU
- 6 ஜி.பி. / 8 ஜி.பி. LPDDR4x ரேம்
- 128 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யு.ஐ. 2.0
- டூயல் சிம்
- 12 எம்.பி. பிரைமரி கேமரா, OIS, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.7
- 12 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், f/2.4
- 12 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா, f/2.2
- 32 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.2
- இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- 4,500 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 25வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன் ப்ரிஸம் வைட், ப்ரிஸம் பிளாக் மற்றும் ப்ரிஸம் புளூ நிறங்களில் கிடைக்கிறது. கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போன் ஔரா குளோ, ஔரா பிளாக் மற்றும் ஔரா ரெட் நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் அடுத்த வாரம் துவங்க இருக்கும் சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் (சி.இ.எஸ். 2020) காட்சிப்படுத்தப்படும் என தெரிகிறது. இவற்றின் விலை விவரங்கள் விரைவில் வெளியாகலாம்.
இன்ஸ்டாகிராம் செயலியில் வரும் குறுந்தகவல்களை கணினியில் இயக்குவது எப்படி என தொடர்ந்து பார்ப்போம்.
இன்ஸ்டாகிராம் செயலியில் டைரக்ட் மெசேஜ் அல்லது டி.எம். என அழைக்கப்படும் குறுந்தகவல் சேவை மற்ற செயலிகளில் இருப்பதை போன்று செயல்படுகிறது. இன்ஸ்டாகிராம் டி.எம். சேவையில் புகைப்படம், வீடியோக்கள், மறைந்து போகும் குறுந்தகவல்கள், லொகேஷன் ஷேரிங் என பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
எனினும், இன்ஸ்டாகிராம் மொபைல் செயலி என்பதால், இதன் அம்சங்களை செயலியில் மட்டுமே பயன்படுத்த முடியும். இந்த செயலிக்கென பிரத்யேக வலைப்பக்கம் இருக்கிறது. இதில் பயனர்கள் தங்களின் ஃபீடை ஸ்கிரால் செய்வது, போஸ்ட்களுக்கு லைக், கமென்ட் போன்றவற்றை செய்ய முடியும்.
இதைதவிர புகைப்படம், வீடியோ அல்லது டி.எம். எனப்படும் குறுந்தகவல் போன்ற அம்சங்களை இயக்க முடியாது. லேப்டாப் அல்லது கம்ப்யூட்டரில் குறுந்தகவல் அம்சத்தை இயக்க வழிமுறை இருக்கிறது. இதை எப்படி செய்ய வேண்டும் என தொடர்ந்து பார்ப்போம்.
விண்டோஸ் 10 தளத்தில் இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவது
லேப்டாப் அல்லது டெஸ்க்டாப் சாதனங்களில் விண்டோஸ் 10 பயன்படுத்துவோர் எனில், இன்ஸ்டாகிராம் செயலியை விண்டோஸ் ஸ்டோரில் இருந்து டவுன்லோடு செய்ய வேண்டும்.
1 - விண்டோஸ் ஸ்டோர் சென்று இன்ஸ்டாகிராம் என சர்ச் செய்ய வேண்டும்
2 - இன்ஸ்டால் பட்டனை க்ளிக் செய்து, இன்ஸ்டால் ஆனதும் செயலியை இயக்க வேண்டும்
3 - இன்ஸ்டாகிராம் சேவைக்கான விவரங்களை கொண்டு சேவையில் லாக் இன் செய்ய வேண்டும்
4 - டைரக்ட் மெசேஜ்களை சரிபார்க்க, செயலியில் இருப்பதை போன்று இருக்கும் அம்பு குறி ஐகானை க்ளிக் செய்ய வேண்டும்
5 - இதில் அனைத்து புதிய குறுந்தகவல்களும் இடம்பெறும், அவற்றில் நீங்கள் விரும்பும் குறுந்தகவல்களை படித்து அவற்றுக்கு பதில் அளிக்க வேண்டும்

விண்டோஸ் அல்லது மேக் சாதனத்தில் ஆண்ட்ராய்டு எமுலேட்டர் பயன்படுத்துவது
விண்டோஸ் இயங்குதளத்தின் பழைய வெர்ஷனை பயன்படுத்தினாலோ அல்லது மேக்புக் பயன்படுத்துவோர் ஆண்ட்ராய்டு எமுலேட்டர் சேவையை டவுன்லோடு, இன்ஸ்டால் செய்ய வேண்டும்.
இதற்கு நீங்கள் விரும்பும் எமுலேட்டர் ஒன்றை டவுன்லோடு செய்து திரையில் தோன்றும் வழிமுறைகளை பின்பற்றி சேவையை இயக்க தொடர வேண்டும். இனி கூகுள் பிளே ஸ்டோர் சென்று இன்ஸ்டாகிராம் செயலியை தேடி அதனை டவுன்லோடு செய்ய வேண்டும். டவுன்லோடு செய்யப்பட்டதும் கம்ப்யூட்டரில் இன்ஸ்டாகிராம் சேவையில் லாக் இன் செய்து மெசேஜ் அம்சத்தை இயக்க துவங்கலாம்.
ஏர்டெல் நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு இரண்டு புதிய சலுகைகளை அறிவித்து இருக்கிறது.
பாரதி ஏர்டெல் நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 279 மற்றும் ரூ. 379 விலையில் இரண்டு புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. இவற்றில் அதிவேக டேட்டா, எஸ்.எம்.எஸ். பலன்கள் வழங்கப்படுகின்றன. இத்துடன் வின்க் மியூசிக் மற்றும் எக்ஸ்டிரீம் செயலிகளை பயன்படுத்தும் வசதியும் வழங்கப்படுகிறது.
ஏர்டெல் ரூ. 279 சலுகையுடன் ரூ. 4 லட்சத்திற்கான உயிர் காப்பீடு திட்டம் வழங்கப்படுகிறது. புதிய ரூ. 279 சலுகையில் தினமும் 1.5 ஜி.பி. டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ். மற்றும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இத்துடன் ஃபாஸ்டாக் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 100 கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

ரூ. 379 சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு மொத்தம் 6 ஜி.பி. அதிவேக டேட்டா, 900 எஸ்.எம்.எஸ்., அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை 84 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இத்துடன் வின்க் மியூசிக், ஏர்டெல் எக்ஸ்டிரீம் செயலியை பயன்படுத்தும் வசதி மற்றும் ஃபாஸ்டாக் வாங்குவோருக்கு ரூ. 100 கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
ஏர்டெல் ரூ. 379 சலுகை சமீபத்தில் வோடபோன் ஐடியா அறிவித்த ரூ. 379 சலுகைக்கு போட்டியாக அமைந்துள்ளது. வோடபோன் ஐடியா நிறுவனம் ரூ. 379 சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், அதிவேக டேட்டா மற்றும் 1000 எஸ்.எம்.எஸ். உள்ளிட்ட பலன்களை 84 நாட்களுக்கு வழங்குகிறது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஒரே மாதத்தில் மட்டும் சுமார் 91 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை தனது சேவையில் இணைத்து இருக்கிறது.
நம் நாட்டில், 2019 அக்டோபர் இறுதி நிலவரப்படி தொலைபேசி இணைப்புகளின் (செல்போன்+லேண்டுலைன்) மொத்த எண்ணிக்கை 120.48 கோடியாக உயர்ந்துள்ளது. முந்தைய மாதத்துடன் ஒப்பிடும்போது இது 0.80 சதவீத வளர்ச்சியாகும். இந்திய தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
நம் நாட்டில், நடப்பாண்டு அக்டோபர் மாதத்தில் தொலைபேசி இணைப்புகளின் மொத்த எண்ணிக்கை 120.48 கோடியாக அதிகரித்து இருக்கிறது. முந்தைய மாதத்தை விட இது 0.80 சதவீதம் அதிகமாகும். அந்த மாதத்தில், நகர்ப்புறங்களில் செல்போன் இணைப்புகள் 68.16 கோடியாக உயர்ந்து இருக்கிறது.
செப்டம்பர் மாதத்தில் அது 67.79 கோடியாக இருந்தது. கிராமங்களில் இந்த இணைப்புகள் (51.73 கோடியில் இருந்து) 52.31 கோடியாக அதிகரித்து இருக்கிறது. இதனையடுத்து செல்போன் இணைப்புகளின் மொத்த எண்ணிக்கை 118.34 கோடியாக உள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் இணைப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அக்டோபர் மாதத்தில் ஜியோ நிறுவனம் மட்டும் 91 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை சேர்த்து இருக்கிறது. இதேபோன்று பி.எஸ்.என்.எல். நிறுவனம் 2.88 லட்சம் வாடிக்கையாளர்களையும் வோடாபோன் நிறுவனம் 1.90 லட்சமும், பாரதி ஏர்டெல் நிறுவனம் 81,974 வாடிக்கையாளர்களை பெற்று இருக்கிறது.
அக்டோபர் மாதத்தில் அகன்ற அலைவரிசை இணைப்புகளின் எண்ணிக்கை 2.98 சதவீதம் வளர்ச்சி கண்டு 64.41 கோடியாக உயர்ந்து இருக்கிறது. முந்தைய மாதத்தில் அது 62.54 கோடியாக இருந்தது. இதில் ரிலையன்ஸ் ஜியோ அதிகபட்சமாக 36.43 கோடி இணைப்புகளுடன் முன்னிலையில் உள்ளது.
அடுத்து பாரதி ஏர்டெல் (13.04 கோடி), வோடாபோன் (11.57 கோடி), பொதுத்துறையை சேர்ந்த பி.எஸ்.என்.எல். (2.23கோடி) ஆகிய நிறுவனங்கள் அதிக இணைப்புகளை வழங்கி இருக்கின்றன. அகன்ற அலைவரிசை இணைப்புகளின் அடிப்படையில் இந்த 5 நிறுவனங்களின் ஒட்டுமொத்த சந்தைப்பங்கு 98.98 சதவீதமாக இருக்கிறது.
வாட்ஸ்அப் செயலியை இனிமேல் அந்த போன்களில் மட்டும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
வாட்ஸ்அப் செயலியினை இனிமேல் அதாவது ஜனவரி 1, 2020 முதல் விண்டோஸ் போன் இயங்குதளங்களில் இயங்காது. அந்த வகையில் விண்டோஸ் போன் தளத்தின் எந்த பதிப்பை பயன்படுத்துவோரும், அதில் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த இயலாது.
உலகம் முழுக்க வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்துவோர் எண்ணிக்கை சுமார் 150 கோடிக்கும் அதிகமாக இருக்கிறது. இந்தியாவில் மட்டும் இந்த செயலியை சுமார் 40 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். விண்டோஸ் போன் தவிர ஆண்ட்ராய்டு வெர்ஷன் 2.3.7 பதிப்பு, ஐ.ஒ.எஸ். 8 இயங்குதளம் கொண்ட சாதனங்களில் வாட்ஸ்அப் செயலியை பிப்ரவரி 1, 2020 முதல் பயன்படுத்த முடியாது.

சேவை நிறுத்தப்படும் பட்சத்தில் வாட்ஸ்அப் செயலியை தொடர்ந்து விண்டோஸ் போன் தளத்தில் பயன்படுத்த முடியும். எனினும், செயலிக்கான அப்டேட் மற்றும் பாதுகாப்பு பிழை எதுவும் சரி செய்யப்பட மாட்டாது.
"இந்த இயங்குதளங்களுக்கு நாங்கள் தொடர்ந்து பணியாற்ற முடியாது என்பதால், இவற்றில் உள்ள அம்சங்கள் எப்போது வேண்டுமானாலும் இயங்காமால் போகலாம்," என வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்தே வாட்ஸ்அப் செயலி மைக்ரோசாஃப்ட் ஸ்டோரில் டவுன்லோடு செய்ய கிடைக்காமல் இருந்தது. விண்டோஸ் போன் தளங்களின் மேம்பட்ட பதிப்பான விண்டோஸ் 10 சேவைக்கான ஆதரவு ஜனவரி 14, 2020 முதல் நிறுத்தப்பட இருக்கிறது. இதனால் இந்த தளத்திற்கு எவ்வித பாதுகாப்பு அப்டேட்களும் அடுத்த மாத துவக்கத்தில் இருந்தே வழங்கப்படாது.
ஃபேஸ்புக் நிறுவனத்தின் மெசஞ்சர் சேவையை இனிமேல் வாடிக்கையாளர்கள் அப்படி பயன்படுத்த முடியாது. முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஃபேஸ்புக் நிறுவனம் தனது மெசஞ்சர் சேவையில் வாடிக்கையாளர்கள் மொபைல் நம்பர் கொண்டு சைன்-அப் செய்யும் வசதியினை சத்தமில்லாமல் நீக்கி இருக்கிறது. இதனால் வாடிக்கையாளர்கள் இனி மெசஞ்சர் சேவையை பயன்படுத்த தங்களது ஃபேஸ்புக் அக்கவுண்ட்டினை பயன்படுத்த வேண்டியது அவசியம் ஆகியுள்ளது.
புதிய விதிமுறை ஃபேஸ்புக் மெசஞ்சர் மற்றும் மெசஞ்சர் லைட் சேவைகளுக்கும் பொருந்தும். புதிதாக மெசஞ்சர் சேவையை பயன்படுத்துவோர் இனி தங்களது ஃபேஸ்புக் அக்கவுண்ட் கொண்டு சைன் இன் செய்ய வேண்டி இருக்கும் ஃபேஸ்புக் நிறுவன செய்தி தொடர்பாளர் தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.
தற்சமயம் மெசஞ்சர் சேவையை ஃபேஸ்புக் அக்கவுண்ட் மூலம் சைன் இன் செய்தவர்களுக்கு எந்த மாற்றமும் ஏற்படாது. மேலும் அக்கவுண்ட் இல்லாமல் மெசஞ்சர் சேவையை பயன்படுத்துவோருக்கும் எந்த மாற்றமும் இருக்காது.

புதிய மாற்றம் காரணமாக சில வாடிக்கையாளர்கள் தங்களது ரெடிட் கணக்கில் மெசஞ்சர் சேவையை பயன்படுத்துவதற்கான வசதி நிராகரிக்கப்பட்டு விட்டதாக தெரிவித்து இருந்தனர். இவர்கள் செயலியில் ஏதேனும் பிழை அல்லது மாற்றம் செய்யப்பட்டு இருக்கலாம் என அவர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
ஃபேஸ்புக்கின் முன்னணி குறுந்தகவல் சேவைகளான மெசஞ்சர், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவற்றை ஒருங்கிணைக்கும் திட்டத்தின் கீழ் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் சேவை கட்டணத்தை உயர்த்தியதை தொடர்ந்து பிரீபெயிட் வாடிக்கையாளர்கள் ரூட்டை மாற்ற துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய டெலிகாம் சந்தையில் முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் சேவை கட்டணத்தை உயர்த்தியதை தொடர்ந்து பிரீபெயிட் வாடிக்கையாளர்கள் நீண்ட வேலிடிட்டி கொண்ட சலுகைகளுக்கு மாற்றாக மாதாந்திர ரீசார்ஜ் சலுகைகளை தேர்வு செய்ய துவங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
"மூன்று மாதங்கள் வேலிடிட்டி கொண்ட சலுகைகளுக்கு மாற்றாக ஒரு மாத ரீசார்ஜ் சலுகைகளை தேர்வு செய்யும் போது வாடிக்கையாளர்கள் 40 முதல் 50 சதவீதம் வரை கூடுடுதலாக செலவிட வேண்டும்" என தனியார் ஆய்வு மைய தலைவர் ராஜிவ் ஷர்மா தெரிவித்தார்.
எனினும், "இது டெலிகாம் நிறுவனங்களுக்கு நற்செய்தியாக இருக்கும். இதன் மூலம் ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து அவர்களுக்கு கிடைக்கும் வருவாய் அதிகரிக்கும். சரிவில் இருப்பதாக சொல்லப்படும் டெலிகாம் நிறுவனங்களுக்கு இது வருவாய் ஈட்டும் வகையில் அமைந்து இருக்கிறது" என அவர் மேலும் தெரிவித்தார்.

இதே நிலை தொடரும்பட்சத்தில் வாடிக்கையாளர்கள் எளிதில் மற்ற நெட்வொர்க்களுக்கு மாறும் நிலை அதிகரிக்கும் என்றும் டெலிகாம் துறை வட்டாரங்களில் கூறப்படுகிறது. தனியார் டெலிகாம் நிறுவனங்கள் வருடாந்திர சலுகையை தேர்வு செய்வோருக்கு அதிகளவு தள்ளுபடி மற்றும் இலவசங்களை வழங்கி வருகின்றன.
இதனாலேயே ரிலையன்ஸ் ஜியோ தனது ரூ. 2,199 சலுகையின் விலையை குறுகிய காலக்கட்டத்திற்கு ரூ. 2,020 என மாற்றி அமைத்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சலுகையில் ரிலையன்ஸ் ஜியோ தினமும் 1.5 ஜி.பி. டேட்டா, இலவச எஸ்.எம்.எஸ்., ஜியோ செயலிகளை இலவசமாக பயன்படுத்தும் வசதியினை 365 நாட்களுக்கு வழங்குகிறது.
இதே சலுகையை ரிலையன்ஸ் ஜியோ தனது ஜியோபோன் வாடிக்கையாளர்களுக்கும் வழங்கி வருகிறது. புதிதாக அறிவிக்கப்பட்ட ஜியோ புத்தாண்டு சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு ஜியோ எண்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 0.5 ஜி.பி. டேட்டா 365 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இத்துடன் ஜியோ செயலிகளுக்கான சந்தா மற்றும் எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவையும் வழங்கப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் XR மாடல் சர்வதேச விற்பனையில் 2019 மூன்றாவது காலாண்டில் முதலிடம் பிடித்துள்ளது.
சர்வதேச சந்தையில் 2019 மூன்றாவது காலாண்டில் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போனாக ஐபோன் XR இருக்கிறது. சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் ஐபோன் XR மூன்று சதவீத பங்குகளை கொண்டிருக்கிறது என கவுண்ட்டர்பாயின்ட் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2018 செப்டம்பர் மாதத்தில் வெளியான ஐபோன் XR 2018 நான்காவது காலாண்டில் இருந்து அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட்போனாக இருந்து வருவதாக கவுண்ட்டர்பாயின்ட்டின் மார்கெட் பல்ஸ் தெரிவித்துள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனையில் ஐபோன் XR மட்டும் நான்கில் ஒரு பங்கு இருந்துள்ளது. மேலும் அனைத்து பகுதிகளிலும் ஆப்பிள் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் சாதனமாக ஐபோன் XR இருந்திருக்கிறது. சீனா மற்றும் இந்தியா போன்ற சந்தையில் ஐபோன் XR விலை மாற்றப்பட்டது, விற்பனை அதிகரிக்க காரணமாக கூறப்படுகிறது.

வெளியான காலாண்டிலேயே ஐபோன் 11 டாப் 10 பட்டியலில் இடம்பிடித்து இருக்கிறது. சாம்சங் நிறுவனத்தின் மூன்று ஸ்மார்ட்போன்கள் டாப் 10 பட்டியலில் இடம்பிடித்து இருக்கின்றன. மூன்று சாதனங்களும் கேலக்ஸி ஏ சீரிஸ் மாடல்கள் ஆகும். சாம்சங் நிறுவனம் தனது ஜெ சீரிஸ் மாடல்களை நிறுத்திவிட்டு கேலக்ஸி ஏ மாடல்களை குறைந்த விலையில் அறிமுகம் செய்தது.
அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன்களின் டாப் 10 பட்டியலில் சாம்சங் நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் மாடல்கள் எதுவும் இடம்பிடிக்கவில்லை. ஒப்போ நிறுவனத்தின் மூன்று ஏ சீரிஸ் மாடல்கள் இந்த பட்டியலில் இடம்பிடித்து இருக்கின்றன.
பி.எஸ்.என்.எல். நிறுவன வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு சலுகையை அறிவித்துள்ளது.
ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனங்கள் தங்களின் பிரீபெயிட் சேவை கட்டணங்களை சமீபத்தில் உயர்த்தின. இதைத் தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ 2020 புத்தாண்டு சலுகையை அறிவித்தது. இந்த வரிசையில் பி.எஸ்.என்.எல். நிறுவனமும் புத்தாண்டு சலுகையை அறிவித்துள்ளது.
பி.எஸ்.என்.எல். ரூ. 1999 சலுகையில் கூடுதலாக 60 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. முன்னதாக இந்த சலுகையில் 365 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்பட்ட நிலையில், புத்தாண்டு சலுகையின் கீழ் வேலிடிட்டி 425 நாட்கள் கிடைக்கும்.

இந்த சலுகையில் தினமும் 3 ஜி.பி. டேட்டா, அனைத்து நெட்வொர்க்களுக்கும் வரம்பற்ற அழைப்புகள், தினமும் 100 எஸ்.எம்.எஸ்., பி.எஸ்.என்.எல். டியூன்ஸ், பி.எஸ்.என்.எல். டி.வி. சந்தா வழங்கப்படுகிறது. இந்த சலுகை இன்று (டிசம்பர் 25) துவங்கி ஜனவரி 31-ம் தேதி வரை வழங்கப்படுகிறது.
இதுதவிர பி.எஸ்.என்.எல். ரூ. 450 சலுகையில் ரூ. 500 டாக்டைம், ரூ. 250 சலுகையில் ரூ. 275 டாக்டைம் வழங்கப்படுகிறது. இந்த சலுகை ஜனவரி 2, 2020 வரை வழங்கப்படுகிறது.
இந்தியாவில் இணைய சேவை முடக்கப்பட்டதால் இந்தியாவுக்கு இத்தனை கோடிகள் இழப்பு ஏற்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.
இந்தியாவில் இணைய சேவைகள் முடக்கப்பட்டதால், டெலிகாம் ஆப்பரேட்டர்களுக்கு ஒவ்வொரு மணி நேரமும் ரூ. 2.45 கோடி வீதம் ஒவ்வொரு வட்டாரத்திற்கும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக இந்திய செல்லுலார் ஆப்பரேட்டர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்த கூட்டமைப்பில் பாரதி ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் ரிலையன்ஸ் ஜியோ போன்ற நிறுவனங்கள் இடம்பிடித்துள்ளன.
மத்திய அரசு சமீப காலங்களில் அடிக்கடி இணைய சேவையை முடக்கி வருகிறது. 2018-ம் ஆண்டில் மட்டும் 134 முறை இணைய சேவை முடக்கப்பட்டது. இந்த ஆண்டு இதுவரை சுமார் 104 முறை இணைய சேவை முடக்கப்பட்டு இருப்பதாக இணைய சேவை முடக்கஙகளை கணக்கிடும் வலைத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.

இதன் மூலம் ஒட்டுமொத்த இழப்பீடு டெலிகாம் நிறுவனங்களுக்கு மட்டுமே ஏற்படுவதாக கூறப்படுகிறது. பொது மக்களிடையே இணைய சேவை இன்றியமையாத ஒன்றாக மாறி வருகிறது. இணைய சேவையின்றி அன்றாட வாழ்வில் பெரும்பாலான பணிகளை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுதவிர நாட்டில் பெரும்பாலான சேவைகள் இணையம் சார்ந்து இயங்கி வருகின்றன. ஆன்லைன் சந்தைகள், கால் டாக்சி, உணவு டெலிவரி சேவை உள்ளிட்டவை இவற்றில் முதன்மையான ஒன்றாக இருக்கின்றன. அடிக்கடி இணைய சேவைகள் முடக்கப்படுவதால் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 3.67 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும் என இந்திய செல்லுலார் ஆப்பரேட்டர் கூட்டமைப்பின் நிர்வாக இயக்குனர் ராஜன் மேத்யூஸ் தெரிவித்து இருக்கிறார்.
2018-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் 2012 முதல் 2017 வரையிலான காலக்கட்டத்தில் சுமார் 16,000 மணி நேரங்கள் வரை இணைய சேவை முடக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. இதன் மூலம் இந்திய பொருளாதாரத்தில் சுமார் 21,000 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






