என் மலர்
நீங்கள் தேடியது "கோரிக்கை"
- குழந்தை பெற்ற பெண்களுக்கு துணையாக இருந்து வரும் உறவினர்கள் தங்குவதற்கு இடவசதி இல்லை.
- குடிநீர் தொட்டிகளில் போதிய அளவு குடிநீர் இல்லாமல் உள்ளதாக புகார் எழுந்துள்ளது.
தென்காசி:
தென்காசி மாவட்ட த்திற்கு முதன்மை மருத்துவமனையாக இயங்கி வரும் தென்காசி அரசு மருத்துவ மனைக்கு பல்வேறு பகுதிகளை சேர்ந்த நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் அதிகம் பேர் பிரசவத்திற்காக தென்காசி அரசு மருத்துவமனையை நாடி வருகின்றனர். இங்கு குழந்தை பெற்ற பெண்களுக்கு துணையாக இருந்து வரும் உறவினர்கள் தங்குவதற்கு இடவசதி இல்லை எனவும், அவர்க ளுக்கான அடிப்படை தேவைகளான குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள் போதுமான அளவில் இல்லை எனவும் புகார்கள் எழுந்துள்ளது.
தற்போது கோடைகாலம் தொடங்கி உள்ளதால் மருத்துவமனையில் உள்ள குடிநீர் தொட்டிகளில் போதிய அளவு குடிநீர் இல்லாமல், தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், நோயாளிகள் பயன்படுத்தி வரும் கழிப்பறைகளில் தண்ணீர் இல்லாத சூழ்நிலை இருப்பதாகவும் அவர்கள் புகார் கூறுகின்றனர்.
எனவே தினமும் ஆயிர க்கணக்கான நோயாளிகள் வந்து செல்லும் தென்காசி அரசு மருத்துவ மனையில் நோயாளிகளின் அடிப்படை தேவைகளான குடிநீர் மற்றும் கழிப்பிட அறைகளில் தண்ணீர் வசதியை ஏற்படுத்திக் கொடுக்க மாவட்ட நிர்வா கம் முன்வர வேண்டும் என சமூக அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தீ தடுப்பு கருவிகள் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.
- அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அபிராமம்
ராமநாதபுரம் மாவட்டம். கமுதி வட்டம், அபிராமம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகள், தொடக்கப் பள்ளிகள், அரசு உயர்நிலை மேல்நிலைபள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் என 100-க்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன.
பள்ளிகளில் தீ தடுப்பு கருவிகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள், முதலுதவி சிகிச்சைக்கு தேவையான மருந்து வசதிகள் கட்டாயம் இருக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த வசதிகள் பள்ளிகளில் உள்ளதா? என்பதை ஆண்டு தோறும் கல்வித் துறை அலுவலர்கள் உறுதி செய்துகொள்ள வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
அபிராமம் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் சில பள்ளிகளிலும் சில தனியார் பள்ளிகளிலும் தீ தடுப்பு கருவிகள் மற்றும் முதலுதவி உபகரணங்கள் இல்லை என்று பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
சில பள்ளிகளில் காலாவ தியான தீ தடுப்பு சிலிண்டர்கள் உள்ளன. இதனால் மாணவ- மாணவிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. வருகிற ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் இங்கு முடங்கியுள்ள பாதுகாப்பு மற்றும் உட்கட்டமைப்பு பணிகளை விடுமுறை நாட்களில் பூர்த்தி செய்ய கல்வித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர்.
- ரேசன் கடை ஊழியர்கள் 14-ந்தேதி முதல் வேலை நிறுத்தம் செய்கின்றனர்.
- 21 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ராமநாதபுரம்
தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்க மாநில துணைத் தலைவரும், ராமநாதபுரம் மாவட்ட தலைவருமான தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பொதுவிநியோகத் திட்டத்திற்கு தனித்துறை, பொருட்களை பொட்டலங் களாக வழங்க வேண்டும், 60 வயது வரை பணி செய்து விட்டு பணிநிறைவு பெற்று வீட்டிற்கு செல்லும் போது எந்த பண பலனும் கிடைக் காமல் பணியாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
ஓய்வூதியம் இல்லாமல் அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கு மிகவும் திண்டாடுகிறார்கள். அவர்களுக்கு அரசு ஓய்வூதியம் வழங்க வேண்டும், ஒரு பொருளுக்கு இருமுறை பில் போடும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும்.
விற்பனை முனையங்களில் 4ஜி இணைப்பு வழங்க வேண்டும், பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும், மாவட்டம் விட்டு மாவட்டம் பணியிட மாறுதல் வழங்கப் பட்ட பின்னர் காலிப்பணியி டங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப் பட்டுள்ளது.
இதனை நிறைவேற்ற வலியுறுத்தி சென்னை மாநில பதிவாளர் அலுவலகம் முன்பு வருகிற 9-ந்தேதி மறியல் போராட்டம் நடத்த உள்ளோம். அதன் பின்பும் கோரிக்கைகள் ஏற்கப்படா விடில் வருகிற 14-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடத்த உள்ளோம்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- நாடு முழுவதும் காலாவதியான நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்று பல முறை கோரிக்கை விடுத்தும் மத்திய அரசு இது சம்மந்தமாக நடவடிக்கை எடுக்கவில்லை.
- லாரிகளை தடுத்த நிறுத்தி, அதிக பாரம் ஏற்றியுள்ளதாக ரூ. 40 ஆயிரம் வரை அபராதம் விதிக்கின்றனர்.
நாமக்கல்:
தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் தன்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் இயக்கப்படும் லாரிகள், டிரெய்லர்கள், டேங்கர் லாரிகள், கண்டெய்னர் லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கு ஆன்லைன் மூலம் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இதனால், செய்யாத குற்றத்திற்கு அபராதம் செலுத்த வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. வாகனங்கள் தமிழ்நாட்டில் இயக்கப்படும் போது வேறு மாநிலத்தில் இயக்கப்படுவது போல ஆன்லைனில் அபராதம் விதிக்கப்படுகிறது.
வெளி மாநிலங்களில் இயக்கப்படும் லாரிகளுக்கு தமிழகத்தில் அபராதம் விதிக்கப்படுகிறது. போலீசார் மற்றும் மோட்டார் வாகன போக்குவரத்து அலுவலர்கள் வாகன எண்ணைக்கூட சரியாக பார்க்காமல் ஆன்லைன் மூலம் அபராதம் விதிக்கின்றனர். இதன்மூலம் கடந்த ஓராண்டாக லாரி உரிமையாளர்களுக்கு ஏராளமான பிரச்சினைகள் ஏற்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் காலாவதியான நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்று பல முறை கோரிக்கை விடுத்தும் மத்திய அரசு இது சம்மந்தமாக நடவடிக்கை எடுக்கவில்லை. லாரிகளில் ஓவர்லோடு தடை செய்யப்பட வேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் ஏற்கனவே வேண்டுகோள் விடுத்து வந்துள்ளது.
இந்நிலையில் லாரிகளை தடுத்த நிறுத்தி, அதிகபாரம் ஏற்றியுள்ளதாக ரூ. 40 ஆயிரம் வரை அபராதம் விதிக்கின்றனர். இதை முறைப்படுத்த வேண்டும். லாரி உரிமையாளர்களின் பிரச்சினைகளை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழ் நாடு முழுவதும் அந்தந்த மாவட்ட போலீஸ் எஸ்.பி மற்றும் கமிஷனர்களிடம் லாரி உரிமையாளர்கள் சம்மேளன நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனர்.
மேலும் தமிழக டிஜிபியை நேரில் சந்தித்து முறையிட்டோம். ஆனால் ஆன்லைன் அபராதம் விதிப்பது தொடர்கதையாக உள்ளது. ஆன்லைன் அபராதத்தால் லாரி உரிமையாளர்கள் மட்டுமின்றி பொது மக்களும் பாதிக்கின்றனர்.
இதனை கண்டித்து சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் வருகிற ஜூன் 6-ந் தேதி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் ஒன்றிணைந்து மாபெரும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இதில் லாரி, டிரெய்லர், டேங்கர், மினி லாரி, மணல் லாரி, தண்ணீர் டேங்கர் லாரி உள்ளிட்ட அனைத்து சரக்கு வாகன உரிமையாளர்கள் சுமார் 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்துகொள்ள உள்ளனர்.
இது அடையாள உண்ணாவிரதப் போரட்டம் தான். அதன் பின்னரும் மத்திய, மாநில அரசுகள், லாரி உரிமையாளர்களின் பிரச்சினைகளை தீர்க்க நடவ டிக்கை எடுக்காவிட்டால், அகில இந்திய மோட்டார் டிரன்ஸ்போர்ட் காங்கிரஸ் சேர்மன் டாக்டர் சண்முகப்பா ஆலோசனையின் பேரில், காலவரையற்ற லாரி நிறுத்தப் போராட்ட த்தில் ஈடுபட உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக லாரி உரிமையாளர்கள் சம்மேளன நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது. மாநில தலைவர் தன்ராஜ் தலைமை வகித்தார். சம்மேளன செயலாளர் ராமசாமி, பொருளா ளர் தாமோதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- இலவச அமரர் ஊர்தி வசதி அதிகளவில் ஏற்படுத்தி தரவேண்டும்.
- அமைச்சரிடம் பூமிநாதன் எம்.எல்.ஏ. கோரிக்கை வைத்தார்.
மதுரை
மதுரை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பூமிநாதன், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணி யனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-
மதுரை மாவட்ட மக்கள் மட்டுமின்றி சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் அதிக நோயாளிகள் வருகை தரக்கூடிய அரசு மருத்துவ மனையாக மதுரை ராஜாஜி மருத்துவமனை உள்ளது.
இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வயது முதிர்ந்த நோயாளிகள் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைவதும், விபத்தில் பலியாகும் உடல்கள் பிரேத பரிசோத னைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவதும் அதிகளவில் உள்ளது.
நாள் ஒன்றுக்கு 20-க்கும் மேற்பட்ட மரணம் அடைந்த வர்களின் உடல் அவர்களின் சொந்த இடத்திற்கு எடுத்துச் செல்ல போதிய இலவச அமரர் ஊர்தி இல்லாமல் அதிக நேரம் மருத்துவ மனையில் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் காத்திருக்கின்றனர்.
இங்கு சிகிச்சை பலனின்றி விபத்துக்கு உள்ளாகி இறப்பவர்கள் அதிகம் பேர் ஏழை குடும்பத்தினர் தான். அவர்களுக்கு தனியார் அமரர் ஊர்தியில் பணம் செலுத்தி உடலை எடுத்துச் செல்ல முடியாத நிலையில் உள்ளனர்.
எனவே அரசு சார்பில் அதிக அளவில் இலவச அமரர் ஊர்தி வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- அதிவேகமாக செல்லும் ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- இதனால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே பிரசித்தி பெற்ற சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக ஆட்டோ நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்டோ நிறுத்தத்தில் இருந்து செல்லும் ஆட்டோக்கள் சாலைகளில் அதிவேகமாக செல்வதினால் பொதுமக்களும், ஆட்டோவில் பயணம் செய்யும் பயணிகளும் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- குளித்தலை நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் நியமிக்க கோரிக்கை வைத்தனர்
- இதற்கு கரூர் மாவட்ட தலைமை கூட்டுறவியல் நீதிபதி இது குறித்து பரிசீலனை செய்து நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார்.
குளித்தலை,
கரூர் மாவட்டம் குளித்தலை நீதிமன்ற ஒருங்கிணைந்த வளாகத்திலுள்ள குற்றவியல் நடுவர் எண் 2 நீதிமன்றத்தின் வருடாந்திர ஆய்விற்கு வருகை புரிந்த கரூர் மாவட்ட குற்றவியல் தலைமை நீதிபதி ராஜலிங்கம் நீதிபதிக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வழக்கறிஞர்கள் சங்க தலைவர் சாகுல் ஹமீது தலைமை தாங்கினார். வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் நாகராஜன் வரவேற்றார். நிகழ்ச்சியில் வழக்கறிஞர்கள் அவர்களின் குறை, நிறைகள் குறித்து கூறினர்.
தொடர்ந்து வழக்கறிஞர்கள் சங்க முன்னாள் இணைச் செயலாளர் மது பேசியது: குளித்தலையில் அமைந்துள்ள இரு குற்றவியல் நடுவர் நீதிமன்றங்களில் உள்ள நீதிபதிகளின் 2 பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், கூடுதல் உரிமையியல் நீதிபதி பொறுப்பு நீதிபதியாக இருந்து வருகிறார். குளித்தலை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்கு முழு நேரமாக நீதிபதியை நியமனம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதற்கு கரூர் மாவட்ட தலைமை கூட்டுறவியல் நீதிபதி இது குறித்து பரிசீலனை செய்து நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார்.இதற்கு வழக்கறிஞர்கள் அனைவரும் பாராட்டுக்கள் தெரிவித்தனர். முடிவில் வழக்கறிஞர்கள் சங்க இணைச் செயலாளர் பிள்ளபாளையம் சரவணன் நன்றி கூறினார். இதில் வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- அத்தியூர் கிராமத்தில் புதிய சிமெண்ட் சாலை அமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்
- சாலை அமைத்து 4-மாதங்களிலேயே இச் சாலை மிகவும் சேதம் அடைந்துள்ளதால் மழை காலங்களில் மழைநீர் தேங்கி நிற்கக்கூடிய சூழ்நிலையில் உள்ளது.
அகரம்சீகூர்,
பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் அடுத்து அத்தியூர் கிராமத்தில் 2-வது வார்டு கக்கன்ஜி நகரில் சுமார் 5.66 லட்சம் மதிப்பீட்டில் கடந்த நான்கு மாதங்களுக்கு சிமெண்ட் சாலை அமைத்துள்ளனர். அப்போதே இந்த சாலை தரமற்றதாக உள்ளதாக அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. சாலை அமைத்து 4-மாதங்களிலேயே இச் சாலை மிகவும் சேதம் அடைந்துள்ளதால் மழை காலங்களில் மழைநீர் தேங்கி நிற்கக்கூடிய சூழ்நிலையில் உள்ளது. எனவே தரமற்ற இந்த சிமெண்ட் சாலையை அகற்றி தரமான சிமெண்ட் சாலை அமைக்க மாவட்ட நிர்வாகம் உரிய ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுத்து தரமான சிமெண்ட் சாலை அமைக்க இப்பகுதி மக்கள் கோரிக்கையாக வைக்கின்றனர்.
- திரௌபதி அம்மன் கோவிலில் தலித் மக்கள் கோவிலுக்குள் சென்று இறைவழிபாடு நடத்த அனுமதிக்கப்படுவதில்லை.
- தலித் மக்கள் சென்று வழிபடுவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அனுப்பி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-
விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் ஒன்றியம், மேல்பாதி கிராமத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலில் தலித் மக்கள் கோவிலுக்குள் சென்று இறைவழிபாடு நடத்த அனுமதிக்கப்படுவதில்லை. இந்தாண்டு கோவில் திருவிழாவின் போது கோவிலுக்குள் சென்ற தலித் இளைஞர் கதிரவன் என்பவர் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளதுடன் சாதியைச் சொல்லி இழிவாகத் திட்டி அவமானப்படுத்தப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தும் இதுவரை தாக்குதல் தொடுத்தவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை.
எனவே, தமிழ்நாடு அரசு தலையிட்டு தலித் மக்களின் உரிமைகளை நிலைநாட்டும் வகையில் இக்கிராமத்தில் நிலவும் தீண்டாமை கொடுமைகளுக்கு முடிவுகட்டுவதோடு திரௌபதி அம்மன் கோவிலுக்குள் தலித் மக்கள் சென்று வழிபடுவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நவோதயா பள்ளியை பெரம்பலூரில் தொடங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
- கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பெரம்பலூர்:
பெரம்பலூர் பா.ஜனதா மாவட்ட செயற்குழு கூட்டம் துறைமங்கலத்தில் உள்ள தனியார் மகாலில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். இதில் பா.ஜனதா பிற்பட்டோர் பிரிவு அணியின் மாநில செயலாளர் சாய்குமார் சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில் 2024-ம் ஆண்டில் நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்று, பா.ஜனதா ஆட்சி அமைந்திட தீவிர தேர்தல் களப்பணி ஆற்ற வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை அதிகளவில் நடைபெறுவதால் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளது. எனவே கஞ்சா விற்பனையை போலீசார் தடுத்து நிறுத்த வேண்டும்.
ஏழை, எளிய அடித்தள மக்களுக்கு பயன் அளிக்கும் வகையில் மத்திய அரசின் நவோதயா பள்ளியை பெரம்பலூரில் தொடங்க வேண்டும். மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்களை சரியான பயனாளிகளுக்கு சேர்க்காமல் தி.மு.க.வினருக்கு கொண்டு சேர்க்கும் தி.மு.க. அரசை கண்டிப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர் சேகர், நகர தலைவர் சுரேஷ் மற்றும் மாவட்ட, மண்டல், நகர பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.