search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆட்டோ டிரைவர்கள்"

    • பள்ளி மாணவ, மாணவிகளை ஆட்டோவில் இருந்து இறக்கும் போது ஓட்டுநர் இறங்கி அவர்களை பத்திரமாக அழைத்து சென்று வரவேண்டும்.
    • ஆட்டோ ஓட்டுநர்கள் கட்டாயம் சீருடை அணிய வேண்டும்.

    சென்னை:

    பள்ளிக்கு மாணவ, மாணவிகளை அழைத்துச் செல்லும் ஆட்டோ ஓட்டுனர்களை முறையாக பள்ளிக்கு அழைத்து சென்று வருவது குறித்து ஆட்டோ ஓட்டுனர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை மையம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் டி.மாதவன் தலைமை தாங்கினார். மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஸ்ரீநிவாஸ் மற்றும் குணசேகரன் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் டி.மாதவன் ஆலோசனைகளை வழங்கி பேசியதாவது:-

    பள்ளி மாணவ, மாணவிகளை ஆட்டோவில் இருந்து இறக்கும் போது ஓட்டுநர் இறங்கி அவர்களை பத்திரமாக அழைத்து சென்று வரவேண்டும். அதேபோல் பள்ளியில் இருந்து வீட்டுக்கு அழைத்துச்செல்லும்போது பெற்றோர்களிடத்தில் குழந்தைகளை ஒப்படைத்து விட்டுச் செல்ல வேண்டும்.

    சாலையை கடந்து செல்பவர்களை தாங்களே கொண்டு சென்று விட வேண்டும். 12 வயதிற்குள் மேல் இருக்கும் மாணவர்கள் 5 பேரும், 12 வயதிற்கு 3 பேரை மட்டுமே ஆட்டோவில் ஏற்ற வேண்டும்.

    ஏற்றப்படும் அனைத்து குழந்தைகளும் ஆட்டோவிற்குள் இருக்க வேண்டும். கம்பியில் அமர வைத்துக் கொண்டோ. புத்தகப் பைகளை ஆட்டோவுக்கு வெளியில் தொங்கவிட்டுக் கொண்டோ, செல்லக் கூடாது. கட்டாயமாக ஓட்டுனர் அருகில் யாரையும் உட்கார வைக்க கூடாது. பள்ளிக்கு அழைத்துச் செல்லும் மாணவ, மாணவிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது. அதற்கு ஓட்டுநர்கள் தான் முழு பொறுப்பேற்க வேண்டும். ஆட்டோ ஓட்டுநர்கள் கட்டாயம் சீருடை அணிய வேண்டும். சாலை விதிகளை பின்பற்றி வாகனத்தை செலுத்த வேண்டும். எப்.சி. செய்யாதவர்கள் உடனடியாக செய்ய வேண்டும். கட்டாயம் ஆர்.சி. புத்தகம், இன்சூரன்ஸ், மாசு கட்டுப்பாட்டு துறை சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் முறையாக பராமரித்து வைத்திருக்க வேண்டும். இல்லையேல் அபராதம் விதிக்கப்படும்.

    இவ்வாறு வட்டார போக்குவரத்து அதிகாரி மாதவன் பேசினார்.

    நிகழ்ச்சியில், பள்ளி குழந்தைகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோ ஓட்டுனநர்கள் மற்றும் தொழிற் சங்கத்தினர்கள் என 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    • ஆட்டோவின் இரு பக்கத்திலும் கோழி தடுப்பு கதவுகள் போல் இரும்பு கம்பியால் அமைக்கப்பட்டு இருந்த தடுப்பு கதவுகளை போலீசார் அகற்றினர்.
    • ஆட்டோ முன் கண்ணாடியில் ஒட்டியிருந்த ஸ்டிக்கர்களையும் கிழித்து எரிந்து எச்சரித்தனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் கடந்த 20-ந் தேதி தனியார் பள்ளி மாணவிகளை ஏற்றிச்சென்ற ஆட்டோ புஸ்சி வீதியில் தனியார் பஸ் மோதி விபத்துக்குள்ளானது. ஆட்டோவில் பயணித்த 8 பள்ளி குழந்தைகள் காயமடைந்தனர். விபத்து ஏற்படுத்திய பஸ், ஆட்டோ டிரைவர் மீது போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

    இதற்கிடையே ஆட்டோவில் அதிக மாணவர்களை ஏற்றி செல்வதால் விபத்து ஏற்படுவதாக புகார் எழுந்தது. இதையொட்டி புதுவை போக்குவரத்து துறை மற்றும் போக்குவரத்து போலீசார் இணைந்து திடீர் சோதனையில் ஈடுப்பட்டனர்.

    புஸ்சி வீதி-தூய்மா வீதி சந்திப்பில் பள்ளி மாணவிகளை ஏற்றி வரும் ஆட்டோக்களை ஆய்வு செய்தனர். அதைத் தொடர்ந்து சோனாம்பாளையம் சந்திப்பிலும் சோதனை நடத்தினர்.

    அப்போது ஆட்டோவில் 5 மாணவர்கள் மட்டுமே செல்ல அனுமதி உண்டு. ஆனால் அதை தாண்டி பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த ஒவ்வொரு மாணவருக்கும் தலா ரூ. 200 வீதம் ஆட்டோ டிரைவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    மேலும் ஆட்டோவின் இரு பக்கத்திலும் கோழி தடுப்பு கதவுகள் போல் இரும்பு கம்பியால் அமைக்கப்பட்டு இருந்த தடுப்பு கதவுகளை போலீசார் அகற்றினர்.

    ஆட்டோ முன் கண்ணாடியில் ஒட்டியிருந்த ஸ்டிக்கர்களையும் கிழித்து எரிந்து எச்சரித்தனர். இதுபோல் நடந்த சோதனையில் 25 ஆட்டோ டிரைவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. போக்குவரத்து போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கையால் பள்ளிக்கு குழந்தைகளை ஏற்றி செல்லும் ஆட்டோ டிரைவர்கள் மன வருத்தமடைந்துள்ளனர். 5 மாணவர்களை மட்டும் ஆட்டோவில் ஏற்றிச்சென்றால் தற்போது பெட்ரோல்-டீசல் விலை உயர்வால் பாதிக்கப்படுவதாக ஆட்டோ டிரைவர்கள் கூறுகின்றனர்.

    • ஆட்டோ சங்க பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.50, கிலோ மீட்டருக்கு ரூ.25 நிர்ணயிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
    • இந்த குழு பயணிகள் நலச்சங்கங்களின் பிரதிநிதிகள் கொண்ட கூட்டமும் நடத்தி கருத்தை கேட்டது.

    சென்னை:

    அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் சி.ஐ.டி.யு. ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன், தொ.மு.ச. தலைவர் துரை, ஏ.ஐ. டி.யு.சி. பொதுச்செயலாளர் சம்பத் ஆகியோர் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கருக்கு கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆட்டோ ஓட்டுனர்களின் மீட்டர் கட்டண உயர்வு, அரசு ஆட்டோ ஆப் உள்ளிட்ட பல கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வருகிறோம்.

    சென்னை ஐகோர்ட்டு ஆட்டோ கட்டணத்தை மறு நிர்ணயம் செய்யக்கோரி தமிழக அரசை வலியுறுத்தி உள்ளது. இந்த நிலையில் அரசு ஆட்டோ மீட்டர் கட்டணம் மறு நிர்ணயக்குழு அமைத்து ஆட்டோ சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தியது.

    அந்த கூட்டத்தில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.50, கிலோ மீட்டருக்கு ரூ.25 நிர்ணயிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இந்த குழு பயணிகள் நலச்சங்கங்களின் பிரதிநிதிகள் கொண்ட கூட்டமும் நடத்தி கருத்தை கேட்டது. பின்னர் ஆட்டோ கட்டண மறு நிர்ணயக்குழு கூடி ஆலோசித்து ஆட்டோ மீட்டர் கட்டணம் தொடர்பான தனது ஆலோசனையை வழங்கியது.

    ஆனால் இதுவரை புதிய மீட்டர் கட்டணம் குறித்து அரசு தரப்பில் அரசாணை வெளியாகவில்லை.

    இந்த காலதாமதம் ஆட்டோ தொழிலாளர்களை கவலை அடைய செய்துள்ளது. அரசு மேலும் காலதாமதப்படுத்தாமல் எங்கள் கோரிக்கையை ஏற்று ஆட்டோ கட்டணம் நிர்ணயிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

    • ஆட்டோவுக்கு மறுசீரமைத்த கட்டணத்தை மக்களுக்கு தெரிவிக்கும்படி சென்னை ஐகோர்ட்டும் உத்தரவிட்டது.
    • சென்னையில் பல இடங்களில் ஆட்டோ டிரைவர்கள் தற்போது குறைந்தபட்ச கட்டணமாக ரூ.50 வசூலித்து வருகிறார்கள்.

    சென்னை:

    தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு வாடகை ஆட்டோக்களுக்கான குறைந்தபட்ச கட்டணத்தை ரூ.25ஆக தமிழக அரசு நிர்ணயித்தது. அத்துடன் கூடுதலாக பயணிக்கும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.12 கட்டணம் என்று வசூலிக்கப்பட்டது.

    மேலும் காத்திருப்பு கட்டணம் 5 நிமிடத்துக்கு ரூ.3.50 ஆகவும், இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை 50 சதவீதம் கூடுதல் கட்டணம் வசூலிக்கவும் அனுமதி வழங்கப்பட்டது.

    அதன்பிறகு விலைவாசி உயர்ந்ததால் அரசின் பரிந்துரையை ஆட்டோ டிரைவர்கள் கைவிட்டனர். மேலும் தனியார் செயலி நிறுவனங்களும் கட்டணங்களை நிர்ணயித்து ஆட்டோக்களை இயக்கின. இதை பயன்படுத்தி அந்த நிறுவனங்கள் ஆட்டோ டிரைவர்களிடம் அதிக கமிஷன் வசூலிக்க தொடங்கி உள்ளன.

    இந்தநிலையில் தமிழக அரசே ஆட்டோக்களுக்கான செயலியை வடிவமைத்து டிஜிட்டல் மீட்டர்களை வழங்கி கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும். தனியார் செயலிகளை விட குறைந்த கமிஷன் பெற்று அதன் ஒரு பகுதியை நல வாரியத்தின் மூலம் டிரைவர்களுக்கு வழங்க வேண்டும் என்று ஆட்டோ சங்கத்தினர் போக்குவரத்து கமிஷனரிடம் கோரிக்கை வைத்தனர். இதற்கிடையே ஆட்டோவுக்கு மறுசீரமைத்த கட்டணத்தை மக்களுக்கு தெரிவிக்கும்படி சென்னை ஐகோர்ட்டும் உத்தரவிட்டது.

    இதையடுத்து ஆட்டோ கட்டணத்தை மறுவரையறை செய்ய குழு அமைக்கப்பட்டது. அந்த குழு ஆட்டோ தொழிற் சங்கத்தினர் மற்றும் நுகர்வோர் சங்கங்களுடன் ஆலோசனை நடத்தி உயர்த்தப்பட்ட கட்டண பட்டியலில் அரசுக்கு பரிந்துரை செய்தது.

    அதன்படி 1.5 கி.மீ. தூரத்துக்கு குறைந்தபட்ச கட்டணமாக ரூ.40, கூடுதலாக ஒவ்வொரு கி.மீட்டருக்கும் ரூ.18 ஆக உயர்த்தலாம் என பரிந்துரை செய்துள்ளதாக தெரிகிறது.

    இந்தநிலையில் குழு பரிந்துரைத்த கட்டண உயர்வை ஏற்க ஆட்டோ டிரைவர்கள் மறுத்து விட்டனர். சென்னையில் பல இடங்களில் ஆட்டோ டிரைவர்கள் தற்போது குறைந்தபட்ச கட்டணமாக ரூ.50 வசூலித்து வருகிறார்கள். எனவே அவர்கள் குறைந்தபட்சம் ரூ.40 என்பதை ஏற்க மறுக்கிறார்கள்.

    இதுகுறித்து ஆட்டோ தொழிற் சங்கத்தினர் கூறியதாவது:-

    தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் நேரத்துக்கும், தூரத்துக்குமான வேறுபாடுகளை ஒப்பிட்டு அறிவியல் முறையிலான கட்டணத்தை அரசு நிர்ணயிக்க வேண்டும். அதை நடைமுறைப்படுத்தும் வகையில் அனைத்து ஆட்டோக்களுக்கும் டிஜிட்டல் மீட்டர்களை வழங்க வேண்டும். ஆட்டோக்களுக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.45 ஆகவும், கூடுதலாக 1 கி.மீட்டருக்கு ரூ.20 ஆகவும் நிர்ணயிக்க வேண்டும். இதற்கான செயலியை உருவாக்கி அரசே இதை கண்காணித்தால் நிரந்தர தீர்வு ஏற்படும். ஜி.பி.எஸ். கருவிகளை பயன்படுத்தி தூரத்தை பதிவு செய்யலாம். இதனால் கட்டணம் தொடர்பாக பயணிகளுக்கும், ஆட்டோ டிரைவர்களுக்கும் ஏற்படும் பிரச்சினையை தடுக்க முடியும். 9 ஆண்டுகளாக கட்டணம் உயர்த்தப்படவில்லை. எனவே பெட்ரோல், டீசல் விலை பல மடங்கு உயர்ந்துள்ள நிலையில் கட்டணங்களை உயர்த்தி நிர்ணயிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    ×