search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிளாஸ்டிக் கழிவுகள்"

    • பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்த நிலையில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
    • கொசு உற்பத்தி ஆகி சுகாதாரகேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் நகராட்சி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கப், ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை அதிகரித்து உள்ளன.

    மீண்டும் மஞ்சப்பை திட்டம் குறித்து அதிகாரிகள் பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்த நிலையில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து வருகிறது.

    பல்வேறு கடைகளில் ஓரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் சாலையோரம் கொட்டப்படுவதால் அவை அகற்றப்படாமல் குவிந்து கிடக்கிறது. காக்களூரில் உள்ள மதுக் கடை அருகே பிளாஸ்டிக் கப் மற்றும் பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் அகற்றப்படாமல் மாதக்கணக்கில் குவியல், குவியலாக உள்ளன. இதனால் அப்பகுதியில் கொசு உற்பத்தி ஆகி சுகாதாரகேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

    மேலும் தூக்கி வீசப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் நீர்நிலைகள் மற்றும் கால்வாய்களில் சேர்ந்து விடுவதால் கடும் சவாலாக மாறி உள்ளது. எனவே தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • தண்ணீர் இருபுறமும் கரைபுரண்டு ஓடி வரும்போது பிளாஸ்டிக் கழிவுகள் மிதந்தபடி வந்தன
    • கொட்டரம் பகுதியில் புத்தனாறு கால்வாயில் தூர்வாரும் பணி நடைபெற்றது

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டத்தில் உள்ள மிக நீளமான கால்வாயான நாஞ்சில் நாடு புத்த னாறு கால்வாய் எனப்படும் என்.பி.கால்வாய் இந்த ஆண்டு தூர்வாரப்படாமல் செடி, கொடிகள் வளர்ந்து தூர்ந்து போய் கிடந்தது. இந்த கால்வாய் தொடங்கும் சீதப் பால் அருகே உள்ள சாட்டுப்புதூர் பகுதியில் இருந்து கொட்டாரம் பகுதியில் உள்ள மேட்டுக்கால்வாய் மற்றும் பள்ளக்கால்வாய் பகுதி வரை 24 கிலோ மீட்டர் 560 மீட்டர் தூரம் வரை கால்வாயின் இருபுறமும் செடி, கொடிகள் அகற்றப்படாமலும் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்பட்ட நிலையிலும் பராமரிக்கப்படாமல் கிடந்தது.

    இந்த நிலையில் முதல் போக சாகுபடியான கன்னிபூ சாகுபடிக்காக பேச்சிப்பாறை அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் 1-ந்தேதி கொட்டாரம் புத்தனாறு கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆனால் 20 நாட்களுக்கு பிறகு தான் கொட்டாரம் பகுதியில் தண்ணீர் வந்து சேர்ந்தது. அதுவும் கொட்டாரம் பகுதியில் உள்ள புத்தனாறு கால்வாயில் தூர்வாரப்படாததால் தண்ணீர் இருபுறமும் கரைபுரண்டு ஓடி வரும்போது பிளாஸ்டிக் கழிவுகள் மிதந்தபடி வந்தன. இதனால் ஆங்காங்கே தண்ணீர் செல்ல முடியாமல் தடைப்பட்டு நின்றன. மேலும் கொட்டாரம் கடைவரம்பு பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு தண்ணீர் சரியாக வந்து சேர வில்லை. இதனால் கொட்டாரம் பகுதியில் முதல் போக கன்னிப்பூ சாகுபடி பணி தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர். இதைத்தொடர்ந்து கொட்டாரம் பகுதியில் உள்ள நாஞ்சில் நாடு புத்தனாறு கால்வாயில் அடைபட்டு நிற்கும் பிளாஸ்டிக் கழிவுகளை உடனடியாக அகற்றி கடை வரம்பு பகுதிகளுக்கு தண்ணீர் தடங்கல் இன்றி வந்து சேர பொதுப் பணித்துறை நிர்வாகம் அதிரடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. உட்பட அனைத்து விவசாயிகளும் கோரிக்கை விடுத்தனர்.

    அதன் பயனாக கொட்டரம் பகுதியில் புத்தனாறு கால்வாயில் தூர்வாரும் பணி நடைபெற்றது. இந்த தூர்வாரும் பணி நடைபெறு வதால் பேச்சிப்பாறை அணையில் இருந்து புத்தனாறு கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்படுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களுக்கு மேலாக புத்தனாறு கால்வாயில் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளதால் கொட்டாரம் பகுதியில் உள்ள கடை வரம்பு நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள நெல் பயிர்கள் தண்ணீர் இன்றி கருகிய நிலையில் காட்சியளிக்கின்றன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்த உள்ளனர்.

    • வணிக வளாகங்களில் இருந்து கொண்டு செல்லப்படும் குப்பைகள் சாலை ஓரங்களிலேயே கொட்டப்படுகிறது.
    • காற்றில் பறக்கும் குப்பைகள் வாகன ஓட்டிகள் மீது விழுவதால் விபத்துக்கள் ஏற்படும்.

    தென்காசி:

    தென்காசி புதிய பஸ் நிலையத்திலிருந்து மதுரையை நோக்கி செல்லும் சாலைகளின் இருபுறமும் வணிக வளாகங்கள் அதிக அளவில் பெருகி உள்ள நிலையில் வணிக வளாகங்களில் இருந்து கொண்டு செல்லப்படும் குப்பைகள் அனைத்தையும் சாலை ஓரங்களிலேயே கொட்டி வருவதால் குப்பை கழிவுகளால் துர்நாற்றம் வீசுவதோடு மட்டுமின்றி குப்பைகள் காற்றிலும் பறக்கின்றன. காற்று வேகமாக வீசும் பொழுது காற்றில் பறக்கும் குப்பைகள் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மீது விழுவதால் விபத்துக்கள் ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் தென்காசி-மதுரை சாலையில் குத்துக்கல்வலசை பகுதியில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • 19 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளன.
    • பலமீட்டர் தூரம் வரை சாலை ஓரங்களில் குவிந்து உள்ளது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் 19 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளன. பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக கொண்டு வர மாவட்ட நிர்வாகம் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    மாவட்ட எல்லைகளான பர்லியார், குஞ்சப்பனை சோதனை சாவடிகள், மாநில எல்லையில் உள்ள கக்கநல்லா, நாடுகாணி உள்ளிட்ட அனைத்து சோதனை சாவடிகளிலும் நீலகிரிக்கு வரும் வாகனங்களில் பிளாஸ்டிக் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுதவிர நீலகிரி மாவட்டத்தில் நகர்பகுதிகளில் தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டு பிளாஸ்டிக் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

    இந்த நிலையில் தமிழக கர்நாடக எல்லையான கக்கநல்லா.சோதனை சாவடியில் சோதனை செய்யப்பட்டது. இதில் பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பலமீட்டர் தூரம் வரை சாலை ஓரங்களில் குவிந்து உள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் முறையாக சேமித்து வைத்து அப்புறபடுத்தபடாத காரணத்தால் அடர்ந்த வனப்பகுதியில் பல மீட்டர் தூரத்திற்கு பரவலாக குவிந்து கிடக்கின்றன.

    இதில் தேங்கும் உணவை ருசிக்க அப்பகுதியில் உள்ள குரங்குகள் குப்பைத் தொட்டியைச் சுற்றி குவிகின்றன. இதேபோல சில சமயங்களில் மான்கள் உள்ளிட்ட வன விலங்குகள் குப்பைத்தொட்டியில் உணவு கிடைக்கும் என்று எதிர்ப்பார்த்து வருவதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் வனவிலங்குகளுக்கு ஆபத்து ஏற்படும் என வனவிலங்கு ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். இது பற்றி வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் கவலைபடுவதாக தெரியவில்லை என சுற்றுசூழல் மற்றும் வன ஆர்வலர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.

    • 19 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன.
    • பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் 19 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன.

    பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக கொண்டு வர மாவட்ட நிர்வாகம் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி மாவட்ட எல்லைகளான பர்லியார், குஞ்சப்பனை சோதனை சாவடிகள், மாநில எல்லையில் உள்ள கக்கநல்லா, நாடுகாணி உள்ளிட்ட அனைத்து சோதனை சாவடிகளிலும் நீலகிரிக்கு வரும் வாகனங்களில் பிளாஸ்டிக் கொண்டு வரப்படுகிறதா? என அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.

    இதுதவிர மாவட்டம் நீலகிரி மாவட்டத்திற்குள்ளும் நகர் மற்றும் பேரூராட்சி, கிராம பகுதிகளிலும் தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டு பிளாஸ்டிக் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. அப்படி யாராவது பிளாஸ்டிக் பயன்படுத் தினால் ஐகோர்ட்டு உத்தரவுப்படி பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தும் கடைகளுக்கு சீல் வைத்தும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    நீலகிரிக்கு வர கூடிய சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

    நீலகிரிக்குள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கொண்டும் வர வேண்டாம் என நீலகிரி மாவட்ட நிர்வாகம் கேட்டு கொண்டு உள்ளது. இருப்பினும் சில இடங்களில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து வருகிறது.

    குறிப்பாக கேரள எல்லை பகுதியான சேரப்பாடி பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து உள்ளது. மேலும் சேரங்கோடு ஊராட்சி பகுதிகளில் சாலை ஒரங்களில் அதிகளவிலான பிளாஸ்டிக் கழிவுகள் அதிகளவில் குவிந்து கிடக்கிறது. எனவே இதற்கு ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மாட்டின் வயிற்றுப்பகுதியில் செரிக்காத பிளாஸ்டிக், பாலித்தீன் பொருட்கள் இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது.
    • பசுவின் வயிற்றில் இரும்பு பொருட்கள், நாணயங்கள், ஆணி போன்றவையும் இருந்தன.

    மதுரை:

    மதுரை வடக்கு மாசி வீதியை சேர்ந்தவர் பரமேசுவரன். இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கிர் இனத்தை சேர்ந்த பசு ஒன்றை வாங்கினார். அந்த பசு, 2 மாதங்களுக்கு முன்பு கன்று ஈன்றது. அதன்பின்னரும், பசுவின் வயிறு பெரிதாக இருந்தது.

    எனவே பரமேசுவரன் சந்தேகம் அடைந்து, பசுவை மதுரை கால்நடைத்துறை பன்முக ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்.

    அந்த பசுவை கால்நடை மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். ஸ்கேன், எக்ஸ்ரே எடுத்ததில், மாட்டின் வயிற்றுப்பகுதியில் செரிக்காத பிளாஸ்டிக், பாலித்தீன் பொருட்கள் இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து அந்த பசுவிற்கு டாக்டர்கள் குழுவினர், அறுவை சிகிச்சை செய்தனர்.

    அந்த பசுவின் வயிற்றில் தேங்கி இருந்த பிளாஸ்டிக், பாலித்தீன் கழிவுகள் மொத்தமாக வெளியே எடுக்கப்பட்டன.

    சுமார் 65 கிலோ எடையில் அந்த கழிவு பொருட்கள் இருந்தன. மேலும் இரும்பு பொருட்கள், நாணயங்கள், ஆணி போன்றவையும் இருந்தன. இந்த அறுவை சிகிச்சையானது, சுமார் 4 மணி நேரத்திற்கு மேல் நடந்தது.

    அந்த பசுவும், அதன் கன்றும் மதுரை தல்லாகுளம் பன்முக ஆஸ்பத்திரியில் பராமரிக்கப்பட்டு நல்ல ஆரோக்கியத்துடன் நேற்று வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    • செரிமானமும் ஆகாமல், உணவு குழாயில் இருந்து வெளியில் வராமலும் பிளாஸ்டிக் கழிவுகள் கால்நடைகளின் வயிற்றிலேயே தங்கி விடுகின்றன.
    • காற்றில் பறக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் மேய்ச்சல் நிலங்களை முழுமையாக ஆக்கிரமித்து வருகின்றன.

    பல்லடம்:

    பிளாஸ்டிக் தடை உத்தரவை அதிகாரிகள் தீவிரப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது:-

    பல்லடம் சுற்று வட்டாரத்தில் பிளாஸ்டிக் தடை என்பது பெயருக்குத்தான் உள்ளது. எங்கெங்கு காணினும் பிளாஸ்டிக் கழிவுகள் கிடக்கின்றன. இதனால் சுற்றுச்சூழல் கேடு, நீர் வளம், நிலவளம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காற்றில் பறக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் மேய்ச்சல் நிலங்களை முழுமையாக ஆக்கிரமித்து வருகின்றன. விவசாயிகளின் உயிர்நாடியாகவும், குழந்தைகள், பெரியவர்களுக்கு பாலை வழங்கும் கால்நடைகள் பிளாஸ்டிக்கை உண்டு விடுகின்றன. இதனால் செரிமானமும் ஆகாமல், உணவு குழாயில் இருந்து வெளியில் வராமலும் பிளாஸ்டிக் கழிவுகள் கால்நடைகளின் வயிற்றிலேயே தங்கி விடுகின்றன.

    சிறிது, சிறிதாக பிளாஸ்டிக் கழிவுகள் சேரும்போது மாடுகள் சாப்பிட முடியாமல் பட்டினி கிடந்து பரிதாபமாக உயிரை விடுகின்றன. இதே நிலை தொடர்ந்து நீடித்தால் வாயில்லா ஜீவன்களான கால்நடைகளின் ஆயுள் குறைந்து அது சமூகம் மற்றும் பொருளாதார ரீதியாக பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • கோபிசெட்டிபாளையம் நகராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் தினமும் 18 டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்படுகிறது.
    • மக்காத கழிவுகளான பிளாஸ்டிக் பேப்பர் போன்றவற்றில் மறு சுழற்சிக்கு உதவாதவற்றை மாற்று எரிபொருளுக்காக சிமெண்ட் ஆலைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் நகராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் தினமும் 18 டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்படுகிறது.

    இதில் 12 டன் மக்கும் கழிவுகளை எந்திரத்தில் அரைத்து, தொட்டிகளில் நிரப்பப்பட்டு 40 நாட்கள் மக்கிய பிறகு அவற்றை குறைந்த விலைக்கு விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.

    மக்காத கழிவுகளான பிளாஸ்டிக் பேப்பர் போன்றவற்றில் மறு சுழற்சிக்கு உதவாதவற்றை மாற்று எரிபொருளுக்காக சிமெண்ட் ஆலைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    தற்போது 11 டன் பிளாஸ்டிக் கழிவுகள் சிமெண்ட் ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது வரையிலும் கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் இருந்து 2580 டன் பிளாஸ்டிக் கழிவுகள் மாற்று எரிபொருளுக்காக சிமெண்ட் ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • கடலூர் கலெக்டர் அலுவலக வளாகப் பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் ஆங்காங்கே குவிந்து கிடந்தது.
    • கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலு–வலக வளாகப் பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் ஆங்காங்கே குவிந்து கிடந்தன. இந்த நிலையில் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்று வந்தன. அப்போது கடலூர் மாவட்டத்திலிருந்து ஏராளமான பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தபோது, அலுவலக வளாகத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் குவிந்திருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    மேலும் பொதுமக்கள் வசிக்கக்கூடிய இடங்களில் குப்பைகள் அகற்ற வேண்டுமானால் அந்தந்த பகுதியில் உள்ள துப்புரவு ஊழியர்கள் அகற்றி செல்வது வழக்கம். ஆனால் அந்தப் பகுதிகளில் குப்பைகள் அகற்றவில்லை என்றால் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளிப்பதன் பேரில் குப்பைகள் அகற்றுவது அனைவரும் அறிந்ததாகும். ஆனால் மாவட்ட தலைநகரான கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் குவிந்துள்ள பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகளை ஏன் சரியான முறையில் அகற்றவில்லை என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

    மேலும் மாவட்டத்திற்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டிய கலெக்டர் அலுவலக வளாகத்தில் குவிந்துள்ள குப்பைகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அகற்றாதது ஏன்? என கேள்வி எழுப்பி உள்ளனர். ஆகையால் சம்பந்த–ப்பட்ட அதிகாரிகள் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகளை உடனடி–யாக அகற்றி சுகாதார–மாக பேணி காக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

    • டி.என்.பாளையம் அடுத்த கே.என்.பாளையம் வனச்சோதனை சாவடி முதல் கடம்பூர் வரை பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.
    • பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் பொருட்களை வனப்பகுதியில் வீச வேண்டாம் என்றும் வனத்துறையினர் அறிவுறுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் வனச்சரக மலைப்பகுதியில் யானை, காட்டெருமை, மான், சிறுத்தை, காட்டுப்பன்றி, உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

    கடம்பூர் மலை குடியிருப்பு பகுதிகளுக்கு செல்லும் இரு சக்கர வாகனங்கள் பஸ் உள்பட பல்வேறு வாகனங்களில் செல்லும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் தாங்கள் பயன்படுத்தும் தண்ணீர் பாட்டில்கள், பிளாஸ்டிக் பொருள்கள் போன்றவற்றை பயன்படுத்திய பிறகு வனப்பகுதிகளில் வீசி செல்கின்றனர்.

    இதை வனப்பகுதியில் வாழும் வனவிலங்குகள் சாப்பிட்டு செரிக்காமல் உடல் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழப்பும் நிகழ்கிறது, இதனை கருத்தில் கொண்டு வனவிலங்குகளை பாதுகாக்கும் வகையில், டி.என்.பாளையம் வனச்சரகம் சார்பில் பல்லுயிர் பாதுகாப்பு அறக்கட்டளை மற்றும் தமிழ் நாடு சிறப்பு இலக்குப் படை இணைந்து டி.என்.பாளையம் அடுத்த கே.என்.பாளையம் வனச்சோதனை சாவடி முதல் கடம்பூர் வரை பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.

    டி.என்.பாளையம் வனச்சரக அலுவலர் கணேஷ் பாண்டியன், நக்சல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசார், வனவர், வேட்டை தடுப்பு காவலர்கள் ஆகியோர் இணைந்து பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து கே.என்.பாளையம் பேரூராட்சி அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

    மேலும், வனச்சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள், பஸ் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் பொருட்களை வனப்பகுதியில் வீச வேண்டாம் என்றும் வனத்துறையினர் அறிவுறுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    • மீனவர்கள் மற்றும் குடும்பத்தினர் கடல் அன்னைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
    • கடல் நீரிலிருந்து பயோ டீசல் தயாரித்து கடல் வாகனங்களுக்கு வழங்க வேண்டும், பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் கலப்பதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும், கடலில் கழிவுகளை கலக்கும் ஆலைகளுக்கும், கப்பல்களுக்கும் எதிராக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், அந்த பகுதி மக்கள் உள்பட மீனவ பெண்கள் பலர் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி:

    உலகம் முழுவதும் ஜூன் 8 ம் தேதி உலக பெருங்கடல் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பு சார்பில் குளச்சல் கடற்கரையில் உலக பெருங்கடல் தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

    மீனவர்கள் மற்றும் குடும்பத்தினர் கடல் அன்னைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பு பொதுச்செயலாளர் அருட்பணி. சர்ச்சில் தலைமையில் மீனவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    உறுதிமொழியில் கடலில் பிளாஸ்டிக் கழிவுகள் கலப்பதை தடுப்போம், குப்பைகளை கடலில் கொட்ட மாட்டோம், கடலையும், கடல் உயிரினங்களையும் பாதுகாப்போம் என உறுதிமொழியில் கூறினர்.

    மேலும் கடல் நீரிலிருந்து பயோ டீசல் தயாரித்து கடல் வாகனங்களுக்கு வழங்க வேண்டும், பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் கலப்பதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும், கடலில் கழிவுகளை கலக்கும் ஆலைகளுக்கும், கப்பல்களுக்கும் எதிராக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், அந்த பகுதி மக்கள் உள்பட மீனவ பெண்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×