search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Usury interest"

    • பணத்தை கொடுக்காவிட்டால் மகள்களை கடத்தி விடுவதாக மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
    • வழக்குப்பதிவு செய்த போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    பல்லடம் :

    பல்லடம் ஜெயப்பிரகாஷ் வீதியை சேர்ந்த மாடசாமி மனைவி ஆனந்தி(வயது 34). இவர்களுக்கு 13, மற்றும் 14 வயதில் 2 குழந்தைகள் உள்ளனர்.இந்த நிலையில் ஆனந்தி பல்லடம் கடைவீதியில் பூ வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் பல்லடம் பச்சாபாளையத்தை சேர்ந்த தனது உறவினரான கோவிந்தராஜ்- நந்தினி தம்பதியினரிடம் ஒரு லட்சத்து 60 ஆயிரம் கடன் பெற்றதாக கூறப்படுகிறது.

    வாங்கிய கடன் தொகையில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை பல தவணைகளில் ஆனந்தி திருப்பி செலுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது ஆனந்தியை பணம் கடன் கொடுத்திருந்த உறவினர் சார்பில் பேசுவதாக கூறி வட்டிக்கு வட்டி போட்டு இன்னும் ரூ. 3 லட்சம் தர வேண்டும் என மிரட்டல் விடுத்து வருவதாகவும் பணத்தை கொடுக்காவிட்டால் ஆனந்தியின் மகள்களை கடத்தி விடுவதாக மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ஆனந்தி பள்ளிக்குச் சென்றிருந்த தனது மகள்களை பாதியிலேயே வீட்டுக்கு அழைத்து வந்ததோடு தனக்கு நடந்த கந்துவட்டி கொடுமை குறித்தும் மிரட்டல் விடுக்கும் நபர்கள் குறித்தும் தனது செல்போனில் பேசி அதனை வீடியோவாக வெளியிட்டுள்ளார். இது வைரலாகி பல்லடம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், கந்துவட்டி கொடுமை குறித்தும், கந்துவட்டி கும்பலிடம் இருந்து தன்னையும், தனது மகள்களையும் காப்பாற்றுமாறு, பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். கந்துவட்டி கொடுமையால் பெண் பூ வியாபாரி வீடியோ வெளியிட்டுள்ள சம்பவம் பல்லடத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பல்வேறு பகுதிகளில் கந்து வட்டி தொழில் நடைபெறுகிறது.
    • காங்கயம் போலீசார் சார்பில் பிளக்ஸ் போர்டு வைக்கப்பட்டுள்ளது.

    காங்கயம்:

    திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கந்து வட்டி தொழில் நடைபெறுகிறது. இதனால் பலரும் பாதிக்கப்படுகின்றனர்.கந்து வட்டி பிரச்னை தொடர்பான புகார்களை பெற்று விசாரித்து நடவடிக்கை எடுக்கும் வகையில், அது குறித்த புகார்களை தெரிவிக்க 94981 76731 மற்றும் 94981 01320 ஆகிய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.இது குறித்த அறிவிப்பினை, பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. காங்கயம் பஸ் நிலையம் முன்பு 4 ரோடு சந்திப்பில் காங்கயம் போலீசார் சார்பில் பிளக்ஸ் போர்டு வைக்கப்பட்டுள்ளது.

    • டாக்ஸி,வேன்,டெம்போ டிராவலர் என வாகனத்தை விலைக்கு வாங்கி வாடகைக்கு விட்டு சம்பாதிக்கும் தொழில் செய்து வந்தார்.
    • முத்துகுமாரை தேடி வருகின்றனர்.

    தாராபுரம்:

    தாராபுரம் எஸ்.கே. எஸ் நகரைச் சேர்ந்தவர் அருண்குமார்(வயது 38) .இவர் தாராபுரம் பகுதியில் வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்தும் தொழில் செய்து வருகிறார் .வாகனங்களை வாங்க தாராபுரத்தில் உள்ள தனியார் பைனான்சில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு ரூ. 21,50,000 கடனாக வாங்கினார்.அதனை கொண்டு டாக்ஸி,வேன்,டெம்போ டிராவலர் என வாகனத்தை விலைக்கு வாங்கி வாடகைக்கு விட்டு சம்பாதிக்கும் தொழில் செய்து வந்தார்.

    இந்தநிலையில் பைனான்ஸ் புரோக்கர் யாசர் அராபத்,உரிமையாளரான முத்துக்குமார் மற்றும் வீரன் ஆகியோர் கந்து வட்டி கேட்டு மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.இதனால் கடனை அடைக்க அருண்குமார் ஒரு வாகனத்தை விற்று கடந்த ஆண்டு ரூ.11,50,000 பணத்தை திருப்பி கொடுத்து விட்டார்.மீதமுள்ள பணம் ரூ.10,00,000க்கு ரூ.25,50,000ம் கேட்டு அவரிடமுள்ள இரு வாகனங்களை பறிமுதல் செய்துவாகனத்தை பறித்துவிட்டனர்.பிறகு இது பத்தாது என கேட்டு அவர் இல்லாத சமயம் வீட்டிற்குச் சென்று தந்தை ஜெயராமனை தாக்கியுள்ளனர்.

    இதனை அறிந்த அருண்குமார் தாராபுரம் போலீசில் யாசர் அராபத்( 32),மற்றும் வீரன்(48),முத்துகுமார் ஆகியோர் மீது கந்து வட்டி கொடுமைபடுத்துவதாக புகார் கொடுத்தார்.புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் விசாரணை நடத்தி முத்துக்குமார்,யாசர் அராபத் மற்றும் வீரன் ஆகியோர் மீது கந்து வட்டி சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து யாசர் அராபத்,வீரன் இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.மேலும் முத்துகுமாரை தேடி வருகின்றனர். 

    • கந்து வட்டியால் பா.ஜ.க.பிரமுகர் தற்கொலை டைரி- செல்போன் உரையாடல் குறித்து தனிப்படை போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • தற்கொலை செய்து கொள்வதற்கான காரணங்கள் குறித்து உருக்கமான வீடியோ மற்றும் ஆடியோ பதிவுகளை செய்துவிட்டு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த செல்வம் மகன் திருவேங்கடம் என்கிற தினேஷ் (வயது 21) இவர் பா.ஜ.க. நகர இளைஞரணி துணைத் தலைவராக இருந்தார். மேலும் கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தினேஷ் நேற்று முன்தினம் கள்ளக்குறிச்சி அருகே தென்கீரனூர் ஏரிக்கரை பகுதியில் உள்ள ஒரு விவசாய கிணற்றின் அருகே விஷம் குடித்து விட்டு செல்போனில் தற்கொலை செய்து கொள்வதற்கான காரணங்கள் குறித்து உருக்கமான வீடியோ மற்றும் ஆடியோ பதிவுகளை செய்துவிட்டு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அந்த வீடியோவில் பொரசக்குறிச்சியை சேர்ந்த ஒருவரிடம் ரூபாய் 10,000 கடன் வாங்கியதாகவும் அவருக்கு இதுவரை கூகுள் பே மூலம் ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் போட்டுள்ளதாகவும் அது மட்டும் இல்லாமல் மொபைல் பேங்கிங் மூலம் 10 ஆயிரம் அனுப்பி உள்ளேன் என கூறியுள்ளார்.

    தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிந்து நேற்று உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதுகுறித்து அவரது தாய் சித்ரா கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார், அதில் எனது மகன் இதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் கடந்த 5 வருடமாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று கடன் பிரச்சனையால் ஆடியோ வெளியிட்டு விட்டு சம்பவத்தன்று கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். எனது மகன் தற்கொலைக்கு காரணமாக இருந்த கள்ளக்குறிச்சி அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் மற்றும் கள்ளக்குறிச்சி அருகே பொரசக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து மகன் வேல்முருகன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளார். அதன்படி வழக்கு பதிவு செய்த போலீசார் கள்ளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சத்தியசீலன், ஆனந்தராஜ் ஆகிய 3 பேர் தலைமையில் தனிப் படை அமைத்து விசாரணை செய்து வருகின்றனர்.


    மேலும் தினேஷ் எழுதி வைத்திருந்த டைரி குறிப்பு மற்றும் அவர் செல்போனில் தொடர்பு கொண்டவர்கள் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். கள்ளக்குறிச்சியில் கந்து வட்டி கொடுமையால் பா.ஜ.க.பிரமுகர் உருக்கமான வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ரூ 20,000 கடனுக்கு ரூ.2.36 லட்சம் கேட்பதாக புகார்
    • போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அருகே உள்ள சேர்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 41)இவர் இன்று காலை வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    நான் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறேன். எனது குடும்பத்தில் 5 பேர் உள்ளனர். எனது வருமானத்தை வைத்துதான் குடும்பம் நடத்த வேண்டி உள்ளது.

    இந்த நிலையில் ஒடுகத்தூரை சேர்ந்த சகோதரர்கள் 3 பேரிடம் நான் ரூ. 20,000 குடும்பச் செலவுக்காக கடன் வாங்கியிருந்தேன். இதற்காக இதுவரை என்னிடம் ரூ.96 ஆயிரம் வட்டி வசூலித்தனர். இன்னும் 1,40,000 தரவேண்டும் என கூறுகின்றனர். நேற்று முன்தினம் இது சம்பந்தமாக என்னை அடித்து உதைத்தனர்.

    இதனால் நான் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றேன். ரூ.20,000 கடனுக்கு கூடுதல் வட்டி கேட்டு மிரட்டுவதில் இருந்து பாதுகாப்பு வேண்டும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்‌.இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காஞ்சிபுரம் மாவட்டத்தில் கந்து வட்டி தொடர்பான புகார்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
    • கந்துவட்டி வசூல் செய்பவர்ள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு கைது செய்யப்படுவார்கள்.

    காஞ்சிபுரம்:

    கந்துவட்டி புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டு உள்ளார்.

    இதை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் கந்து வட்டி தொடர்பான புகார்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

    இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    கந்துவட்டியால் பாதிக்கப்பட்டவர்கள் தயக்கமின்றி தங்களது புகார்களை தெரிவிக்கலாம். இது போன்று கந்துவட்டி வசூல் செய்பவர்ள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு கைது செய்யப்படுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ஒட்டன்சத்திரம் அருகே கந்துவட்டி கொடுமையால் விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் அருகே பொன்னகரத்தை சேர்ந்தவர் காளிமுத்து(வயது54) விவசாயி. இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு விவசாய தேவைக்காக உறவினர் கருப்பசாமியிடம் ரூ.50 ஆயிரம் கடன் வாங்கினார். அதற்காக புரோநோட் உள்ளிட்ட ஆவணங்களில் கையெழுத்திட்டு கொடுத்துள்ளார்.

    கடனுக்காக மாதந்தோறும் வட்டி செலுத்தி வந்தார். இந்நிலையில் ரூ.50 ஆயிரத்தை திருப்பி செலுத்த கருப்பசாமியிடம் சென்றுள்ளார். அப்போது அவர் உங்கள் கடனுக்கு வட்டி மற்றும் அசலுடன் சேர்த்து சொத்துக்கள் அனைத்தையும் எனக்கு எழுதி கொடுத்துள்ளீர்கள் என கூறியுள்ளார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த காளிமுத்து தனது சொத்தை திருப்பித்தருமாறு கேட்டுள்ளார். இருந்தபோதும் கருப்பசாமி நீங்கள் கையெழுத்து போட்டுக்கொடுத்த பத்திரம் என்னிடம் உள்ளது. எனவே சொத்துக்கள் அனைத்தும் எனக்கே சொந்தம் என தெரிவித்துள்ளார்.

    இதனால் என்னசெய்வது என தெரியாமல் மனஉளைச்சலில் இருந்த காளிமுத்து தென்னை மரத்திற்கு வைக்கப்படும் மாத்திரையை சாப்பிட்டு மயங்கினார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஒட்டன்சத்திரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு காளிமுத்து சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து ஒட்டன் சத்திரம் போலீசார் வழக்குபதிவு செய்து தலை மறைவான கருப்பசாமியை தேடி வருகின்றனர். கந்துவட்டி கொடுமையால் விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    கோவையில் குடும்பத்துடன் விஷம் குடித்த தொழில் அதிபரிடம் யாராவது கந்து வட்டி கேட்டு மிரட்டி நெருக்கடி கொடுத்தார்களா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    கோவை குனியமுத்தூர் அய்யப்பன் நகரை சேர்ந்தவர் ஜானகிராமன் (வயது 44). இவர் பெண்களுக்கான உள்ளாடை தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார்.

    இவரது மனைவி சசிகலா (36). இவர்களுக்கு சினேகா (16), ஹேமாவர்ணா (14) என்ற 2 மகள்கள் உள்ளனர்.

    ஜானகி ராமன் தனது தொழில் தேவைக்காக பலரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் தொழிலில் போதிய வருமானம் இல்லாததல் கடனை திருப்பி கொடுக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டார்.

    இதனால் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்த ஜானகி ராமன் குடும்பத்துடன் தற்கொலை செய்வது என முடிவு செய்தார்.

    அதன்படி தனது குடும்பத்தினருடன் பாலில் பூச்சி கொல்லி மருந்தை கலந்து குடித்தார். பின்னர் தனது உறவினர்களுக்கு குடும்பத்துடன் தற்கொலை செய்வதாக செல்போன் மூலம் கூறி உள்ளார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனடியாக ஜானகிராமன் வீட்டுக்கு விரைந்து வந்து பூச்சி மருந்து குடித்து மயங்கிய நிலையில் கிடந்த 4 பேரையும் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ஜானகிராமனின் மனைவி சசிகலா பரிதாபமாக இறந்தார். ஜானகிராமன், அவரது மகள்கள் சினேகா, ஹேமாவர்ணா ஆகியோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இது குறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கடன் தொல்லை காரணமாக ஜானகிராமன் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.

    ஜானகிராமன் தனது தொழில் தேவைக்காக யார்? யாரிடமெல்லாம் வட்டிக்கு பணம் வாங்கினார். அவர்களில் யாராவது ஜானகி ராமனிடம் கந்து வட்டி கேட்டு மிரட்டி நெருக்கடி கொடுத்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் ஜானகிராமனிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    கந்துவட்டி புகாரில் சிக்கிய டி.எஸ்.பி. ஈஸ்வரமூர்த்தி அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்ட சம்பவம் போலீசார் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் டி.எஸ்.பி.யாக இருப்பவர் ஈஸ்வரமூர்த்தி. இவர்மீது ராசிபுரம் அருகே உள்ள ஆர்.புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவர் கடந்த ஆண்டு கந்துவட்டி புகார் கொடுத்தார். அந்த புகாரில் அவர் கூறியிருந்ததாவது:-

    ராசிபுரத்தில் டி.எஸ்.பி.யாக பணியாற்றி வரும் ஈஸ்வரமூர்த்தியை 10 வருடங்களாக தெரியும். நான் கடந்த 25-12-2014 அன்று எனது நிறுவனத்தின் தொழில் அபிவிருத்திக்காக டி.எஸ்.பி. ஈஸ்வரமூர்த்தியை அணுகி ரூ.3 லட்சம் கடன் கேட்டேன். அவர் அவரது மனைவி சுமதிக்கு போன் செய்து எனக்கு கடனாக ரூ.3 லட்சம் கொடுக்கும்படி கூறினார்.

    நான் சுமதியிடம் கடனாக ரூ.3 லட்சம் பெற்றுக் கொண்டேன். அதற்கு ஈடாக கையொப்பம் மட்டும் இட்ட தொகை, தேதி பூர்த்தி செய்யப்படாத காசோலைகள் இரண்டையும், கையொப்பம், கைரேகை மட்டும் பூர்த்தி செய்த தொகை, தேதி பூர்த்தி செய்யப்படாத புரோ நோட் இரண்டிணையும் கொடுத்தேன். கடனுக்கு மாதந்தோறும் ரூ.100-க்கு ரூ.5 வீதம் வட்டி தர வேண்டும் என்று கூறினார்கள்.

    ரூ.3 லட்சம் கடன் தொகைக்கு 3 மாதங்கள் முறையாக வட்டி செலுத்தினேன். அப்போது ஈஸ்வர மூர்த்தி, அவரது மனைவி சுமதி, அவர்களது மகன் ரஞ்சி ஆகியோர் கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10-ந்தேதி என்னிடம் தொழிலுக்கு பணம் தேவைப்பட்டால் மேலும் ரூ.10 லட்சம் வேண்டுமானால் வாங்கிக் கொள் என்று கூறினார்கள்.

    நானும் பணத்தை கடனாக வாங்கினேன். கடன் தொகை ரூ.13 லட்சத்திற்கு மாதந்தோறும் ரூ.65 ஆயிரம் கொடுத்து வந்தேன்.

    கடந்த 2015-ம் ஆண்டு ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்களில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் ஏற்பட்டது. இதனால் என்னால் வட்டி செலுத்த இயலவில்லை.

    டி.எஸ்.பி.ஈஸ்வர மூர்த்தியும் அவரது மனைவி சுமதியும் எனக்கு போன் செய்து வீட்டிற்கு கூப்பிட்டார்கள். நான் அவர்கள் வீட்டுக்கு சென்றதும் சுமதி என் சட்டையை பிடித்து இழுத்து கன்னத்தில் அறைந்தார். ரஞ்சித் என் வயிற்றில் காலால் எட்டி உதைத்ததோடு, அடித்து கொன்று விடுவோம் என்று மிரட்டினார்.

    நான் அவகாசம் கொடுங்கள் என்று காலைப்பிடித்து கெஞ்சினேன். அவர்கள் வீட்டில் இருந்த தூணில் என்னை நிற்க வைத்து கயிற்றில் கட்டிவிட்டார்கள்.

    எனக்கு குடிக்க தண்ணீரோ, உணவோ கொடுக்கவில்லை. இரவு நான் மயக்கம் அடையவே கட்டை அவிழ்த்து விட்டு தண்ணீர் கொடுத்தனர். 3 மாதத்திற்கு வட்டி செலுத்தாததால் மாதம் ரூ.5 லட்சம் வீதம் 3 மாதங்களுக்கு ரூ.15 லட்சம் அபராத வட்டியாக தர வேண்டும். போன் செய்தபோது எடுக்க தவறிய குற்றத்திற்காக அபராதமாக ரூ.2 லட்சம் தர வேண்டும் என்று கூறினார்கள்.

    மொத்தம் ரூ.30 லட்சம் தர வேண்டும் என்று எழுதி வாங்கிக்கொண்டதோடு, ரூ.30 லட்சத்திற்கும் அன்றைய தேதியிலிருந்து ரூ.100-க்கு வட்டி வீதம் ரூ.10 என தர வேண்டும் என்றனர். எனது காரில் இருந்த உறவினர் குட்டலாடம்பட்டி மாணிக்கத்தின் விவசாய நிலத்தின் அசல் பத்திரத்தையும் எடுத்து வைத்துக் கொண்டு அனுப்பி விட்டனர்.

    மாதம் தோறும் வட்டியாக ரூ.3 லட்சம் கட்டி வந்தேன். கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் தேர்தல் சமயம் என்பதால் 15 நாட்கள் தள்ளி வட்டி செலுத்தினேன். அதற்கு அபராதமாக ரூ.5 லட்சம் என்று கூறி அன்றைய தேதியில் இருந்து அசல் ரூ. 35 லட்சம் என்றும் அதற்கு ஒவ்வொரு மாதம் வட்டி ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் என்று கூறி விட்டனர்.

    நானும் மாதம் தோறும் கடனுக்கு ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் கொடுத்து வந்தேன். கடந்த 10.9.2016-ம் தேதி அவர்கள் வீட்டில் கட்டி கொண்டிருந்த விநாயகர் கோவிலுக்கு நன்கொடையாக ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் தந்தாக வேண்டும் என்று மிரட்டி வாங்கிக் கொண்டார்கள். கோவில் கும்பாபிஷேகத்திற்கு ரூ.2 லட்சம் மதிப்புள்ள 27 பட்டு சேலைகளும் வாங்கி கொண்டனர்.

    தொழிலில் எனக்கு மீண்டும் நஷ்டம் ஏற்பட்டதால் 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மற்றும் 2017-ம் ஆண்டு ஜனவரி, பிப்ரவரி ஆகிய மாதங்களில் மாத வட்டியை செலுத்த முடியவில்லை. இதனால் சுமதியும் அவரது மகன் ரஞ்சித்தும் என்னை போனில் கேவலமாக திட்டி அசிங்கப்படுத்தினார்கள். அடியாட்களை எனது வீட்டிற்கு அனுப்பி மிரட்டி வந்தார்கள்.

    என்னை டி.எஸ்.பி. ஈஸ்வரமூர்த்தி போனில் தொடர்பு கொண்டார். அவர் குடும்பத்தோடு திருப்பதி கோவிலுக்கு செல்வதாகவும், அதற்கு ஆகும் செலவு ரூ. 3 லட்சத்தையும் கொடுத்தால் வட்டி செலுத்த கால தாமதம் தருவதாகவும் கூறி என்னிடம் ரூ.3 லட்சம் வாங்கிக் கொண்டார்.

    தொடர்ந்து என்னால் 6 மாதங்கள் வட்டி கட்ட முடியவில்லை. டி.எஸ்.பி. ஈஸ்வரமூர்த்தி, சுமதி, ரஞ்சித் ஆகியோர் அசல் மற்றும் வட்டி சேர்த்து நான் ரூ.1 கோடியே 60 லட்சம் கொடுக்க வேண்டும் என்று மிரட்டி வருகிறார்கள். இதனால் என்னால் தொழில் செய்ய முடியவில்லை. 3 பேரும் தொடர்ந்து போனிலும், அடியாட்களை அனுப்பியும், கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்கள்.

    எந்த நேரத்திலும் எனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என எனக்கு பயமாக உள்ளது. நான் வாங்கிய கடன் ரூ.13 லட்சத்திற்கு இதுவரை ரூ.81 லட்சத்து 45 ஆயிரம் வரை கட்டியுள்ளேன்.

    ரூ.2 லட்சத்துக்கு பட்டு புடவைகள் கொடுத்துள்ளேன். இன்னும் நான் ரூ. 1 கோடியே 60 லட்சம் கொடுக்க வேண்டும் என கந்து வட்டி கொடுமை செய்து வருகிறார்கள்.

    இவ்வாறு பாஸ்கரன் புகார் மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

    பாஸ்கரன் ராசிபுரம் கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தார். இதுகுறித்து விசாரணை நடத்தும்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு கோர்ட்டு உத்தரவிட்டது. இதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

    இதைத் தொடர்ந்து டி.எஸ்.பி. ஈஸ்வரமூர்த்தி மற்றும் அவரது மனைவி சுமதி மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இந்த நிலையில் ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரமூர்த்தி திருவாரூர் மாவட்ட குற்றப்பிரிவுக்கு திடீரென இடமாற்றம் செய்யப்பட்டார்.

    திருச்சி மாவட்ட சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய விஜயராகவன் ராசிபுரம் டி.எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டார். இதற்கான உத்தரவை தமிழக டி.ஜி.பி. ராஜேந்திரன் பிறப்பித்துள்ளார்.

    கந்துவட்டி புகாரில் சிக்கிய டி.எஸ்.பி. ஈஸ்வரமூர்த்தி அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்ட சம்பவம் போலீசார் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ×