search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொள்ளை கும்பல்"

    • கொள்ளையர்கள் தமிழ்நாடு மட்டுமல்ல கேரளா, கர்நாடகா, ஆந்திரா என பல்வேறு மாநிலங்களிலும் கைவரிசை காட்டியிருக்கின்றனர் என்பது தெரியவந்துள்ளது.
    • கொள்ளை கும்பலுக்கு தலைவனாக செயல்பட்ட கேரளாவை சேர்ந்தவன் இதுவரை சிக்கவில்லை.

    தருமபுரி:

    காரிமங்கலம் அருகே 6 கிலோ தங்கம் கொள்ளையில் ஈடுபட்ட 9 பேரை போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் விசாரித்ததில் தொழிலதிபர்களை குறி வைத்து கொள்ளையடித்தது அம்பலமானது. மேலும், கைதான 9 பேர் மீது குண்டர் சட்டம் பாய்கிறது என்று போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.

    கோவையைச் சேர்ந்த நகை கடை உரிமையாளர் பிரசன்னா என்பவர் கடந்த மாதம் 28-ந்தேதி கர்நாடகாவில் இருந்து தங்க நகைகள் வாங்கி காரில் புறப்பட்டு கோவைக்கு வந்தார்.

    அவரை பின்தொடர்ந்து வந்த கொள்ளை கும்பல் ஒன்று தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த பூலாம்பட்டி அருகே, வண்டியை வழிமறித்து உள்ளே இருந்தவர்களை பயங்கர ஆயுதங்களுடன் தாக்கி காருடன் 5 கிலோ தங்கம் மற்றும் ரூ. 60 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

    இதனை அடுத்து நகை கடை உரிமையாளர் பிரசன்னா காரிமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த சேலம் சரக டி.ஐ.ஜி., ராஜேஸ்வரி மற்றும் தருமபுரி மாவட்ட போலீஸ் எஸ்.பி ஸ்டீபன் ஜேசுபாதம் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

    தொடர்ந்து இந்த வழக்கு சம்பந்தமாக கரூர் டி.எஸ்.பி. புகழேந்தி கணேஷ் தலைமையில் 10 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை நடைபெற்று வந்தது.

    அதில் அவர்கள் கொள்ளையடித்து தருமபுரி மாவட்டத்தில் பல பகுதிகளில் காரில் சுற்றி அலைந்து விட்டு மறுநாள் தப்பி சென்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் கடந்த 20 நாட்களுக்கு மேலாக தீவிரமாக பல்வேறு மாநிலங்களில் செல்போன் தொடர்பு எண்ணை வைத்து விசாரணை நடத்தியதில் இந்த கொள்ளை சம்பவத்தில் 15 பேர் ஈடுபட்டதும் அனைவரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. இதனை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சுற்றித் திரிந்த குற்றவாளிகளை 10 தனிப்படையினர் தொடர்ந்து தேடி வந்தனர்.

    இதில் சென்னையில் கடத்தப்பட்ட தங்கம் 6 கிலோ மற்றும் ரூ. 19.50 லட்சம் பணம் பிடிப்பட்டது. இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்த முக்கிய குற்றவாளிகள் சுஜித், சரத், பிரவீன் தாஸ், ஆகிய 3 பேரை கோவையில் கைது செய்தனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில் சிகாபுதீன், சைனு, அகில், சதீஷ் ஆகியோரை கைது செய்தனர்.

    இந்நிலையில் நேற்று வழக்கின் முக்கிய குற்றவாளிகளான அந்தோணி மற்றும் சீரல் மேத்யூ ஆகிய 2 பேரையும் போலீசார் சென்னையில் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து 9 குற்றவாளிகளிடம் இருந்து 4 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    கொள்ளையடிக்கப்பட்ட ரூ. 60 லட்சம் பணத்தில் இருந்து ரூ. 13 லட்சம் ரூபாய் மதிப்பில் சொகுசு கார் வாங்கியுள்ளனர். இதேபோல் வேறு ஒரு இடத்தில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட போது ஒரு கார் வாங்கியுள்ளனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 கார் என மொத்தம் 4 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இதனைத் தொடர்ந்து தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு கோவை மண்டல ஐ.ஜி பவானீஸ்வரி, சேலம் சரக டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி, ஆகியோர் நேரில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை பார்வையிட்டனர்.

    இதனை தொடர்ந்து கொள்ளையில் ஈடுபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள், நகைக்கடை வணிகர்கள், ஒப்பந்ததாரர்கள், தொழிலதிபர்கள் போன்றவர்களின் நடமாட்டத்தை கண்காணித்து திட்டம் போட்டு அவர்களிடம் கொள்ளையடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இவர்களின் செல்போன் அழைப்புகளை எளிதில் கண்டுபிடித்து விடாத படியான நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வந்துள்ளனர்.

    மேலும், இவர்கள் தமிழ்நாடு மட்டுமல்ல கேரளா, கர்நாடகா, ஆந்திரா என பல்வேறு மாநிலங்களிலும் கைவரிசை காட்டியிருக்கின்றனர் என்பது தெரியவந்துள்ளது.

    கொள்ளை கும்பலுக்கு தலைவனாக செயல்பட்ட கேரளாவை சேர்ந்தவன் இதுவரை சிக்கவில்லை. அவனை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இவர்கள் பணத்தை மட்டுமே குறி வைத்து திட்டமிட்டு கொள்ளையடித்து பங்கு பிரித்துக்கொண்டு தப்பி செல்லும் கும்பல் என்றும், பெங்களூரில் இருந்து வந்த காரில் பணம் மற்றும் தங்கம் இருப்பதை நோட்டமிட்டு அறிந்து கைவரிசை காட்டியிருக்கின்றனர்.

    உடனடியாக தங்கத்தை விற்றால் எப்படியும் பிடிபட்டு விடுவோம் என நினைத்து பதுக்கி வைத்திருந்தனர். அதனையும் போலீசார் மீட்டுள்ளனர்.

    தலைமறைவாகியுள்ள கும்பலின் முக்கிய தலைவன் உட்பட 6 பேரை பிடிக்க போலீசாரின் அதிரடி தேடுதல் வேட்டை தொடங்கியிருக்கிறது.

    கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள கொள்ளையர்கள் 9 பேர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    • கொள்ளை கும்பல் மாதத்தில் 30 நாட்களில் 20 நாட்கள் மட்டுமே திருடுவார்கள்.
    • கொள்ளை கும்பல், தாங்கள் கொள்ளையடித்த பணத்தை வைத்து இவர்கள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது.

    கோவை:

    கோவை மாநகரில் கடந்த சில நாட்களுக்கு முன் தொடர் செயின் பறிப்பு சம்பவம் நடந்து வந்தது. இது தொடர்பாக மாநகர போலீஸ் நிலையங்களில் 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

    இதையடுத்து போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நகை பறிப்பு திருடர்களை பிடிக்க உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் உதவி கமிஷனர் ரவி தலைமையில், இன்ஸ்பெக்டர் கண்ணையன், சப்-இன்ஸ்பெக்டர்கள் மாரிமுத்து, உமா, போலீசார் கார்த்தி, பூபதி, முத்துராமலிங்கம் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படை போலீசார் புகார்கள் வந்த பகுதிகளுக்கு சென்று அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். மேலும் மாநகரின் பல்வேறு இடங்களிலும் சாதராண உடையில் ரோந்து பணியிலும் ஈடுபட்டனர்.

    யாராவது சந்தேகத்திற்கிடமாக சுற்றி திரிந்தால் பிடித்து விசாரித்தும் வந்தனர். இந்த நிலையில் தனிப்படை போலீசாருக்கு நகை பறிப்பில் ஈடுபட்ட கும்பல் மருதமலை முருகன் கோவிலுக்கு வந்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.

    அந்த தகவலின் பேரில், தனிப்படை போலீசார் மருதமலை கோவில் பகுதியில் சாதாரண உடையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக சுற்றி திரிந்த 3 பெண்கள் மற்றும் ஒரு ஆண் என 4 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர்.

    அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளிக்கவே போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அப்போது அவர்கள் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த ரவி (வயது47). அவரது மனைவி பழனியம்மாள்(40), அவரது உறவினர்கள் வனிதா(37), நதியா (37) என்பதும், இவர்கள் கோவையில் குடும்பத்தோடு தொடர் நகைபறிப்பில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவர்களிடம் இவர்கள் வேறு எங்கு எல்லாம் கைவரிசை காட்டியுள்ளனர். திருடிய பணத்தை என்ன செய்தனர் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் இந்த கும்பலுக்கு மூளையாக செயல்பட்டது ரவி. ரவி தான் எங்கு திருட வேண்டும். எப்படி திருட வேண்டும். எந்த சமயத்தில் அந்த பகுதிக்கு செல்ல வேண்டும் என்றெல்லாம் திட்டம் போட்டு கொடுப்பார்.

    அவர் போட்டு கொடுக்கும் திட்டத்தின்படியே பெண்கள் 3 பேரும் திருட்டில் ஈடுபடுவார்கள். குறிப்பாக பொதுமக்கள் கூட்டம் அதிகம் உள்ள கோவில், பஸ் நிலையம், ரெயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளிலேயே தங்கள் கைவரிசையை காட்டி வந்துள்ளனர்.

    இந்த கொள்ளை கும்பல் மாதத்தில் 30 நாட்களில் 20 நாட்கள் மட்டுமே திருடுவார்கள். மற்ற 10 நாட்கள் தாங்கள் கொள்ளையடித்த பணத்தை கொண்டு பல்வேறு சுற்றுலா தலங்களுக்கும் சென்று வந்துள்ளனர். இதுவரை புதுடெல்லி, மும்பை, காஷ்மீர் என பல இடங்களுக்கு சென்று வந்துள்ளனர்.

    மேலும் இவர்கள் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றுவதற்கு முன்பாக கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டே கொள்ளை சம்பவத்தை நிகழ்த்தி வந்துள்ளனர்.

    இந்த கொள்ளை கும்பல், தாங்கள் கொள்ளையடித்த பணத்தை வைத்து இவர்கள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது. குறிப்பாக இந்த கொள்ளை சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட ரவிக்கு பெங்களூரில் ரூ.5 கோடி மதிப்பில் சொகுசு பங்களாவும், ஒரு காரும் உள்ளது. தாங்கள் கொள்ளையடித்த பணத்தில் தங்கள் பிள்ளைகளை டாக்டர் மற்றும் என்ஜினீயரிங் படிக்க வைத்ததும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் ரவி, பழனியம்மாள், நதியா, வனிதா ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். மேலும் இவர்கள் கோவை மட்டுமின்றி வேறு எங்காவது கைவரிசை காட்டி உள்ளனரா என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மூலக்கடை சந்திப்பு அருகே வேகமாக வந்த ஆட்டோவை நிறுத்தி அதில் இருந்த 5 பேரிடம் போலீசார் விசாரித்தனர்.
    • மூலக்கடை சந்திப்பு அருகே வேகமாக வந்த ஆட்டோவை நிறுத்தி அதில் இருந்த 5 பேரிடம் போலீசார் விசாரித்தனர்.

    மாதவரம்:

    மாதவரம் நடராஜன் நகரை சேர்ந்தவர் அமர்நாத் (27). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். கடந்த 2-ந்தேதி நள்ளிரவு கம்பெனிக்கு வெளியே நின்ற அவரை ஆட்டோவில் வந்த 5 பேர் கும்பல் சரமாரியாக தாக்கி செல்போனை பறித்து சென்றனர். துணை கமிஷனர் சக்திவேல், உதவி கமிஷனர் ஆதிமூலம் மற்றும் போலீசார் ஆட்டோ பதிவு எண்ணை வைத்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் மூலக்கடை சந்திப்பு அருகே வேகமாக வந்த ஆட்டோவை நிறுத்தி அதில் இருந்த 5 பேரிடம் போலீசார் விசாரித்தனர்.

    அவர்கள் ஏற்கனவே அமர்நாத்தை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து வழிப்பறியில் ஈடுபட்ட கொடுங்கையூரை சேர்ந்த புஷ்பராஜ், ஸ்ரீநாத், ஹரி, பிரகாஷ், அரவிந்த் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

    • போலீசார் வழக்கு பதிவு செய்து தம்பதியை தாக்கி நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
    • விவசாயியை தாக்கி நகைகளை கொள்ளை அடித்து சென்ற சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

    சின்னசேலம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் அருகே ஏர்வாய்பட்டினம் வடக்கு தெருவை சேர்ந்தவர் மணிவேல் (வயது 34).விவசாயம் செய்து வருகிறார்.

    இவரது மனைவி துர்கா. இவர்களுக்கு திருமணம் ஆகி 2 ஆண் பிள்ளைகள் உள்ளனர். இவர்களுக்கு அதே பகுதியில் 6 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இதில் நெல், மணிலா, உள்ளிட்டவைகளை பயிரிட்டு தனது முழுநேர வேலையாக விவசாயம் பார்த்து வந்தனர். இந்நிலையில் நேற்று விவசாய நிலத்திற்கு சென்று வேலை பார்த்து விட்டு இரவு உணவு முடித்துவிட்டு தூங்க சென்றனர். இவர்கள் வீடு சிறிய அளவிலானது.

    அதனால் வீட்டிற்குள்ளே ஏற்பட்ட புழுக்கத்தால் இந்த தம்பதி வீட்டின் முன்பக்க கதவை பூட்டி விட்டு பின் பக்க கதவை திறந்து வைத்து விட்டு தூங்கியுள்ளனர். நள்ளிரவில் அங்கு வந்த முகமூடி அணிந்த 4 மர்ம நபர்கள் வீட்டின் பின்புறம் நுழைந்து உள்ளே சென்றனர். பின்னர் வீட்டில் தூங்கி கொண்டிருந்த மணிவேலை அந்த கும்பல் கட்டையால் தாக்கி அவரை கட்டி போட்டனர். இதை பார்த்த மணிவேல் மனைவி துர்கா திருடன்.. திருடன்.. என கத்தினார். உடனே அந்த மர்ம கும்பல் நீ சத்தம்போட்டால் உன் கணவரை கொலை செய்து விடுவோம் என மிரட்டியுள்ளனர். இதனால் துர்கா அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் அந்த மர்ம கும்பல் துர்கா கழுத்தில் அணிந்திருந்த தாலி செயின், மற்றும் பீரோவில் இருந்த தங்க நகை உள்ளிட்ட 6 பவுன் தங்க நகையை கொள்ளை அடித்து சென்றனர். இதுகுறித்து மணிவேல் மற்றும் அவரது மனைவி துர்கா ஆகியோர் கச்சிராயபாளையம் போலீசில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் கச்சிராயபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து தம்பதியை தாக்கி நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    கொள்ளையர்கள் குறித்து துப்புதுலக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படையினர் தீவிர வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில் விவசாயியை தாக்கி நகைகளை கொள்ளை அடித்து சென்ற சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

    • பணத்துக்கு ஆசைப்பட்டு கொள்ளை கும்பலுடன் இணைந்த கவுரி
    • தலைமறைவாகி உள்ள மற்ற 4 பேரையும் பிடித்தால் தான் மேலும் பல தகவல்கள் தெரியவரும்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் வேதநகர் மேல புது தெருவை சேர்ந்தவர் முகமது உமர் சாகிப் (வயது 55). வெளிநாட்டில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    கடந்த ஆண்டு ஊருக்கு வந்த இவர், தற்போது இங்கு வசித்து வருகிறார். இவரது மனைவி ஜாஸ்மின். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். நேற்று முன்தினம் மாலையில் ஜாஸ்மின் அவரது மகள் மற்றும் மாமியார் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்றனர். வீட்டில் முகமது உமர் ஷாகிப் மட்டும் தனியாக இருந்தார்.

    அப்போது வீட்டிற்குள் புகுந்த கும்பல் முகமது உமர் சாஹிப்பை துப்பாக்கியை காட்டி மிரட்டினார்கள். பின்னர் அவரை கட்டிப்போட்டு விட்டு வீட்டில் இருந்த 20 பவுன் நகையை கொள்ளையடித்தனர். அப்போது வீட்டிற்கு வந்த ஜாஸ்மினை பார்த்து, கொள்ளை கும்பல் அங்கி ருந்து தப்பி ஓடி விட்டது. கொள்ளை கும்பல் வந்த காரையும், கொள்ளையில் ஈடுபட்ட ஒருவரையும் பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து முகமது உமர் ஷாகிப் கோட்டார் போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி னார்கள். பொதுமக்கள் பிடியிலிருந்து கொள்ளை யனையும், காரையும் மீட்டனர். பிடிபட்ட கொள்ளையனிடம் விசாரணை நடத்தியபோது கொள்ளையில் ஈடுபட்ட கும்பல் குறித்து முழு தகவலையும் தெரிவித்தார். அதன் அடிப்படையில் போலீ சார் கோவில்பட்டியை சேர்ந்த சார்லஸ், இட லாக்குடியை சேர்ந்த அமீர், கோட்டாரை சேர்ந்த மீரான், இடலாக்குடியை சேர்ந்த ரஹீம், அழகிய பாண்டிய புரத்தை சேர்ந்த கவுரி, இருளப்பபுரத்தை சேர்ந்த சாஹிப் முகைதீன், மைதீன் புகாரி ஆகிய 7 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.

    கொள்ளை வழக்கில் தொடர்புடைய ரஹீம், அமீர், கவுரி 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட வர்களிடம் இருந்து 10 பவுன் நகை மீட்கப்பட்டது. கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட ரஹீம் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் இருந்து வெளியே வந்துள்ளார்.

    கோட்டார் போலீஸ் நிலையத்தில் ரவுடிகள் பட்டியலிலும் ரஹீம் பெயர் இடம் பெற்றுள்ளது. அமீர் கொள்ளை சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டு உள்ளார். தலைமறை வாகியுள்ள மற்ற 4 பேரையும் பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    அவர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ள னர். கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது எப்படி? என்பது குறித்து போலீஸ் விசார ணையில் பரபரப்பு தகவல் கள் வெளியாகி உள்ளது. கைது செய்யப்பட்ட ரஹீம் வீட்டிற்கு கோவில்பட்டியை சேர்ந்த சார்லஸ் வந்து சென்றுள்ளார். அமீருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இவர்கள் சீக்கிரம் பணக்காரராக என்ன செய்யலாம் என்று ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.

    அப்போது அனைவரும் இணைந்து கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளனர். ஆண்கள் ஒன்றாக இணைந்து வீடுகளில் புகுந்து கொள்ளையடிப்பது கஷ்டம் என்பதால் பெண் ஒருவரையும் இந்த கூட்டத் தில் இணைத்து கொள்ள முடிவு செய்துள்ளனர். அப்போது அமீர் தனக்கு பழக்கப்பட்ட பெண் ஒருவர் இருப்பதாக கூறினார். அதன் அடிப்படையில் அழகிய பாண்டியபுரத்தை சேர்ந்த கவுரியை இணைத்துள்ளனர். கவுரி ஏற்கனவே வறுமையில் இருந்து வந்த நிலையில் இவர்கள் அவருக்கு ரூ.3000 பணம் தருவதாக கூறியுள்ளார்கள். இதையடுத்து கவுரி இதற்கு சம்மதம் தெரிவித்து அவர்களுடன் சென்றுள்ளார். கொள்ளை கும்பல், முகமது உமர் ஷாகிப் வீட்டுக்குள் கிரகப் பிரவேசத்திற்கு அழைப் பிதழ் கொடுப்பது போல் உள்ளே புகுந்து இந்த கைவரிசையில் ஈடுபட்டுள்ள னர்.

    தலைமறைவாகி உள்ள மற்ற 4 பேரையும் பிடித்தால் தான் மேலும் பல தகவல்கள் தெரியவரும். தப்பி சென்ற வர்கள் 10 பவுன் நகையையும் எடுத்துச் சென்றுள்ளனர். அதை மீட்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். முகமது உமர் ஷாகிப் வீட்டில் கொள்ளையர்கள் விட்டு சென்ற துப்பாக்கி பொம்மை துப்பாக்கி என்பதும் தெரியவந்துள்ளது.

    இந்த துப்பாக்கியை ஆன்லைனில் ஆர்டர் செய்து கொள்ளை கும்பல் வாங்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்கி டையில் கைது செய்யப்பட்ட ரஹீம், கவுரி ஆகிய 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். அமீர் சிகிச்சைக்காக ஆஸ்பத் திரியில் அனும திக்கப்பட்டுள்ளார்.

    கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட கவுரிக்கு கொள்ளை கும்பலுடன் பழக்கம் ஏற்பட்டது எப்படி என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது திடுக் தகவல் வெளியானது. கைதான கவுரி கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார். அவர் நில புரோக்கர் ஆவார். வெளிநாடுகளுக்கு செல்வோருக்கு விசா எடுத்து கொடுக்கும் ஏஜென்ட் ஆக இருந்து வந்துள்ளார்.

    கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அமீர் வெளிநாடு செல்வதற்காக விசா வேண்டி கவுரியை சந்தித்துள்ளார். இதுதான் அவர்களுக்குள் ஏற்பட்ட முதல் சந்திப்பாகும். பின்னர் இருவரும் நல்ல நட்புடன் பழகி வந்தனர். ஏற்கனவே கவுரியின் குடும்பம் சற்று வறுமையில் வாடியது. இதை அறிந்த அமீர் அவருக்கு ஒரு யோசனையை கூறியுள்ளார். நீ, நான் மற்றும் எனக்கு தெரிந்த சிலர் ஒரு குழுவாக கூட்டு சேர்ந்து வீடுகளில் கொள்ளையடிக்கலாம். இதன் மூலம் நமக்கு அதிக அளவு பணம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

    முதலில் கவுரி இதற்கு சம்மதிக்க மறுப்பு தெரிவித்துள்ளார். பின்னர் தனது குடும்பம் வறுமையில் வாடியதை எண்ணியதையடுத்து இதற்கு சம்மதம் தெரிவித்து இந்த கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. முதல் கொள்ளை சம்பவத்திலேயே கவுரி போலீசில் சிக்கிக்கொண்டார்.

    • போலீசார் விரைந்து வந்து மூதாட்டி கோமளாவை மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • விசாரணையில் நள்ளிரவில் கொள்ளைகும்பல் குடிசை வீட்டுக்குள்புகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு இருப்பது தெரிந்தது.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த சின்ன வேம்பாக்கம் ரெயில்வே சாலை அருகே குடிசை வீட்டில் தனியாக வசித்து வருபவர் கோமளா (வயது65). இவரது கணவர் ஏற்கனவே இறந்து விட்டார். இவர்களது மகள் திருமணமாகி கும்மிடிப்பூண்டியில் வசித்து வருகிறார்.

    நேற்று இரவு வழக்கம் போல் வீட்டை பூட்டி விட்டு கோமளா தூங்கினார். அதிகாலையில் அவர் நடை பயிற்சி செல்வது வழக்கம்.

    இந்தநிலையில் இன்று காலை நீண்ட நேரம் ஆகியும் கோமளா வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டுக்குள்சென்று பார்த்த போது கோமளா ரத்த காயத்துடன் மயங்கிய நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவரது முகம் தாக்கப்பட்டதால் வீங்கி இருந்தது.

    இதுகுறித்து பொன்னேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து வந்து மூதாட்டி கோமளாவை மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    விசாரணையில் நள்ளிரவில் கொள்ளைகும்பல் குடிசை வீட்டுக்குள்புகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு இருப்பது தெரிந்தது. சத்தம்கேட்டு கோமளா எழுந்ததும் அவரை மிரட்டி உள்ளனர்.

    பின்னர் வீட்டில் நகை-பணம் பெரிய அளவில் இல்லாததால் ஆத்திரம் அடைந்த கும்பல் கோமளாவை சரமாரியாக தாக்கினர். மேலும் அவர் அணிந்து இருந்த நகை, மோதிரம் உள்ளிட்டவற்றை பறித்து தப்பி சென்று இருப்பது தெரிந்தது.

    மூதாட்டி கோமளா தனியாக வசித்து வருவதை நோட்டமிட்டு மர்ம நபர்கள் இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டு உள்ளனர். இதில் ஈடுபட்டது அதே பகுதியை சேர்ந்த நபர்களாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    இதுகுறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொள்ளை கும்பல் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நாய்களில் ஒன்றை மர்ம நபர்கள் இறைச்சியில் விஷம் கலந்து கொன்றுள்ளனர்.
    • போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அனுப்பர்பாளையம் :

    அவிநாசி ஒன்றியம் சேவூர் அருகே தத்தனூர் ஊராட்சியில் உள்ள ஆனைக்கல் பாளையத்தை சேர்ந்தவர் குமார்,ஆட்டோ டிரைவர். கடந்த வாரம் இவரது வீட்டில் இருந்த நாய்களில் ஒன்றை மர்ம நபர்கள் இறைச்சியில் விஷம் கலந்து கொன்றுள்ளனர். நேற்று முன்தினம் மற்றொரு நாயை அதன் வாயில் கொடூர ஆயுதத்தால் வெட்டியுள்ளார்கள்.

    இதையறிந்த அவர் நாயை கால்நடை மருத்துவமனையில் கொண்டு சென்று சிகிச்சை அளித்தார். இது குறித்து சேவூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க சென்றபோது, நாய் வளர்ப்பதற்கு லைசன்ஸ் மற்றும் இன்சூரன்ஸ் வைத்திருந்தால் மட்டுமே புகாராக பதிவு செய்ய முடியும்.விசாரித்து நடவடிக்கை எடுக்கலாம் என போலீசார் கூறியுள்ளனர்.

    தத்தனூர் ஊராட்சியில் கடந்த ஒரு வாரமாக இரவு நேரத்தில் தொடர்ந்து ஒரு சிலரது வீட்டில் உள்ள ஆடு, கோழிகள் திருட்டு போய் உள்ளதாகவும், நாய்கள் இருந்தால் குரைத்து காட்டிவிடும் என்பதால் இது போன்ற வெறிச்செயல்களில் மர்ம நபர்கள் ஈடுபடுவதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர்.

    கடந்த மாதத்தில் போத்தம்பாளையம் கிராமத்தில் ஆடு, கோழிகள் தொடர் திருட்டு சம்பவம் நடைபெற்றது. அது குறித்து சேவூர் போலீஸ் நிலையத்தில் பொதுமக்களால் புகார் அளிக்கப்பட்டது. போத்தம்பாளையம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இறைச்சியில் விஷ மருந்து கலந்து ஆங்காங்கே வீசி சென்றனர். அதனை உண்ட 3 நாய்கள் இறந்தது. இது குறித்தும் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    இவ்வாறு கிராமப்பகுதிகளில் கால்நடைகளை திருடி செல்லும் கும்பல் வெறித்தனமாக வாயில்லா ஜீவன்களை கொன்றும், கொடூரமாக தாக்கும் செயலை தடுத்து நிறுத்த போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • விழுப்புரத்தில் மோட்டார் சைக்கிள் கொள்ளை கும்பல் கைது செய்யப்பட்டனர்.
    • சந்தேகிக்கப்படும் நபர்களை கண்காணிக்க அரகண்டநல்லூர் போலீசாருக்கு தனிப்படை போலீசார் அறிவுறுத்தினர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், முகையூர், திருக்கோவிலூர் போன்ற பகுதிகளில் அதிவேக மோட்டார் சைக்கிள்கள் தொடர்ந்து திருடு போய்கொண்டுள்ளது. இது தொடர்பாக 10-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவாகியுள்ளன. இதையடுத்து விழுப்புரம் மாவட்ட சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின் பேரில் உதவி சூப்பிரண்டு பார்த்திபன் தலைமையில் தனிப்படை அமை க்கப்பட்டது. இவர்கள் அதிவேக மோட்டார் சைக்கிள்கள் காணாமல் போன இடங்களை சுற்றியுள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர். தொடர்ந்து எந்தெந்த செல்போன் எண்கள் அப்பகுதிகளில் வந்து சென்றன என்பதையும் போலீசார் ஆய்வு செய்தனர். இதில் அரகண்டநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது தனிப்படைக்கு தெரி யவந்தது. சந்தேகிக்கப்படும் நபர்களை கண்காணிக்க அரகண்டநல்லூர் போலீசாருக்கு தனிப்படை போலீசார் அறிவுறுத்தினர்.

    அதன்படி காணை அடுத்துள்ள சித்தாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த 4 வாலிபர்களை ேபாலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். இவர்கள் அதிவேக மோட்டார் சைக்கிள்களை திருடிச் சென்று சென்னையில் விற்பதாகவும், இது கஞ்சா போன்ற போதை பொருட்கள் கடத்தலுக்கு பயன்படுத்தபடும் என்று தெரியவந்தது. மேலும், பிடிபட்ட வாலிபர்கள் 20 முதல் 25 வயதிற்கு உட்பட்டவர்களாவர். இவர்களும் போதைப் பொருட்களை உட்கொண்ட பிறகே அதிவேக மோட்டார் சைக்கிள்களை திருடியுள்ளனர். இந்த 4 வாலிபர்களும் ஒன்றினைந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 11 ்அதிவேக மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த கொள்ளைக்கும்பலிடம் போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சுற்றுலா செல்லும்போது அருகில் உள்ள மற்றொரு வீட்டில் உள்ளவர்களிடம் பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு சென்றுள்ளார்.
    • 50 பவுன் மற்றும் 10 லட்சம் ரொக்க பணத்தை மர்ம கும்பல்கள் திருடி சென்றுள்ளது தெரியவந்தது.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே லிங்கா ரெட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 49). இவர் வெளிநாட்டில் (துபாய்) தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த 30-ம் தேதி இவரது மனைவி கவுரி மகன் பாலகிருஷ்ணனுடன் உறவினர்களுடன் சேர்ந்து கன்னியாகுமரிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது கவுரி வீட்டில் நாய் ஒன்று வளர்த்து வந்தார். அந்த நாயை சுற்றுலா செல்லும்போது அருகில் உள்ள மற்றொரு வீட்டில் உள்ளவர்களிடம் பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு சென்றுள்ளார். அருகில் இருந்த வீட்டிலிருந்தவர் மறுநாள் காலை நாய்க்கு உணவளிக்க சென்றுள்ளார்.

    அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து சுற்றுலா சென்ற வீட்டின் உரிமையாளர் கௌரிக்கு தகவல் தெரிவித்தார். இதை கேட்ட கவுரி வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. பின் வீட்டில் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைந்து அதில் இருந்த வைர நகை தங்க நகை உள்ளிட்ட 50 பவுன் மற்றும் 10 லட்சம் ரொக்க பணத்தை மர்ம கும்பல்கள் திருடி சென்றுள்ளது தெரியவந்தது. இது குறித்து கவுரி பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் பண்ருட்டி டிஎஸ்பி சபியுல்லா இன்ஸ்பெக்டர் நந்தகுமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு கொள்ளை கும்பலை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வந்தனர். மேலும் அங்குள்ள சி.சி.டி.வி கேமரா காட்சிகள் மூலம் தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்த தேடுதல் வேட்டையில் பண்ருட்டி அருகே இந்த கொள்ளை சம்பந்தமாக 2 நபர்களை சந்தேகத்திற்கு இடமாக பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் நெல்லிக்குப்பம் எய்தனூர் குதியைச் சேர்ந்த செந்தில் முருகன் (வயது 24), மேல்பட்டாம்பாக்கம் செல்வமணி (23) என்றும், கவுரியின்வீடடில் திருடியதையும் ஒப்புக்கொண்டனர். இவர்கள் அளித்த தகவலின் பெயரில் இந்த கொள்ளைக்கு காரணமாக இருந்த உளுந்தூர்பேட்டை பகுதியை சேர்ந்த இளையபெருமாள் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட 50 பவுன் வைரம் தங்க நகைகள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இந்த கொள்ளையில் ஈடுபட்டு தலை மறைவாக உள்ள 2 நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். 

    2 பேர் வேகமாக பஸ்சில் ஏறி மேரியின் கைப்பையை கத்தியால் அறுத்து பையில் இருந்த 5 ஆயிரம் ரொக்க பணத்தை பறித்தனர்.

    விழுப்புரம்:

    தூத்துக்குடி மாவட்ட த்தை சேர்ந்தவர் மேரி (வயது 30) இவர் சென்னை கே.கே. நகரில் தங்கி அதே பகுதியில் உள்ள அழகு நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார்.நேற்று இரவு மேரி தனது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டத்திற்கு தனியார் பஸ்சில் சென்றார். அப்போது திண்டிவனம் அருகே சலவாதி பகுதியில் பஸ் வந்தபோது இரவு சாப்பிடுவதற்காக பஸ்சை சலவாதியில் அருகே உள்ள ஒரு ஓட்டலில் பஸ் டிரைவர் நிறுத்தினார்.

    அப்போது பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் இறங்கி ஓட்டலுக்கு சென்ற போது கடைசியாக மேரி இறங்கினார். திடீரென்று ஒரு காரில் 4 பேர் கொண்ட கும்பல் வந்தது. அவர்களில் 2 பேர் வேகமாக பஸ்சில் ஏறி மேரியின் கைப்பையை கத்தியால் அறுத்து பையில் இருந்த 5 ஆயிரம் ரொக்க பணத்தை பறித்தனர்.இதைப் பார்த்த மேரி அதிர்ச்சி அைடந்து திருடன் திருடன் என கத்தினார். இவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். அதற்குள் அந்த 2 பேரில் ஒருவன் தப்பி ஓடி விட்டான். மற்றொருவன் மேரியை தாக்கி விட்டு தப்பிஓட முயன்ற போது பொதுமக்கள் அவனை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

    இது குறித்து திண்டிவனம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல்அறிந்த திண்டி வனம்போலீஸ் ஏ.எஸ்பி.அபிஷேக்குப்தா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தி ற்கு விரைந்து சென்று அந்த நபரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டி வனம் அரசு ஆஸ்ப த்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர்.

    விசாரணையில் அவர்கள்மத்திய பிரதே சம்மனவர் தாலுகா கர்வா பகுதியை சேர்ந்த விவேர்கான் (வயது 29) இவனது கூட்டாளி களும் அதே பகுதியை சேர்ந்த வர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது. மேலும் போலீசார் தப்பியோடிய 4 மற்றும் இவர்கள் வேறுஎங்கேயாவது கொலை, கொள்ளையில் ஈடுபட்டனரா? என்பது குறித்துபோலீசார் கிடுக்கிப்பிடிவிசாரணை செய்துள்ளனர்.

    • மர்ம நபர்கள் சிலர் முகத்தை மூடியபடி கதவை உடைக்க முயன்றனர்.
    • காங்கேயம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

    காங்கயம் :

    திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே குருக்கபாளையம் பகுதியை சேர்ந்தவர் நல்லசிவம் விவசாயி. இவர் தோட்டத்தில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் நல்லசிவம் தனியாக வீட்டில் இருந்துள்ளார்.

    அப்போது இரவு 10 மணி அளவில் கத்தி மற்றும் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் கொள்ளை கும்பல் ஒன்று அவரது தோட்டத்திற்குள் புகுந்து வீட்டின் முன் கதவை உடைத்து உள்ளே செல்ல ஆயுத்த மாகியுள்ளனர். சில நபர்கள் நடமாடும் சப்தம் கேட்டு நல்லசாமி ஏதேச்சையாக ஜன்னல் வழியாக பார்த்துள்ளார். அப்போது மர்ம நபர்கள் சிலர் முகத்தை மூடியபடி கதவை உடைக்க முயன்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த நல்லசிவம் சுதாரித்து கொண்டு சப்தமிட்டு, செல்போன் மூலம் அருகில் இருந்த வீட்டினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் திரண்டு அங்கு வந்துள்ளனர். இதைப்பார்த்த அந்த கும்பல் தப்பியோடியுள்ளது. இதுகுறித்து நல்லசிவம் காங்கேயம் போலீசாருக்கு தகவல் அளித்தார். இதைத்தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் கண்காணிப்பை அதிகப்படுத்தியுள்ளனர்.

    சம்பவம் நடந்த பகுதிக்கு அருகே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தோட்டத்து வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை வெட்டி கொன்று நகை மற்றும் பணத்தை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் குறித்து இதுவரை எந்த துப்பும் கிடைக்கவில்லை. இதேபோல் காங்கேயம் அருகே உள்ள தம்மரெட்டிபாளையம் கிராமத்தை சேர்ந்த பழனிசாமி ,அவரது மனைவி ஆகியோரை கொன்று நகை கொள்ளையடிக்கப்பட்டது. 6 மாதங்கள் கடந்தும் இந்த இரட்டை கொலையிலும் இதுவரை குற்றவாளிகள் சிக்கவில்லை.

    இந்நிலையில் அதே பாணியில் மீண்டும் கொள்ளை முயற்சி நடந்துள்ளது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. காங்கேயம் துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் அப்பகுதியை சேர்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோருடனான கூட்டத்தை காவல் துறையினர் நடத்தியுள்ளனர். திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் விவசாய தோட்டங்களில் தனியாக வசிக்கும் வயதானவர்களை குறி வைத்து கொள்ளையில் ஈடுபடும் கும்பலை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.  

    • சிப்காட் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • அப்போது போலீசாரை பார்த்ததும் 2 மோட்டார் சைக்கிளில் சென்ற மர்மநபர்கள் தப்பிச்சென்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி சிப்காட் அருகே உள்ள தெற்கு சங்கரபேரி பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி. இவர் மதுரை ரோட்டில் சொந்தமாக லாரிகள் வைத்துள்ளார்.

    இவரது மகன் உத்தண்டு முருகன் (வயது22). இவர் நேற்று நள்ளிரவு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்றார். அவர் ஜோதிநகர் விலக்கு அருகே சென்ற போது பின்னால் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் அவரை திடீரென வழிமறித்தனர்.

    பின்னர் கத்தியை காட்டி அவரை மிரட்டிய கும்பல் மோட்டார் சைக்கிளை பறித்து சென்றனர். பின்னர் அந்த கும்பல் அருகில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு சென்று மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் நிரப்புமாறு கூறினர்.

    அவர்கள் மீது சந்தேகமடைந்த ஊழியர் பெட்ரோல் நிரப்ப மறுப்பு தெரிவித்தார். இதனால் ஆவேசமடைந்த கும்பல் அவரை அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

    தொடர்ந்து தூத்துக்குடி-நெல்லைசாலையில் சென்ற கும்பல் புதுக்கோட்டை பஜாரில் சென்ற ஒரு லாரியை மறித்து டிரைவரிடம் இருந்து செல்போனை பறித்து சென்றுள்ளனர்.

    இது தொடர்பாக சிப்காட், புதுக்கோட்டை, தட்டப்பாறை போலீசில் நிலையத்திற்கு அடுத்தடுத்து புகார்கள் சென்றனர்.

    உடனடியாக சிப்காட் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரை பார்த்ததும் 2 மோட்டார் சைக்கிளில் சென்ற மர்மநபர்கள் தப்பிச்சென்றனர்.

    இதில் ஒரு மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேரை போலீசார் விரட்டி சென்று பிடித்தனர். மற்ற 2 பேர் தப்பிச் சென்றுவிட்டனர். பிடிபட்டவர்கள் தூத்துக்குடி பிரைண்ட்நகர் 4-வது தெருவை சேர்ந்த சதீஷ் என்ற மோசஸ் (21), தூத்துக்குடி கட்டபொம்மன்நகர் குருவிரோட்டை சேர்ந்த கருப்பசாமி (19) என்பது தெரியவந்தது.

    2 பேரையும் கைது செய்த போலீசார், தப்பிச் சென்ற 2 பேர் யார்? ஒரேநாள் நள்ளிரவில் பல்வேறு நபர்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளதால் இவர்கள் இது போன்று வேறுஏதேனும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார்களா? என அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×