search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐகோர்ட் உத்தரவு"

    • தன் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் தனபால் பொய்யான தகவல்களை கூறி வருகிறார்.
    • கொடநாடு வழக்கில் சாட்சிகளை கலைத்ததாக கைது செய்யப்பட்ட தனபால், மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

    சென்னை:

    கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, சாலை விபத்தில் உயிரிழந்த கனக ராஜின் சகோதரர் தனபால், சமீப காலமாக, அந்த வழக்கு தொடர்பாக பேட்டி அளித்து, அதன் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

    கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு தடை விதிக்கக் கோரியும், ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்கக் கோரியும் முன்னாள் முதல்-அமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

    அந்த மனுவில், கட்சியின் பொதுச்செயலாளராக நான் பொறுப்பேற்றுள்ள நிலையில், தன் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் தனபால் பொய்யான தகவல்களை கூறி வருகிறார்.

    அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடை பெற உள்ள நிலையில் கட்சிக்கு மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கை குலைக்கும் நோக்கத்தில், தனது அரசியல் எதிரிகளின் தூண்டுதலால் தனபால் இதுபோல் பேட்டிகள் அளித்து வருகிறார்.

    கொடநாடு வழக்கில் சாட்சிகளை கலைத்ததாக கைது செய்யப்பட்ட தனபால், மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். எனவே, என்னை பற்றி பேச அவருக்கு தடை விதிக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.

    இந்த வழக்கை தொடர்வதற்கான அனுமதியை கோரிய மனு நீதிபதி ஆர்.என். மஞ்சுளா முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, வழக்கை தொடர்வதற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டு உள்ளார்.

    • மூன்றாம் பாலினத்தவர்கள் தங்கள் பாலினத்தை ஆணாகவோ, பெண்ணாகவோ தேர்வு செய்து கொள்ளலாம்
    • பழங்குடியின விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பு சலுகை வழங்கப்பட்டுள்ள நிலையில், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு, அதுபோன்ற எந்த சலுகையும் வழங்கப்படவில்லை.

    சென்னை:

    மூன்றாம் பாலினத்தவர்களான கிரேஸ் பானு மற்றும் ரிஸ்வான் பாரதி ஆகியோர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், "தமிழகத்தில் காவல் துறையில் காலியாக உள்ள 615 உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்று, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மே 5-ந்தேதி அறிவிப்பு வெளியிட்டது.

    அந்த அறிவிப்பில், மூன்றாம் பாலினத்தவர்கள் தங்கள் பாலினத்தை ஆணாகவோ, பெண்ணாகவோ தேர்வு செய்து கொள்ளலாம் எனவும், பெண்ணாக தேர்வு செய்தவர்களுக்கு மகளிருக்கான 30 சதவீத இட ஒதுக்கீடு பொருந்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பு சலுகை வழங்கப்பட்டுள்ள நிலையில், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு, அதுபோன்ற எந்த சலுகையும் வழங்கப்படவில்லை.

    அதேபோல உடற்தகுதித் தேர்விலும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சலுகை வழங்கப்படாததால், தேர்வு அறிவிப்பாணையை ரத்து செய்து, மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் சலுகைகளை வழங்கி புதிய அறிவிப்பு வெளியிட உத்தரவிட வேண்டும்.

    மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சிறப்பு இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    இந்த மனு தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வயது வரம்பு சலுகையும், சிறப்பு இட ஒதுக்கீடும் வழங்க வேண்டும் என ஐகோர்ட்டு பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    அந்த உத்தரவுகள் அனைத்தும் பரிந்துரைகள் போன்றவை எனத் தெரிவித்த நீதிபதிகள், மனுவுக்கு செப்டம்பர் 26-ந்தேதிக்குள் பதிலளிக்கும்படி அரசுக்கும், சீருடைப் பணியாளர் தேர்வாணையத்துக்கும் உத்தரவிட்டனர்.

    • பழனி கோவிலுக்கு தானமாக வழங்கப்பட்ட சொத்துக்களை கண்டறிந்து மீட்க அதிகாரிகள் கூட்டத்தை கூட்ட வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
    • வழக்கின் விசாரணையை நீதிபதி வரும் பிப்ரவரி 15-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.

    சென்னை:

    திண்டுக்கல் மாவட்டம் பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு, கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த பலர் 220 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கியுள்ளனர். இந்த நிலங்களை கண்டறிந்து மீட்கக் கோரி ராதாகிருஷ்ணன் என்பவர் கடந்த 2017-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    அவர் தாக்கல் செய்த மனுவில், பழனி கோவிலுக்கு தானமாக வழங்கப்பட்ட சொத்துக்களை கண்டறிந்து மீட்க பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் அடங்கிய குழுவை அமைத்து கோவை மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டிருந்ததாகவும், ஆனால் அதன் பின்னர் இந்த விவகாரத்தில் எந்தவொரு முன்னேற்றமும் இல்லை என்றும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனு ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்த போது, கோவிலுக்கு எழுதி வைக்கப்பட்ட சொத்துக்களை அடையாளம் கண்டு மீட்பது தொடர்பாக அதிகாரிகள் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று கோவை மாவட்ட கலெக்டருக்கு தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் கடிதம் அனுப்பிருப்பதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து இந்த கூட்டத்தை பிப்ரவரி 1-ந்தேதி முதல் 9-ந்தேதிக்குள் கூட்ட வேண்டும் என்று கோவை மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்ட நீதிபதி, இந்த சொத்துக்களை மீட்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து பிப்ரவரி 10-ந்தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை நீதிபதி வரும் பிப்ரவரி 15-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.

    ×