search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துரை வைகோ"

    • தமிழகத்தை பொறுத்தவரை மத்திய அரசு பாரபட்சமாக செயல்பட்டு வருகிறது.
    • திருச்சியில் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

    திருச்சி:

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க. திருச்சி தொகுதியில் போட்டியிடுகிறது. அத்தொகுதியில் ம.தி.மு.க. வேட்பாளராக துரை வைகோ களமிறங்கியுள்ளார். இதையடுத்து ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னத்தை பெற அக்கட்சி முயற்சித்தது. ஆனால் தலைமை தேர்தல் ஆணையம் ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னத்தை ஒதுக்கவில்லை. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், பாராளுமன்ற தேர்தலில் ம.தி.மு.க.விற்கு பம்பரம் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது. ம.தி.மு.க. 2010-ம் ஆண்டு அங்கீகாரத்தை இழந்து விட்டது. வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் இந்த வழக்கில் தீர்வு காண இயலாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

    இந்நிலையில், திருச்சியில் ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * பம்பரம் சின்னத்தை தர முடியாது என தேர்தல் ஆணையம் கூறிவிட்டது.

    * மேல்முறையீட்டுக்கு செல்லாம்... ஆனால் பிரசாரம் காரணமாக செல்லவில்லை.

    * இருக்கும் சின்னங்களில் ஒன்றை தேர்வு செய்வோம்.

    * சின்னம் கிடைக்காததால் எங்களுக்கு எந்த பின்னடைவும் இல்லை.

    * வேட்பாளர் யார், அவரின் சின்னம் என்ன என்பதை தெரிந்து கொண்டு வாக்களியுங்கள்.

    * தேர்ந்தெடுக்கும் புதிய சின்னத்தை மக்களிடம் விரைவில் கொண்டு செல்வோம்.

    * தமிழகத்தை பொறுத்தவரை மத்திய அரசு பாரபட்சமாக செயல்பட்டு வருகிறது.

    * திருச்சியில் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

    * சின்னம் குறித்து நாளை தெரியப்படுத்துவோம்.

    இவ்வாறு துரை வைகோ கூறினார்.

    • ஒருவேளை பம்பரம் சின்னம் கிடைக்காவிட்டால் மாற்று திட்டங்களும் வைத்துள்ளோம்.
    • சின்னம் மறுக்கப்பட்டது குறித்து இன்று மதியம் நீதிமன்றத்தில் மீண்டும் முறையிடுவோம்.

    திருச்சி:

    திருச்சி பாராளுமன்ற தொகுதி ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    "சின்னம் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக நடந்து கொள்கிறது. பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு அவர்கள் விரும்பும் சின்னம் ஒதுக்கப்படுகிறது. ஆனால் பிற கட்சிகள் வஞ்சிக்கப்படுகின்றன.

    தமிழகத்தில் நாம் தமிழர் கட்சிக்கும் கரும்பு விவசாயி சின்னம் தரவில்லை. அவர்கள் தேர்தலில் வெற்றி பெறாவிட்டாலும் கூட அந்த சின்னத்துக்கென தனி அடையாளத்தை உருவாக்கியுள்ளனர். அதுபோலவே இப்போது எங்களுக்கும் பம்பரம் சின்னத்தில் பிரச்சனை செய்கிறது. நல்ல தீர்ப்பு வரும் என நாங்கள் நம்புகிறோம்.

    ஒருவேளை பம்பரம் சின்னம் கிடைக்காவிட்டால் மாற்று திட்டங்களும் வைத்துள்ளோம். உதயசூரியன் சின்னத்தை மதித்தாலும், தனிச்சின்னத்தில் போட்டியிடுவதில் உறுதியாக உள்ளேன்.

    சின்னம் மறுக்கப்பட்டது குறித்து இன்று மதியம் நீதிமன்றத்தில் மீண்டும் முறையிடுவோம். புதிய சின்னம் கொடுத்தாலும் மக்களிடம் கொண்டு சேர்த்து வெற்றி பெறுவேன்.

    பம்பரம் சின்னம் மறுக்கப்பட்டதால் எங்களுக்கு எந்த பின்னடைவும் தற்போது இல்லை" என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • திருச்சி பாராளுமன்ற தொகுதியில் 16 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
    • ம.தி.மு.க. தவிர்த்து வேறு யாரும் பம்பரம் சின்னம் கேட்கவில்லை.

    திருச்சி:

    தமிழகத்தில் வருகிற 19-ந் தேதி பாராளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கு திருச்சி பாராளுமன்ற தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ சென்னை உயர்நீதிமன்றத்தில் தங்களுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க கோரி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது வைகோ தரப்பில் தங்கள் கோரிக்கையை ஏற்று கட்சி நிர்வாகிகளின் பெயர்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்த தேர்தல் ஆணையம் பம்பரம் சின்னம் ஒதுக்கீடு செய்யவில்லை என்றும், வேட்பு மனு தாக்கலுக்கு இன்று (புதன்கிழமை) கடைசி நாள் என்பதால் தங்கள் கோரிக்கையை பரிசீலிக்கும்படியும் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவித்தனர்.

    இதற்கு பதில் அளித்த தேர்தல் ஆணையம் சட்டப்படி அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிடும் பட்சத்தில் ஒரே சின்னம் ஒதுக்கப்படும் என தெரிவித்தார்.

    மேலும் 14 ஆண்டுகளுக்கு முன்பு அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட நிலையில் ம.தி.மு.க.வுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக சம்பந்தப்பட்ட தொகுதியில் தேர்தல் அதிகாரி தான் முடிவு எடுப்பார் என்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து திருச்சி தொகுதியில் போட்டியிடும் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் கேட்டு வழங்கப்பட்டுள்ள விண்ணப்பத்தின் மீது இன்று காலை 9 மணிக்குள் முடிவெடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    இது தொடர்பாக திருச்சி பாராளுமன்ற தொகுதி தேர்தல் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, நீதிமன்ற உத்தரவு காலை 11 மணிக்கு கிடைக்கப் பெற்ற பின்னர் முடிவு எடுக்கப்படும்.

    அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைகளுக்கு தேர்தல் ஆணையத்தில் 188 சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    அதில் பம்பரம் சின்னம் இல்லை. அதேபோன்று திருச்சி பாராளுமன்ற தொகுதியில் 16 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

    அதில் ம.தி.மு.க. தவிர்த்து வேறு யாரும் பம்பரம் சின்னம் கேட்கவில்லை. நீதிமன்ற உத்தரவுபடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    இதற்கிடையே இன்று தேர்தல் ஆணையம் பம்பரம் சின்னம் ஒதுக்கீடு இல்லை என ம.தி.மு.க. வழக்கறிஞர்களுக்கு மெயில் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான இறுதி முடிவு இன்று மாலைக்குள் வெளியாகும் என தெரியவருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தி.மு.க.வை பிளவுப்படுத்தி உருவான இயக்கம் ம.தி.மு.க. பல்வேறு கால கட்டங்களில் ஏற்பட்ட மனக்கசப்பை மறந்து மீண்டும் கூட்டணியில் இணைந்துள்ளோம்.
    • காங்கிரஸ் ஜெயித்த திருச்சி தொகுதியை ம.தி. மு.க.வுக்காக ஒதுக்கி கொடுத்துள்ளது மிகப்பெரிய விசயம்.

    சென்னை:

    திருச்சியில் ம.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் வைகோவின் மகன் துரை வைகோவை அறிமுகப்படுத்தும் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது.

    அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தி.மு.க. நிர்வாகிகள் பேசும்போது, பிரசாரத்திற்கு குறைந்த கால கட்டமே உள்ளதால் துரைவைகோ உதயசூரியன் சின்னத்தில் போட்டி யிட்டால் பிரசாரம் சுலபமாக இருக்கும். வெற்றி வாய்ப்பும் மிக பிரகாசமாக இருக்கும் என்று கருத்து தெரிவித்தனர்.

    இதற்கு பதில் அளிக்கும் வகையில் துரைவைகோ பேசுகையில், செத்தாலும் சொந்த சின்னத்தில்தான் போட்டியிடுவேன். பதவிக்காக வேறு சின்னத்தில் போட்டியிட விரும்பவில்லை என திடீரென ஆவேசப்பட்டு பேசினார்.

    துரை வைகோ உணர்ச்சி வசப்பட்டு குரலை உயர்த்தி பேசிய தருணத்தில் அமைச்சர் கே.என்.நேரு செல்போனை நோண்டிய படி இருந்தார். ஒரு கட்டத்தில் துரை வைகோ அழத் தொடங்கியதும் அமைச்சர் கே.என்.நேரு அதை பொருட்படுத்தாமல் அருகில் இருந்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழியிடம் ஏதோ கூறியபடி இருந்தார்.

    துரை வைகோ பேச்சு எரிச்சலூட்டும் வகையில் இருந்ததால் மேடையில் இருந்தவர்கள் தர்மசங்கடத்து டன் ஒன்றும் பேசாமல் இருந்தனர். இந்த கூட்டம் முடிந்ததும் தி.மு.க. நிர்வாகி கள் பலர் அமைச்சர்களிடம் தங்கள் அதிருப்தியை தெரிவித்தனர். தி.மு.க.வை பிளவுப்படுத்தி உருவான இயக்கம் ம.தி.மு.க. பல்வேறு கால கட்டங்களில் ஏற்பட்ட மனக்கசப்பை மறந்து மீண்டும் கூட்டணியில் இணைந்துள்ளோம்.

    இந்த தருணத்தில் துரை வைகோ தி.மு.க.வினரின் மனநிலையை புரிந்து கொள்ளாமல் அவர் இஷ்டத்துக்கு பேசுவதா? என்று ஆதங்கப்பட்டனர். இந்த விசயத்தில் அமைச்சர் கே.என்.நேரு வெளிப்படையாக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஆனாலும் அவரது முகபாவம் கடும் கோபத்தில் இருந்ததை காண முடிந்தது.

    தொலைக்காட்சியில் துரை வைகோவின் ஆவேசம் மாறி மாறி காண்பிக்கப்பட்டதால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முதற்கொண்டு பலரும் இதை பார்த்தனர்.

    திருச்சி தொகுதி தி.மு.க. வின் கோட்டையாக இருக்கும் சமயத்தில் தேவையில்லாமல் துரை வைகோ பேசியது இரு கட்சியினர் மத்தியிலும் கசப்புணர்வை ஏற்படுத்தி விடுமோ என கவலைப்பட்டார். இதனால் தனது கட்சிக்காரர்களை ம.தி.மு.க.வுடன் அனுசரித்து போகுமாறு அறிவுரை வழங்கி உள்ளார்.

    கூட்டணிக்கு எந்த பங்கமும் வந்துவிடக்கூடாது. நமது எண்ணம் எல்லாம் வெற்றியை நோக்கிதான் இருக்க வேண்டும் என்று மூத்த நிர்வாகிகளிடம் கூறியதாக தெரிகிறது.

    இதுகுறித்து தி.மு.க. நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

    தி.மு.க.வை உடைத்து ம.தி.மு.க. வெளியேறிய சமயத்தில் எவ்வளவோ சோதனைகள் ஏற்பட்டது. இழப்புகள் ஏற்பட்டது. அதையெல்லாம் எதிர்கொண்டு தி.மு.க.வை கட்டிக்காத்தவர்கள் கலைஞரும், தளபதியும்தான்.

    கால மாற்றத்தால் கசப்புணர்வுகளை மறந்து ம.தி. மு.க.வை சகோதர கட்சியாக அரவணைத்து கூட்டணியிலும் கழக தலைவர் தளபதி இடம்பெற செய்து உள்ளார். இந்த சூழ்நிலையில் தி.மு.க.வினருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் துரைவைகோ பேசுவது தேவைதானா? என்பதை அவர் சிந்திக்க வேண்டும்.

    காங்கிரஸ் ஜெயித்த திருச்சி தொகுதியை ம.தி. மு.க.வுக்காக ஒதுக்கி கொடுத்துள்ளது மிகப்பெரிய விசயம். அப்படி இருக்கும்போது செத்தாலும் பரவாயில்லை தனி சின்னம்தான் வேண்டும் என்று பேசினால் தி.மு.க. வினரின் மனது புண் படாதா? எனவே யாராக இருந்தாலும் யோசித்து பக்குவமாக பேச வேண்டும். அனைவரும் உழைத்தால்தான் வெற்றி பெற முடியும் இதுதான் உண்மை நிலை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதற்கிடையில் துரை வைகோ, அவ்வப்போது அரசியலை விரும்பவில்லை என்று கூறுவது அவருடன் உள்ள நிர்வாகிகளுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்துவதாக கட்சிக்காரர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

    இந்த நிலையில்தான் துரை வைகோ வேட்பு மனு தாக்கலுக்கு பிறகு நிருபர்களிடம் பேசும்போது, தி.மு.க.-ம.தி.மு.க. தொண்டர்களிடையே எந்த மனக்கசப்பும் ஏற்படவில்லை. நான் பேசியது உணர்ச்சிகளின் வெளிப்பாடு. இது இயல்பானது என்று கூறி உள்ளார்.

    • நான் அப்படி பேசியது உணர்வுகள், உணர்ச்சிகளின் வெளிப்பாடு. மனிதர்களிடம் இது இயல்பானது.
    • தேர்தல் கமிஷன் பா.ஜனதா அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

    திருச்சி:

    திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோ வேட்புமனு தாக்கல் செய்த பிறகு நிருபர்களிடம் கூறியதாவது:-

    என்னால் முடிந்தவரை திருச்சி தொகுதியில் மக்கள் பணியாற்றுவேன். தி.மு.க. முதன்மை செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேரு மற்றும் சகோதரர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அமைச்சர் ரகுபதி மற்றும் கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் ஒத்துழைப்புடன், வாழ்த்துகளுடன் எனது தேர்தல் பரப்புரையை தொடங்க உள்ளேன்.

    நேற்று முன்தினம் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் நடந்த சம்பவம் தி.மு.க. மற்றும் ம.தி.மு.க. தொண்டர்கள் இடையே மனக்கசப்பை ஏற்படுத்தியதாக சொல்கிறீர்கள். அப்படி எந்த மனக்கசப்பும் ஏற்படவில்லை.

    அதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். நான் அப்படி பேசியது உணர்வுகள், உணர்ச்சிகளின் வெளிப்பாடு. மனிதர்களிடம் இது இயல்பானது.

    இங்கு என்னுடன் வந்திருக்கும் தி.மு.க. நிர்வாகிகளை பார்த்தாலே உங்களுக்கு அது தெரியும். எங்களுக்குள் எந்த மனக்கசப்பும் இல்லை. இந்த சம்பவம் தொடர்பாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுடன் நான் பேசவில்லை.

    மனு தாக்கல் செய்ய வருவதற்கு முன்னர் அமைச்சர் கே.என்.நேருவை சந்தித்து வாழ்த்து பெற்றேன்.

    அப்போது வாசல் வரை வந்து என்னை வழி அனுப்பினார்.

    என்னை அவர் தனது மகனாக பாவித்து வெற்றி பெற்று நல்லபடியாக வரவேண்டும் என வாழ்த்தினார்.

    தேர்தல் கமிஷன் பா.ஜனதா அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. நாம் தமிழர் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் எங்கள் கட்சிக்கு (ம.தி.மு.க.) முறையான சின்னம் ஒதுக்கப்படவில்லை.

    இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பம்பரம் தவிர்த்து வேறு சின்னங்களும் கொடுத்துள்ளோம். நல்ல முடிவு கிடைக்கும் என நம்புகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தந்தையின் உடல்நலனைக் கருத்தில்கொண்டே அரசியலுக்கு வந்தேன்.
    • முன்னாள் முதல்வர் கருணாநிதியை, உதயசூரியன் சின்னத்தை நாங்கள் மதிக்கிறோம்.

    திருச்சி:

    திருச்சியில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுகக்கூட்டத்தில் அந்த தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை வைகோ பேசியதாவது:

    * அரசியலுக்கு வருவேன் என நான் கனவில் கூட எண்ணிப்பார்த்தது இல்லை.

    * தந்தையின் உடல்நலனைக் கருத்தில்கொண்டே அரசியலுக்கு வந்தேன். தந்தைக்கு தலைகுனிவு ஏற்பட்டுவிடக்கூடாது என அரசியலுக்கு வந்தேன் என்று உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கினார்.

    * செத்தாலும் எங்கள் சின்னத்தில்தான் போட்டியிடுவோம். நான் சுயமரியாதைக்காரன்.

    * முன்னாள் முதல்வர் கருணாநிதியை, உதயசூரியன் சின்னத்தை நாங்கள் மதிக்கிறோம்.

    * என் அப்பா இதே திமுகவில் உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட்டார்.

    * மதிமுக தொண்டர்கள் உழைத்து உழைத்து ஓடாக தேய்ந்துள்ளனர் என்று கூறினார்.

    • திருச்சி தொகுதியில் வைகோவின் மகன் துரை வைகோ போட்டியிடுகிறார்.
    • துரை வைகோவிற்கு கவிஞர் வைரமுத்து கவிதையில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க.வுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அத்தொகுதியில் வைகோவின் மகன் துரை வைகோ போட்டியிடுகிறார்.

    இந்நிலையில், துரை வைகோவிற்கு கவிஞர் வைரமுத்து கவிதையில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வைகோ எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    நாடாளுமன்றத் தேர்தலுக்கு

    வாழ்த்துப்பெற வந்தார்

    திருச்சி வேட்பாளர்

    தம்பி துரை வையாபுரி

    தீயின் பொறி

    திராவிட நெறி

    தேர்தலே வெறி

    திருச்சியே குறி

    நிறைவெற்றி காண்பார்

    துரை வையாபுரி

    இவ்வாறு வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.


    • துரை வைகோவை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று பெரும்பாலான நிர்வாகிகள் வலியுறுத்தினார்கள்.
    • தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க.விற்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது.

    சென்னை:

    தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க.விற்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது. திருச்சி தொகுதியை காங்கிரஸ் பிடிவாதமாக கேட்டதால் ம.தி.மு.க.விற்கு தொகுதியை இறுதி செய்ய முடியாமல் தாமதம் ஆனது. இறுதியில், திருச்சி தொகுதி ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், ம.தி.மு.க. நிர்வாகக்குழு கூட்டம் அவை தலைவர் அர்ஜூனமூர்த்தி தலைமையில் இன்று நடந்தது. பொதுச் செயலாளர் வைகோ மற்றும் மாநில நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.


    திருச்சி தொகுதியில் யார் போட்டியிட வேண்டும், பாராளுமன்ற தேர்தல் பணிகள், கூட்டணி கட்சிக்காக பிரசாரம் செய்தல் தொடர்பாக கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

    இறுதியில் துரை வைகோவை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று பெரும்பாலான நிர்வாகிகள் வலியுறுத்தினார்கள். இதனையடுத்து, திருச்சி தொகுதியில் ம.தி.மு.க. வேட்பாளராக அக்கட்சியின் முதன்மை செயலாளரான துரை வைகோ அறிவிக்கப்பட்டார்.

    • 5 மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் தேர்தல் நிதியாக சுமார் ரூ. 2½ கோடி வழங்கினர்.
    • பல்வேறு சிறப்பு அம்சத்துடன் கூடிய தமிழக பட்ஜெட்டை ம.தி.மு.க வரவேற்கிறது.

    நெல்லை:

    ம.தி.மு.க. நெல்லை மண்டலம் சார்பில் தேர்தல் நிதி மற்றும் கட்சி வளர்ச்சி நிதி வழங்கும் நிகழ்ச்சி நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் மஹாலில் இன்று நடைபெற்றது.

    இதில் ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளிடம் இருந்து தேர்தல் நிதியினை பெற்றுக் கொண்டார்.

    நிகழ்ச்சியில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், கன்னியாகுமரி உள்ளிட்ட 5 மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் தேர்தல் நிதியாக சுமார் ரூ. 2½ கோடி வழங்கினர்.

    நெல்லை மத்திய மாவட்டம் சார்பில் மட்டும் ரூ.35 லட்சம் நிதியாக வழங்கப்பட்டது. இதில் துணை பொதுச்செயலாளர் தி.மு.ராஜேந்திரன், மாவட்ட செயலாளர்கள் கே.எம்.ஏ. நிஜாம், புதுக்கோட்டை செல்வம், ஆர்.எஸ். ரமேஷ், சுதா பாலசுப்பிரமணியன், ராம.உதயசூரியன், வக்கீல் வெற்றிவேல், ரவிச்சந்திரன், வேல்முருகன், கண்ணன், பகுதி செயலாளர் பொன் வெங்கடேஷ், அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் கல்லத்தியான், செய்தி தொடர்பாளர் மின்னல் முகமது அலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் சமூக நீதி மற்றும் சமத்துவத்தை நிலை நாட்ட சிறப்பான பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ளார்.

    தமிழகத்தில் முழுமையாக வறுமையை ஒழிக்க தாயுமானவர் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. குடிசை இல்லா தமிழகம் என்ற திட்டத்தை நிறைவேற்ற கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் அமைக்க நடவடிக்கைகள் எடுக்க அரசு நிதி ஒதுக்கி உள்ளது.

    தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை உருவாக்குவதுடன் வேலை வாய்ப்பு உருவாக்க பல ஜவுளி பூங்காக்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு சிறப்பு அம்சத்துடன் கூடிய தமிழக பட்ஜெட்டை ம.தி.மு.க வரவேற்கிறது. மாற்றான் தாய் மனப் பான்மையுடன் மத்திய அரசு தமிழகத்தை நடத்தி வருகிறது. கடுமையான நிதி நெருக்கடி, மத்திய அரசின் குறுக்கீட்டை கடந்து தமிழக பட்ஜெட் அறிவிக்கப்பட்டுள்ளது.


    மத்திய அரசு போதுமான நிதியை ஒதுக்காத காரணத்தால் மாநில அரசே நிதி ஒதுக்கி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    தமிழகத்திற்கு பெரிய நிதி நெருக்கடி உள்ளது. மழை வெள்ளத்தால் தமிழகத்திற்கு ரூ. 37 ஆயிரம் கோடி நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மின்வாரியம் கடுமையான நஷ்டத்தில் இயங்குகிறது. கடந்த ஆண்டு மட்டும் 17 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டத்தை தமிழக அரசு தான் செலுத்தி உள்ளது.

    எதிர்கட்சிகளை தவிர அனைவரும் இந்த பட்ஜெட்டை பாராட்டுகின்றனர். மழை வெள்ள பாதிப்பு, ஜி.எஸ்.டி. வரி வருவாய் இழப்பு, நிலுவை தொகை வராதது போன்றவையே தமிழகத்தின் வருவாய் குறைய காரணம். நிதி பற்றாக்குறை தமிழகத்தில் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது.

    தமிழக அரசு, முதலமைச்சரின் சிறப்பான செயல்பாட்டால் தமிழகத்தில் உள்ள 39 தொகுதியிலும் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள்.

    விருதுநகர் தொகுதி, திருச்சி மையப்படுத்திய தொகுதி, சென்னையை மையப்படுத்திய தொகுதி, ஈரோட்டை மையப்படுத்திய தொகுதி என 4 பாராளுமன்ற தொகுதியில் ம.தி.மு.க. போட்டியிட வேண்டும் என தொண்டர்கள் விரும்புகிறார்கள்.

    எண்ணிக்கை முடிவான பின்னர் தொகுதி குறித்து ம.தி.மு.க. அறிவிக்கும். விருதுநகர் தொகுதியில் நான் (துரை வைகோ) போட்டியிட வேண்டும் என்பது ம.தி.மு.க. தொண்டர்களது விருப்பம்.

    கூட்டணி தலைவர்கள் எடுக்கும் முடிவை பொறுத்து வேட்பாளர் அறிவிப்பு இருக்கும். இந்த முறை எங்களது பம்பரம் சின்னத்தில் போட்டியிட தி.மு.க. தலைமையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திருச்சியில் மதிமுக போட்டியிட வேண்டும் என்று தோழர்கள் விருப்பம்.
    • தேர்தலில் எங்களுக்கு ஒதுக்கப்படும் தனிச் சின்னத்தில் போட்டியிட திமுக தலைமைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளோம்.

    திருச்சி:

    திருச்சி மத்திய மண்டல ம.தி.மு.க. சார்பில் பாராளுமன்ற தேர்தல் நிதி வழங்கும் விழா இன்று திருச்சியில் நடைபெற்றது. இதில் ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ கலந்து கொண்டார்.

    பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சட்டசபையில், கவர்னர் உரையை வாசிக்காமல் புறக்கணித்தது இதுவே முதல் முறை. தமிழ் தாய் வாழ்த்து பாடியதை தொடர்ந்து உரையும், நிறைவாக தேசிய கீதம் பாடுவதை அவர் முரண்பாடு என்கிறார்.

    அவரைப் பொறுத்தமட்டில் தொடக்கத்திலும் நிறைவிலும் தேசிய கீதம் பாட வேண்டும் என விரும்புகிறார்.

    கடந்த முறை தலைவர்கள் காமராஜர், அண்ணா, பெரியார், கலைஞர் ஆகியோர் பெயரை தவிர்த்து உரையை வாசித்தார். அதற்காக விளக்கத்தை கவனத்தில் அளிக்கவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த விடாமல் செய்து வருகிறார்.

    அவருக்கு கவர்னராக இருப்பதற்கான அடிப்படை தகுதி இல்லை. பா.ஜ.க., அரசின் பிரதிநிதி போல் செயல்படுகிறார்.

    தமிழகம் மட்டுமின்றி பா.ஜ.க. அல்லாத கேரளா, பஞ்சாப் போன்ற மாநில அரசுகளிலும் பா.ஜ.க அரசின் தலையீடு உள்ளது. லோக்சபா தேர்தலுக்காக, நெருடல் எதுவும் இல்லாமல் கூட்டணியில் செயல்பட்டு வருகிறோம்.

    நாடு முழுவதும் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் பெரும்பான்மை வெற்றி பெறுவோம் என்று பா.ஜ.க. கூறுவதும் தமிழ்நாட்டில் 20 சதவீத வாக்குகளை வாங்குவோம் என்று கூப்பிட்டாங்க சொல்வதும் மின்னணு வாக்குபதிவு எந்திரத்தில் ஏதேனும் முறைகேடு செய்வார்களோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

    18 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு, எரி பொருள் விலை குறைப்பு போன்ற வாக்குறுதிகள் பாஜக அரசு நிறைவேற்றப்படவில்லை. எரிபொருளுள் விலை உயர்வு தான் அனைத்து பொருட்களின் விலைவாசி உயர்வுக்கும் காரணம்.

    பல விஷயங்களில் சொல்வது ஒன்று செய்வது ஒன்றாக இருப்பதால், பாஜக மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். அதனால் இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்.

    திருச்சியில் மதிமுக போட்டியிட வேண்டும் என்று தோழர்கள் விருப்பம். கட்சித் தலைமையும் கூட்டணி தலைமையும் ஆணையிட்டால் திருச்சியில் போட்டியிடுவேன்.

    கடந்த முறை பாராளுமன்ற தேர்தலில் ஒரு மக்களவைத் தொகுதியும் ஒரு ராஜ்யசபா தொகுதியையும் மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. தற்போது கூடுதலாக ஒரு மக்களவைத் தொகுதி கேட்டிருக்கிறோம்.

    இன்னும் 10 நாட்களில் திமுக இறுதி முடிவு எடுக்கும். இந்த தேர்தலில் எங்களுக்கு ஒதுக்கப்படும் தனிச் சின்னத்தில் போட்டியிட திமுக தலைமைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளோம்.

    இதில் நல்ல முடிவை முதல்வர் எடுப்பார் என நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 4-ந்தேதி திமுக - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
    • தொகுதி பங்கீடு தொடர்பாக வருகிற 4-ந்தேதி மாலை திமுக - மதிமுக இடையே பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. முதலில் இந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியுடனான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி நாளை தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவுடன் பேச உள்ளது. வருகிற 3-ந்தேதி தி.மு.க.- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடையே பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. 4-ந்தேதி திமுக - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

    இந்நிலையில் திருச்சி தொகுதியில் மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ போட்டியிட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    தொகுதி பங்கீடு தொடர்பாக வரும் 4-ந்தேதி மாலை திமுக - மதிமுக இடையே பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. 2019 பாராளுமன்ற தேர்தலில் மதிமுகவுக்கு ஈரோடு தொகுதி ஒதுக்கப்பட்டிருந்தது.

    தற்போது மதிமுக திருச்சி தொகுதியை கேட்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மதிமுக அலுவலகத்தில் இன்று மாலை கட்சி நிர்வாகிகளோடு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆலோசனை நடத்த உள்ளார்.

    • தமிழக மக்களுக்கு பா.ஜ.க. மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கிறது.
    • மக்கள் பாதிப்பை வைத்து அரசியல் செய்யக் கூடாது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகளில் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு ம.தி.மு.க. சார்பில் நெல்லை மாவட்ட செயலாளர் நிஜாம் தலைமையில் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் ம.தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ கலந்து கொண்டு நிவாரண பொருட்களை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தென் மாவட்டங்களை பேரிடர் பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது. இந்த நேரத்தில் அரசியல் பார்க்காமல் மத்திய அரசு அதனை செய்திருக்க வேண்டும்.

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அடிப்படை கட்டமைப்பை சீர் செய்யவே பல்லாயிரம் கோடி ரூபாய் தேவைப்படுகிறது. மத்திய அரசு தற்போது வழங்கும் நிதியை வைத்து ஒன்றும் செய்ய முடியாது என்ற நோக்கில் தான் கூடுதல் நிதி மத்திய அரசிடம் தமிழக அரசு கேட்டது. ஆனால் இந்த விவகாரத்தில் பா.ஜ.க.வினர் அரசியல் பேசுகின்றனர்.

    மத்திய அரசு தற்போது ஒதுக்கிய நிதியை வைத்து மிச்சாங் சேதத்தை கூட சரி செய்ய முடியாது. மிச்சாங் புயல் சீரமைப்பு செய்ய தமிழக அரசு மத்திய அரசிடம் ரூ.19 ஆயிரம் கோடி கேட்டது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள சேதத்தை கணக்கிட்டால் பல்லாயிரம் கோடி ரூபாய் நிவாரணம் வழங்க தேவைப்படுகிறது. மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்காமல் இருந்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தமிழக அரசின் மீது கோபமடைந்து விடுவார்கள் என்ற எண்ணத்தில் மத்திய அரசு இதுபோன்று நினைக்கிறது.

    தமிழக மக்களுக்கு பா.ஜ.க. மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கிறது. தமிழக மக்கள் திராவிடத்தின் பின்னால் இருக்கின்றனர் என்ற எண்ணத்தை மனதில் வைத்து மத்திய பா.ஜ.க. அரசு இவ்வாறு செயல்படுவதாக தெரிகிறது.

    மக்கள் பாதிப்பை வைத்து அரசியல் செய்யக் கூடாது. அரசியல் ஒரு சாக்கடை என்பதை போல் பா.ஜ.க.வினர் செயல்படுகின்றனர். பா.ஜ.க.வினர் மழை வெள்ள பாதிப்பை வைத்து அரசியல் செய்து வருகின்றனர். அவர்களை விட்டு தள்ளுங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×