search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆறுமுகசாமி ஆணையம்"

    • நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்தி அறிக்கையை அரசிடம் கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்டு 23-ந் தேதி சமர்ப்பித்தார்.
    • ‘ஆணையத்தின் அறிக்கையின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் ஏற்கனவே சி.பி.ஐ.யிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். இவரது சாவில் மர்மம் உள்ளது என்று பலர் குற்றச்சாட்டு சுமத்தினர். அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அவருக்கு வழங்கப்பட்ட 75 நாட்கள் சிகிச்சைகளுக்கும், அவரது மரணம் குறித்த சந்தேகங்களுக்கும் விடைகாணும் வகையில் ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.ஆறுமுகசாமி தலைமையில் ஒருநபர் விசாரணை கமிஷனை அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தமிழ்நாடு அரசு 2017-ம் ஆண்டு அமைத்தது.

    அதன்படி, நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்தி அறிக்கையை அரசிடம் கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்டு 23-ந் தேதி சமர்ப்பித்தார்.

    அதில், ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக வி.கே.சசிகலா, டாக்டர் சிவக்குமார், சுகாதாரத்துறை முன்னாள் முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது தமிழ்நாடு அரசு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டி வேலூர், திருச்சி தினமலர் பதிப்பாளர் ஆர்.ஆர்.கோபால்ஜி சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

    அந்த மனுவில், 'ஆணையம் அறிக்கை தாக்கல் செய்து பல மாதங்களாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, நடவடிக்கை எடுக்க கோரி மத்திய, மாநில அரசுகளுக்கும், சி.பி.ஐ.க்கும் மனு கொடுத்தேன். இந்த மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்' என்று கோரியிருந்தார்.

    இந்த வழக்கு கடந்த மார்ச் மாதம் விசாரணைக்கு வந்தபோது, மருத்துவ ரீதியாக குற்றச்சாட்டுகள் உள்ளதால், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு சுகாதாரத்துறை ஆலோசித்து வருகிறது என்று அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

    இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் கொண்ட முதல் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கையின் அடிப்படையில் விசாரணை நடத்த சி.பி.ஐ.க்கு எந்த ஒப்புதலும் இதுவரை அரசு வழங்கவில்லை என்று கூறினார்.

    அதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், 'ஆணையத்தின் அறிக்கையின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் ஏற்கனவே சி.பி.ஐ.யிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த மனுவை சி.பி.ஐ., சட்டத்தின் அடிப்படையில் பரிசீலித்து தகுந்த முடிவை எடுக்க வேண்டும்' என்று உத்தரவிட்டனர்.

    • முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தியது.
    • விசாரணை முடிவில் 608 பக்கம் கொண்ட இறுதி அறிக்கை முதல்வர் ஸ்டாலினிடம் தாக்கல் செய்யப்பட்டது.

    சேலம்:

    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஆறுமுகசாமி விசாரணை ஆணையம், ஜெயலலிதாவின் பாதுகாவலர்கள், உறவினர்கள், சசிகலாவின் உறவினர்கள், ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள், அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், காவல்துறை உயரதிகாரிகள், போயஸ் கார்டனில் பணி செய்தவர்கள் என்று விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பெற்றது.

    இதையடுத்து, 608 பக்கங்கள் கொண்ட இறுதி அறிக்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தாக்கல் செய்யப்பட்டது. ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் அறிக்கை சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.

    இந்நிலையில் வழக்கறிஞர் தமிழ்மணி, ஜெயலலிதாவின் மரணம் குறித்து தெளிவுபடுத்த வேண்டும் என்று கேள்வி எழுப்பியதற்கு, முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தெரிவித்ததாவது:

    நான் அறிக்கை கொடுத்து 4 மாதங்களுக்கு மேலாகிறது. முன்னாள் முதலமைச்சர் மற்றும் ஒரு கட்சியின் தலைவரின் மரணம் என்பதால், இதுபோன்ற கேள்விகள் எழுகிறது. எனது அறிக்கையில் என்னால் முடிந்தது என்னவோ, கிட்டத்தட்ட எந்த சந்தேகமும் இல்லாமல் வழங்கியதால்தான் எந்தவித சர்ச்சையும் எழவில்லை. இந்த அறிக்கை குறித்து எந்தெந்த, என்னென்ன சந்தேகம் எழுந்ததோ, அதற்கு ஏற்கனவே பதில் அளித்துவிட்டேன்.

    ஜெயலலிதா மரணம் தொடர்பாக அந்த அறிக்கையில் நான் நிறைய எழுதியுள்ளேன். என்னுடைய அறிக்கையில் மருத்துவர்கள் சாட்சியம் அளித்ததை வைத்துதான் சொன்னேன். இன்னும் சொல்ல போனால் நான் எதையுமே அதிகமாக எழுதவில்லை. காரணம் இது மருத்துவம் சம்பந்தப்பட்டதாக இருக்கிறது. நான் எனது கருத்து என எதையும் சொல்லவில்லை.

    நீங்கள் கூறியதில் திருத்தம் உள்ளது. அதாவது ஜெயலலிதாவை சிபிஆர் செய்தது மருத்துவரோ நர்சோ இல்லை, அறுவை சிகிச்சை அறையில் பணியாற்றும் நபர்கள்தான். எம்பார்மிங் செய்ய கடிதம் கொடுத்தது இன்னொருவர். அவர் யார் என நான் சொல்ல முடியாது. எய்ம்ஸ் மருத்துவ ஆணையத்தை தவிர வேறு யாருக்குமே தனியாக கருத்து சொல்ல முடியாது என தெரிவித்தார்.

    • ஆணையம் யூகத்தின் அடிப்படையில் சொல்வதை எல்லாம் மக்கள் ஏற்கமாட்டார்கள்.
    • என்மீது சொல்லப்படுகின்ற குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுக்கிறேன் என்றார் சசிகலா.

    சென்னை:

    சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

    ஆணையம் யூகத்தின் அடிப்படையில் சொல்வதையெல்லாம் மக்கள் ஏற்கமாட்டார்கள்.

    என்னை அரசியலில் இருந்து ஓரங்கட்ட வேண்டும் என்றால் அதற்கு எத்தனையோ வழிகளை தேர்ந்தெடுத்து இருக்கலாம். அதற்கு அம்மா அவர்களின் மரணத்தை சர்ச்சை ஆக்கியது தான் மிகவும் கொடுமையானது.

    புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மரணத்தை சர்ச்சையாக்கி, அதற்காக ஒரு விசாரணை ஆணையம் நீதியரசர் ஆறுமுகசாமி அவர்கள் தலைமையில் அமைத்து, அதன் அறிக்கையும் அரசியலாக்கி விட்டார்கள்.

    இந்த ஆணையத்தின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது போல் புரட்சித்தலைவி அம்மாவின் மருத்துவ சிகிச்சையில் ஒருபோதும் நான் தலையிட்டதில்லை. அவ்வாறு கருத்துக்களை சொல்லக்கூடிய அளவுக்கு மருத்துவ படிப்பு நான் படித்தது கிடையாது. எந்த விதமான பரிசோதனைகள் செய்ய வேண்டும், எந்த எந்த மருந்துகள் தர வேண்டும் என்கிற முடிவை மருத்துவ குழுவினரே தான் முடிவெடுத்து உரிய சிகிச்சைகளை வழங்கினார்கள்.

    அக்கா உடல்நிலை சம்பந்தப்பட்ட பரிசோதனைகளை அப்பல்லோ மருத்துவமனையில் செய்து இருந்தோம். இதன் காரணமாகத்தான் அந்த மருத்துவமனையை தேர்ந்தெடுத்து அம்மா அவர்களை சிகிச்சை அளிக்க அங்கு கொண்டு சென்றோம் வெளிநாடு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க நான் என்றைக்குமே தடையாக இருந்தது இல்லை.

    ஆணையம் யூகத்தின் அடிப்படையில் சொல்வதையெல்லாம் மக்கள் ஏற்கமாட்டார்கள். எனவே, என் மீது சொல்லப்படுகின்ற குற்றச்சாட்டுகளை நான் முற்றிலும் மறுக்கிறேன். இது தொடர்பாக என்னிடம் எந்த வித விசாரணை நடத்தினாலும் அதை சந்திக்க தயாராக இருக்கிறேன்.

    நம் அம்மா அவர்களை அரசியல் ரீதியாக எதிர்க்கக்கூட துணிவில்லாதவர்கள் அவர்களின் மரணத்தை அரசியலாக்கி வேடிக்கை பார்க்கும் அற்பத்தனமான நிலையை யாரும் இனிமேல் ஆதரிக்கமாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.

    • 2012 பொதுக்கூட்டத்தில் சசிகலா குடும்பத்தினரை தொடர்பு கொள்ள வேண்டாம் என கட்சி உறுப்பினர்களை ஜெயலலிதா எச்சரித்துள்ளார்.
    • உறுதிமொழி கடிதத்தில் அடிப்படையில் சசிகலாவை மட்டும் ஜெயலலிதா ஏற்றுக்கொண்டார்.

    சென்னை:

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி ஆணைய விசாரணை அறிக்கை சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:

    * 2012 பொதுக்கூட்டத்தில் சசிகலா குடும்பத்தினரை தொடர்பு கொள்ள வேண்டாம் என கட்சி உறுப்பினர்களை ஜெயலலிதா எச்சரித்துள்ளார்.

    * உறுதிமொழி கடிதத்தின் அடிப்படையில் சசிகலாவை மட்டும் ஜெயலலிதா ஏற்றுக்கொண்டார்.

    * சசிகலாவின் உறவினர் கிருஷ்ணபிரியாவின் சாட்சியத்தின்படி சசிகலாவிற்கும் ஜெயலலிதாவிற்கும் இடையே நல்லுறவு இல்லை.

    * சாட்சியங்கள் அளித்த தகவலின்படி, ஜெயலலிதா 4.12.2016 அன்று மாலை 3 மணியில் இருந்து 3.50 மணிக்குள் இறந்திருப்பது தெரிய வந்துள்ளது.

    * 5.12.2016 அன்று இரவு 11.30 மணிக்கு ஜெயலலிதா இறந்ததாக மருத்துவமனை அறிவித்துள்ளது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சசிகலா - ஜெயலலிதா இருவர் இடையே சுமூக உறவு இல்லை.
    • ஜெயலலிதாவின் மரணம் அறிவிப்பதில் திட்டமிட்டு தாமதம் செய்யப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

    அதில், ஜெயலலிதாவை வீட்டில் இருந்து மருத்துவமனையில் அனுமதித்த நபர்களிடம் அசாதாரணமான செயல் எதுவும் கண்டறியப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

    அறிக்கையில், சசிகலா, கே.எஸ்.சிவக்குமார், ராதாகிருஷ்ணன், சி.விஜயபாஸ்கர் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக முடிவு செய்து விசாரணைக்குஉத்தரவிட வேண்டும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மேலும் எய்ம்ஸ் மருத்துவக் குழு 5 முறை அப்பல்லோ வந்திருந்தாலும் ஜெயலலிதாவுக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை என கூறப்பட்டு உள்ளது.

    ஜெயலலிதா மரணம் விவகாரத்தில் சசிகலா குற்றம் செய்தவராக முடிவு செய்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரைத்துள்ளது.




    அமெரிக்காவில் இருந்து வந்த டாக்டர் ஸ்டூவர்ட் ரசல், ஜெயலலிதாவுக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைத்திருந்தார். ஆனால் அது நடக்கவில்லை. ஒருவேளை அது நடந்திருந்தால் ஜெயலலிதா உயிரை காப்பாற்றியிருக்கலாம்.

    2012ம் ஆண்டு முதல் ஜெயலலிதாவுக்கும், சசிகலாவுக்கும் இடையே சுமூக உறவு இல்லை, ஜெ-வுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டவுடன் மருத்துவமனைக்கு தாமதமின்றி அழைத்து சென்றுள்ளனர்.

    அதன் பிந்தைய நிகழ்வுகள் சசிகலாவால் ரகசியமாக்கப்பட்டன. ஜெயலலிதா இறந்த நாள் இறந்த நேரத்தில் முரண்பாடு உள்ளது. சாட்சியங்கள் அடிப்படையில் ஜெயலலிதா இறந்த நேரம் 2016 டிசம்பர் 4ம் தேதி மதியம் 3 மணி முதல் 3.30 மணிக்குள்.

    2016 டிசம்பர் 5ம் தேதி இரவு 11.30 மணிக்கு ஜெயலலிதா இறந்தார் என அப்போலோ மருத்துவமனை அறிவித்திருந்தது. ஜெயலலிதா டிச. 5ம் தேதி இறந்தார் என மருத்துவமனை கூறியிருந்த நிலையில் டிச. 4ம் தேதியே இறந்தார் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதால் ஜெயலலிதாவின் மரணம் அறிவிப்பதில் திட்டமிட்டு தாமதம் செய்யப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    சசிகலா - ஜெயலலிதா இருவர் இடையே சுமூக உறவு இல்லாததால், சுயலாபத்துக்காக ஜெயலலிதாவுக்கான ஆஞ்சியோ சிகிச்சையை சசிகலா தடுத்து இருக்கலாம் என ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

    • என் ஆணையத்திற்கு மட்டும் அதிக பணம் செலவிடப்பட்டதாக சொல்கிறார்கள்.
    • அறிக்கை ஆங்கிலத்தில் 500 பக்கங்களையும், தமிழில் 608 பக்கங்களையும் கொண்டுள்ளது.

    ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை ஆணைய தலைவர் ஆறுமுகசாமி இன்று சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்த ஆணையம் விசாரணையை தொடர வேண்டும் என்று கூறிய முதல்- அமைச்சருக்கும், தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஜெயலலிதா மருத்துவமனையில் சேருவதற்கு முன்பு இருந்த உடல் நிலை மற்றும் மருத்துவமனையில் சேர்ந்த பிறகு அவரது நிலை தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. மொத்தம் 154 சாட்சிகள் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

    ஆணையம் அமைக்கப்பட்ட பிறகு சம்மன் அனுப்ப முதல் ஒரு மாதம் தேவைப்பட்டது. அதன் பிறகு விசாரணையை தொடங்கினேன். ஒரு வருடத்திற்குள் 149 சாட்சிகளிடம் விசாரணை நடத்தி உள்ளேன்.

    இந்த வாதத்தை சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்தபோது ஆறுமுகசாமி ஆணையம் ஒரு நீதிமன்றம் போலவே செயல்பட்டதாக சுப்ரீம் கோர்ட்டு கூறியது.

    நீதிமன்றத்தை பொறுத்தவரை வருடத்தில் 200 நாட்கள் வேலை நாட்களாகும். நான் 150 நாட்கள் வேலை பார்த்து ஒவ்வொரு சாட்சிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையை அதிக பக்கங்களுடன் தயாரித்து உள்ளேன். சிலர் தடை வாங்கினார்கள். அது அவர்களின் உரிமை. எனவே காத்திருந்து தடை நீங்கியதும் விசாரித்து உள்ளேன்.

    இந்த அறிக்கை ஆங்கிலத்தில் 500 பக்கங்களையும், தமிழில் 608 பக்கங்களையும் கொண்டுள்ளது. இந்த அறிக்கையை வெளியிடுவது பற்றி அரசு தான் முடிவு செய்ய வேண்டும்.

    ஆணையத்தில் விசாரணைக்கு ஆஜராக சசிகலாவுக்கு சம்மன் கொடுத்தோம். அவர் விளக்கம் அளிக்க வாய்ப்பையும் கொடுத்தோம். ஆனால் அவர் வரவில்லை என்பதால் எழுதி கொடுத்தார். அதன் பிறகு ஒருவரை கட்டாயப்படுத்துவது சரியாக இருக்காது. அந்த உரிமையை சோதித்து பார்க்க விரும்பவில்லை. சசிகலா விசாரணைக்கு ஆஜர் ஆகாததால் அவரிடம் எழுத்து பூர்வமாக விளக்கம் பெறப்பட்டது. சசிகலா தரப்பில் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தனர்.

    சென்னை போயஸ்கார்டன் இல்லத்தில் இருந்து ஜெயலலிதாவை மருத்துவமனைக்கு அழைத்து வந்ததில் எந்தவித சந்தேகமும் கிடையாது. இதனால் அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் விசாரணை நடத்தவில்லை.

    என்னால் முடிந்த வரை விசாரணை நடத்தி அதை அறிக்கையில் தெரிவித்து இருக்கிறேன். விசாரணை நடத்துவதில் தாமதம் எதுவும் செய்யவில்லை.

    என் ஆணையத்திற்கு மட்டும் அதிக பணம் செலவிடப்பட்டதாக சொல்கிறார்கள். இதற்கு முன்பு எத்தனையோ விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு உள்ளது. அப்போது எல்லாம் இதுபற்றி எதுவும் சொல்லவில்லையே. ஏன்?

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எய்ம்ஸ் மருத்துவக்குழு அறிக்கை மற்றும் ஆணையம் மேற்கொண்ட விசாரணை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு 600 பக்கங்களை கொண்ட இறுதி அறிக்கையை ஆணையம் தயார் செய்துள்ளது.
    • எய்ம்ஸ் மருத்துவக்குழு அறிக்கை மற்றும் ஆணையம் மேற்கொண்ட விசாரணை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு 600 பக்கங்களை கொண்ட இறுதி அறிக்கையை ஆணையம் தயார் செய்துள்ளது.

    சென்னை:

    முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதாவுக்கு கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ந்தேதி திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மயங்கிய நிலையில் அவர், சென்னை ஆயிரம் விளக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    75 நாட்கள் சிகிச்சையில் இருந்த ஜெயலலிதா அதே ஆண்டு டிசம்பர் 5-ந்தேதி மரணம் அடைந்தார். ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்த போராட்டம் நடத்தினார்.

    இதைத்தொடர்ந்து அப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25-ந்தேதி உத்தரவிட்டார்.

    ஆணையம் 3 மாதத்துக்குள் விசாரணையை முடித்து தமிழக அரசிடம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக சென்னை எழிலகத்தில் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தனி அலுவலகம் உருவாக்கப்பட்டது. அங்கு 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் 22-ந்தேதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை நடவடிக்கைகள் தொடங்கின.

    முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர்கள், ஜெயலலிதா மற்றும் சசிகலா உறவினர்கள், ஜெயலலிதாவின் பாதுகாப்பு அலுவலர்கள், போயஸ் கார்டன் பணியாளர்கள், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ ஆஸ்பத்திரி டாக்டர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் என 158 பேரிடம் ஆணையம் விசாரணை நடத்தியது.

    இந்தநிலையில் அப்பல்லோ மருத்துவமனை சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததால் 2019ம் ஆண்டு ஏப்ரல் 26-ந்தேதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. மருத்துவ நிபுணர்குழு நியமித்து விசாரணை நடத்த வேண்டும் என்று அப்பல்லோ மருத்துவமனை கோரிக்கை விடுத்தது.

    இதனால் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைகளில் தாமதம் ஏற்பட்டது. இதேபோன்று பல்வேறு காரணங்களால் தாமதம் ஏற்பட்டதால் ஆணையத்துக்கு தமிழக அரசு 14 முறை கால நீட்டிப்பு வழங்கியது.

    ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை 3 கட்டமாக நடந்து முடிந்துள்ளது. முதல் கட்டத்தில் 13 மாதங்கள் 147 அமர்வுகளில் விசாரணை நடந்தது. அப்போது 154 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். 2வது கட்டத்தில் 3 ஆண்டுகளாக எந்த விசாரணையும் நடைபெறவில்லை.

    சுப்ரீம் கோர்ட்டு தடை ஆணை விலக்கி கொள்ளப்பட்ட பிறகு கடந்த மார்ச் மாதம் முதல் மீண்டும் மூன்றாவது கட்டமாக விசாரணை தொடங்கியது. சில வாரங்களில் 3-வது கட்ட விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அப்போது 12 முக்கிய சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். ஆணையத்தின் விசாரணை கடந்த ஏப்ரல் மாதம் நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து இறுதி அறிக்கை தயார் செய்யும் பணியை ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வந்தது.

    ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவ சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவக்குழு, ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை ஆவணங்களை ஆய்வு செய்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆணையத்திடம் அறிக்கை தாக்கல் செய்தது. முதலில் 550 பக்கங்கள் கொண்ட அறிக்கையாகத்தான் ஆறுமுகசாமி ஆணையம் தயார் செய்து இருந்தது. அப்பல்லோ மருத்துவமனை கேட்டுக்கொண்டபடி டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் தெரிவித்த கருத்துக்கள் சுமார் 50 பக்கங்கள் சேர்க்கப்பட்டன. இதனால் ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை 600 பக்கங்களாக அதிகரித்தது.

    அந்த அறிக்கையில் ஜெயலலிதாவுக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரி டாக்டர்கள் அளித்த சிகிச்சையில் எந்த தவறும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

    எய்ம்ஸ் மருத்துவக்குழு அறிக்கை மற்றும் ஆணையம் மேற்கொண்ட விசாரணை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு 600 பக்கங்களை கொண்ட இறுதி அறிக்கையை ஆணையம் தயார் செய்துள்ளது. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் என தனித்தனியாக இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

    இதுதவிர ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணையின் போது தெரியவந்த முக்கிய அம்சங்கள் என தனியாக 200 பக்கங்கள் கொண்ட ஒரு அறிக்கையும் தயாரிக்கப்பட்டுள்ளது. அதாவது, இறுதி அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்களை சுட்டிக்காட்டும் வகையில் இந்த அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது.

    இவை அனைத்தையும் சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நீதிபதி ஆறுமுகசாமி இன்று காலை தாக்கல் செய்தார்.

    அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு ஜெயலலிதாவுக்கு என்னென்ன உடல்நல பாதிப்புகள் இருந்தன?, அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பின்பு அவரது உடல்நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததற்கான காரணம் என்ன?, சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்து செல்லப்பட்டிருந்தால் அவர் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு இருந்திருக்குமா?, ஜெயலலிதாவுக்கு இருந்து வந்த பல்வேறு உடல்நல பாதிப்புகள் தான் அவரது மரணத்துக்கு முழு காரணமா? அல்லது வேறு ஏதேனும் சந்தேகங்கள் உள்ளனவா? என பல்வேறு முக்கியமான அம்சங்கள் இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளதாக ஆணையம் தரப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

    அடுத்தகட்டமாக இந்த அறிக்கை தமிழக அரசால் பரிசீலிக்கப்பட்டு விவாதத்துக்காக எடுத்துக் கொள்ளப்படும். அனேகமாக நாளை மறுநாள் (29ந் தேதி) நடக்கும் தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை மீது விவாதித்து முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது.

    அதன்பிறகு மேல் நடவடிக்கைக்காக சட்டசபையில் ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை உறுப்பினர்களின் பார்வைக்கு வைக்கப்படும் என தெரிகிறது. இதையடுத்து அந்த ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜெயலலிதா மரணம் குறித்து மருத்துவ குழு அமைத்து விசாரணை.
    • கூடுதல் அவகாசம் கேட்க ஆறுமுகசாமி ஆணையம் முடிவு செய்தது.

    சென்னை:

    முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக எழுந்த சர்ச்சையை தொடர்ந்து இது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

    அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள், சசிகலா உள்ளிட்ட 154 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஆனாலும்இன்னும் விசாரணை முடிவுக்கு வரவில்லை. இதனால் ஆணையத்தின் விசாரணை காலத்தை ஆகஸ்டு மாதம் 3-ந்தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தர விட்டது. இந்த அவகாசம் நாளையுடன் முடிவடைய உள்ளது.

    இந்தநிலையில் ஜெயலலிதா மரணம் குறித்து மருத்துவ குழு அமைத்து விசாரணை நடத்த எய்ம்ஸ் இயக்குனரகத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தது. இந்த குழுவினர் பலரிடம் விசாரணை மேற் கொண்டனர்.

    இதன் இறுதி அறிக்கை இந்த வாரத்தில் தாக்கல் செய்ய எய்ம்ஸ் மருத்துவ குழு ஆணையத்திடம் தகவல் தெரிவித்து இருந்தது. இதையடுத்து கூடுதல் அவகாசம் கேட்க ஆறுமுகசாமி ஆணையம் முடிவு செய்தது. அதன்படி ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து முடிக்க மேலும் 3 வார காலம் அவகாசம் வேண்டும் என ஆறுமுகசாமி ஆணையம் தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளது.

    இதனால் ஆணையத்தின் இறுதி அறிக்கை வெளியாவதில் தாமதமாகும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

    • எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக பொறுப்பேற்று 2 மாதத்தில் கொடநாடு சம்பவம் தொடர்பாக உடனடியாக போர்க்கால அடிப்படையில் விரைந்து குற்றவாளிகளை கண்டுபிடித்து சட்டத்தின் முன்பு நிறுத்தினார்.
    • அந்த குற்றவாளிகள் கேரளா, கர்நாடகாவில் கொடும் குற்றங்கள் புரிந்தவர்கள்.

    சென்னை:

    முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் அம்மா கட்டிக்காத்த நெறிமுறைகளின்படி முறையாக நடைபெற்றது. அடையாள அட்டை இல்லாதவர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.

    பொதுக்குழு உறுப்பினர்களில் 98 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் ஒற்றை தலைமை வேண்டும், அதற்கு எடப்பாடி பழனிசாமி தலைமை ஏற்க வேண்டும் என ஒருமித்த குரலில் ஒலித்தனர்.

    நீதிமன்ற வழிகாட்டுதல் படியும், சட்டப்படியும், எம்.ஜி.ஆர். வகுத்து தந்த சட்ட விதிமுறைகளின் படியும் பொதுக்குழு நடைபெற்றது.

    அ.தி.மு.க. சட்டத்திட்ட நெறிமுறைகள்படி எங்கள் பக்கம் முழுமையான நியாயம் இருக்கும் நிலையில் நிச்சயமாக நீதிமன்றம் நல்ல தீர்ப்பு வழங்கும். மேலும் வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் அதைப்பற்றி பேசக்கூடாது.

    எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக பொறுப்பேற்று 2 மாதத்தில் கொடநாடு சம்பவம் தொடர்பாக உடனடியாக போர்க்கால அடிப்படையில் விரைந்து குற்றவாளிகளை கண்டுபிடித்து சட்டத்தின் முன்பு நிறுத்தினார். அந்த குற்றவாளிகள் கேரளா, கர்நாடகாவில் கொடும் குற்றங்கள் புரிந்தவர்கள்.

    கொலை, கொள்ளை, கற்பழிப்பு, ஆள்கடத்தல் உள்ளிட்ட குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டவர்கள். அவர்களை காவல்துறையை கையில் வைத்திருந்த எடப்பாடி பழனிசாமி விரைந்து கைது செய்து சட்டத்தின் முன்பு நிறுத்தினார். அவர்களை தி.மு.க. தான் ஜாமினில் எடுத்தது.

    சசிகலாவும், அவரை சார்ந்தவர்களும் எந்த நிலையிலும் கட்சியில் வரக்கூடாது. அம்மாவின் மரணத்துக்காக அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வம் தர்மயுத்தம் தொடங்கினார்.

    ஆனால் டி.டி.வி.தினகரனை, ஓ.பன்னீர் செல்வம் மறைமுகமாக சந்தித்தார். அம்மாவின் மரணம் குறித்து ஒரு உண்மை நிலையை தெரிய வேண்டும் என்பதற்காக நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் ஒரு ஆணையத்தை எடப்பாடி பழனிசாமி அமைத்தார். ஆனால் அந்த ஆணையத்தில் சென்று சசிகலாவுக்கு ஓ.பன்னீர்செல்வம் நல்ல சான்றிதழ் அளிக்கிறார். அவரை தனிப்பட்ட முறையில் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்கிறார். அதன் பிறகு அம்மாவின் மரணத்தில் எனக்கு சந்தேகம் இல்லை என்று கூறுகிறார்.

    ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்தரநாத் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை பார்க்கும் போது அர்ப்பணிப்போடு முதல்-அமைச்சர் செயல்படுகிறார் என்ற கருத்தை முன்மொழிந்தார். கருணாநிதியின் குடும்ப ஆதிக்கத்தில் இருந்து தமிழ்நாடு விடுபட வேண்டும் என்று தான் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கினார்.

    தி.மு.க. எதிர்ப்பு கொள்கையை கட்சிக்காரர்களுக்கு ஊட்டி வாழ்நாளெல்லாம் கடைபிடித்தார். புரட்சி தலைவியும் வாழ்நாள் முழுவதும் தி.மு.க. எதிர்ப்பு கொள்கையை எடுத்தார். அவர்களின் எண்ணங்களுக்கு மாறாக ரவீந்தரநாத் கருத்து தெரிவித்துள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலாவிடம் விசாரணை இல்லை என ஆறுமுகசாமி ஆணையம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. #JayaDeathProbe #ArumugasamyCommission #Sasikala
    சென்னை :

    ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

    ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் உறவினர்கள், போயஸ் கார்டன் பணியாளர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரிகள், அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள், செவிலியர்கள், எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் என இதுவரை 140-க்கும் மேற்பட்டோரிடம் ஆணையம் விசாரணை நடத்தி உள்ளது. அவர்களின் வாக்குமூலத்தை ஆணையம் பதிவு செய்துள்ளது.

    சசிகலா தனது தரப்பு வாக்குமூலத்தை வக்கீல் மூலம் தாக்கல் செய்துள்ளார். இதுவரை வாக்குமூலம் அளித்தவர்களிடம் சசிகலா தரப்பு வக்கீல் குறுக்கு விசாரணையை நடத்தி முடித்துள்ளார்.

    தற்போது விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துடன் விசாரணையை முடித்துக்கொள்ள ஆணையம் முடிவு செய்துள்ளதாக ஆணையம் தரப்பு வக்கீல் மனு தாக்கல் செய்துள்ளார். இதற்கு சசிகலா தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று சசிகலா தரப்பு வலியுறுத்தி உள்ளது.

    ஜெயலலிதா மரணம் தொடர்பாக பொதுக்கூட்டத்திலும், பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியிலும் இவர்கள் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துகள் ஆதாரமற்றவை என்பதை நிரூபிக்க தங்கள் தரப்புக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற அடிப்படையில் இவர்களிடம் விசாரணை நடத்த சசிகலா தரப்பு உறுதியாக உள்ளது.

    ஆணையம் அவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்காத பட்சத்தில் தங்கள் தரப்பில் அவர்களிடம் விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று ஆணையத்தை வலியுறுத்த உள்ளதாக சசிகலா தரப்பு வக்கீல் ராஜாசெந்தூர்பாண்டியன் தெரிவித்தார்.

    மேலும் அவர் கூறியதாவது:-



    ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் லண்டன் டாக்டர் ரிச்சர்டு பீலே சரியான முடிவு எடுக்கவில்லை என சிலர் அளித்த வாக்குமூலத்தை ஆணையம் பதிவு செய்துள்ளது. இந்த குற்றச்சாட்டு உண்மையா? இல்லையா? என்பதை ரிச்சர்டு பீலே மூலம் மட்டுமே உறுதி செய்ய முடியும். எனவே, ரிச்சர்டு பீலே கண்டிப்பாக விசாரிக்கப்பட வேண்டும்.

    கடந்த 9-ந் தேதி மதியம் 3 மணிக்கு காணொலி காட்சி மூலம் ரிச்சர்டு பீலேவிடம் விசாரணை நடத்த ஆணையம் முடிவு செய்திருந்தது. ஆனால், திடீரென்று அவரிடம் விசாரணை நடத்தும் முடிவை ஆணையம் கைவிட்டுள்ளது.

    ஓ.பன்னீர்செல்வத்துடன் விசாரணையை முடித்துக்கொள்ள ஆணையம் முடிவு செய்துள்ளதாக ஆணையத்தின் வக்கீல் மனு தாக்கல் செய்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எங்கள் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்துள்ளோம்.

    ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் வெளிப்படையாக கூறினார். ஆனால், இதை எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தவில்லை. அப்படி இருக்கும்போது எந்த சூழ்நிலையில், எந்த நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஆணையம் அமைத்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார் என்பதும் விசாரிக்கப்பட வேண்டும்.

    இதற்காக எடப்பாடி பழனிசாமியிடம் ஆணையம் விசாரணை நடத்த வேண்டும். இல்லாதபட்சத்தில் எங்கள் தரப்பில் அவரிடம் விசாரணை நடத்த வலியுறுத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சசிகலாவை பொறுத்தமட்டில் அவர் தரப்பு விளக்கங்களை அவ்வப்போது அவரது வக்கீல்கள் ஆணையத்துக்கு அளித்து வருவதால் பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவிடம் நேரடியாக விசாரணை நடத்த தேவையில்லை என்ற முடிவுக்கு ஆணையம் வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

    ஓ.பன்னீர்செல்வத்துடன் விசாரணையை முடிக்க ஆணையம் முடிவு செய்துள்ளதாக ஆணையம் தாக்கல் செய்திருக்கும் மனுவின் மூலம் சசிலாவிடம் நேரடியாக விசாரணை நடத்தும் முடிவையும் ஆணையம் கைவிட்டுள்ளது தெரிகிறது.

    அதேவேளையில் அப்பல்லோ நிர்வாகமும், சிறப்பு மருத்துவ நிபுணர்கள் குழு அமைக்காமல் ஆணையம் தனது விசாரணையை முடிக்கக்கூடாது என்று மனு தாக்கல் செய்துள்ளது. ஆனால், பிப்ரவரி 24-ந் தேதிக்குள் விசாரணையை முடித்து அறிக்கையை தாக்கல் செய்ய ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. #JayaDeathProbe #ArumugasamyCommission #Sasikala 
    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்திவரும் ஆணையத்தின் காலத்தை மேலும் 4 மாதங்கள் நீடித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. #Jayalalithaa #JayaDeath
    சென்னை:

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்ததால், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தனிநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது. கடந்த 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் 24 -ஆம் தேதி நீதிபதி ஆறுமுகசாமி விசாரணையைத் தொடங்கினார். முதல்கட்டமாக விசாரணை ஆணையத்தின் காலம் 3 மாதங்களாக நிர்ணயிக்கப்பட்டது. 

    இந்த விசாரணை ஆணையத்தில் சசிகலாவின் உறவினர்கள், முன்னாள் தலைமைச் செயலாளர்கள், காவல் துறை அதிகாரிகள், அரசு மருத்துவர்கள், ஜெயலலிதாவின் உதவியாளர்கள், அவரது வீட்டில் பணிபுரிந்தவர்கள் என இதுவரை 30 -க்கும் மேற்பட்டோர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். சாட்சியம் அளித்தவர்களிடம் சசிகலா தரப்பு வழக்குரைஞர்கள் குறுக்கு விசாரணை நடத்தி வருகின்றனர்.



    குறிப்பிட்ட காலத்துக்குள் விசாரணை முடிவடையாத காரணத்தால் டிசம்பர் 24 -ஆம் தேதியில் இருந்து 6 மாத காலத்துக்கு அதாவது 2018 -ஆம் ஆண்டு ஜூன் 24 -ஆம் வரை கால அவகாசத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக மேலும் பலரை விசாரிக்க வேண்டி உள்ளதால் ஜூன் 24 -இல் இருந்து மேலும் 6 மாத காலத்துக்கு விசாரணை காலத்தை நீட்டிக்க வேண்டும் என ஆணையம் சார்பில் தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டது.

    இந்நிலையில், விசாரணை ஆணையம் அறிக்கை தாக்கல் செய்ய மேலும் 4 மாத அவகாசம் வழங்கி தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.
    ×