search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "train station inside"

    ஆட்டோ, டாக்சி டிரைவர்கள் ரெயில் நிலையத்துக்குள் சென்று பயணிகளை தங்களது வாகனத்தில் பயணிக்குமாறு அழைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரெயில்வே பாதுகாப்பு படை ஐ.ஜி. தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    ஆட்டோ, டாக்சி டிரைவர்கள் ரெயில் நிலையத்திற்குள் சென்று பயணிகளிடம் பேரம் பேசி தங்களது வாகனத்தில் பயணம் செய்யுமாறு அழைப்பதாகவும், இதனால் பயணிகளுக்கு தொந்தரவு ஏற்படுவதாகவும் சில நாட்களாக புகார்கள் வருகின்றன. சமீபத்தில் இது தொடர்பாக ஆட்டோ, டாக்சி டிரைவர்களுக்கும், ரெயில்வே பாதுகாப்பு படையினருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது.

    இந்த நிலையில் இதுகுறித்து தெற்கு ரெயில்வேயின் ரெயில்வே பாதுகாப்பு படை ஐ.ஜி. பிரேந்திரகுமார் சென்னை, திருச்சி, சேலம், மதுரை, பாலக்காடு மற்றும் திருவனந்தபுரம் கோட்டத்தில் பணியாற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர்கள் மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    ரெயில் நிலையங்களின் உள்ளே பயணிகள் அமரும், நடமாடும் இடங்களுக்கு சென்று ஆட்டோ டிரைவர்கள் சிலர் பயணிகளை தங்கள் ஆட்டோவில் பயணம் செய்ய வருமாறு அழைப்பு விடுப்பதாகவும், இதனால் பயணிகளுக்கு தொந்தரவு ஏற்படுவதாகவும் ஏராளமான புகார்கள் வருகிறது. ஆட்டோ மற்றும் டாக்சி டிரைவர்கள் ரெயில் நிலைய வளாகத்தில் பயணிகள் நடமாடும் இடத்துக்கு சென்று, தங்கள் வாகனங்களில் பயணம் செய்யுமாறு அழைக்க அனுமதி இல்லை.

    அதாவது டாக்சி மற்றும் ஆட்டோ டிரைவர்கள் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட நிறுத்தங்களில் தான் நிற்க வேண்டும். அதனையும் மீறி ரெயில் நிலையத்துக்குள் ரெயில் பயணிகளுக்கான இடத்துக்கு சென்று அவர்களை அழைத்தால் ரெயில்வே சட்டத்தில் உள்ள பிரிவுகளின்படி டாக்சி மற்றும் ஆட்டோ டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம்.

    எனவே இதுபோன்ற நடைமுறையை தடுப்பதற்கான நடவடிக்கையை எடுங்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    ×