என் மலர்
நீங்கள் தேடியது "பெண் சித்ரவதை"
- 16 வருடங்களாக சிறைபிடிக்கப்பட்ட ராணு மெலிந்துள்ளார்.
- எலும்புகளில் தோல் ஒட்டிக்கொண்டது.
போபால்:
மத்திய பிரதேசத்தின் தலைநகர் போபாலில் 16 ஆண்டுகளாக மாமியாரால் சிறைவைக்கபப்ட்ட பெண் மீட்கப்பட்டார். மத்திய பிரதேச மாநிலம் நரசிங்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கிஷன் லால் சாஹு. இவரது மகள் ராணு சாஹூ. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்தவருக்கும் 2006-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
திருமணத்துக்கு பின்னர் அவர்கள் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தனர். இந்த நிலையில்தான் 2008-ம் ஆண்டுக்கு பின்னர் ராணு சாஹூவை அவரது மாமியார் கொடுமைப்படுத்த தொடங்கினார். மகனை விட்டு அவரை பிரித்த மாமியார் கிட்டத்தட்ட 16 ஆண்டுகளாக ராணு சாஹூவை அறையில் அடைத்து வைத்து கைதி போல நடத்தியுள்ளார்.
கிஷன் லால் சாஹு மற்றும் அவரது உறவினர்களையும் பார்க்க அனுமதிக்கவில்லை.
இதனால் ராணு சாஹூவின் உடல் நிலை மோசமானது. அவர் எலும்பும் தோலுமாக மாறி சாகும் நிலைக்கு தள்ளப்பட்டார். இதை அறிந்த கிஷன் லால் சாஹூ மகள் ராணுவை மீட்டு சிகிச்சை அளித்து கணவன், மாமியார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பினார்.
இதையடுத்து போலீசார் அதிரடியாக அங்கு சென்று ராணுவை மீட்டனர். போலீசார் ராணுவை பார்த்ததும் அவளின் நிலையை கண்டு திகைத்தனர். 16 வருடங்களாக சிறைபிடிக்கப்பட்ட ராணு மெலிந்துள்ளார். எலும்புகளில் தோல் ஒட்டிக்கொண்டது. ராணு பேசும் நிலையில் இல்லை, அவள் நிலை மிகவும் மோசமாக இருந்தது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். இதுபற்றி தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
- புவனா தற்போது சித்ரவதைக்குள்ளான வீட்டில் இருந்து மீட்கப்பட்டு உள்ளார்.
- புவனா தனியார் ஏஜெண்டுகளின் பொறுப்பில் பாதுகாப்பாக இருப்பதாக என்னிடம் செல்போனில் பேசினார்.
ராயபுரம்:
தண்டையார்பேட்டை, கருணாநிதிநகர், 4-வது தெருவை சேர்ந்தவர் ஜேம்ஸ்பால். இவரது மனைவி புவனா (வயது 37). இவர் வீட்டு வேலைக்காக கடந்த 8 மாதத்துக்கு முன்பு குவைத்துக்கு சென்றார்.
இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு புவனா தனது கணவருக்கு செல்போனில் வீடியோ ஒன்றை அனுப்பி இருந்தார். அதில் தன்னை கழிவறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்வதாக கதறி அழுதார். மேலும் தன்னை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்து இருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஜேம்ஸ்பால், குவைத்தில் சிக்கி சித்ரவதைபடும் மனைவி புவனாவை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இதற்கிடையே குவைத்தில் உள்ள தனியார் ஏஜென்டுகளிடம் புவனா குறித்து தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வீட்டில் அடைக்கப்பட்டு இருந்த புவனாவை மீட்டனர். பின்னர் அவரை பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்தனர்.
எனினும் புவனாவின் பாஸ்போர்ட்டை ஏற்கனவே அந்த வீட்டின் உரிமையாளர் வாங்கிக் கொண்டதாக தெரிகிறது. அதனை அவர் திருப்பி கொடுக்கவில்லை. இதனால் புவனா சென்னை திரும்புவது தாமதமாகி உள்ளது. பாஸ்போர்ட்டை பெற தனியார் ஏஜெண்டுகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து புவனாவின் கணவர் ஜேம்ஸ்பாலிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
புவனா தற்போது சித்ரவதைக்குள்ளான வீட்டில் இருந்து மீட்கப்பட்டு உள்ளார். அவர் தனியார் ஏஜெண்டுகளின் பொறுப்பில் பாதுகாப்பாக இருப்பதாக என்னிடம் செல்போனில் பேசினார்.
ஆனால் அவர் வேலைபார்த்த வீட்டின் உரிமையாளர் புவனாவின் பாஸ்போட்டை வைத்து உள்ளார். அதனை இன்னும் பெறவில்லை. பாஸ்போர்ட் கிடைத்ததும் மனைவி புவனா சென்னை திரும்புவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தினமும் அதிகாலை 5 மணிக்கு எழுந்து வேலை செய்ய வேண்டும்.
- தொடர்ந்து நள்ளிரவு 1 மணிவரை ஓய்வே இல்லாமல் வேலை செய்ய வேண்டும்.
சென்னை:
சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்தவர் புவனா. இவரது கணவர் ஜேம்ஸ்பால். கூலித் தொழிலாளி. இவர்களுக்கு விசினா (16), விதியா (14) என்ற இரண்டு மகள்கள்.
குடும்பத்தில் போதிய வருமானம் இல்லாமல் தவித்த புவனா வெளிநாடுகளுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்பும் சூளைமேட்டை சேர்ந்த ஏஜெண்டை சந்தித்துள்ளார்.
அந்த நபர் குவைத்தில் வீட்டு வேலைக்கு ஆட்கள் தேவை என்று கூறி இருக்கிறார். மாதம் 150 குவைத்தினார் (இந்திய மதிப்பில் ரூ.39,528) சம்பளம் பேசி கடந்த பிப்ரவரி மாதம் துபாய் அனுப்பி இருக்கிறார்கள். அங்கு ஒரு போலீஸ் அதிகாரியின் வீட்டு வேலைக்காக நியமித்துள்ளார்கள்.
அங்கு புவனாவை வேலை வாங்கினார்கள் என்பதைவிட சித்ரவதை செய்திருக்கிறார்கள் என்பதே உண்மை. தினமும் அதிகாலை 5 மணிக்கு எழுந்து வேலை செய்ய வேண்டும். தொடர்ந்து நள்ளிரவு 1 மணிவரை ஓய்வே இல்லாமல் வேலை செய்ய வேண்டும்.
கொஞ்சம் ஓய்வெடுத்தாலும் அடி விழும். அதையும் தாங்கி வேலை செய்த புவனாவுக்கு சம்பளமும் பேசியபடி கொடுக்கவில்லை. மாதம் ரூ.26,750 மட்டுமே கொடுத்துள்ளார்கள்.
அவரை செல்போனிலும் பேசக்கூடாது என்று கட்டுப்பாடு விதித்துள்ளார்கள். ரத்தக்காயம் ஏற்படும் அளவுக்கு புவனாவை அடித்து துன்புறுத்தி இருக்கிறார்கள்.
புவனா இரவில் ஓய்வெடுப்பது 2 அல்லது 3 மணிநேரம் தான். அதற்காக அவருக்கு ஒதுக்கப்பட்ட இடம் கழிவறை. அந்த அறையை படுக்கையறையாக மாற்றிக்கொள்ளும்படி கூறி இருக்கிறார்கள்.
அந்த அறையிலேயே தங்கிய புவனா தனது நிலமையை வீடியோவாக பதிவு செய்து சென்னையில் உள்ள உறவினர்களுக்கு அனுப்பினார். அதை வைத்து தண்டையார்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது.
புவனாவை மீட்டுத்தரும் படி முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கும் கோரிக்கை வைத்தனர். அதைத் தொடர்ந்து மத்திய அரசின் உதவியுடன் புவனாவை மீட்க முயற்சி எடுத்தனர். இதற்கிடையில் புவனா மீட்கப்பட்டு அங்குள்ள தமிழ் சங்கத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளார்.
அவர் இன்று அல்லது நாளைக்குள் சென்னை திரும்புவார் என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறினார்.
பேரையூர்:
திருமங்கலம் அருகே சுந்தராம்பட்டியைச் சேர்ந்தவர் நாகேஸ்வரி என்ற சரண்யா (வயது27). இவர் மம்சாபுரத்தைச் சேர்ந்த சிவக்குமார் என்பவரை 8 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 5 வயதில் பெண் குழந்தை உள்ளது.
ஓட்டல் நடத்தி வந்த சிவக்குமாருக்கும், சரண்யாவுக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் சரண்யா கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டார்.
இந்த நிலையில் திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் சரண்யா புகார் கொடுத்துள்ளார்.அதில் கூறி இருப்பதாவது:-
கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த நிலையில் அவர் மதுரை செல்லூரைச் சேர்ந்த ஒரு பெண்ணை கடந்த ஆண்டு 2-வதாக திருமணம் செய்துள்ளார்.
இதுகுறித்து நான் கேட்டபோது 40 பவுன் நகை மற்றும் ரூ.8 லட்சம் மதிப்பிலான வீட்டை என் பெயருக்கு எழுதி தந்தால் உன்னுடன் வாழ்கிறேன் என மிரட்டல் விடுத்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி சிவக்குமார், அவரது தந்தை சிவனாண்டி, தாய் வைரமணி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் சிவக்குமார் கைது செய்யப்பட்டார்.
மதுரை அழகப்பன் நகரைச் சேர்ந்தவர் அலாவுதீன் ஆசிப். இவருக்கு சென்னை கீழ்ப்பாக்கம் கார்டன் நகரை சேர்ந்த ஷேக் அப்துல்காதர் மகளுக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடைபெற்றது.
அப்போது 140 பவுன் நகை, ரூ.25 லட்சம் ரொக்கம் வரதட்சணையாக கொடுக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் தொழில் செய்து வந்த அலாவுதீன் ஆசிப் கூடுதல் வரதட்சணை கேட்டு மனைவியை சித்ரவதை செய்துள்ளார். மேலும் ஆபாச படத்தை வெளியிடுவேன் என்றும் கூறி மிரட்டினாராம். இதற்கு அவரது குடும்பத்தினரும் உடந்தையாக இருந்துள்ளனர்.
இதனால் அந்த பெண் சென்னையில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இது குறித்து ஷேக் அப்துல்லாவின் உறவினர் முபாரக் அகமது, மகளிர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். போலீசார் விசாரணை நடத்தி அலாவுதீன் ஆசிப், அவரது தந்தை அலாவுதீன், தாயார் ஜின்னா உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருமங்கலம் முகமதுஷா புரத்தைச் சேர்ந்தவர் இஸ்மாயில். இவரது மகள் பெமினா பேகம் (வயது 32). இவருக்கும், பரமக்குடி பார்த்திபன் நகர் செய்யது அலி (35) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடை பெற்றது.
சவுதியில் பணியாற்றிய செய்யது அலி விடுமுறையில் ஊருக்கு வந்தார். அப்போது தொழில் செய்வதற்காக கூடுதல் நகை-பணம் வாங்கி வரும்படி மனைவியை சித்ரவதை செய்துள்ளார்.
இதனால் தாய் வீடு வந்த பெமினா பேகம், திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
அதில், கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர், கூடுதல் வரட்சணையாக 50 பவுன் நகைகள், ரூ.5 லட்சம் கேட்டு சித்ரவதை செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.
போலீசார் விசாரணை நடத்தி செய்யது அலி, அவரது பெற்றோர் ஜின்னா, ரோசர் செரிமா, உறவினர்கள் நஜிதா, சாகுல் அமீது, ஷர்மிளா பினு, பக்ருதீன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். #tamilnews
திருமங்கலம் அருகே உள்ள வடகரையைச் சேர்ந்தவர் காளிராஜ். இவருடைய மனைவி தேன்மொழி (வயது 25) எம்.எஸ்சி. பட்டதாரி. இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
அப்போது 32 பவுன் நகைகள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. காளி ராஜ், ஜம்மு காஷ்மீரில் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை போலீஸ் காரராக உள்ளார்.
இந்த நிலையில் திருமங் கலம் அனைத்து மகளிர் போலீசில் தேன்மொழி கொடுத்துள்ள புகாரில் கணவர் குடும்பத்தினர் கூடுதல் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்வதாக குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து மகளிர் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் செல்வகுமாரி விசாரணை நடத்தி காளிராஜ், அவரது பெற்றோர் காளியப் பன்-ஈரக்கா, உறவினர் கள் சுந்தர், சுந்தரி, செல்லம்மாள் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார்.
தேவாரம் தெற்கு தெருவைச் சேர்ந்த முருகேசன் மகன் ராஜா (வயது 33). இவருக்கும் ஆர்த்தி (29) என்பவருக்கும் கடந்த 7.6.2012-ந் தேதி திருமணம் நடந்தது. திருமணத்தின் போது 61 பவுன் நகை, ரூ.5 லட்சம் மதிப்பிலான சீர் வரிசைகள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது.
திருமணமாகி சில மாதங்களிலேயே ஆர்த்தியின் 25 பவுன் நகையை தொழில் தொடங்குவதற்காக தருமாறு கேட்டு வாங்கிக் கொண்டனர். மேலும் சில மாதங்கள் கழித்து மற்ற நகைகளையும் வாங்கி விற்று விட்டனர்.
இது தவிர அவரது வீட்டில் இருந்து ரூ.5 லட்சம் தொழில் தொடங்குவதற்காக ஆர்த்தி வாங்கி கொடுத்துள்ளார். இவை அனைத்தையும் பெற்றுக் கொண்டு புதிதாக தொடங்கிய கம்பெனியை தனது பெயரில் வைக்காமல் தனது வீட்டில் உள்ளவர்கள் பெயரில் மதன்ராஜ் வைத்துள்ளார்.
இது குறித்து ஆர்த்தி கேட்டபோது அவரை வெற்று பத்திரத்தில் கையெழுத்து போடச் சொல்லி கொடுமைபடுத்தியுள்ளனர். இதனால் ஆர்த்தி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் புகார் அளித்தார்.
எஸ்.பி. உத்தரவின் பேரில் போடி அனைத்து மகளிர் போலீசார் மனைவியை கொடுமைபடுத்திய கணவர் மதன்ராஜ், மாமனார் முருகேசன், மாமியார் மகேஸ்வரி, மற்றும் சுதர்சன், கிஷோர்குமார், கார்த்தி ஆகிய 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜபாளையம் அருகே உள்ள செண்பகத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் செல்லப்பா. இவரது மகள் பத்மஜா (வயது 25). இவர் ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
எனக்கும், ராஜபாளையம் மில் கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த தனசேகர் (30) என்பவருக்கும் கடந்த ஆண்டு மே மாதம் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது 60 பவுன் நகை, ரூ.2ம லட்சம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்கள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டன.
திருமணம் முடிந்தபின் கணவருடன் சென்னையில் வசித்து வந்தேன். அப்போது கணவர் ரூ. 75 ஆயிரம் கூடுதல் வரதட்சணை கேட்டும், குழந்தை பிறக்காததை சுட்டிக்காட்டியும் துன்புறுத்தி வந்தார்.
இதற்கு அவரது பெற்றோர் பால்ராஜ்-ராஜேஸ்வரி, சகோதரி சுப்புலட்சுமி, அவரது கணவர் ரமேஷ் ஆகியோர் உடந்தையாக இருந்தனர்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் விஜி விசாரணை நடத்தி தனசேகர், அவரது பெற்றோர் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார். #Tamilnews
குஜராத் மாநிலம் மேக்சனா மாவட்டம் காடி நகரைச் சேர்ந்தவர் ரோனக் படேல். இவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது.
இந்த நிலையில் புதுப்பெண்ணிடம் அவரது கணவர் மற்றும் மாமியார் ஆகியோர் கூடுதல் வரதட்சணை கேட்டு வந்தனர். ஆனால் அவரது பெற்றோர் ஏழ்மை நிலையில் இருந்ததால் அவர்களால் கூடுதல் வரதட்சணை கொடுக்க முடியவில்லை.
இதனால் மணப்பெண்ணை கணவர் வீட்டார் கொடுமைப்படுத்தி வந்தனர். சரியாக உணவு கொடுக்காமல் வெங்காயம், பூண்டு ஆகியவற்றை மட்டுமே பச்சையாக சாப்பிடச் சொல்லி சித்ரவதை செய்தனர்.
அவர் மறுத்ததால் கட்டாயப்படுத்தி வாயில் திணித்து சாப்பிடச் செய்தனர். இதனால் அந்தப் பெண் வயிறு எரிச்சலால் அவதிப்பட்டார்.
தொடர்ந்து இதுபோல் கொடுமைப்படுத்தியதால் பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி பெண்ணின் கணவர், மாமியார் மீது வழக்குப் பதிவு செய்தனர். இருவரும் தலைமறைவாகி விட்டார்கள். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.






