என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது ஜியோஃபைபர் பிராட்பேண்ட் சலுகைகளுக்கு 10 சதவீதம் கேஷ்பேக் வழங்குவதாக அறிவித்துள்ளது.



    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது ஜியோஃபைபர் பிராட்பேண்ட் நீண்ட கால சலுகைகளுக்கு கேஷ்பேக் சலுகையை அறிவித்துள்ளது. அதன்படி ஜியோஃபைபர் பிராட்பேண்ட் சேவையில் ஆறு மாதங்கள், 12 மாதங்கள் மற்றும் 24 மாத சலுகைகளை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 10 சதவீதம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இந்த சேவை பிரான்ஸ் சலுகையை தேர்வு செய்தோருக்கு பொருந்தாது.

    தேர்வு செய்யப்பட்ட வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்துவோருக்கு 10 சதவீதம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. ரிலையன்ஸ் ஜியோ ஃபைபர் பிராட்பேண்ட் சேவைகள் பிரான்ஸ், சில்வர், கோல்டு, டைமண்ட் மற்றும் பிளாட்டினம் சலுகைகளில் கிடைக்கிறது.

    ஜியோஃபைபர்

    புதிய கேஷ்பேக் சலுகை சில்வர் மற்றும் அதற்கும் அதிகமான சலுகைகளுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. சரியான பேமென்ட் முறைகளில் ஜியோஃபைபர் சேவைகளை ரீசார்ஜ் செய்யும் போது 90 நாட்களில் கேஷ்பேக் கிரெடிட் செய்யப்படும். பிரான்ஸ் சலுகை ஒருவருட வேலிடிட்டி கொண்டிருப்பதால், கேஷ்பேக் சலுகை பொருந்தாது.

    ஜியோஃபைபர் சலுகை இந்தியாவில் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. எனினும், செப்டம்பர் 5 ஆம் தேதி வரை இந்த சேவை வணிக ரீதியில் துவங்கப்படவில்லை. இந்த சேவையில் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 699 விலையில் 100mbps வேகத்தில் இணைய சேவையை வழங்குகிறது.

    இத்துடன் ஹெச்.டி. டி.வி. செட் மற்றும் இலவச லேண்ட்லைன் அழைப்புகள் வழங்கப்படுகிறது. மேலும் வங்கிகளுடன் இணைந்து மாத தவணை முறை வசதியும் வழங்கப்படுகிறது. இதை கொண்டு வாடிக்கையாளர்கள் வருடாந்திர சலுகைகளை தேர்வு செய்து அதற்கான கட்டணத்தை மாத தவணையில் செலுத்தலாம்.
    2020 ஆம் ஆண்டில் கூகுள் மற்றும் ஆல்ஃபாபெட் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை இந்திய மதிப்பில் ரூ.1705 கோடி பங்குதொகை பெற இருக்கிறார்.

    கூகுள் நிறுவனத்தின் தலைமை அதிகாரியான சுந்தர் பிச்சை. இவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர். தற்போது இவர் ஆல்ஃபாபெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக சமீபத்தில் நியமிக்கப்பட்டார்.

    இந்த நிறுவனம் கூகுளின் தாய் நிறுவனமாகும். ஆல்ஃபாபெட் நிறுவனத்தின் இணை நிறுவனர்களான லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆகியோர் தாங்கள் வகித்து வந்த தலைமை செயல் அதிகாரி பதவியை விட்டு விலகியதால் அதை சுந்தர்பிச்சை ஏற்றார். தற்போது அவர் ஆல்ஃபாபெட் மற்றும் கூகுள் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கிறார்.

    சுந்தர் பிச்சை 2020 ஆண்டுக்கு ரூ.14 கோடி சம்பளம் பெற இருக்கிறார். இது வருகிற 2020-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இத்துடன் சுமார் 1700 கோடி ரூபாயினை பங்கு தொகையாக பெற இருக்கிறார். பங்கு தொகை என்பது கூகுள் நிறுவனத்தின் பங்குகளை நிறுவன ஊழியர் குறிப்பிட்ட காலக்கட்டத்திற்கு வாங்கிக் கொள்வது ஆகும்.

    சுந்தர் பிச்சை


    மேலும் இவர் நேற்று முன்தினம் ரூ.639 கோடி (120 மில்லியன் டாலர்) பங்கு தொகை பெற்றார். இதற்கு முன்பு 2 தடவை தலா ரூ.852 கோடி (120 மில்லியன் டாலர்) மற்றும் ரூ.214 கோடி (30 மில்லியன் டாலர்) பங்கு தொகையை பெற்று இருக்கிறார்.

    சுந்தர்பிச்சை கூகுள் நிறுவனத்தில் கடந்த 2004-ம் ஆண்டு பணியில் சேர்ந்தார். கூகுள் டூல்பார் மற்றும் கூகுள் குரோமை வளர்ச்சி பாதையில் கொண்டு சென்றார். இதன் மூலம் கூகுள் நிறுவனம் சர்வதேச அளவில் மிகவும் பிரபலமானது. அதைதொடர்ந்து தனது கடின உழைப்பால் 2015-ம் ஆண்டில் கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார்.

    கடந்த 2017-ம் ஆண்டில் ஆல்ஃபாபெட் நிறுவனத்தில் இணைந்தார். இவரது தலைமையின் கீழ் கூகுள் நிறுவனம் வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது. சுந்தர் பிச்சை சென்னையை சேர்ந்தவர். சென்னை ஐ.ஐ.டி.யில் என்ஜினீயரிங் படித்தவர். ஸ்டேன்போர்டு பல்கலைக்கழகத்தில் பட்ட மேற்படிப்பு மேற்கொண்டார். வார்டன் பள்ளியில் எம்.பி.ஏ. பட்டம் பெற்றார்.
    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் சலுகைகளை பழைய விலையில் ரீசார்ஜ் செய்வது எப்படி என தொடர்ந்து பார்ப்போம்.



    ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்கள் பிரீபெயிட் சலுகைகளை பழைய விலையிலேயே வாங்க ஒரு வழிமுறை இருக்கிறது. முன்னதாக ஜியோ புதிதாக ஆல்-இன்-ஒன் பிரீபெயிட் சலுகைகளை அறிவித்தது. இவற்றில் சலுகைகளின் விலை உயர்த்தப்பட்டது. ஜியோ சார்பில் புதிய சலுகை பலன்கள் 300 சதவீதம் அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. எனனும், சலுகை விலை 40 சதவீதம் உயர்த்தப்பட்டது.

    தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் ஜியோ வாடிக்கையாளர்கள் பழைய சலுகைகளுக்கு ரீசார்ஜ் செய்ய முடியும். பழைய சலுகைகளுக்கு ரீசார்ஜ் செய்ய வாடிக்கையாளர்கள் எவ்வித சலுகையையும் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். 

    ரிலையன்ஸ் ஜியோ

    எவ்வித சலுகையும் பயன்படுத்தாத வாடிக்கையாளர்கள் ஜியோ வலைத்தளத்தில் லாக் இன் செய்ய வேண்டும். லாக் இன் செய்ததும், செட்டிங்ஸ் பகுதியில் டேரிஃப் ப்ரொடெக்‌ஷன் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இவ்வாறு க்ளிக் செய்ததும், பழைய ரீசார்ஜ் சலுகை பட்டியலிடப்படும். இவற்றில் ஒன்றை தேர்வு செய்து வாங்கிக் கொள்ள முடியும்.

    புதிய டேரிஃப் ப்ரொடெக்‌ஷன் ஆப்ஷன் எவ்வித சலுகையும் ரீசார்ஜ் செய்யாமல் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால் ஏற்கனவே ஜியோ சேவையை பயன்படுத்துவோர், பழையை சலுகைகளை ரீசார்ஜ் செய்ய முடியாது.
    ரெட்மி பிராண்டு புதிய ஸ்மார்ட்போன் ஹீலியோ ஜி70 பிராசஸர் கொண்டிருக்கும் என இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.



    ரெட்மி 9 ஸ்மார்ட்போன் வெளியாகி இரண்டு மாதங்களே ஆகியிருக்கும் நிலையில், ரெட்மி 9 ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

    புதிய விவரங்களில் சியோமி நிறுவனம் தனது பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன்களில் ஸ்னாப்டிராகன் சிப்செட்களுக்கு மாற்றாக மீடியாடெக் பிராசஸர்களை வழங்க முடிவு செய்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ரெட்மி 9 ஸ்மாரட்போனில் விரைவில் அறிமுகமாக இருக்கும் ஹீலியோ ஜி70 பிராசஸர் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    புதிய ஹீலியோ ஜி70 பிராசஸர் ஹீலியோ ஜி90 பிராசஸரின் கீழ் நிலைநிறுத்தப்படும் என தெரிகிறது. முன்னதாக வெளியான ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்டபோனில் முதல் முறையாக மீடியாடெக் ஹீலியோ ஜி90டி பிராசஸர் வழங்கப்பட்டது. இது கேமிங் பிரியர்களுக்கு என உருவாக்கப்பட்ட பிராசஸர் ஆகும்.

    ரெட்மி 8

    இதனால் ரெட்மி அறிமுகம் செய்ய இருக்கும் ரெட்மி 9 ஸ்மார்ட்போனில் ஹீலியோ ஜி70 பிராசஸர் வழங்கப்படும் என தெரிகிறது. மேலும் இதில் 6.7 இன்ச் டாட் நாட்ச் டிஸ்ப்ளே வழங்கப்படும் என கூறப்படுகிறது. முந்தைய ரெட்மி 8 ஸ்மார்ட்போனில் 6.22 இன்ச் ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருந்தது.

    இத்துடன் புதிய ரெட்மி 9 ஸ்மார்ட்போன் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மற்றும் 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி என இரண்டு வேரியண்ட்களில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஸ்மார்ட்போனின் மற்ற விவரங்கள் பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. எனினும், இதில் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, பின்புறம் கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்படலாம். புதிய ரெட்மி 9 ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 
    பெண்கள் பாதுகாப்பினை உறுதி செய்யும் நோக்கில் வெளியிடப்பட்டு இருக்கும் காவலன் எஸ்.ஓ.எஸ். செயலியை எப்படி பயன்படுத்த வேண்டும் என தொடர்ந்து பார்ப்போம்.



    தமிழகத்தில் பெண்களுக்கு ஆபத்து நேரத்தில் உதவுவதற்காக கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் காவலன் செயலி தொடங்கப்பட்டது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதனை அறிமுகம் செய்து வைத்தார். இருப்பினும் அது தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் உடனடியாக விழிப்புணர்வு ஏற்படவில்லை. இந்த நிலையில் தெலுங்கானாவில் இரவு பணியை முடித்துவிட்டு வீடு திரும்பிய பெண் டாக்டர் கற்பழித்து கொலை செய்யப்பட்டார்.

    இதனைத்தொடர்ந்து தமிழக போலீஸ் டி.ஜி.பி. கடந்த சில நாட்களுக்கு முன்பு காவலன் செயலி குறித்து விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட போலீஸ் அதிகாரிகளும் காவலன் செயலியை பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில் கூடுதல் கமி‌ஷனர்கள் பிரேம்ஆனந்த் சின்கா, தினகரன் ஆகியோரது மேற்பார்வையில் அனைத்து காவல் நிலையங்களிலும், இன்ஸ்பெக்டர்கள் காவலன் செயலி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து அதிக நேரம் பயன்படுத்தினால் அது உடலுக்கும் மனதுக்கும் நல்லதல்ல என்று டாக்டர்கள் எச்சரிக்கை விடுத்து வரும் சூழ்நிலையில் அந்த செல்போனை இப்போது பெண்களை காக்கும் கவசமாக மாறி இருக்கிறது. பெண்கள் தங்களின் செல்போனில் காவலன் செயலியை பதிவிறக்கம் செய்து வைத்துக்கொண்டால் ஆபத்தான நேரங்களில் உடனடியாக போலீசை உதவிக்கு அழைத்துகொள்ள முடியும்.

    காவலன் செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்ததும், காவலன் எஸ்.ஓ.எஸ். என்கிற பெயரில் செல்போனில் புதிய ஆப்ஷன் தோன்றும், அதில் சிகப்பு நிற பட்டன் போன்று காணப்படும் இடத்தில் அழுத்தினால் போதும் அடுத்த சில நிமிடங்களில் நீங்கள் இருக்கும் இடத்திற்கு போலீசார் உடனடியாக வருவார்கள்.

    காவலன் செயலியை பதிவிறக்கம் செய்வது எப்படி?

    செல்போனில் பிளே ஸ்டோர் சென்று காவலன் என்று டைப் செய்ய வேண்டும். செயலியை பதிவிறக்கம் செய்பவரின் பெயர், பிறந்த தேதி, முகவரி உள்ளிட்ட விவரங்கள் கேட்கப்படும். அதனை பதிவு செய்ததும், ரத்த உறவு சம்பந்தப்பட்ட இருவரின் தொலைபேசி எண்களையும் பதிவு செய்ய வேண்டும். 

    இதன்பிறகு 4 எண்கள் கொண்ட குறுஞ்செய்தி செல்போனுக்கு வரும் அதனை டைப் செய்ததும் காவலன் செயலி பதிவிறக்கம் செய்யப்பட்டுவிடும். நிமிடங்களில் காவலன் செயலியை மிகவும் எளிதாக யாருடைய துணையும் இன்றியே அனைவரும் பதிவு செய்து கொள்ளும் வகையில் உள்ளது.

    காவலன் எஸ்.ஓ.எஸ். செயலி

    பயன்படுத்தும் முறை

    ஆபத்து நேரும் போது ஸ்மார்ட்போனில் காவலன் செயலியை திறந்தது எஸ்.ஓ.எஸ். சிகப்பு நிற பட்டனை அழுத்த வேண்டும். இவ்வாறு அழுத்தியதும் பாதிக்கப்பட்ட பெண்ணின் முகவரி, தொலைபேசி எண், போன்ற விவரங்கள் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு சென்றுவிடும்.

    அடுத்த சில நிமிடங்களில் போலீசார் உதவிக்காக போன் செய்வார்கள். காவலன் செயலியில் உதவிக்காக மேலும் 2 எண்களையும் பெண்கள் பதிவு செய்து வைத்துக்கொள்ளலாம். சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து பற்றி உடனடியாக அந்த 2 செல்போன் எண்களுக்கும் குறுஞ்செய்தி சென்றுவிடும்.

    அந்த பெண்ணின் உறவினர்களும், போலீசாரும் உடனடியாக உதவிக்கு சென்று அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

    காவலன் செயலியை பயன்படுத்தும் போது பாதிக்கப்பட்ட பெண் இருக்கும் இடத்தை புகைப்படம் அல்லது வீடியோ எடுத்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பும் வசதியும் செயலியில் உள்ளது. இதன் மூலம் பாதிக்கப்படும் நபர் எந்த சூழ்நிலையில், எங்கு இருக்கிறார் என்பதையும் உடனடியாக அறிந்துகொள்ள முடியும். ஜி.பி.எஸ். உதவியோடு இந்த செயலி செயல்படுகிறது.
    ஒன்பிளஸ் நிறுவனம் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் கான்செப்ட் ஒன் பற்றிய அறிவிப்பை வெளியிடுகிறது.



    ஒன்பிளஸ் நிறுவனம் முதல் முறையாக சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் (சி.இ.எஸ். 2019) கலந்து கொள்ள இருக்கிறது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் இவ்விழா நடைபெற இருக்கிறது. 

    ஒன்பிளஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி பீட் லௌ வெளியிட்டுள்ள புதிய தகவல்களின் படி, ஒன்பிளஸ் தனது முதல் கான்செப்ட் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது. ஒன்பிளஸ் புதிய கான்செப்ட் ஸ்மார்ட்போன் ஜனவரி 7 முதல் ஜனவரி 10 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் அறிமுகம் செய்ய இருக்கிறது.

    ஒன்பிளஸ்

    புதிய கான்செப்ட் ஸ்மார்ட்போன் எதிர்கால சாதனம் என குறிப்பிட்டு இருக்கும் பீட் லௌ, இந்த ஸ்மார்ட்போன் எப்படி காட்சியளிக்கும் என்பது பற்றி இதுவரை எவ்வித தகவலையும் வழங்கவில்லை. முதல் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து ஆறு வருடங்கள் நிறைவுற்றதை ஒன்பிளஸ் கொண்டாடி வருகிறது.

    ஒரு வடிவமைப்பை இறுதிப்படுத்தும் முன் ஒன்பிளஸ் பல்வேறு ப்ரோடோடைப்களை உருவாக்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளது. எனினும், பொதுவெளியில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் முதல் கான்செப்ட் ஸ்மார்ட்போனாக இது இருக்கிறது. இந்த போனில் 5ஜி வசதி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ரியல்மி பிராண்டு இந்தியாவில் தனது வியாபாரத்தை துவங்கிய முதல் வருடத்திலேயே சுமார் 1.5 கோடி ஸ்மார்ட்போன்களை விற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.



    ரியல்மி பிராண்டு இந்தியாவில் தனது வியாபாரத்தை துவங்கிய முதல் வருடத்திலேயே சுமார் 1.5 கோடி ஸ்மார்ட்போன்களை விற்றுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த ஆண்டு விற்பனை இருமடங்கு உயரும் என எதிர்பார்ப்பதாக ரியல்மி தெரிவித்துள்ளது.

    சீனாவை சேர்ந்த ஸ்மார்ட்போன் நிறுவனமான ரியல்மி இந்தியாவில் மே 2018 இல் தனது வியாபாரத்தை துவங்கியது. துவக்கம் முதலே விற்பனையில் அசத்திய ரியல்மி பிராண்டு இந்தியாவின் முன்னணி ஸ்மார்ட்போன் பிராண்டுகளில் ஒன்றாக உருவெடுத்தது. மேலும் இந்திய சந்தையில் இந்நிறுவனம் சியோமி மற்றும் சாம்சங் பிராண்டுகளுக்கு போட்டியாளராகவும் பார்க்கப்படுகிறது.

    ரியல்மி 5எஸ்

    தற்போதைய நிலவரப்படி மூன்றாவது காலாண்டு வாக்கில் ரியல்மி பிராண்டு ஸ்மார்ட்போன் சந்தையில் நான்காவது இடத்தில் இருக்கிறது. விவோ மற்றும் ஒப்போ போன்று இல்லாமல் ரியல்மி பிராண்டு இந்திய சந்தையில் கணிசமான வரவேற்பினை துவக்கம் முதலே பெற்று வருகிறது.

    எனினும், ஒப்போ மற்றும் விவோ பிராண்டுகள் ஆஃப்லைன் விற்பனையில் கவனம் செலுத்தி வருகின்றன. சர்வதேச அளவில் வேகமாக வளர்ச்சி பெறும் ஸ்மார்ட்போன் நிறுவனங்களில் ரியல்மி பிராண்டு ஏழாவது இடத்தில் இருப்பதாக ரியல்மி நிறுவன தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத் தெரிவித்துள்ளார்.

    இந்தியாவில் துவங்கப்பட்ட ரியல்மி நிறுவனம் தற்சமயம் உலகம் முழுக்க சுமார் 20 நாடுகளில் வியாபாரம் செய்து வருகிறது. இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் ரியல்மி பிராண்டு மொத்தம் ஒரு கோடி ஸ்மார்ட்போன்களை விற்றுள்ளதாக கவுண்ட்டர்பாயின்ட் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
    ஆப்பிள் நிறுவனத்தின் 2020 ஐபோன் 5ஜி வேரியண்ட் விலை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

    ஆப்பிள் நிறுவனம் அடுத்த ஆண்டு நான்கு புதிய ஐபோன்களை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களில் நான்கு மாடல்களிலும் OLED டிஸ்ப்ளே வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    இவற்றுடன் தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் புதிய 2020 ஐபோன்களின் விலையை அதிக உயர்த்தாது என கூறப்படுகிறது. ஆப்பிள் நிறுவனம் அடுத்த ஆண்டு நான்கு 5ஜி ஐபோன்களை அறிமுகம் செய்யலாம் என ஆப்பிள் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

    ஐபோன்களில் 5ஜி சார்ந்த உபகரணங்கள் சாதனத்தின் விலையை உயர்த்த காரணமாக அமையும் என்ற நிலையிலும், புதிய ஐபோன் மாடல்களின் விலை அதிகளவு உயர்த்தப்படாது என தகவல்கள் வெளியாகி உள்ளது. 5ஜி உபகரங்கள் புதிய ஐபோன்களின் விலை 30 முதல் 100 டாலர்கள் வரை விலை உயர்வுக்கு வழிவகை செய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.

    ஐபோன்11


    புதிய ஐபோன் 12 சீரிஸ் மாடல்களில் ஆப்பிள் நிறுவனம் புதிதாக பேட்டரி பாதுகாப்பு மாட்யூல் ஒன்றை வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தற்போதைய மற்றும் பழைய ஐபோன்களில் பயன்படுத்தப்படுவதை விட 50 சதவீதம் சிறிய மற்றும் மெல்லியதாக இருக்கும் என கூறப்படுகிறது.

    அளவு குறையும் பட்சத்தில் பேட்டரி திறனும் அதிகரிக்கப்படலாம். அடுத்த ஆண்டு ஆப்பிள் அறிமுகம் செய்ய இருக்கும் ஐபோன்கள் 5.4 இன்ச், இரண்டு 6.1 இன்ச் மற்றும் 5ஜி வசதி கொண்ட மாடல் 6.7 இன்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.


    பெங்களூருவை சேர்ந்த ஒருவர் ஆன்லைனில் புதிய ஐபோன் முன்பதிவு செய்தார், அவருக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவத்தின் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    ஆன்லைன் வர்த்தக தளத்தில் ஐபோன் 11 ப்ரோ ஸ்மார்ட்போனினை முன்பதிவு செய்தவருக்கு போலி ஐபோன் வழங்கப்பட்டு இருக்கும் சம்பவம் பெங்களூருவில் அரங்கேறியிருக்கிறது.

    புதிய ஐபோன் 11 ப்ரோ வாங்க முடிவு செய்த பெங்களூரை சேர்ந்த ரஜனி காந்த் குஷ்வா ஸ்மார்ட்போனிற்கான முழு தொகையை (ரூ. 93,900) முன்கூட்டியே செலுத்தி இருக்கிறார். புதிய ஐபோன் விநியோகம் செய்யப்பட்ட காத்திருந்தவருக்கு ஐபோன் போன்றே காட்சியளிக்கும் சாதனம் விநியோகம் செய்யப்பட்டது.

    போலி ஐபோன் 11 ப்ரோ

    விநியோக பார்சலில் ஐபோன் போன்று காட்சியளிக்கும் மொபைலை பார்த்ததும் மகிழ்ச்சியடைந்த ரஜனி காந்த் அதனை இயக்க முற்பட்ட போது, புத்தம் புதிய விலை உயர்ந்த ஐபோனில் ஆண்ட்ராய்டு செயலிகள் இயங்குவதை பார்த்ததும், அதிர்ச்சியடைந்தார். 

    அதிர்ச்சியில் ஆன்லைன் வர்த்தக நிறுவனத்திடம் தான் ஏமாற்றப்பட்டதை ஆதங்கத்துடன் வெளிப்படுத்தினார் ரஜனி காந்த். ஆன்லைன் வர்த்தக நிறுவனம் ரஜனி காந்த்-க்கு புதிய ஐபோன் வழங்குவதாக உறுதியளித்து இருக்கிறது.

    ஆன்லைனில் பொருட்களை வாங்குவோர் ஏமாற்றப்படும் சம்பவங்கள் நாடு முழுக்க அவ்வப்போது நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது. 
    வாட்ஸ்அப் நிறுவனம் தனது செயலி குறிப்பிட்ட தேதிக்கு பின் இந்த ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்த இயலாது என தெரிவித்துள்ளது.



    உலகின் பிரபல குறுந்தகவல் செயலியாக வாட்ஸ்அப் இருக்கிறது. எளிமையான பயன்பாடு காரணமாக உலகம் முழுக்க பிரபலமாகி இருக்கும் வாட்ஸ்அப் செயலி ஐ.ஒ.எஸ். மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளங்களில் பயன்படுத்தப்படுகிறது.

    வாட்ஸ்அப் செயலியில் உள்ள எஸ்.எம்.எஸ்., வாய்ஸ் கால், வீடியோ கால் போன்ற அம்சங்களை கொண்டு பயனர்கள் உலகின் எந்த பகுதியில் இருப்பவரையும் இணைய வதியை பயன்படுத்தி மிக எளிமையாக தொடர்பு கொள்ள முடியும். 

    ஃபேஸ்புக்கின் வாட்ஸ்அப் செயலி பழைய ஆண்ட்ராய்டு, ஐஒஎஸ் மற்றும் விண்டோஸ் இயங்குதளங்களுக்கான சேவையை நிறுத்த போவவதை முன்கூட்டியே அறிவிக்கும் வழக்கத்தை வாடிக்கையாக கொண்டுள்ளது.

    வாட்ஸ்அப்

    அந்த வகையில் விரைவில் பல லட்சம் ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் சேவை நிறுத்தப்பட இருக்கிறது. அதன்படி 2020, பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் ஐ.ஒ.எஸ். 8 மற்றும் அதற்கு முன் வெளியான இயங்குதளங்களில் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த முடியாது.

    ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் 2.3.7 மற்றும் அதற்கும் முந்தைய பதிப்புகளில் வாட்ஸ்அப் செயலி இயங்காது. எனினும், வாடிக்கையாளர்கள் இந்த இயங்குதளங்களில் ஜனவரி 31, 2020 நள்ளிரவு 11.59 மணி வரை வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த முடியும்.

    ஆண்ட்ராய்டு பயனர்கள் தங்களது செயலியை அன்-இன்ஸ்டால் செய்யும் முன் அவர்களின் சாட் விவரங்களை பேக்கப் செய்து கொள்ள முடியம். சாட் பேக்கப் செய்ய வாட்ஸ்அப் - மோர் ஆப்ஷன்ஸ் - செட்டிங்ஸ் - சாட் - சாட் பேக்கப் - பேக்கப் போன்ற ஆப்ஷன்களை க்ளிக் செய்ய வேண்டும். 

    இதேபோன்று ஐபோன் பயனர்கள் சாட் பேக்கப் செய்ய வாட்ஸ்அப் - செட்டிங்ஸ் - சாட் - சாட் பேக்கப் போன்ற ஆப்ஷன்களை க்ளிக் செய்ய வேண்டும்.
    கூகுள் மேப்ஸ் ஐ.ஒ.எஸ். செயலியில் இன்காக்னிட்டோ மோட் வழங்கப்பட்டு வருகிறது. இதன் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    கூகுள் மேப்ஸ் செயலியின் ஆண்ட்ராய்டு வெர்ஷனில் சமீபத்தில் இன்காக்னிட்டோ மோட் வசதி வழங்கப்பட்டது. இந்த அம்சம் பயனரின் லொகேஷன் விவரங்கள் கூகுள் அக்கவுண்ட்டில் சேமிக்கப்படுவதை தடுக்கும் பணியை செய்கிறது. 

    தற்சமயம் இந்த அம்சம் ஐ.ஒ.எஸ். வெர்ஷனில் வழங்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து ஆண்ட்ராய்டு செயலியில் பல்க் டெலீட் ஆப்ஷன் அடுத்த மாதம் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

    ஐ.ஒ.எஸ். தளத்தில் இன்காக்னிட்டோ மோட் ஆண்ட்ராய்டில் இயங்குவதை போன்றே இயங்கும். இன்காக்னிட்டோ மோட் பயன்படுத்தும் போது பயனரின் லொகேஷன் விவரங்கள் கூகுள் சர்வரில் சேமிக்கப்படாது. மேலும் மேப்ஸ் செயலியில் வாடிக்கையாளர்கள் தேடிய இடமும் கூகுள் அக்கவுண்ட்டில் சேமிக்கப்படாது.

    கூகுள் மேப்ஸ் பல்க் டெலீட்

    ஆண்ட்ராய்டு செயலியில் கூகுள் நிறுவனம் டைம்லைன் தகவல்களை பல்க் டெலீட் செய்யும் அம்சத்தை வழங்க இருக்கிறது. டைம்லைன் அம்சம் வாடிக்கையாளர்கள் தங்களின் லொகேஷன் ஹிஸ்ட்ரியை பார்க்கும் நோக்கில் உருவாக்கப்பட்டது. இதை கொண்டு வாடிக்கையாளர்கள் அடுத்தடுத்த பயணங்களில் விரைந்து முகவரிகளை தேட முடியும்.

    விரைவில் வழங்கப்பட இருக்கும் புதிய பல்க் டெலீட் அம்சம் கொண்டு டைம்லைனில் உள்ள அனைத்து விவரங்களையும் வேகமாக டெலீட் செய்ய முடியும். ஐ.ஒ.எஸ். தளத்தில் கூகுள் மேப்ஸ் செயலியில் இன்காக்னிட்டோ மோட் பெற ஆப் ஸ்டோர் சென்று செயலியை அப்டேட் செய்ய வேண்டும்.
    ஏர்டெல் நிறுவனத்தின் வைபை காலிங் வசதி இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட்டது. இதன் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    ஏர்டெல் நிறுவனத்தின் வைபை காலிங் வசதி வோ வைபை பெயரில் இந்திய சந்தையில் அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட்டது. முதற்கட்டமாக இந்த சேவை டெல்லியில் துவங்கப்பட்டுள்ளது. புதிய வோ வைபை காலிங் சேவை வசதி கொண்ட சாதனங்களில் வாடிக்கையாளர்கள் அதிவேகமாக சீரான தரத்தில் அழைப்புகளை மேற்கொள்ள முடியும்.

    எனினும், இந்த சேவையை வாடிக்கையாளர்கள் ஏர்டெல் பிராட்பேண்ட் அல்லது ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஃபைபர் நெட்வொர்க்கில் இணைந்து இருக்கும் போது மட்டுமே பயன்படுத்த முடியும்.

    ஏர்டெல் வைபை காலிங் வேலை செய்யும் சாதனங்கள்:

    ஏர்டெல் நிறுவனத்தின் வைபை காலிங் சேவை தற்சமயம் ஐபோன் எக்ஸ்.ஆர்., ஐபோன் 6எஸ், ஐபோன் 6எஸ் பிளஸ், ஐபோன் 7, ஐபோன் 7 பிளஸ், ஐபோன் எஸ்.இ., ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ் , ஐபோன் எக்ஸ், ஐபோன் எக்ஸ்.எஸ்., ஐபோன் எக்ஸ்.எஸ். மேக்ஸ், ஐபோன் 11, ஐபோன் 11 ப்ரோ, ஒன்பிளஸ் 7, ஒன்பிளஸ் 7 ப்ரோ, ஒன்பிளஸ் 7டி, ஒன்பிளஸ் 7டி ப்ரோ, போகோ எஃப்1, ரெட்மி கே20, ரெட்மி கே20 ப்ரோ, சாம்சங் கேலக்ஸி ஜெ6, சாம்சங் கேலக்ஸி ஆன் 6, சாம்சங் கேலக்ஸி எம்30எஸ், சாம்சங் கேலக்ஸி ஏ10எஸ் போன்ற மாடல்களில் மட்டும் வேலை செய்யும்.

    ஏர்டெல் வோ வைபை

    இந்த அம்சத்தை ஆக்டிவேட் செய்வது எப்படி?

    ஆப்பிள் ஐபோன்களில் செட்டிங்ஸ் -- மொபைல் டேட்டா -- வைபை காலிங் ஆப்ஷன்களை எனேபிள் செய்ய வேண்டும்

    சாம்சங் ஸ்மார்ட்போன்களில் க்விக் செட்டிங்ஸ் -- வைபை காலிங் வசதியை ஆக்டிவேட் செய்யலாம்

    சியோமி ஸ்மார்ட்போன்களில் செட்டிங்ஸ் -- சிம் கார்டு மற்றும் மொபைல் நெட்வொர்க்ஸ் -- ஏர்டெல் -- மேக் கால்ஸ் ஆன் வைபை ஆப்ஷன்களை செயல்படுத்த வேண்டும்

    ஒன்பிளஸ் மாடல்களில் செட்டிங்ஸ் -- மொபைல் நெட்வொர்க் -- சிம் 1/2 -- வைபை காலிங் வசதியை ஆக்டிவேட் செய்து ஸ்மார்ட்போனினை ரீஸ்டார்ட் செய்ய வேண்டும்

    ஏர்டெல் வைபை காலிங் வசதி தற்சமயம் டெல்லியில் மட்டும் துவங்கப்பட்டு இருக்கும் நிலையில், மற்ற நகரங்களில் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ×